search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மக்காச்சோளம்"

    • வழக்கமாக உடுமலை பகுதிகளில் டிசம்பர் தொடங்கி மார்ச் வரை மக்காச்சோளம் அறுவடை சீசன் காலமாகும்.
    • மகசூல் குறைந்தாலும் ஓரளவு விலை கிடைத்து வந்ததால் விவசாயிகள் விற்பனை செய்து வந்தனர்.

     மடத்துக்குளம்:

    உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் பகுதிகளில் மக்காச்சோளம் சாகுபடி பிரதானமாக உள்ளது. பி.ஏ.பி., இரண்டாம் மண்டல பாசன நிலங்கள், அமராவதி பாசன நிலங்கள் மற்றும் பருவ மழைகள் திருப்தியாக பெய்ததால் இறவை மற்றும் மானாவாரி பாசன நிலங்களில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டது.இப்பகுதிகளில் ஏறத்தாழ 40 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மக்காச்சோளம் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு தற்போது அறுவடை துவங்கியுள்ளது. வழக்கமாக உடுமலை பகுதிகளில் டிசம்பர் தொடங்கி மார்ச் வரை மக்காச்சோளம் அறுவடை சீசன் காலமாகும்.இப்பகுதிகளில் விளையும் மக்காச்சோளத்தை கோழி, மாட்டுத்தீவன உற்பத்தி நிறுவனங்கள் கொள்முதல் செய்து வருகின்றன.

    நடப்பாண்டு உடுமலை பகுதிகளில் மக்காச்சோளம் அறுவடை தீவிரமடைந்துள்ளது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு வரை ஒரு குவிண்டால் 2,250 முதல் 2340 வரை விற்று வந்தது. மகசூல் குறைந்தாலும் ஓரளவு விலை கிடைத்து வந்ததால் விவசாயிகள் விற்பனை செய்து வந்தனர்.இந்நிலையில் வியாபாரிகள் மற்றும் கோழித்தீவன உற்பத்தி நிறுவனங்கள் சிண்டிகேட் காரணமாக கடந்த 10 நாட்களாக தினமும் 10 ரூபாய், 20 ரூபாய் என குறைக்கப்பட்டு குவிண்டால் 1,150 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டது.

    வெளி மாநில வரத்து வாய்ப்பில்லை. உள்ளூர் மக்காச்சோளம் மட்டுமே கொள்முதல் செய்ய வேண்டிய சூழலில் திடீர் விலை சரிவு காரணமாக விவசாயிகள் மக்காச்சோளம் அறுவடையை குறைத்து கொண்டதோடு அறுவடை செய்ய மக்காச்சோளத்தையும் விற்பனை செய்யாமல் விலையை எதிர்பார்த்து இருப்பு வைக்க துவங்கினர்.இதனால் விற்பனைக்கு மக்காச்சோளம் வரத்து குறைந்த நிலையில் மீண்டும் குவிண்டாலுக்கு, 20 முதல் 30 ரூபாய் வரை உயர்ந்தது.

    இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    மக்காச்சோளம் அறுவடை துவங்கி இரண்டு மாதம் வரை நிலையான விலை காணப்பட்டது. இந்நிலையில் வியாபாரிகள் சிண்டிகேட் காரணமாக விலை குறைக்கப்பட்டது.மக்காச்சோளத்திற்கு விதை, உரம், மருந்து என 40 ஆயிரம் ரூபாய் வரை செலவாகியுள்ள நிலையில் அறுவடைக்கு 8 ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது.வழக்கமாக ஏக்கருக்கு 40 குவிண்டால் மகசூல் கிடைத்து வந்த நிலையில் தற்போது 20 முதல் 22 குவிண்டால் மட்டுமே கிடைக்கிறது. இதனால் விவசாயிகள் பாதிக்கும் நிலை உள்ளது. இதனால் விலையை எதிர்பார்த்து விவசாயிகள் இருப்பு வைக்க துவங்கியுள்ளனர். உரிய விலை கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். அதிகாரிகள் கூறுகையில், மக்காச்சோளம் விலை குறைவு காரணமாக, விற்பனைக்கு வரத்து குறைந்தது. இதனால் மீண்டும் விலை உயரத்துவங்கியுள்ளது என்றனர்.

    • மக்காச்சோள பயிரில் படைப்புழு தாக்குதலால் 30 முதல் 50 சதவீதம் வரை மகசூல் இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
    • 60-ம் நாள், தேவைப்பட்டால் தாக்குதல் இருக்கும் பட்சத்தில் மேற்காணும் மருந்துகளில் ஏதேனும் ஒன்றை சுழற்சி முறையில் மீண்டும் தெளிக்கலாம்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டு உள்ள மக்காச்சோள பயிரில் படைப்புழு தாக்குதலால் 30 முதல் 50 சதவீதம் வரை மகசூல் இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, உரிய தருணத்தில் தேவையான பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு விவசாயிகள் பயனடையலாம்.

    அமெரிக்கன் படைப்புழு, தாய் அந்துப் பூச்சிகள் உள்ளதா என கண்காணிக்க, விதைத்தவுடன் இனக்கவர்ச்சி பொறிகள் எக்டருக்கு 5 எண்கள் வீதம் வைத்து கண்காணித்து பொருளாதார சேத நிலைக்கு அதிகமாகும் போது கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளலாம்.

    பொருளாதார சேத நிலையினை கடந்து அதிகரிக்கும் பட்சத்தில் விதைத்த 15 முதல் 20 நாட்களில், அசாடிராக்டின் 1500 பிபிஎம் 50மி.லி / 10 லிட்டர் நீர், குளோரன்ட்ரனிலிப்ரோல் 18.5 சதவீதம் எஸ்.சி 4 மி.லி / 10 லிட்டர் நீர் (அல்லது) புளுபென்டமைடு 480 எஸ்.சி 4 மி.லி / 10லிட்டர் நீர் வீதம் கலந்து கைத்தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும்.

    மேலும், விதைத்த 40 முதல் 45 நாட்களில் தாக்குதல் தென்பட்டால் இமாமெக்டின் பென்சோயேட் 5 சதவீதம் எஸ்.ஜி – 4 கிராம் / 10 லிட்டர் நீர் அல்லது ஸ்பைன்டோரம் 11.7 சதவீதம் எஸ்.சி 5 மிலி / 10லிட்டர் நீர் அல்லது நாவாலூரான் 10- இ.சி 15 மிலி / 10லிட்டர் நீர் அல்லது மெட்டாரைசியம் அனிசோபிலியே 80 கிராம்/ லிட்டர் நீர் வீதம் கலந்து கைத்தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும். 60-ம் நாள், தேவைப்பட்டால் தாக்குதல் இருக்கும் பட்சத்தில் மேற்காணும் மருந்துகளில் ஏதேனும் ஒன்றை சுழற்சி முறையில் மீண்டும் தெளிக்கலாம்.

    இந்த தொழில்நுட்பங்கள் அனைத்தையும், விவசாயிகள் அனைவரும் ஒருங்கிணைந்து கடைபிடித்து மக்காச்சோளப் பயிரில் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்தி, மக்காச்சோள விளைச்சலில், அதிக மகசூல் பெற்று பயனடையலாம் என வேளாண் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

    • 40 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
    • மக்காச்சோளம், ஏக்கருக்கு 45 மூட்டை வரை மகசூல் இருக்கும்.

    குடிமங்கலம் :

    உடுமலை பகுதிகளில் உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் ஒன்றியங்களில், பி.ஏ.பி., இரண்டாம் மண்டல பாசன நிலங்கள், அமராவதி பாசன நிலங்கள் மற்றும் மானாவாரி நிலங்களில் ஏறத்தாழ, 40 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

    உடுமலை பகுதிகளில் மக்காச்சோளம் அறுவடை வழக்கமாக டிசம்பர் தொடங்கி மார்ச் வரை நீடிக்கும்.நடப்பாண்டும் பயிர் வளர்ச்சி மற்றும் கதிர் பிடிக்கும் பருவத்தில் பெய்த கன மழையால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.அதோடு படைப்புழு தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் மக்காச்சோளம் சாகுபடி செய்த விவசாயிகள் பாதித்துள்ளனர்.

    தற்போது மழை குறைந்துள்ளதால் உடுமலை பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்ட மக்காச்சோளம் அறுவடை துவங்கியுள்ளது. வழக்கமாக மக்காச்சோளம், ஏக்கருக்கு 45 மூட்டை வரை மகசூல் இருக்கும்.படைப்புழு தாக்குதல், கன மழை காரணமாக தற்போது 25 குவிண்டால் மட்டுமே மகசூல் கிடைத்து வருகிறது. மகசூல் குறைந்துள்ள நிலையில் கூடுதல் விலை கிடைக்கும் என விவசாயிகள் எதிர்பார்த்திருந்த நிலையில் குவிண்டால், 2,400 ரூபாய் வரை மட்டுமே விற்று வருகிறது.

    இது குறித்து விவசாயிகள் கூறியதாவது :- கடந்த ஆண்டு மக்காச்சோளம் குவிண்டால் 2,800 ரூபாய் வரை விற்றதால் நடப்பாண்டு மக்காச்சோளம் சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டினர்.இதனால் சாகுபடி பரப்பு அதிகரித்தது.படைப்புழு தாக்குதல், கன மழை, இடு பொருட்கள் மற்றும் தொழிலாளர்களுக்கான கூலி உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால், சாகுபடி செலவு பல மடங்கு உயர்ந்துள்ளது.ஆனால் கொள்முதல் விலை கடந்த ஆண்டை விட தற்போது குறைந்துள்ளது. இதனால் மக்காச்சோளம் சாகுபடி விவசாயிகள் பாதித்துள்ளனர்.

    எனவே குறைந்த பட்ச ஆதார விலை நிர்ணயித்து அரசு கொள்முதல் செய்யவும், வியாபாரிகள் சிண்டிகேட் காரணமாக விலை குறைப்பை தவிர்க்கும் வகையில் ஒழுங்கு முறை விற்பனை கூடங்களில் ஏல வசதி செய்து தர வேண்டும்.வேளாண் வணிகத்துறை வாயிலாக கோழி, மாட்டுத்தீவன உற்பத்தி நிறுவனங்களுடன் பேச்சு நடத்தி கூடுதல் விலைக்கு உள்ளூர் மக்காச்சோளம் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.

    • காற்று வாயிலாக பெண் பூவிலிருந்து மகரந்த சேர்க்கை நடைபெற்று விதைகள் உற்பத்தியாகிறது.
    • பூக்கும் பருவத்தில், பெண் விதை வரிசையில் வரும், ஆண் பூக்களை அகற்ற வேண்டும்.

    குடிமங்கலம்:

    குடிமங்கலம் வட்டாரம் சோமவாரபட்டியில், விவசாயி பழனிச்சாமி தோட்டத்தில், வீரிய ஒட்டு ரக மக்காச்சோளம் - கோ.எச்.எம்., 6 - விதைப்பண்ணை அமைக்கப்பட்டுள்ளது. இதனை திருப்பூர் மாவட்ட வேளாண் துறை துணை இயக்குனர் சுருளியப்பன் ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    மக்காச்சோளம், கோ.எச்.எம்., - 6 வீரிய ஒட்டு ரக விதை உற்பத்தியில் ஆண் விதை, யு.எம்.ஐ., - 1230 மற்றும் பெண் விதை, யு.எம்.ஐ., 1200 விதைகள், 4:2 என்ற விகிதத்தில் வரிசை நடவு செய்யப்பட்டு, வயலைச்சுற்றி ஆண் விதை விதைக்கப்பட்டு பராமரிக்க வேண்டும்.

    பூக்கும் பருவத்தில், பெண் விதை வரிசையில் வரும், ஆண் பூக்களை அகற்ற வேண்டும். பின் ஆண் விதை வரிசையில் வரும் ஆண் பூக்களிலிருந்து வரும் மகரந்தமானது, காற்று வாயிலாக பெண் பூவிலிருந்து மகரந்த சேர்க்கை நடைபெற்று விதைகள் உற்பத்தியாகிறது.

    பின் பெண் விதை வரிசையிலிருந்து மட்டுமே, மக்காச்சோள கதிர்கள் அறுவடை செய்யப்பட்டு, இயந்திரங்கள் இல்லாமல் ஆள் வைத்து விதைகளை தனியாக பிரித்தெடுக்கப்பட்டு காய வைத்து சுத்தம் செய்யப்படுகிறது.

    இவ்வாறு சுத்தம் செய்யப்பட்ட விதைகளின் தரத்தினை உறுதி செய்திட மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு தரம் உறுதி செய்யப்படுகிறது. பின், விதைப்பைகளுக்கு சான்றட்டை பொருத்தப்பட்டு, சான்று விதைகளாக விவசாயிகளுக்கு வினியோகம் செய்யப்படுகிறது.

    இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் மக்காச்சோளம், கோ.எச்.எம்., 6 வீரிய ஒட்டு ரகமானது அடி சாம்பல் நோய்க்கு எதிர்ப்பு தன்மை கொண்டதும் ஏக்கருக்கு 3 டன் மகசூல் தரும் ரகமாகும்.

    மக்காச்சோளம் விதைப்பண்ணை ஆய்வின் போது, படைப்புழு தாக்குதலை ஒருங்கிணைந்த முறையில் கட்டுப்படுத்த வரப்பயிராக எள், சூரியகாந்தி பயிரினை, சாகுபடி செய்யவும் ஊடுபயிராக உளுந்து பயிர் விதைக்கவும் வேண்டும். மேலும் ஆண் பூச்சியினை கவர்ந்து அழிக்க பிரமோன் டிராப் பயன்படுத்தி, படைப்புழுவின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்திடவும், விளக்கு பொறி வைத்து அத்துப்பூச்சியினை கவர்ந்து அழித்து கட்டுப்படுத்திடவும் முடியும்.

    படைப்புழுவின் தாக்குதல் தெரிந்தால் அசடிராக்டின் மருந்து, மெட்டரைசியம் அனிசோபிலே பூஞ்சான மருந்தினை கைத்தெளிப்பான் கொண்டு மருந்து அடித்து கட்டுப்படுத்த வேண்டும்.

    பின் தாக்குதலாக 40 நாட்களுக்கு பின் தெரிய வந்தால், ரசாயன மருந்துகளான ஸ்பைனிடோரம் அல்லது குளோரான்டிரினிபுரோல் அல்லது புளுபென்டைமடு மருந்தினை பயிர் முழுவதும் நன்கு நனையும்படி தெளித்து கட்டுப்படுத்தலாம். விதை உற்பத்தியின் போது, விதைச்சான்று உதவி இயக்குனர், வேளாண் உதவி இயக்குனர் மற்றும் உதவி விதை அலுவலர்களை தொடர்பு கொள்ள வேண்டும்.உரிய தொழில் நுட்ப ஆலோசனைகள் பெற்று தரமான விதை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    மேலும், உளுந்து வம்பன் - 8 விதைப்பண்ணையையும் ஆய்வு செய்து பூக்கும் பருவத்தில் 2 சதவீதம் டி.ஏ.பி., கரைசல் அல்லது டி.என்.ஏ.யு., பல்ஸ் வெண்டர் தெளித்து, தரமான விதை உற்பத்தி செய்து வழங்க விவசாயிகளிடம் கேட்டுக்கொண்டார்.

    ஆய்வின் போது விதைச்சான்று உதவி இயக்குனர் மாரிமுத்து, குடிமங்கலம் வட்டார வேளாண் உதவி இயக்குனர் வசந்தா, விதைச்சான்று அலுவலர் ஹேமலதா, உதவி விதை அலுவலர் சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • நாமக்கல்லில் 1500 கோழிப்பண்ணைகள் உள்ளன. நாள் ஒன்றுக்கு சுமார் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு வெளி நாடுகளுக்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகின்றன.
    • கடந்த 2 ஆண்டுகளாக முட்டைகளுக்கான தீவன பொருட்கள் விலை ஏற்றத்தால் முட்டை தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

    நாமக்கல்:

    தமிழ்நாடு முட்டை கோழிப்பண்ணை யாளர்கள் மார்க்கெட்டிங் சொசைட்டி செயலாளர் முரளி, துணை தலைவர் பன்னீர்செல்வ ம்பொருளாளர் காளியண்ணன், சத்தியமூர்த்தி ஆகியோர் மத்திய மீன்பிடி, கால்நடை பராமரிப்பு , பால்வளம் மற்றும் தகவல் பராமரிப்பு அமைச்சுகத்தின் இணை மந்திரி எல். முருகனிடம் ஒரு மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

    நாமக்கல்லில் 1500 கோழிப்பண்ணைகள் உள்ளன. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு சுமார் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு சத்துணவிற்கும், தமிழகம் , வெளிமாநிலம் மற்றும் வெளி நாடுகளுக்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகின்றன.

    கடந்த 2 ஆண்டுகளாக முட்டைகளுக்கான தீவன பொருட்கள் விலை ஏற்றத்தால் முட்டை தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் சுமார் 25 சதவீத கோழிப்பண்ணைகள் இழப்பை எதிர்கொள்ள முடியாமல் கோழிப்பண்ணைகளை மூடி விட்டனர். இதே சூழல் தொடர்ந்து நீடித்தால் மீதமுள்ள கோழிப்பண்ணைகளும் மூடும் அபாயம் ஏற்படும்.

    தற்போது தீவன மூலப்பொருட்களில் முக்கியமாக மக்காச்சோளம் விலை உயர்ந்து கிலோ இப்போது ரூ 28 ஆக உள்ளது. மேலும் இப்போது போதிய மக்காச்சோளம் கிடைப்பதில்லை. தற்போது பெய்த கனமழையால் கர்நாடகா போன்ற மாநிலங்களில் பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோளம் பலத்த சேதமடைந்துள்ளது.

    இதனால் மக்காச்சோளம் தட்டுப்பாடு ஏற்பட்டு்ள்ளதால் கோழி தீவனம் தயாரிப்பு முடங்கி உள்ளன. எனவே வெளி நாடுகளில் இருந்து மரபணு ரீதியாக மாற்றப்பட்ட உடைந்த மக்காச்சோளத்தை இறக்குமதி செய்ய அனுமதி அளிக்க வேண்டும்.

    அவற்றை மத்திய அரசு சார்ந்த நிறுவனங்களாகிய எம்.எம்.டி.சி மற்றும் டிஜிஎப்டி மூலம் இறக்குமதி செய்து பண்ணையாளர்களுக்கு வழங்கி விவசாயம் சார்ந்து கோழிப்பண்ணை தொழிலை காப்பாற்ற வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது. 

    • இறவை பாசன நிலங்களிலும் மக்காச்சோளம் சாகுபடி மேற்கொள்ள விவசாயிகள் ஆயத்தமாகி வருகின்றனர்.
    • தொழில் நுட்பங்களை கடைபிடித்தால் படைப்புழு தாக்குதலிருந்து கட்டுப்படுத்தலாம்.

    குடிமங்கலம் :

    உடுமலை பகுதிகளில் மக்காச்சோளம் சாகுபடி பிரதானமாக உள்ளது. உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் வட்டாரத்தில் ஏறத்தாழ 60 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு வந்தது. படைப்புழு தாக்குதல், தரமற்ற விதை, சாகுபடி செலவு அதிகரித்துள்ள நிலையில் மக்காச்சோளத்திற்கு போதிய விலை கிடைக்காதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் மக்காச்சோளம் சாகுபடி பரப்பு குறைந்து வருகிறது.

    இந்நிலையில் பி.ஏ.பி., இரண்டாம் மண்டல பாசனத்திற்கு நீர் திறக்கப்பட உள்ள நிலையில் அப்பகுதிகளிலும் பருவ மழையை எதிர்பார்த்தும், இறவை பாசன நிலங்களிலும் மக்காச்சோளம் சாகுபடி மேற்கொள்ள விவசாயிகள் ஆயத்தமாகி வருகின்றனர். மக்காச்சோளம் சாகுபடி விவசாயிகளுக்கு படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்துவது குறித்து வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது.இது குறித்து உடுமலை வேளாண் உதவி இயக்குனர் தேவி கூறியதாவது:- மக்காச்சோளத்தில், அமெரிக்கன் படைப்புழுவை கட்டுப்படுத்த முன் ஏற்பாடாக ஏக்கருக்கு 100 கிலோ வேப்பம் புண்ணாக்கு, கடைசி உழவின் போது, நிலத்தில் இட்டு உழுது விட வேண்டும். இவ்வாறு செய்யும் போது நிலத்திலுள்ள தாய் அந்துப்பூச்சிகள் கூண்டுப்புழுவிலிருந்து வெளிவருவதில்லை.

    அடுத்து விதை நேர்த்தி அவசியமானதாகும்.விதையினை சையன்ட்ரானிபுரோல் 19.8 மற்றும் தயோ மீதாக்சோம் 19.8 மருந்தினை ஒரு கிலோ விதைக்கு 4 மில்லி மற்றும் 15 லிட்டர் நீர் கலந்து அரை மணி நேரம் நிலத்தில் உலர்த்தி பின் விதைகளை நிலத்தில் விதைக்க வேண்டும்.மேலும் வரப்பு ஓரத்தில் எள், சூரியகாந்தி, துவரை, தட்டை, உளுந்து, சோளம் ஆகிய தானிய பயிர்களை வரப்பு பயிர்களாக சாகுபடி செய்தால் அமெரிக்கன் படைப்புழுவை கட்டுப்படுத்தலாம்.இந்த தொழில் நுட்பங்களை கடைபிடித்தால் படைப்புழு தாக்குதலிருந்து கட்டுப்படுத்தலாம்.இவ்வாறு வேளாண் உதவி இயக்குனர் தெரிவித்தார்.

    • படைப்புழுக்களானது முட்டைப் பருவம் முதல் அந்துப்பூச்சி வரை 6 நிலைகளை உடையது.
    • கடைகளில் வாங்கப்பட்ட விதைகளில் பூஞ்சாணக்கொல்லி விதைநேர்த்தி மட்டுமே செய்யப்பட்டிருக்கும்.

    உடுமலை:

    உடுமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழைக்காலங்களில் அதிக அளவில் மானாவாரியில் மக்காச்சோளம் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. நடப்பு ஆண்டிலும் படைப்புழுக்களின் தாக்குதலை ஆரம்ப கட்டம் முதலே திட்டமிட்டு கட்டுப்படுத்துவது குறித்து வேளாண்மைத்துறையினர் கூறியதாவது:-

    படைப்புழுக்களானது முட்டைப் பருவம் முதல் அந்துப்பூச்சி வரை 6 நிலைகளை உடையது. தாய் அந்துப்பூச்சி இலைகளின் அடியில் 100 முதல் 200 முட்டைகள் வரை இடும். இவ்வாறு ஒவ்வொரு அந்துப்பூச்சியும் தன் வாழ்நாளில் 2 ஆயிரம் முட்டைகள் வரை இடும். இந்த முட்டைகளிலிருந்து வெளி வரும் இளம்புழுக்கள் இலைகளின் அடிப்பகுதியை சுரண்டி சேதம் உண்டாக்கும். அடுத்தடுத்த நிலைகளில் குருத்து முதல் கதிர் வரை சேதம் உண்டாக்கி மகசூல் இழப்பை உண்டாக்குகிறது.

    படைப்புழுக்களைக் கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த மேலாண்மை உத்திகளைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியமாகும். அதன்படி விதைப்புக்கு 20 நாட்களுக்கு முன், ஏக்கருக்கு 100 கிலோ வேப்பம்புண்ணாக்கு இட்டு உழவு செய்ய வேண்டும். இது மண்ணில் இருக்கும் கூட்டுப்புழுக்களின் மீது மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்கும். தப்பிப் பிழைத்த கூட்டுப் புழுக்களிலிருந்து வெளிவரும் அந்துப்பூச்சிகள் முட்டையிட முடியாத அளவுக்கு செயலற்றதாகவே இருக்கும். மேலும் ஒரு பகுதியிலுள்ள அனைத்து விவசாயிகளும் ஒருங்கிணைந்து ஒரே நேரத்தில் விதைப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

    கடைகளில் வாங்கப்பட்ட விதைகளில் பூஞ்சாணக்கொல்லி விதைநேர்த்தி மட்டுமே செய்யப்பட்டிருக்கும். இந்த விதைகளில் சையாண்டிரினில்புரோல் 19.8 எப்.எஸ். மற்றும் தயோமீதாக்சோம் 9.8 எப்.எஸ். என்ற கூட்டு மருந்தை ஒரு கிலோ விதைக்கு 4 மி.லி. என்ற அளவில் கலந்து விதைநேர்த்தி செய்து நிழலில் உலர்த்தி பின்னர் விதைக்க வேண்டும். ஊடுபயிராக வேலிமசால் படைப்புழுக்களால் விரும்பப்படாத திரவத்தை வெளியிடக்கூடிய வேலிமசாலை ஊடுபயிராகப் பயிரிடலாம்.

    விதை முளைத்த 2-ம் நாளிலிருந்தே அந்துப்பூச்சிகள் பயிர் சேதம் விளைவிக்கத் தொடங்கி விடுகிறது. எனவே விதைப்பு சமயத்திலேயே ஏக்கருக்கு 5 என்ற அளவில் இனக்கவர்ச்சிப்பொறிகளை வைக்க வேண்டும். இதன்மூலம் ஆண் அந்துப்பூச்சிகளைக் கவர்ந்து அழித்து அவற்றின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்தலாம். பயிர் உயரத்துக்கு ஏற்றாற்போல இனக்கவர்ச்சிப்பொறிகளின் உயரத்தையும் அதிகரிக்க வேண்டும். இவ்வாறு ஒருங்கிணைந்த மேலாண்மை முறைகளைக் கடைப்பிடிப்பதால் 30 முதல் 40 நாட்களில் பயிர் சேதத்தைக் கட்டுப்படுத்தலாம். அதன்பிறகும் பாதிப்பு அதிகமாக இருந்தால் (100 செடிகளுக்கு 10 செடிகளுக்கு மேல்) வேளாண்மைத்துறையினரின் ஆலோசனை பெற்று உரிய மருந்துகளைத் தெளிக்கலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • உள்ளூர் விளைச்சல் மிகவும் குறைந்து விட்டது.
    • வருங்காலத்தில் உள்ளூரில் மக்காச்சோள சாகுபடி படிப்படியாக குறைந்துவிடும் .

    திருப்பூர்,

    கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கோழிப்பண்ணைகள் அதிகம். கோழி தீவனத்துக்கு முக்கிய மூலப்பொருள் மக்காச்சோளம். கடந்த புரட்டாசி பட்டத்தில் குறைந்தளவு விவசாயிகள் மட்டுமே மக்காச்சோளம் சாகுபடி செய்தனர். மாசி, பங்குனி மாதங்களில் அறுவடை துவங்கிய போது கிலோ 20 ரூபாய்க்கு மக்காச்சோளம் கொள்முதல் செய்யப்பட்டது. அறுவடை முடியும் போதே, 25 ரூபாய் வரை விலை போனது.படைப்புழு தாக்குதல், உற்பத்தி செலவு அதிகரிப்பு போன்ற காரணங்களால் விவசாயிகள் சாகுபடி பரப்பை குறைத்து விட்டனர்.

    தற்போது உள்ளூர் விளைச்சல் மிகவும் குறைந்து விட்டது.எதிர்பாராத விதமாக தற்பொழுது விலை சரிவு ஏற்பட்டுள்ளது. இதற்கு கர்நாடகா, பீகார் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து மக்காச்சோளம் வரத்து அதிகரிப்பே காரணம்.விவசாயிகள் சிலர் கூறுகையில், உற்பத்தி செலவு கிலோவுக்கு 15 ரூபாய் ஆகிறது. விளைச்சல் சற்று குறைந்தாலும் 20 ரூபாய் அடக்க விலை ஆகிவிடுகிறது. விற்பனை விலை சாதகமாக இல்லை.இதே நிலை நீடித்தால் வருங்காலத்தில் உள்ளூரில் மக்காச்சோள சாகுபடி படிப்படியாக குறைந்துவிடும் என்றனர்.

    • விவசாயிகளுக்கு மக்காச்சோளப் பயிரில் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்துவது குறித்த பயிற்சி அளித்தனர்.
    • வேளாண்மைத் துறையினர் முறையான அறிவிப்பு செய்யாததால் ஒரு விவசாயி கூட கலந்து கொள்ளவில்லை.

    பல்லடம்,

    பல்லடம் அருகேயுள்ள கரைப்புதூர் ஊராட்சி அல்லாளபுரம் கிராமத்தில் மக்காச்சோள பயிர்களில் படைப்புழு தாக்குதலால் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதாக மாலை மலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இதனையடுத்து வேளாண்மைத்துறை அதிகாரிகள் அந்தப் பகுதியில் நேற்று விவசாயிகளுக்கு மக்காச்சோளப் பயிரில் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்துவது குறித்த பயிற்சி அளித்தனர்.

    இந்தப் பயிற்சி முகாமிற்கு பல்லடம் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) தலைவர் சண்முகசுந்தரம் தலைமை வகித்தார். பல்லடம் வேளாண்மை உதவி இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி, பல்லடம் ஊராட்சி ஒன்றியக்குழு துணைத் தலைவர் பாலசுப்ரமணியம், பல்லடம் நடமாடும் மண் பரிசோதனை அலுவலர் சங்கீதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி தொழில்நுட்ப மேலாளர் பாலாஜி வரவேற்றார். இந்த முகாமில் பொங்கலூர் வேளாண்மை அறிவியல் நிலைய உதவிப் பேராசிரியர் கவிதா, விவசாயிகளுக்கு படைப்புழு தாக்குதல் கட்டுப்படுத்துவது குறித்து கூறுகையில் ,மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த கோடை உழவு செய்தல் மூலம் மண்ணில் உள்ள காடா புழுக்களை அழிக்கலாம் .அனைத்து விவசாயிகளும் பருவத்தில் ஒரே சமயத்தில் விதைப்பு செய்யவேண்டும். விதைப்பதற்கு முன் கடைசி உழவின் போது ஏக்கருக்கு 100 கிலோ வேப்பம் புண்ணாக்கு இடவேண்டும். 1 கிலோ மக்காச்சோள விதைக்கு, 10 கிராம் 'பவேரியா பேஷியானா' எனும் நுண்ணுயிர் பூச்சிக்கொல்லி அல்லது, 10 கிராம் 'தயோமீதாக்சம்' 30 சதம் எப்.எஸ்.மருந்து கொண்டு விதை நேர்த்தி செய்யலாம். மக்காச்சோளபயிர் நெருக்கமாக இருந்தால் படைப்புழு வேகமாக பரவும் வாய்ப்பு உள்ளது. எனவே, வரிசைக்கு 60 செ.மீ.அளவும், பயிருக்கு பயிர் 25 செ.மீ. அளவு இடைவெளி விட்டு நட வேண்டும்.மேலும் மக்காச்சோளம் விதைக்கும் போது அதனுடன் வயல் ஓரங்களில் தட்டைப்பயிறு, ஆமணக்கு, சூரியகாந்தி ஆகியவற்றை விதைப்பதன் மூலம் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தலாம். இவ்வாறு அவர் விளக்கமளித்தார்.முன்னதாக சிறு, குறு விவசாயிகளுக்கான பட்டா மாறுதல், சொட்டுநீர் பாசன சிறப்பு முகாம் நடைபெற்றது. எனினும் இதற்காக வேளாண்மைத் துறையினர் முறையான அறிவிப்பு செய்யாததால் ஒரு விவசாயி கூட கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    ×