search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "படைப்புழு"

    • இந்த புழு தாக்குதலால், மக்காச்சோளம் மட்டுமின்றி பிற பயிர்களையும் பாதிக்கும் வாய்ப்புள்ளது.
    • புழுவின் இறுதிப்பகுதியில் சதுர வடிவிலான நான்கு வெண்ணிறப்புள்ளிகளும் தென்படும்.

    உடுமலை:

    படைப்புழு தாக்குதலால், மக்காச்சோளம் பாதிக்கப்படுவதை கட்டுப்படுத்த, பயிர் மேலாண்மை முறைகளை கடைப்பிடிக்க வேளாண்துறை அறிவுறுத்தியுள்ளது. படைப்புழு தாக்குதலால் மகசூல் 50 சதவீதத்துக்கும் மேல் குறையும் வாய்ப்புள்ளது. இந்த புழு தாக்குதலால், மக்காச்சோளம் மட்டுமின்றி பிற பயிர்களையும் பாதிக்கும் வாய்ப்புள்ளது. படைப்புழு ஆறு நிலைகளை கொண்டது. இளம்புழுப்பருவம் கருப்புத்தலையுடன் பச்சை நிறத்தில் காணப்படும். ஆறாம் நிலையில் உள்ள புழுவின் தலைப்பகுதியில் வெண்ணிறக்கோடுகளும், புழுவின் இறுதிப்பகுதியில் சதுர வடிவிலான நான்கு வெண்ணிறப்புள்ளிகளும் தென்படும்.புழுக்கள் வெயில் அதிகமாக இருக்கும் போது இலையின் அடிப்பகுதியில் சென்று மறைந்து கொண்டு பாதிப்பை உண்டாக்கும். தாய் அந்துப்பூச்சி தன் வாழ்நாளில் 1,500 முதல் 2,000 முட்டைகளை குவியலாக இடுகிறது. பெரும்பாலும் இலையின் அடிப்பகுதியில் இடும். முட்டையில் இருந்து வெளிவரும் புழுக்கள், இலையின் அடிப்பகுதியை சுரண்டி உட்கொள்ளும். இளம்புழுக்கள் நூலிழைகளை உருவாக்கி அதன் வாயிலாக காற்றின் திசையில் ஒரு செடியில் இருந்து மற்றொரு செடிக்கு செல்லும். இளம் செடிகளில் குருத்து மற்றும் முதிர்ந்த செடியில் கதிரின் நூலிழைகளையும், நடு மற்றும் காம்பு பகுதிகளையும் அதிகம் சேதப்படுத்தக்கூடியது. இரவு நேரங்களில் அதிகமாக சேதத்தை விளைவிக்கும்.

    இதுகுறித்து வேளாண்மை உதவி இயக்குனர் நாக பசுபதி கூறியதாவது:-

    படைப்புழுவினை கட்டுப்படுத்தும் முறைகளை விவசாயிகள் பின்பற்ற வேண்டும். உழவு செய்த பின், கடைசி உழவில், 100 கிலோ வேப்பம் புண்ணாக்கை ஒரு ஏக்கருக்கு இட வேண்டும். ஒரு கிலோ விதைக்கு 4 மி.லி., சையாண்டரினிலிபுரோல் - 19.8 மற்றும் தியோமெத்தாக்சம் - 19.8 மருந்துடன் கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும். ஊடு பயிர், வரப்புப் பயிராக தட்டை பயறு, எள், சூரியகாந்தி, துவரை பயறுகளை சாகுபடி செய்ய வேண்டும். தாய் அந்து பூச்சிகளை கண்காணித்து கட்டுப்படுத்த ஒரு ஏக்கருக்கு ஐந்து இனக்கவர்ச்சி பொறிகளை நிலத்தில் நிறுவ வேண்டும். பயிரின் 15 முதல் 20 நாட்கள் வளர்ச்சி நிலையில் குளோராண்ரடினிலிபுரோல் 18.5 எஸ்.சி., அல்லது புளுபெண்டமைட் 480 எஸ்.சி., பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தலாம். பயிரின் 35 முதல் 45 நாட்கள் வளர்ச்சி நிலையில் மெட்டாரைசியும், அணி சோபிளே என்ற பூச்சிகளை தாக்கும் பூஞ்சையை ஏக்கருக்கு ஒரு கிலோ என்ற அளவில் பயன்படுத்த வேண்டும். பிறகு எமாமெட்டின் பென்சோயாட் அல்லது நல்லூரான் அல்லது ஸ்பைனிடோரம் போன்ற பூச்சிக்கொல்லி மருந்துகளை தேவைக்கு ஏற்ப பயன்படுத்தலாம்.காலை அல்லது மாலையில் மட்டும் ஒட்டு பசை கலந்து தெளிக்க வேண்டும். பரிந்துரைக்கப்பட்ட அளவைவிட அதிகமாகவும், ஒரு முறை தெளித்த மருந்தை மறுமுறை பயன்படுத்தக்கூடாது. கைத்தெளிப்பான் அல்லது பேட்டரி கைத்தெளிப்பான்களை கொண்டு செடியின் குருத்து பகுதியில் நன்கு நனையும் படி தெளிக்க வேண்டும். மேலும் கூடுதல் விவரங்களுக்கு உதவி வேளாண் அலுவலர்கள், தெற்கு வட்டார வேளாண் விரிவாக்க மையத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

    • காரிப் பருவத்தில் பயிர் செய்யப்பட்ட 1500 முதல் 2000 ஹெக்டர் மக்காச்சோளப்யிர்கள் அறுவடை நிலையில் உள்ளது.
    • ஒவ்வொரு 10 வரிசைக்கும் 75 செ.மீ. இடைவெளி விட்டு நடவு செய்தல், ஒரு ஏக்கருக்கு 1 எண் விளக்கு பொறி வைத்து தாய் அந்துப்பூச்சிகளின் நடமாட்டத்தை கண்காணித்தல் உள்ளிட்டவைகள் அறிவுறுத்தப்பட்டது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி வட்டாரத்தில் நடப்பு ஆண்டில் சுமார் 2300 ஹெக்டர் பரப்பளவில் மக்காச்சேளாம் பயிரிடப்பட்டுள்ளது. காரிப் பருவத்தில் பயிர் செய்யப்பட்ட 1500 முதல் 2000 ஹெக்டர் மக்காச்சோளப்யிர்கள் அறுவடை நிலையில் உள்ளது.

    தற்போது ராபி பருவத்தில் பயிர் செய்யப்பட்ட சுமார் 200 முதல் 250 ஹெக்டர் பரப்பில் மக்காச்சோளம் பயிர்கள் வளர்ச்சி நிலையில் உள்ளது. இப்பயிரில் படைப்புழு தாக்குதல் காணப்படுகிறதா என மரவள்ளி மற்றும் ஆமணக்கு ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானி ரவிச்சந்திரன், தரக்கட்டுப்பாட்டு சேலம் வேளாண்மை உதவி இயக்குநர் கவிதா, வாழப்பாடி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் மணிமேகாலாதேவி, மற்றும் துணை, உதவி வேளாண்மை அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது மக்காச்சோளம் பயிரிடபட்ட விவசாயிகளை சந்தித்து மக்காச்சோளம்வ ழிமுறைகளை பின்பற்றிட படைப்புழு கட்டுப்படுத்துவது குறித்து அறிவுறுத்தப்பட்டது. ஒருங்கிணைந்த மேலாண்மை முறைகளான ஆழ கோடை உழவு செய்து கூட்டுப்புழுவை அழித்தல், அடியுரமாக வேப்பம் புண்ணாக்கு இடுதல், விதை நேர்த்தி செய்து விதைத்தல், ஒவ்வொரு 10 வரிசைக்கும் 75 செ.மீ. இடைவெளி விட்டு நடவு செய்தல், ஒரு ஏக்கருக்கு 1 எண் விளக்கு பொறி வைத்து தாய் அந்துப்பூச்சிகளின் நடமாட்டத்தை கண்காணித்தல் உள்ளிட்டவைகள் அறிவுறுத்தப்பட்டது. இதேபோல சேலம் மாவட்டம் முழுவதும் ஆய்வுகள் நடந்து வருகின்றன.

    • காற்று வாயிலாக பெண் பூவிலிருந்து மகரந்த சேர்க்கை நடைபெற்று விதைகள் உற்பத்தியாகிறது.
    • பூக்கும் பருவத்தில், பெண் விதை வரிசையில் வரும், ஆண் பூக்களை அகற்ற வேண்டும்.

    குடிமங்கலம்:

    குடிமங்கலம் வட்டாரம் சோமவாரபட்டியில், விவசாயி பழனிச்சாமி தோட்டத்தில், வீரிய ஒட்டு ரக மக்காச்சோளம் - கோ.எச்.எம்., 6 - விதைப்பண்ணை அமைக்கப்பட்டுள்ளது. இதனை திருப்பூர் மாவட்ட வேளாண் துறை துணை இயக்குனர் சுருளியப்பன் ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    மக்காச்சோளம், கோ.எச்.எம்., - 6 வீரிய ஒட்டு ரக விதை உற்பத்தியில் ஆண் விதை, யு.எம்.ஐ., - 1230 மற்றும் பெண் விதை, யு.எம்.ஐ., 1200 விதைகள், 4:2 என்ற விகிதத்தில் வரிசை நடவு செய்யப்பட்டு, வயலைச்சுற்றி ஆண் விதை விதைக்கப்பட்டு பராமரிக்க வேண்டும்.

    பூக்கும் பருவத்தில், பெண் விதை வரிசையில் வரும், ஆண் பூக்களை அகற்ற வேண்டும். பின் ஆண் விதை வரிசையில் வரும் ஆண் பூக்களிலிருந்து வரும் மகரந்தமானது, காற்று வாயிலாக பெண் பூவிலிருந்து மகரந்த சேர்க்கை நடைபெற்று விதைகள் உற்பத்தியாகிறது.

    பின் பெண் விதை வரிசையிலிருந்து மட்டுமே, மக்காச்சோள கதிர்கள் அறுவடை செய்யப்பட்டு, இயந்திரங்கள் இல்லாமல் ஆள் வைத்து விதைகளை தனியாக பிரித்தெடுக்கப்பட்டு காய வைத்து சுத்தம் செய்யப்படுகிறது.

    இவ்வாறு சுத்தம் செய்யப்பட்ட விதைகளின் தரத்தினை உறுதி செய்திட மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு தரம் உறுதி செய்யப்படுகிறது. பின், விதைப்பைகளுக்கு சான்றட்டை பொருத்தப்பட்டு, சான்று விதைகளாக விவசாயிகளுக்கு வினியோகம் செய்யப்படுகிறது.

    இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் மக்காச்சோளம், கோ.எச்.எம்., 6 வீரிய ஒட்டு ரகமானது அடி சாம்பல் நோய்க்கு எதிர்ப்பு தன்மை கொண்டதும் ஏக்கருக்கு 3 டன் மகசூல் தரும் ரகமாகும்.

    மக்காச்சோளம் விதைப்பண்ணை ஆய்வின் போது, படைப்புழு தாக்குதலை ஒருங்கிணைந்த முறையில் கட்டுப்படுத்த வரப்பயிராக எள், சூரியகாந்தி பயிரினை, சாகுபடி செய்யவும் ஊடுபயிராக உளுந்து பயிர் விதைக்கவும் வேண்டும். மேலும் ஆண் பூச்சியினை கவர்ந்து அழிக்க பிரமோன் டிராப் பயன்படுத்தி, படைப்புழுவின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்திடவும், விளக்கு பொறி வைத்து அத்துப்பூச்சியினை கவர்ந்து அழித்து கட்டுப்படுத்திடவும் முடியும்.

    படைப்புழுவின் தாக்குதல் தெரிந்தால் அசடிராக்டின் மருந்து, மெட்டரைசியம் அனிசோபிலே பூஞ்சான மருந்தினை கைத்தெளிப்பான் கொண்டு மருந்து அடித்து கட்டுப்படுத்த வேண்டும்.

    பின் தாக்குதலாக 40 நாட்களுக்கு பின் தெரிய வந்தால், ரசாயன மருந்துகளான ஸ்பைனிடோரம் அல்லது குளோரான்டிரினிபுரோல் அல்லது புளுபென்டைமடு மருந்தினை பயிர் முழுவதும் நன்கு நனையும்படி தெளித்து கட்டுப்படுத்தலாம். விதை உற்பத்தியின் போது, விதைச்சான்று உதவி இயக்குனர், வேளாண் உதவி இயக்குனர் மற்றும் உதவி விதை அலுவலர்களை தொடர்பு கொள்ள வேண்டும்.உரிய தொழில் நுட்ப ஆலோசனைகள் பெற்று தரமான விதை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    மேலும், உளுந்து வம்பன் - 8 விதைப்பண்ணையையும் ஆய்வு செய்து பூக்கும் பருவத்தில் 2 சதவீதம் டி.ஏ.பி., கரைசல் அல்லது டி.என்.ஏ.யு., பல்ஸ் வெண்டர் தெளித்து, தரமான விதை உற்பத்தி செய்து வழங்க விவசாயிகளிடம் கேட்டுக்கொண்டார்.

    ஆய்வின் போது விதைச்சான்று உதவி இயக்குனர் மாரிமுத்து, குடிமங்கலம் வட்டார வேளாண் உதவி இயக்குனர் வசந்தா, விதைச்சான்று அலுவலர் ஹேமலதா, உதவி விதை அலுவலர் சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • விவசாயிகளுக்கு மக்காச்சோளப் பயிரில் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்துவது குறித்த பயிற்சி அளித்தனர்.
    • வேளாண்மைத் துறையினர் முறையான அறிவிப்பு செய்யாததால் ஒரு விவசாயி கூட கலந்து கொள்ளவில்லை.

    பல்லடம்,

    பல்லடம் அருகேயுள்ள கரைப்புதூர் ஊராட்சி அல்லாளபுரம் கிராமத்தில் மக்காச்சோள பயிர்களில் படைப்புழு தாக்குதலால் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதாக மாலை மலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இதனையடுத்து வேளாண்மைத்துறை அதிகாரிகள் அந்தப் பகுதியில் நேற்று விவசாயிகளுக்கு மக்காச்சோளப் பயிரில் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்துவது குறித்த பயிற்சி அளித்தனர்.

    இந்தப் பயிற்சி முகாமிற்கு பல்லடம் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) தலைவர் சண்முகசுந்தரம் தலைமை வகித்தார். பல்லடம் வேளாண்மை உதவி இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி, பல்லடம் ஊராட்சி ஒன்றியக்குழு துணைத் தலைவர் பாலசுப்ரமணியம், பல்லடம் நடமாடும் மண் பரிசோதனை அலுவலர் சங்கீதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி தொழில்நுட்ப மேலாளர் பாலாஜி வரவேற்றார். இந்த முகாமில் பொங்கலூர் வேளாண்மை அறிவியல் நிலைய உதவிப் பேராசிரியர் கவிதா, விவசாயிகளுக்கு படைப்புழு தாக்குதல் கட்டுப்படுத்துவது குறித்து கூறுகையில் ,மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த கோடை உழவு செய்தல் மூலம் மண்ணில் உள்ள காடா புழுக்களை அழிக்கலாம் .அனைத்து விவசாயிகளும் பருவத்தில் ஒரே சமயத்தில் விதைப்பு செய்யவேண்டும். விதைப்பதற்கு முன் கடைசி உழவின் போது ஏக்கருக்கு 100 கிலோ வேப்பம் புண்ணாக்கு இடவேண்டும். 1 கிலோ மக்காச்சோள விதைக்கு, 10 கிராம் 'பவேரியா பேஷியானா' எனும் நுண்ணுயிர் பூச்சிக்கொல்லி அல்லது, 10 கிராம் 'தயோமீதாக்சம்' 30 சதம் எப்.எஸ்.மருந்து கொண்டு விதை நேர்த்தி செய்யலாம். மக்காச்சோளபயிர் நெருக்கமாக இருந்தால் படைப்புழு வேகமாக பரவும் வாய்ப்பு உள்ளது. எனவே, வரிசைக்கு 60 செ.மீ.அளவும், பயிருக்கு பயிர் 25 செ.மீ. அளவு இடைவெளி விட்டு நட வேண்டும்.மேலும் மக்காச்சோளம் விதைக்கும் போது அதனுடன் வயல் ஓரங்களில் தட்டைப்பயிறு, ஆமணக்கு, சூரியகாந்தி ஆகியவற்றை விதைப்பதன் மூலம் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தலாம். இவ்வாறு அவர் விளக்கமளித்தார்.முன்னதாக சிறு, குறு விவசாயிகளுக்கான பட்டா மாறுதல், சொட்டுநீர் பாசன சிறப்பு முகாம் நடைபெற்றது. எனினும் இதற்காக வேளாண்மைத் துறையினர் முறையான அறிவிப்பு செய்யாததால் ஒரு விவசாயி கூட கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    ×