என் மலர்tooltip icon

    ஆசிரியர் தேர்வு

    • தமிழகத்துக்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றார்.
    • லண்டன், கீழைத்தேயவியல் மற்றும் ஆப்பிரிக்கவியல் பல்கலைக்கழகத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு முதலமைச்சர் மரியாதை செலுத்தினார்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்துக்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு 9 நாட்கள் சுற்றுப்பயணம் சென்றார். தனது பயணத்தின் ஒரு அங்கமாக, லண்டன், கீழைத்தேயவியல் மற்றும் ஆப்பிரிக்கவியல் பல்கலைக்கழகத்தில் (எஸ்.ஓ.ஏ.எஸ்.) உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை செலுத்தினார்.

    இந்தநிலையில், அ.தி.மு.க. வக்கீல் அணி செயலாளரும், எம்.பி.யுமான ஐ.எஸ்.இன்பதுரை, மு.க.ஸ்டாலினின் சித்தாந்த தடுமாற்றம் என்ற தலைப்பில், நெற்றியில் விபூதி வைக்கப்பட்ட திருவள்ளுவரை மு.க.ஸ்டாலின் கும்பிடுவது போன்ற படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

     

    இதுதொடர்பாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள பதிவில், ''விபூதியுடன் திருவள்ளுவர் இருக்கும் படம் 'எடிட்' செய்த படம்'' என்று கூறப்பட்டுள்ளது. மேலும் நெற்றியில் விபூதி இல்லாமல் உள்ள திருவள்ளுவர் படத்தையும், நெற்றியில் விபூதி இருப்பது போன்ற 'எடிட்' செய்யப்பட்டதாக கூறப்படும் திருவள்ளுவர் படத்தையும் வெளியிட்டுள்ளது.

    • வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் கோவையிலிருந்து இரண்டு முறை மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
    • கருப்புப் பணம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டது போன்றவற்றின் மூலம் நாடு முழுவதும் கவனம் பெற்றவர் ஆவார்.

    நாட்டின் அடுத்த துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று (செப்டம்பர் 9) நடைபெற உள்ளது.

    வாக்குப்பதிவு காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெறும். இரு அவைகளிலிருந்தும் எம்.பி.க்கள் ரகசிய வாக்கெடுப்பு மூலம் தங்கள் வாக்குகளை செலுத்துவர்.

    வாக்குப்பதிவு முடிந்த உடனேயே, வாக்கு எண்ணிக்கை மாலை 6 மணிக்கு தொடங்கும். இன்றிரவே முடிவுகள் அறிவிக்கப்படும்.

    வேட்பாளர்கள் பின்னணி?

    தமிழ்நாட்டைச் சேர்ந்த மூத்த பாஜக தலைவரும் ஆர்எஸ்எஸ் புள்ளியுமான சி.பி. ராதாகிருஷ்ணன் (67) என்.டி.ஏ வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார்.

    வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் கோவையிலிருந்து இரண்டு முறை மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது இவர் மகாராஷ்டிராவின் ஆளுநராகப் இருந்து வருகிறார்.

    தெலுங்கானாவைச் சேர்ந்த ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி சுதர்சன் ரெட்டி (79) இந்தியா கூட்டணியின் வேட்பாளராக களமிறங்கியுள்ளார்.

    சத்தீஸ்கரில் நக்சல் எதிர்ப்பு என்ற பெயரில் தனிநபர்களுக்கு ஆயுதங்கள் வழங்கி அரசு ஆதரவுடன் நடத்தப்பட்ட சல்வா ஜூடும் அமைப்பு அரசியலமைப்பிற்கு விரோதமானது என்ற தீர்ப்பு, கருப்புப் பணம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டது போன்றவற்றின் மூலம் நாடு முழுவதும் கவனம் பெற்றவர் ஆவார்.

    எதிர்க்கட்சிகள் இவரை சமூக நீதியின் அடையாளமாக நிலைநிறுத்தியுள்ளன.

    யாருக்கு பலம்?

    மக்களவை மற்றும் மாநிலங்களவையைச் சேர்ந்த மொத்தம் 781 எம்.பி.க்கள் வாக்களிக்க உள்ளனர்

    வெற்றிக்கு 391 வாக்குகள் என்ற மேஜிக் எண்ணிக்கை தேவை. ஆளும் என்.டி.ஏ கூட்டணிக்கு 425 எம்.பி.க்கள் என்ற சொந்த பலம் உள்ளது.

    கூடுதலாக, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 11 எம்.பி.க்களும் தங்கள் ஆதரவை அறிவித்துள்ளனர், இதன் மூலம் அவர்களின் எண்ணிக்கை 436 ஆக உயர்ந்துள்ளது.

    ஆம் ஆத்மி கட்சி எம்.பி. ஸ்வாதி மாலிவாலும் என்.டி.ஏ வேட்பாளருக்கு வாக்களிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    மறுபுறம், எதிர்க்கட்சி இந்தியா கூட்டணிக்கு 324 எம்.பி.க்களின் ஆதரவு உள்ளது. எண்ணிக்கை பலத்தின் அடிப்படையில் என்.டி.ஏ வேட்பாளரின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியானாலும், கடந்த தேர்தலை விட இதில் முன்னிலை குறைய வாய்ப்புள்ளது என்று கணிக்கப்படுகிறது.

    2022 இல் ஜக்தீப் தன்கர் 346 வாக்குகள் என்ற மிகப்பெரிய பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றிருந்தார்.

    இந்த முறை முன்னிலை 100 முதல் 125 வாக்குகள் வரை மட்டுமே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • இத்தனை சிரமங்களை கடந்து அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள ஒரு கடையில் காவலாளியாகப் பணிபுரிந்து வந்தார்.
    • துப்பாக்கியுடன் வந்து கபிலை சுட்டுக் கொலை செய்தார்.

    அரியானாவின் ஜிந்த் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கபில் (26). ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த கபில் பெற்றோர் மற்றும் 2 சகோதரிகளை காப்பாற்ற வேண்டி வேலைக்காக 3 வருடங்களுக்கு முன் அமேரிக்காவுக்கு சென்றார்.

    இதற்காக, அவரது குடும்பம் சுமார் ரூ. 45 லட்சம் செலவிட்டது. ஆபத்தான டாங்கி ரூட் வழியாக மெக்சிகன் எல்லையைக் கடந்து பனாமா காடுகள் வழியாக அமெரிக்காவிற்குள் நுழைந்தார்.

    முதலில் கைது செய்யப்பட்ட நிலையில் பின்னர் விடுவிக்கப்பட்டு சட்டப்பூர்வமாக அமெரிக்காவில் வேலைபார்த்து வந்தார்.

    இத்தனை சிரமங்களை கடந்து அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள ஒரு கடையில் காவலாளியாகப் பணிபுரிந்து வந்த கபில் ஒரு அற்ப விஷயத்துக்காக கொலை செய்யப்பட்டுள்ளார்.

    அண்மையில் அவர் பணிபுரிந்த கடைக்கு வெளியே பொது வெளியில் சிறுநீர் கழித்த ஒருவரை கபில் கண்டித்தார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. கோபமடைந்த அந்த நபர் சிறிது நேரம் கழித்து துப்பாக்கியுடன் திரும்பி வந்து கபிலை சுட்டுக் கொலை செய்தார்.

    கபிலின் உடலை அரியானாவில் அவரது சொந்த ஊருக்கு கொண்டு வர மத்திய மற்றும் மாநில அரசுகள் வழிவகை செய்ய வேண்டும் என்று குடும்பத்தினரும் கிராம மக்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • வங்கதேசத்தின் தேசிய மீனாக ஹில்சா உள்ளது.
    • மழைக்காலங்களில் மேற்கு வங்கத்தில் ஹில்சா மீன் பிடிப்பதற்கு கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது.

    துர்கா பூஜையை ஒட்டி, நட்புறவின் அடையாளமாக இந்தியாவுக்கு 1200 மெட்ரிக் டன் ஹில்சா மீன்களை வங்கதேசம் ஏற்றுமதி செய்ய உள்ளது

    வங்கதேசத்தின் தேசிய மீனாக ஹில்சா உள்ளது. மழைக்காலங்களில் இனப்பெருக்க காலத்தில், முட்டையிடுவதற்கு வசதியாக, மேற்கு வங்கத்தில் ஹில்சா மீன் பிடிப்பதற்கு கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது.

    குறிப்பாக அந்நாட்டின் பத்மா ஆற்றில் பிடிபடும் இவ்வகை மீன்கள், மேற்கு வங்கம், அசாம், திரிபுரா, ஒடிசா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் குஜராத் மாநிலங்களில் அதிகளவில் மக்களால் விரும்பி வாங்கப்படும்.

    முகமது யூனுஸ் தலைமையிலான வங்கதேச இடைக்கால அரசாங்கம் கடந்த ஆண்டு ஹில்சா மீன்கள் ஏற்றுமதியைத் தடை செய்தது. ஆனால் துர்கா பூஜைக்கு சற்று முன்னதாக மீன்களுக்கான தேவை அதிகமாக இருந்தபோது தடையை வங்கதேச அரசாங்கம் நீக்கியது குறிப்பிடத்தக்கது.

    இட்லி கடை படத்தின் கதாப்பாத்திர அறிமுக போஸ்டர்கள் வெளியிடப்பட்டு வருகிறது.

    தனுஷ் இயக்கத்தில் 4-வது படமாக 'இட்லி கடை' உருவாகியுள்ளது. இது தனுஷ் நடிக்கும் 52-வது திரைப்படமாகும். தனுஷ் இயக்கி நடிக்கும் இத்திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

    இந்த படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அருண் விஜய் இப்படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் அக்டோபர் 1-ம் தேதி ரிலீஸ் ஆகிறது.

    கடந்த இரண்டு நாட்களாக இட்லி கடை படத்தின் கதாப்பாத்திர அறிமுக போஸ்டர்கள் வெளியிடப்பட்டு வருகிறது.

    அந்த வகையில், இப்படத்தில் அருண் விஜய் அஷ்வின் என்கிற கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும், நடிகர் சத்யராஜ் விஷ்ணு வர்தன் என்கிற கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும், நடிகர் ராஜ்கிரன் சிவனேசனாக நடிப்பதாகவும் கதாப்பாத்திர அறிமுக போஸ்டர் வெளியாகி வருகிறது.

    இந்நிலையில், ரசிகர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த இட்லி கடை படத்தில் இசை வெளியீட்டு விழா குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    அதன்படி, இட்லி கடை படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 14ம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளதாக டான் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

    • சர்வதேச போட்டியில் முதன்முறையாக ஓமனை இந்தியா வீழ்த்தியுள்ளது.
    • பெனால்டி ஷூட் அவுட்டில் ஓமன் முதல் இரண்டு மற்றும் கடைசி வாய்ப்பை நழுவவிட்டது.

    CAFA Nations Cup கால்பந்து தொடர் தஜிகிஸ்தானில் உள்ள ஹிசோர் நகரில் நடைபெற்றது. இதில் இந்தியா மற்றும் ஓமன் நாடுகள் தாங்கள் இடம் பிடித்த குரூப்பில் 2ஆம் இடம் பிடித்ததால், 3ஆவது மற்றும் 4ஆவது இடத்திற்கான போட்டியில் இன்று மோதின. இந்த போட்டி 1-1 என டிராவில் முடிவடைந்தது. இதனால் பொனால்டி ஷூட்அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் இந்தியா 3-2 என வெற்றி பெற்றது.

    மேற்கு ஆசிய நாடுகளில் அதிக தரவரிசையில் உள்ள நாட்டை முதன்முறையாக இந்தியா வீழ்த்தியுள்ளது. மேலும், சர்வதேச கால்பந்து போட்டியில் முதன்முறையாக ஓமனை வீழ்த்தியுள்ளது.

    பெனால்டி ஷூட்அவுட்டில் ஓமன் முதல் இரண்டு வாய்ப்புகளையும் நழுவ விட்டது. அதன்பின் கடைசி வாய்ப்பை குர்ப்ரீதி சிங் சந்து சிறப்பான முறையில் தடுத்ததால் இந்தியா வெற்றி பெற்றது. இந்திய அணி சார்பில் லாலியான்ஜுயாலா சங்க்டே, ராகுல் பெகே, ஜிதின் எம்.எஸ். ஆகியோர் பெனால்டி ஷூட்அவுட்டில் கோல் அடித்தனர். அன்வர் அலி, உதண்டா சிங் ஆகியோர் மிஸ் செய்தனர்.

    ஓமனுக்கு எதிராக இந்தியா கடந்த 2000-த்தில் இருந்து 9 முறை மோதியுள்ளது. இதில் 6 முறை தோல்வியடைந்துள்ளது. 2021 மார்ச் மாதம் இரண்டு அணிகளும் கடைசியாக மோதின. இந்த போட்டி 1-1 என டிராவில் முடிந்தது.

    • டெல்லியில் அமித்ஷாவுடன் செங்கோட்டையன் சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    • அ.தி.மு.க. வளர வேண்டும் என்பது மட்டுமே எனது நோக்கம்.

    அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என 10 நாட்கள் கெடு விதித்த செங்கோட்டையனை கட்சிப் பொறுப்புகளில் இருந்து எடப்பாடி பழனிசாமி நீக்கினார்.

    இந்த நிலையில், இன்று காலை முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் டெல்லி செல்வதற்காக கோவை விமான நிலையத்திற்கு வந்திருந்தார்.

    அவரிடம், டெல்லியில் பா.ஜ.க. தலைவர்களை சந்திக்க செல்கிறீர்களா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

    அதற்கு செங்கோட்டையன்," ஹரித்துவார் சென்று ராமரை தரிசனம் செய்தால் சற்று மன ஆறுதலாக இருக்கும் என்பதால் செல்கிறேன். டெல்லி சென்று அங்கிருந்து ஹரித்துவார் செல்கிறேன். பா.ஜ.க. தலைவர்களை சந்திக்க செல்லவில்லை. நாளை முக்கிய அறிவிப்பு எதையும் வெளியிட போவதில்லை.

    அ.தி.மு.க.வில் பிரிந்திருக்கும் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இல்லை. அனைவரும் ஒன்றாக வேண்டும். அ.தி.மு.க. வளர வேண்டும் என்பது மட்டுமே எனது நோக்கம்" என்றார்.

    இந்நிலையில், மன நிம்மதிக்காக ஹரித்வார் செல்வதாக புறப்பட்டுச் சென்ற செங்கோட்டையன் டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • டிக் டாக் செயலிக்கு இந்திய அரசு 5 ஆண்டுக்கு முன் தடை விதித்தது.
    • டிக் டாக் மீதான தடையை இந்தியா நீக்கவுள்ளதாக தகவல் வெளியானது.

    சீன வீடியோ செயலியான டிக் டாக் செயலிக்கு இந்திய அரசு 5 ஆண்டுக்கு முன் தடை விதித்தது.

    அமெரிக்காவுடனான இந்தியாவின் உறவில் விரிசல் விழுந்துள்ள நிலையில், பிரதமர் மோடி சீன அதிபரை சந்தித்தது முக்கியத்துவம் பெற்ற நிலையில், டிக் டாக் மீதான தடையை இந்தியா நீக்கவுள்ளதாக தகவல் வெளியானது.

    இந்நிலையில், இதுகுறித்து பேசிய மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், "டிக் டாக் செயலி மீதான தடையை நீக்கும் எந்த திட்டமும் அரசிடம் இல்லை. இதன் மீதான தடையை நீக்க இதுவரை எந்த பரிந்துரையும் வரவில்லை" என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.

    • அ.தி.மு.க.வில் பிரிந்திருக்கும் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இல்லை.
    • அனைவரும் ஒன்றாக வேண்டும். அ.தி.மு.க. வளர வேண்டும் என்பது மட்டுமே எனது நோக்கம்.

    கோவை:

    டெல்லி செல்வதற்காக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கோவை விமான நிலையத்திற்கு வந்திருந்தார். அவரிடம், டெல்லியில் பா.ஜ.க. தலைவர்களை சந்திக்க செல்கிறீர்களா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு செங்கோட்டையன்,

    ஹரித்துவார் சென்று ராமரை தரிசனம் செய்தால் சற்று மன ஆறுதலாக இருக்கும் என்பதால் செல்கிறேன். டெல்லி சென்று அங்கிருந்து ஹரித்துவார் செல்கிறேன். பா.ஜ.க. தலைவர்களை சந்திக்க செல்லவில்லை. நாளை முக்கிய அறிவிப்பு எதையும் வெளியிட போவதில்லை.

    அ.தி.மு.க.வில் பிரிந்திருக்கும் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இல்லை. அனைவரும் ஒன்றாக வேண்டும். அ.தி.மு.க. வளர வேண்டும் என்பது மட்டுமே எனது நோக்கம் என்றார்.

    • ஆசிய கோப்பை ஹாக்கி இறுதிப்போட்டியில் இந்தியா-தென்கொரியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
    • இந்திய அணி 4-1 என்ற கோல் கணக்கில் 5 முறை சாம்பியனான தென்கொரியாவுக்கு அதிர்ச்சி அளித்து சாம்பியன் பட்டத்தை தன்வசப்படுத்தியது.

    ராஜ்கிர்:

    12-வது ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி பீகார் மாநிலம் ராஜ்கிர் நகரில் நடந்தது. 8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் சூப்பர்4 சுற்று முடிவில் முன்னாள் சாம்பியன் இந்திய அணி (2 வெற்றி, ஒரு டிரா) முதலிடமும், நடப்பு சாம்பியன் தென்கொரியா (ஒரு வெற்றி, ஒரு டிரா, ஒரு தோல்வி) 2-வது இடமும் பிடித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.

    இதில் நேற்று இரவு நடந்த மகுடத்துக்கான இறுதிப்போட்டியில் இந்தியா-தென்கொரியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    பரபரப்பாக அரங்கேறிய இந்த ஆட்டத்தில் முதல் நிமிடத்திலேயே இந்திய அணி வீரர் சுக்ஜீத் சிங் கோலடித்தார். மற்றொரு இந்திய வீரர் தில்பிரீத் சிங் 27-வது மற்றும் 44-வது நிமிடத்தில் கோல் போட்டார். 50-வது நிமிடத்தில் பெனால்டி கார்னர் வாய்ப்பை இந்திய அணி வீரர் அமித் ரோஹிதாஸ் கோலாக்கினார். இதனால் இந்திய அணி 4-0 என்ற கோல் கணக்கில் வலுவான முன்னிலை பெற்றது.

    51-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி தென்கொரியா அணி பதில் கோல் திருப்பியது. அந்த அணி வீரர் டெயின் சன் இந்த கோலை அடித்தார். அதன் பிறகு இரு அணிகளும் கோல் அடிக்க எடுத்த முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. முடிவில் இந்திய அணி 4-1 என்ற கோல் கணக்கில் 5 முறை சாம்பியனான தென்கொரியாவுக்கு அதிர்ச்சி அளித்து சாம்பியன் பட்டத்தை தன்வசப்படுத்தியது.

    இந்நிலையில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதில் இந்த வெற்றி, இந்திய ஹாக்கி மற்றும் விளையாட்டுத் துறைக்கு பெருமை சேர்க்கும் என பிரதமர் மோடி பாராட்டி உள்ளார்.

    • ஹிந்த் மற்றும் அவளை மீட்க வந்த 2 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் இருவரும் மீண்டும் இஸ்ரேல் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தனர்.
    • வெனிஸ் விழாவில் படத்தை பார்த்தவர்கள் சுமார் 23 நிமிடங்கள் எழுந்து நின்று கைதட்டி, பாலஸ்தீனத்தை மீட்போம் என கோஷங்களை எழுப்பினர்.

    இஸ்ரேலால் சுட்டுக் கொல்லப்பட்ட 5 வயது பாலஸ்தீன சிறுமியான ஹிந்த் ரஜப்பின் கதையைச் சொல்லும் 'தி வாய்ஸ் ஆஃப் ஹிந்த் ரஜப்' 82வது வெனிஸ் திரைப்பட விழாவில் சில்வர் லயன் விருதை வென்றது.

    பிரெஞ்சு-துனிசிய இயக்குனர் கவுதர் பென் ஹனியாவால் இயக்கப்பட்ட இந்த ஆவணப்படம் ஹிந்த் ரஜப் உடைய வாழ்வின் இறுதித் தருணங்களை ஆவணப்படுத்தி உள்ளது.

    கடந்த ஜனவரி 29, 2024 அன்றுகாசாவில் இருந்து தப்பிச் செல்லும்போது, ஹிந்தும் அவளது குடும்பத்தினரும் பயணித்த கார் இஸ்ரேலியர்களால் தாக்கப்பட்டது.

    துப்பாக்கிச் சூட்டில் காரில் இருந்த அனைவரும் கொல்லப்பட்டனர். காரில் ஹிந்த் மட்டுமே உயிருடன் இருந்தாள். கடைசி தருணத்தில், மீட்பு அமைப்பான ரெட் கிரசண்ட் சொசைட்டிக்கு ஹிந்த் போன் செய்து உதவி கேட்டாள்.

    ஆனால் இறுதியில் ஹிந்த் மற்றும் அவளை மீட்க வந்த 2 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் இருவரும் மீண்டும் இஸ்ரேல் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தனர்.

    இஸ்ரேலின் குண்டுகளால் துளைக்கப்பட்டு ஹிந்த் ரஜப் கொல்லப்பட்ட கார்

    'தி வாய்ஸ் ஆஃப் ஹிந்த் ரஜப்' ஆவணப்படத்தில் ஹிந்த் மீட்பு அமைப்பினரிடம் போனில் தனது மழலைக் குரலில் உதவி கோரிய ஆடியோ இடம்பெற்றுள்ளது.

    விருது வென்றது குறித்து பேசிய படத்தின் இயக்குனர் பென் ஹனியா, "இந்தப் படத்தால் ஹிந்தை மீண்டும் கொண்டு வரவோ அல்லது அவள் அனுபவித்த அநீதியை அழிக்கவோ முடியாது. ஆனால் அவளது கதை படத்தின் எல்லைகளைக் கடந்து சென்றுள்ளது. இது ஹிந்தை பற்றியது மட்டுமல்ல, ஒரு முழு தேசத்தின் கதையைப் பற்றியது" என்று தெரிவித்தார்.

    வெனிஸ் விழாவில் படத்தை பார்த்தவர்கள் சுமார் 23 நிமிடங்கள் எழுந்து நின்று கைதட்டி, பாலஸ்தீனத்தை மீட்போம் என கோஷங்களை எழுப்பினர். வெனிஸ் விழாவில் அதிக நேரம் ஸ்டாண்டிங் ஓவேஷன் பெற்ற படமும் இதுவே ஆகும்.   

    • அதிநவீன போர்க்கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் F 35 போர் விமானங்கள் வெனின்சுலாவை நோக்கி நகர்கின்றன.
    • உலகின் மிகப்பெரிய எண்ணெய் இருப்புகளைக் கொண்டது வெனிசுலா.

    கரீபியன் கடலில் திடீரென போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன. உலகின் மிகப்பெரிய எண்ணெய் இருப்புகளைக் கொண்ட வெனிசுலாவை குறிவைத்து அமெரிக்கா தனது இராணுவப் படைகளை பெரிய அளவில் நகர்த்தி வருகிறது.

    அதிநவீன போர்க்கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் F 35 போர் விமானங்களை வெனின்சுலாவை நோக்கி அமெரிக்க ராணுவம் நகர்த்தி வருவதாக தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன.

    இதனால் வெனிசுலா எந்த நேரத்திலும் தாக்கப்படலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

    வெனிசுலாவிலிருந்து போதைப்பொருள் கும்பல்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதாகவும், இந்த இராணுவ நடவடிக்கை அவற்றை அடக்குவதாகவும் டிரம்ப் நிர்வாகம் கூறுகிறது.

    வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவுக்கு இந்த போதைப்பொருள் மாஃபியாவுடன் நேரடி தொடர்பு இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தொடர்நது கூறி வருகிறார்.

    அது மட்டுமல்லாமல், மதுரோவின் இருப்பிடம் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு 50 மில்லியன் டாலர் (சுமார் ரூ. 430 கோடி) வெகுமதியையும் டிரம்ப் அறிவித்திருந்தார்.

    மேலும், "மதுரோ அரசாங்கத்தின் நாட்கள் எண்ணப்பட்டுள்ளன" என்று டிரம்ப் சமீபத்தில் சமூக ஊடகங்களில் நேரடியாக எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.  

    ×