என் மலர்
இந்தியா

இந்தியா கூட்டணி துணை ஜனாதிபதி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி தமிழ்நாடு வருகை
- தெற்கும், தெற்கும் மோதிக்கொள்வதாக டெல்லியில் தலைவர்கள் பேசுகிறார்கள்.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து துணை ஜனாதிபதி தேர்தலுக்கு ஆதரவு திரட்டுகிறார்.
காலியாக இருக்கும் துணை ஜனாதிபதி பதவிக்கு அடுத்த மாதம் (செப்டம்பர்) 9-ந்தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 7-ந்தேதி தொடங்கி நேற்றோடு முடிவடைந்தது.
இதனை முன்னிட்டு ஆளும் பா.ஜ.க. கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தமிழ்நாட்டை சேர்ந்த மகாராஷ்டிர மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இவர் நேற்று முன்தினம் பிரதமர் மோடி மற்றும் பல முக்கிய மந்திரிகள் முன்னிலையில் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
இந்த தேர்தலில் ஆளும் கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகமாக இருப்பதால் போட்டி இருக்காது என முதலில் கருதப்பட்டது.
ஆனால் 'இந்தியா' கூட்டணியில் உள்ள எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் ஒன்றுகூடி பேசி, போட்டி வேட்பாளரை நிறுத்த முடிவு செய்தனர். அதன் அடிப்படையில் வேட்பாளராக சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி அறிவிக்கப்பட்டார்.
தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். 'இந்தியா' கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர். இவர்கள் 2 பேருமே தென் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். இதனால் தெற்கும், தெற்கும் மோதிக்கொள்வதாக டெல்லியில் தலைவர்கள் பேசுகிறார்கள்.
வேட்புமனு தாக்கலின் கடைசி நாளான நேற்று சுதர்சன் ரெட்டி வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
இந்நிலையில் இந்தியா கூட்டணி துணை ஜனாதிபதி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி நாளை மறுநாள் தமிழ்நாடு வர உள்ளார்.
அவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து துணை ஜனாதிபதி தேர்தலுக்கு ஆதரவு திரட்டுகிறார். மேலும் இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்களையும் சந்தித்து அவர் ஆதரவு திரட்ட உள்ளார்.






