என் மலர்tooltip icon

    ஆசிரியர் தேர்வு

    • பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியில் தொடர ஆசிரியர் தகுதித்தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற வேண்டும்.
    • நடப்பு ஆண்டுக்கான ‘டெட்' தேர்வு குறித்த அறிவிப்பு கடந்த மாதம் (ஆகஸ்டு) 11-ந்தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது.

    சென்னை:

    இலவச கட்டாயக்கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியில் தொடர ஆசிரியர் தகுதித்தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற வேண்டும். அதன்படி, 2012-ம் ஆண்டு முதல் இந்த தேர்வில் தேர்ச்சி பெறும் ஆசிரியர்களே அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியில் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.

    அதன்படி, நடப்பு ஆண்டுக்கான 'டெட்' தேர்வு குறித்த அறிவிப்பு கடந்த மாதம் (ஆகஸ்டு) 11-ந்தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. இந்த தேர்வை எழுத விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க நேற்று முன்தினம் அவகாசம் முடிந்த நிலையில், இன்று (புதன்கிழமை) வரை காலநீட்டிப்பு செய்யப்பட்டு இருக்கிறது. இதற்கு ஏராளமானோர் விண்ணப்பித்து வருகின்றனர்.

    முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகமானோர் விண்ணப்பிப்பதாக சொல்லப்படுகிறது. என்ன திடீரென்று இவ்வளவு பேர் விண்ணப்பிக்கிறார்கள் என்று பார்த்தால், சமீபத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு (டெட்) விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு ஒன்றை வழங்கியதன் எதிரொலியாக, அதனால் பாதிக்கப்பட்டு ஏற்கனவே பணியில் இருக்கும் 'டெட்' தேர்வை எழுதாத ஆசிரியர்களும் இதற்கு விண்ணப்பித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவில், டெட் தேர்வு நடைமுறைக்கு வருவதற்கு முன்பு பணியில் சேர்ந்த ஆசிரியர்களும், அந்த தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்றும், தேர்வை எழுத விரும்பாதவர்கள் விருப்ப ஓய்வு பெறலாம் என்றும் கூறப்பட்டிருந்தது. இதனால் தமிழ்நாட்டில் மட்டும் அரசு பள்ளி ஆசிரியர்கள் 1,38,000 பேரும், அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள் 38 ஆயிரம் பேரும் என மொத்தம் 1,76,000 ஆசிரியர்கள் பாதிப்படைகிறார்கள்.

    அந்தவகையில் அடுத்தக்கட்டமாக இந்த ஆசிரியர்கள் விவகாரத்தில் என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கலாம் என்பது பற்றி தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை நடத்தி வருகிறது. அரசு அவர்களுக்கு இதுவரை தேர்வு நடத்த முடிவெடுக்காத சூழலில், டெட் தேர்வை எழுதாமல் பணியில் இருந்துவரும் ஆசிரியர்கள், கடந்த மாதம் வெளியிடப்பட்ட டெட் தேர்வுக்கான விண்ணப்பப்பதிவில் முண்டியடித்து போட்டிப் போட்டு விண்ணப்பித்து வருகின்றனர்.

    இதுபற்றி அதிகாரிகள் சிலரிடம் கேட்டபோது, 'சுப்ரீம் கோர்ட்டு உத்தரவால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களில் சிலர் இந்த தேர்வை எழுதிதான் பார்ப்போமே என்ற மனநிலையில் விண்ணப்பித்து இருக்கின்றனர். ஆனால் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு தொடர்பாக தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை இன்னும் எந்த முடிவையும் எடுக்கவில்லை. பெரும்பாலும் இந்த ஆசிரியர்களுக்கு சிறப்பு டெட் தேர்வு நடத்துவதற்கே வாய்ப்பு அதிகம் உள்ளது' என்றனர்.

    • இஸ்ரோ அடுத்த 3 ஆண்டுகளுக்குள் செயற்கைக்கோள் ஏவுதல்களை 3 மடங்காக அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.
    • ஆயுத மோதல்களில் விண்வெளித் துறையின் பங்கு, ஆபரேஷன் சிந்தூரின்போது கூர்மையாக கவனிக்கப்பட்டது.

    புதுடெல்லி:

    டெல்லியில் அகில இந்திய மேலாண்மை சங்கத்தின் 52-வது தேசிய மேலாண்மை மாநாடு நடந்தது. அதில் கலந்து கொண்ட இஸ்ரோ தலைவர் நாராயணன் கூறியதாவது:-

    காஷ்மீரில் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் 26 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இதனையடுத்து 'ஆபரேஷன் சிந்தூர்' மூலம் பாகிஸ்தானுக்குள் துல்லியமாக முப்படைகளின் மூலம் பதிலடி கொடுக்கப்பட்டது.

    அப்போது, தேசிய பாதுகாப்பு தேவைகளுக்காக பூமி கண்காணிப்பு மற்றும் தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களை பயன்படுத்தி, 400-க்கும் மேற்பட்ட இஸ்ரோ விஞ்ஞானிகள் அனைத்து செயற்கைக்கோள்களின் செயல்பாடுகள் மூலம் 24 மணி நேரமும் தரவுகளை வழங்கினர்.

    ஆயுத மோதல்களில் விண்வெளித் துறையின் பங்கு, ஆபரேஷன் சிந்தூரின்போது கூர்மையாக கவனிக்கப்பட்டது. இந்த நடவடிக்கையில் டிரோன்கள் மற்றும் சுற்றித்திரியும் வெடிமருந்துகள் பரவலாகப் பயன்படுத்தப்பட்டன. உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட 'ஆகாஷ் தீர்' போன்ற வான் பாதுகாப்பு அமைப்புகளின் திறன்களையும் சோதிக்கப்பட்டன.

    இஸ்ரோ அடுத்த 3 ஆண்டுகளுக்குள் செயற்கைக்கோள் ஏவுதல்களை 3 மடங்காக அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. கூடுதல் செலவுகள் இல்லாமல் மார்க்-3 ராக்கெட் சுமந்து செல்லும் திறன் 4 ஆயிரம் கிலோவில் இருந்து 5 ஆயிரத்து 100 கிலோவாக மேம்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். அதேபோல், அடுத்த தலைமுறை ஏவுதளம், பிரதமரால் அங்கீகரிக்கப்பட்டு உள்ளது. இந்த புதிய ஏவுதளம் இந்தியாவின் விரிவடைந்து வரும் விண்வெளி லட்சியங்களை நிறைவேற்ற உதவிகரமாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 7 மாதங்களுக்கு பிறகு இந்திய அணி விளையாடப்போகும் முதல் சர்வதேச டி20 போட்டி இதுவாகும்.
    • இந்திய அணியில் ஷ்ரேயாஸ் அய்யருக்கு இடம் வழங்கப்படாதது கடும் விமர்சனங்களை கிளப்பியது.

    துபாய்:

    17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் அணிகளும், 'பி' பிரிவில் ஆப்கானிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஹாங்காங் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்4 சுற்றுக்கு தகுதி பெறும்.

    போட்டியின் 2-வது நாளான இன்று (புதன்கிழமை) துபாயில் நடக்கும் 2-வது லீக்கில் 8 முறை சாம்பியனான இந்திய அணி, ஐக்கிய அரபு அமீரகத்தை எதிர்கொள்கிறது.

    7 மாதங்களுக்கு பிறகு இந்திய அணி விளையாடப்போகும் முதல் சர்வதேச டி20 போட்டி இதுவாகும். அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடக்கும் டி20 உலகக் கோப்பை போட்டிக்கு இந்திய அணியை தயார்படுத்துவதற்கும், சரியான லெவன் அணியை கண்டறிவதற்கும் இந்த தொடர் அருமையான வாய்ப்பாகும்.

    சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியில் ஷ்ரேயாஸ் அய்யருக்கு இடம் வழங்கப்படாதது கடும் விமர்சனங்களை கிளப்பியது. முன்னாள் வீரர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர். அவருக்கு பதிலாக வாய்ப்பு பெற்ற சுப்மன் கில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டு இருக்கிறார். இது போன்ற சலசலப்புகளை மறந்து விட்டு இந்திய வீரர்கள் போட்டிக்கு முழுவீச்சில் ஆயத்தமாகியுள்ளனர்.

    தொடக்க ஆட்டக்காரராக அபிஷேக் ஷர்மாவுடன், சுப்மன் கில் இறங்க வாய்ப்புள்ளதால் அனேகமாக சஞ்சு சாம்சனுக்கு இடமிருக்காது என தெரிகிறது. மற்றபடி சூர்யகுமார், திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா ரன்மழை பொழிய காத்திருக்கிறார்கள். இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் பணிச்சுமையால் இரு போட்டிகளை தவற விட்ட வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 20 ஓவர் அணிக்கு திரும்பியிருப்பது இந்தியாவுக்கு பலமாகும். அமீரகம் குட்டி அணி என்பதால் இந்தியா வெற்றியோடு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஐக்கிய அரபு அமீரக அணி முகமது வாசீம் தலைமையில் களம் காணுகிறது. 20 ஓவர் கிரிக்கெட்டில் கேப்டனாக அதிக சிக்சர் நொறுக்கியவர் (114 சிக்சர்) என்ற பெருமைக்குரியவர் வாசீம். அவர் கூறுகையில், 'ஆசிய போட்டிக்காக கடந்த 2-3 மாதங்களாக கடுமையாக உழைத்து வருகிறோம். 20 ஓவர் வடிவிலான கிரிக்கெட்டில் எங்களால் எந்த அணியையும் தோற்கடிக்க முடியும். குறிப்பிட்ட நாளில் திட்டமிட்டபடி சரியாக செயல்பட்டு முழு திறமையை வெளிப்படுத்தினால் இந்தியா அல்லது பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளில் ஒன்றுக்கு நிச்சயம் அதிர்ச்சி அளிக்க முடியும். ஓமனை நாங்கள் வீழ்த்தி விடுவோம். மற்ற இரு அணிகளில் ஒன்றை வீழ்த்தி சூப்பர்4 சுற்றை எட்டுவதே எங்களது இலக்கு' என்றார். சாதகமான உள்ளூர் சூழல் மட்டுமின்றி, அந்த அணிக்கு இந்திய முன்னாள் வீரர் லால்சந்த் ராஜ்புத் பயிற்சியாளராக இருப்பது கூடுதல் அனுகூலமாகும்.

    இவ்விரு அணிகள் சர்வதேச கிரிக்கெட்டில் இதுவரை 4 முறை (ஒரு 20 ஓவர் போட்டி மற்றும் மூன்று ஒரு நாள் போட்டி) சந்தித்துள்ளது. அனைத்திலும் இந்திய அணியே வெற்றி கண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    இந்தியா: அபிஷேக் ஷர்மா, சுப்மன் கில், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஜிதேஷ் ஷர்மா, ஹர்திக் பாண்ட்யா, அக்ஷர் பட்டேல், ஹர்ஷித் ராணா அல்லது அர்ஷ்தீப்சிங், குல்தீப் யாதவ், பும்ரா, வருண் சக்ரவர்த்தி.

    ஐக்கிய அரபு அமீரகம்: முகமது வாசீம் (கேப்டன்), அலிஷன் ஷரபு, ராகுல் சோப்ரா, ஆசிப் கான், முகமது பரூக், ஹர்ஷித் கவுசிக், முகமது சோகைப், முகமது ஜவாதுல்லா அல்லது சாகிர் கான், ஹைதர் அலி, ஜூனைத் சித்திக், முகமது ரோகித்.

    இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி ஸ்போர்ட்ஸ்1, 4, 5 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    • பிரதமர் கே.பி. சர்மா ஒலியின் (73) அரசு செவ்வாய்க்கிழமை சரிந்தது.
    • அவருக்கு சமூக ஊடகங்களில் இளைஞர்களிடமிருந்து பெரும் ஆதரவு கிடைத்து வருகிறது.

    அண்டை நாடான நேபாளத்தில் 2008 இல் மன்னராட்சி முடிவுக்கு கொண்டுவரப்பட்டு தற்போது வரை கம்யூனிஸ்ட் அரசு ஆட்சியில் இருந்தது.

    இந்நிலையில் சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடை விவகாரத்தால் நேபாளத்தில் அரசியல் நெருக்கடி உச்சத்தை எட்டியுள்ளது.

    ஜென் Z இளைஞர்கள் மேற்கொண்ட தீவிர போராட்டங்களால் பிரதமர் கே.பி. சர்மா ஒலியின் (73) கம்யூனிஸ்ட் அரசு செவ்வாய்க்கிழமை சரிந்தது.

    அவருடன் சேர்ந்து, நாட்டின் ஜனாதிபதி ராம் சந்திர பவுடேலும் ராஜினாமா செய்தார். இதனால் நாடு நிச்சயமற்ற நிலையில் உள்ளது.

     இந்த சூழலில், நாட்டின் அடுத்த பிரதமர் யார் என்பது குறித்த விவாதம் தொடங்கியுள்ளது. பிரதமர் பதவிக்கான போட்டியில் 3 பேர் முன்னிலையில் உள்ளனர்.

     அவர்களில் முதலாவது, காத்மாண்டு மேயர் மற்றும் பிரபல ராப் பாடகர் பாலேந்திர ஷா. அவருக்கு சமூக ஊடகங்களில் இளைஞர்களிடமிருந்து பெரும் ஆதரவு கிடைத்து வருகிறது.

    அடுத்தது சுமனா ஸ்ரேஸ்தா (40). அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தில் (MIT) எம்பிஏ பட்டம் பெற்ற இவர், நேபாளத்தின் கல்வி, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சராக முன்பு பணியாற்றினார். நாடாளுமன்றத்தில் பாலின சமத்துவம் பற்றிப் பேசி தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தார்.

    மூன்றாவதாக முன்னாள் பத்திரிகையாளரும் இரண்டு முறை துணைப் பிரதமருமான ரவி லாமிச்சானே (49) பெயரும் அடிபடுகிறது. இருப்பினும், கூட்டுறவு சேமிப்பு முறைகேடு வழக்கில் ஏப்ரல் மாதம் அவர் கைது செய்யப்பட்டது அவருக்கு பின்னடைவாக அமையும் என்று கூறப்படுகிறது.   

    • துணை ஜனாதிபதி பதவிக்கு இன்று தேர்தல் நடைபெற்றது.
    • வாக்குப்பதிவு காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணியுடன் முடிந்தது.

    புதுடெல்லி:

    நாட்டின் துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர் கடந்த ஜூலை மாதம் 21-ம் தேதி பதவி விலகினார். இதையடுத்து அந்தப் பதவிக்கு இன்று தேர்தல் நடைபெற்றது.

    தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன், எதிர்க்கட்சிகள் அடங்கிய 'இந்தியா' கூட்டணியின் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி ஆகிய இருவரும் தேர்தலில் போட்டியிட்டனர்.

    தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணியுடன் முடிவடைந்தது. பிஜூ ஜனதா தளம், பாரத் ராஷ்ட்ரிய சமிதி ஆகிய கட்சிகள் இந்த தேர்தலை புறக்கணித்தன.

    இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் சி.பி.ராதாகிருஷ்ணன் 452 வாக்குகள் பெற்று துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டார். 15 வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன. அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சுதர்சன் ரெட்டி 300 வாக்குகள் பெற்றார்.

    துணை ஜனாதிபதியாக தேர்வான சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

    ஐஸ்வர்யா ராயின் பெயர், உருவம், புகைப்படங்களை யாரும் தங்களது சுயநலத்திற்கு பயன்படுத்த உரிமையில்லை.

    பாலிவுட் நட்சத்திரம் ஐஸ்வர்யா ராய் பச்சன், தனது பிரபல தன்மை உரிமைகள் (Publicity & Personality Rights) காப்பதற்காக, டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

    மனுவில், தனது பெயர், புகைப்படங்கள் மற்றும் AI மூலம் உருவாக்கப்பட்ட போலியான, அவதூறான காட்சிகள் அனுமதியின்றி பரவுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

    மூத்த வழக்கறிஞர் சந்தீப் சேதி (Aishwarya-வுக்கு சார்பாக) நீதிமன்றத்தில் வாதாடியதாவது:

    "ஐஸ்வர்யா ராயின் பெயர், உருவம், புகைப்படங்களை யாரும் தங்களது சுயநலத்திற்கு பயன்படுத்த உரிமையில்லை."

    "முழுமையாக போலியாக உருவாக்கப்பட்ட நெருக்கமான புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகின்றன."

    "ஒருவர், என் வாடிக்கையாளர் பெயர் மற்றும் முகத்தைப் பயன்படுத்தி பணம் சம்பாதிக்கிறார். கூடுதலாக, இவை சிலர் தங்களது பாலியல் ஆசையைத் திருப்தி செய்ய பயன்படுத்துகின்றனர். இது மிகுந்த மோசமானது."

    இதற்கு பதிலளித்த நீதி. தேஜஸ் காரியா,

    "அனுமதியின்றி ஐஸ்வர்யா ராய் பச்சனின் படங்கள் அல்லது உருவம் பயன்படுத்தும் இணைய தளங்களுக்கும், தனிநபர்களுக்கும் தடை விதிக்கப்படும்" எனக் குறிப்பிட்டார்.

    • போராட்டம் எதிரொலியாக பிரதமர் சர்மா ஒலி தனது பதவியை ராஜினாமா செய்தார்.
    • பிரதமரை தொடர்ந்து ஜனாதிபதியும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

    காத்மண்டு:

    நேபாளத்தின் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தின் விதிமுறைகளுக்கு உள்பட்டு பதிவு செய்யத் தவறிய இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட 26 சமூக ஊடக தளங்களுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்தது. இந்த தடையை எதிர்த்து நேற்று போராட்டம் வெடித்தது. இதையடுத்து இந்தத் தடை நள்ளிரவில் நீக்கப்பட்டது.

    இதற்கிடையே, நேபாள பிரதமர் சர்மா ஒலி பதவி விலகக் கோரி இளைஞர்கள் 2 ஆம் நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். நேபாள நாட்டின் அதிபர் மற்றும் பிரதமர் இல்லங்களுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். பாராளுமன்ற கட்டிடத்துக்கு தீ வைத்தனர். இதையடுத்து, பாராளுமன்றம் முழுவதும் கரும் புகை சூழ்ந்தது. இதேபோல், விமான நிலையம் அருகிலும் தீ வைத்ததால், விமான சேவை நிறுத்தி வைக்கப்பட்டது.

    ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு பொறுப்பேற்று சர்மா ஒலி தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். நேற்று உள்துறை அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், பிரதமர் தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார்.

    இந்நிலையில், பிரதமர் சர்மா ஒலியை தொடர்ந்து ஜனாதிபதி ராம் சரண் பவுடல் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனால் நேபாள அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    இந்தியாவின் அண்டை நாடுகளான இலங்கை, வங்கதேசம் ஆகியவற்றிலும் ஆட்சி கலைப்பு நடவடிக்கைகள் நடந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    • முதல் நபராக பிரதமர் நரேந்திர மோடி தனது வாக்கினை செலுத்தினார்.
    • மாலை 3 மணி நிலவரப்படி 96% வாக்குகள் பதிவாகின.

    நாட்டின் 16-வது துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர் கடந்த ஜூலை மாதம் 21-ந் தேதி பதவி விலகியதை தொடர்ந்து அந்த பதவிக்கு இன்று தேர்தல் நடைபெற்றது.

    தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன், எதிர்க்கட்சிகள் அடங்கிய 'இந்தியா' கூட்டணியின் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி ஆகிய இருவரும் தேர்தலில் போட்டியிட்டனர்.

    இதற்கிடையே ஒடிசாவின் முன்னாள் ஆளுங்கட்சியான பிஜூ ஜனதா தளம், தெலுங்கானாவில் முன்னாள் ஆளுங்கட்சியான பாரத் ராஷ்ட்ரிய சமிதி ஆகிய காட்சிகள் இந்த தேர்தலை புறக்கணித்தன.

    தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 10 மணி தொடங்கியது. வாக்குப்பதிவு தொடங்கியதும் முதல் நபராக பிரதமர் நரேந்திர மோடி தனது வாக்கினை செலுத்தினார்.

    மாலை 5 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. மாலை 3 மணி நிலவரப்படி 96% வாக்குகள் பதிவாகின. அடுத்த துணை ஜனாதிபதி யார் என்ற முடிவுகள் விரைவில் தெரிந்து விடும். சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகம் என்று கூறப்படுகிறது.

    • ஒரு கோடி குடும்பங்கள் 'ஓரணியில் தமிழ்நாடு' முன்னெடுப்பில் இணைந்துள்ளன.
    • கழக வெற்றி நோக்கிப் பயணத்தைத் தொடர்வோம்

    திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்றது.

    இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், "தேர்தல்னு வந்துட்டா தி.மு.க.காரங்களை அடிச்சிக்க ஆளே இல்ல"-னு தமிழ்நாடே சொல்லும்!

    நம் மண் - மொழி - மானம் காக்க ஒரு கோடி குடும்பங்கள் '#ஓரணியில்_தமிழ்நாடு' முன்னெடுப்பில் இணைந்துள்ளன.

    வரும் 15-ஆம் நாள் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளில், தமிழ்நாட்டில் உள்ள 68 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளைச் சேர்ந்த இக்குடும்பங்கள் கூடி உறுதிமொழி ஏற்பது என்றும், 20-ஆம் நாளன்று ஒவ்வொரு கழக மாவட்டத்திலும் மாபெரும் கூட்டங்கள் நடத்தி உறுதிமொழி ஏற்பது என்றும் இன்றைய மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

    கழகத்தின் வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் முப்பெரும் விழா-வுக்கு உங்கள் எல்லோரையும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.

    செப் 17 அன்று கரூரில் திரள்வோம்! கழக வெற்றி நோக்கிப் பயணத்தைத் தொடர்வோம்!" என்று தெரிவித்துள்ளார்.

    • இந்தியா, பாகிஸ்தான் மோதும் போட்டி செப்டம்பர் 14ம் தேதி நடைபெற உள்ளது.
    • ஒரு குறிப்பிட்ட நாளில் நீங்கள் சிறப்பாக கிரிக்கெட் விளையாட வேண்டும் என்றார்.

    துபாய்:

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று இரவு தொடங்குகிறது. இந்திய அணி நாளை துபாயில் நடைபெறும் முதல் லீக் போட்டியில் ஐக்கிய அரபு எமிரேட்சை சந்திக்கிறது.

    இந்தியா, பாகிஸ்தான் மோதும் போட்டி செப்டம்பர் 14ம் தேதி நடைபெற உள்ளது.

    இந்நிலையில், சமீபத்தில் டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி ஆசியக் கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ள அணியாகக் கருதப்படுகிறதே என பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகாவிடம் செய்தியாளர் ஒருவர் கேட்டார்.

    இதற்கு பதிலளித்த சல்மான் ஆகா, டி20 கிரிக்கெட்டில் எந்த அணியையும் ஃபேவரிட் என நான் நினைக்கவில்லை. ஒரு குறிப்பிட்ட நாளில் நீங்கள் சிறப்பாக கிரிக்கெட் விளையாட வேண்டும். இது ஒரு வேகமான விளையாட்டு. ஓரிரு மணி நேரம் ஆட்டத்தின் போக்கையே மாற்றிவிடும் என தெரிவித்தார்.

    • கார்களின் மாடல்களுக்கு ஏற்ப விலை குறைக்கப்படுகிறது.
    • பண்டிகை காலம் நெருங்குவதால் விற்பனை அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கிறது.

    ஜி.எஸ்.டி. சீர்திருத்தங்களில் ஏராளமான பொருட்களுக்கு வரிகுறைப்பு செய்யப்பட்டுள்ளது. அவற்றில் கார்களும் அடங்கும். வரி குறைப்பு 22-ந்தேதி அமலுக்கு வருகிறது.

    இதற்கிடையே, வரி குறைப்பின் பலனை வாடிக்கையாளர்களுக்கு அளிப்பதற்காக, ஜெர்மனி சொகுசு காரான ஆடி கார்கள் விலை குறைக்கப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

    கார்களின் மாடல்களுக்கு ஏற்ப ரூ.2 லட்சத்து 60 ஆயிரம் முதல் ரூ.7 லட்சத்து 80 ஆயிரம்வரை விலை குறைக்கப்படுவதாக கூறியுள்ளது. பண்டிகை காலம் நெருங்குவதால், விற்பனை அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கிறது.

    • இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்கா படுதோல்வி அடைந்தது.
    • 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை தென் ஆப்பிரிக்கா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் தென் ஆப்ரிக்க அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இந்த தொடரின் முதலிரண்டு போட்டியில் வென்ற தென் ஆப்ரிக்க 2-0 என ஏற்கனவே தொடரை கைப்பற்றியது.

    இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி போட்டி நடைபெற்றது. இதில் முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணியில் ஜேக்கப் பெத்தெல் 110, ஜோ ரூட் 100 ரன்களையும் விளாசினர். மேற்கொண்டு ஜேமி ஸ்மித் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோர் தலா 62 ரன்களைச் சேர்க்க அந்த அணி, 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 414 ரன்களை குவித்தது. தென் ஆப்பிரிக்க தரப்பில் கார்பின் போஷ், கேசவ் மஹாராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி 20.5 ஓவரில் 72 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. இங்கிலாந்து தரப்பில் ஜோஃப்ரா ஆர்ச்சர் 4 விக்கெட்டுகளையும், ஆதில் ரஷித் 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். இதன் மூலம் இங்கிலாந்து அணி 342 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது.

    இந்நிலையில் இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வீரர்கள் பந்துவீச அதிக நேரம் எடுத்துக் கொண்டதாக ஐசிசி அபராதம் விதித்துள்ளது. அதன்படி இந்த போட்டியில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக தென் ஆப்பிரிக்க அணியின் பிளேயிங் லெவனில் இடம்பிடித்திருந்த அனைவருக்கும் தலா 5 சதவீதம் போட்டி கட்டணத்தில் இருந்து அபராதம் விதிக்கப்படுவதாக ஐசிசி அறிவித்துள்ளது. 

    ×