search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Working groups"

    • படைப்புழுக்களானது முட்டைப் பருவம் முதல் அந்துப்பூச்சி வரை 6 நிலைகளை உடையது.
    • கடைகளில் வாங்கப்பட்ட விதைகளில் பூஞ்சாணக்கொல்லி விதைநேர்த்தி மட்டுமே செய்யப்பட்டிருக்கும்.

    உடுமலை:

    உடுமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழைக்காலங்களில் அதிக அளவில் மானாவாரியில் மக்காச்சோளம் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. நடப்பு ஆண்டிலும் படைப்புழுக்களின் தாக்குதலை ஆரம்ப கட்டம் முதலே திட்டமிட்டு கட்டுப்படுத்துவது குறித்து வேளாண்மைத்துறையினர் கூறியதாவது:-

    படைப்புழுக்களானது முட்டைப் பருவம் முதல் அந்துப்பூச்சி வரை 6 நிலைகளை உடையது. தாய் அந்துப்பூச்சி இலைகளின் அடியில் 100 முதல் 200 முட்டைகள் வரை இடும். இவ்வாறு ஒவ்வொரு அந்துப்பூச்சியும் தன் வாழ்நாளில் 2 ஆயிரம் முட்டைகள் வரை இடும். இந்த முட்டைகளிலிருந்து வெளி வரும் இளம்புழுக்கள் இலைகளின் அடிப்பகுதியை சுரண்டி சேதம் உண்டாக்கும். அடுத்தடுத்த நிலைகளில் குருத்து முதல் கதிர் வரை சேதம் உண்டாக்கி மகசூல் இழப்பை உண்டாக்குகிறது.

    படைப்புழுக்களைக் கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த மேலாண்மை உத்திகளைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியமாகும். அதன்படி விதைப்புக்கு 20 நாட்களுக்கு முன், ஏக்கருக்கு 100 கிலோ வேப்பம்புண்ணாக்கு இட்டு உழவு செய்ய வேண்டும். இது மண்ணில் இருக்கும் கூட்டுப்புழுக்களின் மீது மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்கும். தப்பிப் பிழைத்த கூட்டுப் புழுக்களிலிருந்து வெளிவரும் அந்துப்பூச்சிகள் முட்டையிட முடியாத அளவுக்கு செயலற்றதாகவே இருக்கும். மேலும் ஒரு பகுதியிலுள்ள அனைத்து விவசாயிகளும் ஒருங்கிணைந்து ஒரே நேரத்தில் விதைப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

    கடைகளில் வாங்கப்பட்ட விதைகளில் பூஞ்சாணக்கொல்லி விதைநேர்த்தி மட்டுமே செய்யப்பட்டிருக்கும். இந்த விதைகளில் சையாண்டிரினில்புரோல் 19.8 எப்.எஸ். மற்றும் தயோமீதாக்சோம் 9.8 எப்.எஸ். என்ற கூட்டு மருந்தை ஒரு கிலோ விதைக்கு 4 மி.லி. என்ற அளவில் கலந்து விதைநேர்த்தி செய்து நிழலில் உலர்த்தி பின்னர் விதைக்க வேண்டும். ஊடுபயிராக வேலிமசால் படைப்புழுக்களால் விரும்பப்படாத திரவத்தை வெளியிடக்கூடிய வேலிமசாலை ஊடுபயிராகப் பயிரிடலாம்.

    விதை முளைத்த 2-ம் நாளிலிருந்தே அந்துப்பூச்சிகள் பயிர் சேதம் விளைவிக்கத் தொடங்கி விடுகிறது. எனவே விதைப்பு சமயத்திலேயே ஏக்கருக்கு 5 என்ற அளவில் இனக்கவர்ச்சிப்பொறிகளை வைக்க வேண்டும். இதன்மூலம் ஆண் அந்துப்பூச்சிகளைக் கவர்ந்து அழித்து அவற்றின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்தலாம். பயிர் உயரத்துக்கு ஏற்றாற்போல இனக்கவர்ச்சிப்பொறிகளின் உயரத்தையும் அதிகரிக்க வேண்டும். இவ்வாறு ஒருங்கிணைந்த மேலாண்மை முறைகளைக் கடைப்பிடிப்பதால் 30 முதல் 40 நாட்களில் பயிர் சேதத்தைக் கட்டுப்படுத்தலாம். அதன்பிறகும் பாதிப்பு அதிகமாக இருந்தால் (100 செடிகளுக்கு 10 செடிகளுக்கு மேல்) வேளாண்மைத்துறையினரின் ஆலோசனை பெற்று உரிய மருந்துகளைத் தெளிக்கலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×