search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கு வாக்காளர் பட்டியல் வெளியிட வேண்டும்: சசி தரூர் திடீர் கோரிக்கை
    X

    காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கு வாக்காளர் பட்டியல் வெளியிட வேண்டும்: சசி தரூர் திடீர் கோரிக்கை

    • 24-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை வேட்பு மனு தாக்கல் நடைபெறுகிறது.
    • அக்டோபர் 17-ந்தேதி தலைவர் தேர்தல் நடக்க உள்ளது.

    புதுடெல்லி :

    நாட்டின் பழமையான கட்சியான காங்கிரஸ் கட்சியில் அடுத்த மாதம் 17-ந்தேதி தலைவர் தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான அறிவிக்கை வரும் 22-ந்தேதி வெளியாகிறது. 24-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை வேட்பு மனு தாக்கல் நடைபெறுகிறது. வேட்பு மனுக்களை திரும்பப்பெற அக்டோபர் மாதம் 8-ந்தேதி கடைசி நாள். போட்டி இருந்தால் அக்டோபர் 17-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறும். அக்டோபர் 19-ந்தேதி முடிவு வெளியாகும்.

    இந்த தேர்தலுக்காக வாக்காளர் பட்டியல் வெளியிட வேண்டும் என்ற குரல் அந்தக் கட்சிக்குள் ஓங்கி ஒலிக்கத்தொடங்கி உள்ளது.

    அந்த வகையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு போட்டியிடக்கூடும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள கேரளாவை சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரி சசி தரூர், காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட வேண்டும் என குரல் கொடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் கட்சியின் மத்திய தேர்தல் ஆணையத்தின் தலைவர் மதுசூதன் மிஸ்திரிக்கு நேற்று கடிதம் எழுதி உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

    இதே போன்ற கோரிக்கையை முன் வைத்து அசாமை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. பிரத்யுத் போர்டோலோயும் மதுசூதன் மிஸ்திரிக்கு கடிதம் எழுதி உள்ளார்.

    காங்கிரஸ் தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய 23 தலைவர்கள் குழுவில் இடம் பெற்றிருந்த மூத்த தலைவர்களில் ஒருவரான மணிஷ் திவாரியும், தமிழ்நாட்டைச் சேர்ந்த கார்த்தி சிதம்பரமும் காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.

    இவர்களுக்கு பதில் அளித்த காங்கிரஸ் எம்பி. மாணிக்கம் தாகூர், "கட்சிக்குள் குழப்பம் ஏற்படுத்தக்கூடாது. வெளிப்படையாக தேர்தல் நடத்துவது குறித்து பெருமிதம் கொள்ள வேண்டும்" என கூறியது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×