search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Naxalism"

    நக்சலைட்டுகளை 3 ஆண்டுகளில் நாட்டை விட்டு ஒழித்துக்கட்டுவோம் என்று மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் சூளுரைத்தார். #RajnathSingh #Naxalism #BJP
    லக்னோ:

    ஆர்.ஏ.எப். என்று அழைக்கப்படுகிற அதிவிரைவுப்படை உருவாக்கப்பட்டதின் 26-வது ஆண்டு விழா, உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள ஆயுதப்படை முகாமில் நேற்று நடைபெற்றது.

    இந்த விழாவில் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    நமது நாட்டில் நக்சலைட்டுகள் வன்முறையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் எண்ணிக்கை, சில காலத்துக்கு முன்பாக 126 ஆக இருந்தது. இப்போது அந்த எண்ணிக்கை, வெறும் 10 அல்லது 12 என்ற அளவில் குறைந்து விட்டது.

    நமது நாட்டில் இருந்து நக்சலைட்டுகளை அடியோடு ஒழித்துக்கட்டும் நாள் வெகு தொலைவில் இல்லை. 1 அல்லது 2 அல்லது 3 வருடங்களில் ஒழித்துக்கட்டுவோம். இது உங்களது உறுதியாலும், துணிச்சலாலும், கடின உழைப்பாலும் சாத்தியப்படும்.

    இடதுசாரி பயங்கரவாதம் பாதித்த பகுதிகளில் நீங்கள் ஆற்றிய பணிகள் பாராட்டத்தகுந்தவை. இதுவரை 131 மாவோயிஸ்டுகளையும், பயங்கரவாதிகளையும் கொன்று குவித்திருக்கிறீர்கள். 1,278 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 58 பேரை சரண் அடையவும் வைத்திருக்கிறீர்கள்.

    காஷ்மீரில் பயங்கரவாத தடுப்பு படையாக மத்திய ஆயுத போலீஸ் படை செயல்பட்டு வருகிறது. காஷ்மீரை இந்தியாவின் ஒரு அங்கம் என்ற நிலையில் இருந்து யாராலும் பிரிக்க முடியாது. அங்கே சில இளைஞர்கள், பயங்கரவாதத்துக்கு தவறாக வழிநடத்தப்பட்டிருக்கலாம். அதே நேரத்தில் இந்தப் படையினர் பாதுகாப்புக்கு தேவையான நடவடிக்கையை எடுத்துள்ளனர்.

    கலவரங்களின்போதும், போராட்டங்களின் போதும் நீங்கள் விரைவாகவும், அதிரடியாகவும் செயல்பட வேண்டும். ஆனால் ஒருபோதும் பொறுப்பற்று இருந்து விடக்கூடாது.

    அனைத்து போலீஸ் படையினரும் நாகரிகமாக நடந்து கொள்ள வேண்டும். எந்த நிலையிலும், மிருகத்தனமானவர்கள் என்று கூறத்தக்க விதத்தில் நடந்து கொள்ளக்கூடாது.

    கூட்டத்தை கட்டுப்படுத்துகிறபோது எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று ஒவ்வொருவரும் உணர்ந்து நடக்க வேண்டும். எப்போது பலத்தை பயன்படுத்த வேண்டும் என்று தெரிந்து, அதற்கு ஏற்ப நடக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×