search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஆண்டிபட்டி அருகே 2-வதாக பிறந்த பெண் குழந்தை கொலை? அதிகாரிகள் விசாரணை
    X

    ஆண்டிபட்டி அருகே 2-வதாக பிறந்த பெண் குழந்தை கொலை? அதிகாரிகள் விசாரணை

    • மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்துவிட்டதாகவும், அவரது உடலை அருகில் உள்ள ஓடையில் புதைத்துவிட்டதாகவும் தெரிவித்தார்.
    • குழந்தையின் தந்தையான ராமச்சந்திரனிடம் கேட்டபோது அவர் தனக்கு குழந்தை இறந்த விபரம் தெரியாது என கூறினார்.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அருகே உள்ள பாலூத்து தேவராஜ் நகரைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 27). கம்பி கட்டும் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ரம்யா (21). இவர்களுக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் ரம்யா மீண்டும் கருவுற்றார். இவருக்கு கடந்த மாதம் 29-ந் தேதி கடமலைக்குண்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெண் குழந்தை பிறந்தது.

    சில நாட்கள் கழித்து தாயும், சேயும் நலமாக இருந்ததைத் தொடர்ந்து ரம்யாவை வீட்டுக்கு செல்லுமாறு டாக்டர்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து ரம்யாவின் தாய் களிச்சியம்மாள் அவர்களை தனது வீட்டுக்கு அழைத்து வந்தார்.

    இந்நிலையில் பிறந்த குழந்தைக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் என்பதால் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வருமாறு அழைப்பதற்காக அவரது வீட்டுக்கு பணியாளர்கள் சென்றனர்.

    ஆனால் ரம்யாவின் தாயார் களிச்சியம்மாள் தனது பேத்தி இறந்துவிட்டதாக தெரிவித்தார். குழந்தை எப்படி இறந்தது? என கேட்டதற்கு, மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்து விட்டதாகவும், அவரது உடலை அருகில் உள்ள ஓடையில் புதைத்துவிட்டதாகவும் தெரிவித்தார். ஆனால் அவரது பேச்சில் பணியாளர்கள் சந்தேகமடைந்தனர்.

    முதலில் தாய்ப்பால் கொடுத்தபோது, மூச்சுத் திணறி இறந்ததாகவும், பின்னர் குழந்தைக்கு இருமல் ஏற்பட்டதால் தேனும், துளசி நீரும் கொடுத்ததால் இறந்து விட்டதாகவும் மாறி மாறி பதிலளித்தார். இது மட்டுமின்றி குழந்தை இறந்த விபரத்தை அக்கம் பக்கத்தினர் யாருக்கும் சொல்லாமல் வீட்டில் குழந்தை இருப்பது போலவே காட்டிக் கொண்டுள்ளார்.

    மேலும் குழந்தையின் தந்தையான ராமச்சந்திரனிடம் கேட்டபோது அவர் தனக்கு குழந்தை இறந்த விபரம் தெரியாது என கூறினார். இதனால் களிச்சியம்மாளிடம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டது. இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்ததால் அதனை கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகமடைந்து மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தில் புகார் அளித்தனர். சமூக நலத்துறை அலுவலர் ஷியாமளா தேவி சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டார்.

    இந்நிலையில் குழந்தையின் தாய் ரம்யாவுக்கு மன நிலை பாதிக்கப்பட்டுள்ளது. அவருக்கும் என்ன நடந்தது என தெரியாமல் தான் சொன்ன வார்த்தைகளையே மீண்டும் மீண்டும் கூறி வருவதால் அவரது தாய் களிச்சியம்மாள் மீது போலீசார் மற்றும் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து கடமலைக்குண்டு போலீசாரும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×