search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "girl baby"

    • அரசு ஆஸ்பத்திரியில் குழந்தையை பரிசோதித்து மேலும் நான்கு ஊசிகளை டாக்ட ர்கள் செலுத்தினர்.
    • தகவல் அறிந்த உறவினர்கள் ஆஸ்பத்திரி முன்பு குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை அருகே உள்ள மடிகை கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 27) தொழிலாளி. இவரது மனைவி கீதா.

    இவர்களது 10 மாத பெண் குழந்தை தரணிகாவுக்கு 10 வது மாத தடுப்பூசி துறையூர் அங்கன்வாடி மையத்தில் போடப்பட்டது.

    ஆனால் தடுப்பூசி போட்ட சிறிது நேரத்தில் குழந்தை கண் அசைவின்றி காணப்பட்டது.

    இதையடுத்து காசநாடு புதூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் குழந்தையை தூக்கிக் கொண்டு பெற்றோர் சென்றனர்.

    அங்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் குழந்தையின் உடல் நிலையில் முன்னேற்றம் இல்லை.

    தொடர்ந்து தஞ்சை ராசாமி ராசுதாரர் அரசு ஆஸ்பத்திரியில் குழந்தையை பரிசோதித்து மேலும் நான்கு ஊசிகளை டாக்ட ர்கள் செலுத்தினர்.

    ஆனால் சிறிது நேரத்திலே குழந்தை இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அதிர்ச்சியடைந்த பெற்றோர் கதறி அழுதனர்.

    இது குறித்து தகவல் அறிந்த உறவினர்கள் ஆஸ்பத்திரி முன்பு குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். டாக்டர்களின் கவனக்குறைவு, அஜாக்கிரதையால் தான் குழந்தை உயிர் இழந்தது, உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி உடலை வாங்க மறுத்து கோஷங்கள் எழுப்பினர்.

    இதனை தொடர்ந்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர் . அப்போது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

    இது குறித்து சதீஷ்குமார் கொடுத்த புகாரின் பேரில் மேற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகாலை 4 மணிக்கு விழித்த காளீஸ்வரி குழந்தையை பார்த்தபோது பேச்சு மூச்சின்றி இருந்தது.
    • தகவலறிந்த உத்தப்பநாயக்கனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்

    உசிலம்பட்டி:

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள உத்தப்பநாயக்கனூரை சேர்ந்தவர் கருத்தப்பாண்டி. இவரது மனைவி காளீஸ்வரி. இவர்களுக்கு திருணமாகி ஓராண்டு ஆகிறது.

    நிறைமாத கர்ப்பிணியாக இருந்த காளீஸ்வரி கடந்த 3-ந் தேதி பிரசவத்திற்காக உசிலம்பட்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. பின்னர் அவர்கள் 5-ந் தேதி ஆஸ்பத்திரியில் இருந்து வீட்டுக்கு சென்றனர்.

    இந்நிலையில் நேற்று இரவு 10 மணியளவில் காளீஸ்வரி வழக்கம்போல் பால் கொடுத்துவிட்டு குழந்தையை உறங்க வைத்துவிட்டு தானும் தூங்கினார். இன்று அதிகாலை 4 மணிக்கு விழித்த காளீஸ்வரி குழந்தையை பார்த்தபோது பேச்சு மூச்சின்றி இருந்தது.

    இதனால் பதட்டமடைந்த குடும்பத்தினர் உடனே குழந்தையை உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    குழந்தை எப்படி இறந்தது? என்பது தெரியவில்லை. இதுகுறித்து தகவலறிந்த உத்தப்பநாயக்கனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

    குழந்தை இறப்புக்கான காரணம் என்ன? உடல் நலக்குறைவால் இறந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தையின் பெற்றோரிடம் இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் வளாகத்தில் குழந்தையை விட்டு சென்ற பெண் யார்? அவர் எதற்காக குழந்தையை விட்டு சென்றார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவில்பட்டி:

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி செண்பக வல்லி அம்மன் கோவில் வளாகத்தில் சண்டிகேஸ்வரர் சன்னதி உள்ளது. இங்கு நேற்று மாலையில் ஒரு பெண், ஒரு வயது ஆண் குழந்தையுடன் வந்தார். அவர் அந்த குழந்தையை பக்தர்கள் யாரும் கவனிக்காத நேரத்தில் சன்னதி முன்பு போட்டுவிட்டு அங்கிருந்து நைசாக சென்று விட்டார்.

    சிறிதுநேரத்தில் அந்த குழந்தை அழுதது. இதனைப் பார்த்த கோவில் ஊழியர்கள், பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த குழந்தை யாருடையது என விசாரித்தனர். அப்போது சிறிது நேரத்திற்கு முன் ஒரு பெண் அந்த குழந்தையை கொண்டு வந்தது தெரிய வந்தது. இதையடுத்து அந்த பெண்ணை கோவில் முழுவதும் தேடினார்கள். ஆனால் அந்த பெண் அங்கு இல்லை.

    இதையடுத்து அந்த குழந்தையை கோவில் ஊழியர்கள் எடுத்து வைத்தனர். இதுகுறித்து கோவில்பட்டி கிழக்கு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீஸ் இன்ஸ் பெக்டர் (பொறுப்பு) ஸ்டெல்லாபாய் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் அந்த குழந்தையை போலீசார் வாங்கி சென்று, கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    அந்த குழந்தை கோவில் பட்டி அரசு ஆஸ்பத்திரியில் அங்குள்ள செவிலியர்கள் மூலம் தொடர்ந்து பராமரிக்கப்பட்டு வருகிறது. குழந்தை நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    கோவில் வளாகத்தில் குழந்தையை விட்டு சென்ற பெண் யார்? அவர் எதற்காக குழந்தையை விட்டு சென்றார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தையை விட்டுச்சென்ற பெண்ணை கண்டுபிடிக்க கோவில் வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்தனர்.

    ஆனால் குழந்தையை பெண் கொண்டு வரும் காட்சிகள் எதுவும் பதிவாக வில்லை. குழந்தையை கொண்டு வந்த பெண்ணை யாரும் பார்த்தார்களா? என்பது குறித்து கோவில் ஊழியர்கள் மற்றும் பக்தர்களிடமும், கோவிலின் அருகே உள்ள கடைக்காரர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×