என் மலர்
இந்தியா

துணை ஜனாதிபதி வேட்பாளர் சுதர்ஷன் ரெட்டி நக்சல் ஆதரவாளர்: அமித்ஷா குற்றச்சாட்டு
- நக்சல்களை ஒழிக்க அமைக்கப்பட்ட சல்வா ஜுடும் அமைப்புக்கு எதிராக தீர்ப்பு வழங்கியவர் சுதர்ஷன் ரெட்டி.
- அப்படியொரு தீர்ப்பு வழங்காமல் இருந்திருந்தால் 2020-ம் ஆண்டிலேயே நக்சலிசம் ஒழிக்கப்பட்டிருக்கும்.
திருவனந்தபுரம்:
உள்துறை மந்திரி அமித்ஷா கேரளாவின் கொச்சிக்கு சென்றிருந்தார். அங்கு நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அமித் ஷா பேசியதாவது:
இடதுசாரிகளின் அழுத்தம் காரணமாகவே முன்னாள் நீதிபதி சுதர்ஷன் ரெட்டியை, துணை ஜனாதிபதி வேட்பாளராக காங்கிரஸ் கட்சி நிறுத்தியுள்ளது.
சுதர்ஷன் ரெட்டி யார் தெரியுமா? அவர் நீதிபதியாக இருந்தபோது சத்தீஸ்கரில் நக்சல்களை ஒழிக்க அமைக்கப்பட்ட சல்வா ஜுடும் அமைப்புக்கு எதிராக தீர்ப்பு வழங்கியவர். அவர் மட்டும் அப்படியொரு தீர்ப்பு வழங்காமல் இருந்திருந்தால் 2020-ம் ஆண்டிலேயே நக்சல் மற்றும் இடதுசாரி தீவிரவாதம் ஒழிக்கப் பட்டிருக்கும்.
அவற்றை ஆதரிக்க உச்ச நீதிமன்றம் போன்ற உயர்வான அமைப்பை வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டவர்தான் சுதர்ஷன் ரெட்டி. அவரை துணை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த காங்கிரசுக்கு, இடதுசாரிகள் எந்த அளவுக்கு அழுத்தம் கொடுத்தனர் என்பதை கேரள மக்கள் போகப்போக தெரிந்து கொள்வர் என தெரிவித்தார்.
மாவோயிஸ்டுகளுக்கு எதிராக சிறப்பு போலீஸ் அதிகாரிகள் என ஆயுதம் ஏந்திப் போராடிய பழங்குடியின இளைஞர்கள் சல்வா ஜுடும் உள்ளிட்ட பெயர்களில் அழைக்கப்பட்டனர்.
கடந்த 2011-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக இருந்த சுதர்ஷன் ரெட்டி சல்வா ஜுடும் அமைப்பு சட்ட விரோதமானது என அறிவித்ததுடன், உடனடியாக அவர்கள் ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.






