search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அக்னிபாத் திட்டம்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நாட்டில் கொண்டு வரப்பட்டுள்ள அனைத்து சீர்திருத்த நடவடிக்கைகளையும் எதிர்க்கட்சிகள் கைவிட முயல்கின்றன.
    • ஆயுதப்படைகளை சீர்திருத்த வேண்டும் என்ற எண்ணத்தில் நாங்கள் முயன்று வருகிறோம்.

    மத்திய அரசின் அக்னிபாத் பாதுகாப்பு ஆட்சேர்ப்புத் திட்டத்திற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவிப்பது குறித்து மத்திய அமைச்சரும், முன்னாள் ராணுவ தளபதியுமான வி.கே.சிங் கருத்து தெரிவித்துள்ளார்.

    சர்வதேச யோகா தின கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய சிங் நாட்டில் கொண்டு வரப்பட்டுள்ள அனைத்து சீர்திருத்த நடவடிக்கைகளையும் எதிர்க்கட்சிகள் கைவிட முயல்கின்றன என்று தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து மேற்கொண்டு அவர் கூறியதாவது:-

    அக்னிபாத் திட்டத்திற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவிப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டது. காங்கிரசால் வெளியிடப்பட்ட அறிக்கைகளைப் பாருங்கள். நான் இப்படிப் பேசியதும், டுவிட்டரில் பதிவிட்டதும் காங்கிரசால் ட்ரோல் செய்யப்பட்டேன். யார் ட்ரோல் செய்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும்.

    நாம் எப்போது எந்த சீர்திருத்த நடவடிக்கைகளை கொண்டு வர விரும்புகிறோமோ, அப்போதெல்லாம் மக்கள் அதை கீழே இழுக்க முயற்சிக்கிறார்கள். ஏனென்றால் அவர்களால் ஆட்சியில் இருந்தபோதெல்லாம் எந்த சீர்திருத்தமும் செய்ய முடியவில்லை. ஆயுதப்படைகளை சீர்திருத்த வேண்டும் என்ற எண்ணத்தில் நாங்கள் முயன்று வருகிறோம்.

    எங்களுக்கு எந்தப் பயமும் இல்லை. ஓய்வெடுக்க அனைத்து அரசியல் எதிர்ப்பாளர்களும் தொடர்ந்து அச்சத்துடன் இருப்பார்கள். அதைக் கொடுத்து இளைஞர்களை தவறாக வழிநடத்துவார்கள். ஒரு போரில் ஆபத்துக்களை தடுக்கக்கூடிய இளைஞர்கள் தேவை. அது இளைஞர்களின் திறன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அக்னிபாத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய மாணவர் சங்கம் மற்றும் ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
    • கைதான அனைவரும் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

    பொன்னேரி:

    ராணுவத்தில் அக்னிபாத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இதனை ரத்து செய்யக்கோரியும் இந்திய மாணவர் சங்கம் மற்றும் ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் 50-க்கும் மேற்பட்டோர் இன்று காலை பொன்னேரியில் உள்ள அம்பேத்கார் சிலை முன்பு திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்ததும் விரைந்து வந்த போலீசார் மறியலில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கைதான அனைவரும் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

    • காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட மத்திய அரசு அனுமதி அளிக்கக்கூடாது.
    • ஜெயலலிதா மறைவிற்குப்பிறகு அ.தி.மு.க. சுதந்திரமாக செயல்பட முடியவில்லை.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் கீழ்வேளூரில், விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட மத்திய அரசு அனுமதி அளிக்கக்கூடாது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சில் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்த கவுன்சில் கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும்.

    டெல்லியில் காங்கிரஸ் கட்சி கூட்டியுள்ள ஜனாதிபதி தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி பங்கேற்கும். 'அக்னிபாத்' திட்டம் மோசடி திட்டம்.

    இந்த திட்டம் இளைஞர்களின் எதிர்கால கனவை நாசமாக்கும். அதனால்தான் இந்த திட்டத்தை பா.ஜ.க. கூட்டணியை தவிர மற்ற அனைவரும் எதிர்க்கின்றனர்.

    ஜெயலலிதா மறைவிற்குப்பிறகு அ.தி.மு.க. சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. கடந்த 4 ஆண்டுகள் ஆட்சிக்காலத்தில் அ.தி.மு.க, பா.ஜ.க.வின் முழு கட்டுப்பாட்டில் இருந்தது. அ.தி.மு.க.வை பா.ஜ.க. தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது என்பதை தொண்டர்கள் புரிந்துகொள்ள வேண்டும். பா.ஜ.க.வை தனிமைப்படுத்தி அதை வீழ்த்த வேண்டும் என்கிற நோக்கம் கொண்ட ஒரு மாற்று அணி வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இளைஞர்களின் லட்சியம் மற்றும் வாழ்க்கையுடன் விளையாடுவது மிகவும் தவறானது.
    • நாட்டில் இளைஞர்களுக்கு வேலை இல்லாதபோது ராமரை பற்றி மட்டும் பேசி எந்த பயனும் இல்லை.

    மும்பை :

    ராணுவத்தில் ஆள் சேர்ப்பு தொடர்பாக மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்திற்கு பீகார், உத்தரபிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் சிவசேனாவின் நிறுவன நாள் தின விழாவில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே இதுகுறித்து பேசியதாவது:-

    எந்த அர்த்தமும் இல்லாத திட்டங்களுக்கு அக்னிவீர், அக்னிபாத் போன்ற பெயர்கள் வைப்பது ஏன்?. 17 வயது முதல் 21 வயதுடைய இளைஞர்களுக்கு அந்த 4 ஆண்டுகளுக்கு பிறகு என்ன கிடைக்கும்? நாட்டின் பாதுகாப்பை உறுதிசெய்யும் ராணுவ வீரர்களை ஒப்பந்த அடிப்படையில் எடுப்பது ஆபத்தானது. இளைஞர்களின் லட்சியம் மற்றும் வாழ்க்கையுடன் விளையாடுவது மிகவும் தவறானது.

    நாட்டில் இளைஞர்களுக்கு வேலை இல்லாதபோது ராமரை பற்றி மட்டும் பேசி எந்த பயனும் இல்லை. அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக நாட்டில் சில பகுதிகளில் வன்முறை போராட்டங்கள் நடந்தாலும், மராட்டியம் அமைதியாக உள்ளது. மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை எதிர்த்தும் இதேபோன்ற போராட்டங்கள் நடைபெற்றன. விவசாயிகள் வீதியில் இறங்கி போராடினார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ரெயில்கள் ரத்து செய்யப்பட்டதால் பல ரெயில் நிலையங்களில் பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை உருவானது.
    • ரெயில் நிலையங்களில் அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

    புதுடெல்லி :

    முப்படைகளில் 4 ஆண்டுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் இளைஞர்களை சேர்க்கும் அக்னிபாத் திட்டத்தை மத்திய அரசு அறிவித்து உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் பல்வேறு மாநிலங்களில் போராட்டமும், வன்முறை சம்பவங்களும் நடந்து வருகின்றன. இந்த போராட்டங்களின் தொடர்ச்சியாக நாடு தழுவிய முழு அடைப்புக்கு (பாரத் பந்த்) பல்வேறு அமைப்புகள் சமூக வலைத்தளங்கள் மூலம் அழைப்பு விடுத்திருந்தன.

    ஆனால் இந்த போராட்டத்துக்கு பிரதான கட்சிகள் எதுவும் முறைப்படி ஆதரவு அளிக்காததால், ஓரிரு பகுதிகளை தவிர நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் இந்த போராட்டத்தால் பாதிப்பு இல்லை. அதேநேரம் அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக கடந்த வாரம் நடந்த போராட்டம் மற்றும் வன்முறை சம்பவங்களில் ஏராளமான ரெயில்கள் எரிக்கப்பட்டதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல மாநிலங்களில் நேற்று ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. குறிப்பாக பீகாரில் பெரும்பாலான ரெயில்கள் ரத்து செய்யப்பட்டிருந்தன.

    ஒட்டுமொத்தமாக நாட்டின் பல்வேறு மாநிலங்களில் 612 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டிருந்தன. இதில் 223 ரெயில்கள் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ஆகும். இதைத்தவிர மேலும் சில ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கியும், ஒரு வழியில் ரத்து செய்யப்பட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டன. இதனால் ரெயில் பயணிகள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகினர். ரெயில்கள் ரத்து செய்யப்பட்டதால் பல ரெயில் நிலையங்களில் பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை உருவானது.

    அக்னிபாத் போராட்டம் மற்றும் வன்முறையின் முக்கிய களமாக திகழ்ந்த பீகாரில் நேற்றைய பாரத் பந்த், போதிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் வழக்கம் போல இயங்கின. அதேநேரம் மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தன. இதைப்போல சில இடங்களில் வர்த்தக நிறுவனங்களும் அடைக்கப்பட்டு இருந்தன. சாலைகளில் போக்குவரத்தும் குறைந்த அளவிலேயே காணப்பட்டன.

    முழு அடைப்பையொட்டி ரெயில் நிலையங்களில் அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். சில மாவட்டங்களில் போலீசார் கொடி அணிவகுப்பும் நடத்தினர்.

    மேற்கு வங்காளத்தில் வர்த்தக நிறுவனங்கள், சந்தைகள், அலுவலகங்கள் அனைத்தும் வழக்கம் போல இயங்கின. ரெயில் மற்றும் சாலை போக்குவரத்திலும் எவ்வித இடையூறும் இல்லை. அதேநேரம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஹவுரா பாலம் மற்றும் ரெயில் நிலையம் உள்பட பல்வேறு முக்கியமான இடங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. உத்தரபிரதேசத்தில் இந்த முழு அடைப்பு லேசான தாக்கத்தை ஏற்படுத்தியது.

    அங்கும் வன்முறை சம்பவங்களை தவிர்க்க பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக அரியானா மற்றும் பஞ்சாப்பின் பல இடங்களில் நேற்றும் போராட்டங்கள் நடந்தன. அரியானாவின் பதேகாபாத், ரோத்தக் உள்ளிட்ட இடங்களில் ஏராளமான இளைஞர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். எனினும் இதில் வன்முறை சம்பவங்கள் எதுவும் நிகழ்ந்ததாக தகவல் இல்லை. இரு மாநிலங்களிலும் மத்திய அரசு நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    தலைநகர் டெல்லியில் அக்னிபாத் திட்டம் மற்றும் ராகுல் காந்தி மீதான அமலாக்கத்துறை விசாரணை ஆகிய இரட்டை பிரச்சினையை முன்வைத்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பல இடங்களில் பரபரப்பு ஏற்பட்டது. குறிப்பாக சிவாஜி பாலம் ரெயில் நிலையத்தில் இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் ரெயில் மறியலில் ஈடுபட்டதால் ½ மணி நேரத்துக்கு மேலாக ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த மறியல் தொடர்பாக 16 பேரை போலீசார் கைது செய்தனர். இதைப்போல ஜந்தர் மந்தரில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ப.சிதம்பரம், கே.சி.வேணுகோபால், சச்சின் பைலட், ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    நாடு தழுவிய முழு அடைப்பையொட்டி டெல்லியின் எல்லைகளில் பாதுகாப்பை பலப்படுத்தியிருந்த போலீசார், பல்வேறு போக்குவரத்து கட்டுப்பாடுகளையும் விதித்தனர். அத்துடன் தீவிர வாகன சோதனையும் நடந்தது. இதனால் தலைநகரில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நொய்டா மற்றும் குருகிராமில் இருந்து டெல்லி நோக்கி வந்த வாகனங்கள் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருக்கும் சூழல் உருவானது. இதனால் பயணிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகினர். அதேநேரம் டெல்லியில் வர்த்தக நிறுவனங்கள், சந்தைகள் அனைத்தும் வழக்கம்போல இயங்கின. முழு அடைப்பால் எவ்வித தாக்கமும் ஏற்படவில்லை.

    • நேசனல் ஹெரால்டு வழக்கில், ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்துவதற்கு காங்கிரஸ் எதிர்ப்பு
    • காங்கிரஸ் எம்.பி.க்கள் மீது காவல் துறையினர் மோசமாக நடந்து கொண்டதாக ஜனாதிபதியிடம் புகார் மனு அளித்தனர்.

    புதுடெல்லி:

    ஒப்பந்த அடிப்படையில் ராணுவத்திற்கு வீரர்களை சேர்க்கும் அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெறுகின்றன. இந்த திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகினற்ன. இதேபோல் நேசனல் ஹெரால்டு வழக்கில், ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்துவதற்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், காங்கிரஸ் நிர்வாகிகள் இன்று டெல்லியில் ஜனாதிபதி மாளிகை நோக்கி பேரணியாகச் சென்று, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்தனர். அப்போது, அமலாக்கத்துறைக்கு எதிரான போராட்டத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் மீது காவல் துறையினர் மோசமாக நடந்து கொண்டதாக புகார் மனு அளித்தனர். மேலும் அக்னிபாத் திட்டத்தை கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.


    இந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ப.சிதம்பரம், அக்னிபாத் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேரும் இளைஞர்களின் வேலைவாய்ப்பு குறித்து சரியான விளக்கம் இல்லை என்றும், அதனால் அக்னிபாத் திட்டத்தை கைவிடுமாறு குடியரசுத் தலைவரிடம் வலியுறுத்தியதாகவும் கூறினார்.

    • போராட்டம், வன்முறை அதிகம் நடந்த பீகார் மாநிலத்தில் தொடர்ந்து ரெயில் சேவை முடக்கப்பட்டுள்ளது.
    • டெல்லியில் இளைஞர் காங்கிரசார் ரெயில்களை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    புதுடெல்லி:

    ராணுவத்தில் அக்னிபாத் திட்டத்தின் கீழ் வீரர்களை சேர்க்க மத்திய அரசு கடந்த 14-ந் தேதி அறிவிப்பு வெளியிட்டது.

    4 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் சேர்க்கப்படும் வீரர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட மாட்டாது என்று தகவல்கள் பரவியதால் ராணுவத்தில் சேர பயிற்சி பெற்ற இளைஞர்கள் அதிருப்தி அடைந்தனர்.

    பீகார் மாநிலத்தில் இளைஞர்கள் ஒன்று திரண்டு வன்முறையில் ஈடுபட்டனர். ரெயில்கள் தீவைத்து எரிக்கப்பட்டன. ரூ.700 கோடி அளவுக்கு பொது சொத்துக்கள் நாசப்படுத்தப்பட்டன.

    இந்த நிலையில் சில அரசியல் கட்சிகளும், சில அமைப்புகளும் அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக அப்பாவி இளைஞர்களை தொடர்ந்து போராட்டத்துக்கு தூண்டி வருகின்றனர்.

    போராட்டம் நடத்த வரும்படி அழைப்பு விடுக்கிறார்கள். குறிப்பாக ராணுவத்தில் சேர பயிற்சி அளிக்கும் மையத்தினர்தான் இந்த செயலை செய்வதாக தெரிய வந்துள்ளது. இதனால் போராட்டத்தை தூண்டிய 34 வாட்ஸ் அப் குரூப்புகளை மத்திய அரசு தடை செய்துள்ளது.

    இந்த நிலையில் நாடு முழுவதும் முழுஅடைப்பு போராட்டத்துக்கு சில அமைப்புகள் அழைப்பு விடுத்தன. இதனால் முக்கிய நகரங்களில் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் சூழ்நிலை உருவானது. இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளை தொடர்பு கொண்டு உஷார்படுத்தியது.

    அதன்படி எல்லா மாநிலங்களும் பாதுகாப்பு முயற்சிகளை மேற்கொண்டு உள்ளன. இன்று அனைத்து மாநிலங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. முக்கிய நகரங்களில் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

    போராட்டம், வன்முறை அதிகம் நடந்த பீகார் மாநிலத்தில் தொடர்ந்து ரெயில் சேவை முடக்கப்பட்டுள்ளது. 20 மாவட்டங்களில் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் இன்று அனைத்து போலீசாரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    ஜார்கண்ட் மாநிலத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது, அங்கு 9, 11-ம் வகுப்பு தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

    டெல்லியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. டெல்லி புறநகர் பகுதியில் சாலைகள் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளன. 2000 போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

    சில மாநிலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏராளமானோர் கைது செய்யப் ட்டுள்ளனர். முழு அடைப்பு காரணமாக உத்தரபிரதேச மாநிலத்தில் 380 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. அங்கு பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    டெல்லியில் இளைஞர் காங்கிரசார் ரெயில்களை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேப்போல ஆம் ஆத்மி கட்சியினரும் அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.

    • ரெயில் நிலையங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
    • பயணிகளின் உடமைகளையும் பரிசோதனை செய்கின்றனர்.

    ஈரோடு:

    இந்திய முப்படைகளில் ஒப்பந்த அடிப்படையில் 4 ஆண்டுகளுக்கு ஆள் சேர்க்கும் புதிய திட்டமான அக்னிபாத் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. வட மாநிலங்களில் நடைபெறும் போராட்டங்களில் ரெயில் பெட்டிகள் எரிக்கப்பட்டு வருகிறது.

    மேலும் ரெயில் நிலையங்களும் சூறையாடப்பட்டு வருகிறது. மேலும் இளைஞர்கள் இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதையடுத்து ரெயில் நிலையங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி ஈரோடு ரெயில் நிலையத்தில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ரெயில் நிலையத்தின் நுழைவு வாயில் பகுதியிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இளைஞர்கள் கூட்டமாக சென்றால் அவர்களை தடுத்து நிறுத்தி எங்கு செல்கிறீர்கள் என்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பயணிகளின் உடமைகளையும் பரிசோதனை செய்கின்றனர். இளைஞர்கள் போராட்டம் நடத்துவதை தவிர்க்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இதேப்போல் ரெயில் நிலையத்திற்குள்ளும் ஈரோடு ரெயில்வே போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரோடு ரெயில் நிலையத்திற்கு வரும் ஒவ்வொரு ரெயில்களையும் பெட்டி பெட்டியாக சென்று சோதனை செய்கின்றனர். இந்நிலையில் ஜல்லிக்கட்டு போராட்டம் போன்று அக்னிபாத் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர்கள் ஒன்றுகூடி போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது.

    இதையடுத்து ஈரோடு மாவட்ட போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது. இதன்படி ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவுப்படி ஈரோடு மாவட்டத்தில் முக்கியமான இடங்களில் போலீசார் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளனர்.

    இளைஞர்கள் ஒன்றுகூடி போராட்டம் நடத்திடாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஈரோடு பன்னீர்செல்வம் பார்க், மணிக்கூண்டு, காளைமாடு சிலை, ரெயில் நிலையம், ஜி.எச். ரவுண்டானா, பஸ் நிலையம், சுவஸ்தி கார்னர், பஸ் டிப்போ, வீரப்பன்சத்திரம், கருங்கல்பாளையம் போன்ற நகரின் முக்கியமான பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல் அந்தியூர், பவானி, பெருந்துறை, கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம், மொடக்குறிச்சி, கொடுமுடி, கவுந்தபாடி, நம்பியூர் மற்றும் ஈரோடு மாவட்டம் முழுவதும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    • பிரதமர் மோடி பா.ஜனதா அரசின் 40 சதவீத கமிஷன் குறித்து பதிலளிக்க வேண்டும்.
    • அக்னிபாத் திட்டத்தை நாங்கள் எதிர்க்கிறோம்.

    பெங்களூரு :

    கா்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    "மாணவர்கள் பயங்கரவாதிகளா? பாடத்திட்டங்களை திருத்தியதற்கு எதிராக மடாதிபதிகள் குரல் கொடுக்க வேண்டும். அரசு ஒன்றும் செய்ய முடியாது. புத்தர், பசவண்ணர், குவெம்பு அம்பேத்கர், நாராயணகுரு ஆகிய மகான்களுக்கு அநியாயம் ஏற்பட்டுள்ளது. மறைந்த சிவக்குமார சுவாமி, பாலகங்காதரநாத சுவாமி உள்ளிட்டோருக்கு அவமானம் ஏற்படும்போது, லிங்காயத், ஒக்கலிகர் சங்கங்கள் குரல் எழுப்ப வேண்டும். ஆனால் அந்த சங்கங்கள் மவுனமாக உள்ளன.

    பிரதமர் மோடி கர்நாடகம் வருகிறார். மைசூருவில் நடைபெறும் யோகா தின விழாவில் கலந்து கொள்கிறார். இதனால் அவர் செல்லும் பாதையில் உள்ள கல்லூரிகளுக்கு அரசு விடுமுறை அறிவித்துள்ளது. கல்லூரி மாணவர்கள் பயங்கரவாதிகளா? கர்நாடக மாணவர்களிடம் வன்முறை கலாச்சாரம் கிடையாது. அக்னிபாத் திட்டத்தின் கீழ் 17 வயது இளம் இளைஞர்களை 4 ஆண்டுகளுக்கு வீரர்களாக பயன்படுத்தி கொண்டு பின்னர் வெளியே அனுப்புகிறார்கள்.

    அவர்கள் காவலாளிகள் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டுமா? இது ராணுவத்தில் பணியாற்றும் இளைஞர்களுக்கு இழைக்கப்படும் அவமானம். இதை நியாயப்படுத்தும் மந்திரிகள் தங்களின் குழந்தைகளை ராணுவத்தில் சேர்ப்பார்களா? அவர்களின் குழந்தைகள் டாக்டர்கள், என்ஜினீயர்கள் ஆக வேண்டும். ஏழைகளின் குழந்தைகள் காவலாளிகள் உள்ளிட்ட பணிகளை செய்ய வேண்டுமா? இந்த அக்னிபாத் திட்டத்தை நாங்கள் எதிர்க்கிறோம். இளைஞர்கள் நமது பலம். கர்நாடகம் வரும் பிரதமர் மோடி பா.ஜனதா அரசின் 40 சதவீத கமிஷன் குறித்து பதிலளிக்க வேண்டும்."

    இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.

    • முப்படைகளை இளமையாக மாற்றுவதற்கு இது ஒரு முற்போக்கான நடவடிக்கை.
    • எதிர்கால போர்களுக்கு இளமையும், தொழில்நுட்பத்திறனும் கொண்ட வீரர்கள்தான் தேவை.

    புதுடெல்லி :

    முப்படைகளில் 4 ஆண்டுகளுக்கு மட்டும் ஒப்பந்த அடிப்படையில் இளைஞர்கள் சேர்க்கும் 'அக்னிபாத்' திட்டத்துக்கு நாடு முழுவதும் இளைஞர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. இந்த திட்டத்தை திரும்ப பெறக்கோரி பல மாநிலங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதில் பீகார், உத்தரபிரதேசம், தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் வன்முறை வெடித்தது.

    இதைப்போல அக்னிபாத் திட்டத்துக்கு எதிர்க்கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. இந்த திட்டத்துக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. ஆனால் இந்த திட்டம் திரும்ப பெறப்பட மாட்டாது என மத்திய அரசின் ராணுவ நலத்துறை கூறியுள்ளது. இது தொடர்பாக ராணுவ அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் அனில் புரி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    முப்படைகளை இளமையாக மாற்றுவதற்கு இது ஒரு முற்போக்கான நடவடிக்கை. அப்படியிருக்க அக்னிபாத் திட்டத்தை ஏன் திரும்பப்பெற வேண்டும்? இந்த போராட்டம் மற்றும் வன்முறைகளை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இந்திய ராணுவம் ஒழுக்கத்தை அடிப்படையாக கொண்டது. இதில் தீ வைப்பு, வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கு இடமில்லை.

    அக்னிபாத் திட்டத்தில் முப்படைகளில் சேர்வோரிடம் இருந்து, இதுபோன்ற போராட்டம் மற்றும் வன்முறையில் ஈடுபடவில்லை என்ற சான்றிதழ் பெறப்படும். போலீஸ் மூலமான சரிபார்ப்பும் மேற்கொள்ளப்படும். அப்போது யார் மீதாவது போலீஸ் வழக்கு இருப்பது கண்டறியப்பட்டால், அவரால் ராணுவத்தில் சேர முடியாது. அக்னி வீரர்களுக்கு பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் வேலை வாய்ப்புகளில் இடஒதுக்கீடு வழங்குவது ஏற்கனவே திட்டமிடப்பட்டதுதான்.

    போராட்டத்தின் பின்னர்தான் இட ஒதுக்கீடு வழங்குவதாக கூறுவது தவறு. ராணுவத்தில் இத்தகைய சீர்திருத்தம் பல ஆண்டுகளாக நிலுவையில் இருக்கிறது. அதை ஒவ்வொன்றாக நாங்கள் செயல்படுத்தி வருகிறோம். இந்த திட்டம் மூலம் ராணுவ வீரர்களின் சராசரி வயது 32-ல் இருந்து 26 ஆக குறையும். நமது நாடு இளமையானது. அப்படியிருக்க ராணுவம் 32 வயதில் இருப்பது நன்றாக இருக்காது. எதிர்கால போர்களுக்கு இளமையும், தொழில்நுட்பத்திறனும் கொண்ட வீரர்கள்தான் தேவை.

    இவ்வாறு அனில் புரி கூறினார்.

    இந்த நிகழ்ச்சியின்போது, அக்னிபாத் திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்பு விரிவான அட்டவணையை ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை அதிகாரிகள் வெளியிட்டனர். அதன்படி ராணுவத்தின் ஆட்சேர்ப்பு திட்டம் தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ராணுவ அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் பன்சி பொன்னப்பா, '40 ஆயிரம் வீரர்களை தேர்வு செய்ய நாடு முழுவதும் 83 ஆட்சேர்ப்பு முகாம்கள் நடத்தப்படும். இதற்காக வரைவு அறிக்கை திங்கட்கிழமை (இன்று) வெளியிடப்படும். அடுத்தடுத்த அறிவிப்புகள் ஜூலை 1 முதல் பல்வேறு ஆட்சேர்ப்பு பிரிவுகளால் வெளியிடப்படும்' என்று கூறினார்.

    நாடு முழுவதும் ஆகஸ்டு, செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் அக்னிபாத் திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்பு முகாம்கள் நடைபெறும் எனக்கூறிய அவர், இதில் தேர்வு செய்யப்படும் 25 ஆயிரம் பேர் அடங்கிய முதல் குழுவினர் டிசம்பர் முதல் மற்றும் 2-வது வாரங்களில் பயிற்சியில் சேர்வார்கள் என தெரிவித்தார்.

    இரண்டாவது பிரிவினர் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் பயிற்சியில் சேர்வார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

    கடற்படையில் ஆட்சேர்ப்பு தொடர்பாக துணை அட்மிரல் தினேஷ் திரிபாதி கூறும்போது, 'அக்னிபாத் திட்டத்தின்கீழ் ஆட்சேர்ப்பு குறித்து விரிவான வழிகாட்டுதல்கள் 25-ந்தேதிக்கு முன் வெளியிடப்படும். தொடர்ந்து நடத்தப்படும் ஆட்சேர்ப்பு முகாம்கள் மூலம் தேர்வு செய்யப்படும் வீரர்களின் முதல் பிரிவினர் நவம்பர் 21-ந்தேதிக்கு முன் பயிற்சியில் சேர்வார்கள். இந்த திட்டத்தின் கீழ் ஆண்களும், பெண்களும் தேர்வு செய்யப்படுவார்கள்' என்று தெரிவித்தார்.

    விமானப்படையின் ஆட்சேர்ப்பு திட்டம் குறித்து ஏர் மார்ஷல் எஸ்.கே.ஷா விவரித்தார். அவர் கூறுகையில், 'விமானப்படையில் சேர்வதற்கான முன்பதிவு நடைமுறைகள் 24-ந்தேதி தொடங்குகிறது. தொடர்ந்து ஆன்லைன் தேர்வுக்கான நடைமுறைகள் ஜூலை 24-ந்தேதி தொடங்கும். இந்த திட்டத்தில் தேர்வு செய்யப்படும் முதல் குழுவினர் டிசம்பர் 30-ந்தேதிக்குள் பயிற்சியில் சேர்வதற்காக நாங்கள் திட்டமிட்டு வருகிறோம்' என்று தெரிவித்தார்.

    • ரெயில் மற்றும் ரெயில் நிலையங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டது.
    • ரெயில் நிலையம் நோக்கி வந்தபோது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர்.

    மதுராந்தகம்:

    ராணுவத்தில் புதிதாக கொண்டுவரப்பட்டு உள்ள அக்னிபாத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வட மாநிலங்களில் போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. ரெயில் மற்றும் ரெயில் நிலையங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டது.

    இதையடுத்து முன் எச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் அனைத்து ரெயில் நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள செங்கல்பட்டு, மதுராந்தகம், மேல்மருவத்தூர் ஆகிய முக்கிய ரெயில் நிலையங்களில் கூடுதல் ரெயில்வே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்ட ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மாவட்ட தலைவர் புருஷோத்தமன் தலைமை யில் மேல்மருவத்தூர் ரெயில் நிலையத்தில் ரெயில் மறியலில் ஈடுபட திரண்டு வந்தனர். அவர்கள் ரெயில் நிலையம் நோக்கி வந்தபோது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர்.

    இதனால் போலீசாருக்கும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அங்கேயே அவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

    இதையடுத்து ரெயில் மறியலில் ஈடுபட முயன்ற ஜனநாயக வாலிபர் சங்கத்தை சேர்ந்த 15 பேரை போலீசார் கைது செய்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • இளைஞர்களின் நியாயமான கோரிக்கைக்கு காங்கிரஸ் கட்சி துணை நிற்கும்.
    • காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி, கட்சியின் மூத்த நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்பு.

    அக்னிபாத் என்ற புதிய ராணுவ ஆள்சேர்ப்பு திட்டத்தை மத்திய அரசு அண்மையில் அறிவித்தது. மத்திய அரசின் இந்தத் திட்டத்துக்கு வடமாநிலங்களில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. பீகாரில் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறையும் வெடித்தது.

    ரெயில்களுக்கும் தீ வைக்கப்பட்டது. இதனால் பல பகுதிகளில் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, இளைஞர்களின் நியாயமான கோரிக்கைக்கு காங்கிரஸ் கட்சி துணை நிற்கும் என்று தெரிவித்திந்தார்.

    இந்நிலையில், அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் காங்கிரஸ் சார்பில் அமைதி வழியில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

    நாடு முழுவதும் இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் அக்னிபாத் திட்டத்தை கைவிடக்கோரி காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    போராட்டத்தில் காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி, கட்சியின் மூத்த நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர்.

    ×