search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விமான நிலையம்"

    • பயணிகள் விமான நிறுவன கவுண்டரை சூழ்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

    ஆலந்தூர்:

    சென்னையில் இருந்து டெல்லிக்கு நேற்று மாலை 6.25 மணியளவில் விமானம் புறப்படதயாராக இருந்தது. அதில் 154 பேர் பயணம் செய்ய இருந்தனர். அவர்கள் அனைவரும் மாலை 5 மணிக்கு முன்னதாகவே பாதுகாப்பு சோதனை அனைத்தையும் முடித்து விட்டு விமானத்தில் ஏறுவதற்கு தயாராக இருந்தனர்.

    ஆனால் எதிர் முனையில் வர வேண்டிய விமானம் தாமதமானதால் டெல்லி விமானம் தாமதமாக புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இரவு 8 மணி வரையில் விமானம் புறப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பயணிகள் விமான நிறுவன கவுண்டரை சூழ்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கிருந்த ஊழியர்களிடம் கடும் வாக்குவாதம் செய்தனர். அவர்களை விமான நிலைய அதிகாரிகள், பாதுகாப்பு அதிகாரிகள் சமாதானப்படுத்தினர். பின்னர் இரவு 9.25 மற்றும் 10 மணியளவில் விமானம் புறப்படும் என்று அடுத்தடுத்து தெரிவித்தும் விமானம் புறப்படவில்லை.

    இதேபோல் சென்னையில் இருந்து இரவு 7 மணிக்கு, அகமதாபாத் செல்ல வேண்டிய அதே நிறுவன மற்றொரு விமானமும் இரவு 10 மணி வரையில் புறப்படவில்லை. இதனால் அந்த விமானத்தில் பயணம்செய்ய இருந்த 162 பயணிகளும் டெல்லி பயணிகளுடன் சேர்ந்து போராட்டம் மற்றும் அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர். இதனால் உள்நாட்டு விமான முனையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து 6.25 மணிக்கு டெல்லி செல்ல வேண்டிய விமானம் 4 மணி நேரம் தாமதமாக, இரவு 10.35 மணிக்கும், இரவு 7 மணிக்கு அகமதாபாத் செல்ல வேண்டிய விமானம் இரவு 10.50 மணிக்கும் புறப்பட்டுச் சென்றது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

    • அடிக்கடி வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தப்பட்டு வருகிறது
    • விசாரணையில் முன்னுக்குப்பின் முரணாக பேசினார். இதனைத்தொடர்ந்து அவரது உடமைகள் சோதனை செய்யப்பட்டன.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் உள்ள விமான நிலையங்கள் மூலம் அடிக்கடி வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தப்பட்டு வருகிறது. இதனை சுங்கத்துறையினர் அதிரடியாக பறிமுதல் செய்து வருகின்றனர்.

    இந்தநிலையில் கொச்சி சர்வதேச விமான நிலையம் வந்த மொய்தீன் என்பவரது நடத்தை சந்தேகப்படும் வகையில் இருந்தது. அவரிடம் சுங்கத்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசினார். இதனைத்தொடர்ந்து அவரது உடமைகள் சோதனை செய்யப்பட்டன.

    சிறுவர்கள் விளையாடும் பொம்மைகள், கார்கள் போன்றவற்றை அவர் வைத்திருந்தார். அவற்றை தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தியதில், சுருள் வடிவில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தியது தெரிய வந்தது. ரூ.18.79 லட்சம் மதிப்பிலான 352.40 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

    • சேலம் விமான நிலைய ஆலோசனை குழுவின் 6-வது கூட்டம் குழுவின் தலைவர் எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி. தலைமையில் இன்று நடைபெற்றது.
    • மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நினைவை போற்றிடும் வகையில் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி விமான நிலையம் என்று பெயர் சூட்ட வேண்டும் என்று மத்திய, மாநில அரசை வலியுறுத்தி கேட்டு கொள்வது என்று தீர்மானிக்கப்பட்டது.

    சேலம்:

    சேலம் விமான நிலைய ஆலோசனை குழுவின் 6-வது கூட்டம் குழுவின் தலைவர் எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி. தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் விமான நிலைய இயக்குனர் ரமேஷ், ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் ஹரிபாஸ்கர், சுரேஷ் இமானுவேல், பாபு, ஓமலூர் டி.எஸ்.பி.சங்கீதா மற்றும் தி.மு.க. மாநில பொதுக்குழு உறுப்பினர் பனமரத்துப்பட்டி ராஜா, வக்கீல் லட்சுமணபெருமாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    சேலம் மாவட்டத்துக்கு இரும்பாலை, பெரியார் பல்கலைக்கழகம், அரசு கல்லூரிகள், ரெயில்வே கோட்டம் உள்ளிட்ட ஏராளமான திட்டங்களை தந்து தொழில் நகரமாக மாற்றிய மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நினைவை போற்றிடும் வகையில் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி விமான நிலையம் என்று பெயர் சூட்ட வேண்டும் என்று மத்திய, மாநில அரசை வலியுறுத்தி கேட்டு கொள்வது என்று தீர்மானிக்கப்பட்டது.

    சேலம், தருமபுரி, ஈரோடு, நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான சேலத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, ஐதராபாத், கொச்சின் ஆகிய நகரங்களுக்கு இரு மார்க்கமாக விமான சேவை தொடங்குவதற்கு காரணமாக இருந்த தமிழக முதல்-அமைச்சர், மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர், சேலம் மாவட்ட பொறுப்பு அமைச்சர் கே.என்.நேரு மற்றும் பலமுறை பாராளுமன்றத்தில் குரல் எழுப்பிய எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி. ஆகியோருக்கு இந்த கூட்டம் நன்றி தெரிவித்துக் கொள்கிறது.

    சேலம் விமான நிலையத்தில் இருந்து கூடுதலாக நேரடியாக சீரடி, திருப்பதி மற்றும் கோவாவிற்கு விரைவில் விமான சேவைகளை தொடங்குவதற்கு நடவடிக்கை எடுத்திட ஒன்றிய விமான போக்கு வரத்து அமைச்சகத்தை கேட்டுக் கொள்ளப்பட்டது. சேலம் புதிய பஸ் நிலையம் மற்றும் ரெயில் நிலையத்தில் இருந்து காமலாபுரம் விமான நிலையத்திற்கு இரு மார்க்கமாக பேருந்து வசதியை ஏற்படுத்தி தருவதற்கு சேலம் மாவட்ட பொறுப்பு அமைச்சர் கே.என்.நேருவை கேட்டுக் கொள்வது. சேலம் விமான நிலையத்தில் இரவு நேர விமான சேவை தொடங்குவதற்கு முன்பு விமான பயணிகளின் கோரிக்கையை நிறைவேற்றும் பொருட்டு காலை நேர விமான சேவையை சென்னைக்கு தொடங்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    • கண்ணூர் விமான நிலையத்துக்கு ஷார்ஜாவில் இருந்து வந்த விமான பயணிகளிடம் சோதனை நடத்தப்பட்டது.
    • விமான நிலைய போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் உள்ள விமான நிலையங்களில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன. அரபு நாடுகளில் இருந்து வரும் விமானங்களில் சில பயணிகள் சட்டவிரோதமாக தங்கத்தை மறைத்துவைத்து கடத்தி கொண்டுவரும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. கண்ணூர் விமான நிலையத்துக்கு ஷார்ஜாவில் இருந்து வந்த விமான பயணிகளிடம் சோதனை நடத்தப்பட்டது.

    அப்போது முஸ்தபா என்ற பயணி 832 கிராம் தங்கத்தை பேஸ்ட் வடிவில் கேப்சூல்களுக்குள் வைத்து, அதனை விழுங்கி வயிற்றுக்குள் மறைத்துவைத்து கடத்தி கொண்டுவந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றின் மதிப்பு ரூ.49லட்சம் ஆகும். இதுதொடர்பாக விமான நிலைய போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் தேவர் பெயரை சூட்ட வேண்டும்.
    • பார்வர்ட் பிளாக் கோரிக்கை வைத்துள்ளனர்.

    பசும்பொன்

    கமுதி அருகே உள்ள பசும்பொன்னில் முத்துராம லிங்கத்தேவர் சிலைக்கு பார்வர்ட் பிளாக் கட்சியின் சார்பில் மாநில தலைவர் கதிரவன் மாலை அணி வித்து மரி யாதை செலுத்தப்பட்டது.

    பின்னர் அவர் செய்தியாளரிடம் கூறியதாவது:-

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சிக்கு தொகுதி கேட்டு பெறப் படும். சுதந்திரப் போராட்ட தலைவர்களின் குருபூஜை, பிறந்தநாள் விழா நிகழ்ச்சி களின்போது 144 தடை உத்தரவு விதிப்பதை ஏற்க முடியாது. ஆனால் தடை களையும் மீறி லட்சக் கணக்கில் மக்கள் திரளுகின்றனர்.

    அதனால் 144 தடை விதிக்கப்பட கூடாது. மக்கள் தொகை கணக் கெடுப்புடன், சாதி வாரி கணக் கெடுப்பு நடத்த வேண்டும். அதுவரை 20 சதவீத இட ஒதுக்கீட்டில் மாற்றம் செய்யக் கூடாது. கமுதி பகுதியில் குண்டாறு, மலட் டாறுகளை தூர்வாரி விவசாயிகளை காக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதில் மத்தியக் கட்டுப்பாட்டு குழு தலைவர் மாநிலத்தலைவர் முத்துராம லிங்கம், மாநிலச் செயலாளர் இளங்கோ, ராமநாதபுரம் மாவட்ட அமைப்பு செய லாளர் பி.கீரந்தை வீரப் பெருமாள், சிவகங்கை மாவட்ட செயலாளர் கே.பி.யோகநாதன், மதுரை மாவட்ட நிர்வாகிகள் ஆசைகுமார், ஆதிசேசன், மாணவர் அணி மத்தியக் குழு உறுப்பினர் மு.வெள்ளைப்பாண்டியன், தேவர் நேதாஜி ஆராய்ச்சியாளர் மற்றும் ஆப்பநாடு ஆய்வு குழு தலைவர் மாயகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.

    • நாள்தோறும் 34 விமான சேவைகள் உள்ளதால் ஆயிரக்கணக்கான வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு பயணிகளும் வந்து செல்கிறார்கள்.
    • மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர் விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருந்தார்.

    கே.கே. நகர்:

    திருச்சி விமான நிலையத்திலிருந்து இலங்கை, மலேசியா, மஸ்கட் ஓமன் துபாய், சிங்கப்பூர், உள்ளிட்ட பல்வேறு வெளி நாடுகளுக்கும் அதே போன்று பெங்களூர் சென்னை புதுடெல்லி உள்ளிட்ட பெரு நகரங்களுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    நாள்தோறும் 34 விமான சேவைகள் உள்ளதால் ஆயிரக்கணக்கான வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு பயணிகளும் வந்து செல்கிறார்கள். இந்நிலையில் இன்று அதிகாலை 2.32 மணிக்கு திருச்சி விமான நிலைய முனைய மேலாளர் தொலைபேசி எண்ணுக்கு வாட்ஸ்அப் மெசேஜ் வந்தது.

    சென்னை மடிப்பாக்கத்தைச் சேர்ந்த சங்கீதா வேலப்பன் என்ற பெண் அந்த மெசேஜை அனுப்பியிருந்தார். அதில் அவர் திருச்சி விமான நிலையத்திற்கு வரும் 34 விமானங்களில் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களும், வெடிகுண்டுகளும் இருப்பதாகவும் உடனடியாக சோதனை மேற்கொள்ளுங்கள் என மிரட்டல் விடுக்கும் வகையில் குறிப்பிட்டிருந்தார்.

    இதனையடுத்து மத்திய தொழில் பாதுகாப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து அவர்கள் வெடிகுண்டு நிபுணர்களுடன் விமான நிலையம் முழுவதும் சோதனை மேற்கொண்டனர்.

    ஆயினும் வெடிகுண்டு ஏதும் கண்டறியப்படவில்லை. இதை தொடர்ந்து வாட்சப் மெசேஜ் அனுப்பிய சங்கீதா வேலப்பனிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரிய வந்தது.

    இதையடுத்து அவர் மீது வழக்கு ஏதும் பதிவு செய்யாமல் இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக தெரிய வருகிறது. ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதுபோன்று மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர் விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • உள்நாட்டு விமான பயணிகளில், விமானங்கள் மாறி செல்லும் டிரான்சிட் பயணிகளுக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டன.
    • பயணிகள் மிகவும் குறுகிய நேரத்தில், ஒரு உள்நாட்டு விமானத்தில் வந்து விட்டு, மற்றொரு உள்நாட்டு விமானத்தில், புறப்பட்டு சென்று, பயணம் செய்ய முடியும்.

    ஆலந்தூர்:

    சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்கு வருகை தரும் பயணிகள் ஒரு விமானத்தில் வந்துவிட்டு, உடனடியாக மற்றொரு உள்நாட்டு விமானத்தில் பயணம் செய்வதை "டிரான்சிட்" பயணம் என்று சொல்லப்படுகிறது. இந்த பயணத்தில் வரும் பயணிகள் இதுவரை வருகை பகுதி வழியாக வெளியில் வந்து, பின்னர் புறப்பாடு பகுதிக்கு சென்று தான், பயணிக்க வேண்டும். மிக முக்கிய வி.வி.ஐ.பி. பயணிகள் தவிர, மற்றஅனைவருக்கும் இந்த விதிமுறைதான் இருந்தது.

    இதனால் உள்நாட்டு விமான பயணிகளில், விமானங்கள் மாறி செல்லும் டிரான்சிட் பயணிகளுக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டன. இதன்காரணமாக பல்வேறு நேரங்களில், தங்கள் பயணம் செய்ய வேண்டிய விமானங்களை தவறவிடும் சூழ்நிலை ஏற்பட்டு வந்தது. இதைத்தொடர்ந்து டிரான்சிட் பயணிகள் வெளியில் செல்லாமல், உள்ளிருந்தே புறப்பாடு பகுதிக்கு செல்வதற்கு வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து தற்போது சென்னை உள்நாட்டு விமான முனையத்தில் டிரான்சிட் பயணிகள், வெளியே செல்லாமல், வருகை பகுதியில் இருந்து, நேரடியாக புறப்பாடு பகுதியின், பாதுகாப்பு சோதனை பகுதிக்கு செல்வதற்காக, புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான புதிய பாதையும் அமைக்கப்பட்டுள்ளது.

    சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில், இந்த புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதால், டெல்லி விமானத்தில் வரும் ஒரு பயணி, தூத்துக்குடி விமானத்தில் பயணிக்க வேண்டும் என்றால், வெளியில் செல்லாமல், உள்ளிருந்தே டிரான்சிட் பயணிகள் செல்வதற்கான வழியாக சென்று, தூத்துக்குடி விமானத்தில் பயணிக்க முடியும். இதுபோல் அனைத்து உள்நாட்டு விமானங்களில் வரும் டிரான்சிட் பயணிகள், வெளியே செல்லாமல் உள்ளிருந்தே புறப்பாடு விமானத்தில் பயணம் செய்ய முடியும். இதனால் பயணிகள் மிகவும் குறுகிய நேரத்தில், ஒரு உள்நாட்டு விமானத்தில் வந்து விட்டு, மற்றொரு உள்நாட்டு விமானத்தில், புறப்பட்டு சென்று, பயணம் செய்ய முடியும்.

    • கண்ணூர் சர்வதேச விமான நிலையத்தில் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
    • காசர்கோடு பேக்கல் பகுதியைச் சேர்ந்த தம்ஜித் என்பவரை சந்தேகத்தின் பேரில் விசாரித்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் உள்ள விமான நிலையங்கள் வழியாக அரபு நாடுகளில் இருந்து வருபவர்கள் தங்கம் கடத்தி வருவதும் அதனை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் அடிக்கடி நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று கண்ணூர் சர்வதேச விமான நிலையம் வழியாக தங்கம் கடத்தப்பட இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    அப்போது காசர்கோடு பேக்கல் பகுதியைச் சேர்ந்த தம்ஜித் என்பவரை சந்தேகத்தின் பேரில் விசாரித்தனர். அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசியதால், தனியாக அழைத்துச் சென்று உடமைகளை சோதனை செய்தனர். இதில் அவர் தாள் பெட்டிக்குள் ஓட்டி வைத்து 973.5 கிராம் தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.56 லட்சத்து 32 ஆயிரம் ஆகும்.

    அதனை மீட்ட போலீசார், தம்ஜித்தையும் கைது செய்தனர். அவர் அபுதாபியில் இருந்து தங்கத்தை கடத்தி வந்துள்ளார். நேற்று முன்தினம் இதே விமான நிலையத்தில் சார்ஜாவில் இருந்து மட்டனூரைச் சேர்ந்த முசாபிர் உள்ளாடைக்குள் மறைத்து கடத்தி வந்த ரூ..49½ லட்சம் தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    • விமானம் தாமதமாக புறப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
    • சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    ஆலந்தூர்:

    சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி செல்லும் ஏர் இந்தியா பயணிகள் விமானம், இன்று காலை 10.05 மணிக்கு சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து புறப்பட தயாராக இருந்தது. இந்த விமானத்தில் 147 பயணிகள் பயணிக்க இருந்தனர். இந்தப் பயணிகள் அனைவரும் காலை 8.30 மணிக்கு முன்னதாகவே சென்னை விமான நிலையத்திற்கு வந்து பாதுகாப்பு சோதனை உள்ளிட்ட அனைத்து சோதனைகளையும் முடித்துவிட்டு விமானத்தில் ஏற தயாராக இருந்தனர்.

    டெல்லியில் இருந்து காலை 9 மணிக்கு வழக்கமாக வரும் ஏர் இந்தியா விமானம் மீண்டும் காலை 10:05 மணிக்கு டெல்லிக்கு புறப்பட்டு செல்லும். அந்த விமானம் டெல்லியில் இருந்து காலை 9 மணிக்கு சென்னை வந்து சேர்ந்தது. அந்த விமானத்தை இயக்கி வந்த விமானி, விமானத்தில் எந்திர கோளாறு இருப்பதாகவும், அதை சரி செய்த பின்பு, மீண்டும் விமானத்தை இயக்கும்படியும் குறிப்பு எழுது வைத்து விட்டார்.

    இதை அடுத்து விமானம் தாமதமாக புறப்படும் என்று அறிவிக்கப்பட்டது. பயணிகளையும் ஓய்வறைகளில் தங்க வைக்கப்பட்டனர். இந்த விமானத்தில் எந்திர கோளாறு 12 மணி வரை சரி செய்யப்படவில்லை.

    147 பயணிகளையும் மாற்று விமானங்கள் மூலம், டெல்லிக்கு அனுப்பி வைக்க சென்னை விமான நிலைய அதிகாரிகள் ஏற்பாடுகள் செய்து கொண்டு இருக்கின்றனர்.

    சென்னையில் இருந்து டெல்லி செல்ல வேண்டிய ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் திடீரென ஏற்பட்ட எந்திரக் கோளாறு காரணமாக 147 பயணிகள் சென்னை விமான நிலையத்தில் இரண்டு மணி நேரத்துக்கு மேலாக காத்திருந்தனர். இதனால் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • வெளிநாடுகளுக்கு கூடுதலாக விமான சேவைகள் வருகிற அக்டோபர் மாதம் முதல் செயல்படுகிறது
    • திருச்சி விமானநிலையத்தில் இருந்து வழங்கப்படும் வெளிநாட்டு விமான சேவைகளின் எண்ணிக்கை வாரத்துக்கு 76-லிருந்து 17 ஆக அதிகரிக்கும்

    திருச்சி

    திருச்சி சர்வதேச விமான நிலையம் மாநிலத்தில் மத்தியில் அமைந்துள்ளதால் எந்த பகுதியில் இருந்தும் வெளிநாடு செல்வோர் மற்றும் திரும்புவோர் இந்த விமான நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். ஆண்டு தோறும் சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் திருச்சி விமான நிலையம் வழியாகப் வந்துசெல்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் பயணிகளின் எண்ணிக்கையும், விமானங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துவருகிறது. பயணிகளை கையாள்வதில் திருச்சி விமானநிலையம் 11-வது இடத்தில் உள்ளது. தற்போது ரூ.951 கோடியில் மொத்தம் 60.723 சதுர மீட்டரில் புதிய முனையம் அமைக்கப்பதற்கான பணிகள் நடந்து வருகிறது.

    இந்த புதிய முனையம் செயல்பாட்டுக்கு வரும் பட்சத்தில், உள்நாடு மற்றும் வெளிநாட்டு சேவை அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகளவில் உள்ளன.

    இது குறித் திருச்சி விமானநிலைய அதிகாரி கூறும் போது,

    கடந்த 2022-23-ம் நிதியாண்டில் திருச்சி விானநிலையம் ரூ.31.51 கோடி லாபம் ஈட்டியுள்ளது. திருச்சி விமான நிலையத்திலிருந்து வெளிநாட்டு சேவையாக சிங்கப்பூருக்கு 4, மலேசியாவுக்கு 3, கொழும்பு, சார்ஜா, துபாய் ஆகிய நாடுகளுக்க தலா 1 என 10 விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    இதன் மூலம் திருச்சி விமான நிலையத்தில் இருந்து தற்போது வாரத்துக்கு 76 வெளிநாட்டு சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் வருகிற அக்டோபர் மாதம் 29-ந் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ள குளிர்கால அட்டவணைப்படி, வாரத்துக்கு மேலும் 31 வெளிநாட்டு விமான சேவைகள் வழங்கப்பட உள்ளன.

    அதன்படி, தருச்சி விமானநிலையத்தில் இருந்து கோலாலம்பூருக்கு தினசரி சேவை 3 லிருந்து 5 ஆகவும், சிகங்கப்பூருக்கு 4 லிருந்து 5 ஆகவும், இலங்கைக்கு 1லிருந்து 2 ஆகவும், வியட்நாமுக்கு வாரத்துக்கு புதிதாக 3-ம் என வாரத்துக்கு 31 விமான சேவைகள் கூடுதலாக வழங்கப்பட உள்ளன.

    இதன் மூலம் திருச்சி விமானநிலையத்தில் இருந்து வழங்கப்படும் வெளிநாட்டு விமான சேவைகளின் எண்ணிக்கை வாரத்துக்கு 76-லிருந்து 17 ஆக அதிகரிக்கும். என்றார்.

    • திருச்சி விமான நிலையத்தில் அதிக அளவில் தங்கம் கடத்தப்பட்டு வருவது வாடிக்கையாக உள்ளது.
    • விமான பயணிகளை மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர்.

    கே.கே.நகர்:

    திருச்சி விமான நிலையத்திலிருந்து பல்வேறு வெளி நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு இயக்கப்படும் விமானங்களில் அதிக அளவில் தங்கம் கடத்தி வருவதும் அதனை தடுக்கும் வகையில் சுங்கத்துறை அதிகாரிகளும், மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் திருச்சி விமான நிலையத்தில் அதிக அளவில் தங்கம் கடத்தப்பட்டு வருவது வாடிக்கையாக உள்ளது.

    இதே போல் வெளிநாட்டு கரன்சி மற்றும் அரியவகை ஆமை, பாம்பு, பல்லிகள் கடத்தி வருவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.இந்த நிலையில் நேற்று இரவு திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஏர் ஏசியா விமானம் மலேசிய தலை நகர் கோலாலம்பூருக்கு புறப்பட தயாராக இருந்தது. இந்த விமான பயணிகளை மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது திருச்சியைச் சேர்ந்த ராம் பிரபு (வயது 39). என்பவரின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அவரை தனியே அழைத்து சோதனை செய்தனர்.

    அப்போது அவரிடம் 23 லட்சம் மதிப்பிலான சவுதி ரியால் இருப்பது தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • ராஜஸ்தானில் பாலி மாவட்டத்தில் கொள்ளையர்கள் பதுங்கி இருப்பது தெரியவந்தது.
    • விசாரணை நடத்திய பிறகு தான் எத்தனை பேரிடம் செயின் பறிக்கப்பட்டுள்ளது என்கிற விவரம் தெரிய வரும்.

    சென்னை:

    மாதவரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் சாலையில் தனியாக நடந்து செல்லும் பெண்களை குறிவைத்து செயின் பறிப்பில் கொள்ளையர்கள் சிலர் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்தனர்.

    கடந்த 14-ந் தேதி மாதவரத்தில் கவிதா என்ற பெண்ணிடம் 3 பேர் கொண்ட கும்பல் 8 பவுன் செயினை பறித்து சென்றது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். செயின் பறிப்பு சம்பவம் நடைபெற்ற பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போட்டு பார்த்து விசாரணை நடத்தினர். அப்போது மகேஸ்குமார் என்கிற கொள்ளையன் பிடிபட்டான். அவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மாதவரம் பகுதியில் பெண்களை குறிவைத்து ராஜஸ்தானை சேர்ந்த கொள்ளையர்கள் செயின் பறிப்பில் ஈடுபட்டு வருவது தெரியவந்தது. இதையடுத்து கொள்ளை கும்பலை பிடிக்க போலீசார் அதிரடியாக களம் இறங்கினர்.

    ராஜஸ்தானில் பாலி மாவட்டத்தில் கொள்ளையர்கள் பதுங்கி இருப்பது தெரியவந்தது. அவர்களை பிடிப்பதற்காக தனிப்படை போலீசார் விரைந்து சென்றனர். அவர்கள் அங்கு நேற்று இரவு துப்பாக்கி முனையில் தினேஷ் புஜார், ரமேஷ் பஞ்சாரா ஆகிய 2 கொள்ளையர்களையும் மடக்கி பிடித்தனர். இருவரையும் போலீசார் விமானத்தில் அழைத்து வருகிறார்கள். ராஜஸ்தான் கொள்ளையர்கள் அங்கிருந்து விமானத்தில் சென்னைக்கு வந்து இங்கு மோட்டார் சைக்கிள்களை முதலில் திருடியிருக்கிறார்கள்.

    பின்னர் திருட்டு மோட்டார் சைக்கிளில் மாதவரம் பகுதியை குறிவைத்து கைவரிசை காட்டி இருக்கிறார்கள். இவர்கள் பல பெண்களிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டு இருப்பது தெரிய வந்தது. இருவரையும் சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்திய பிறகு தான் எத்தனை பேரிடம் செயின் பறிக்கப்பட்டுள்ளது என்கிற விவரம் தெரிய வரும்.

    விமானத்தில் வந்து செயினை பறித்து விட்டு ராஜஸ்தான் கொள்ளையர்கள் ரெயிலில் சொந்த ஊருக்கு தப்பிச் சென்று விடுவார்கள். விமானத்தில் சென்றால் திருட்டு நகைகளுக்கு பதில் சொல்ல வேண்டி இருக்கும் என்பதால் ரெயில் பயணத்தை தேர்வு செய்திருப்பதும் போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. கொள்ளையர்களை சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்திய பின்னர் மேலும் பல தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ×