search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காங்கிரஸ் தலைவர் தேர்தல்"

    • கட்சித் தலைவர் உறுதியளித்துள்ளதால் எந்த சந்தேகமும் இல்லை.
    • தேர்தலை நேர்மையாக நடத்த சோனியா காந்தி குடும்பத்தினர் விருப்பம்.

    நாக்பூர்:

    காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு அக்டோபர் மாதம் 17-ந் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது. இந்த தேர்தலில் சோனியா காந்தி குடும்பத்தில் இருந்து யாரும் போட்டியிடவில்லை. மல்லிகார்ஜுன கார்கே மற்றும் சசிதரூர் ஆகியோர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளதால் அவர்கள் போட்டியிடுவது மட்டும் உறுதியாகி உள்ளது.

    இந்த நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள தீக்சாபூமி நினைவு சின்னத்தை இன்று பார்வையிட்ட சசிதரூர், காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான பிரச்சாரத்தை தொடங்கினார். செய்தியாளர்களுக்கு அவர் பேட்டி அளித்தார். அப்போது இந்த தேர்தலில் சோனியாகாந்தி குடும்பத்தினருக்கு பிடித்த வேட்பாளர் மல்லிகார்ஜூன் கார்க்கேவா என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த சசிதரூர் தெரிவித்துள்ளதாவது:

    காந்தி குடும்பத்தைச் சேர்ந்த மூவரையும் (சோனியா, ராகுல், பிரியங்கா) சந்தித்துப் பேசினேன். கட்சித் தலைவர் தேர்தலில் அதிகாரப்பூர்வ வேட்பாளர் யாரும் இல்லை என்றும், அப்படிப்பட்ட வேட்பாளர் யாரும் இருக்க மாட்டார் என்றும் அவர்கள் என்னிடம் திரும்பத் திரும்பச் சொன்னார்கள். அவர்கள் நல்ல நேர்மையான தேர்தலை நடத்த விரும்புகிறார்கள்.

    காந்தி குடும்பம் நடுநிலையாகவும், கட்சி பாரபட்சமற்றதாகவும் இருக்கும். சிறந்த முறையில் இந்த தேர்தலை நடத்தி கட்சியை பலப்படுத்த அவர்கள் விரும்புகிறார்கள். கட்சித் தலைவர் (சோனியாகாந்தி) என்னிடம் உறுதியளித்துள்ளதால் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • இன்று வேட்புமனுக்கள் குறித்து ஆய்வு நடைபெற்றது.
    • மல்லிகார்ஜுன கார்கே, சசி தரூர் இடையே நேரடிப் போட்டி.

    காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு அக்டோபர் மாதம் 17-ந் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது. இந்த தேர்தலில் அக்கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் எம்.பி. சசி தரூர், ஜார்கண்ட் மாநில முன்னாள் அமைச்சரும், அம்மாநில காங்கிரஸ் தலைவருமான கேஎன் திரிபாதி ஆகியோர் நேற்று ஒரே நாளில் வேட்புமனு தாக்கல் செய்தனர். 


    இந்த நிலையில், வேட்புமனுக்கள் குறித்து ஆய்வு இன்று நடைபெற்றதாக கட்சியின் தேர்தல் ஆணைய தலைவர் மதுசூதன் மிஸ்த்ரி தெரிவித்துள்ளார். இதில் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் சசிதரூர் ஆகியோரின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது.

    வேட்புமனுவை விதிமுறைகளின் படி பூர்த்தி செய்யாததால் கே.என் திரிபாதியின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதாக மதுசூதன் மிஸ்த்ரி கூறினார். அவரது வேட்புமனுத் தாக்கலின் போது மொத்தம் 20 படிவங்கள் பெறப்பட்டன. அவற்றில் நான்கு கையொப்பங்கள் மீண்டும் மீண்டும் போடப்பட்டிருந்ததால் நிராகரிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

    வேட்புமனுக்களை வாபஸ் பெறுவதற்கான அக்டோபர் 8ந் தேதி கடைசி நாள். அன்று மாலை 5 மணிக்கு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். தற்போதைய நிலையில் காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சசி தரூர் இடையே நேரடிப் போட்டி உறுதியாகி உள்ள நிலையில், 8ந் தேதிக்குள் யாரும் வாபஸ் பெறா விட்டால், 17ந் தேதி வாக்குப்பதிவு நடத்தப்படும் என்றும் மதுசூதன் மிஸ்த்ரி கூறியுள்ளார். 

    • இந்த தேர்தலில் போட்டியிட சசிதரூர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
    • மல்லிகார்ஜுன கார்கேவும் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

    காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட முன்னாள் மத்திய மந்திரியும், அக்கட்சியின் எம்.பி.யுமான சசிதரூர் வேட்புமனுவை இன்று காலை தாக்கல் செய்துள்ளார். தொடர்ந்து பிற்பகல் அக்கட்சியின் மூத்த தலைவரும், பாராளுமன்ற மாநிலங்களைவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவும் வேட்புமனுவை தாக்கல் செய்தார். 


    டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் கட்சியின் மத்திய தேர்தல் ஆணைய தலைவர் மதுசூதன் மிஸ்திரியிடம் வேட்புமனுவை அவர் வழங்கினார். அசோக் கெலாட் உள்பட காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் அப்போது உடன் இருந்தனர். இந்த நிலையில் திடீர் திருப்பமாக காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட ஜார்க்கண்ட் மாநில முன்னாள் அமைச்சர் கே.என். திரிபாதியும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.


    இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரசின் (திரிபாதி பிரிவு) தேசியத் தலைவராக அவர் பணியாற்றி உள்ளார். திரிபாதி போட்டியிடுவதன் மூலம் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் மும்முனை போட்டி உறுதியாகி உள்ளது.

    • இது நட்பு ரீதியான போட்டியாக இருக்கும்.
    • கட்சி வலுவாக இருக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.

    அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு 22 ஆண்டுகளுக்கு பிறகு அடுத்த மாதம் 17-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் சோனியாகாந்தி குடும்பத்தை சேர்ந்த யாரும் போட்டியிடவில்லை. ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட்டுக்கும், அக்கட்சியின் கேரளா எம்.பி. சசி தரூரும் போட்டியிடுவார்கள் என முதலில் தகவல் வெளியானது.

    இந்நிலையில் ராஜஸ்தான் முதலமைச்சர் பதவியை விட்டு தர அசோக்கெலாட் மறுத்து விட்டதால் அவர் மீது சோனியா கடும் அதிருப்தி அடைந்தார். இதனால் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என கெலாட் அறிவித்தார். இதனிடையே திடீர் திருப்பமாக காங்கிரஸ் மூத்த தலைவரும், பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மல்லிகார்ஜூன கார்கே, காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். அவருக்கு கட்சி தலைமையும் ஆதரவு அளித்துள்ளது. இதையடுத்து இந்த தேர்தலில் போட்டியிட முடிவு செய்திருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங், அதை கைவிட்டதுடன், மல்லிகார்ஜூன கார்கேவுக்கு ஆதரவு அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

    இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட சசிதரூர் இன்று டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்திற்கு சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். முன்னதாக மகாத்மா காந்தி நினைவிடத்துக்கு சென்று அவர் அஞ்சலி செலுத்தினார். இது குறித்து தமது டுவிட்டர் பதிவில் அவர் கூறியுள்ளதாவது: 21-ம் நூற்றாண்டுக்கு இந்தியாவின் பாலத்தை கட்டியவருக்கு இன்று காலை அஞ்சலி செலுத்துகிறேன். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கூறியதுபோல் இந்தியா ஒரு பழைமையான நாடு. ஆனால் ஒரு இளம் தேசம். இந்தியா வலிமையான சுதந்திரமான தன்னம்பிக்கை மற்றும் உலக நாடுகளின் சேவையில் முன்னிலையில் இருக்க வேண்டும் என்று கனவு காண்கிறேன்.

    ஒரு பந்தயத்தில் நுழையும் போது முடிவு நிச்சயமற்றது என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆனால் நீங்கள் நல்ல பலன்களை கொடுப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் செல்வீர்கள்.அதேபோல் நான் செல்கிறேன்,  இது நட்பு ரீதியான போட்டியாக இருக்கும். கட்சி வலுவாக இருக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். அதிருப்தி தலைவர்களில் யாரும் (ஜி-23) வேட்பாளர் கிடையாது என்று கூறுவது கட்டுக்கதை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    வேட்பு மனு தாக்கல் இன்றுடன் முடிவடையும் நிலையில் மல்லிகார்ஜூன கார்கே மதியத்துக்கு மேல் மனு தாக்கல் செய்வார் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. இதை அடுத்து காங்கிரஸ் தலைவர் பதவிக்கு மல்லிகார்ஜூன கார்கே-சசி தரூர் இடையே போட்டி உறுதியாகி உள்ளது.

    • திருவனந்தபுரம் பாராளுமன்ற தேர்தலில் மும்முறை போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளேன்.
    • நான் ஐ.நா.சபை உள்ளிட்ட பெரும் அமைப்புகளில் முக்கிய பொறுப்புகளில் இருந்துள்ளேன்.

    திருவனந்தபுரம்:

    அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் வருகிற 17-ந்தேதி நடக்கிறது.

    இந்த தேர்தலில் திருவனந்தபுரம் பாராளுமன்ற தொகுதியின் காங்கிரஸ் எம்.பி. சசிதரூரும் போட்டியிடுகிறார்.

    இன்று அவர் இதற்கான வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார். இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடுவது ஏன் என்பது பற்றி அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதற்கு 3 முக்கிய காரணங்கள் உள்ளன. முதலாவது ஜனநாயக போட்டியே கட்சியை பலப்படுத்தும். இதனை கட்சியின் இப்போதைய தலைவர் சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் பலமுறை கூறியுள்ளனர்.

    2-வதாக காங்கிரஸ் கட்சியின் சமீபத்திய தேர்தல் தோல்விகளில் இருந்து கட்சியை பலப்படுத்தவும், சீர்ப்படுத்தவும், தொண்டர்களுக்கு உற்சாகம் அளிக்கவும் இந்த தேர்தலில் போட்டியிடும் முடிவை எடுத்தேன்.

    3-வதாக தலைமை பொறுப்புக்கு போட்டியிட வேண்டும் என்ற முடிவை எடுத்த பின்பு அதில் உறுதியாக இருக்க வேண்டும் என்பது எனது எண்ணம். எனவே தான் இப்போட்டியில் பங்கேற்பதில் நான் உறுதியாக உள்ளேன்.

    திருவனந்தபுரம் பாராளுமன்ற தேர்தலில் மும்முறை போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளேன். நான் ஐ.நா.சபை உள்ளிட்ட பெரும் அமைப்புகளில் முக்கிய பொறுப்புகளில் இருந்துள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் வேட்பு மனுவை திக்விஜய் சிங் இன்று வாங்க வந்தார்.
    • திக்விஜய் சிங் தலைவர் தேர்தலில் போட்டியிட மனு வாங்க வந்ததாக தெரிவித்தார்.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் கட்சிக்கு தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அக்டோபர் 17-ந்தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நாளையுடன் முடிவடைகிறது.

    காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல்காந்தி ஏற்க மறுத்ததால் அந்த பதவிக்கான தேர்தலில் மூத்த காங்கிரஸ் தலைவரும், ராஜஸ்தான் முதல்-மந்திரியுமான அசோக் கெலாட்டை நிறுத்த மேலிடம் முடிவு செய்தது. கெலாட்டுக்கு பதிலாக சச்சின் பைலட்டை ராஜஸ்தான் முதல்-மந்திரியாக்கவும் சோனியா முடிவு செய்தார்.

    இதற்கு கெலாட் உடன்படவில்லை. முதல்-மந்திரி பதவியை விட்டு விலக மறுத்தார். அவரது ஆதரவு 90 எம்.எல்.ஏ.க்கள் போட்டி கூட்டம் நடத்தினர். இதனால் அங்கு அரசியல் குழப்பம் ஏற்பட்டது. இதன் காரணமாக அசோக் கெலாட் மீது சோனியா காந்தி கடும் அதிருப்தி அடைந்தார்.

    அசோக் கெலாட்டுக்கு பதிலாக வேறு ஒருவரை தலைவர் தேர்தலில் நிறுத்த அவர் முடிவு செய்தார். இது தொடர்பாக சோனியா காந்தி மூத்த நிர்வாகிகளுடன் 2 தினங்களாக ஆலோசனை நடத்தினார்.

    மத்திய பிரதேச முன்னாள் முதல்-மந்திரியும், மூத்த தலைவருமான திக்விஜய்சிங், மல்லிகார்ஜூன கார்கே, குமாரி செல்ஜா, முகுல் வாஸ்னிக், மீராகுமார் ஆகியோரது பெயர்கள் அடிபட்டன.

    இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் திடீர் திருப்பமாக திக்விஜய் சிங் போட்டியிடுகிறார். இதை அவர் அதிகார பூர்வமாக இன்று தெரிவித்தார்.

    டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் வேட்பு மனுவை திக்விஜய் சிங் இன்று வாங்க வந்தார். அப்போது அவர் தலைவர் தேர்தலில் போட்டியிட மனு வாங்க வந்ததாக தெரிவித்தார். நாளை மனு தாக்கல் செய்ய இருப்பதாகவும் திக் விஜய் சிங் தெரிவித்தார்.

    அதிருப்தி குழு தலைவர்களில் ஒருவரான சசிதரூரும் காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடுகிறார். அவரும் நாளை மனு தாக்கல் செய்கிறார்.

    இதனால் காங்கிரஸ் தலைவர் பதவிக்கான களத்தில் திக் விஜய் சிங், சசிதரூர் போட்டியிடுகிறார்கள்.

    • ராஜஸ்தான் காங்கிரஸ் உட்கட்சி மோதலால் அசோக் கெலாட் போட்டியிடுவதில் சிக்கல்.
    • காங்கிரஸ் தலைவர் தேர்தலில் சசிதரூர் நாளை வேட்புமனு தாக்கல்.

    காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தல் அடுத்த மாதம் 17-ந் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் 24ந் தேதி தொடங்கியது. நாளை மனுதாக்கல் செய்ய கடைசி நாளாகும். காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்க ராகுல் காந்தி திட்டவட்டமாக மறுத்து விட்ட நிலையில், இந்த தேர்தலில் ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட்டும், அவரை எதிர்த்து கேரள எம்பி சசிதரூரும் களம் இறங்கி உள்ளதாக கூறப்பட்டது.

    இந்நிலையில் ராஜஸ்தான் காங்கிரசிக்குள் ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக சோனியா காந்தி, கெலாட் மீது அதிருப்தியில் உள்ளதாக தெரிகிறது. இதனால் இந்த தேர்தலில் கெலாட் போட்டியிடுவதில் சிக்கல் நீடிக்கிறது.  நாளை காலை 11 மணிக்கு சசிதரூர் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்.

    இந்த நிலையில் திடீர் திருப்பமாக மத்திய பிரதேச மாநில முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான திக்விஜய்சிங் இந்த தேர்தல் களத்தில் குதித்துள்ளார். இன்று காலை அவர் வேட்புமனுவை தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    முன்னதாக அவர் கேரள மாநிலத்தில் ராகுல்காந்தியுடன் இந்திய ஒற்றுமை பயணத்தை மேற்கொண்டு வந்தார். வேட்புமனு தாக்குதலுக்காக நேற்று கேரளாவில் இருந்து அவர் டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். அவருடன் ஒரே விமானத்தில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபாலும் டெல்லி சென்றுள்ளார்.

    • காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது.
    • வேட்பு மனு தாக்கல் செய்ய 30-ந் தேதி கடைசி நாளாகும்.

    காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது. வேட்புமனு படிவங்கள், டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் கிடைக்கும் என்று காங்கிரஸ் தேர்தல் அறிவிப்பாணையில் கூறப்பட்டுள்ளது.

    30-ந் தேதி மனுதாக்கல் செய்ய கடைசி நாளாகும். அக்டோபர் 1-ந் தேதி, வேட்புமனு பரிசீலனை நடக்கிறது. மனுக்களை வாபஸ் பெற அக்டோபர் 8-ந் தேதி கடைசிநாள். அன்று மாலை 5 மணிக்கு வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும். அக்டோபர் 17-ந் தேதி ஓட்டுப்பதிவு நடைபெறும். 19-ந் தேதி, ஓட்டுகள் எண்ணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த தேர்தலில் போட்டியிட ராகுல் காந்தி திட்டவட்டமாக மறுத்து விட்டதால், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் மற்றும் காங்கிரஸ் மூத்த எம்.பி. சசிதரூர் ஆகியோர் போட்டியிடுவார்கள் என தெரிகிறது. இந்த நிலையில், ராகுல் காந்தி இயல்பான தலைவர் என்றும், அவருக்கு எந்த பதவியும் தேவையில்லை என்றும் மேற்கு வங்க காங்கிரஸ் எம்.பி., ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

    ராகுல்காந்தி போட்டியிட மறுத்து விட்ட நிலையில், காங்கிரஸ் தலைவர் தேர்தல் நடைபெறுவதாகவும், இனிமேல் ராகுல்காந்தி குடும்பத்தை சிறுமைப்படுத்தும் முயற்சியை பாஜக நிறுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

    காங்கிரஸில் ஜனநாயகம் உள்ளது, அதனால் தலைவர் பதவிக்கு தேர்தல் நடைபெறுகிறது என்றும், ஆனால் பாஜகவில் தலைவர் பதவிக்கு தேர்தல் நடந்ததா என கேள்வி எழுப்பிய சவுத்ரி, அந்த கட்சியின் தலைவர் நாக்பூரில் நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டார் என குறிப்பிட்டார்.

    • காங்கிரஸ் தலைவர் தேர்தலில் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம்.
    • தேர்தல் நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடக்கும்.

    புதுடெல்லி :

    காங்கிரஸ் தலைவர் தேர்தல் அடுத்த மாதம் 17-ந்தேதி நடக்கிறது. வேட்புமனு தாக்கல், வருகிற 24-ந் தேதி தொடங்குகிறது.

    ராகுல்காந்தி தலைவர் பதவியை ஏற்க வலியுறுத்தி, பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் கமிட்டிகள் தீர்மானம் நிறைவேற்றி வருகின்றன. ராகுல்காந்தி இன்னும் தனது முடிவை தெரிவிக்கவில்லை. காங்கிரஸ் மேலிட விருப்பப்படி, ராஜஸ்தான் மாநில முதல்-மந்திரி அசோக் கெலாட், வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்று கூறப்படுகிறது. அதை அசோக் கெலாட் மறுத்து வந்தார்.

    இந்தநிலையில், காங்கிரஸ் தொண்டர்கள் விரும்பினால், அதற்கு கட்டுப்படுவேன் என்று நேற்று அசோக் கெலாட் கூறினார். ஜெய்ப்பூரில் இருந்து டெல்லி விமான நிலையம் வந்தவுடன் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கட்சியும், கட்சி மேலிடமும் எனக்கு எல்லாமே கொடுத்துள்ளன. கடந்த 40, 50 ஆண்டுகளாக நான் பதவியில் இருக்கிறேன். பதவி எனக்கு முக்கியம் அல்ல. கட்சி என்ன பொறுப்பு கொடுத்தாலும் அதை நிறைவேற்றுவேன்.

    சோனியாகாந்தி குடும்பம் மட்டுமின்றி, ஏராளமான காங்கிரஸ் தொண்டர்களும் என் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். அவர்களின் அன்பை பெற்ற அதிர்ஷ்டசாலி நான். எனவே, அவர்கள் தலைவர் தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்யுமாறு கூறினால், என்னால் மறுக்க முடியாது. இருந்தாலும், ராகுல்காந்தியை நிற்குமாறு கடைசியாக ஒருதடவை வலியுறுத்துவேன்.

    ராஜஸ்தானிலோ அல்லது டெல்லியிலோ கட்சிக்கு பயனளிக்கும்வகையில் எங்கு வேண்டுமானாலும் பணியாற்றுவேன். காங்கிரசை வலுப்படுத்தக்கூடிய முடிவை எடுப்பேன். தலைவர் தேர்தலில் நின்றாலும், முதல்-மந்திரி பதவியில் நீடிக்க முடியும்.

    நான் முதல்-மந்திரி பதவியில் நீடிப்பேனா, இல்லையா என்பதை காலம்தான் தீர்மானிக்கும். என்னால் கட்சிக்கு எங்கு பலன் கிடைக்குமோ அங்கு இருப்பேன்.

    எந்த பதவியும் வேண்டாம் என்று முடிவு எடுத்தாலும், ராகுல்காந்தியுடன் இந்திய ஒற்றுமை பயணத்தில் இணைந்து கொள்வேன்.

    தலைவர் தேர்தலில் சசிதரூர் போட்டியிடுவது பற்றி கேட்கிறீர்கள். உட்கட்சி ஜனநாயகத்துக்கு போட்டி நடப்பது நல்லது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கிடையே, காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், கேரள மாநிலம் கொச்சிக்கு வந்தார். அங்கு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    காங்கிரஸ் தலைவர் தேர்தலில் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம். 10 காங்கிரஸ் பிரதிநிதிகள் ஆதரவு இருந்தால், வேட்புமனு தாக்கல் செய்யலாம். தேர்தலில் போட்டியிட சோனியாகாந்தி அல்லது ராகுல்காந்தியின் ஒப்புதல் பெறத் தேவையில்லை. தேர்தல் நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடக்கும். வேறு எந்த கட்சியும் தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்துவது இல்லை.

    அதே சமயத்தில், காமராஜர் மாடல்படி, கருத்தொற்றுமை அடிப்படையில் கட்சி தலைவரை தேர்வு செய்வதில் எனக்கு நம்பிக்கை உள்ளது. ஒவ்வொருவரிடமும் பேசி, கருத்தொற்றுமை அடிப்படையில் பொருத்தமானவரை தலைவர் பதவிக்கு தேர்வு செய்வதுதான் காமராஜர் மாடல்.

    கருத்தொற்றுமை ஏற்படாவிட்டால், தேர்தல் சரியானதுதான். தேர்தல் நடத்துவதில் இருந்து நாங்கள் ஓடவில்லை. யார் யார் போட்டியிடுவார்கள் என்று எனக்கு தெரியாது.

    பாதயாத்திரைக்கு 23-ந் தேதி ஓய்வு விடப்படுகிறது. அப்போது, ராகுல்காந்தி டெல்லிக்கு சென்றால், நோய்வாய்ப்பட்டுள்ள தனது தாயாரை பார்க்க செல்வதாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

    அவர் இரண்டு, மூன்று வாரங்களாக தனது தாயாரை பார்க்கவில்லை. அவரும் மனிதர் தானே? உங்கள் தாயாருக்கு உடல்நிலை சரியில்லை என்றால், பார்க்க செல்ல மாட்டீர்களா?

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தலைவர் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் இந்த மாதம் 24-ந் தேதி முதல் மனுதாக்கல் செய்யலாம்.
    • போட்டி ஏற்படும் பட்சத்தில் அந்த அந்த மாநில தலைநகரங்களில் வாக்குப்பதிவு நடைபெறும்.

    சென்னை:

    அகில இந்திய அளவில் காங்கிரஸ் உட்கட்சி தேர்தல் பல கட்டங்களாக நடைபெற்றது. இறுதி கட்டமாக அகில இந்திய தலைவருக்கான தேர்தல் நடைபெற உள்ளது.

    தலைவர் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் இந்த மாதம் 24-ந் தேதி முதல் மனுதாக்கல் செய்யலாம். 30-ந் தேதி மனுதாக்கல் செய்ய கடைசி நாள் ஆகும்.

    தேர்தலில் ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் போட்டியிட்டால் அடுத்த மாதம் (அக்டோபர்) 17-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். 20-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும்.

    தலைவர் தேர்தலில் ராகுல்காந்தி போட்டியிட வேண்டும் என்று வற்புறுத்தி வருகிறார்கள். ஆனால் ராகுல் இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை. சசிதரூர் போட்டியிட போவதாக கூறி உள்ளார். எனவே தேர்தலில் போட்டி ஏற்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    தலைவர் தேர்தலில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட தலைவர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் மாநில தலைவர்கள், முன்னாள் சட்டமன்ற எதிர்கட்சி தலைவர்கள் ஆகியோர் வாக்களிக்க உரிமை உண்டு.

    தமிழகத்தை பொறுத்த வரை 690 பொதுக்குழு உறுப்பினர்கள் இருக்கிறார்கள். 76 மாவட்ட தலைவர்கள் 9 எம்.பி.க்கள், 18 எம்.எல்.ஏ.க்கள், மற்றும் முன்னாள் சட்டமன்ற கட்சி தலைவர்கள், மாநில தலைவர்கள் உள்பட சுமார் 850 பேர் வாக்களிப்பார்கள்.

    வாக்காளர் பட்டியல், வாக்காளர் அடையாள அட்டை ஆகியவை இன்னும் ஓரிரு நாளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த தேர்தலில் முதல் முறையாக வாக்காளர் அடையாள அட்டையில் 'கியூஆர் கோடும்' இடம் பெறுகிறது.

    இந்த பட்டியல் வெளியானதும் பொதுக் குழு உறுப்பினர்கள் கூட்டம் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நடைபெறும்.

    அந்த கூட்டத்தில் மாநில தலைவரை நியமிக்கும் அதிகாரத்தை சோனியாவுக்கு வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்படும். அந்த தீர்மானம் டெல்லி தலைமைக்கு அனுப்பி வைக்கப்படும்.

    அகில இந்திய தலைவர் தேர்தலில் போட்டி ஏற்படும் பட்சத்தில் அந்த அந்த மாநில தலைநகரங்களில் வாக்குப்பதிவு நடைபெறும். தமிழகத்தில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் ஓட்டுப்பதிவு நடைபெறும்.

    • காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் அக்டோபர் 17-ந்தேதி நடக்கிறது.
    • காந்தி குடும்பத்தை சாராத சிலரும் போட்டியிட விரும்புவதாக தகவல் வெளியாகி இருந்தன.

    புதுடெல்லி :

    காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் அடுத்த மாதம் (அக்டோபர்) 17-ந் தேதி நடக்கிறது. இதில் ராகுல் காந்தியை போட்டியிட வைப்பதற்கு கட்சியின் மூத்த தலைவர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதேநேரம் காந்தி குடும்பத்தை சாராத சிலரும் போட்டியிட விரும்புவதாக தகவல் வெளியாகி இருந்தன. இதில் ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட், திருவனந்தபுரம் எம்.பி. சசிதரூர் ஆகியோரின் பெயர்கள் வலுவாக அடிபடுகின்றன.

    எனினும் இந்த தகவலை கடந்த வாரம் புறந்தள்ளிய அசோக் கெலாட், ராகுல் காந்தியை கட்சித்தலைமை ஏற்பதற்கு கடைசி நிமிடம் வரை வலியுறுத்துவோம் என தெரிவித்தார். ஆனால் சசிதரூரோ, தேர்தல் அறிவிப்பு வெளியான பிறகு இது குறித்து முடிவு செய்வேன் என அறிவித்து இருந்தார்.

    இந்த நிலையில் அசோக் கெலாட்டை, சசிதரூர் நேற்று டெல்லியில் சந்தித்து பேசினார். சுமார் ½ மணி நேரம் நடந்த இந்த சந்திப்பின்போது, காங்கிரஸ் கட்சியின் எதிர்காலம், தலைவர் தேர்தல் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து இருவரும் ஆலோசித்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது. காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடலாம் என கருதப்படும் அசோக் கெலாட்டும், சசிதரூரும் சந்தித்து பேசியிருக்கும் விவகாரம் காங்கிரசார் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • 24-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை வேட்பு மனு தாக்கல் நடைபெறுகிறது.
    • அக்டோபர் 17-ந்தேதி தலைவர் தேர்தல் நடக்க உள்ளது.

    புதுடெல்லி :

    நாட்டின் பழமையான கட்சியான காங்கிரஸ் கட்சியில் அடுத்த மாதம் 17-ந்தேதி தலைவர் தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான அறிவிக்கை வரும் 22-ந்தேதி வெளியாகிறது. 24-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை வேட்பு மனு தாக்கல் நடைபெறுகிறது. வேட்பு மனுக்களை திரும்பப்பெற அக்டோபர் மாதம் 8-ந்தேதி கடைசி நாள். போட்டி இருந்தால் அக்டோபர் 17-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறும். அக்டோபர் 19-ந்தேதி முடிவு வெளியாகும்.

    இந்த தேர்தலுக்காக வாக்காளர் பட்டியல் வெளியிட வேண்டும் என்ற குரல் அந்தக் கட்சிக்குள் ஓங்கி ஒலிக்கத்தொடங்கி உள்ளது.

    அந்த வகையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு போட்டியிடக்கூடும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள கேரளாவை சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரி சசி தரூர், காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட வேண்டும் என குரல் கொடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் கட்சியின் மத்திய தேர்தல் ஆணையத்தின் தலைவர் மதுசூதன் மிஸ்திரிக்கு நேற்று கடிதம் எழுதி உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

    இதே போன்ற கோரிக்கையை முன் வைத்து அசாமை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. பிரத்யுத் போர்டோலோயும் மதுசூதன் மிஸ்திரிக்கு கடிதம் எழுதி உள்ளார்.

    காங்கிரஸ் தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய 23 தலைவர்கள் குழுவில் இடம் பெற்றிருந்த மூத்த தலைவர்களில் ஒருவரான மணிஷ் திவாரியும், தமிழ்நாட்டைச் சேர்ந்த கார்த்தி சிதம்பரமும் காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.

    இவர்களுக்கு பதில் அளித்த காங்கிரஸ் எம்பி. மாணிக்கம் தாகூர், "கட்சிக்குள் குழப்பம் ஏற்படுத்தக்கூடாது. வெளிப்படையாக தேர்தல் நடத்துவது குறித்து பெருமிதம் கொள்ள வேண்டும்" என கூறியது குறிப்பிடத்தக்கது.

    ×