search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி?  வேளாண் அதிகாரி விளக்கம்
    X

    கோப்புபடம். 

    மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி? வேளாண் அதிகாரி விளக்கம்

    • காற்று வாயிலாக பெண் பூவிலிருந்து மகரந்த சேர்க்கை நடைபெற்று விதைகள் உற்பத்தியாகிறது.
    • பூக்கும் பருவத்தில், பெண் விதை வரிசையில் வரும், ஆண் பூக்களை அகற்ற வேண்டும்.

    குடிமங்கலம்:

    குடிமங்கலம் வட்டாரம் சோமவாரபட்டியில், விவசாயி பழனிச்சாமி தோட்டத்தில், வீரிய ஒட்டு ரக மக்காச்சோளம் - கோ.எச்.எம்., 6 - விதைப்பண்ணை அமைக்கப்பட்டுள்ளது. இதனை திருப்பூர் மாவட்ட வேளாண் துறை துணை இயக்குனர் சுருளியப்பன் ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    மக்காச்சோளம், கோ.எச்.எம்., - 6 வீரிய ஒட்டு ரக விதை உற்பத்தியில் ஆண் விதை, யு.எம்.ஐ., - 1230 மற்றும் பெண் விதை, யு.எம்.ஐ., 1200 விதைகள், 4:2 என்ற விகிதத்தில் வரிசை நடவு செய்யப்பட்டு, வயலைச்சுற்றி ஆண் விதை விதைக்கப்பட்டு பராமரிக்க வேண்டும்.

    பூக்கும் பருவத்தில், பெண் விதை வரிசையில் வரும், ஆண் பூக்களை அகற்ற வேண்டும். பின் ஆண் விதை வரிசையில் வரும் ஆண் பூக்களிலிருந்து வரும் மகரந்தமானது, காற்று வாயிலாக பெண் பூவிலிருந்து மகரந்த சேர்க்கை நடைபெற்று விதைகள் உற்பத்தியாகிறது.

    பின் பெண் விதை வரிசையிலிருந்து மட்டுமே, மக்காச்சோள கதிர்கள் அறுவடை செய்யப்பட்டு, இயந்திரங்கள் இல்லாமல் ஆள் வைத்து விதைகளை தனியாக பிரித்தெடுக்கப்பட்டு காய வைத்து சுத்தம் செய்யப்படுகிறது.

    இவ்வாறு சுத்தம் செய்யப்பட்ட விதைகளின் தரத்தினை உறுதி செய்திட மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு தரம் உறுதி செய்யப்படுகிறது. பின், விதைப்பைகளுக்கு சான்றட்டை பொருத்தப்பட்டு, சான்று விதைகளாக விவசாயிகளுக்கு வினியோகம் செய்யப்படுகிறது.

    இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் மக்காச்சோளம், கோ.எச்.எம்., 6 வீரிய ஒட்டு ரகமானது அடி சாம்பல் நோய்க்கு எதிர்ப்பு தன்மை கொண்டதும் ஏக்கருக்கு 3 டன் மகசூல் தரும் ரகமாகும்.

    மக்காச்சோளம் விதைப்பண்ணை ஆய்வின் போது, படைப்புழு தாக்குதலை ஒருங்கிணைந்த முறையில் கட்டுப்படுத்த வரப்பயிராக எள், சூரியகாந்தி பயிரினை, சாகுபடி செய்யவும் ஊடுபயிராக உளுந்து பயிர் விதைக்கவும் வேண்டும். மேலும் ஆண் பூச்சியினை கவர்ந்து அழிக்க பிரமோன் டிராப் பயன்படுத்தி, படைப்புழுவின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்திடவும், விளக்கு பொறி வைத்து அத்துப்பூச்சியினை கவர்ந்து அழித்து கட்டுப்படுத்திடவும் முடியும்.

    படைப்புழுவின் தாக்குதல் தெரிந்தால் அசடிராக்டின் மருந்து, மெட்டரைசியம் அனிசோபிலே பூஞ்சான மருந்தினை கைத்தெளிப்பான் கொண்டு மருந்து அடித்து கட்டுப்படுத்த வேண்டும்.

    பின் தாக்குதலாக 40 நாட்களுக்கு பின் தெரிய வந்தால், ரசாயன மருந்துகளான ஸ்பைனிடோரம் அல்லது குளோரான்டிரினிபுரோல் அல்லது புளுபென்டைமடு மருந்தினை பயிர் முழுவதும் நன்கு நனையும்படி தெளித்து கட்டுப்படுத்தலாம். விதை உற்பத்தியின் போது, விதைச்சான்று உதவி இயக்குனர், வேளாண் உதவி இயக்குனர் மற்றும் உதவி விதை அலுவலர்களை தொடர்பு கொள்ள வேண்டும்.உரிய தொழில் நுட்ப ஆலோசனைகள் பெற்று தரமான விதை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    மேலும், உளுந்து வம்பன் - 8 விதைப்பண்ணையையும் ஆய்வு செய்து பூக்கும் பருவத்தில் 2 சதவீதம் டி.ஏ.பி., கரைசல் அல்லது டி.என்.ஏ.யு., பல்ஸ் வெண்டர் தெளித்து, தரமான விதை உற்பத்தி செய்து வழங்க விவசாயிகளிடம் கேட்டுக்கொண்டார்.

    ஆய்வின் போது விதைச்சான்று உதவி இயக்குனர் மாரிமுத்து, குடிமங்கலம் வட்டார வேளாண் உதவி இயக்குனர் வசந்தா, விதைச்சான்று அலுவலர் ஹேமலதா, உதவி விதை அலுவலர் சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    Next Story
    ×