என் மலர்tooltip icon

    அழகுக் குறிப்புகள்

    • குங்குமப்பூ அழகு மட்டுமின்றி பல்வேறு மருத்துவ குணங்களையும் கொண்டது.
    • புற ஊதா கதிர்களால் ஏற்படும் சேதத்தைக் குறைக்கவும் குங்குமப்பூ உதவும்.

    குங்குமப்பூ என்றாலே நமது நினைவுக்கு வருவது, கர்ப்பிணிகள் அதனை பாலில் கலந்து குடித்தால் குழந்தை வெள்ளையாக பிறக்கும் என்பதுதான். ஆனால் குங்குமப்பூ பல்வேறு மருத்துவக் குணங்களை கொண்டது என்பதை நம்மில் பலரும் அறிந்திருக்கமாட்டார்கள். குங்குமப்பூ, அழகு சாதனப்பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது என கேள்விப்பட்டிருப்போம். அப்படி பயன்படுத்தப்படுவதற்கான காரணங்கள் என்ன என்பதை காண்போம்.

    வயதான தோற்றத்தை தவிர்க்கும்

    குங்குமப்பூவில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் (குரோசின் மற்றும் சஃப்ரானல்) நிறைந்துள்ளன. அவை ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்திலிருந்து சருமத்தைப் பாதுகாக்கின்றன. ஃப்ரீ ரேடிக்கல்கள் நிலையற்ற மூலக்கூறுகள் ஆகும். அவை ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை ஏற்படுத்தும். இது முகத்தில் சுருக்கங்கள், கோடுகள் உருவாக வழிவகுக்கும். குங்குமப்பூவில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இந்த ஃப்ரீ ரேடிக்கல்களை நடுநிலையாக்கி, சருமத்தை இளமையாகவும், பொலிவுடனும் வைத்திருக்கின்றன.

    பிரகாசமான முகம்...

    குங்குமப்பூவில் வைட்டமின் சி (அஸ்கார்பிக் அமிலம்) உள்ளது. இது சருமத்தின் நிறத்தை பிரகாசமாக்க உதவுகிறது. இது டைரோசினேஸ் நொதியை அடக்கி, மெலனின் உருவாவதைக் குறைக்கும் ஆற்றல்மிகு ஆக்ஸிஜனேற்றியாக செயல்படுகிறது. மெலனின் உற்பத்தியைத் தூண்டக்கூடிய ஃப்ரீ ரேடிக்கல்களை நடுநிலையாக்குகிறது. இதன் விளைவாக முகத்திற்கு பிரகாசமான நிறம் கிடைக்கிறது.

    நிறமிகளுக்கு சிகிச்சையளிக்கும்

    காயம் அல்லது அழற்சிக்கு பின் முகத்தில் ஏற்படும் கரும்புள்ளிகள், வடுக்களை நீக்க குங்குமப்பூவில் உள்ள வைட்டமின் சி உதவுகிறது. தோல்நோயை ஏற்படுத்தக்கூடிய UV கதிர்களுக்கு எதிராக பாதுகாப்பை வழங்குகிறது. மேலும் இதில் உள்ள வைட்டமின் சி சுற்றுச்சூழல் அழுத்தத்தால் ஏற்படும் நிறமி மாற்றங்களைக் குறைக்கிறது.


    சருமத்தில் ஈரப்பதத்தை நீண்ட நேரம் தக்கவைக்க குங்குமப்பூ உதவுகிறது

    ஈரப்பதம்

    குங்குமப்பூ ஒரு இயற்கையான மாய்ச்சுரைசர் ஆகும். இது சருமத்தை ஈரப்பதமாகவும், மென்மையாகவும் வைத்திருக்க உதவுகிறது. இதில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. அவை சருமத்திற்கு ஊட்டமளிக்கின்றன. மேலும் சரும வறட்சி மற்றும் தோல் உரிதலைத் தடுக்கின்றன. 

    சரும அமைப்பை மேம்படுத்தும்

    குங்குமப்பூவில் வைட்டமின் பி (ரைபோஃப்ளேவின்) உள்ளது. இது சரும அமைப்பை மேம்படுத்தவும், சரும செல் புத்துயிர் பெறவும் உதவுகிறது. இதனால் புதிய செல்கள் சருமத்தின் மேற்பரப்பை அடைந்து, பழைய, சேதமடைந்த செல்கள் உதிர்ந்து, சருமம் பெரும்பாலும் மென்மையாகவும், பொலிவுடனும் தோன்றும். மேலும் சருமத்தின் மந்தமான தன்மை, கரடுமுரடான தன்மையைக் குறைத்து, சருமத்தை மென்மையாக காட்டு். 

    கருவளையத்தை நீக்கும்

    கண்களைச் சுற்றியுள்ள கருவளையங்கள் மற்றும் வீக்கத்தைக் குறைக்க குங்குமப்பூ பயன்படுத்தப்பட்டு வருகிறது . குங்குமப்பூ ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. 

    தோல் அழற்சி

    குங்குமப்பூவில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. அவை தோல் அழற்சியைக் குறைக்க உதவுகின்றன. சொரியாசிஸ் மற்றும் ரோசாசியா (அதிக உணர்திறன் மற்றும் எளிதில் புண் ஏற்படக்கூடிய சருமம்) போன்ற தோல் நோய்களுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது. 

    சூரிய ஒளி பாதுகாப்பு

    குங்குமப்பூ சூரிய ஒளியால் ஏற்படும் சரும சேதங்களிலிருந்து பாதுகாக்க உதவுகிறது. புற ஊதா கதிர்களால் ஏற்படும் சேதத்தைக் குறைக்கவும், சருமத்தை சேதத்திலிருந்து பாதுகாக்கவும் துணைபுரிகிறது. 

    • பளபளப்பான, தெளிவான முகம் உடல்நலனை பிரதிபலிக்கிறது
    • அனைத்து தோல் நோய்களுக்கும் மஞ்சள் தீர்வாக உள்ளது.

    நமது சருமம், நாம் எப்படி இருக்கிறோம் என்பதை தாண்டி, நமது ஆரோக்கியம் எப்படி இருக்கிறது என்பதை காட்டும். பளபளப்பான மற்றும் தெளிவான முகம் உங்கள் உடல்நலனை பிரதிபலிக்கிறது. மன அழுத்தம், மாசுபாடு மற்றும் மோசமான வாழ்க்கை முறை தேர்வுகள் நமது ஒட்டுமொத்த நல்வாழ்வைப் பாதிக்கின்றன. நமது சருமம் பெரும்பாலும் இதன் விளைவுகளை பிரதிபலிக்கிறது. பளபளப்பான சருமத்தைப் பராமரிப்பது என்பது தோற்றத்தைப் பற்றியது மட்டுமல்ல. ஆரோக்கியத்தை பற்றியதும். சரும ஆரோக்கியத்திற்கும், ஒட்டுமொத்த நல்வாழ்விற்கும் இடையிலான ஆழமான தொடர்பைப் புரிந்துகொள்வதன் மூலம், உங்கள் உடலையும், மனதையும் நன்றாக வைத்துக்கொள்ள முடியும். என்னதான் நாம் சந்தையில் கிடைக்கும் சரும பராமரிப்பு பொருட்களை அழகுக்காக வாங்கி பயன்படுத்தினாலும், இயற்கை பொருட்கள் தரும் அழகை அதனால் ஈடுகொடுக்க முடியாது. அந்த வகையில் இயற்கை நமக்கு அளித்த முக்கிய மூலப்பொருட்கள் குறித்து பார்ப்போம்.

    மஞ்சள்

    மஞ்சள் இயற்கையான பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. மஞ்சள் நிறத்திற்கு காரணமான இதில் இருக்கும் குர்குமின் பாக்டீரியாக்களுக்கு எதிராக செயல்படுவதுடன், அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகளையும் கொண்டுள்ளது. மஞ்சள் சருமத்தை சேதப்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல்களை நீக்கி, கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கிறது. இது சருமத்தை மிருதுவாகவும், புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்க உதவுகிறது. முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்கவும், முகத்திற்கு பளபளப்பை வழங்கவும், கண்ணின் கருவளையத்தை போக்கவும், வறண்ட சருமத்திற்கு ஈரப்பதத்தை வழங்கவும் மஞ்சள் முக்கிய பங்காற்றுகிறது.

    தேன்

    தேன் ஒரு சிறந்த மாய்ஸ்சுரைசராகும். தேனின் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் தொற்றுநோய்களைத் தடுக்கவும், முகப்பருவைக் குறைக்கவும் உதவுகின்றன. முகத்தில் உள்ள வடுக்களை மறைக்க தேன் உதவுகிறது. சருமத்தை நன்கு நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது.

    ஆரஞ்ச் ஜுஸ்

    ஆரஞ்சுகளில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது நச்சு நீக்கத்திற்கு உதவுகிறது. தினமும் ஒரு கிளாஸ் ஆரஞ்சு ஜூஸ் சருமத்தை சுத்தம் செய்து புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவுகிறது.


    இயற்கை பொருட்கள் தரும் அழகை எதனாலும் ஈடுகொடுக்க முடியாது.

    எலுமிச்சை

    எலுமிச்சையில் வைட்டமின் சி மற்றும் சிட்ரிக் அமிலம் நிறைந்துள்ளது. வைட்டமின் சி ஒரு சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாகும். இது கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கிறது, சருமத்தின் நெகிழ்ச்சித்தன்மையை பராமரிக்கிறது. இது நமது சருமத்தின் நிறத்தை ஒளிரச் செய்து நமது சருமத்தை ஈரப்பதமாக்க உதவுகிறது.

    தயிர்

    லாக்டிக் அமிலம் நிறைந்த தயிர், சருமத்திற்கு ஊட்டமளித்து ஈரப்பதமாக்குகிறது. அதே நேரத்தில் பழுப்பு மற்றும் கருவளையங்களைக் குறைக்க உதவுகிறது. இது வெயிலில் ஏற்படும் தீக்காயங்களைத் தணித்து, ஆரோக்கியமான, பொலிவான சருமத்திற்கு ஒரு சிறந்த இயற்கை தீர்வாக அமைகிறது.

    பாதாம்

    பாதாமில் வைட்டமின் ஈ மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளன. பாதாம் எண்ணெயைக் கொண்டு தொடர்ந்து மசாஜ் செய்வது நமது சருமத்தை பளபளப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும். முகத்தில் ஏற்படும் மெல்லிய கோடுகள் மற்றும் சுருக்கங்களைத் தடுக்கிறது.

    வாழைப்பழம்

    வாழைப்பழம் நமது சருமத்திற்கு மிகவும் நல்லது. இதில் பொட்டாசியம், வைட்டமின்கள் ஏ மற்றும் பி நிறைந்துள்ளன. இவை நமது சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்க உதவுகின்றன. 

    பப்பாளி

    பப்பாளியில் உள்ள பப்பைன் நொதி சருமத்தை ஒளிரச் செய்யும் பண்புகளைக் கொண்டுள்ளது. இதனை முகத்திற்கு பயன்படுத்தும்போது முகத்தில் உள்ள கறைகள் மற்றும் வடுக்கள் குறையும். பப்பாளி ஒரு மென்மையான எக்ஸ்ஃபோலியேட்டராகவும் செயல்படுகிறது. மேலும் முகத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றவும் உதவுகிறது. சருமத்தை இளமையாகவும், ஆரோக்கியமாகவும், அழகான பளபளப்புடன் வைத்திருக்க பப்பாளி உதவுகிறது. 

    • கேரளாவில் உச்சிமுதல் பாதம்வரை தேங்காய் எண்ணெய்தான்!
    • தேங்காய் எண்ணெயில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம்.

    கேரள பெண்கள் என்றாலே அவர்களின் வனப்பும், நீண்ட அடர்த்தியான முடியும்தான் பலரையும் கவரும். கேரளப் பெண்களுக்கு இந்த அழகை கொடுப்பது தேங்காய் எண்ணெய்தான். உச்சம் முதல் பாதம்வரை அவர்கள் பயன்படுத்துவது தேங்காய் எண்ணெய்தான். மேலும் சமையலுக்கும் அவர்கள் தேங்காய் எண்ணெயைதான் பயன்படுத்துவார்கள். தேங்காய் எண்ணெயின் பயன்பாடு கேரளாவில் அதிகம் இருப்பதற்கான காரணங்களை கீழே காண்போம். 

    உடல் எடை குறையும்

    உடலில் உள்ள கொழுப்புச் சத்தைக் குறைக்கும் காப்ரிக் ஆசிட் (Capric Acid) மற்றும் லாரிக் ஆசிட் (Lauric Acid) ஆகிய இரண்டு அமிலங்களும் தேங்காய் எண்ணெயில் போதிய அளவு உள்ளன. எனவே தேங்காய் எண்ணெயை உரிய அளவு தினமும் உணவில் சேர்த்தால் உடல் எடை குறையும். 

    சரும பொலிவு

    தேங்காய் எண்ணெய் மேக்கப் ரிமூவராக பயன்படுகிறது. இரவில் முகத்தை சுத்தம் செய்து விட்டு தேங்காய் எண்ணெயை தடவிக்கொண்டு படுக்கலாம். இதனால் சருமத்திற்கு நல்ல பொலிவு கிடைக்கும். எண்ணெய் சருமம் இருப்பவர்கள் மருத்துவரிடம் ஆலோசிக்கலாம்.

    நோய் எதிர்ப்பு சக்தி

    தேங்காய் எண்ணெயில் உள்ள லாரிக் ஆசிட் மற்றும் காப்ரிக் ஆசிட்  வைரஸ் மற்றும் பாக்டீரியல் நுண்கிருமிகளை எதிர்க்கும் திறன் கொண்டதாக உள்ளது. மோனோ லாரின் (Mono Laurin) வைரஸ் செல் சுவர்களைக் கரைக்கிறது. இதில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம். உடலின் வளர்ச்சிதை மாற்றத்துக்கு (Metabolism) பெரிதும் உதவுகிறது. 

    சரும பாதுகாப்பு

    சரும வறட்சியை தடுத்து, இளமை தோற்றத்தை தக்கவைக்க தேங்காய் எண்ணெய் பெரிதும் உதவும். சருமத்திற்கு தேவையான வைட்டமின் ஈ இதில் நிறைந்துள்ளது. தேங்காய் எண்ணெய்யை முகத்தில் தடவுவது பல்வேறு நன்மை அளிக்கும். கரும்புள்ளிகளை மங்கச் செய்து, தழும்புகளை குணப்படுத்தும். இதில் உள்ள சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் சருமத்திற்கு அடியில் தங்கி, சருமத்தை மென்மையாகவும், வறட்சியின்றியும் வைத்துக் கொள்ள உதவும். தேங்காய் எண்ணெய்யில் மசாஜ் செய்வது முகச்சுருக்கத்தையும், முதுமை தோற்றத்தையும் தள்ளிப்போடும். 


    உச்சிமுதல் பாதம்வரை பலனளிக்கும் தேங்காய் எண்ணெய்

    பாடி லோஷன்

    உடம்பிற்கு மிகப்பெரிய பாடி லோஷனாக தேங்காய் எண்ணெய் பயன்படுகிறது. தேங்காய் எண்ணெய்யை கை, கால்களில் தேய்ப்பது தோலுக்கு மென்மையையும், தோலின் ஈரப்பதத்தை கூட்டவும் செய்கிறது. தினமும் குளித்து முடித்த பின் தேங்காய் எண்ணெயை உடல் முழுவதும் தடவினால், சருமம் மிருதுவாகவும், வழுவழுப்பாகவும் இருக்கும். உடல் முழுவதும் மசாஜ் செய்வதற்கும் தேங்காய் எண்ணெயை பயன்படுத்தலாம். 

    முடி பராமரிப்பு

    கேரளா மற்றும் தமிழ்நாட்டில் பெரும்பாலானோர் முடிக்கு தேங்காய் எண்ணெயைத்தான் பெரும்பாலும் பயன்படுத்துவர். தேங்காய் எண்ணெய் மயிரிழைகளுக்கு ஈரப்பதத்தை கொடுப்பதோடு, முடியின் வேர்க்கால்களை பலமடைய செய்கிறது.  தேங்காய் எண்ணெய் கூந்தல் உதிர்வை குறைக்கிறது. மேலும் முடிக்கு பளபளப்பை கொடுக்கிறது. 

    தோல் நோய்

    கீழேவிழுந்து கை, கால்களில் ஏதேனும் காயம் ஏற்பட்டால், உடனே அம்மா சொல்வது தேங்காய் எண்ணெய், மஞ்சள்தூளை கலந்து வை என்பதுதான். அதற்கு காரணம் தேங்காய் எண்ணெயில் இருக்கும் பாக்டீரியா எதிர்ப்புப் பொருள். இதில் இருக்கும் பாக்டீரியா எதிர்ப்புப் பொருள் தோல் பூஞ்சை நோய்களை கட்டுப்படுத்துகிறது. மேலும் திறந்த புண்களில் தொற்றுக்களை வரவிடாமலும் பாதுகாக்கிறது. 

    • எல்லாருக்கும் மருதாணி ஒரே அளவாக சிவக்காது. சிலருக்கு நன்றாக சிவக்கும்; சிலருக்கு குறைவாக சிவக்கும்!
    • அதிகம் சிவக்கும் தன்மைகொண்ட மருதாணி இலைகளை பயன்படுத்துங்கள்!

    பண்டிகைகளாக இருந்தாலும் சரி, வீட்டு விசேஷங்களாக இருந்தாலும் சரி மேக்கப் இல்லாமல் அந்த நிகழ்ச்சி இப்போதெல்லாம் முழுமையடைவதில்லை. அதுவும் மெஹந்தி இல்லாமல் சொல்லவே தேவையில்லை. முன்பெல்லாம் பண்டிகை தினத்திற்கு முன்தினம் இரவு கையில் மருதாணி வைக்காமல் பெண்கள் தூங்கமாட்டார்கள். ஏன் ஆண்களும் வைத்துக்கொள்வர். மற்ற பண்டிகைகளைவிட தீபாவளி அப்படித்தான் போகும். தீபாவளிக்கு முந்தைய இரவு கை நிறைய மருதாணி வைத்துக்கொண்டு நல்ல தூக்கத்தில் இருக்க அதிகாலையில் எண்ணெய்க்குளியல் போட சொல்வார் அம்மா. எழுந்தவுடன் முகம் கூட கழுவாமல் கையை கழுவி, சகோதரர், சகோதரிகளிடத்தில் சென்று யார் கை அதிகமாக சிவந்திருக்கு என்று பார்த்தபின்தான் முகம் கழுவுவோம். அப்படி ஒரு ஆர்வம் மருதாணி போடுவதில். இந்நிலையில் தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கிவிட்டது.

    பலரும் மருதாணி போட காத்துக்கொண்டிருப்பார்கள். அவர்களுக்கான பதிவுதான் இது. வீட்டில் நாம் அனைவரும் ஒரேநேரத்தில் மருதாணி போட்டாலும், எல்லோருக்கும் ஒரே அளவு சிவந்திருக்காது. சிலருக்கு அதிகமாக சிவந்திருக்கும், சிலருக்கு மிதமான அளவில் சிவந்திருக்கும், சிலருக்கு மிகவும் குறைவாக சிவந்திருக்கும். அதற்கு காரணம் அவரவரது உடல்நிலை. இருப்பினும் ஈரம் எளிதில் காய்வதாலும் பலருக்கு சிவந்திருக்காது. சிலர் மருதாணி வைத்துவிட்டு அப்படியே தூங்கும்போது கையில் இருந்து விழுந்துவிடும். இந்நிலையில் மருதாணி எளிதில் சிவக்க சில டிப்ஸ்களை இங்கு பார்ப்போம். 


    மருதாணியை அரைத்த உடனேயே போடவேண்டும்

    * இலைகளிலேயே அதிகம் சிவக்கும் தன்மைகொண்ட மருதாணி இலைகள் இருக்கும். அதனை அரைத்து அதனுடன் எலுமிச்சை சாறு, கொஞ்சம் சர்க்கரை கலந்துவிட்டு பின்னர் மருதாணி போடலாம். இது நல்ல சிவப்பு நிறத்தை அளிக்கும். மேலும் எலுமிச்சை சாறு மற்றும் சர்க்கரை கலந்த தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக, மருதாணி காய காய அதன்மீது விட்டுவருவதும் நல்ல நிறத்தை கொடுக்கும். 
    * அதுபோல யூக்கலிப்டஸ் தைலத்தை மருதாணி வைத்துள்ள இடத்தில் தடவினால் நல்லநிறம் கொடுக்கும். 
    * மருதாணியை கழுவ சோப்புத் தண்ணீரை பயன்படுத்தக்கூடாது. ஏனெனில் அது நிறத்தை நீக்கும். அதுபோல மருதாணி போட்டு சிறிது நேரத்திலேயே எடுத்துவிடக்கூடாது. அதனால்தான் பலரும் தூங்குவதற்கு முன் கையில் மருதாணி வைத்து தூங்குவார்கள். பகலில் வேலைகள் நிறைய இருக்கும். அதனால் மருதாணியை உடனே எடுக்கவேண்டிய சூழல்வரும். முடிந்தவரை இரவு நேரத்தில் போட்டுவிட்டு, காலையில் கையை கழுவுங்கள்.
    * கிராம்பை நன்றாக தண்ணீரில் கொதிக்க வைத்து, அந்த தண்ணீரை மருதாணி அரைக்கும்போது பயன்படுத்தினால் நல்ல சிவப்பாக நிறம் இருக்கும்.
    * அதுபோல முதலில் கைக்கழுவ தண்ணீரை பயன்படுத்தாமல், கடுகு எண்ணெயை பயன்படுத்தி மருதாணியை நீக்க வேண்டும். கடுகு எண்ணெய்க்கு பதில் யூக்கலிப்டஸ் எண்ணெய் பயன்படுத்தலாம். 

    அழகிற்காக மட்டுமின்றி உடல் சூட்டை தணிப்பதற்காகவும், உடலில் உள்ள பித்தத்தை குறைப்பதற்காகவும் என மருதாணி வைப்பதற்கு மருத்துவ ரீதியாகவும் பல காரணங்கள் உள்ளன. 

    • 10 நிமிடங்கள் முடிக்கு மசாஜ் கொடுத்து, சுடுநீரில் முடியை கழுவவேண்டும்.
    • பேன் சீப்பை வைத்து சீவினாலே பொடுகுகள் அனைத்தும் கொட்டிவிடும்.

    உடல்நலனைவிட தற்போதெல்லாம் சரும நலனுக்கு மெனக்கெடுபவர்கள்தான் அதிகம். இதற்காக பலரும் பியூட்டி பார்லர்களுக்கு சென்று ஆயிரக்கணக்கில் பணம் செலவழிக்கின்றனர். அப்படி பியூட்டி பார்லர் செல்ல இயலாதவர்கள், வீட்டிலேயே சருமத்தின் அழகை மெருகூட்ட, சில பியூட்டி டிப்ஸ்களை கூறியுள்ளார் அழகுக்கலை நிபுணர் நிஷா கோஷ். அந்த குறிப்புகளை காணலாம்.

    வறண்ட சருமம் இருக்கக்கூடாது!

    நமக்கு எண்ணெய் சருமமாக கூட இருக்கலாம். ஆனால் வறண்ட சருமமாக இருக்கக்கூடாது. வறண்ட சருமம், அரிப்பு, செதில்கள் மற்றும் வறண்ட திட்டுகள் போன்ற சிக்கல்களை ஏற்படுத்தும், மேலும் புற ஊதா கதிர்களால் எளிதாக சேதமடையக்கூடும், எனவே வறண்ட சருமம் உள்ளவர்கள், பாதாம் எண்ணெய் இரண்டு சொட்டுகள், ஆலிவ் எண்ணெய் இரண்டு சொட்டுகள் எடுத்து நன்றாக கலந்து முகத்தில் அப்ளை செய்துவிட்டு, காலையில் எழுந்து குளிர்ந்த நீரில் முகம் கழுவுவதால் சருமத்தை நன்றாக பாதுகாத்துக் கொள்ளமுடியும். இதை தினசரி செய்யும்போது அழகான மற்றும் வறண்ட சருமம் இருப்பவர்களுக்கு எண்ணெய் சருமம் கிடைக்கும்.

    பொடுகு பிரச்சனைக்கு தீர்வு

    பொடுகு பிரச்சனை நிறைய இருப்பவர்கள், முல்தானி மெட்டி, எலுமிச்சைச் சாறு, முட்டையின் வெள்ளைக்கரு ஆகிய மூன்றையும் நன்றாக கலந்து ஸ்கேல்ப்பில் அப்ளை செய்யவேண்டும். ஒரு பத்து நிமிடம் மசாஜ் கொடுக்கவேண்டும். பின்னர் சுடுநீரில் முடியை கழுவவேண்டும். பின்னர் சீப்பை வைத்து சீவினாலே பொடுகுகள் அனைத்தும் கொட்டிவிடும். இதை கண்டிப்பாக முயற்சி செய்து பாருங்கள். முடி பார்க்க வழுவழுப்பாக சிக்கில்லாமல் தெரிய முட்டையின் வெள்ளைக்கரு, எலுமிச்சைச் சாறு, புதினாச்சாறு ஆகிய மூன்றையும் நன்றாக பீட்செய்து முடியில் அப்ளை செய்யவேண்டும். 20 நிமிடம் அல்லது அரைமணிநேரம் கழித்து ஷாம்பூ போட்டு முடியை கழுவினால், பளப்பளப்பாக, வழுவழுவென முடி நன்றாக இருக்கும்.

    கருகருவென நீளமான முடிக்கு!

    அதுபோல முடி நீளமாக கருகருவென வளரவேண்டுமென எண்ணினால், நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் மூன்றையும் சம அளவு எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் கேரட்டின் இலையை துண்டு துண்டாக வெட்டி போட்டு சூடுப்படுத்த வேண்டும். அதில் கொஞ்சம் மிளகு, வெந்தயம் சேர்க்கவேண்டும். அந்த எண்ணெய்யை நன்கு காய்ச்சி, வடிகட்டி ஒரு மூன்று நாட்கள் வெயிலில் வைக்கவேண்டும். அதை தலைக்கு தேய்த்தால், முடி கருகருவென நன்றாக வளரும். புழுவெட்டு இருப்பவர்கள் தலையில் சின்ன வெங்காயத்தை நன்கு தேய்க்க வேண்டும். மூன்று மாதங்கள் தொடர்ந்து தேய்த்தால், அந்த இடத்தில் குட்டி குட்டி முடி வளரத் தொடங்குவதை நீங்கள் பார்ப்பீர்கள். அதுபோல கண்புருவம் அடத்தியாக வேண்டும் என்றால், விளக்கெண்ணெய்யை அப்ளை செய்யலாம்.

    கருமை நீங்க...

    கண்ணில் கருவளையம் இருப்பவர்கள், உருளைக்கிழங்கு சாறுடன், கடலைமாவை சேர்த்து பத்துபோல போட்டு வந்தால், நல்ல தீர்வு கிடைக்கும். உதடு கருப்பாக இருப்பவர்கள், தாங்களாகவே ரோஸ்வாட்டர் தயாரித்து அப்ளை செய்தால் நன்றாக இருக்கும். சந்தைகளில் வாங்குவதில் நிறைய போலிகள் உள்ளன. ரோஸ் வாட்டர் எப்படி செய்வது என நான் கூறுகிறேன். ரோஜாப்பூக்கள் ஒரு கிலோ வாங்கினோமானால், அதன் இதழ்களை எடுத்து தண்ணீரில் கொதிக்கவைக்க வேண்டும். ஒருகிலோ இதழ் 100 மில்லிக்கு வரும்வரையில், கொதிக்கவைக்க வேண்டும். பின்னர் அதனை எடுத்து வடிகட்டி, தினமும் காட்டன் துணியால் தொட்டு உதட்டில் தடவி வந்தால் நல்ல தீர்வு கிடைக்கும். உதடு ரோஸ் நிறத்திற்கு மாறும். இவை அனைத்திற்கும் மேலாக, என்னதான் ஸ்கின் கேர் செய்தாலும் சத்தான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். பட்டர் ஃப்ரூட் எடுத்துக்கொள்ளலாம். இது கர்ப்பப்பைக்கும் நல்லது, முகத்திற்கும் பளபளப்பு மற்றும் அழகை தரும்.

    • முடி இழைகளை ஊட்டமளிக்கவும், நீரேற்றம் செய்யவும் மற்றும் வலுப்படுத்தவும் உதவுகின்றன.
    • முடி மற்றும் சரும ஆரோக்கியத்தைப் பராமரிப்பதற்கு கற்றாழை ஒரு சிறந்த மூலப்பொருளாக உள்ளது.

    பெண்கள் மற்றும் ஆண்கள் என இருபாலருக்கும் இருக்கும் பொதுவான பிரச்சனைகளில் ஒன்று முடிகொட்டுவது. முடிகொட்டுதலை தடுக்க, முடிவளர நாம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டிருப்போம். பலரும் மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை எல்லாம் பெறுவார்கள். ஆனால் இந்த பிரச்சனைகளுக்கு எல்லாம் இயற்கையிலேயே மருந்து உள்ளது. அதுதான் கற்றாழை. வீட்டில் எளிதாக கிடைக்கும் கற்றாழையால் நமது முடி அடையும் ஆரோக்கிய நன்மைகள், எப்போதெல்லாம் இந்த கற்றாழையை முடிக்கு பயன்படுத்தலாம் என்பது குறித்து பார்ப்போம். 

    முடி உதிர்தல்

    முடி உதிர்தல் அதிகமாகிறது என்று நீங்கள் கவலைக்கொள்ளும்போது கற்றாழையை தலைக்கு பயன்படுத்தலாம். கற்றாழை கொலாஜன் உற்பத்திக்கு உதவுகிறது. இது முடியின் நுண்ணறைகளை வலுப்படுத்தவும், முடி உதிர்வதைத் தடுக்கவும் உதவும். கற்றாழையில் தாதுக்கள் மற்றும் நீர் இருப்பதால், முழு இழையையும் வலுப்படுத்துகிறது. மேலும் முடிக்கு வலிமையை கொடுக்கிறது. இதனால் முடி எளிதில் உடையக்கூடிய தன்மையை இழக்கும்.

    முடி வளர்ச்சி

    கற்றாழை முடி வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றுகிறது. கற்றாழையில் உள்ள நொதிகள் உச்சந்தலையில் இருந்து இறந்த செல்களை அகற்ற உதவுகிறது. கற்றாழையில் வைட்டமின்கள் (வைட்டமின் A, B1, B2, B6, C மற்றும் E போன்றவை), தாதுக்கள் (கால்சியம் போன்றவை) மற்றும் ஃபோலிக் அமிலம் ஆகியவை உள்ளன. அவை முடி இழைகளை ஊட்டமளிக்கவும், நீரேற்றம் செய்யவும் மற்றும் வலுப்படுத்தவும் உதவுகின்றன.

    எண்ணெய் பசை

    கற்றாழை உச்சந்தலை மற்றும் முடியில் அதிகளவில் உள்ள எண்ணெய் பசையைக் குறைக்கும். முடியின் இழைகளுக்கு சேதம் விளைவிக்காமல் எண்ணெய் பசையைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

    வறண்ட முடி

    கற்றாழை தலையில் செல்வளர்ச்சியை ஊக்குவிக்கும். மேலும் மயிறிழைகளுக்கு அதிக நெகிழ்ச்சித்தன்மையை அளிக்கும். இதன்மூலம் வறண்ட நிலையில் இருக்கும் முடி ஆரோக்கியம் பெறும். 


    அனைத்துவிதமான முடி பிரச்சனைகளுக்கும் தீர்வுகளை கொண்டது கற்றாழை

    அரிப்பு மற்றும் எரிச்சல்

    கற்றாழை அழற்சி எதிர்ப்பு, ஆக்ஸிஜனேற்றம் போன்றவற்றை தடுக்கும் பண்புகளைக் கொண்டுள்ளது. இது உச்சந்தலையில் ஏற்படும் அழற்சியைக் குணப்படுத்தவும், சருமத்தை ஆற்றவும், அரிப்பு மற்றும் எரிச்சல் போன்ற தோல் அழற்சி அல்லது பூஞ்சை தொற்றுகளிலிருந்து விடுபடவும் உதவுகிறது. 

    பொடுகு 

    கற்றாழை உச்சந்தலையில் உள்ள இறந்த சரும செல்களை அகற்ற உதவுகிறது. மேலும் உச்சந்தலையில் நீரேற்றத்தை ஊக்குவிக்கிறது. உச்சந்தலை வறளும்போதுதான் பொடுகு உண்டாகும். இதன்மூலம் பொடுகு உருவாவதையும் கட்டுப்படுத்துகிறது. 

    புற ஊதா கதிர்கள்

    சூரிய ஒளியில் இருந்து வரும் புற ஊதா கதிர்வீச்சினால் ஏற்படும் சேதத்திலிருந்து முடி இழைகளைப் பாதுகாக்க உதவும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் கற்றாழையில் உள்ளன. மேலும், அதன் ஈரப்பதமூட்டும் திறன் மற்றும் அதன் கலவையில் உள்ள வைட்டமின்கள் காரணமாக, கற்றாழை முடியை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.

    முடி உதிர்தலைத் தடுப்பது, உச்சந்தலையில் இருந்து அதிகப்படியான எண்ணெயை நீக்குவது, முடியை ஈரப்பதமாக்குவது, முடி வளர்ச்சியை ஊக்குவித்தல், சூரிய ஒளியால் ஏற்படும் சேதத்திலிருந்து பாதுகாத்தல் மற்றும் பொடுகு அல்லது உச்சந்தலையில் தொற்றுகள் வராமல் தடுப்பது போன்ற பல ஆரோக்கிய நன்மைகளை தலைமுடிக்கு அளிக்கிறது கற்றாழை. முடி மற்றும் சரும ஆரோக்கியத்தைப் பராமரிப்பதற்கு கற்றாழை ஒரு சிறந்த மூலப்பொருளாக இருப்பதுடன் மலச்சிக்கல் மற்றும் செரிமான கோளாறுகள் போன்ற பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிக்கவும் கற்றாழையை பயன்படுத்தலாம். 

    • சருமம், முடி, நோய் எதிர்ப்பு சக்தி என உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும் பப்பாளி.
    • சாறு, சோப்பு, பொடி என பல்வேறு வடிவங்களில் பப்பாளியின் நன்மைகளைப் பெறலாம்.

    பப்பாளி சருமம், முடி, நோய் எதிர்ப்பு சக்தி என உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும் என்றால் உங்களால் நம்ப முடியுமா?.  பப்பாளியால் சருமத்திற்கு கிடைக்கும் நன்மைகள் என்ன? அது எந்தெந்த வடிவங்களில் கிடைக்கிறது என்பதை பார்ப்போம்.

    முகப்பரு கட்டுப்பாடு

    பப்பாளியில் உள்ள பப்பைன் மற்றும் கைமோபப்பைன் என்ற நொதிகள் புரதங்களை உடைக்கவும், செரிமானத்தை மேம்படுத்தவும், உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகின்றன. மேலும் இந்த பப்பைன் நொதி இயற்கையான எக்ஸ்ஃபோலியண்டாக செயல்படுகிறது. இது இறந்த சரும செல்களை அகற்றவும், துளைகளை அடைக்கவும், மென்மையான மற்றும் பிரகாசமான நிறத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. இறந்த செல்கள் அகற்றப்படுவதால் முகத்தில் பருக்களின் அளவு குறையும். 

    முகச்சுருக்கம்

    பப்பாளியில் 'லைகோபீன்' என்ற ஆக்ஸிஜனேற்ற பைட்டோநியூட்ரியண்ட் அதிகளவு உள்ளது. இது தோல் பாதுகாப்புக்கு முக்கிய பங்காற்றுகிறது.  2017 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வின்படி , பப்பாளியில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள் ஃப்ரீ ரேடிக்கல் சேதத்தை எதிர்த்துப் போராட உதவுகிறது. இது உங்கள் சருமத்தை மென்மையாகவும், இளமையாகவும் வைத்திருக்க உதவும். மேலும் லைகோபீன் இளமை தோற்றத்தை தக்கவைக்க உதவுகிறது. தோல் சுருக்கத்தை குறைக்கவும் உதவும். 

    சருமத்தை ஆழமாக சுத்தப்படுத்தும்

    பப்பாளியில் பயனுள்ள நொதிகள் மற்றும் தாவர அடிப்படையிலான ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளன. இந்த கூறுகள் சருமத்தின் மேற்பரப்பில் இருந்து இறந்த மற்றும் சேதமடைந்த செல்கள், திசுக்கள் மற்றும் மாசுக்களை அகற்ற உதவும். பப்பாளி சருமத்துளைகளை சுத்தம் செய்து சருமத்தை பிரகாசமாகவும், தெளிவாகவும் மாற்ற உதவுகிறது. மேலும் சருமத்தின் உள் அடுக்குகளில் ஊடுருவி, அழுக்கு மற்றும் அதிகப்படியான எண்ணெயை வெளியேற்றுவதன் மூலம் நல்ல நிறத்தையும் கொடுக்கிறது. 

    தோல் நோய்கள்

    பல காலமாக பப்பாளி தழும்புகள், தீக்காயங்கள் மற்றும் பிற தோல் நோய்களுக்கு இயற்கையான மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. பப்பாளி நொதிகள் இறந்த சரும செல்களை வெளியேற்றி, சருமத்தில் உள்ள மாசுக்களை நீக்குகின்றன. பாதிக்கப்பட்ட இடத்தில் பப்பாளிக்கூழை பயன்படுத்தினால் உடனடியாக தீர்வு கிடைக்கும். தோல் அரிப்பு மற்றும் அலர்ஜிக்கு தீர்வு அளிக்கிறது.

    ஈரப்பதம்

    பப்பாளியில் அதிக அளவு உள்ள ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் நொதிகள் வறண்ட, தோல் உரியும் சருமத்திற்கு சிகிச்சையளிப்பதற்கும், சருமத்தின் இயற்கையான ஈரப்பதத்தை மீட்டெடுப்பதற்கும் உதவுகின்றன. பப்பாளி கூழை உங்கள் சருமத்தில் தொடர்ந்து தடவுவது சருமத்தை மென்மையாக்கி அதன் இயற்கையான பளபளப்பை மீண்டும் கொண்டு வர உதவும்.

    அடிமுதல் நுனிவரை

    பப்பாளி பழம் மட்டுமின்றி பப்பாளிச் செடியின் பல பாகங்களும் சருமத்திற்கு நன்மை பயக்கும். சாறு, சோப்பு, பொடி என பல்வேறு வடிவங்களில் பப்பாளியின் நன்மைகளைப் பெறலாம். பப்பாளியின் நன்மைகளை வெவ்வேறு வடிவங்களில் எவ்வாறு பெறுவது என்பதைப் பார்ப்போம்.


    பழம், சாறு, இலை என அனைத்து வடிவங்களிலும் சருமத்திற்கும், உடலுக்கும் நன்மை அளிக்கிறது பப்பாளி

    பழம்...

    பப்பாளியை பச்சையாகவோ, பழுத்ததாகவோ அல்லது சமைத்ததாகவோ சாப்பிட்டாலும் உங்களுக்கு நன்மை பயக்கும். சாப்பிடுவதைத் தவிர, மசித்த பப்பாளி கூழை ஃபேஸ் பேக்காகவும் பயன்படுத்தலாம். மசித்த பப்பாளி கூழில் தேன், மஞ்சள், எலுமிச்சை சாறு அல்லது முட்டையின் வெள்ளைக்கருவை (உங்கள் சருமத்தின் தேவைக்கேற்ப) சேர்க்கலாம். பழுப்பு நிறத்தை நீக்க, சருமத்தை ஒளிரச் செய்ய,  ஈரப்பதத்தை தக்கவைக்க அல்லது ஊட்டமளிக்க இதைப் பயன்படுத்துங்கள்.

    விதைகள்

    பப்பாளி விதைகளில் பாலிபினால்கள் மற்றும் ஃபிளாவனாய்டுகள் அதிகளவில் உள்ளன. அவை ஆக்ஸிஜனேற்றிகளாக செயல்படுகின்றன. பப்பாளி விதைகளில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் பைட்டோ கெமிக்கல்கள் உங்கள் சரும செல்களை ஆக்ஸிஜனேற்ற சேதத்திலிருந்து பாதுகாக்கும். 

    இலைகள்

    பொதுவாக மென்மையான, தெளிவான மற்றும் இளமையான சருமத்திற்கு பப்பாளி இலைகள் சாறு வடிவத்திலும், பேஸ்ட் வடிவத்திலும் பயன்படுத்தப்படுகிறது. பப்பாளி இலைகளில் புரதத்தை கரைக்கும் நொதியான பப்பெய்னும் உள்ளது. எனவே, அதன் இலையை அறைத்து அந்த சாற்றை இறந்த சரும செல்களை அகற்றவும், அடைபட்ட துளைகளை அழிக்கவும், முகப்பருவுக்கு சிகிச்சையளிக்கவும் ஒரு எக்ஸ்ஃபோலியண்டாக மேற்பூச்சாகப் பயன்படுத்தலாம்.

    சோப்பு

    பப்பாளியின் நன்மைகளைப் பெற இதுவே எளிதான வழி. பழச்சாறு, வைட்டமின் சி & ஈ மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் கொண்ட ஆர்கானிக் பப்பாளி சோப்பு உங்கள் சருமத்தை ஒளிரச் செய்யும், ஒழுங்கற்ற நிறமிகளைக் குறைக்கும் மற்றும் கொலாஜன் உற்பத்தியை மேம்படுத்தும்.

    சாறு

    பப்பாளி ஜூஸ் உடனடி நீரேற்றம் மற்றும் பளபளப்பை வழங்கும். சாற்றில் பொட்டாசியம் இருப்பது சருமத்தை ஈரப்பதமாக்க உதவுகிறது மற்றும் மந்தமான தன்மையை நீக்குகிறது.

    • முகத்தில் ஐஸ் கட்டி பயன்படுத்துவதன் மூலம் பல்வேறு பயன்கள் கிடைக்கும்.
    • ஐஸ் கட்டியை நேரடியாக சருமத்தில் பயன்படுத்தக் கூடாது.

    இன்று பலரும் சரும ஆரோக்கியத்தைப் பராமரிக்க பல்வேறு முயற்சிகளைக் கையாள்கின்றனர். பலரும் வேதிப்பொருட்கள் நிறைந்த க்ரீம்களை பயன்படுத்துகின்றனர். பலர் வீட்டிலிருக்கும் பொருட்களை வைத்து இயற்கை முறையில் முகத்தை மெருகூட்டுவர். ஆனால் வெறும் தண்ணீரை வைத்து முகத்தை அழகுப்படுத்தலாம் எனக்கூறினால் நீங்கள் நம்புவீர்களா? ஆம். தண்ணீர் இருந்தால் போதும். வேறு எதுவும் தேவையில்லை. தண்ணீர் என குறிப்பிடுவது ஐஸ் கட்டியைத்தான். உங்கள் முகத்தில் ஐஸ் கட்டியை பயன்படுத்துவதன் மூலம் பல்வேறு பயன்கள் கிடைக்கும். பலருக்கு கிடைத்திருக்கும். ஆனால் ஐஸ்கட்டியை பயன்படுத்துவதற்கு முன் அது உண்மையில் பயனுள்ளதா என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். ஐஸ்கட்டியை முகத்திற்கு பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகளையும், அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் மருத்துவர்கள் கூறுவதை பார்ப்போம்.

    முகப்பரு

    ஐஸ் கட்டிகளின் சிறந்த பண்புகளில் ஒன்று அதன் அழற்சி எதிர்ப்பு தன்மை ஆகும். இது முகப்பருவைக் குறைத்து, குணப்படுத்த உதவுகிறது. இது வீக்கமடைந்த சருமத்தை அமைதிப்படுத்தி ஆற்றும். ஐஸ் கட்டிகள் அதிகப்படியான எண்ணெய் உற்பத்தியையும் கட்டுப்படுத்துகின்றன. இதனால் பருக்கள் குறைகின்றன. 

    திறந்த துளைகள்

    மேக்கப் போடுவதற்கு முன்பு ஐஸ் கட்டியை சருமத்தில் தேய்ப்பது ப்ரைமராக வேலை செய்யும். இது விரிவடைந்த துளைகளை (Open போர்ஸ்) சுருக்கி சருமத்தை இறுக்கமாக்க உதவுகிறது.

    பளபளப்பான சருமம்

    ஐஸ்கட்டி இரத்த ஓட்டத்தை அதிகரித்து, கன்னங்களுக்கு இயற்கையாகவே ரோஜா நிற தோற்றத்தை அளிக்கிறது. 

    வீக்கம்

    அதிகப்படியான சூரிய ஒளி, ஒவ்வாமை அல்லது தடிப்புகள் காரணமாக சருமம் எரிச்சல், அரிப்பு அல்லது வீக்கமடைந்தால், ஐஸ் கட்டியைப் பயன்படுத்துவது உதவியாக இருக்கும். ஐஸ் கட்டி தடவுவது வீக்கத்தைக் குறைத்து அசௌகரியத்தைத் தணிக்க உதவும். சருமத்தில் ஐஸ்கட்டியைப் பயன்படுத்துவது நிணநீர் மண்டலத்திலிருந்து அதிகப்படியான திரவங்களை வெளியேற்ற உதவுகிறது. இதன் மூலம் முகத்தின் வீக்கத்தைக் குறைத்து தோற்றத்தைப் புதுப்பிக்கிறது. 

    ஆரோக்கியமான, பளபளப்பான சருமத்தைப் பெற ஐஸ் கட்டிகளைப் பயன்படுத்துவது எளிமையான நடைமுறை; வீக்கத்தைக் குறைத்து எரிச்சலைத் தணிப்பது முதல் இயற்கையான பளபளப்பைச் சேர்ப்பது வரை, நன்மைகள் ஈர்க்கக்கூடியவை என்றாலும் இது பல்வேறு விளைவுகளையும் கொண்டுள்ளது. 


    ஐஸ்கட்டியை முகத்திற்கு பயன்படுத்தினால் கன்னங்களுக்கு இயற்கையாகவே ரோஜா நிற தோற்றம் கிடைக்கும்

    வறண்ட சருமம்

    வறண்ட சருமம் உடையவர்கள் ஐஸ் கியூப்ஸை முகத்திற்கு பயன்படுத்துவதை தவிர்ப்பது மிகவும் நல்லது. ஏனெனில் ஏற்கனவே முகம் எண்ணெய்த்தன்மை இல்லாமல் வறண்டிருக்கும். அதில் இன்னும் தண்ணீரை சேர்த்தால் மேலும் பாதிப்படையும். 

    சருமத்துளைகள்

    ஐஸ்கட்டி திறந்த துளையை சுருக்கி சருமத்தை இறுக்கும் என மேலேயே பார்த்தோம். இதனால் துளைகள் குறுகி, வியர்வை மற்றும் செபாசியஸ் சுரப்பிகள் சுரப்பதில் தாமதம் ஏற்படலாம். 

    அரிப்பு 

    மருத்துவர்களின் கூற்றுப்படி, முகத்தில் ஐஸ் கட்டியை பயன்படுத்துவது நல்லது என்றாலும், நீண்ட நேரம் அதைச் சருமத்தில் வைத்துப் பயன்படுத்துவது சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும். இது சருமத்தில் அரிப்பு மற்றும் சிவப்பு தன்மையை ஏற்படுத்தும் வாய்ப்புகள் அதிகம். ஐஸ் கட்டியை நேரடியாக சருமத்தில் பயன்படுத்தக் கூடாது. இது பல்வேறு விளைவுகளை உண்டாக்கும். அதுபோல அதிக நேரம் வெயிலில் செலவிட்ட பின் உடனடியாக முகத்தில் ஐஸ் கட்டிகளைப் பயன்படுத்தக்கூடாது. ஏனெனில் அது கடுமையான தலைவலிக்கு வழிவகுக்கும். 

    • தெளிவான மற்றும் ஆரோக்கியமான சருமம் தன்னம்பிக்கையை அதிகரித்து மனநிலையை மேம்படுத்துகிறது.
    • ஆரோக்கியமான உணவும், நல்ல உறக்கமும்தான் உடலையும், அழகையும் பராமரிக்கும்.

    பெண்கள் மட்டுமின்றி ஆண்கள் உட்பட அனைவரும் விரும்புவது அழகான ஒளிரும் முகமே. தெளிவான மற்றும் ஆரோக்கியமான சருமம் தன்னம்பிக்கையை அதிகரிக்கிறது மற்றும் மனநிலையை மேம்படுத்துகிறது. ஆனால் அழகான, ஒளிரும், மென்மையான சருமத்தை பராமரிப்பது என்பது மிகவும் கடினமான ஒன்று. நம் சருமத்தை எப்போதும் ஆரோக்கியமாக, அழகாக வைத்திருக்க உதவும் சில எளிய வழிமுறைகளை பார்ப்போம்.

    தேங்காய் எண்ணெய்!

    வறண்ட சருமம் கொண்டவர்களுக்கு தேங்காய் எண்ணெய் நன்கு உதவும். தேங்காய் எண்ணெய், சருமத்தில் ஈரப்பதத்தை உண்டாக்கி, சூரியனின் புற ஊதா கதிர்களிலிருந்து பாதுகாப்பு வழங்கி, ஆரோக்கியமான சரும அமைப்பை மேம்படுத்துகிறது. எண்ணெயை லேசாக சூடாக்கி, முகம் மற்றும் கழுத்தில் தடவவும். எண்ணெய் தடவி முகத்திற்கு மசாஜும் கொடுக்கலாம். மறுநாள் காலையில் எழுந்து முகத்தை கழுவினால் வறண்ட சருமத்தினருக்கு நல்ல வித்தியாசம் தெரியும். முகம் மென்மையாக இருக்கும்.

    கற்றாழை...

    பளபளப்பான சருமம் மற்றும் ஆரோக்கியமான கூந்தலுக்கு கற்றாழை ஒரு சிறந்த மருந்தாகும். கற்றாழை, முகப்பரு மற்றும் சுருக்கத்தை குறைக்கும். முகத்தில் இருக்கும் எண்ணெய்ப்பசையை நீக்கி, எப்போதும் முகத்தை ஹைட்ரேட்டாக வைத்திருக்கும். கற்றாழை ஜெல்லை முகத்தில் தடவி, 15-20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகம் கழுவினால் போதும். 3 நாட்களிலேயே மாற்றத்தை உணர்வீர்கள்.


    அனைவரும் விரும்புவது அழகான ஒளிரும் முகமே!

    பால்...

    பச்சைப்பாலில் காட்டன் துணியை நனைத்து முகத்தை துடைக்கவேண்டும். அப்போது முகத்தில் உள்ள அழுக்கு, கரும்புள்ளிகள் நீங்கி பளபளப்பான சருமம் கிடைக்கும்.

    தேன்!

    முகப்பரு, தழும்பு, முக வடுக்கள் உள்ளிட்டவற்றை தேன் குறைக்கும். சருமத்தை எப்போதும் ஹைட்ரேட்டாக வைத்திருக்கும். இளமையான தோற்றத்தை தக்கவைக்கும். தேனை அப்படியே எடுத்து கையால் முகத்தில் அப்ளை செய்து மசாஜ் கொடுக்கவேண்டும். பின்னர் ஒரு 5 நிமிடங்கள் அப்படியே விட்டுவிடவேண்டும். பின்னர் வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவவேண்டும். 

    • பொதுவாக நெல்லிக்காய் முடி உதிர்தலை குறைக்க உதவும்.
    • ஷாம்பு போல நீரேற்ற பண்புகளை கொண்டு உச்சந்தலையை குளிர்விக்க உதவுகிறது.

    பெண்கள் கூந்தலை பராமரிக்க நெல்லிக்காய், கற்றாழை இரண்டையுமே பயன்படுத்துவார்கள். அதிலும் முடி உதிராமல் நீளமாக வளர வேண்டும் என்ற எண்ணமும் மேலோங்கி இருக்கும். முடி வளர்ச்சிக்கு இந்த இரண்டில் எதனை பயன்படுத்துவது சிறந்தது? என்ற குழப்பமும் சிலரிடம் இருக்கும். அதற்கு சரியான தீர்வு எது என்று பார்ப்போமா?

    நெல்லிக்காய்

    இதில் வைட்டமின் சி, ஆன்டி ஆக்சிடென்டுகள், இரும்பு மட்டுமின்றி உச்சந்தலை மற்றும் முடியின் மயிர்க்கால்களுக்கு பலம் சேர்க்கும் பொருட்களும் நிரம்பியுள்ளன. அடிப்படையில் நெல்லிக்காய் முடியின் வேர்க்கால்களுக்கு புரதம்போல் ஊட்டச்சத்து மதிப்புடன் செயல்பட்டு அதன் ஆரோக்கியத்தை பாதுகாக்கக்கூடியது.

    பொதுவாக நெல்லிக்காய் முடி உதிர்தலை குறைக்க உதவும். உச்சந்தலையில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யும். விரைவில் முடி நரைப்பதை குறைக்கும். நெல்லிக்காயை எண்ணெய்யாக தலைக்கு பயன்படுத்தலாம். நெல்லிக்காய் பொடியையும் தலையில் தேய்த்து வரலாம். நெல்லிக்காயை சாறாக பருகியும் வரலாம். இப்படி நெல்லிக்காயை ஏதாவதொரு வகையில் பயன்படுத்தி வந்தால் கடுமையாக முடி உதிர்வது தடுக்கப்படும். தலைமுடி மீண்டும் உயிர்ப்புடன் காட்சியளிக்க உதவும்.

    கற்றாழை

    இது மென்மையானது, குளிர்ச்சியானது. உச்சந்தலைக்கு பயன்படுத்த ஏதுவானது. கற்றாழையில் வைட்டமின்களும், நொதிகளும் நிறைந்துள்ளன. உச்சந்தலை ஈரப்பதமின்றி வறட்சியாக காட்சி அளிக்கிறதா? உச்சந்தலையில் அரிப்பு ஏற்படுகிறதா? கற்றாழை இதற்கு சிறந்த தேர்வாக அமையும். இது ஷாம்பு போல நீரேற்ற பண்புகளை கொண்டு உச்சந்தலையை குளிர்விக்க உதவுகிறது. தலைமுடி சரியாக வளர்வதற்கு ஏற்ற சூழலையும் அளிக்கிறது. கற்றாழையை செடியில் இருந்து வெட்டி எடுத்து, அதன் உள்பகுதி சதையை வெளியே எடுத்து நேரடியாக தலையில் தேய்க்கலாம். கடைகளில் கிடைக்கும் தரமான கற்றாழை ஜெல்லையும் உபயோகிக்கலாம்.

    எதனை பயன்படுத்தலாம்?

    நெல்லிக்காய், கற்றாழை இவை இரண்டுமே வெவ்வேறு வழிகளில் முடியின் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும் உதவுகின்றன. நெல்லிக்காயை பொறுத்தவரை முடி உதிர்வை தடுக்கவும், முடியை வலுவாக்கவும், முடி அடர்த்திக்கும் முக்கிய பங்கு வகிக்கக்கூடியது. கற்றாழை உச்சந்தலையை தூய்மையாக பராமரிக்கவும், குளிர்ச்சியாக வைத்திருக்கவும் உதவிடக்கூடியது. முடி வளர்வதற்கு சாதகமான சூழலையும் ஏற்படுத்திக்கொடுக்கக்கூடியது.

    உங்களுக்கு முடி உதிர்வு பிரச்சினை இருந்தாலோ, முடி அடர்த்தி குறைந்து மெல்லியதாக இருந்தாலோ நெல்லிக்காய் சிறந்த தீர்வாக அமையும். உச்சந்தலை வறண்டு அரிப்பு, எரிச்சல் ஏற்பட்டால் கற்றாழை கைகொடுக்கும்.

    • சரும பராமரிப்பில் சுத்தப்படுத்துதல், டோனிங் மற்றும் ஈரப்பதம் இவை மூன்றும் மிக முக்கியமானவை.
    • தலைமுடிக்கு மிதமான தன்மை கொண்ட ஷாம்புகளை பயன்படுத்த வேண்டும்.

    கல்லூரி மாணவிகள் தங்களை அழகுபடுத்திக் கொள்ளவே அதிக ஆர்வம் காட்டுவார்கள். ஆனால் பலரும் அது குறித்த விழிப்புணர்வு பற்றி அறிந்திருக்க மாட்டார்கள். தோழிகளிடம் கேட்பது, இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்றவற்றை பார்த்து, அவற்றை பின்பற்றி சில மோசமான விளைவுகளை சந்திக்கின்றனர். எனவே இந்த பிரச்சினையை தவிர்க்க, நீங்கள் பார்ப்பதற்கு அழகாக தோன்ற, உங்களுக்கு உதவும் சில எளிய குறிப்புகள் குறித்து இங்கு பார்க்கலாம்.

    * சரும பராமரிப்பு

    சரும பராமரிப்பில் சுத்தப்படுத்துதல், டோனிங் மற்றும் ஈரப்பதம் இவை மூன்றும் மிக முக்கியமானவை. உங்களது சரும வகைக்கு ஏற்ப கிளென்சரனை தேர்ந்தெடுத்து, ஒரு பருத்தி உருண்டையில் கிளென்சரனை தடவி இரவு தூங்கும் முன்பு உங்களது முகத்தில் தடவ வேண்டும். இது முகத்தில் இருக்கும் அழுக்குகளை அகற்றி விடும். அடுத்ததாக, சரும பொலிவை மேம்படுத்த ரோஸ் வாட்டர் பயன்படுத்தலாம். சருமத்தின் ஈரப்பதத்தை தக்க வைக்க மாய்ஸ்சுரைசர் பயன்படுத்த வேண்டும். இது சருமத்தை இளமையாக வைக்க உதவும்.

     

    * தலைமுடி பராமரிப்பு

    தலைமுடிக்கு மிதமான தன்மை கொண்ட ஷாம்புகளை பயன்படுத்த வேண்டும். வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை தலைக்கு கண்டிப்பாக குளிக்க வேண்டும். முக்கியமாக உங்கள் தலைமுடிக்கு ஏற்ப கண்டிஷனரை பயன்படுத்த மறக்காதீர்கள். மேலும் வாரத்திற்கு ஒருமுறை கண்டிப்பாக தலைக்கு தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் தடவி மசாஜ் செய்து குளிக்க வேண்டும்.

    * சூரிய ஒளி

    சூரிய ஒளியிலிருந்து சருமத்தை பாதுகாக்க சன் ஸ்கிரீன் பயன்படுத்துங்கள். சன் ஸ்கிரீன் புற ஊதா கதிர்களின் தாக்கத்திலிருந்து உங்களது சருமத்தை பாதுகாக்கும்.

    * முக அழகு

    வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை சிறிதளவு பாலுடன், மஞ்சள் தூள், கடலை மாவு கலந்து அதை உங்களது முகத்தில் தடவி 'ஸ்கிராப்' செய்ய வேண்டும். இப்படி செய்தால் உங்களது முகம் பொலிவாக மாறும்.

    * உடல் பராமரிப்பு

    கல்லூரிக்கு சென்று வந்தவுடன் கண்டிப்பாக குளிக்க வேண்டும். அப்போதுதான் உடலில் இருக்கும் அழுக்கு, தூசி மற்றும் வியர்வை வெளியேற்றப்படும். உடலுக்கு நீங்கள் லேசான சோப் அல்லது பாடி வாஷ் பயன்படுத்தலாம். தினமும் காலை மற்றும் இரவு தூங்கும் முன் என இரண்டு வேளையும் பல் துலக்க வேண்டும் மற்றும் நாக்கையும் சுத்தம் செய்ய மறக்காதீர்கள். அப்போதுதான் பேசும்போது துர்நாற்றம் அடிக்காது. நகங்களை அவ்வப்போது வெட்டி விடுங்கள் மற்றும் நகங்களில் அழுக்கு சேராமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

    * சிம்பிள் மேக்கப்

    தினமும் கல்லூரிக்கு செல்லும்போது உங்களது சரும நிறத்திற்கு ஏற்ப சிம்பிளான மேக்கப் போட்டு செல்லுங்கள். அதாவது ஐஷாடோ, ஐ லைனர், மஸ்காரா, லிப் பாம் போன்றவற்றை பயன்படுத்தலாம். இதுபோல இரவு தூங்கும் முன் மேக்கப்பை அகற்ற மறக்காதீர்கள்.

    • உங்கள் மரபணுவைப் பொறுத்து தான் முடி வளர்ச்சியும் இருக்கும்.
    • உங்கள் ஷாம்பூ தான் உங்கள் முடியின் மென்மையையும், முடி உதிர்வதையும் தடுக்கும் திறன் கொண்டது.

    ஆண்கள், பெண்கள் யாராக இருந்தாலும் சரி.. இவர்களின் பொதுவான பிரச்சனை முடி கொட்டுதல் தான். சிலர் முடி அதிகமாக கொட்டுகிறது அதனால் மொட்டை அடிக்கப்போகிறேன் என்பார்கள். ஏன்? என்று கேட்டால் மொட்டை அடித்தால் முடி அடர்த்தியாக வளரும் என்றும், அதன்பிறகு முடி கொட்டுதல் இருக்காது என்றும் கூறுவார்கள்.

    உண்மையில் மொட்டை அடித்ததற்கு பிறகு முடி அடர்த்தியாக வளருமா? முடி கொட்டுவது இருக்காதா? இது உண்மையான கூற்று தானா எனபதைப் பற்றி தான் இந்தப் பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

    மொட்டை அடிப்பதால் கொஞ்ச நாளைக்கு முடி இல்லாமல் இருப்போமே தவிர முடி வளர்ச்சியில் எந்த மாற்றமும் நிகழப்போவதில்லை. ஏனெனில் இந்த செயலின் போது முடியிலோ அல்லது மயிர்க்கால்களிலோ எந்த மாற்றமும் இருக்காது. குறுகிய மயிர்க்கால்கள் அடர்த்தியாக தெரிவது போன்றதொரு பிம்பம் மட்டுமே காணப்படும். மொத்தத்தில் மொட்டை அடித்தால் முடி நன்றாக , வேகமாக வளர்வதாக உணர்ந்தால் அது ஒரு மாயை தான். மொட்டை அடிப்பது தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வுகளில் கூட, மொட்டை அடிப்பதற்கும் முடியின் வளர்ச்சி, வேகம் மற்றும் அடர்த்திக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தான் கண்டறியப்பட்டுள்ளது. உங்கள் மரபணுவைப் பொறுத்து தான் முடி வளர்ச்சியும் இருக்கும்.

    முடி கொட்டாமல் ஆரோக்கியமாக இருக்க நீங்கள் அன்றாடம் உட்கொள்ளும் உணவில் வைட்டமின் ஏ,சி,டி,ஈ மற்றும் இரும்புச்சத்து, துத்தநாகம் முதலானவை இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.

    முக்கியமாக தலைக்கு எண்ணெய் வைக்க வேண்டும். அதிலும் வாரத்தில் ஒருமுறையாவது எண்ணெய் வைத்து குளிக்க வேண்டும். அன்றாடம் பயன்படுத்தும் ஷாம்பூ மற்றும் கண்டிஷனர் சல்பேட் இல்லாததாக இருக்க வேண்டும். உங்கள் ஷாம்பூ தான் உங்கள் முடியின் மென்மையையும், முடி உதிர்வதையும் தடுக்கும் திறன் கொண்டது. அதனால் ஷாம்பூ தேர்ந்தெடுப்பதில் கவனம் தேவை.

    முடியை பராமரிப்பதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டாலும், முடி அதிகமாக கொட்டுகிறது, அடர்த்தியாக இல்லை மொட்டை அடித்தால் மீண்டும் வளரும் போது நன்றாக வளரும், அடர்த்தியாக இருக்கும் என தவறாக நினைத்துக்கொண்டு மொட்டை அடித்துக்கொள்ளாமல் மருத்துவரை அணுகி சரியான காரணங்களை தெரிந்துகொண்டு முறையான சிகிச்சையை மேற்கொள்ளுங்கள்.

    ×