search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Maize corn"

    • கடந்த வாரம் பரவலாக அனைத்து பகுதிகளிலும் விளைநிலங்களில் உழவு செய்யும் அளவுக்கு மழைப்பொழிவு இருந்தது.
    • இந்தாண்டு மண்டல பாசனத்துக்கு தண்ணீர் ஒரு சுற்றாக குறைக்கப்பட்டது.

    மடத்துக்குளம்:

    உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் வட்டாரங்களில் பி.ஏ.பி., மண்டல பாசனத்துக்கு பிரதான சாகுபடியாக மக்காச்சோளம் இருந்தது. தீவன உற்பத்திக்கு மக்காச்சோளம் தேவை அதிகமாக இருப்பதால் நல்ல விலையும் கிடைத்து வந்தது. வழக்கமாக ஆகஸ்டு மாதத்தில் மண்டல பாசனத்துக்கு திருமூர்த்தி அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படும்.

    அதையொட்டி நடவுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, பயிரின் வளர்ச்சி தருணத்தில் பருவ மழை பெய்யும். எனவே அந்த சீசனில் 40 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமாக மக்காச்சோளம் சாகுபடி செய்யப்படும். இந்தாண்டு மண்டல பாசனத்துக்கு தண்ணீர் ஒரு சுற்றாக குறைக்கப்பட்டது. மழையும் பெய்யவில்லை. இதனால் நான்காம் மண்டல ஆயக்கட்டு பகுதியில் விவசாயிகள் மக்காச்சோளம் நடவு செய்ய ஆர்வம் காட்டவில்லை. சிலர் மட்டும் உலர் தீவன தேவைக்காக மக்காச்சோளம் சாகுபடி செய்தனர். இந்நிலையில் கடந்த வாரம் பரவலாக அனைத்து பகுதிகளிலும் விளைநிலங்களில் உழவு செய்யும் அளவுக்கு மழைப்பொழிவு இருந்தது.

    இதையடுத்து பெரும்பாலான விவசாயிகள் பருவமழை கைகொடுக்கும் என்ற நம்பிக்கையில் மானாவாரியாக மக்காச்சோளம் நடவு செய்ய துவங்கியுள்ளனர்.

    இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    மக்காச்சோளம் 90 - 110 நாட்கள் வயதுடையது. பயிரின் வளர்ச்சித்தருணம் மற்றும் கதிர் பிடிக்கும் போது மழை பெய்தால் இறவை பாசனம் போல மானாவாரியிலும், விளைச்சல் கிடைக்க வாய்ப்புள்ளது. குறித்த நேரத்தில் மழை பெய்யாவிட்டால் பயிரின் வளர்ச்சி பாதித்து கதிர்கள் சரியாக பிடிக்காது. விளைச்சலும் ஏக்கருக்கு 100 கிலோ கொண்ட 10 மூட்டையாக குறைந்து விடும்.இருப்பினும் மக்காச்சோள பயிர்களை கால்நடைகளுக்கு உலர் தீவனமாக பயன்படுத்தலாம். வறட்சியால் தீவனத்துக்கு தட்டுப்பாடு நிலவுவதால் மானாவாரியாக மக்காச்சோளம் சாகுபடி செய்ய ஆர்வம் காட்டுகிறோம் என்றனர்.  

    • தமிழகத்தில் பெரம்பலூர்,சேலம், திண்டுக்கல், மதுரை, திருப்பூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் அதிக அளவில் பயிரிடப்படுகிறது.
    • விவசாயிகள் மேற்கூறிய ஆலோசனையின் அடிப்படையில் சந்தை முடிவுகளை எடுக்குமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

    உடுமலை:

    இந்தியாவில் கர்நாடகா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, பீகார், தெலுங்கானா, ஆந்திரா ஆகிய மாநிலங்கள் மக்காச்சோளத்தை அதிக அளவில் பயிரிடுகின்றன. நம் நாடு 2020-21ம் ஆண்டு 3.43மில்லியன் மெட்ரிக் டன் மக்காச்சோளத்தை ஏற்றுமதி செய்துள்ளது. தமிழகத்தில் 2020-21ம் ஆண்டில் 4 லட்சம் எக்டர் பரப்பில் 25.64 லட்சம் டன்கள் மக்காச்சோளம் உற்பத்தி செய்துள்ளது. தமிழகத்தில் பெரம்பலூர்,சேலம், திண்டுக்கல், மதுரை, திருப்பூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் அதிக அளவில் பயிரிடப்படுகிறது.

    தமிழகத்திற்கு மக்காச்சோளம் வரத்தானது ஆந்திரா, கர்நாடகா, பீகார் ஆகிய மாநிலங்களில் இருந்து வருகிறது. இந்த 3 மாநிலங்கள் தமிழகத்தின் மக்காச்சோள தேவையை 30 சதவீதம் பூர்த்தி செய்கின்றன.கோழி, கால்நடை தீவனத்திற்கான ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு தேவைகள் அதிகரிப்பதன் காரணமாக உள்நாட்டு சந்தையில் சமீபகாலமாக விலை அதிகரித்து வருகிறது.

    வேளாண் பல்கலைக்கழகம் விலை முன்னறிவிப்பு திட்டமானது கடந்த 27 ஆண்டுகளாக உடுமலைப்பேட்டை ஒழுங்குமுறை கூடத்தில் நிலவிய மக்காச்சோளம் விலை மற்றும் சந்தை ஆய்வுகளின் படி தரமான மக்காச்சோளத்தின் பண்ணை விலையானது மார்ச் முதல் ஏப்ரல் வரை குவிண்டாலுக்கு 2000 ரூபாய் முதல் 2200 ரூபாய் ஆக இருக்கும். விவசாயிகள் மேற்கூறிய ஆலோசனையின் அடிப்படையில் சந்தை முடிவுகளை எடுக்குமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.மேலும், விபரங்களுக்கு 0422- 2431405/ 243278 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • காற்று வாயிலாக பெண் பூவிலிருந்து மகரந்த சேர்க்கை நடைபெற்று விதைகள் உற்பத்தியாகிறது.
    • பூக்கும் பருவத்தில், பெண் விதை வரிசையில் வரும், ஆண் பூக்களை அகற்ற வேண்டும்.

    குடிமங்கலம்:

    குடிமங்கலம் வட்டாரம் சோமவாரபட்டியில், விவசாயி பழனிச்சாமி தோட்டத்தில், வீரிய ஒட்டு ரக மக்காச்சோளம் - கோ.எச்.எம்., 6 - விதைப்பண்ணை அமைக்கப்பட்டுள்ளது. இதனை திருப்பூர் மாவட்ட வேளாண் துறை துணை இயக்குனர் சுருளியப்பன் ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    மக்காச்சோளம், கோ.எச்.எம்., - 6 வீரிய ஒட்டு ரக விதை உற்பத்தியில் ஆண் விதை, யு.எம்.ஐ., - 1230 மற்றும் பெண் விதை, யு.எம்.ஐ., 1200 விதைகள், 4:2 என்ற விகிதத்தில் வரிசை நடவு செய்யப்பட்டு, வயலைச்சுற்றி ஆண் விதை விதைக்கப்பட்டு பராமரிக்க வேண்டும்.

    பூக்கும் பருவத்தில், பெண் விதை வரிசையில் வரும், ஆண் பூக்களை அகற்ற வேண்டும். பின் ஆண் விதை வரிசையில் வரும் ஆண் பூக்களிலிருந்து வரும் மகரந்தமானது, காற்று வாயிலாக பெண் பூவிலிருந்து மகரந்த சேர்க்கை நடைபெற்று விதைகள் உற்பத்தியாகிறது.

    பின் பெண் விதை வரிசையிலிருந்து மட்டுமே, மக்காச்சோள கதிர்கள் அறுவடை செய்யப்பட்டு, இயந்திரங்கள் இல்லாமல் ஆள் வைத்து விதைகளை தனியாக பிரித்தெடுக்கப்பட்டு காய வைத்து சுத்தம் செய்யப்படுகிறது.

    இவ்வாறு சுத்தம் செய்யப்பட்ட விதைகளின் தரத்தினை உறுதி செய்திட மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு தரம் உறுதி செய்யப்படுகிறது. பின், விதைப்பைகளுக்கு சான்றட்டை பொருத்தப்பட்டு, சான்று விதைகளாக விவசாயிகளுக்கு வினியோகம் செய்யப்படுகிறது.

    இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் மக்காச்சோளம், கோ.எச்.எம்., 6 வீரிய ஒட்டு ரகமானது அடி சாம்பல் நோய்க்கு எதிர்ப்பு தன்மை கொண்டதும் ஏக்கருக்கு 3 டன் மகசூல் தரும் ரகமாகும்.

    மக்காச்சோளம் விதைப்பண்ணை ஆய்வின் போது, படைப்புழு தாக்குதலை ஒருங்கிணைந்த முறையில் கட்டுப்படுத்த வரப்பயிராக எள், சூரியகாந்தி பயிரினை, சாகுபடி செய்யவும் ஊடுபயிராக உளுந்து பயிர் விதைக்கவும் வேண்டும். மேலும் ஆண் பூச்சியினை கவர்ந்து அழிக்க பிரமோன் டிராப் பயன்படுத்தி, படைப்புழுவின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்திடவும், விளக்கு பொறி வைத்து அத்துப்பூச்சியினை கவர்ந்து அழித்து கட்டுப்படுத்திடவும் முடியும்.

    படைப்புழுவின் தாக்குதல் தெரிந்தால் அசடிராக்டின் மருந்து, மெட்டரைசியம் அனிசோபிலே பூஞ்சான மருந்தினை கைத்தெளிப்பான் கொண்டு மருந்து அடித்து கட்டுப்படுத்த வேண்டும்.

    பின் தாக்குதலாக 40 நாட்களுக்கு பின் தெரிய வந்தால், ரசாயன மருந்துகளான ஸ்பைனிடோரம் அல்லது குளோரான்டிரினிபுரோல் அல்லது புளுபென்டைமடு மருந்தினை பயிர் முழுவதும் நன்கு நனையும்படி தெளித்து கட்டுப்படுத்தலாம். விதை உற்பத்தியின் போது, விதைச்சான்று உதவி இயக்குனர், வேளாண் உதவி இயக்குனர் மற்றும் உதவி விதை அலுவலர்களை தொடர்பு கொள்ள வேண்டும்.உரிய தொழில் நுட்ப ஆலோசனைகள் பெற்று தரமான விதை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    மேலும், உளுந்து வம்பன் - 8 விதைப்பண்ணையையும் ஆய்வு செய்து பூக்கும் பருவத்தில் 2 சதவீதம் டி.ஏ.பி., கரைசல் அல்லது டி.என்.ஏ.யு., பல்ஸ் வெண்டர் தெளித்து, தரமான விதை உற்பத்தி செய்து வழங்க விவசாயிகளிடம் கேட்டுக்கொண்டார்.

    ஆய்வின் போது விதைச்சான்று உதவி இயக்குனர் மாரிமுத்து, குடிமங்கலம் வட்டார வேளாண் உதவி இயக்குனர் வசந்தா, விதைச்சான்று அலுவலர் ஹேமலதா, உதவி விதை அலுவலர் சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    ×