search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்துவதாக தகவல்- ஈரோடு மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு

    • ரெயில் நிலையங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
    • பயணிகளின் உடமைகளையும் பரிசோதனை செய்கின்றனர்.

    ஈரோடு:

    இந்திய முப்படைகளில் ஒப்பந்த அடிப்படையில் 4 ஆண்டுகளுக்கு ஆள் சேர்க்கும் புதிய திட்டமான அக்னிபாத் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. வட மாநிலங்களில் நடைபெறும் போராட்டங்களில் ரெயில் பெட்டிகள் எரிக்கப்பட்டு வருகிறது.

    மேலும் ரெயில் நிலையங்களும் சூறையாடப்பட்டு வருகிறது. மேலும் இளைஞர்கள் இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதையடுத்து ரெயில் நிலையங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி ஈரோடு ரெயில் நிலையத்தில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ரெயில் நிலையத்தின் நுழைவு வாயில் பகுதியிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இளைஞர்கள் கூட்டமாக சென்றால் அவர்களை தடுத்து நிறுத்தி எங்கு செல்கிறீர்கள் என்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பயணிகளின் உடமைகளையும் பரிசோதனை செய்கின்றனர். இளைஞர்கள் போராட்டம் நடத்துவதை தவிர்க்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இதேப்போல் ரெயில் நிலையத்திற்குள்ளும் ஈரோடு ரெயில்வே போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரோடு ரெயில் நிலையத்திற்கு வரும் ஒவ்வொரு ரெயில்களையும் பெட்டி பெட்டியாக சென்று சோதனை செய்கின்றனர். இந்நிலையில் ஜல்லிக்கட்டு போராட்டம் போன்று அக்னிபாத் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர்கள் ஒன்றுகூடி போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது.

    இதையடுத்து ஈரோடு மாவட்ட போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது. இதன்படி ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவுப்படி ஈரோடு மாவட்டத்தில் முக்கியமான இடங்களில் போலீசார் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளனர்.

    இளைஞர்கள் ஒன்றுகூடி போராட்டம் நடத்திடாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஈரோடு பன்னீர்செல்வம் பார்க், மணிக்கூண்டு, காளைமாடு சிலை, ரெயில் நிலையம், ஜி.எச். ரவுண்டானா, பஸ் நிலையம், சுவஸ்தி கார்னர், பஸ் டிப்போ, வீரப்பன்சத்திரம், கருங்கல்பாளையம் போன்ற நகரின் முக்கியமான பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல் அந்தியூர், பவானி, பெருந்துறை, கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம், மொடக்குறிச்சி, கொடுமுடி, கவுந்தபாடி, நம்பியூர் மற்றும் ஈரோடு மாவட்டம் முழுவதும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    Next Story
    ×