என் மலர்
அழகுக் குறிப்புகள்

உடலுக்கு உள்ளேயும் வெளியேயும் தேங்காய் எண்ணெய் செய்யும் மேஜிக்!
- கேரளாவில் உச்சிமுதல் பாதம்வரை தேங்காய் எண்ணெய்தான்!
- தேங்காய் எண்ணெயில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம்.
கேரள பெண்கள் என்றாலே அவர்களின் வனப்பும், நீண்ட அடர்த்தியான முடியும்தான் பலரையும் கவரும். கேரளப் பெண்களுக்கு இந்த அழகை கொடுப்பது தேங்காய் எண்ணெய்தான். உச்சம் முதல் பாதம்வரை அவர்கள் பயன்படுத்துவது தேங்காய் எண்ணெய்தான். மேலும் சமையலுக்கும் அவர்கள் தேங்காய் எண்ணெயைதான் பயன்படுத்துவார்கள். தேங்காய் எண்ணெயின் பயன்பாடு கேரளாவில் அதிகம் இருப்பதற்கான காரணங்களை கீழே காண்போம்.
உடல் எடை குறையும்
உடலில் உள்ள கொழுப்புச் சத்தைக் குறைக்கும் காப்ரிக் ஆசிட் (Capric Acid) மற்றும் லாரிக் ஆசிட் (Lauric Acid) ஆகிய இரண்டு அமிலங்களும் தேங்காய் எண்ணெயில் போதிய அளவு உள்ளன. எனவே தேங்காய் எண்ணெயை உரிய அளவு தினமும் உணவில் சேர்த்தால் உடல் எடை குறையும்.
சரும பொலிவு
தேங்காய் எண்ணெய் மேக்கப் ரிமூவராக பயன்படுகிறது. இரவில் முகத்தை சுத்தம் செய்து விட்டு தேங்காய் எண்ணெயை தடவிக்கொண்டு படுக்கலாம். இதனால் சருமத்திற்கு நல்ல பொலிவு கிடைக்கும். எண்ணெய் சருமம் இருப்பவர்கள் மருத்துவரிடம் ஆலோசிக்கலாம்.
நோய் எதிர்ப்பு சக்தி
தேங்காய் எண்ணெயில் உள்ள லாரிக் ஆசிட் மற்றும் காப்ரிக் ஆசிட் வைரஸ் மற்றும் பாக்டீரியல் நுண்கிருமிகளை எதிர்க்கும் திறன் கொண்டதாக உள்ளது. மோனோ லாரின் (Mono Laurin) வைரஸ் செல் சுவர்களைக் கரைக்கிறது. இதில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம். உடலின் வளர்ச்சிதை மாற்றத்துக்கு (Metabolism) பெரிதும் உதவுகிறது.
சரும பாதுகாப்பு
சரும வறட்சியை தடுத்து, இளமை தோற்றத்தை தக்கவைக்க தேங்காய் எண்ணெய் பெரிதும் உதவும். சருமத்திற்கு தேவையான வைட்டமின் ஈ இதில் நிறைந்துள்ளது. தேங்காய் எண்ணெய்யை முகத்தில் தடவுவது பல்வேறு நன்மை அளிக்கும். கரும்புள்ளிகளை மங்கச் செய்து, தழும்புகளை குணப்படுத்தும். இதில் உள்ள சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் சருமத்திற்கு அடியில் தங்கி, சருமத்தை மென்மையாகவும், வறட்சியின்றியும் வைத்துக் கொள்ள உதவும். தேங்காய் எண்ணெய்யில் மசாஜ் செய்வது முகச்சுருக்கத்தையும், முதுமை தோற்றத்தையும் தள்ளிப்போடும்.
உச்சிமுதல் பாதம்வரை பலனளிக்கும் தேங்காய் எண்ணெய்
பாடி லோஷன்
உடம்பிற்கு மிகப்பெரிய பாடி லோஷனாக தேங்காய் எண்ணெய் பயன்படுகிறது. தேங்காய் எண்ணெய்யை கை, கால்களில் தேய்ப்பது தோலுக்கு மென்மையையும், தோலின் ஈரப்பதத்தை கூட்டவும் செய்கிறது. தினமும் குளித்து முடித்த பின் தேங்காய் எண்ணெயை உடல் முழுவதும் தடவினால், சருமம் மிருதுவாகவும், வழுவழுப்பாகவும் இருக்கும். உடல் முழுவதும் மசாஜ் செய்வதற்கும் தேங்காய் எண்ணெயை பயன்படுத்தலாம்.
முடி பராமரிப்பு
கேரளா மற்றும் தமிழ்நாட்டில் பெரும்பாலானோர் முடிக்கு தேங்காய் எண்ணெயைத்தான் பெரும்பாலும் பயன்படுத்துவர். தேங்காய் எண்ணெய் மயிரிழைகளுக்கு ஈரப்பதத்தை கொடுப்பதோடு, முடியின் வேர்க்கால்களை பலமடைய செய்கிறது. தேங்காய் எண்ணெய் கூந்தல் உதிர்வை குறைக்கிறது. மேலும் முடிக்கு பளபளப்பை கொடுக்கிறது.
தோல் நோய்
கீழேவிழுந்து கை, கால்களில் ஏதேனும் காயம் ஏற்பட்டால், உடனே அம்மா சொல்வது தேங்காய் எண்ணெய், மஞ்சள்தூளை கலந்து வை என்பதுதான். அதற்கு காரணம் தேங்காய் எண்ணெயில் இருக்கும் பாக்டீரியா எதிர்ப்புப் பொருள். இதில் இருக்கும் பாக்டீரியா எதிர்ப்புப் பொருள் தோல் பூஞ்சை நோய்களை கட்டுப்படுத்துகிறது. மேலும் திறந்த புண்களில் தொற்றுக்களை வரவிடாமலும் பாதுகாக்கிறது.






