search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    திருச்சானூரில் மட்டும் பத்மாவதி தாயார் தனித்து கோவில் கொண்டிருப்பது ஏன்?
    X

    திருச்சானூரில் மட்டும் பத்மாவதி தாயார் தனித்து கோவில் கொண்டிருப்பது ஏன்?

    • எந்த பெருமாள் கோவிலுக்குச் சென்றாலும் அங்கே அருகிலேயே தாயார் சன்னதியும் இருக்கும்.
    • இந்த கோவிலை திருமணம் ஆகாதவர்கள் தரிசித்தால் திருமணத் தடை விலக்கும் தலம் இது.

    சென்னையில் இருந்து திருப்பதி செல்லும் வழியில் நாராயணவன கல்யாண வெங்கடேச பெருமாள் ஆலயம் உள்ளது. இதனை திருப்பதிக்கு சமமான ஒரு கோவில் என்பர். திருப்பதி போல அதிக கூட்டம் இல்லாத தலம் இது. பெருமாளையும் தாயாரையும் ஒரே இடத்தில் நிம்மதியாகத் தரிசனம் செய்யலாம். பத்மாவதி, ஸ்ரீநிவாசப்பெருமாளுக்கு திருமணம் நடந்த இடம் என்ற வரலாற்று பெருமையுடைய தலம் இது.

    சந்திரனை அடிப்படையாக கொண்ட சந்திர மாத கணக்குபடி வைகாசி மாத சுக்ல பட்ச தசமி திதியன்று நாராயணவனம் என்கிற இடத்தில்தான் பத்மாவதி ஸ்ரீநிவாசப்பெருமாளுக்கு திருமணம் நடந்துள்ளது. பெரும்பாலானோருக்கு ஒரு சந்தேகம் இருக்கும். பொதுவாக நாம் எந்த பெருமாள் கோவிலுக்குச் சென்றாலும் அங்கே அருகிலேயே தாயார் சன்னதியும் இருக்கும். ஆனால் திருப்பதியில் மட்டும் தாயார் எங்கோ தொலைவில் திருச்சானூரில் இருக்கிறாரே! ஏன் இப்படி?

    இதன் காரணம் என்னவெனில் திருப்பதி வெங்கடேஸ்வர பெருமாளின் ஊர். திருச்சானூர் பத்மாவதி தாயாரின் ஊர். பெருமாள் தாயாரைப் பார்க்க திருச்சானூருக்கு வந்தார். அதனால் அங்கு பெருமாளுக்கு தனி சன்னதி இருக்கிறது. ஸ்ரீ வெங்கடேச பெருமாளுக்கும், பத்மாவதி தாயாருக்கும் திருமணம் நடந்த இடம் நாராயண வனம். இங்கு பெருமாளும், தாயாரும் ஒரு சேரக் காட்சியளிக்கின்றனர்.

    இங்கு பெருமாள் மணமகன் அலங்காரத்திலும், தாயார் மணமகள் அலங்காரத்திலும் அருள்பாலிக்கின்றனர். திருப்பதியிலும், திருச்சானூரிலும் தனித்தனியாக இருக்கும் இவ்விருவரும் ஒன்று சேர்ந்து எழுந்தருளியிருப்பது காணக் கிடைக்காத அற்புதக் காட்சி. நாராயணவனத்தில் உள்ள கல்யாண ஸ்ரீநிவாச பெருமாள் கோவில் திருப்பதியை விட பழமையான கோவிலாகும்.

    உடைவாள், கையில் திருமண காப்போடு பெருமாள் அருளும் இந்தத் திருத்தலம் உலகின் முதல் வெங்கடாஜலபதி கோவில் ஆகும். இடுப்பில் உடைவாளோடு, கையில் கல்யாண காப்போடு பெருமாள் இருக்கும் கோவில்கள் இரண்டு. ஒன்று குணசீலம் இன்னொன்று நாராயணவனம். இந்த கோவிலை திருமணம் ஆகாதவர்கள் தரிசித்தால் திருமணத் தடை விலக்கும் தலம் இது.

    திருப்பதி, திருமலை செல்பவர்கள் கீழ்த்திருப்பதியில் கோவிந்தராஜ பெருமாள் கோவில் உட்பட பார்க்கவேண்டிய கோவில்கள் சில உள்ளன. மேர் திருப்பதியில் வெங்கடாஜலபதியைப் பார்த்துவிட்டு, பாபநாசம் நீர்வீழ்ச்சி, சிலாதோரணம் பூங்கா ஆகியவற்றைப் பார்க்கலாம். திருப்பதியில் இருந்து சென்னை வரும் வழியில் நாராயணவனம், நாகலாபுரம், சுருட்டப்பள்ளி ஆகிய தலங்களைப் பார்த்து வரலாம்.

    Next Story
    ×