search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பள்ளிக்கல்வித்துறை"

    • தமிழக அரசாணை அடிப்படையில் எனக்கான முழு ஓய்வூதிய பணப்பலன்களை முறைப்படுத்தி வழங்க உத்தரவிட வேண்டும் என ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன்.
    • கோர்ட்டு உத்தரவை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முறையாக ஏன் நிறைவேற்றவில்லை? என கேள்வி எழுப்பினார்.

    மதுரை:

    நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த ஞானபிரகாசம் என்பவர், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த அவமதிப்பு வழக்கில் கூறி இருந்ததாவது:-

    நெல்லை மாவட்டம் பழையபேட்டை கிராமத்தில் உள்ள ஊழியஸ்தானம் ஆசிரியர் பயிற்சி மையத்தில் 1966 ஆம் ஆண்டு முதல் அலுவலக உதவியாளராக 40 ஆண்டுகள் பணியாற்றி 2006 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றேன்.

    தமிழக அரசாணை அடிப்படையில் எனக்கான முழு ஓய்வூதிய பணப்பலன்களை முறைப்படுத்தி வழங்க உத்தரவிட வேண்டும் என ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன்.

    அந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதிகள், எனது மனுவினை பரிசீலனை செய்து பணப் பலன்களை வழங்க நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர். இதை எதிர்த்து அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மேல்முறையீட்டு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

    இந்நிலையில் எனக்கு பணப்பலன்கள் வழங்குவது தொடர்பாக ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவை அதிகாரிகள் தற்போது வரை நிறைவேற்றவில்லை. எனவே நீதிமன்ற உத்தரவை முறையாக நிறைவேற்றாத கல்வித்துறை அதிகாரிகள் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

    இந்த மனு நீதிபதி பட்டு தேவானந்த் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, கோர்ட்டு உத்தரவை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முறையாக ஏன் நிறைவேற்றவில்லை? என கேள்வி எழுப்பினார். பின்னர், இது குறித்து தமிழக பள்ளிக்கல் வித்துறை செயலாளர், ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி கல்வி இயக்குனர் ஆகியோர் வருகிற 19-ந்தேதி இந்த கோர்ட்டில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

    • பொது நூலக இயக்குனராக ஐ.ஏ.எஸ். அதிகாரி இளம்பகவத் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நியமனம் செய்யப்பட்டார்.
    • ஐ.ஏ.எஸ். அதிகாரி இளம்பகவத் முழு கூடுதல் பொறுப்பு வகிக்க பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அரசாணை பிறப்பித்துள்ளார்.

    சென்னை:

    பள்ளி கல்வித்துறையின் கீழ் வரும் பொது நூலக இயக்குனராக (முழு கூடுதல் பொறுப்பு) ஐ.ஏ.எஸ். அதிகாரி இளம்பகவத் கடந்த ஆண்டு (2022) ஜனவரி மாதம் நியமனம் செய்யப்பட்டார். அதோடு சேர்த்து, இல்லம் தேடி கல்வி திட்டத்தின் சிறப்பு பணி அலுவலராகவும் பணிபுரிந்து வந்தார்.

    அதையடுத்து கடந்த மாதம் (மே) இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் சிறப்பு பணி அலுவலர் பணியிடத்தில் இருந்து மாற்றம் செய்யப்பட்டு, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக இயக்குனராக நியமிக்கப்பட்டார்.

    இந்த நிலையில், காலியாக இருந்த இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் சிறப்பு பணி அலுவலர் பணியிடத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரி இளம்பகவத் முழு கூடுதல் பொறுப்பு வகிக்க பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா நேற்று அரசாணை பிறப்பித்துள்ளார்.

    • மாணவர்களை ஆசிரியர்கள் பிரம்பால் அடித்த காலம் போய், ஆசிரியர்களை மாணவர்கள் பிரம்பால் அடிக்கும் காலம் வந்துவிட்டது.
    • பள்ளிக் கல்வித்துறையில் நிலவி வரும் குளறுபடிகளை உடனடியாக களைய வேண்டும்.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    ஆசிரியர்களை இழிவாகப் பேசுவது, அவர்களுக்கு குறைந்த சம்பளம் கொடுப்பது, அதையும் உரிய நேரத்தில் கொடுக்காதது, கூடுதல் பளுவினை அவர்களுக்கு அளிப்பது, காலிப் பணியிடங்களை நிரப்பாதது போன்ற அவல நிலை தான் கடந்த இரண்டு ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் நடைபெற்று வருகிறது.

    அரசுப் பள்ளிகளில் மாதம் 15,000 ரூபாய் தொகுப்பூதியத்தில் பணியமர்த்தப்பட்ட பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பட்டதாரி மற்றும் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு கடந்த இரண்டு மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என்ற புகார் தற்போது வந்துள்ளது. மாணவர்களை ஆசிரியர்கள் பிரம்பால் அடித்த காலம் போய், ஆசிரியர்களை மாணவர்கள் பிரம்பால் அடிக்கும் காலம் வந்துவிட்டது; இதனை ஆசிரியர்கள் அட்ஜெஸ்ட் செய்து கொள்ள வேண்டும் என்று ஓர் உயர் கல்வித்துறை அமைச்சர் தெரிவித்திருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் அமைந்துள்ளது.

    பள்ளிக் கல்வித்துறையில் நிலவி வரும் குளறுபடிகளை உடனடியாக களையும் வகையில், ஆசிரியர்களுக்கான சம்பளத்தை உடனுக்குடன் வழங்கவும், காலிப் பணியிடங்களை அவ்வப்போது நிரப்பவும், பதவி உயர்வுகளை உடனுக்குடன் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • கடந்த 2021-ம் ஆண்டு மே மாதம் 21-ந்தேதி பள்ளிக்கல்வி இயக்குனர் பதவி முடிவுக்கு வந்தது.
    • இயக்குனர் பதவி அகற்றப்பட்டு, பள்ளிக்கல்வி ஆணையரே பள்ளிக்கல்வி சார்ந்த பணிகளை கவனித்து வந்தார்.

    சென்னை:

    மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிக்கல்வி சார்ந்த தேவைகளை பள்ளிக்கல்வி இயக்குனர் என்ற பதவியில் இருப்பவரின் கவனத்துக்கு கொண்டு சென்று, அவர் அரசிடம் தெரிவிப்பார். பின்னர் அது நிவர்த்தி செய்யப்பட்டு வந்தது.

    100 ஆண்டுகளுக்கு மேலான வரலாறை கொண்டது இந்த இயக்குனர் பதவி. கடந்த அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் பள்ளிக்கல்வி ஆணையர் என்ற பதவி உருவாக்கப்பட்டது. இந்த பதவி உருவாக்கப்பட்டது, இயக்குனர் பதவியை அகற்றுவதற்காக தான் என்று அப்போது பேசப்பட்டது.

    அதன்படி, கடந்த 2021-ம் ஆண்டு மே மாதம் 21-ந்தேதி பள்ளிக்கல்வி இயக்குனர் பதவி முடிவுக்கு வந்தது. அதற்கு பதிலாக பள்ளிக்கல்வி ஆணையர் பொறுப்பில் இருப்பவர், அனைத்து பணிகளையும் கவனிப்பார் என்று கூறப்பட்டது.

    இந்த அறிவிப்புக்கு அரசியல் கட்சி தலைவர்கள், ஆசிரியர் சங்கங்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது. இருப்பினும், இயக்குனர் பதவி அகற்றப்பட்டு, பள்ளிக்கல்வி ஆணையரே பள்ளிக்கல்வி சார்ந்த பணிகளை கவனித்து வந்தார். இந்த பதவியில் ஐ.ஏ.எஸ். அதிகாரி நந்தகுமார் இருந்தார்.

    இந்த நிலையில் கடந்த மாதம் (மே) பள்ளிக்கல்வி ஆணையராக இருந்த நந்தகுமாரை, மனிதவள மேம்பாட்டுத்துறைக்கு மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டது. அரசின் இந்த அறிவிப்பில் பள்ளிக்கல்வி ஆணையராக யாரையும் நியமிக்காமல் விட்டுவிட்டது. இதனால் மீண்டும் பள்ளிக்கல்வித் துறை இயக்குனர் பதவி கொண்டுவரப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகளவில் இருப்பதாக பேசப்பட்டது.

    இதற்கெல்லாம் பதில் அளிக்கும் வகையில், சென்னை தலைமை செயலகத்தில் சமீபத்தில் நிருபர்களை சந்தித்த பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம், பள்ளிக்கல்வி இயக்குனர் பதவி தொடர்பாக கேள்வி எழுப்பும்போது, 'இதுதொடர்பாக முதல்-அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று, நாங்கள் கொடுக்கும் பட்டியலில் அவர் யார் ஒருவரை தேர்வு செய்கிறாரோ? அவர்களை அறிவிப்போம்' என்றார்.

    அதன்படி, பள்ளிக்கல்வி இயக்குனராக அறிவொளியை தேர்வு செய்து பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பை நேற்று வெளியிட்டு இருக்கிறது. அறிவொளி இதற்கு முன்பு தொடக்க கல்வி இயக்குனராகவும், ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினராகவும், மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் 100 ஆண்டுகள் வரலாறு கொண்ட பள்ளிக் கல்வி இயக்குனர் பதவி 2 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடைமுறைக்கு வந்து உள்ளது.

    அத்துடன் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் கூடுதல் இயக்குனர் வி.சி.ராமேஸ்வரமுருகன், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் செயலாளராகவும், தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் மற்றும் பணிகள் கழக உறுப்பினர் செயலர் ச.கண்ணப்பன், தொடக்கக்கல்வி இயக்குனராகவும் நியமனம் செய்யப்பட்டிருக்கின்றனர்.

    அதேபோல், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் செயலாளர் மு.பழனிச்சாமி, பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்குனராகவும், பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்குனர் பெ.குப்புசாமி, தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் மற்றும் பணிகள் கழக உறுப்பினர் செயலாளராகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

    • அரசுப் பள்ளிகளின் நிர்வாக மேம்பாட்டுக்காக ஆசிரியர் அல்லாத பணியாளர்களின் பங்களிப்பு இன்றியமையாதது.
    • அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் அல்லாத பணியாளர்களான உதவியாளர், இளநிலை உதவியாளர்களின் வேலை நேரம் காலை 9 முதல் மாலை 4.45 மணி வரை என மாற்றி அமைக்கப்படுகிறது.

    சென்னை:

    அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களின் பணி நேரம் காலை 9 முதல் மாலை 4.45 மணி வரை என மாற்றப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக பள்ளிக் கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

    பள்ளிகளில் பணியாற்றும் அமைச்சுப் பணியாளர்களின் வேலை நேரம் காலை 10 முதல் 5.45 மணி வரையில் உள்ளதால், பள்ளி வருகைப் பதிவேட்டை முடித்தல், ஆசிரியர்களின் விடுப்புகளை குறித்தல், பிற அலுவல் பணிகளை மேற்கொள்வதில் நிர்வாகக் குறைபாடு ஏற்படுகிறது.

    பள்ளிகளின் அலுவலகப் பணிகளை மேற்கொள்ளவும், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் இல்லாத பணியாளர்களின் வேலை நேரம் ஒருங்கிணைக்கப்படவேண்டிய அவசியம் மற்றும் தேவை எழுகிறது.

    மேலும், அரசுப் பள்ளிகளின் நிர்வாக மேம்பாட்டுக்காக ஆசிரியர் அல்லாத பணியாளர்களின் பங்களிப்பு இன்றியமையாதது. எனவே, அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் அல்லாத பணியாளர்களான உதவியாளர், இளநிலை உதவியாளர்களின் வேலை நேரம் காலை 9 முதல் மாலை 4.45 மணி வரை என மாற்றி அமைக்கப்படுகிறது.

    கோடை விடுமுறை, பள்ளி விடுமுறை நாள்களில் ஆசிரியர் அல்லாத பணியாளர்களின் வேலை நேரம் காலை 10 முதல் மாலை 5.45 மணி வரை இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மாவட்ட அளவிலான பயிற்சி கடலூர் பெரியார் கலைக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
    • தொடர்ந்து ஆலோசனை உறுப்பினர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.

    கடலூர்:

    பள்ளிக்கல்வித்துறை சார்பில் உயர்கல்வி வழிகாட்டல் மற்றும் ஆலோசனை குழு உறுப்பினர்களுக்கான மாவட்ட அளவிலான பயிற்சி கடலூர் பெரியார் கலைக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமர் கிருட்டிணன் தலைமை தாங்கினார். பொருளியல் துறை இணை பேராசிரியர் ராமகிருஷ்ணன், சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார வளமைய மேற்பார்வையாளர் குமார் அனைவரையும் வரவேற்றார். இதில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவி திட்ட அலுவலர் சுந்தரேசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாழ்த்துரை ஆற்றினார். தொடர்ந்து ஆலோசனை உறுப்பினர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. முடிவில் என் எஸ் எஸ் உதவி பேராசிரியர் அருள்தாஸ் நன்றி கூறினார். 

    • 2022-23-ம் கல்வியாண்டுக்கான எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத் தேர்வுகள் நடந்து முடிந்துவிட்டன
    • பொதுத் தேர்வில் பிளஸ்-2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வுகளில் மொழித் தாள் தேர்வை சுமார் 50 ஆயிரம் பேர் எழுதவில்லை.

    சென்னை:

    2022-23-ம் கல்வியாண்டுக்கான எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத் தேர்வுகள் நடந்து முடிந்துவிட்டன. தேர்வை எழுதிய மாணவ-மாணவிகளின் விடைத்தாள் திருத்தும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.

    இந்த நிலையில் இந்த பொதுத் தேர்வில் பிளஸ்-2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வுகளில் மொழித் தாள் தேர்வை சுமார் 50 ஆயிரம் பேர் எழுதவில்லை என்ற தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவ்வளவு மாணவ-மாணவிகள் தேர்வு எழுதாதது ஏன்? காரணம் என்ன? என பல்வேறு கோணங்களில் பேசப்பட்டது.

    கல்வித்துறை இதில் தீவிரம் காட்டிய நிலையில், அதில் பெரும்பாலான மாணவர்கள் நீண்ட நாட்களாக பள்ளிக்கு வராதவர்கள் என்பது தெரியவந்தது. இந்த விவகாரம் கல்வித்துறைக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் வரும் கல்வியாண்டிலும் இதுபோன்ற பிரச்சினை வரக்கூடாது. அதில் சரியான கவனம் செலுத்த வேண்டும் என்று திட்டமிட்ட கல்வித்துறை இப்போதே அதற்கான முயற்சியில் களம் இறங்கி இருக்கிறது. அதன்படி, நீண்ட நாட்கள் பள்ளிக்கு வராத மாணவ-மாணவிகளின் விவரங்களை பள்ளிகளிடம் இருந்து பெற்று வருகிற 2-ந்தேதிக்குள் (செவ்வாய்க்கிழமை) அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும், பள்ளிக்கல்வித்துறை ஆணையர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆங்கிலம், தமிழ் வழிகளில் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களை கணக்கிட்டு நியமனம் செய்து அனுப்பிட வேண்டும்.
    • எந்தவொரு பள்ளியில் இருந்தும் ஆசிரியர்கள் விடுபடாது கண்காணித்தல் வேண்டும்.

    சென்னை:

    கல்வித்துறை இணை இயக்குனர் க.செல்வக்குமார் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஏப்ரல் 2023 இடைநிலைப்பள்ளி விடுப்புச் சான்றிதழ் பொதுத்தேர்வு தொடர்பாக கல்வி மாவட்டந்தோறும் அமைக்கப்பட்டுள்ள விடைத்தாள் மதிப்பீட்டு முகாம்களில் தங்கள் மாவட்டத்தில் தேர்வு எழுதிய மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப விடைத்தாள்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு பாடவாரியான எண்ணிக்கை விவரம் அனைத்து முகாம் அலுவலர்களுக்கும் வழங்கப்பட்டு உள்ளது.

    அந்த எண்ணிக்கைக்கு தக்கபடி மதிப்பீட்டு பணியை செய்து முடிக்க தேவையான ஆசிரியர்களின் எண்ணிக்கையினை சரியாக கணக்கிட்டு பாடவாரியான, பயிற்று மொழிவாரியான ஆசிரியர்களை உடனடியாக பணி விடுப்பு செய்து முகாம் பணிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

    மேலும் தமிழ் வழியில் போதிக்கும் ஆசிரியர்கள் தமிழ்வழி விடைத்தாள்களையும், ஆங்கில வழியில் போதிக்கும் ஆசிரியர்கள் ஆங்கில வழி விடைத்தாள்களை மட்டுமே மதிப்பீடு செய்ய வேண்டும் என்ற விதிமுறை பின்பற்றத் தக்க வகையில், தங்கள் மாவட்டத்தில் அமையும் மதிப்பீட்டு முகாமில் பெறப்படும் பயிற்று மொழி வாரியான விடைத்தாள்களின் எண்ணிக்கைக்கு தக்க விகிதத்தில் ஆங்கிலம், தமிழ் வழிகளில் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களை கணக்கிட்டு நியமனம் செய்து அனுப்பிட வேண்டும்.

    முகாம் பணிக்கான அட்டவணையில் மதிப்பீட்டு பணி குறிப்பிட்டு உள்ள நாட்களுக்குள் திட்டமிட்டு தொய்வில்லாமலும், காலதாமதமில்லாமலும் நடைபெற வேண்டும். மேற்படி மதிப்பீட்டு பணியினை மேற்கொள்ள தங்களது ஆளுகைக்குட்பட்ட அரசு பள்ளிகள், அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் அனைத்தில் இருந்தும் 10-ம் வகுப்பு போதிக்கும் தகுதி வாய்ந்த பாட ஆசிரியர்களை தவறாமல் பணியில் இருந்து விடுவித்து தேர்வாளர்களாக நியமனம் செய்து மதிப்பீட்டுப் பணியினை மேற்கொள்ள அறிவுறுத்தி அனுப்பி வைக்க வேண்டும்.

    எந்தவொரு பள்ளியில் இருந்தும் ஆசிரியர்கள் விடுபடாது கண்காணித்தல் வேண்டும். தனியார் பள்ளிகள் தங்களது ஆசிரியர்களை முகாம் பணிக்கு முழு எண்ணிக்கையில் அனுப்பி வைத்தால் மட்டுமே அப்பள்ளிக்கான தேர்வு முடிவு வெளியிடப்படும். எனவே ஆசிரியர்களின் மொத்த எண்ணிக்கைப்பட்டியலை தவறாது சரி பார்த்து ஆசிரியர்கள் விடுபடாமல் வரவழைத்தல் வேண்டும்.

    மேலும் ஒரு கல்வி மாவட்டத்தில் இரு முகாம்கள், மூன்று முகாம்கள் அமைக்கப் பெற்றிருப்பின் முகாம்களின் தேவைக்கேற்ப விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிக்கு எவ்வித குந்தகமும் ஏற்படாமல் தகுதி வாய்ந்த ஆசிரியர்களை சரிவர பிரித்து ஒதுக்கீடு செய்திட வேண்டும்.

    மதிப்பீட்டு பணிக்கு நியமனம் செய்யப்படும் ஆசிரியர்களுக்கு நாளைக்குள் (புதன்கிழமை) நியமன ஆணையினை தவறாமல் வழங்கிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • வரும் 10ம் தேதி முதல் 79 மையங்களில் பிளஸ்-2 விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட உள்ளன.
    • விடை குறிப்பு கசிந்தது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

    சென்னை:

    பிளஸ்-2 விடைத்தாள் மதிப்பீடு செய்யும் விடை குறிப்பு சமூக வலைதளத்தில் கசிந்ததால் பள்ளிக்கல்வித்துறை அதிர்ச்சி அடைந்துள்ளது.

    வரும் 10ம் தேதி முதல் 79 மையங்களில் பிளஸ்-2 விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட உள்ளன. விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு மட்டும் அனுப்பப்பட்ட பிளஸ்-2 விடை குறிப்பு சமூக வலைதளங்களில் வெளியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இந்நிலையில் விடை குறிப்பு கசிந்தது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

    • எஸ்.எஸ்.எல்.சி. மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு நேற்று தொடங்கி இருக்கிறது.
    • ஒன்பதாம் வகுப்பு வரையிலான ஆண்டு இறுதி தேர்வு குறித்த அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது.

    சென்னை:

    பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு பொதுத்தேர்வு முடிந்துவிட்ட நிலையில், அதனைத் தொடர்ந்து எஸ்.எஸ்.எல்.சி. மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு நேற்று தொடங்கி இருக்கிறது.

    தமிழ்நாட்டை பொறுத்தவரையில் 9 லட்சத்து 22 ஆயிரத்து 725 மாணவ-மாணவிகளும், புதுச்சேரியை பொறுத்தவரையில் 15 ஆயிரத்து 566 பேரும், தனித் தேர்வர்களாக 37 ஆயிரத்து 798 பேரும் என மொத்தம் 9 லட்சத்து 76 ஆயிரத்து 89 பேர் இந்த தேர்வை எழுத விண்ணப்பித்து இருந்தனர்.

    அதன்படி, விண்ணப்பித்தவர்களுக்கான ஹால்டிக்கெட் வழங்கப்பட்டு நேற்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் எஸ்.எஸ்.எல்.சி. மாணவ-மாணவிகள் தேர்வை ஆர்வமுடன் எழுதினார்கள்.

    இந்நிலையில் ஒன்பதாம் வகுப்பு வரையிலான ஆண்டு இறுதி தேர்வு குறித்த அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு ஏப்ரல் 28ம் தேதி கடைசி வேலை நாள் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

    1 முதல் 3-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்.17 முதல் ஏப்.21ம் தேதிக்குள் ஆண்டு இறுதித்தேர்வை முடிக்க வேண்டும்.

    4 முதல் 9-ம் வகுப்புகளுக்கு ஏப்ரல் 10 முதல் ஏப். 28ம் தேதிக்குள் இறுதித்தேர்வை நடத்த வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பள்ளி மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வை முன்கூட்டியே நடத்தி முடிக்க கல்வித்துறை அதிகாரிகள் திட்டமிட்டு இருக்கிறார்கள்.
    • நாடு முழுவதும் இன்புளூயன்சா எச்3 என்2 வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது.

    சென்னை:

    தமிழகத்தில் பிளஸ்-2 மற்றும் பிளஸ்-1 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நடந்து வருகிறது. இந்த தேர்வுகள் ஏப்ரல் மாதம் 5-ந் தேதி முடிவடைகிறது. அதன்பிறகு ஏப்ரல் 6-ந் தேதி 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு தொடங்கி ஏப்ரல் 20-ந் தேதி முடிகிறது.

    அதன்பிறகு 1 முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டு இறுதி தேர்வை நடத்த முடிவு செய்யப்பட்டு இருந்தது. அதன்படி ஏப்ரல் 24-ந் தேதி முதல் ஏப்ரல் 30-ந் தேதி வரை ஆண்டு இறுதித்தேர்வை நடத்த திட்டமிடப்பட்டது. அதற்கான தேர்வு அட்டவணையும் வெளியிடப்பட்டது.

    இந்த நிலையில் 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வை முன்கூட்டியே நடத்தி முடிக்க கல்வித்துறை அதிகாரிகள் திட்டமிட்டு இருக்கிறார்கள்.

    தற்போது நாடு முழுவதும் இன்புளூயன்சா எச்3 என்2 வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இது தொடர்பாக மத்திய அரசும் தகுந்த பாதுகாப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு மாநில அரசுகளை அறிவுறுத்தியுள்ளது. இதன்படி பல்வேறு மாநிலங்களும் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

    இந்த வைரஸ் காய்ச்சல் நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்களையும், குழந்தைகளையும் அதிகளவில் தாக்கும் என்பதால் தெலுங்கானா மாநிலத்தில் அரைநாள் மட்டுமே பள்ளிகள் இயங்குகின்றன.

    எனவே வைரஸ் காய்ச்சல் பரவி வருவதாலும், இந்த ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வாளர்கள் கணித்திருப்பதாலும் பட்டதாரி ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணிக்கு செல்வதாலும், தமிழகத்தில் 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை ஆண்டு இறுதித்தேர்வு முன்கூட்டியே நடத்தப்படுகிறது. 24-ந் தேதி தொடங்க இருந்த தேர்வை ஒருவாரத்துக்கு முன்னதாக, அதாவது ஏப்ரல் 17-ந் தேதியே தொடங்கி 24-ந் தேதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • ‘101 சோத்தியங்கள்' என்ற தமிழ் திரைப்படத்தை வருகிற 17-ந் தேதிக்குள் திரையிட வேண்டும்.
    • ஒவ்வொரு பள்ளியிலும் திரைப்படம் திரையிடல் நடவடிக்கைக்காக ஒரு ஆசிரியருக்கு பொறுப்பு அளிக்க வேண்டும்.

    சென்னை:

    அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் சிறார் திரைப்படங்கள் ஒவ்வொரு மாதமும் திரையிடப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் இந்த மாதம் '101 சோத்தியங்கள்' என்ற தமிழ் திரைப்படத்தை வருகிற 17-ந் தேதிக்குள் (வெள்ளிக்கிழமை) திரையிட வேண்டும்.

    இந்த திரைப்படம் கிராமத்தில் வாழும் 12 வயது சிறுவனை பற்றிய கதை ஆகும். 60-வது தேசிய திரைப்பட விருதுகளில் சிறந்த குழந்தை கலைஞர் மற்றும் சிறந்த அறிமுக திரைப்படத்துக்கான விருதையும் இந்த படம் வென்றிருக்கிறது.

    ஒவ்வொரு பள்ளியிலும் திரைப்படம் திரையிடல் நடவடிக்கைக்காக ஒரு ஆசிரியருக்கு பொறுப்பு அளிக்க வேண்டும். அனைத்து நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 6 முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் அனைவரும் சிறார் திரைப்படத்தை பார்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேற்கண்ட தகவல் கல்வித்துறை சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×