என் மலர்
இந்தியா

இன்று துணை ஜனாதிபதி தேர்தல்: வெல்லப் போவது யார்? - அதிக பலம் யாருக்கு?
- வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் கோவையிலிருந்து இரண்டு முறை மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- கருப்புப் பணம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டது போன்றவற்றின் மூலம் நாடு முழுவதும் கவனம் பெற்றவர் ஆவார்.
நாட்டின் அடுத்த துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று (செப்டம்பர் 9) நடைபெற உள்ளது.
வாக்குப்பதிவு காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெறும். இரு அவைகளிலிருந்தும் எம்.பி.க்கள் ரகசிய வாக்கெடுப்பு மூலம் தங்கள் வாக்குகளை செலுத்துவர்.
வாக்குப்பதிவு முடிந்த உடனேயே, வாக்கு எண்ணிக்கை மாலை 6 மணிக்கு தொடங்கும். இன்றிரவே முடிவுகள் அறிவிக்கப்படும்.
வேட்பாளர்கள் பின்னணி?
தமிழ்நாட்டைச் சேர்ந்த மூத்த பாஜக தலைவரும் ஆர்எஸ்எஸ் புள்ளியுமான சி.பி. ராதாகிருஷ்ணன் (67) என்.டி.ஏ வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார்.
வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் கோவையிலிருந்து இரண்டு முறை மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது இவர் மகாராஷ்டிராவின் ஆளுநராகப் இருந்து வருகிறார்.
தெலுங்கானாவைச் சேர்ந்த ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி சுதர்சன் ரெட்டி (79) இந்தியா கூட்டணியின் வேட்பாளராக களமிறங்கியுள்ளார்.
சத்தீஸ்கரில் நக்சல் எதிர்ப்பு என்ற பெயரில் தனிநபர்களுக்கு ஆயுதங்கள் வழங்கி அரசு ஆதரவுடன் நடத்தப்பட்ட சல்வா ஜூடும் அமைப்பு அரசியலமைப்பிற்கு விரோதமானது என்ற தீர்ப்பு, கருப்புப் பணம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டது போன்றவற்றின் மூலம் நாடு முழுவதும் கவனம் பெற்றவர் ஆவார்.
எதிர்க்கட்சிகள் இவரை சமூக நீதியின் அடையாளமாக நிலைநிறுத்தியுள்ளன.
யாருக்கு பலம்?
மக்களவை மற்றும் மாநிலங்களவையைச் சேர்ந்த மொத்தம் 781 எம்.பி.க்கள் வாக்களிக்க உள்ளனர்
வெற்றிக்கு 391 வாக்குகள் என்ற மேஜிக் எண்ணிக்கை தேவை. ஆளும் என்.டி.ஏ கூட்டணிக்கு 425 எம்.பி.க்கள் என்ற சொந்த பலம் உள்ளது.
கூடுதலாக, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 11 எம்.பி.க்களும் தங்கள் ஆதரவை அறிவித்துள்ளனர், இதன் மூலம் அவர்களின் எண்ணிக்கை 436 ஆக உயர்ந்துள்ளது.
ஆம் ஆத்மி கட்சி எம்.பி. ஸ்வாதி மாலிவாலும் என்.டி.ஏ வேட்பாளருக்கு வாக்களிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மறுபுறம், எதிர்க்கட்சி இந்தியா கூட்டணிக்கு 324 எம்.பி.க்களின் ஆதரவு உள்ளது. எண்ணிக்கை பலத்தின் அடிப்படையில் என்.டி.ஏ வேட்பாளரின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியானாலும், கடந்த தேர்தலை விட இதில் முன்னிலை குறைய வாய்ப்புள்ளது என்று கணிக்கப்படுகிறது.
2022 இல் ஜக்தீப் தன்கர் 346 வாக்குகள் என்ற மிகப்பெரிய பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றிருந்தார்.
இந்த முறை முன்னிலை 100 முதல் 125 வாக்குகள் வரை மட்டுமே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.






