search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாகிஸ்தான்"

    • ஈரான்-பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
    • எல்லையில் ஈரான் படைகளை குறி வைத்து தாக்குதல் நடத்தப்படுகிறது.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானின் பலுசிஸ்தான் பஞ்ச்கூர் பகுதியில் செயல்படும் ஜெய்ஷ்-அல் அட்லி பயங்கரவாத இயக்கம் மீது ஈரான் ராணுவம் கடந்த மாதம் ஏவுகணைகள் வீசி தாக்குதல் நடத்தியது.

    இதற்கு பதிலடியாக ஈரானின் தென்கிழக்கு பகுதியில் பாகிஸ்தானுக்கு எதிரான பிரிவினைவாத அமைப்புகள் மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதனால் இரு நாடுகள் இடையே பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. பின்னர் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதில் அமைதி திரும்பியது.

    இந்த நிலையில் பாகிஸ்தானுக்குள் ஈரான் ராணுவம் புகுந்து மீண்டும் தாக்குதல் நடத்தி உள்ளது.

    இது தொடர்பாக ஈரான் அரசின் ஊடகத்தை மேற் கோள்காட்டி ஈரான் இன்டர்நேஷனல் நிறுவனம் கூறும் போது, ஈரானின் ராணுவ படைகள் பாகிஸ்தான் பிரதேசத்தில் தாக்குதல் நடத்தி ஜெய்ஷ்-அல்-அட்லி இயக்கத்தின் தளபதி இஸ்மாயில் ஷாபஷ், மற்றும் சிலரை கொன்றுள்ளது.

    பயங்கரவாதிகளுடன் நடந்த ஆயுத மோதலில் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தெரிவித்துள்ளது.

    இதனால் ஈரான்-பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 2012-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஜெய்ஷ்-அல்-அட்லி இயக்கம் அடிக்கடி ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. எல்லையில் ஈரான் படைகளை குறி வைத்து தாக்குதல் நடத்தப்படுகிறது. அந்த இயக்கத்தை பயங்கரவாத குழுவாக ஈரான் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • வாக்கு எண்ணிக்கையில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
    • இரு கட்சிகளிடையே ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது.

    பாகிஸ்தானின் இரண்டு பிரதான அரசியல் கட்சிகள் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் (PML - N) மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சி (PPP) அந்நாட்டில் கூட்டணி அரசாங்கத்தை அமைக்க முடிவு செய்துள்ளன. இது தொடர்பாக இரு கட்சிகளிடையே ஒப்பந்தம் கையெழுத்தாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    பெரும் பதற்றம் மற்றும் அரசியல் பரபரப்புக்கு இடையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் பாகிஸ்தானில் பொது தேர்தல் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து வாக்கு எண்ணிக்கையில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்று தெரிகிறது. அந்த வரிசையில், பாகிஸ்தானில் எந்த கட்சி ஆட்சி அமைக்கப்போகிறது மற்றும் அந்நாட்டின் புதிய பிரதமர் யார் என்ற கேள்விகள் தொடர்ந்து நீடித்து வந்தன.

    இந்த நிலையில், பாகிஸ்தான் மக்கள் கட்சி மற்றும் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க இருப்பதாக தெரிவித்துள்ளன. இரு கட்சிகளை சேர்ந்த முன்னணி தலைவர்கள் இதனை உறுதிப்படுத்தியுள்ளனர்.

    அதன்படி பாகிஸ்தானின் புதிய பிரதமர் வேட்பாளராக ஷெபாஸ் ஷெரிப், அதிபர் வேட்பாளராக ஆசிப் அலி சர்தாரி அறிவிக்கப்படுவதாக பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் பிலாவல் பூட்டோ சர்தாரி தெரிவித்துள்ளார்.

    "பாகிஸ்தான் மக்கள் கட்சி மற்றும் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் அடுத்த அரசாங்கத்தை அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மையை வைத்திருக்கின்றன," என்று பாகிஸ்தான் மக்கள் கட்சியின் பிலாவல் பூட்டோ தெரிவித்தார்.

    • பாகிஸ்தானில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது.
    • பூமியில் இருந்து 190 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது.

    பாகிஸ்தானில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக அந்நாட்டின் நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 4.7 ஆக பதிவாகி உள்ளது.

    இன்று அதிகாலை 12.57 மணி அளவில் பூமியில் இருந்து 190 கிலோமீட்டர்கள் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பான தகவலை அந்நாட்டு நில அதிர்வுக்கான தேசிய மையம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.

    அதில், "ரிக்டரில் 4.7 அளவிலான நிலநடுக்கம் 17-02-2024 அன்று 00.57.09 மணிக்கு பூமியில் இருந்து 190 கிலோமீட்டர்கள் ஆழத்தில் பாகிஸ்தானில் உணரப்பட்டது," என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    • அதிகாலை 3 மணிக்கு கையெறி குண்டுகள், துப்பாக்கியால் தாக்குதல்.
    • பயங்கரவாதிகளை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் உள்ள உள்ளது டெரா இஸ்மாயில் கான் மாவட்டம். இந்த மாவட்டத்தின் தராபன் தாலுகாவில் உள்ள காவல் நிலையம் மீது இன்று அதிகாலை 3 மணியளவில் பயங்கரவாதிகள் கடும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

    இநத் தாக்குதலில் காவல் நிலையத்தில் இருந்த 10 போலீசார் பரிதாபமாக உயிரிழந்தனர். 6 காயம் அடைந்தனர். பயங்கரவாதிகள் கடுமையான ஆயுதங்கள் மூலம் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. காவல் நிலையத்தை சுற்றி வளைத்து கையெறி குண்டுகள் மூலம் தாக்குதல் நடத்திய நிலையில், துப்பாக்கிச்சூடும் நடத்தியுள்ளனர்.

    போலீஸ் தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டதாகவும், அதிகாலை நேரம் என்பதால் அவர்கள் தப்பி ஓடி விட்டதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    போலீசார் அந்த பகுதியை சுற்றி வளைத்து பயங்கரவாதிகள் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பயங்கரவாதிகளை வேட்டையாடுவதற்கான அதிகப்படியான வீரர்கள் அப்பகுதிக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.

    கடந்த ஜனவரி மாதம் மட்டும் 93 தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும், இதில் 90 பொதுமக்கள் உயிரிழந்ததாகவும், 135 பேர் காயம் அடைந்ததாகவும் செய்தி நிறுவனம் ஒன்ற செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், 15 தனிநபர்கள் கடத்தப்பட்டுள்ளனர்.

    தேர்தல் அலுவலக கட்டிடம் மீது கையெறி குண்டு வீச்சு: 6 பேர் படுகாயம்

    பாகிஸ்தானில் வருகிற 8-ந்தேதி பொதுத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த சூழ்நிலையில் சில நாட்களாக அந்த நாட்டில் பல இடங்களில் வன்முறை சம்பவங்களும், குண்டு வெடிப்புகளும் நடந்து வருவது பதற்றத்தை அதிகரித்து உள்ளது.

    கடந்த வாரம் கராச்சியில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகம் அருகே குண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதன் தொடர்ச்சியாக பலுசிஸ்தான் மாகாணம் கலாட் நகர் முசுல் சராட் பகுதியில் உள்ள தேர்தல் அலுவலக கட்டிடத்தை குறி வைத்து மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் கையெறி குண்டுகளை வீசி விட்டு தப்பினார்கள்.

    இந்த குண்டு அலுவலக கட்டிடம் அருகே விழுந்து வெடித்தது. இந்த சம்பவத்தில் பாகிஸ்தான் மக்கள் கட்சியை சேர்ந்த 6 தொண்டர்கள் படுகாயம் அடைந்தனர்.

    இதுபற்றி அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அந்த பகுதியை சீல் வைத்து தங்கள் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்தனர். வெடித்த குண்டு எந்த வகையை சேர்ந்தது என்று தெரியவில்லை. அதனை போலீசார் ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். குண்டு வீசிய மர்ம மனிதர்களை தேடிவருகின்றனர்.

    தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களை தொடர்ந்து பாகிஸ்தான் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    • இம்ரான்கான் பல்வேறு ஊழல் வழக்குகளில் கைதுசெய்யப்பட்டு அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
    • அவர் மீதான வழக்குகளின் விசாரணை முடிந்து அவ்வப்போது தீர்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் பல்வேறு ஊழல் வழக்குகளில் கைது செய்யப்பட்டு அடியாலா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவர் மீதான வழக்குகளின் விசாரணை முடிந்து அவ்வப்போது தீர்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், இஸ்லாமிய நடைமுறைக்கு எதிரான திருமண வழக்கில் இம்ரான்கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீவி ஆகியோருக்கு தலா 7 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து கோர்ட்டு இன்று தீர்ப்பு வழங்கியது.

    இந்த வழக்கை புஷ்ரா பீவியின் முதல் கணவர் கவார் மனேகா தொடர்ந்திருந்தார். இந்த மனுவில், மறுமணத்திற்கான கட்டாய காத்திருப்பு காலம் என்ற இஸ்லாமிய நடைமுறையை (இத்தாத்) மீறியதாக கூறியிருந்தார். திருமணத்திற்கு முன் சட்டவிரோதமான உறவில் இருப்பது, கல்லால் அடித்துக் கொல்லப்படும் மரண தண்டனைக்குரிய குற்றம் எனவும் அவர் குற்றம்சாட்டியிருந்தார்.

    அடியாலா சிறையில் நேற்று நடந்த இறுதிக்கட்ட விசாரணை சுமார் 14 மணி நேரம் நீடித்தது. விசாரணை முடிவில், இம்ரான்கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீவி இருவரும் இஸ்லாமிய நடைமுறையை மீறி திருமணம் செய்திருப்பது உறுதி செய்யப்பட்டதால் இருவருக்கும் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

    • இருதரப்பினர் இடையே மோதல் நடைபெற்றது.
    • ஈரானியர்கள் அல்லாத ஒன்பது பேர் உயிரிழப்பு.

    ஈரானின் தென்கிழக்கு பகுதியை ஒட்டிய பாகிஸ்தான் எல்லை பகுதியில் துப்பாக்கி ஏந்திய மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் வெளிநாடுகளை சேர்ந்த ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர் என ஈரான் செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. முன்னதாக இதே பகுதியில் இருதரப்பினர் இடையே மோதல் நடைபெற்ற நிலையில், இந்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

    "இன்று காலை அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் துப்பாக்கி சூடு நடத்தியதில் ஈரானியர்கள் அல்லாத ஒன்பது பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் சரவன் நகரை அடுத்த சிர்கான் பகுதியில் உள்ள வீட்டில் வைத்து நடைபெற்றது," என ஈரானை சேர்ந்த செய்தி நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

    இந்த துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு இதுவரை பயங்கரவாத அமைப்புகள் எதுவும் பொறுப்பேற்கவில்லை. முன்னதாக பாகிஸ்தான் மற்றும் ஈரான் இடையே பயங்கர மோதல் நடைபெற்ற நிலையில், தற்போது இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • கடும் குளிர் காரணமாக நிம்மோனியா பாதிப்பு ஏற்பட்டது.
    • லாகூரில் மட்டும் 47 பேர் உயிரிழந்தனர்.

    பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் கடந்த மூன்று வார காலத்தில் 200-க்கும் அதிகமான குழந்தைகள் உயிரிழந்துள்ளனர் என அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்து இருக்கிறது. கடும் குளிர் காரணமாக குழந்தைகள் நிம்மோனியாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.

    உயிரிழந்த குழந்தைகளில் பெரும்பாலானோர் நிம்மோனியா தடுப்பு மருந்து எடுத்துக் கொள்ளவில்லை என்றும் அவர்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியின்றி அவதியுற்று வந்ததாக பஞ்சாப் அரசு தெரிவித்து இருக்கிறது.

    கடும் குளிர் காரணமாக பள்ளிகளில் அதிகாலை இறைவணக்க கூட்டத்தை நடத்த அம்மாகாண அரசு ஏற்கனவே தடை விதித்து இருந்தது. இந்த தடை உத்தரவு ஜனவரி 31-ம் தேதி வரை அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    ஜனவரி 1-ம் தேதியில் இருந்து அம்மாகாணத்தில் 10 ஆயிரத்து 520 பேருக்கு நிம்மோனியா பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதில் உயிரிழந்த 220 குழந்தைகளின் வயது 5-க்கும் குறைவு ஆகும். மேலும் லாகூரை சேர்ந்த 47 பேர் உயிரிழந்துள்ளனர். 

    • ஈரானில் பயங்கரவாதிகளின் மறைவிடங்கள் மீது பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல் நடத்தியது.
    • ஈரானின் 7 இடங்களில் போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்ததில் 9 பேர் பலியாகினர்.

    தெஹ்ரான்:

    ஈரான் தாக்குதல் நடத்தியதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரானில் உள்ள பயங்கரவாதிகளின் மறைவிடங்கள் மீது பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல் நடத்தியது. ஈரானின் 7 இடங்களில் போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்ததில் 9 பேர் பலியாகினர்.

    தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை வெளியிட்ட அறிக்கையில், பாகிஸ்தான் வம்சாவளி பயங்கரவாதிகள் எங்களுக்கு எதிராக நாசவேலைக்கு திட்டமிட்டு இருப்பதாக உளவுத்துறை தகவல் கிடைத்துள்ளது. எனவே இந்த தாக்குதல் நடவடிக்கையை எடுப்பதற்கு பாகிஸ்தான் தள்ளப்பட்டது. அப்பாவி ஈரான் மக்களையோ, ஈரான் ராணுவத்தினரையோ குறிவைக்கவில்லை. ஈரான் எங்கள் சகோதர நாடு. அதன் மக்கள் மீது பாகிஸ்தான் மக்கள் மிகுந்த மதிப்பும், அன்பும் வைத்துள்ளனர். பிரச்சனைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதையே நோக்கமாக கொண்டுள்ளோம் என தெரிவித்திருந்தது.

    இந்நிலையில், இரு நாடுகளின் எல்லையில் உள்ள ஈரானியர் அல்லாத கிராமவாசிகள் மீது பாகிஸ்தான் நடத்திய ஆளில்லா டிரோன் தாக்குதலுக்கு ஈரான் வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    இரு நாடுகளுக்கு இடையே, நல்ல அண்டை நாடு மற்றும் சகோதரத்துவம் என்ற கொள்கையை கடைபிடிப்பதாகவும், தெஹ்ரானுக்கும் இஸ்லாமாபாத்துக்கும் இடையிலான உறவுகளை எதிரிகள் சிதைக்க அனுமதிக்காது என ஈரான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இதனிடையே பாகிஸ்தானுக்கான ஈரான் தூதர், தற்போது ஈரானில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அவர் மீண்டும் பாகிஸ்தானுக்கு திரும்பி செல்ல மாட்டார் என்று ஈரான் அறிவித்துள்ளது. தாக்குதல் குறித்து உடனடியாக விளக்கம் அளிக்குமாறு பாகிஸ்தானுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

    • பாகிஸ்தானின் விமானப்படை ஈரான் உள்ளே புகுந்து இந்த தாக்குதலை நடத்தி உள்ளது.
    • பாகிஸ்தானில் பயங்கரவாத அமைப்பு மீதான தாக்குதலில் ஈரானுக்கு இந்தியா ஆதரவு தெரிவித்துள்ளது.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் உள்ள பலுசிஸ்தான் மாகாணம் குஹி சாப் நகரில் ஜெய்ஷ் உல் அடல் பயங்கரவாத அமைப்பை குறி வைத்து ஈரான் ராணுவத்தின் புரட்சிப்படை ஏவுகணை மற்றும் டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது.

    இதில் ஏராளமான வீடுகள் இடிந்தன. இந்த தாக்குதலில் 2 குழந்தைகள் உயிரிழந்ததாக பாகிஸ்தான் தெரிவித்தது.

    தங்கள் நாட்டுக்குள் தாக்குதல் நடத்தியதற்கு பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்தது. ஈரான் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் எச்சரித்தது. மேலும் ஈரானுக்கான பாகிஸ்தான் தூதரை திரும்ப பெற்றது.

    இந்த தாக்குதல் குறித்து ஈரான் வெளியுறவுத்துறை மந்திரி ஹொனசன் அமீர் அப்துல்லா ஹியன் கூறும்போது, "பாகிஸ்தான் மண்ணில் பயங்கரவாதிகளை மட்டுமே குறி வைத்து தாக்கினோம். பாகிஸ்தானின் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாட்டை நாங்கள் மதிக்கிறோம். ஆனால் தேசிய பாதுகாப்பில் சமரசம் செய்ய அனுமதிக்க மாட்டோம் என்றார்.

    இந்தநிலையில் ஈரான் மீது தாக்குதல் நடத்தி பாகிஸ்தான் பதிலடி கொடுத்துள்ளது. ஈரான்-பாகிஸ்தான் எல்லையில் ஈரானில் இருந்து செயல்படும் பலுசிஸ்தான் விடுதலை முன்னணி, பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் ஆகிய இரண்டு பலூச் பிரிவினைவாத அமைப்புகள் மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தி உள்ளது.

    பாகிஸ்தானின் விமானப்படை ஈரான் உள்ளே புகுந்து இந்த தாக்குதலை நடத்தி உள்ளது. ஈரானுக்குள் உள்ள பலுச் பிரிவினைவாத முகாம்கள் மீது பாகிஸ்தான் விமானப்படை வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில் பிரிவினைவாத அமைப்புகளின் முகாம்கள் அழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த தாக்குதல்கள் காரணமாக இரண்டு நாடுகளுக்கு இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இதனால் பாகிஸ்தான்-ஈரான் இடையே பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.

    இந்த நிலையில் பாகிஸ்தானில் பயங்கரவாத அமைப்பு மீதான தாக்குதலில் ஈரானுக்கு இந்தியா ஆதரவு தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்லால் கூறும்போது, "இது ஈரானுக்கும்-பாகிஸ்தானுக்கும் இடையிலான விவகாரம். இந்தியாவை பொறுத்தவரை பயங்கரவாதத்தை பொறுத்துக்கொள்ள முடியாது என்ற சமரசமற்ற நிலைப்பாட்டை கொண்டு உள்ளது.

    தங்களது தற்காப்புக்காக நாடுகள் எடுக்கும் நடவடிக்கைகளை நாங்கள் புரிந்து கொள்கிறோம் என்றார்.

    அதேவேளையில் பாகிஸ்தானில் ஈரான் தாக்குதல் நடத்தியதற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

    • போலியோ தடுப்பு முகாமிற்கு பாதுகாப்பு வழங்க காவல்துறையினர் சென்றனர்
    • காயமடைந்தவர்களில் 2 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

    பாகிஸ்தானில் சமீப சில மாதங்களாக நாடு முழுவதும் ஆங்காங்கே பயங்கரவாதிகளால் துப்பாக்கிச் சூடு சம்பவங்களும், தற்கொலை படை தாக்குதல்களும் நடைபெறுகின்றன.

    பாகிஸ்தானின் வடமேற்கில் உள்ளது கைபர் பக்துங்க்வா பிராந்தியம் (Khyber Pakhtunkhwa province). இங்குள்ள பஜவுர் (Bajaur) மாவட்டத்தின் மெஹ்முந்த் பகுதியில், போலியோ நோய் தடுப்புக்காக தடுப்பூசி செலுத்தும் முகாம் ஒன்று நடைபெற இருந்தது.

    இதற்கு பாதுகாப்பு வழங்க காவல்துறையினர் நியமிக்கப்பட்டனர்.

    இப்பணிக்காக சுமார் 25 காவல்துறையினரை ஏற்றி கொண்டு சென்ற காவல்துறை டிரக் ஒன்றின் அருகே சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது.

    இந்த பயங்கரவாத தாக்குதலில் சுமார் 5 காவல்துறையினர் உயிரிழந்தனர்; 20 பேர் காயமடைந்தனர்.

    காயமடைந்த காவல்துறையினர் பஜவுர் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 2 பேர் ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    எதிர்பாராத இந்த குண்டு வீச்சு சம்பவத்தினால், அப்பகுதியில் நடைபெறுவதாக இருந்த போலியோ தடுப்பூசி முகாம் ரத்து செய்யப்பட்டது.

    "இது போன்ற கோழைத்தனமான தாக்குதல்களால் காவல்துறையினரின் மன உறுதியும் முனைப்பும் எந்த வகையிலும் குறைந்து விடாது" என கைபர் பக்துங்க்வா பிராந்திய காபந்து முதல்வர் அர்ஷத் ஹுசைன் ஷா தெரிவித்தார்.

    இன்னும் சில தினங்களில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடியும், பயங்கரவாத தாக்குதல்களும் அடுத்து வரும் ஆட்சிக்கு சவாலாக இருக்கும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

    • தேர்தலை ஒத்திவைக்கக் கோரும் தீர்மானம் நிறைவேற்றம்.
    • தீர்மானத்திற்கு பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் எதிர்ப்பு.

    பாகிஸ்தான் நாட்டில் பிப்ரவரி மாதம் 8-ம் தேதி பொது தேர்தல் நடத்துவதற்கு அந்நாட்டு தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. இதுதொடர்பாக ஏராளமான பிரச்சினைகள் ஏற்பட்ட நிலையில், பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் அறிவிக்கப்பட்ட தேதியில் தேர்தலை நடத்தி முடிக்க அந்நாட்டு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டு இருந்தது.

    இந்த நிலையில், பாகிஸ்தானில் அடுத்த மாதம் நடைபெற இருந்த பாராளுமன்ற தேர்தல் ஒத்திவைக்கப்படுகிறது. இதற்கான தீர்மானம் அந்நாட்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு உள்ளது. பாராளுமன்ற தேர்தலை ஒத்திவைக்க கோரும் தீர்மானத்திற்கு பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிஃப், பாகிஸ்தான் தகவல் தொடர்பு துறை மந்திரி முர்தாசா சோலங்கி எதிர்ப்பு தெரிவித்தனர்.

     


    தீர்மானத்தின் படி பாகிஸ்தானின் பெரும்பாலான பகுதிகளில் கடுமையான குளிர்காலம் நிலவுவதால், மக்கள் வாக்களிக்க அதிக எண்ணிக்கையில் வர முடியாத சூழல் ஏற்படலாம் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    திட்டமிட்டப்படி பாராளுமன்ற தேர்தலை நடத்தி முடிக்க அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், தேர்தலை ஒத்திவைக்கக் கோரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருப்பது அந்நாட்டு அரசியலில் பரபரப்பான சூழலை உருவாக்கியுள்ளது.

    • டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணி க்ரூப் ஏ-வில் இடம்பெற்றுள்ளது.
    • ஜூன் 29-ம் தேதி இறுதிப்போட்டி நடைபெற இருக்கிறது.

    டி20 உலகக் கோப்பை 2024 கிரிக்கெட் தொடர் ஜூன் 1-ம் தேதி துவங்க இருக்கிறது. இந்த தொடரை அமெரிக்கா மற்றும் கனடா இணைந்து நடத்துகின்றன. இந்த தொடரில் அதிகம் எதிர்பார்க்கப்படும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையேயான போட்டி ஜூன் 9-ம் தேதி நியூ யார்க் நகரில் நடைபெற இருக்கிறது.

    2024 உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணி க்ரூப் ஏ-வில் இடம்பெற்றுள்ளது. இந்தியாவுடன் பாகிஸ்தான், அமெரிக்கா, கனடா மற்றும் அயர்லாந்து அணிகளும் இடம்பெற்றுள்ளன.

    க்ரூப் சுற்றில் இந்திய அணி ஜூன் 5-ம் தேதி அயர்லாந்து அணியையும், ஜூன் 9-ம் தேதி பாகிஸ்தான் அணியையும், ஜூன் 12-ம் தேதி அமெரிக்காவுடனும், ஜூன் 15-ம் தேதி கனடாவையும் எதிர்கொள்ள இருக்கிறது.

    டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் அரையிறுதி போட்டி ஜூன் 26-ம் மற்றும் 27-ம் தேதிகளில் நடைபெற இருக்கிறது. பார்படோஸ்-இல் ஜூன் 29-ம் தேதி இறுதிப்போட்டி நடைபெற இருக்கிறது. 

    ×