search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Congress President Poll"

    • தலைவர் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் இந்த மாதம் 24-ந் தேதி முதல் மனுதாக்கல் செய்யலாம்.
    • போட்டி ஏற்படும் பட்சத்தில் அந்த அந்த மாநில தலைநகரங்களில் வாக்குப்பதிவு நடைபெறும்.

    சென்னை:

    அகில இந்திய அளவில் காங்கிரஸ் உட்கட்சி தேர்தல் பல கட்டங்களாக நடைபெற்றது. இறுதி கட்டமாக அகில இந்திய தலைவருக்கான தேர்தல் நடைபெற உள்ளது.

    தலைவர் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் இந்த மாதம் 24-ந் தேதி முதல் மனுதாக்கல் செய்யலாம். 30-ந் தேதி மனுதாக்கல் செய்ய கடைசி நாள் ஆகும்.

    தேர்தலில் ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் போட்டியிட்டால் அடுத்த மாதம் (அக்டோபர்) 17-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். 20-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும்.

    தலைவர் தேர்தலில் ராகுல்காந்தி போட்டியிட வேண்டும் என்று வற்புறுத்தி வருகிறார்கள். ஆனால் ராகுல் இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை. சசிதரூர் போட்டியிட போவதாக கூறி உள்ளார். எனவே தேர்தலில் போட்டி ஏற்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    தலைவர் தேர்தலில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட தலைவர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் மாநில தலைவர்கள், முன்னாள் சட்டமன்ற எதிர்கட்சி தலைவர்கள் ஆகியோர் வாக்களிக்க உரிமை உண்டு.

    தமிழகத்தை பொறுத்த வரை 690 பொதுக்குழு உறுப்பினர்கள் இருக்கிறார்கள். 76 மாவட்ட தலைவர்கள் 9 எம்.பி.க்கள், 18 எம்.எல்.ஏ.க்கள், மற்றும் முன்னாள் சட்டமன்ற கட்சி தலைவர்கள், மாநில தலைவர்கள் உள்பட சுமார் 850 பேர் வாக்களிப்பார்கள்.

    வாக்காளர் பட்டியல், வாக்காளர் அடையாள அட்டை ஆகியவை இன்னும் ஓரிரு நாளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த தேர்தலில் முதல் முறையாக வாக்காளர் அடையாள அட்டையில் 'கியூஆர் கோடும்' இடம் பெறுகிறது.

    இந்த பட்டியல் வெளியானதும் பொதுக் குழு உறுப்பினர்கள் கூட்டம் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நடைபெறும்.

    அந்த கூட்டத்தில் மாநில தலைவரை நியமிக்கும் அதிகாரத்தை சோனியாவுக்கு வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்படும். அந்த தீர்மானம் டெல்லி தலைமைக்கு அனுப்பி வைக்கப்படும்.

    அகில இந்திய தலைவர் தேர்தலில் போட்டி ஏற்படும் பட்சத்தில் அந்த அந்த மாநில தலைநகரங்களில் வாக்குப்பதிவு நடைபெறும். தமிழகத்தில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் ஓட்டுப்பதிவு நடைபெறும்.

    ×