search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குடியரசுத் தலைவர்"

    • க்ரயோஜெனிக் உற்பத்தி திறன் கொண்ட உலகின் ஆறாவது நாடாக இந்தியா திகழ்கிறது.
    • தொழில்நுட்ப ரீதியாக வளர்ச்சி பெற்ற நாடுகளின் கவனத்தை இந்தியா ஈர்த்துள்ளது

    பெங்களூருவில், இந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த க்ரயோஜெனிக் எஞ்சின் உற்பத்தி வசதியை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு நேற்று திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் உரையாற்றி அவர், கூறியுள்ளதாவது: 


    இந்துஸ்தான் ஏரோநாடிக்கல் நிறுவனமும், இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகமும் (இஸ்ரோ) இணைந்து நாட்டின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றி வருகின்றன. நாட்டின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சியை வலுப்படுத்த உதவும் பல்வேறு கருவிகள் மற்றும் திட்டங்களை மேம்படுத்துவதில் இந்த இரண்டு நிறுவனங்களும் முக்கியப் பங்கு வகித்துள்ளன.

    பாதுகாப்பு தொடர்பாக கருவிகளை உற்பத்தி செய்யும் இந்துஸ்தான் ஏரோநாடிக்கல் நிறுவனம் நம் நாட்டின் விலை மதிப்பற்ற சொத்து. நாடு முழுமைக்கும் க்ரயோஜெனிக் மற்றும் செமி க்ரயோஜெனிக் எஞ்சின்கள் உற்பத்திக்கான அதிநவீன வசதியை அந்த நிறுவனம் கொண்டிருப்பது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க தருணமாகும். 


    நாட்டின் பெருமைகளில் ஒன்றான இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தின் வேகமான வளர்ச்சி காரணமாக க்ரயோஜெனிக் உற்பத்தி திறன் கொண்ட உலகின் ஆறாவது நாடாக இந்தியா மாற்றியுள்ளது. இது தொழில்நுட்ப ரீதியாக வளர்ச்சி பெற்ற நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • குடியரசு தலைவராக பதவியேற்ற பின்னர் முதல் முறையாக கர்நாடகா பயணம்.
    • இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவன நிகழ்ச்சியிலும் கலந்து கொள்கிறார்.

    குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, இன்று தொடங்கி 2 நாட்கள் கர்நாடக மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். குடியரசு தலைவராக பதவியேற்ற பின்னர் ஒரு மாநிலத்துக்கு அவர் பயணம் செய்வது இதுவே முதல் முறை.

    முதல் நிகழ்ச்சியாக மைசூர் சாமுண்டி மலையில் தசரா விழாவை இன்று குடியரசுத் தலைவர் தொடங்கி வைக்கிறார். மேலும் ஹூபாலியில் பவுர சன்மனா விழாவில் கலந்து கொள்கிறார். தார்வாடில் உள்ள இந்திய தகவல் தொழில்நுட்பக் கழகத்தின் புதிய வளாகத்தையும் அவர் திறந்து வைக்கிறார்.

    செப்டம்பர் 27ந் தேதி, பெங்களூருவில் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த கிரையோஜெனிக் என்ஜின்கள் உற்பத்தி வசதியை குடியரசுத் தலைவர் திறந்து வைக்கிறார். அதன் தென் மண்டல நிறுவனத்திற்கு காணொலி மூலம் அவர் அடிக்கல் நாட்டுகிறார். மேலும் செயின்ட் ஜோசப் பல்கலைக்கழக தொடக்க விழாவில் அவர்கலந்து கொள்கிறார். 28ந் தேதி குடியரசுத் தலைவர் புது தில்லி திரும்புவார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

    • இளவரசர் ஆண்ட்ரூ தனது தாய்க்கு அஞ்சலி செலுத்தினார்.
    • ராணி எலிசபெத்தின் இறுதிச்சடங்கு நாளை காலை நடைபெறுகிறது.

    லண்டன்ல்:

    இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத் தனது 96வது வயதில் கடந்த 8-ம் தேதி உயிரிழந்தார். அவரது உடல் ஸ்காட்லாந்தில் இருந்து விமானம் மூலம் கடந்த 13-ந்தேதி இங்கிலாந்து சென்றடைந்தது. லண்டனில் உள்ள வெஸ்ட் மின்ஸ்டர் மண்டப மேடையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள ராணியின் உடலுக்கு தொடர்ந்து மக்கள் நீண்ட வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் லண்டன் சென்றுள்ள குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, இந்தியா சார்பில் ராணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். நாளை நடைபெற உள்ள இறுதிச்சடங்கு நிகழ்ச்சியிலும் இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்க உள்ளார். 


    இந்நிலையில் ராணியின் உடலுக்கு அவரது 2வது மகன் இளவரசர் ஆண்ட்ரூ அஞ்சலி செலுத்தினார். ஒரு மகன் மீதான உங்கள் அன்பு, இரக்கம், அக்கறை, நம்பிக்கையை என்றென்றும் பொக்கிஷமாக வைத்திருப்பேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்கு நாளை காலை 6.30 மணியளவில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் உள்பட உலக நாடுகளின் தலைவர்கள் இங்கிலாந்து வருகின்றனர். 

    • சிரியா அரபு குடியரசு தூதராக பாசாம் அல்கத்தீப் நியமனம்.
    • சவுதி அரேபியா தூதராக சாலிஹ் ஈத் அல் ஹூசைனி நியமனம்.

    இந்தியாவுக்கான சிரியா அரபு குடியரசு தூதராக டாக்டர் பாசாம் அல்கத்தீப் நியமிக்கப்பட்டுள்ளார். 


    இதேபோல் செக் குடியரசு தூதராக டாக்டர் எலிஸ்கா சிக்கோவா நியமனம் செய்யப்பட்டார்.   


    காங்கோ குடியரசின் தூதராக ரெயிமண்ட் செர்ஜி பாலேவும், நவ்ரு நாட்டின் துணைத் தூதராக மார்லன் இனம்வின் மோசஸ் நியமினம் செய்யப்பட்டார்.


    இந்தியாவுக்கான சவுதி அரேபியா றாட்டின் தூதராக சாலிஹ் ஈத் அல் –ஹூசைனி நியமிக்கப்பட்டார்.


    குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்தியாவுக்கான ஐந்து நாடுகளின் தூதர்கள் தங்களது நியமன பத்திரங்களை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு முர்முவிடம் வழங்கினர். அவற்றை அவர் ஏற்றுக் கொண்டார்.

    • காசநோயை முற்றிலும் ஒழிக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
    • காசநோயை ஏற்படுத்தும் கிருமிகள் அனைவரின் உடலிலும் உள்ளது.

    பிரதமரின் காசநோய் இல்லாத இந்தியா திட்டத்தை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

    பிரதமரின் காசநோய் இல்லாத இந்தியா திட்டத்தின் கீழ் 2025 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவில் இருந்து காசநோயை முற்றிலுமாக அகற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குடிமக்கள் அனைவரும் இதற்கு முன்னுரிமை அளித்து பேரியக்கமாக மாற்ற வேண்டும். நம் நாட்டில் காசநோய் மூலமே அதிக இறப்பு உள்ளது. உலக அளவில் இந்தியாவில் மட்டும் காசநோய்க்கு 25 சதவீதத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    காசநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது கட்டாயமாகும்.நோய் தாக்கத்திற்கு முன்பாகவே அதில் இருந்து காப்பது சாத்தியமானது என்பதை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். இந்நோயிலிருந்து மக்களை காப்பதற்கும், இலவசமாக மருத்துவ வசதி அளிப்பதற்கும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நோய் குறித்து சிலருக்கு தவறான கண்ணோட்டம் உள்ளது. இது முற்றிலுமாக நீக்கப்பட வேண்டும்.

    காசநோயை ஏற்படுத்தும் கிருமிகள் அனைவரின் உடலிலும் உள்ளது. ஒருவருக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறையும் போது காச நோய் ஏற்படுகிறது. சிகிச்சை அளிப்பதன் மூலம் இந்நோயிலிருந்து முழுவதுமாக குணமடைய முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார். நிகழ்ச்சியில் மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா, மத்திய சுகாதாரத்துறை இணை மந்திரி பாரதி பிரவீன் பவார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • தம்மை கைது செய்து கொள்ளுமாறு மணிஷ் சிசோடியா வேண்டுகோள்.
    • சிபிஐ பதிவு செய்த எப்.ஐ.ஆரில் மணீஷ் சிசோடியா பெயர்.

    தலைநகர் டெல்லி யூனியன் பிரதேசத்தை ஆட்சி செய்து வரும் ஆம்ஆத்மி அரசு, மதுபானக் கடைகளுக்கான உரிமம் வழங்கியதில் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக ஆளுநரின் பரிந்துரையின் பேரில் வழக்குப் பதிவு செய்த சிபிஐ, துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மற்றும் டெல்லி அரசின் மூத்த அதிகாரிகள் உள்ளிட்டோரின் இல்லங்கள் உள்பட 31 இடங்களில் சோதனை நடத்தியது. இதன் அடிப்படையில் இந்த வழக்கில் 15 போ் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் மணீஷ் சிசோடியா பெயர் முதல் இடத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.

    இதன் அடிப்படையில் அவரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி டெல்லி பாஜக எம்எல்ஏக்கள் இன்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்திக்க உள்ளனர். அப்போது தங்கள் கோரிக்கை தொடர்பான மனுவை அவர்கள் அளிக்க உள்ளதாக பாஜக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே தம்மீது பொய் வழக்கு போடுமாறு சிபிஐ அதிகாரிகளுக்கு மன அழுத்தத்தை தர வேண்டாம் என்றும் வேண்டுமானால் தம்மை கைது செய்து கொள்ளுங்கள் என்றும் மத்திய அரசுக்கு டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    • தேசிய விருது வென்ற ஆசிரியர்களுடன் இன்று மாலை பிரதமர் மோடி கலந்துரையாடல்.
    • அனைத்து ஆசிரியர்களுக்கும் குடியரசுத் தலைவர் வாழ்த்து.

    தொடக்கநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் சிறந்த ஆசிரியர்களுக்கு தேசிய விருதை மத்திய அரசு வழங்கி வருகிறது. இந்த விருதுக்காக இந்த ஆண்டு இணைய தளம் வாயிலாக வெளிப்படைத் தன்மையுடன் நடைபெற்ற மூன்று கட்ட நடைமுறைகள் மூலம் தமிழ்நாடு, புதுச்சேரி, பஞ்சாப், ஹரியானா, மகாராஷ்டிரா, தெலுங்கானா, இமாச்சல் பிரதேசம் உள்பட நாடு முழுவதிலுமிருந்து 46 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    இன்று ஆசிரியர் தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு 46 ஆசிரியர்களுக்கு தேசிய விருதுகளை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்கி கவுரவிக்கிறார். டெல்லியில் நடைபெறும் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மத்திய கல்வித்துறை அமைச்சகம் செய்துள்ளது. இதனை தொடர்ந்து மாலை 4.30 மணிக்கு டெல்லி லோக் கல்யாண் மார்க்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் தேசிய விருது பெற்ற ஆசிரியர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாட உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    முன்னதாக ஆசிரியர் தினத்தையொட்டி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளதாவது:

    இந்த சந்தர்ப்பத்தில் சிறந்த ஆசிரியரும், தத்துவ மேதையும், இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவருமான எஸ்.ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு எனது பணிவான மரியாதையை செலுத்துகிறேன். மாணவர்களிடம் அறிவு மட்டுமின்றி, மனிதநேய விழுமியங்களை விதைக்க முயற்சிக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் அவர் ஒரு முன்னுதாரணம்.

    புதிய ஆராய்ச்சிகள், சோதனைகள் மற்றும் கண்டுபிடிப்புகள் மூலம் நமது ஆசிரியர்கள் தொடர்ந்து தங்கள் திறன்களையும் திறமையையும் மேம்படுத்த முயற்சிக்கின்றனர். தேசிய கல்விக் கொள்கை மூலம் நமது கல்வி முறையில் மாற்றங்கள் கொண்டு வரப்படுகின்றன. உன்னதமான ஆசிரியத் தொழிலில் அதிக திறமைசாலிகள் சேருவார்கள் என்று நம்புகிறேன்.

    நாட்டின் நலனுக்காக எல்லா வகையிலும் உழைக்கத் தயாராக இருக்கும் பொறுப்புள்ள குடிமக்கள் உருவாகுவதற்கு அவர்களின் முயற்சிகள் காரணமாகும். அனைத்து ஆசிரியர்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இதேபோல் ஆசிரியர்களுக்கு பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

    • ஐஐடிக்களின் தாக்கம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை தாண்டியுள்ளது.
    • நமது அறிவாற்றலை உலகுக்கு எடுத்துக் காட்டியுள்ளன.

    ஐஐடி டெல்லியின் வைர விழாக் கொண்டாட்ட நிறைவு விழாவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் கூறியுள்ளதாவது:

    கல்வி மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் இந்தியாவின் திறனை ஐஐடிக்கள் உலகிற்கு நிருபித்துள்ளன. ஐஐடியின் ஆசிரியர்களும் முன்னாள் மாணவர்களும் நமது அறிவாற்றலை உலகுக்கு எடுத்துக் காட்டியுள்ளனர். இன்று உலக அரங்கில் இந்தியாவின் மேம்பட்ட நிலைப்பாட்டில் ஐஐடிக்கள் பெரும் பங்காற்றியுள்ளன. 


    ஐஐடி டெல்லியிலும் மற்ற ஐஐடிக்களிலும் படித்தவர்களில் சிலர் இப்போது உலகையே திரும்பிப் பார்க்க வைத்த டிஜிட்டல் புரட்சியில் முன்னணியில் உள்ளனர். ஐஐடிக்களின் தாக்கம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை தாண்டியுள்ளது.

    கல்வி, தொழில், தொழில்முனைவு, சமூகம், செயல்பாடு, இதழியல், இலக்கியம் மற்றும் அரசியல் என வாழ்க்கையின் ஒவ்வொரு துறையிலும் ஐஐடியில் படித்தவர்கள் முன்னணியில் உள்ளனர்.இந்திய தொழில்நுட்பக் கழகங்கள் நாட்டிற்கு பெருமை. அவற்றின் கதைதான் சுதந்திர இந்தியாவின் கதை.

    எதிர்காலத்திற்கு ஏற்றவாறு நமது கல்வி நிறுவனங்களை உருவாக்க வேண்டும். வரும் ஆண்டுகளில், சுற்றுச்சூழல் சவால்களுக்கு தொழில்நுட்ப ரீதியான தீர்வுகளை உலகம் எதிர்பார்க்கும் நிலையில், இந்தியாவின் இளம் பொறியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் மனிதகுலம் ஒரு திருப்புமுனையை அடைய உதவுவார்கள் என்று நான் நம்புகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • மோசடி நில வழக்குகள் ஏராளமானவை நிலுவையில் உள்ளன.
    • நில அபகரிப்பாளர்களிடமிருந்து சொத்துக்களை மீட்டு உரியவர்களுக்கு பெற்றுத் தரும்.

    தமிழகத்தில் சார்பதிவளர் அலுவலகங்கள் மூலம் வீடு, விளை நிலம் உள்ளிட்ட சொத்து பரிமாற்றங்கள் பதிவு செய்யப்படுகிறது. இவ்வாறு பதிவு செய்யப்படும் ஆவணங்களில் ஒரு சில நேரங்களில் போலியான ஆவணங்களை காட்டி பத்திரப்பதிவு செய்யப்படுகிறது.

    இதில், சார்பதிவாளர்கள் கூட்டு சேர்ந்து மோசடியில் ஈடுபடுவதாகவும் கூறப்படுகிறது. இவ்வாறு பதிவு செய்யப்படும் நிலங்கள் தொடர்பாக சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள் நீதிமன்றம் செல்கின்றனர். இந்த மாதிரியான வழக்குகள் ஏராளமானவை நிலுவையில் உள்ளது.

    இதனால், வழக்கை முடிக்க பல மாதங்கள் ஆகும் என்பதால், சம்பந்தப்பட்ட உரிமையாளர்களுக்கு உரிய தீர்வு கிடைப்பதில் காலதாமதம் ஆகிறது. இப்பிரச்னைக்கு முடிவு கட்டும் வகையில், தமிழக சட்டப்பேரவையில் பத்திரப்பதிவு திருத்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.

    அந்த மசோதாவில், போலியான ஆவண பதிவு செய்யும் பட்சத்தில், மாவட்ட பதிவாளரே உரிய விசாரணை நடத்தி தீர்வு காண முடியும். இந்த மசோதா சட்டப்பேரவையில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.  இதற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து மத்திய அரசின் பல்வேறு துறைகளின் ஒப்புதல் பெறப்பட்டன.

    இதனை தொடர்ந்து அந்த மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில், மோசடியாக பதிவுசெய்யப்பட்ட ஆவணங்களை ரத்து செய்ய பதிவுத்துறைக்கு அதிகாரம் அளிக்கும் சட்ட திருத்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளதாக வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்து உள்ளார்.

    நில அபகரிப்பாளர்களிடமிருந்து மீட்டு சொத்துக்களை உரியவர்களுக்கு பெற்றுத் தரும் வரலாற்று சிறப்பு மிக்க இச்சட்ட திருத்தம் கொண்டு வர வழிகாட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார். 

    • எதிர்க்கட்சிகள் தொடர் அமளியால் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் முடங்கியுள்ளது.
    • சோனியாகாந்தி மன்னிப்பு கேட்க மத்திய அமைச்சர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

    எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர்  பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், திரவுபதி முர்மு குறித்து மககளவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்த ராஷ்டிரபட்னி என்ற வார்த்தைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாராளுமன்றத்தில் ஆளும் கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர்.

    இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மத்திய மந்திரிகள் நிர்மலா சீதாராமன், ஸ்மிரிதி இரானி உள்ளிட்டோர் வலியுறுத்தினர்.

    இந்த பிரச்சினை காரணமாக எதிர்க்கட்சிகளும், ஆளும் கட்சி உறுப்பினர்களும் போட்டு போட்டு கோஷமிட்டதால் பாராளுமன்ற நடவடிக்கைகள் இன்றும் முடங்கின. இந்நிலையில் உள்துறை மந்திரி அமித்ஷா, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை அவரது மாளிகையில் சந்தித்து பேசினார். குடியரசுத் தலைவர் அழைப்பின் பேரில் சந்தித்ததாக அவர் கூறியுள்ளார். எனினும் இந்த சந்திப்பின் முழு விபரம் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. 


    அவரை தொடர்ந்து மத்திய மந்திரி இரானியும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்தார். குடியரசுத் தலைவர் அழைப்பின்பேரில் அவரை சந்தித்தாக இரானியும் குறிப்பிட்டுள்ளார். ஒரே நாளில் மத்திய மந்திரிகள் இருவர் அடுத்தடுத்து குடியரசுத் தலைவரை சந்தித்துள்ளது டெல்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • நமது நாட்டின் துடிப்பான ஜனநாயக அமைப்பின் சக்திக்கு நான் தலை வணங்குகிறேன்.
    • எந்தவித பேதமும் இன்றி அனைவருக்கும் அடிப்படை வசதி கிடைக்க வேண்டும் என்பதே அரசின் குறிக்கோள்.

    குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்றுடன் பதவியில் இருந்து ஓய்வுப்பெறும் நிலையில், நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    5 வருடங்களுக்கு முன்பு உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் மூலம் நான் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டேன். ஜனாதிபதியாக எனது பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைகிறது. உங்களுக்கும் உங்கள் மக்கள் பிரதிநிதிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    கான்பூர் தேஹாத் மாவட்டத்தின் பாரௌன்க் கிராமத்தில் மிகவும் சாதாரண குடும்பத்தில் வளர்ந்த ராம்நாத் கோவிந்த், இன்று நாட்டு மக்களாகிய உங்கள் அனைவருக்கும் உரையாற்றுகிறேன். இதற்காக, நமது நாட்டின் துடிப்பான ஜனநாயக அமைப்பின் சக்திக்கு நான் தலை வணங்குகிறேன்.

    ஜனாதிபதியாக இருந்த காலத்தில் எனது சொந்த கிராமத்திற்குச் சென்றதும், எனது கான்பூர் பள்ளியில் உள்ள வயதான ஆசிரியர்களின் பாதங்களைத் தொட்டு ஆசி பெறுவதும் என் வாழ்வின் மறக்க முடியாத தருணங்களில் ஒன்றாக இருக்கும்.

    நமது வேர்களோடு இணைந்திருப்பது இந்திய கலாச்சாரத்தின் சிறப்பு. இளைய தலைமுறையினர் தங்கள் கிராமம் அல்லது நகரம் மற்றும் அவர்களின் பள்ளிகள் மற்றும் ஆசிரியர்களுடன் இணைந்திருக்கும் இந்த பாரம்பரியத்தை தொடர நான் கேட்டுக்கொள்கிறேன்.

    எந்தவித பேதமும் இன்றி அனைவருக்கும் அடிப்படை வசதி கிடைக்க வேண்டும் என்பதே அரசின் குறிக்கோள். 21-ம் நூற்றாண்டை இந்தியாவின் நூற்றாண்டாக மாற்ற நாடு தயாராகி வருகிறது என்பதை உறுதியாக நம்புகிறேன்.

    நமது இயற்கை ஆழ்ந்த வேதனையில் உள்ளது. காலநிலை நெருக்கடி இந்த கிரகத்தின் எதிர்காலத்திற்கு ஆபத்தை விளைவிக்கும். நமது குழந்தைகளின் நலனுக்காக நமது சுற்றுச்சூழல், நிலம், காற்று மற்றும் நீர் ஆகியவற்றை நாம் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

    நமது அன்றாட வாழ்க்கையில் மரங்கள், ஆறுகள், கடல்கள், மலைகள் மற்றும் மற்ற அனைத்து உயிரினங்களையும் பாதுகாப்பதில் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். முதல் குடிமகனாக, சக குடிமக்களுக்கு நான் ஒரு அறிவுரை கூற வேண்டும் என்றால், அது இதுவாகதான் இருக்கும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • திரவுபதி முர்மு, வெங்கையா நாயுடு, ஓம் பிர்லா, உள்ளிட்டோர் பங்கேற்பு.
    • பழங்குடியின தலைவர்களும் விருந்தில் கலந்து கொண்டனர்.

    குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் வரும் 24ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையொட்டி அவருக்கு பிரதமர் மோடி இரவு விருந்து அளித்தார்.  


    இந்த விருந்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், அவரது மனைவி சவிதா கோவிந்துடன் பங்கேற்றார். மேலும் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரவுபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மேற்கு வங்க காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 


    மத்திய மந்திரிகள், பல்வேறு மாநில முதல்வர்கள், பத்ம விருது பெற்றவர்கள் உள்பட பல முக்கிய பிரமுகர்களும் இதில் பங்கேற்றனர். 


     மேலும் நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பழங்குடியின தலைவர்களும் விருந்தில் கலந்து கொண்டு பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

    இந்நிலையில் திரவுபதி முர்மு வரும் திங்கட்கிழமை நாட்டின் 15ஆவது புதிய குடியரசுத் தலைவராக பதவியேற்றுக் கொள்கிறார். 

    ×