search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "Vice President Election"

  • இன்று காலை 10 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது.
  • இடைவெளியின்றி நடக்கிற வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு முடிகிறது.

  புதுடெல்லி :

  நாட்டின் தற்போதைய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம், வரும் 10-ந் தேதி முடிகிறது. அடுத்த துணை ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று (6-ந் தேதி) நடத்தப்படுகிறது.

  இந்த தேர்தலில், பாராளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்.பி.க்கள் 788 பேர் ஓட்டு போடுகிறார்கள். எனவே ஓட்டுப்பதிவு டெல்லியில் பாராளுமன்ற வளாகத்தில் மட்டுமே நடைபெறும்.

  இந்த தேர்தலில் மத்தியில் ஆளும் பா.ஜ.க. வேட்பாளராக மேற்கு வங்காள மாநிலத்தின் முன்னாள் கவர்னர் ஜெகதீப் தன்கர் (71) நிறுத்தப்பட்டுள்ளார்.

  அவருக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக ராஜஸ்தான் மாநிலத்தின் முன்னாள் கவர்னர் மார்கரெட் ஆல்வா (80) போட்டியிடுகிறார். இருவருக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.

  எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக மார்கரெட் ஆல்வா போட்டியிட்டாலும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி இந்த தேர்தலை புறக்கணிப்பது அவருக்கு பின்னடைவாக அமைந்துள்ளது.

  அதே நேரத்தில் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் சேர்த்து பா.ஜ.க. கூட்டணிக்கு பெரும்பான்மை எண்ணிக்கையிலான எம்.பி.க்கள் உள்ளனர். அத்துடன் அந்த கூட்டணியில் இடம்பெறாத பகுஜன் சமாஜ், பிஜூ ஜனதாதளம் கட்சிகளும், பா.ஜ.க. வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. எனவே பா.ஜ.க. வேட்பாளர் ஜெகதீப் தன்கர் வெற்றி பெறுவது உறுதி.

  டெல்லியில் பாராளுமன்ற வளாகத்தில் இன்று காலை 10 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. இடைவெளியின்றி நடக்கிற வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு முடிகிறது.

  வாக்குப்பதிவு முடிந்த உடனேயே எண்ணிக்கை நடைபெறுகிறது. வாக்குகள் எண்ணி முடிந்த உடன் தேர்தல் அதிகாரி உத்பால் குமார் சிங் முடிவை வெளியிடுகிறார்.

  எனவே புதிய துணை ஜனாதிபதி யார் என்பது இன்று மாலையில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு விடும்.

  துணை ஜனாதிபதிதான் பாராளுமன்ற மாநிலங்களவையின் தலைவராகவும் இருந்து செயல்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் 6-ந்தேதி நடக்கிறது.
  • மார்கரெட் ஆல்வாவுக்கு ஆதரவு அளிப்பதாக ஆம் ஆத்மி அறிவித்துள்ளது.

  லக்னோ :

  நமது நாட்டின் அடுத்த துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், நாளை மறுதினம் (6-ந் தேதி) நடக்கிறது. இந்த தேர்தலில் பாராளுமன்றத்தின் இரு சபைகளின் எம்.பி.க்கள் ஓட்டு போட்டு, புதிய துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க உள்ளனர்.

  இந்த தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளராக மம்தா பானர்ஜி ஆளும் மேற்கு வங்காள மாநிலத்தின் கவர்னராக இருந்த ஜெகதீப் தன்கர் (வயது 71) போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக ராஜஸ்தான் முன்னாள் கவர்னர் மார்கரெட் ஆல்வா (80) களம் காண்கிறார்.

  துணை ஜனாதிபதி தேர்தலில் ஓட்டுப்பதிவுக்கான தேதி நெருங்கிவிட்ட தருணத்தில், பா.ஜ.க. வேட்பாளர் ஜெகதீப் தன்கருக்கு மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளார்.

  இதையொட்டி மாயாவதி நேற்று டுவிட்டரில் வெளியிட்ட பதிவுகளில் கூறி இருப்பதாவது:-

  நாட்டின் உச்ச பதவியான ஜனாதிபதி பதவிக்கான தேர்தலில் மத்தியில் ஆளுங்கட்சிக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் இடையே ஒருமித்த கருத்து ஏற்படவில்லை என்பது நன்றாக தெரிந்த ஒன்றுதான்.

  தற்போது 6-ந் தேதி நடக்கிற துணை ஜனாதிபதி தேர்தலிலும் அதே நிலைதான் நிலவுகிறது. அப்படிப்பட்ட ஒரு சூழலில், பரந்த பொது நலனையும், அதன் நகர்வையும் மனதில்கொண்டு, எங்கள் கட்சி ஜெதீப் தன்கருக்கு தனது ஆதரவை வழங்க தீர்மானித்துள்ளது.

  இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

  பகுஜன் சமாஜ் கட்சிக்கு மக்களவையில் 10 எம்.பி.க்களும், மாநிலங்களவையில் ஒரு எம்.பி.யும் இருப்பது குறிப்பிடத்தக்கது. ஜனாதிபதி தேர்தலில் மாயாவதியின் கட்சி, பா.ஜ.க. கூட்டணி வேட்பாளராக களம் கண்ட திரவுபதி முர்முவுக்கு தனது ஆதரவை வழங்கியது நினைவுகூரத்தக்கது.

  இதற்கிடையே எதிர்க்கட்சி பொது வேட்பாளர் மார்கரெட் ஆல்வாவுக்கு ஆதரவு அளிப்பதாக ஆம் ஆத்மி அறிவித்துள்ளது. இந்த தகவலை அந்த கட்சி எம்.பி. சஞ்சய்சிங் அறிவித்துள்ளார்.

  • தேர்தல்களை கண்டு பயப்படும் ஆள் நான் இல்லை.
  • இந்திய அரசியலமைப்பிற்கு சேவை செய்வதே எனது ஒரே கடமை.

  குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூன்னாள் எம்.பியும், பாராளுமன்ற முன்னாள் சபாநாயகருமான மார்கரெட் ஆல்வா இன்று தமது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

  அப்போது ராகுல்காந்தி, மல்லிகார்ஜூனன் கார்க்கே, சரத்பவார், சீதாராமன் யெச்சூரி, திருச்சி சிவா உள்பட பல்வேறு எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்கள், எம்.பி.க்கள். உடன் இருந்தனர். 


  பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மார்கரெட் ஆல்வா தெரிவித்துள்ளதாவது:

  குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னிறுத்தப்படுவது, எனக்கு கிடைத்துள்ள பாக்கியம் மற்றும் மரியாதை. எனது வேட்புமனுவை ஆதரிக்க எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தது யதார்த்த இந்தியாவின் உருவகம்.

  தேர்தல்களை கண்டு பயப்படும் ஆள் நான் இல்லை. அவை என்னை பயமுறுத்தவில்லை. வேற்றுமையில் ஒற்றுமையே நமது பலம். ஜனநாயகத்தின் தூண்களை நிலைநிறுத்தவும், நாட்டின் ஜனநாயக நிறுவனங்களை வலுப்படுத்தவும் போராடுகிறோம்.

  இந்தியாவுக்காக நாங்கள் போராடுகிறோம். அனைவருக்கும் மரியாதை கிடைக்கும் இந்தியா வேண்டும். 50 ஆண்டுகளுக்கும் மேலாக பொது வாழ்வில் செலவிட்டதற்காக, ஒரு அங்கீகாரம் கிடைத்திருப்பதாக கருதுகிறேன். இந்திய அரசியலமைப்பிற்கு அச்சமின்றி சேவை செய்வதே எனது ஒரே கடமையாக கொண்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

  • சரத்பவார் இல்லத்தில் எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆலோசனை.
  • மார்கரெட் ஆல்வாவை, கெஜ்ரிவால் ஆதரிப்பார் என சரத்பவார் நம்பிக்கை,

  குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் அடுத்த மாதம் 10-ந் தேதி முடிகிறது. அதற்கு முன்பாக புதிய குடியரசு துணைத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அடுத்த மாதம் 6-ந் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கு வேட்பமனு தாக்கல் செய்வதற்கு நாளை மறுநாள் (19-ந் தேதி) கடைசி நாள்.

  இந்த தேர்தலில் ஆளும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், மேற்கு வங்காள ஆளுநர் ஜெகதீப் தன்கர் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


  இந்த நிலையில், பாராளுமன்ற கூட்டத் தொடர் மற்றும் குடியரசு துணைத் தலைவர் தேர்தல் தொடர்பாக விவாதிக்க எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் உள்ள தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் இல்லத்தில் நடைபெற்றது.

  காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத், திமுக எம்.பிக்கள் டி.ஆர்.பாலு, திருச்சி சிவா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  இந்த கூட்டத்தில் குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக மார்கரெட் ஆல்வா போட்டியிடுவார் என சரத் பவார் தெரிவித்தார்.

  இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மற்றும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோருக்கு இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.

  குடியரசுத் தலைவர் தேர்தலில் யஷ்வந்த் சின்ஹாவுக்கு ஆதரவை அறிவித்த கெஜ்ரிவால், குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் மார்கரெட் ஆல்வாவுக்கு ஆதரவை தெரிவிப்பார் என்றும் சரத் பவார் நம்பிக்கை தெரிவித்தார்.

  • ஆகஸ்டு மாதம் 6-ந் தேதி குடியரசு துணைத் தலைவர் தேர்தல் நடைபெறுகிறது.
  • இந்த தேர்தலில் எதிர்க்கட்சிகள் இன்னும் வேட்பாளரை அறிவிக்கவில்லை.

  குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 10-ந் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து அடுத்த குடியரசு துணைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஆகஸ்டு மாதம் 6-ந் தேதி நடக்கிறது.

  இதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி உள்ள நிலையில், மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக, மேற்கு வங்காள மாநில ஆளுநர் ஜெகதீப் தன்கர் போட்டியிடுவார் என பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அறிவித்துள்ளார்.

  முன்னாக டெல்லியில் இன்று பிரதமர் மோடியை ஜெகதீப் தன்கர் சந்தித்து பேசினார். இது குறித்து தமது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி, மேற்கு வங்க ஆளுநர் ஜெகதீப் தன்கர், எங்கள் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக இருப்பதில் மகிழ்ச்சி என்று தெரிவித்துள்ளார்.

  ஜெகதீப் தன்கர்-க்கு நமது அரசியலமைப்புச் சட்டத்தைப் பற்றிய சிறந்த அறிவு இருக்கிறது. அவர் சட்டமன்ற விவகாரங்களை நன்கு அறிந்தவர். அவர் ராஜ்யசபாவில் ஒரு சிறந்த தலைவராக இருப்பார் என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

  தேசிய முன்னேற்றத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் அவையின் நடவடிக்கைகளை வழிநடத்துவார் என்று நான் உறுதியாக நம்புகிறேன் என்றும், பிரதமர் தமது பதிவில் கூறியுள்ளார்.

  ஜெகதீப் தன்கர் தனது பணிவுக்கு பெயர் பெற்றவர், விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள் மற்றும் விளிம்புநிலை மக்களின் நல்வாழ்வுக்காக எப்போதும் பாடுபட்டவர். அவர் எங்கள் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக இருப்பதில் மகிழ்ச்சி. இவ்வாறு பிரதமர் மோடி  தெரிவித்துள்ளார்.

  இந்த தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் இன்னும் வேட்பாளர் யாரும் அறிவிக்கப்படாததால் ஜெகதீப் தன்கர் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது.

  ×