search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில்"

    • திருக்கல்யாணம், சஹஸ்ர தீப அலங்கார சேவை ரத்து செய்யப்பட்டது.
    • வசந்தோற்சவம் கோலாகலமாகத் தொடங்கியது.

    வசந்த காலத்தில் சூரியன் பிரகாசமாக இருக்கும். சூரியக் கதிர்களின் வெப்பத்தால் உயிர்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகின்றன. உலக அன்னையான மற்றும் பூமிதேவியின் அம்சமான திருச்சானூர் பத்மாவதி தாயாரை வழிபடுவதால் உடல் மற்றும் மன உபாதைகள் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. சூரிய வெப்பத்தில் இருந்து நிவாரணம் பெறுவதற்காக பத்மாவதி தாயாருக்கு ஆண்டு தோறும் வசந்தோற்சவம் நடத்தப்படுகிறது.

    இந்த ஆண்டுக்கான வசந்தோற்சவம் திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் கோலாகலமாகத் தொடங்கியது. முதல் நாளான நேற்று அதிகாலை சுப்ரபாதத்தில் தாயாரை துயிலெழுப்பி சஹஸ்ர நாமார்ச்சனை, மதியம் 2.30 மணிக்கு கோவிலில் இருந்து சுக்கிர வார தோட்டத்துக்கு உற்சவர் பத்மாவதி தாயாரை மேள தாளம் மற்றும் மங்கல வாத்தியங்கள் இசைக்க ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.

    அங்கு மதியம் 2.30 மணியில் இருந்து மாலை 4.30 மணி வரை மஞ்சள், குங்குமம், சந்தனம், பால், தயிர், தேன், இளநீர் ஆகிய நறுமணப் பொருட்களால் அபிஷேகம் செய்து, பல்வேறு வகையான மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது.

    அதைத்தொடர்ந்து மாலை அன்னமாச்சாரியார் திட்டத்தின் கீழ் ஆன்மிக இசை நிகழ்ச்சிகள் நடந்தன. இரவு 7.30 மணியில் இருந்து இரவு 8.30 மணி வரை உற்சவர் பத்மாவதி தாயார் சிறப்பு அலங்காரத்தில் கோவிலின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வசந்தோற்சவத்தையொட்டி நேற்று கோவிலில் நடக்க இருந்த திருக்கல்யாணம், சஹஸ்ர தீப அலங்கார சேவை ரத்து செய்யப்பட்டது. வசந்தோற்சவத்தின் 2-வது நாளான இன்று (வெள்ளிக்கிழமை) கோவிலின் நான்கு மாடவீதிகளில் தங்கத்தேரோட்டம் நடக்கிறது.

    • வாசனை பொருட்கள் கலந்த புனித நீர் கோவில் முழுவதும் தெளிக்கப்படுகிறது.
    • புதன்கிழமை மாலை 6 மணிக்கு அங்குரார்ப்பணம் நடக்கிறது.

    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர வசந்தோற்சவம் வருகிற 4-ந்தேதியில் இருந்து 6-ந்தேதி வரை நடக்கிறது. இதற்காக நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணியில் இருந்து காலை 9 மணிவரை கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி நடக்கிறது. அதில் கோவில் வளாகம், சுவர்கள், மேற்கூரை, பூஜை பொருட்கள் ஆகியவை தண்ணீரால் சுத்தம் செய்யப்படுகிறது.

    அதன் பிறகு நாமகொம்பு, ஸ்ரீசூரணம், கஸ்தூரி மஞ்சள், கற்பூரம், சந்தனப் பொடி, குங்குமம், கிச்சிலி கட்டை ஆகிய வாசனை பொருட்கள் கலந்த புனித நீர் கோவில் முழுவதும் தெளிக்கப்படுகிறது.

    இதையடுத்து காலை 9 மணியில் இருந்து பக்தர்கள் பத்மாவதி தாயாரை தரிசிக்க கோவிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். நாளை மறுநாள் (புதன்கிழமை) மாலை 6 மணிக்கு அங்குரார்ப்பணம் நடக்கிறது.

    • மே 5-ந்தேதி தங்கத்தேரோட்டம் நடக்கிறது.
    • ஆர்ஜித சேவைகள் மே 2-ந்தேதி முதல் 6-ந்தேதி வரை ரத்து.

    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் அடுத்த மாதம் (மே) 4-ந்தேதியில் இருந்து 6-ந்தேதி வரை வசந்தோற்சவம் நடக்கிறது. இதற்காக மே மாதம் 2-ந்தேதி காலை 6 மணியில் இருந்து காலை 9 மணிவரை கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணியும், 3-ந்தேதி மாலை 6 மணிக்கு அங்குரார்ப்பணமும் நடக்கிறது.

    விழாவின் ஒரு பகுதியாக மே மாதம் 5-ந்தேதி காலை 9.10 மணிக்கு தங்கத்தேரோட்டம் நடக்கிறது. வசந்தோற்சவத்தின் 3 நாட்களும் கோவில் அருகில் உள்ள சுக்கரவாரித் தோட்டத்தில் மதியம் 2.30 மணியில் இருந்து மாலை 4.30 மணி வரை உற்சவர் பத்மாவதி தாயாருக்கு ஸ்நாபன திருமஞ்சனமும், இரவு 7.30 மணியில் இருந்து இரவு 8.30 மணி வரை கோவிலின் நான்கு மாட வீதிகளில் பத்மாவதி தாயார் ஊர்வலமும் நடக்கிறது.

    கோவில் ஆழ்வார் திருமஞ்சனத்தால் மே மாதம் 3-ந்தேதி கல்யாணோற்சவம், சஹஸ்ர தீபலங்கார சேவை, அஷ்டோத்தர சதகலசாபிஷேகம், மே மாதம் 5-ந்தேதி லட்சுமி பூஜை உள்ளிட்ட ஆர்ஜித சேவைகள் மே மாதம் 2-ந்தேதியில் இருந்து 6-ந்தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • எந்த பெருமாள் கோவிலுக்குச் சென்றாலும் அங்கே அருகிலேயே தாயார் சன்னதியும் இருக்கும்.
    • இந்த கோவிலை திருமணம் ஆகாதவர்கள் தரிசித்தால் திருமணத் தடை விலக்கும் தலம் இது.

    சென்னையில் இருந்து திருப்பதி செல்லும் வழியில் நாராயணவன கல்யாண வெங்கடேச பெருமாள் ஆலயம் உள்ளது. இதனை திருப்பதிக்கு சமமான ஒரு கோவில் என்பர். திருப்பதி போல அதிக கூட்டம் இல்லாத தலம் இது. பெருமாளையும் தாயாரையும் ஒரே இடத்தில் நிம்மதியாகத் தரிசனம் செய்யலாம். பத்மாவதி, ஸ்ரீநிவாசப்பெருமாளுக்கு திருமணம் நடந்த இடம் என்ற வரலாற்று பெருமையுடைய தலம் இது.

    சந்திரனை அடிப்படையாக கொண்ட சந்திர மாத கணக்குபடி வைகாசி மாத சுக்ல பட்ச தசமி திதியன்று நாராயணவனம் என்கிற இடத்தில்தான் பத்மாவதி ஸ்ரீநிவாசப்பெருமாளுக்கு திருமணம் நடந்துள்ளது. பெரும்பாலானோருக்கு ஒரு சந்தேகம் இருக்கும். பொதுவாக நாம் எந்த பெருமாள் கோவிலுக்குச் சென்றாலும் அங்கே அருகிலேயே தாயார் சன்னதியும் இருக்கும். ஆனால் திருப்பதியில் மட்டும் தாயார் எங்கோ தொலைவில் திருச்சானூரில் இருக்கிறாரே! ஏன் இப்படி?

    இதன் காரணம் என்னவெனில் திருப்பதி வெங்கடேஸ்வர பெருமாளின் ஊர். திருச்சானூர் பத்மாவதி தாயாரின் ஊர். பெருமாள் தாயாரைப் பார்க்க திருச்சானூருக்கு வந்தார். அதனால் அங்கு பெருமாளுக்கு தனி சன்னதி இருக்கிறது. ஸ்ரீ வெங்கடேச பெருமாளுக்கும், பத்மாவதி தாயாருக்கும் திருமணம் நடந்த இடம் நாராயண வனம். இங்கு பெருமாளும், தாயாரும் ஒரு சேரக் காட்சியளிக்கின்றனர்.

    இங்கு பெருமாள் மணமகன் அலங்காரத்திலும், தாயார் மணமகள் அலங்காரத்திலும் அருள்பாலிக்கின்றனர். திருப்பதியிலும், திருச்சானூரிலும் தனித்தனியாக இருக்கும் இவ்விருவரும் ஒன்று சேர்ந்து எழுந்தருளியிருப்பது காணக் கிடைக்காத அற்புதக் காட்சி. நாராயணவனத்தில் உள்ள கல்யாண ஸ்ரீநிவாச பெருமாள் கோவில் திருப்பதியை விட பழமையான கோவிலாகும்.

    உடைவாள், கையில் திருமண காப்போடு பெருமாள் அருளும் இந்தத் திருத்தலம் உலகின் முதல் வெங்கடாஜலபதி கோவில் ஆகும். இடுப்பில் உடைவாளோடு, கையில் கல்யாண காப்போடு பெருமாள் இருக்கும் கோவில்கள் இரண்டு. ஒன்று குணசீலம் இன்னொன்று நாராயணவனம். இந்த கோவிலை திருமணம் ஆகாதவர்கள் தரிசித்தால் திருமணத் தடை விலக்கும் தலம் இது.

    திருப்பதி, திருமலை செல்பவர்கள் கீழ்த்திருப்பதியில் கோவிந்தராஜ பெருமாள் கோவில் உட்பட பார்க்கவேண்டிய கோவில்கள் சில உள்ளன. மேர் திருப்பதியில் வெங்கடாஜலபதியைப் பார்த்துவிட்டு, பாபநாசம் நீர்வீழ்ச்சி, சிலாதோரணம் பூங்கா ஆகியவற்றைப் பார்க்கலாம். திருப்பதியில் இருந்து சென்னை வரும் வழியில் நாராயணவனம், நாகலாபுரம், சுருட்டப்பள்ளி ஆகிய தலங்களைப் பார்த்து வரலாம்.

    • இத்கோவிலுக்கு இணையான சிறப்பைப் பெற்றுள்ளது இங்கு வளர்க்கப்படும் யானை.
    • இத்திருக்கோவிலுக்கு இணையான சிறப்பைப் பெற்றுள்ளது இங்கு வளர்க்கப்படும் யானை.

    திருப்பதி சென்று திருமலையில் அருள்பாலித்து வரும் ஸ்ரீவெங்கடாசலபதியை தரிசிக்கும் எவரும் திருச்சானூர் சென்று அங்கு வீற்றிருக்கும் பத்மாவதி தாயாரை வணங்காமல் திரும்பக்கூடாது என்று கூறுவார்கள்.ஏனெனில் திருப்பதியை பாலாஜியை வணங்குவதால் கிடைக்கும் அருள், பத்மாவதி தாயாரை வணங்குவதன் மூலம் நிறைவேறும் என்பது தொன்றுதொட்டு இத்திருத்தலங்களுக்குச் சென்று வரும் பக்தர்களின் நம்பிக்கையாகும்.

    திருப்பதி திருமலையில் திருமால் வீற்றிருக்க, திருப்பதியில் இருந்து 5 கி.மீ. தூரத்தில் உள்ள திருச்சானூர் என்றும் அலமேல் மங்காபுரம் என்றும் அழைக்கப்படும் புனிதத் தலத்தில் பத்மாவதி தாயாரின் அழகிய திருக்கோவில் உள்ளது.

    தன்னிடம் பிரார்த்திக்கும் பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றி தருபவர் பத்மாவதி தாயார் என்பதால் திருப்பதி திருமலையைப் போலவே இங்கும் பக்தர்களின் வருகை அன்றாடம் பல ஆயிரக்கணக்கில் இருந்து கொண்டே உள்ளது.

    தல புராணம் :திருச்சானூரில் வெங்கடாச்சலபதிக்கு ஒரு கோவில் இருந்தது. ஆனால் அந்த கோவில் மிகச் சிறியதாக இருந்ததால் எல்லா பூஜைகளையும் செய்ய முடியவில்லை என்பதற்காக சற்று தூரத்தில் மற்றொரு கோவில் கட்டப்பட்டது. அங்கு மிக முக்கியமான இரண்டு பூஜைகள் செய்யப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. அதன்பிறகு அந்தக் கோவிலிலும் போதுமான இட வசதி இல்லை என்று கூறி மீண்டும் விக்ரகங்கள் வேறு ஒரு இடத்திற்குக் கொண்டு செல்லப்பட்டன.

    12-வது நூற்றாண்டில் அப்பொழுது இப்பகுதியை ஆண்டு யாதவ அரசர்கள் ஸ்ரீ கிருஷ்ண பலராமர் கோவிலைக் கட்டினர். அந்தக் கோவிலில் நான்கு நூற்றாண்டுகளுக்குப் பிறகு அதாவது 16வது, 17வது நூற்றாண்டுகளில் சுந்தரவரதராஜர் பிரதிஷ்டை செய்யப்பட்டார். அந்த நேரத்தில்தான் பத்மாவதி தாயாருக்கு தற்பொழுதுள்ள இந்தக் கோவில் கட்டப்பட்டது.புராணத்தின்படி அலமேல் மங்காபுரத்தில் உள்ள இக்கோவிலின் திருக்குளத்தில் உள்ள தாமரையில்தான் பத்மாவதி தாயார் அவதரித்ததாகக் கூறப்படுகிறது.

    இத்திருக்கோவிலில் பல கடவுள்களின் சன்னதிகள் உள்ளன. பத்மாவதி தாயார், திருமலை வெங்கடாச்சலபதியின் துணைவியார் என்றே வழங்கப்படுகிறார்.

    பத்மாசனத்தில் தனது கைகளில் தாமரை ஏந்தி இருக்கும் பத்மாவதி தாயாரின் திருவுருவம் வணங்குவோரிடையே பக்திப் பெருக்கை ஏற்படுத்துவதாகவும் இத்திருத்தலத்தில் உள்ள ஸ்ரீகிருஷ்ணர், பலராமர், சுந்தரராஜ சுவாமி, சூரிய நாராயண சுவாமி ஆகியோரின் விக்ரகங்களும் மிக ஆழகானவை.

    இத்திருக்கோவிலுக்கு இணையான சிறப்பைப் பெற்றுள்ளது இங்கு வளர்க்கப்படும் யானை. இந்த யானைதான் பத்மாவதித் தாயாரின் வாகனம். இத்திருக்கோவில் விழாக்களின் போது யானை உருவம் பொறிக்கப்பட்ட கொடியே ஏற்றப்படுகிறது.

    • சுப்ர பாதம், ஏகாந்த சேவை டிக்கெட் கட்டணம் இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.
    • சமீப காலமாக ரூ.10-க்கு லட்டு விற்பனை செய்யப்பட்டது.

    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் தற்போது ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. உயர்த்தப்பட்ட ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளின் விலை கடந்த டிசம்பர் மாதம் 8-ந்தேதி முதல் அமலுக்கு வந்தது. 2 ஆண்டுகளுக்கு முன்பு பரவிய கொரோனா தொற்றால் ரத்து செய்யப்பட்ட குங்குமார்ச்சனை சேவை தற்போது மீண்டும் தொடங்கி உள்ளது. குங்குமார்ச்சனை சேவை டிக்கெட்டின் விலை ரூ.200-ல் இருந்து ரூ.250 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

    ஏற்கனவே வழங்கப்பட்ட குங்குமார்ச்சனை சேவை டிக்கெட்டில் 2 பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். ஆனால், தற்போது ஒரு பக்தர் மட்டுமே அனுமதிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

    அபிஷேக சேவை டிக்கெட்டின் விலை ரூ.400 ஆக இருந்தது. தற்போது ரூ.500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. வாரத்தில் வியாழக்கிழமை தோறும் நடக்கும் திருப்பாவாடை சேவை டிக்கெட் ரூ.600-ல் இருந்து ரூ.1000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் திருமலையைப் போல் சுபதம் டிக்கெட் முறையை திருமலை-திருப்பதி தேவஸ்தானம் அறிமுகப்படுத்தி உள்ளது. சுபதம் டிக்கெட் விலை ரூ.200 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    சுப்ர பாதம், ஏகாந்த சேவை டிக்கெட் கட்டணம் இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. அபிஷேக அனந்தர தரிசனத்துக்கான டிக்கெட் ரூ.20 ஆக இருந்தது. தற்போது அந்த டிக்கெட் ரூ.250 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

    பத்மாவதி தாயார் கோவிலில் பல ஆண்டுகளாக ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் உயர்த்தப்படவில்லை. தற்போது ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளின் விலையை ஒரே அடியாக உயர்த்தி இருப்பது பக்தர்களிடையே வேதனையை ஏற்படுத்தி உள்ளது.

    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் சமீப காலமாக ரூ.10-க்கு லட்டு விற்பனை செய்யப்பட்டது. தற்போது மூலப்பொருட்களின் விலை உயர்வால் ஒரு லட்டு பிரசாதத்தின் விலை ரூ.25 ஆக உயர்த்தப்பட்டுள்ளது, பக்தர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

    திருமலை-திருப்பதி தேவஸ்தான ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள், லட்டு விலையை உயர்த்துவதற்கு முன்பாக பக்தர்களிடம் கருத்துகளை கேட்க வேண்டும் என அரசியல் கட்சி பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கொரோனா தொற்று பரவலின்போது திருமலை-திருப்பதி தேவஸ்தானம் அதிக லட்டு பிரசாதங்களை தயாரித்து, அதை விற்பனை செய்ய முடியாமல் ரூ.50-க்கு விற்பனை செய்த லட்டுவை ரூ.25-க்கு மானிய விலையில் விற்பனை செய்தது. அந்த லட்டு பிரசாதத்தின் எடை 175 கிராம் முதல் 180 கிராம் வரை இருந்தது. ஒரு லட்டுவை தயாரிக்க ஆகும் செலவு தொகை ரூ.40 ஆக இருந்தது. ஆனால், லட்டுவின் விலையை தற்போது ரூ.50-க்கு விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

    எனினும், சாமி தரிசனம் செய்ய வரும் பக்தருக்கு இலவசமாக ஒரு லட்டு பிரசாதம் வழங்கி வருவது நடந்து வருகிறது. இருப்பினும், திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் உயா்த்தப்பட்ட லட்டு பிரசாதத்தின் விலையை குறைக்க தேவஸ்தானம் பரிசீலனை செய்ய வேண்டும், என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • திருச்சானூர் கோவிலில் வருகிற 28-ந்தேதி ரதசப்தமி நடக்கிறது.
    • புனிதநீர் கோவில் முழுவதும் தெளிக்கப்பட்டது.

    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருகிற 28-ந் தேதி ரதசப்தமி நடக்கிறது. இதனை முன்னிட்டு கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் நேற்று நடைபெற்றது. அதிகாலையில் தாயார் சுப்ரபாதத்தில் எழுந்தருளி சஹஸ்ரநாம அர்ச்சனை நடந்தது.

    அதன்பின்னர் காலை 6.30 மணி முதல் 9 மணி வரை கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் நடத்தப்பட்டது. இதில், கோவில் வளாகம், சுவர்கள், மேற்கூரை, பூஜை பொருட்கள் உள்ளிட்டவை தண்ணீர் கொண்டு சுத்திகரிக்கப்பட்டன. அதன்பின், நாமகோபு, ஸ்ரீசூர்ணம் மற்றும் பல்வேறு சுகந்தவாசனை திரவியங்கள் கலந்த புனிதநீர் கோவில் முழுவதும் தெளிக்கப்பட்டது.

    இதன் காரணமாக கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை ரத்து செய்யப்பட்டது.

    • 24-ந் தேதி கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம் நடக்கிறது.
    • 7 வாகனங்களில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.

    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருகிற 28-ந் தேதி ரதசப்தமி விழா நடக்கிறது. விழாவையொட்டி 7 வாகனங்களில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். காலை 7 மணி முதல் 8 மணி வரை சூரியபிரபை வாகனத்திலும், 8.30 மணி முதல் 9.30 மணி வரை ஹம்ச வாகனத்திலும், 10 மணி முதல் 11 மணி வரை அஸ்வ வாகனத்திலும், 11.30 மணி முதல் 12.30 மணி வரை கருட வாகனத்திலும் எழுந்தருளி காட்சியளிக்கிறார்.

    அதேபோன்று மதியம் 1 மணி முதல் 2 மணி வரை சின்னசேஷ வாகனத்திலும், மாலை 6 மணி முதல் 7 மணி வரை சந்திரபிரபை வாகனத்திலும், இரவு 8.30 மணி முதல் 9.30 மணி வரை கஜ வாகன சேவை நடக்கிறது. முன்னதாக மாலை 3.30 மணி முதல் 4.30 மணி வரை பத்மாவதி தாயார் கோவிலில் உள்ள கிருஷ்ணசுவாமி முகமண்டபத்தில் தாயார் உற்சவருக்கு திருமஞ்சனம் நடத்தப்படுகிறது. இதை முன்னிட்டு கோவிலில் ஆர்ஜித கல்யாண உற்சவம், சாமவேத புஷ்பாஞ்சலி, சஹஸ்ரதிபாலங்கர சேவைகள் ரத்து செய்யப்படுகிறது.

    ரதசப்தமியை முன்னிட்டு வருகிற 24-ந் தேதி கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெறுகிறது.

    • 12 வகையான பூக்கள், இலைகள் புஷ்ப யாகத்தில் பயன்படுத்தப்பட்டன.
    • நிகழ்ச்சியில் அர்ச்சகர்கள், அதிகாரிகள், பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் நடைபெற்று வந்த கார்த்திகை பிரம்மோற்சவ விழா நேற்று நிறைவடைந்தது. இதனை முன்னிட்டு நேற்று மாலை புஷ்பயாகம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக காலை 10.30 மணி முதல் 12 மணி வரை தாயாருக்கு திருமஞ்சனம் நடத்தப்பட்டது. இதையொட்டி பால், தயிர், தேன், இளநீர், மஞ்சள், சந்தனம் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

    தேவஸ்தான தோட்டக்கலைத் துறைக்கு நன்கொடையாளர்கள் தமிழகத்தில் இருந்து 2½ டன் மலர்களும், ஆந்திரா,தெலுங்கானா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்து 1½ டன் மலர்களும் வழங்கப்பட்டது. இந்த 4 டன் மலர்களால் பத்மாவதி தாயாருக்கு புஷ்ப யாகம் நடத்தப்பட்டது.

    முன்னதாக மதியம் 1.30 மணிக்கு ஆஸ்தானமண்டபத்தில் இருந்து அதிகாரிகள் மற்றும் பக்தர்கள் கோவிலின் நான்கு மாடவீதிகள் வழியாக மலர்களை பத்மாவதி தாயார் கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். கிருஷ்ணசுவாமி முக மண்டபத்தில் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை புஷ்பயாகம் நடைபெற்றது.

    சாமந்தி, சம்பங்கி, ரோஜா, மல்லிகை, தாழம்பூ, கனகாம்பரம், தாமரை, முல்லை, மனுசம்பங்கி, செண்டு, பவழப்பூக்கள், மருவம், தவனம், வில்வம் துளசி போன்ற இலைகள் உள்ளிட்ட 12 வகையான பூக்கள், இலைகள் புஷ்ப யாகத்தில் பயன்படுத்தப்பட்டன.

    நிகழ்ச்சியில் அர்ச்சகர்கள், அதிகாரிகள், பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

    • குளத்தில் நீராடுவதற்காக அதிகாலை முதலே பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர்.
    • நாளை பத்மாவதி தாயார் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு புஷ்ப யாகம் நடைபெறுகிறது.

    திருப்பதி திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் கடந்த 19-ந் தேதி அங்குரார்பணமும், 20-ந் தேதி கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவ விழா தொடங்கியது.

    இதையடுத்து தினமும் காலை, மாலை என இருவேளையில் பல்வேறு வாகனங்களில் மாட வீதிகளில் பத்மாவதி தாயார் வீதி உலா வந்தார். நேற்று காலை ரத உற்சவமும், மாலை அம்ச வாகன ஊர்வலம் நடந்தது.

    பிரம்மோற்சவ நிறைவு நாளான இன்று சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடந்தது. இதனை கண்டுகளிக்க தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்சானூரில் குவிந்தனர்.

    காலை 7 மணிக்கு பல்லக்கு உற்சவமும், 11.20 மணி முதல் 11.50 மணி வரை பஞ்சமி தீர்த்த குளத்தில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடந்தது.

    முன்னதாக அச்சர்கள் சக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு பூஜைகள் செய்து கோவிலில் இருந்து தீர்த்தவாரி குளத்திற்கு கொண்டு வந்தனர். குளத்தை சுற்றிலும் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து கோவிந்தா, கோவிந்தா என பக்தி பரவசத்துடன் கோஷமிட்டனர்.

    குளத்தில் நீராடுவதற்காக அதிகாலை முதலே பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர். அவர்கள் தீர்த்தவாரி முடிந்தவுடன் குளத்தில் புனித நீராடினர்.

    இதையடுத்து மாலை குதிரை வாகனத்தில் பத்மாவதி தாயார் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    இரவு 9.30 மணியிலிருந்து 10.30 மணிக்குள் கொடி இறக்கம் நடைபெறுகிறது. நாளை மாலை பத்மாவதி தாயார் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு புஷ்ப யாகம் நடைபெறுகிறது.

    • இன்று சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடக்கிறது.
    • இன்று இரவு கொடியிறக்கத்துடன் பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது.

    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது. விழாவின் 8-வது நாளான நேற்று காலை 7.10 மணியில் இருந்து காலை 10 மணிவரை தேரோட்டம் நடந்தது. தேரில் உற்சவர் பத்மாவதி தாயார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். திரளான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

    அதைத்தொடர்ந்து மதியம் 12 மணியில் இருந்து ரத மண்டபத்தில் பத்மாவதி தாயாருக்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர், தேன், பாலாடைக்கட்டி, பல்வேறு வகையான பழங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதன்பின் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. மாலை 5.30 மணியில் இருந்து மாலை 6 மணி வரை ஊஞ்சல் சேவை நடந்தது.

    அதைத்தொடர்ந்து இரவு 7 மணியில் இருந்து இரவு 9 மணிவரை குதிரை வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர் பத்மாவதி தாயார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    கார்த்திகை பிரம்மோற்சவ விழாவின் 9-வது நாளான இன்று (திங்கட்கிழமை) காலை கோவில் புஷ்கரணியில் பஞ்சமி தீர்த்தம் எனப்படும் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடக்கிறது. அதைத்தொடர்ந்து இரவு கொடியிறக்கத்துடன் பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது.

    • லட்சக்கணக்கான பக்தர்கள் புனிதநீராடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
    • பக்தர்களுக்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. இன்று (திங்ட்கிழமை) காலை பஞ்சமி தீர்த்தம் எனப்படும் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நிகழ்ச்சி காலை 11.40 மணியில் இருந்து பகல் 11.50 மணி வரை நடக்கிறது.

    அதில் லட்சம் பக்தர்கள் பங்கேற்று புனிதநீராடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான விரிவான ஏற்பாடுகளை திருமலை-திருப்பதி தேவஸ்தானம் செய்துள்ளது.

    இதுகுறித்து திருமலை-திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது:-

    திருச்சானூரில் நடக்கும் கார்த்திகை பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பஞ்சமி தீர்த்தம் உற்சவத்தை சிரமமின்றி நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது. சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் அமர்ந்து ஓய்வெடுக்க ஜெர்மன் ஷெட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

    அதில் பக்தர்கள் ஓய்வெடுத்ததுப் போக மீதி உள்ள பக்தர்களுக்கு திருச்சானூர் அய்யப்பன் கோவில், ஜில்லா பரிஷத் உயர்நிலைப்பள்ளி, புடி ரோடு ஆகிய இடங்களிலும் ஜெர்மன் ஷெட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. ஜெர்மன் ஷெட்டுகள் அமைக்கப்பட்டுள்ள இடங்களில் பக்தர்களுக்கு தற்காலிக கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    அங்கு பக்தர்களுக்கு உணவு, குடிநீர் மற்றும் தேநீர், காபி ஆகியவை வழங்கப்படும். பக்தர்களுக்கு உடல்நலப் பாதிப்பு ஏற்பட்டதால் சிகிச்சை அளிக்க மருத்துவ முகாம்கள் அமைக்கப்படும்.

    திருமலையில் உள்ள வெங்கடாசலபதி கோவிலில் இருந்து திருச்சானூர் பத்மாவதி தாயாருக்கு பட்டு வஸ்திரம் அனுப்பி வைக்கப்படும். பட்டு வஸ்திர ஊர்வலம் பாதுகாப்பாக நடத்தப்படும்.

    2 ஆண்டுகளுக்கு பிறகு கோவில் வெளியே புஷ்கரணியில் பஞ்சமி தீர்த்தம் நடப்பதால், அதில் பங்கேற்க லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களுக்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

    ஜெர்மன் ஷெட்டுகளில் இருந்து பக்தர்கள் புஷ்கரணிக்குச் செல்ல சிறப்பு கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. பக்தர்கள் புஷ்கரணிக்குச் சென்று புனித நீராட வசதியாக உள்ளே செல்லும் வழி, நீராடி விட்டு புஷ்கரணியில் இருந்து வெளியே போகும் வழி அமைக்கப்பட்டுள்ளது.

    பக்தர்களின் பாதுகாப்புக்காக 2 ஆயிரத்து 500 போலீசாரும், இதுதவிர திருமலை-திருப்பதி தேவஸ்தான பாதுகாப்பு மற்றும் பறக்கும்படை ஊழியர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    தேவஸ்தான ஊழியர்களுடன் 1000 ஸ்ரீவாரி சேவா சங்க தொண்டர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பக்தர்களுக்கு சேவைகளை செய்வார்கள். பக்தர்கள் அனைவரும் பொறுமை காத்து திருமலை-திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளுக்கு ஒத்துழைத்து புஷ்கரணியில் புனித நீராட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×