search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண் குழந்தை"

    • கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி உமேஷ் யாதவ் - தன்யா தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்தது.
    • குழந்தைக்கு குணார் என்று பெயர் சூட்டியுள்ளனர்.

    இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக உமேஷ் யாதவ் விளையாடி வருகிறார். இவருக்கு இன்று அழகான பெண் குழந்தை பிறந்துள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    கடந்த 2013-ம் ஆண்டு மே 29-ம் தேதி உமேஷ் யாதவ் - தன்யா வத்வாவுக்கு திருமணம் நடந்தது. கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி இந்த தம்பதியினருக்கு முதலாவதாக பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு குணார் என்று பெயர் சூட்டியுள்ளனர்.


    இந்த நிலையில், சர்வதேச மகளிர் தினமான இன்று உமேஷ் யாதவ் - தன்யா தம்பதிக்கு 2-வதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. இது குறித்து உமேஷ் யாதவ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


    மகளிர் தின நாளில் உமேஷ் யாதவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ள நிலையில் அனைவரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3- வது டெஸ்ட் போட்டியில் விளையாடி 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கடலூர் அருகே பச்சிளம் பெண் குழந்தை திடீரென இறந்தது.
    • சம்பவத்தன்று வீட்டில் அக்குழந்தை மூச்சு இல்லாமல் இருந்து வந்தது

    கடலூர்:

    கடலூர் அருகே பச்சிளம் பெண் குழந்தை திடீரென இறந்தது. கடலூர் அடுத்த ரெட்டி ச்சாவடி செல்லஞ்சேரியை சேர்ந்தவர் சுமன் (வயது 30). இவரது மனைவி மலர். இவர்களுக்கு கடந்த 14 நாட்களுக்கு முன்பு அழகான பெண் குழந்தை பிறந்தது.   சம்பவத்தன்று வீட்டில் அக்குழந்தை மூச்சு இல்லாமல் இருந்து வந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் உடனடியாக பெண் குழந்தையை மீட்டு கரிக்கலாம்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய த்திற்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.   ஆனால் குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள். தகவல் அறிந்த ரெட்டிச்சாவடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்த 14 நாளான பெண் குழந்தையை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ரெட்டிச்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • குழந்தைகளிடம் இதமாகப் பேசி பிரச்சனையைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
    • தங்கள் பிரச்சனையைச் சூசகமாக வெளிப்படுத்துவார்கள்.

    இந்தியாவில் ஒரு மணி நேரத்திற்கு குறைந்தபட்சம் 4 குழந்தைகள் பாலியல் ரீதியிலான துன்புறுத்தலுக்கு ஆளாகிக் கொண்டிருக்கின்றனர். இந்த எண்ணிக்கையின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறதே ஒழியக் குறைந்தபாடில்லை. பச்சிளம் குழந்தை முதல் வளர்ந்த குழந்தைகள் வரை பலர் இந்த அத்துமீறல்களால் பெரிதும் பாதிப்படைகின்றனர். இனி பெற்றோர்கள் விழித்து உஷாராகிவிட வேண்டும். அந்த வகையில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு பாலியல் ரீதியான பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்க என்னென்ன வழிமுறைகளைப் பின்பற்றலாம் என்று கீழே பார்க்கலாம்.

    வீடு சார்ந்த இடத்தில் குழந்தைக்கு எந்த அநீதியும் நிகழாமல் பாதுகாப்பது பெற்றோர்களாகிய உங்கள் பொறுப்பு. அதே சமயத்தில் குழந்தைகள் எந்தெந்த இடத்திற்குத் தனியாகச் செல்கின்றார்களோ அங்கு எல்லாம் நம்பகத்துக்குரிய குறிப்பிட்ட நபரின் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

    நடவடிக்கையில் பெரிய மாற்றம் தெரியும்.

    உற்சாகம் குறைந்து சோர்வாகக் காணப்படுவார்கள்.

    யாருடனும் பேசிப் பழகி, சிரிக்க மாட்டார்கள்.

    யாராவது குறிப்பிட்ட நபரைக் கண்டால் பயப்படுவார்கள்.

    எப்போதும் தனிமையில் அமர்ந்து ஏதாவது யோசனையில் ஆழ்ந்து இருப்பார்கள்.

    படிப்பில் முன்பு இருந்த கவனம் குறைந்து இருக்கும்.

    விளையாட்டு,இசை ,நடனம் போன்ற எதிலுமே ஆர்வம் இருக்காது.

    சில சமயம் பள்ளிக்குச் செல்ல மறுப்பார்கள்.

    சரியாகத் தூங்க மாட்டார்கள். தேவையில்லாத கனவுகள் தோன்றும்.

    அவர்கள் தங்கள் பிரச்சனையைச் சூசகமாக வெளிப்படுத்துவார்கள். நேரடியாகச் சொல்லத் தயங்குவார்கள்.உதாரணமாகப் படம் வரைந்து வெளிப்படுத்துவார்கள். இல்லை வேறு ஏதாவது குறிப்புத் தெரியும்.

    இப்போது இந்த சூழலில் பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும்?

    குழந்தைகளிடம் இதமாகப் பேசி பிரச்சனையைத் தெரிந்து கொள்ள வேண்டும். எந்த நபர் இந்த தொல்லைக்கு காரணம் என்பதை அறிந்து, அந்த நபரைக் கண்டித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அந்த நபரின் தொடர்பை முற்றிலுமாக துண்டிக்க வேண்டும். குழந்தைகளுக்குத் தேவையான கவுன்சிலிங் வழங்க வேண்டும். குழந்தையை மன பாதிப்பிலிருந்து முழுவதுமாக மீட்டெடுக்க வேண்டும். குழந்தைகளுக்கு பிடித்தமான ஒன்றைத் தேர்வு செய்து அந்த விசயத்தில் அவர்களை ஈடுபடுத்த வேண்டும். மேலும் இது மாதிரியான சூழல் எந்த வகையிலும் இனிமேல் ஏற்படாதபடி எச்சரிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    நம் கண்மணிகளை நாம்தான் கண் போலப் பார்த்துக் கொள்ள வேண்டும். உயிருக்கு மேலான நம் குழந்தைகளின் வாழ்வு வளமாக இருக்க நாம் எல்லா வகையிலும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதைப் பெற்றோர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

    • குடும்பங்கள் தங்கள் பெண் குழந்தைகளை கொண்டாட வேண்டும்.
    • குடும்பத்தை சேர்ந்தவர்கள் மூலமே பெண் குழந்தைகளுக்கு அநீதி நடந்து வருகிறது.

    பெண்கள் நம் நாட்டின் கண்கள் என்று அச்சடிக்கப்பட்ட வாசகங்கள் காணப்பட்டாலும் பெண்களுக்கான உரிமைகளும், தேவைகளும் முழுமையாக பூர்த்தி செய்யப்படுகின்றதா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. பெண்களை கடவுளாக கருதும் நமது நாட்டில் தான் பெண்களுக்கு எதிரான அநீதிகளும் அதிகரித்து வருவது நம்ப முடியாத ஒன்றாக உள்ளது. பெருகி வரும் பாலியல் குற்றங்களும், பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளும் நாட்டின் சமநிலையை சீர்குலைக்கிறது என்றே சொல்லலாம். பெண் குழந்தைகளும் இந்த நிகழ்வுகள் மூலம் பாதிக்கப்பட்டு வருவது வருந்தத்தக்கதே. இவ்வாறு பல சமூக சிக்கல்களுக்கு இடையேயும் பெண்கள் பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

    நாட்டின் நிலை வளர்ச்சி அடைய பெண் குழந்தைகளின் உரிமைகள், பெண் கல்வி போன்ற விழிப்புணர்வு மக்களிடம் ஏற்பட வேண்டும். குறிப்பாக குழந்தை திருமணம் போன்ற நிகழ்வுகள் முற்றிலும் இல்லாமல் போக வேண்டும். இதற்காக அரசும் சட்டம் இயற்றி உள்ளது. அறியாத குழந்தை பருவத்தில் அவர்களுக்கு திருமணம் செய்து வைக்கும் பெற்றோர்கள் மட்டுமின்றி, அவர்களுக்கு துணை புரியும் உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும் சட்டத்தின் பார்வையில் தண்டனைக்கு உரியவர்களே என்ற சட்டம் நடைமுறையில் உள்ளது.

    18 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளை கட்டாயப்படுத்தி பாலியல் தொந்தரவு செய்பவர்களை போக்சோ சட்டத்தின் படி சிறையில் அடைக்கவும், 10 வயதிற்கு குறைவான பெண் குழந்தைகளை கடத்தினால், அவர்களுக்கு ஜாமீனில் வெளிவராதபடி கடுமையான தண்டனையும் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அரசு பல்வேறு பாதுகாப்பு திட்டங்களை பெண் குழந்தைகளுக்காக நிறைவேற்றினாலும், குடும்பங்கள் தங்கள் பெண் குழந்தைகளை கொண்டாட வேண்டும்.

    மாற்றங்கள் குடும்பங்களில் இருந்து வர வேண்டும். ஆனால் அதற்கு மாறாக தன் குடும்பத்தை சேர்ந்த உறவினர்கள், நண்பர்கள் மூலமே பெண் குழந்தைகளுக்கு அநீதி நடந்து வருகிறது. இந்த நிலை மாறி, பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு, சம உரிமை, கல்வி என அனைத்தும் கிடைக்கப் பெறும் போது சமூகத்தில் பெண்களின் நிலை உயரும்.

    இது குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தும் நோக்கிலும், பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுக்கப்பட வேண்டும் என்பதற்காகவும், 2008-ம் ஆண்டு இந்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், ஜனவரி 24-ந் தேதியை (இன்று) தேசிய பெண் குழந்தைகள் தினமாக அறிவித்து ஒவ்வொரு ஆண்டும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

    • தன்னுடலைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டிய அவசியத்தைப் புரியவைக்கலாம்.
    • தாயே குழந்தையின் தோழியாக மாற வேண்டும்.

    குழந்தைகளுக்குச் சரியான நேரத்தில் சரியான தகவலைச் சொல்லிக் கொடுக்க வேண்டியது அவசியம். பெற்றோர் உடலியல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். உடலியல் பற்றிய இந்தத் தகவல்களை ஆண் குழந்தைகளுக்கு அப்பாக்களும் பெண் குழந்தைகளுக்கு அம்மாக்களும் சொல்லிக்கொடுப்பது சிறப்பு.

    பெண் குழந்தைகள் வளர்இளம் பருவத்தை எட்டும்போதே அவர்களிடம் பருவம் அடைவது குறித்துப் பேச வேண்டும். அப்போது, உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து அறிமுகம் செய்யலாம்.

    பெற்றோர் கவனக்குறைவாகச் செய்யும் பல தவறுகள், குழந்தைகளை வேறு பாதைக்குக் கொண்டுசெல்கிறது. குழந்தைகளுக்கு நாம் கற்றுத்தரும் விஷயங்களின் ரோல்மாடலாக பெற்றோரே உள்ளனர். இதை ஒவ்வொரு பெற்றோரும் மனதில் கொள்ள வேண்டும். குளிப்பது, உடுத்துவது என்று பெற்றோரின் தனிமையை குழந்தைகளுக்கு மிகச்சிறு வயதில் இருந்தே புரிய வைக்க வேண்டும். 

    பருவம் அடைவது பெண்ணுடல் உற்பத்திக்குத் தயாராகும் நிகழ்வு, பெருமைக்குரியது என்ற எண்ணத்தை உருவாக்குவது அவசியம். பெரும்பாலான பெண் குழந்தைகள் இதைப் பற்றிய தெளிவின்மையால் அவதிப்படுகின்றனர். அப்போது ஏற்படும் வலி, வெளியேறும் ரத்தம் ஆகியவற்றை பிரச்சனையாக உணர்கின்றனர்.

    இந்த பயம் போக்க மருத்துவரீதியாக விளக்கம் அளிக்கலாம். இந்தக் காலகட்டத்தில் தன்னுடலைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டிய அவசியத்தைப் புரியவைக்கலாம். எப்படிச் சொல்வது எனத் தயங்காமல், தாயே குழந்தையின் தோழியாக மாற வேண்டும்.

    • அதிகாலை 4 மணிக்கு விழித்த காளீஸ்வரி குழந்தையை பார்த்தபோது பேச்சு மூச்சின்றி இருந்தது.
    • தகவலறிந்த உத்தப்பநாயக்கனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்

    உசிலம்பட்டி:

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள உத்தப்பநாயக்கனூரை சேர்ந்தவர் கருத்தப்பாண்டி. இவரது மனைவி காளீஸ்வரி. இவர்களுக்கு திருணமாகி ஓராண்டு ஆகிறது.

    நிறைமாத கர்ப்பிணியாக இருந்த காளீஸ்வரி கடந்த 3-ந் தேதி பிரசவத்திற்காக உசிலம்பட்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. பின்னர் அவர்கள் 5-ந் தேதி ஆஸ்பத்திரியில் இருந்து வீட்டுக்கு சென்றனர்.

    இந்நிலையில் நேற்று இரவு 10 மணியளவில் காளீஸ்வரி வழக்கம்போல் பால் கொடுத்துவிட்டு குழந்தையை உறங்க வைத்துவிட்டு தானும் தூங்கினார். இன்று அதிகாலை 4 மணிக்கு விழித்த காளீஸ்வரி குழந்தையை பார்த்தபோது பேச்சு மூச்சின்றி இருந்தது.

    இதனால் பதட்டமடைந்த குடும்பத்தினர் உடனே குழந்தையை உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    குழந்தை எப்படி இறந்தது? என்பது தெரியவில்லை. இதுகுறித்து தகவலறிந்த உத்தப்பநாயக்கனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

    குழந்தை இறப்புக்கான காரணம் என்ன? உடல் நலக்குறைவால் இறந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தையின் பெற்றோரிடம் இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • `சைல்டு க்ரூமிங்' (child grooming) என்பது அதிகம் கவனிக்க வேண்டிய விஷயமாக இருக்கிறது.
    • இன்றைய சூழலில் இன்டர்நெட் உபயோகத்தில் இருந்து சிறுமிகளை விலக்க முடியாது.

    தங்களது குழந்தைகளுக்கு, நேரடியாக நடக்கும் பாலியல் வன்முறைகள் பற்றி எல்லா அம்மாக்களும் ஓரளவு தெரிந்துவைத்திருக்கிறார்கள். ஆனால் இணையதள டிஜிட்டல் பிளாட்பாமில் பாலியல் வன்முறையாளர்கள் சிறுமிகளை எப்படி அணுகி வசீகரிக்கிறார்கள் என்பது அவர்களுக்கு தெரிவதில்லை. அது பற்றி இந்தியாவில் பெரிய அளவில் விவாதங்களும் நடத்தப் படுவதில்லை. ஆனால் உலக அளவில் இது மிக முக்கியமான பிரச்சினையாக விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இதில் `சைல்டு க்ரூமிங்' (child grooming) என்பது அதிகம் கவனிக்க வேண்டிய விஷயமாக இருக்கிறது.

    இன்றைய சூழலில் இன்டர்நெட் உபயோகத்தில் இருந்து சிறுமிகளை விலக்க முடியாது. ஆனால் ஆன்லைனில் பாதுகாப்பாக செயல்படுவதற்கு தேவையான பயிற்சியையும், வழிகாட்டுதல்களையும் அவர்களுக்கு வழங்கலாம். குழந்தைகள் எந்த விதமான ஆன்லைன் பிளாட்பாம்களில் இயங்குகிறார்கள் என்பதை பெற்றோர் அறிந்திருக்கவேண்டும். முதிர்ந்தவர்கள் யாருடனாவது பழகுவதாக அறிந்தால் அதில் கவனம் செலுத்தி கண்காணிக்கவேண்டும். கிரிமினல்கள் `நடப்பது எதையும் பெற்றோரிடம் கூறக்கூடாது' என்று கூறியே க்ரூமிங் செய்வதால், பாதிக்கப்படும் சிறுமிகள் பெரும்பாலும் வாய்திறப்பதில்லை என்பதை பெற்றோர் புரிந்துகொள்ளவேண்டும். இந்த விஷயத்தில் சிறுமிகளை குறைசொல்லி குற்றவாளியாக்காமல், அதில் இருந்து அவர்களை மீட்கவே பெற்றோர் முன்வரவேண்டும்.

    க்ரூமிங் செய்யப்பட்டு, மன உளைச்சலுக்கு உள்ளான சிறுமிகளிடம் காணப்படும் அறிகுறிகள்:

    - பயம், பதற்றம், உறக்கமின்மை, விரக்தி, எரிச்சல் மற்றும் எல்லாவற்றையும் எதிர்த்தல்.

    - விளையாட்டு மற்றும் பாடத்தில் திடீர் விருப்பக்குறைவு ஏற்படுதல்.

    - இன்டர்நெட் மற்றும் இதர டிஜிட்டல் டிவைஸ்களின் பயன்பாட்டை திடீரென்று குறைத்தல் அல்லது அதிகரித்தல்.

    - வீட்டில் உள்ளவர்களுக்கு தெரியாமல் இன்டர்நெட், போன் மற்றும் இதர டிவைஸ்களை பயன்படுத்துதல்.

    - தன்னைவிட முதிர்ந்தவரிடம் நட்பு பாராட்டுதல். ரகசிய முறையிலான பழக்கங்களை ஏற்படுத்திக்கொள்ளுதல்.

    - பொய் சொல்லிவிட்டு வெளியே செல்லுதல், இருக்கும் இடத்தை அறிவிக்காமல் திடீரென்று மறைந்துவிடுவது, சந்தித்தது யாரை? சென்றது எங்கே? என்பதை எல்லாம் மறைப்பது.

    - சாக்லெட் முதல் செல்போன் வரை பல்வேறு வகையான பரிசுகள் அவ்வப்போது புழங்குவது.

    - வயதுக்கு மீறி பாலியல் ரீதியான செயல்பாடுகளை வெளிப்படுத்துவது, அதை பற்றி அதிகமாக பேசுவது.

    - மதுவோ, போதைப் பொருட்களோ பயன்படுத்துவது.

    .. இது போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக கவனியுங்கள். அவர்களுக்கு தேவையான நம்பிக்கையை அளித்து, மனநல ஆலோசனைக்கு ஏற்பாடு செய்யுங்கள்.

    கிரிமினல்கள், யாரை எல்லாம் எளிதாக க்ரூமிங் செய்து தன்வசப்படுத்துவார்கள் என்பது தெரியுமா?

    சிறுமிகள் மட்டுமல்ல இளம்பெண்களும் க்ரூமிங் செய்யப்படலாம். புறக்கணிக்கப்படும் சிறுமிகள், சண்டையிடும் பெற்றோரால் வளர்க்கப்படும் குழந்தைகள் போன்றோர் எளிதாக இவர்களது வலையில் சிக்கிக்கொள்வார்கள். வாழ்க்கையை ஜாலியாக அனுபவிக்க விரும்பும் பெண்களும், விலை உயர்ந்த பரிசுப் பொருட்களுக்கு அதிகமாக ஆசைப்படும் சிறுமிகளும் இவர்களது வசீகரிப்பு வலையில் வீழ்ந்துவிடுகிறார்களாம்.

    இன்றைய சூழலில் இன்டர்நெட் உபயோகத்தில் இருந்து சிறுமிகளை விலக்க முடியாது. ஆனால் ஆன்லைனில் பாதுகாப்பாக செயல்படுவதற்கு தேவையான பயிற்சியையும், வழிகாட்டுதல்களையும் அவர்களுக்கு வழங்கலாம்.

    • மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்துவிட்டதாகவும், அவரது உடலை அருகில் உள்ள ஓடையில் புதைத்துவிட்டதாகவும் தெரிவித்தார்.
    • குழந்தையின் தந்தையான ராமச்சந்திரனிடம் கேட்டபோது அவர் தனக்கு குழந்தை இறந்த விபரம் தெரியாது என கூறினார்.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அருகே உள்ள பாலூத்து தேவராஜ் நகரைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 27). கம்பி கட்டும் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ரம்யா (21). இவர்களுக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் ரம்யா மீண்டும் கருவுற்றார். இவருக்கு கடந்த மாதம் 29-ந் தேதி கடமலைக்குண்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெண் குழந்தை பிறந்தது.

    சில நாட்கள் கழித்து தாயும், சேயும் நலமாக இருந்ததைத் தொடர்ந்து ரம்யாவை வீட்டுக்கு செல்லுமாறு டாக்டர்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து ரம்யாவின் தாய் களிச்சியம்மாள் அவர்களை தனது வீட்டுக்கு அழைத்து வந்தார்.

    இந்நிலையில் பிறந்த குழந்தைக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் என்பதால் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வருமாறு அழைப்பதற்காக அவரது வீட்டுக்கு பணியாளர்கள் சென்றனர்.

    ஆனால் ரம்யாவின் தாயார் களிச்சியம்மாள் தனது பேத்தி இறந்துவிட்டதாக தெரிவித்தார். குழந்தை எப்படி இறந்தது? என கேட்டதற்கு, மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்து விட்டதாகவும், அவரது உடலை அருகில் உள்ள ஓடையில் புதைத்துவிட்டதாகவும் தெரிவித்தார். ஆனால் அவரது பேச்சில் பணியாளர்கள் சந்தேகமடைந்தனர்.

    முதலில் தாய்ப்பால் கொடுத்தபோது, மூச்சுத் திணறி இறந்ததாகவும், பின்னர் குழந்தைக்கு இருமல் ஏற்பட்டதால் தேனும், துளசி நீரும் கொடுத்ததால் இறந்து விட்டதாகவும் மாறி மாறி பதிலளித்தார். இது மட்டுமின்றி குழந்தை இறந்த விபரத்தை அக்கம் பக்கத்தினர் யாருக்கும் சொல்லாமல் வீட்டில் குழந்தை இருப்பது போலவே காட்டிக் கொண்டுள்ளார்.

    மேலும் குழந்தையின் தந்தையான ராமச்சந்திரனிடம் கேட்டபோது அவர் தனக்கு குழந்தை இறந்த விபரம் தெரியாது என கூறினார். இதனால் களிச்சியம்மாளிடம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டது. இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்ததால் அதனை கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகமடைந்து மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தில் புகார் அளித்தனர். சமூக நலத்துறை அலுவலர் ஷியாமளா தேவி சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டார்.

    இந்நிலையில் குழந்தையின் தாய் ரம்யாவுக்கு மன நிலை பாதிக்கப்பட்டுள்ளது. அவருக்கும் என்ன நடந்தது என தெரியாமல் தான் சொன்ன வார்த்தைகளையே மீண்டும் மீண்டும் கூறி வருவதால் அவரது தாய் களிச்சியம்மாள் மீது போலீசார் மற்றும் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து கடமலைக்குண்டு போலீசாரும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • பெண்களுக்கு எதிரான வன்முறைகள், பாலியல் வன்கொடுமைகள் குறைந்தபாடில்லை.
    • சராசரியாக தினமும் 86 கற்பழிப்பு வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன.

    பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் சட்டங்கள் கடுமையாக்கப்பட்டாலும் கூட அவர்களுக்கு எதிரான வன்முறைகள், பாலியல் வன்கொடுமைகள் குறைந்தபாடில்லை. உலகம் முழுவதும் இதே நிலை நீடிக்கிறது. பெண்களுக்கு எதிரான வன்முறை பற்றிய அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரங்களை ஐக்கிய நாடுகளின் பொது சபை (ஐ.நா) வெளியிட்டுள்ளது.

    * ஐக்கிய நாடுகள் சபையின் தலைவர் அன்டோனியா குடரெஸ் கூறுகையில், "ஒவ்வொரு 11 நிமிடங்களுக்கு ஒரு பெண் அல்லது சிறுமி நெருங்கிய உறவினர் அல்லது குடும்ப உறுப்பினரால் கொல்லப்படுகிறார்.

    * உலகளவில் 30 சதவீத பெண்கள் பாலியல் வன்முறையை அனுபவிக்கின்றனர்.

    * 15 முதல் 19 வயதுடைய இளம்பெண்களில் 24 சதவீதம் பேர் நெருங்கிய உறவில் இருக்கும் நபர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறார்கள்.

    * ஐக்கிய நாடுகள் சபையின் புதிய அறிக்கையின்படி, 2021-ம் ஆண்டில் ஒவ்வொரு மணி நேரத்திற்குள்ளும் 5-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் சிறுமி கள் குடும்ப உறுப்பினர்களால் கொல்லப்படுகிறார்கள்.

    * 2021-ம் ஆண்டு உலகளவில் கொலை செய்யப்பட்ட பெண்கள் மற்றும் சிறுமிகளில் (81,100) பாதிக்கும் மேற்பட்டவர்கள் அதாவது 56 சதவீதம் (45,000) பேர் கணவர்கள், நண்பர்கள் அல்லது நெருங்கிய குடும்ப உறுப்பினர்களால் கொல்லப்பட்டுள்ளனர்.

    * ஆசியாவில் சுமார் 17,800 பெண்கள் தங்கள் உறவினர்களால் கொல்லப்பட்டனர்.

    * இதற்கு நேர்மாறாக, 2021-ம் ஆண்டில் கொலை செய்யப்பட்ட ஆண்களில் 11 சதவீதம் பேர் மட்டுமே தங்கள் வாழ்க்கை துணை அல்லது உறவினரால் கொல்லப்பட்டுள்ளனர். ஆண்களை பொறுத்தவரை குடும்பத்திற்கு வெளியே மற்றவர்களால் கொல்லப்படும் அபாயம் அதிகம் உள்ளது.

    * இந்தியாவில், 2021-ம் ஆண்டில் 31,677 கற்பழிப்பு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சராசரியாக தினமும் 86 கற்பழிப்பு வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன.

    * பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக ஒரு மணி நேரத்திற்கு 49 வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன.

    * 2020-ம் ஆண்டை விட 2021-ம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் 15.3 சதவீதம் அதிகரித்துள்ளதாக இந்திய தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (என்.சி.ஆர்.பி) தெரிவித்துள்ளது.

    * இந்தியாவில் 2021-ம் ஆண்டு வரதட்சணை கொடுமையால் பெண்கள் இறந்ததாக 6,589 வழக்குகள் பதிவாகி உள்ளன. இது 2020-ம் ஆண்டை ஒப்பிடும்போது 3.85 சதவீதம் குறைந்துள்ளது.

    • பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்ததற்கான சான்று இல்லை.
    • இன்று வரை பெண்களுக்கு எதிராக நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

    பெண்கள் நாட்டின் கண்கள் என்று கூறி வரும் உலகில் தான் பெண்களுக்கு எதிரான கொடுமைகளும் நிகழ்கின்றன. ஆண்களுக்கு நிகராக பெண்களும் சமம் என்று கூறி வந்தாலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்ததற்கான சான்று இல்லை. இன்று வரை பல்வேறு வகையான குற்றங்கள் பெண்களுக்கு எதிராக நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இவ்வாறு பெண்களுக்கு நிகழும் கொடுமைகள் குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்துவதற்காக பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம் என்ற சிறப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது.

    உலகளவில் பெண்களுக்கு நிகழும் வன்முறைகளை வெளி உலகிற்கு எடுத்து கூறி அதற்கான நியாயமான தீர்க்கமான முடிவுகளை எடுக்க வழிவகுப்பதே இந்நாளின் நோக்கமாகும். 1960-ம் ஆண்டு நவம்பர் 25-ந் தேதி டொமினிக்கன் குடியரசில் மிராபெல் சகோதரிகள் என்று அழைக்கப்படும் 3 சகோதரிகள் அரசியல் செயல்பாடுகளுக்காக அந்நாட்டின் ஆட்சியர்கள் உத்தரவின்பேரில் படுகொலை செய்யப்பட்டனர். பின்னர் 'மறக்கமுடியாத வண்ணத்துப்பூச்சிகள்' என்று பெண்களுக்கு எதிரான வன்முறை கொடுமையின் சின்னமாக மாறினார்கள். மிராபெல் சகோதரிகளை நினைவு கூறும் விதமாக அவர்கள் படுகொலை செய்யப்பட்ட நவம்பர் 25-ந் தேதி (இன்று) ஒவ்வொரு ஆண்டும் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

    ஐ.நா.சபையானது 1999-ம் ஆண்டில் இத்தினத்தை சட்ட பூர்வமாக அங்கீகரித்தது. பாலியல் வன்கொடுமைகள், அடிமைத்தனம், குடும்ப வன்முறை போன்ற பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்பதை இந்நாள் வலியுறுத்துகிறது. மேலும் பிரச்சினையின் அளவு மற்றும் உண்மை தன்மை பெரும்பாலும் மறைக்கப்படுவதை எடுத்து கூறுகிறது. 1993-ம் ஆண்டில் நடைபெற்ற மனித உரிமை மாநாட்டில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறையை மனித உரிமை மீறலாக அங்கீகரித்து இந்த வகையான பிரச்சினைகளை வெளிப்படையாக கூறுவதற்கான வழியை அமைத்து கொடுத்தது.

    பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் 90 சதவீதம் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள், வேலை செய்யும் இடத்தில் உள்ளவர்களால் தான் ஏற்படுகிறது என்று கருத்து கணிப்பு தெரிவிக்கிறது. பெண்ணுரிமை காப்பது, பெண்களுக்கு எதிரான வன்முறையை தடுப்பது, கண்டிப்பது, பெண்கள் பாதுகாப்பு குறித்த நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்த விழிப்புணர்வு மக்களிடையே ஏற்படுத்த வேண்டும். வருங்கால தலைமுறைக்கு பாலின சமத்துவத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துவோம் என்று இந்நாளில் உறுதி கொள்வோம்.

    • 2021-ம் ஆண்டு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 8,501 வழக்குகள் பதிவாகியுள்ளது.
    • குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 6,064 வழக்குகள் பதிவாகிவுள்ளது.

    ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும் பதிவாகும் குற்றங்கள் தொடர்பான அறிக்கையை தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிடும். அதன்படி கடந்த 2021-ம் ஆண்டு நாடு முழுவதும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான அறிக்கையை கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டது. அதில், தமிழகத்தில் 2021-ம் ஆண்டு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 8,501 வழக்குகளும், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 6,064 வழக்குகளும் பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தவிர ஆதிதிராவிடர்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 1,377 வழக்குகளும், பழங்குடியினர்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 39 வழக்குகளும் பதிவாகி உள்ளன. மேலும் 1,788 வழக்குகளில் சிறார்கள் தொடர்பு உள்ளது. 1,076 சைபர்கிரைம் வழக்குகளும் பதிவாகி உள்ளன.

    இந்தநிலையில் தற்போது, இந்தியாவில் உள்ள மாவட்ட வாரியான அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் திருச்சி, புதுக்கோட்டை, கரூர், அரியலூர் பெரம்பலூர் மாவட்டங்களை உள்ளடக்கிய திருச்சி காவல் சரகம் மற்றும் திருச்சி மாநகரம், திருச்சி ரெயில்வே போலீஸ் ஆகியவற்றில் கடந்த 2021-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்குகள் தொடர்பான அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

    அதில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக கடந்த 2021-ம் ஆண்டு அரியலூர் மாவட்டத்தில் 144 வழக்குகளும், கரூர் மாவட்டத்தில் 96 வழக்குகளும், பெரம்பலூர் மாவட்டத்தில் 86 வழக்குகளும், புதுக்கோட்டை மாவட்டத்தில் 187 வழக்குகளும், திருச்சி மாவட்டத்தில் 258 வழக்குகளும், திருச்சி மாநகரில் 104 வழக்குகளும், திருச்சி ரெயில்வே போலீசில் 2 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதேநேரம் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக கடந்த 2020-ம் ஆண்டு அரியலூரில் 67 வழக்குகளும், கரூரில் 85 வழக்குகளும், பெரம்பலூரில் 60 வழக்குகளும், புதுக்கோட்டையில் 212 வழக்குகளும், திருச்சி மாவட்டத்தில் 214 வழக்குகளும், திருச்சி மாநகரில் 87 வழக்குகளும், திருச்சி ரெயில்வே போலீசில் ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டு இருந்தது. முந்தைய ஆண்டை ஒப்பிடும்போது புதுக்கோட்டை மாவட்டம் தவிர மற்ற 4 மாவட்டங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளது.

    இதேபோல் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக கடந்த 2021-ம் ஆண்டு அரியலூரில் 121 வழக்குகளும், கரூரில் 149 வழக்குகளும், பெரம்பலூரில் 81 வழக்குகளும், புதுக்கோட்டையில் 74 வழக்குகளும், திருச்சி மாவட்டத்தில் 126 வழக்குகளும், திருச்சி மாநகரில் 78 வழக்குகளும், திருச்சி ரெயில்வே போலீசில் 3 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதே நேரம் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக கடந்த 2020-ம் ஆண்டு அரியலூரில் 49 வழக்குகளும், கரூரில் 33 வழக்குகளும், பெரம்பலூரில் 69 வழக்குகளும், புதுக்கோட்டையில் 56 வழக்குகளும், திருச்சி மாவட்டத்தில் 158 வழக்குகளும், திருச்சி மாநகரில் 46 வழக்குகளும், திருச்சி ரெயில்வே போலீசில் 2 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு இருந்தது.

    • குழந்தைகள் மத்தியில் இந்த சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது
    • இந்த சட்டத்தில் உள்ள தண்டனைகளை இன்னும் கடுமையாக்க வேண்டும்.

    நமது நாட்டில் பெரும்பாலான பாலியல் குற்றங்கள் மீது யாரும் புகார் கொடுக்க முன்வருவது இல்லை என்று ஒரு ஆய்வு கூறுகிறது. குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்க கொண்டு வந்த சட்டம்தான் போக்சோ. இதன் முழு விரிவாக்கம் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் என்பது ஆகும். இந்த சட்டம் கடந்த 2012-ம் ஆண்டு முதல் செயல்பாட்டில் இருந்து வருகிறது.

    இந்த சட்டம் தீவிரப்படுத்தப்பட்ட பின்னர், பள்ளி படித்து வரும் குழந்தைகள் மத்தியில் இந்த சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக குழந்தைகளை பாலியல் சீண்டல்கள் செய்தாலே இந்த சட்டத்தின் கீழ் வருவதால், பல இடங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்து வருவது குறைந்து உள்ளதாக கூறப்படுகிறது.

    விழிப்புணர்வு

    குறிப்பாக கோவை மாவட்டத்தில் போக்சோ சட்டம் தொடர்பாக மாணவிகள் மத்தியில் தீவிர விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பாக மாவட்ட சமூக நலத்துறை, மாவட்ட சமூக பாதுகாப்புத்துறை, சைல்டு லைன் ஆகியோருடன் போலீசார் இணைந்து பள்ளி குழந்தைகள், கிராமப்புறங்களில் போக்சோ சட்டம் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள்.

    இதனால் பாலியல் சீண்டல்கள் செய்தால் நாம் என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பான விழிப்புணர்வு மாணவிகளுக்கு ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக பாதிக்கப்படும் மாணவிகள் தங்களின் பெற்றோரிடமோ, அல்லது ஆசிரியரிடமோ தெரிவிப்பதால், அவர்கள் போலீசில் புகார் செய்து குற்றங்கள் செய்யும் நபர்களை கைது செய்து வருகிறார்கள். மேலும் போக்சோ தொடர்பாக விழிப்புணர்வை இன்னும் அதிகமாக தீவிரப்படுத்தி, இதில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு உள்ளது. இது தொடர்பாக கோவை மாவட்டத்தை சேர்ந்த மாணவிகள், பெற்றோர், ஆசிரியர்கள் தெரிவித்த கருத்துகள் விவரம் வருமாறு:-

    பயம் இல்லை

    சசிகலா (ஆசிரியை, அன்னூர்):- போக்சோ சட்டம் தொடர்பாக 18 வயதுக்கு கீழ் உள்ள பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதால் மாணவிகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டு இருக்கிறது. எனவே மாணவிகள் தைரியமாக இருக்கிறார்கள். இதுபோன்ற பாதிப்பு ஏற்பட்டால் யாரிடம் சொல்வது என்று தெரியாமல் இருந்தது. அத்துடன் வெளியே சொன்னால் தங்களை பெற்றோர் பள்ளிக்கு அனுப்புவார்களோ என்ற பயமும் இருந்தது. ஆனால் இப்போது மாணவிகளிடம் அந்த பயம் இல்லை.

    கந்தசாமி (பொள்ளாச்சி):- கோவை மாவட்டத்தை பொறுத்தவரை பொள்ளாச்சி, ஆனைமலை பகுதிகளில்தான் போக்சோ சட்டம் அதிகளவில் பதிவாகி வருகிறது. அதுபோன்று அங்குதான் குழந்தை திருமணமும் அதிகமாக நடந்து வருகிறது. போக்சோ குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டதுதான் இதன் வெளிப்பாடு. எனவே இந்த பகுதிகளில் இன்னும் அதிகமாக கவனம் செலுத்தி அனைத்து குக்கிராமங்களுக்கும் அதிகாரிகள் நேரடியாக சென்று, பள்ளி மாணவிகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    பெற்றோர் ஒத்துழைப்பு

    முத்துகிருஷ்ணன் (தொண்டாமுத்தூர்):- தற்போது அனைத்து பள்ளிகளிலும் நல்ல தொடுதல், (குட் டச்) தீய தொடுதல் (பேட் டச்) என்று குழந்தைகளுக்கு ஆசிரியர்கள் சொல்லிக்கொடுத்து வருகிறார்கள். இதனால் மாணவிகளிடையே விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. ஆனால் குக்கிராமங்கள், மலைவாழ் பகுதியில் உள்ள மாணவிகளுக்கு சரியாக விழிப்புணர்வு சென்று சேரவில்லை. எனவே இந்த விஷயத்தில் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அனைத்து மாணவிகளிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    தாரணி (பள்ளி மேலாண்மை குழு தலைவர்) :- சில பள்ளிகளில் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு தொடர்பான கருத்துகளை சொல்ல நாங்கள் முயற்சி செய்து, அதில் பெற்றோரும் பங்கேற்க கூறினால், பெற்றோர் யாரும் ஒத்துழைப்பு கொடுப்பது இல்லை. அத்துடன் இதுபோன்ற நிகழ்ச்சிக்கும் தங்கள் குழந்தைகளை அனுப்ப மறுக்கிறார்கள். இதனால் போக்சோ தொடர்பான விழிப்புணர்வு கருத்துகளை மாணவிகளிடம் எடுத்துச்சொல்ல முடியாமல் போய்விடுகிறது. என்னதான் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தினாலும் அதற்கு மாணவிகளின் பெற்றோர் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். அப்போதுதான் அது முழுமையாக மாணவிகள் மத்தியில் சென்றடையும்.

    தைரியம் கிடைத்து உள்ளது

    கல்லூரி மாணவி:- நான் பள்ளியில் படிக்கும்போது போக்சோ சட்டம் குறித்து எங்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். இதனால் என்னைப்போன்ற மாணவிகளுக்கு தைரியம் ஏற்பட்டது. அத்துடன் குழந்தைகளை தவறான எண்ணத்தில் தொட்டாலே இந்த சட்டம் பாய்வதால், பலர் பயந்து வருகிறார்கள். எனவே குழந்தைகளின் நலன் கருதி, குழந்தைகளை பாதுகாக்கும் வகையில், இந்த சட்டத்தில் உள்ள தண்டனைகளை இன்னும் கடுமையாக்க வேண்டும்.

    பள்ளி மாணவிகள்:- பள்ளிகளில் எங்களுக்கு போக்சோ தொடர்பாக ஆசிரியர்கள், போலீஸ் அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். இதுபோன்ற சம்பவம் நடக்கும்போது பெற்றோரிடம் சொல்ல பயமாக இருக்கும். எனவே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதால், யாராவது தவறான எண்ணத்தில் எங்களிடம் பேசினாலோ, அல்லது தொட்டாலோ நாங்கள் உடனே எவ்வித பயமும் இல்லாமல் ஆசிரியைகளிடம் சொல்லலாம் என்ற தைரியம் எங்களுக்கு ஏற்பட்டு உள்ளது.

    இளைஞர்களுக்கு விழிப்புணர்வு

    சந்தோஷ்குமார்:- போக்சோ என்றால் சிறுமிகளிடம் தவறாக நடந்தால் மட்டும்தான் நடவடிக்கை என்று இல்லை. 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்களையும் பாலியல் ரீதியாக துன்புறுத்தினால் போக்சோ சட்டம் பாயும். எனவே மாணவர்களிடமும் இதுபோன்ற விழிப்புணர்வு ஏற்பட்டு உள்ளது. அத்துடன் 18 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளை தவறாக தொட்டால் நமது வாழ்க்கையே வீணாக போய்விடும் என்று இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டு உள்ளது. மேலும் இது தொடர்பாக இளைஞர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    ராஜேஸ்வரி (காரமடை):- காலையில் இருந்து மாலை வரை குழந்தைகள் பள்ளிகளில்தான் இருக்கிறார்கள். அவர்கள் பெற்றோரிடம் மனம்விட்டு பேசுவதை விட ஆசிரியைகளிடம்தான் நன்றாக பேசுவார்கள். பெற்றோர் சொன்னால் காது கொடுத்து கேட்க மாட்டார்கள். ஆனால் ஆசிரியர்கள் கூறினால் அதை கேட்பார்கள். எனவே பள்ளி குழந்தைகளிடம் நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் என்று தெளிவாக சொல்லிக்கொடுக்க வேண்டும். முக்கியமாக போக்சோ தொடர்பாக முழு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    விழிப்புணர்வு நிகழ்ச்சி காரணமாகஒரே பள்ளியில் 12 மாணவிகள் புகார்

    போக்சோ சட்டம் தொடர்பாக அனைத்து பள்ளிகளிலும் அதிகாரிகள், போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். இதன் விளைவாக ஒரு பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தபோதே 12 மாணவிகள் புகார் தெரிவித்து உள்ளனர். இதுதான் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியின் பயன் ஆகும். ஆனால் சில பகுதிகளில் மாணவிகள் புகார் கொடுக்க முன்வந்தாலும், அவர்களின் பெற்றோர் ஒத்துழைப்பு

    தண்டனையை கடுமையாக்க வேண்டும்

    போக்சோ தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், சராசரியாக கோவை மாவட்டத்தில் மாதத்துக்கு 13 முதல் 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுமிகளில் 5 பேர் கர்ப்பம் அடைந்துதான் வருகிறார்கள். இதில் உறவினர்களால் பாதிக்கப்படும் சிறுமிகள்தான் அதிகம். சிலர் இந்த குற்ற வழக்கில் கைதாகி இருந்தாலும் போதிய ஆதாரம் இல்லாமல் எளிதாக வெளியே வந்து விடுகிறார்கள். எனவே சிறுமிகள் பாதிக்கப்படுவதை தடுக்க, இந்த குற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு மிகக்கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

    சட்டம் சொல்வது என்ன?

    போக்சோ சட்டத்தில் என்னென்ன பிரிவுகள் உள்ளன? அதில் கிடைக்கும் தண்டனை விவரங்கள் எவை என்பது குறித்து வக்கீல் ஒருவர் கூறும்போது, போக்சோ சட்டத்தில் பல்வேறு பிரிவுகள் உள்ளன. அதில் குழந்தைகளை பலாத்காரம் செய்தால் 7 ஆண்டு முதல் ஆயுள் தண்டனை வரை கிடைக்கும். அபராதமும் உண்டு. குழந்தைகளின் அந்தரங்க உறுப்புகளை தொடுவது, கட்டாயப்படுத்தி தொட வைப்பது பாலியல் சீண்டல் ஆகும். இதில் அதிகபட்சமாக 8 ஆண்டுகள் வரை தண்டனை கிடைக்கும். பாலியல் ரீதியாக செய்கைகள் காட்டுவது, ஆபாசமாக பேசுவதும் போக்சோ சட்டத்தில்தான் வருகிறது. இதற்கு 5 ஆண்டு வரை தண்டனை கிடைக்கும் என்றார்.

    ×