search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Winter Session"

    ரபேல் விவகாரம், மேகதாது விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டுள்ளதால் 8-வது நாளாக இன்றும் பாராளுமன்ற நடவடிக்கைகள் முடங்கி உள்ளன. #WinterSession #ParliamentStalled
    புதுடெல்லி:

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 11ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் நாளில் இருந்தே எதிர்க்கட்சிகள் பல்வேறு விவகாரங்களை முன்வைத்து அமளியில் ஈடுபட்டு வருவதால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. பாராளுமன்ற வளாகத்திலும் தொடர்ந்து கோரிக்கைகள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



    இந்நிலையில் இன்று காலை 11 மணிக்கு பாராளுமன்றம் மீண்டும் கூடியது. அப்போது மக்களவையில் மேகதாது விவகாரம் தொடர்பாக அதிமுக உறுப்பினர்களும் முழக்கங்கள் எழுப்பினர். இதேபோல் தெலுங்குதேசம் கட்சி, ஆம் ஆத்மி கட்சி உள்ளிட்ட பிற கட்சி எம்பிக்களும் தங்கள் மாநிலம் சார்ந்த கோரிக்கைகளை முன்வைத்து அமளியில் ஈடுபட்டனர். இதனால் மக்களவை பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

    இதேபோல் மாநிலங்களவையிலும் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். குறிப்பாக ரபேல் விவகாரம், காவிரி விவகாரம் தொடர்பாக உறுப்பினர்கள் இடைவிடாமல் முழக்கங்கள் எழுப்பினர். இதன் காரணமாக பிற்பகல் 2.30 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. உறுப்பினர்களின் அமளி காரணமாக 8-வது நாளாக பாராளுமன்ற நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டு உள்ளன. #WinterSession #ParliamentStalled
    ரபேல் விவகாரம், பணமதிப்பிழப்பு நடவடிக்கை, மேகதாது விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால் பாராளுமன்றம் 6-வது நாளாக முடங்கியது. #WinterSession #ParliamentStalled
    புதுடெல்லி:

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 11ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் நாளில் தற்போதைய எம்பிக்கள் மற்றும் முன்னாள் எம்பிக்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு அவை ஒத்திவைக்கப்பட்டது. 12ம் தேதி அவை நடவடிக்கைகள் தொடங்கி நடைபெறுகின்றன. ஆனால், ரபேல், சிபிஐ விவகாரம், பணமதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் மாநிலம் சார்ந்த பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபடுவதால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.



    இந்நிலையில் இன்று காலை 11 மணிக்கு பாராளுமன்றம் மீண்டும் கூடியது. இன்றும் அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள், கோரிக்கைகளை முன்வைத்து அமளியில் ஈடுபட்டனர். இதனால், 6-வது நாளாக பாராளுமன்றம் முடங்கியது. உறுப்பினர்களின் அமளி காரணமாக மக்களவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

    மாநிலங்களவையில் உறுப்பினர்கள் அமைதிகாக்கும்படி அவைத்தலைவர் தொடர்ந்து கேட்டுக்கொண்டார். ஆனால், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இருக்கைகளில் இருந்து எழுந்து நின்றும், அவையின் மையப்பகுதிக்கு வந்தும் முழக்கமிட்டனர். இதனால் அவையில் கடும் கூச்சல் குழப்பம் நிலவியது. இதையடுத்து அவையை நாளை காலை 11 மணி வரை ஒத்திவைப்பதாக அவைத்தலைவர் அறிவித்தார். #WinterSession #ParliamentStalled 
    ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்பிக்களின் அமளி காரணமாக மாநிலங்களவை நாளை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. #WinterSession #RajyaSabhaAdjourned
    புதுடெல்லி:

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், மாநிலம் சார்ந்த பிரச்சனைகள் மற்றும் பாஜக ஆட்சிக்கு எதிரான குற்றச்சாட்டுகளை முன்வைத்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இன்றும் பாராளுமன்றத்தில் அமளி நீடித்தது.

    மக்களவை இன்று காலை கூடியதும், மேகதாது அணைத்திட்டத்திற்கு எதிராக அதிமுக எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதேபோல் ரபேல் வழக்கின் தீர்ப்பு மற்றும் சீக்கிய கலவர வழக்கின் தீர்ப்புக்கு எதிராக காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.  ரபேல் விவகாரத்தில் பொய்யான செய்திகளை பரப்பிய ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வலியுறுத்தி பாஜக எம்பிக்கள் கோஷமிட்டனர். இதனால் அவையில் கடும் கூச்சல் குழப்பம் நிலவியதையடுத்து நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது.

    இதேபோல் மாநிலங்களவையிலும் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்பிக்கள் போட்டி போட்டு முழக்கங்கள் எழுப்பியதால் அவை நடவடிக்கை பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக மதியம் 2 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.



    2 மணிக்கு அவை கூடியபோது ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வலியுறுத்தி பாஜக எம்பிக்கள் மீண்டும் முழக்கமிட்டனர்.  அவர்களுக்கு பதிலடியாக காங்கிரஸ் எம்பிக்கள் முழக்கம் எழுப்பினர். இதேபோல் அதிமுக, கேரள கம்யூனிஸ்ட் எம்பிக்களும் தங்கள் கோரிக்கைளை முன்வைத்து முழக்கமிட்டனர். இதையடுத்து மாநிலங்களவை நாளை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. #WinterSession #RajyaSabhaAdjourned
    கடந்த 2015ம் ஆண்டில் ஏற்பட்ட வெள்ளத்தால் தமிழகம் அதிகளவில் பாதிக்கப்பட்டு உள்ளது என மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. #ParlimentWinterSession #Flood
    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தின் மக்களவையில் குளிர்கால கூட்டத்தொடர் இன்று காலை நடைபெற்றது. கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் நீர்வளத்துறை இணை மந்திரி அர்ஜுன்ராம் மெக்வால் எழுத்துப்பூர்வமாக அளித்த பதில்:
     
    கடந்த 3 ஆண்டுகளில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பால் 4 ஆயிரத்து 902 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 82 ஆயிரத்து 146 கால்நடைகளும் இறந்துள்ளன.

    கடந்த 2015ல் சுமார் ஆயிரத்து 42 பேர் வெள்ளத்தில் பலியாகி உள்ளனர். இதில் தமிழகத்தில் மட்டும் 421 பேர் இறந்துள்ளனர். அந்த ஆண்டில் 57 ஆயிரத்து 291 கோடி ரூபாய் மதிப்பிற்கு சேதம் ஏற்பட்டது. இதில் தமிழகத்தில் மிக அதிகமாக 25 ஆயிரத்து 912 கோடி ரூபாய்க்கு சேதம் ஏற்பட்டுள்ளது.



    2016ம் ஆண்டிலும் சுமார் 5 ஆயிரத்து 675 கோடு ரூபாய் மதிப்பிற்கு சேதம் ஏற்பட்டது. இந்த ஆண்டில் வெள்ளத்தில் சிக்கி ஆயிரத்து 420 பேர் பலியாகினர்.

    இதுபோல், 2017ம் ஆண்டில் வெள்ள பாதிப்பால் 2 ஆயிரத்து 062 பேர் இறந்துள்ளனர். 22 ஆயிரத்து 706 கோடி ரூபாய் மதிப்பிற்கு சேதங்கள் ஏற்பட்டன என தெரிவித்துள்ளார். 

    2015ல் 3.3 கோடி பேரும், 2016ல் 2.6 கோடி பேரும், 2017ல் 4.7 கோடி பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார். #ParlimentWinterSession #Flood
    மேகதாது விவகாரம், ரபேல் ஒப்பந்த ஊழல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை எழுப்பி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. #WinterSession #LSAdjourned
    புதுடெல்லி:

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மற்றும் தற்போதைய எம்பிக்கள், முன்னாள் எம்பிக்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு ஒத்திவைக்கப்பட்டது.

    இந்நிலையில் இன்று காலை 11 மணிக்கு பாராளுமன்றம் மீண்டும் கூடியது. அப்போது பாராளுமன்ற இரு அவைகளிலும் அதிமுக உறுப்பினர்கள் மேகதாது விவகாரத்தை எழுப்பி கடும் அமளியில் ஈடுபட்டனர். மேகதாது விவகாரம் தொடர்பாக முதலில் விவாதிக்க வேண்டும் என அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தினர். அமளி நீடித்ததால் அவையை நடத்த முடியாத சூழல் நிலவியது. இதையடுத்து இரு அவைகளும் பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. 12 மணிக்கு அவை கூடியபோதும் அமளி நீடித்தது.



    மக்களவையில் அதிமுக உறுப்பினர்கள் தொடர்ந்து தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர். காவிரி டெல்டா பகுதி விவசாயிகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.  இதேபோல் ரபேல் போர் விமான ஒப்பந்த ஊழல், ராமர் கோவில், விசாகப்பட்டினம் ரெயில்வே மண்டலம் உள்ளிட்ட விவகாரங்களை எழுப்பி காங்கிரஸ், சிவசேனா மற்றும் தெலுங்குதேசம் கட்சி எம்பிக்களும் அமளியில் ஈடுபட்டனர்.

    ஒரு கட்டத்தில் உறுப்பினர்கள் அவையின் மையப்பகுதிக்கு சென்று முழக்கமிட்டனர். உறுப்பினர்களை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் சமாதானம் செய்தார். ஆனாலும் அமளி நீடித்தது. இதையடுத்து அவையை நாள் முழுவதும் ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்தார். #WinterSession #LSAdjourned
    ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. #WinterSession #ParliamentSession
    புதுடெல்லி:

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வழக்கமாக நவம்பர் மாதம் தொடங்குவது வழக்கம். ஆனால் மத்திய பாரதிய ஜனதா கூட்டணி அரசு தொடர்ந்து 2-வது ஆண்டாக இந்த குளிர்கால கூட்டத்தொடரை டிசம்பர் மாதம் தொடங்குகிறது. அவ்வகையில் இன்று குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கியது.

    இந்த கூட்டத்தொடரை சுமுகமாக நடத்தி முடிப்பதற்காக அனைத்து கட்சிகளின் ஒத்துழைப்பை கோரும் வகையில் மத்திய அரசு நேற்று டெல்லியில் அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தியது. பிரதமர் மோடி தலைமையில் சுமார் 2 மணி நேரம் நடந்த இந்த கூட்டத்தில் பல்வேறு மத்திய மந்திரிகள், தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.



    இந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி குளிர்கால கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவதற்கு அனைத்து கட்சிகளும் குறிப்பாக எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். கட்சிகள் எழுப்பும் தேசநலன் சார்ந்த பிரச்சினைகளை அரசு வரவேற்கும் என்று கூறிய அவர், பாராளுமன்றத்தில் ஆக்கபூர்வமான விவாதம் நடத்துமாறும் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுத்தார்.

    இதைப்போல மாநிலங்களவையை சுமுகமாக நடத்துவதற்கு ஒத்துழைப்பு கேட்டு அனைத்து கட்சி பிரதிநிதிகளின் கூட்டம் ஒன்றை அவைத்தலைவரும், துணை ஜனாதிபதியுமான வெங்கையா நாயுடுவும் நேற்று கூட்டி இருந்தார்.

    இந்த கூட்டத்தொடரில் ரபேல் போர் விமான ஒப்பந்த ஊழல், அயோத்தி ராமர் கோவில் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி அரசுக்கு நெருக்கடி கொடுக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

    இந்த பரபரப்பான சூழ்நிலையில் இன்று காலை 11 மணிக்கு பாராளுமன்றம் கூடியது. தற்போதைய எம்பிக்கள் மற்றும் முன்னாள் எம்பிக்கள் மறைவுக்கு பாராளுமன்ற இரு அவைகளிலும் இரங்கல் தெரிவிக்கப்பட்டு அவை ஒத்திவைக்கப்பட உள்ளது. நாளை முதல் வழக்கம்போல் அலுவல்கள் நடக்கும்.

    அடுத்த மாதம் (ஜனவரி) 8-ந் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டு உள்ள இந்த கூட்டத்தொடரில் பல்வேறு முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. 20 அமர்வுகளாக நடைபெற உள்ள இந்த கூட்டத்தொடரில் 45 மசோதாக்கள் மற்றும் ஒரு நிதி மசோதா விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் என பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி நரேந்திர சிங் டோமர் தெரிவித்துள்ளார். #WinterSession #ParliamentSession

    குளிர்கால கூட்டத்தொடருக்காக பாராளுமன்றம் நாளை கூடுகிறது. இதில் அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பிரச்சினை, சோனியா மருமகன் ராபர்ட் வதேராவுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்க துறையினர் சோதனை நடத்திய விவகாரம் புயலைக் கிளப்பும். #ParlimentWinterSession
    புதுடெல்லி:

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வழக்கமாக நவம்பர் மாதம் தொடங்குவது வழக்கம். ஆனால் மத்திய பாரதிய ஜனதா கூட்டணி அரசு தொடர்ந்து 2-வது ஆண்டாக இந்த குளிர்கால கூட்டத்தொடரை டிசம்பர் மாதம் தொடங்குகிறது.

    அந்த வகையில் நாளை (செவ்வாய்க்கிழமை) பாராளுமன்றம் கூடுகிறது. இந்த கூட்டத்தொடர் ஜனவரி மாதம் 8-ந் தேதி முடிகிறது. அடுத்த ஆண்டு நடக்க உள்ள பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக கருதப்படுகிற 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகிற நாளில், பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்குவது முக்கியத்துவம் பெற்றுள்ளது. அதுமட்டுமின்றி பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பான முழுமையான கூட்டத்தொடர் இதுதான் என்பதால் இந்த தொடர் சிறப்பு பெறுகிறது.

    குளிர்கால கூட்டத்தொடர் நாளை தொடங்குவதையொட்டி, பாராளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி நரேந்திரசிங் தோமர் இன்று (திங்கட்கிழமை) டெல்லியில் அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

    இதேபோன்று மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன், மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடுவும் அனைத்துக் கட்சி கூட்டங்களை நடத்துகிறார்கள். இந்த கூட்டங்களில், குளிர்கால கூட்டத்தொடர் அமைதியாகவும், ஆக்கப்பூர்வமாகவும் நடக்க எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பை ஆளுங்கட்சி கோரும் என தகவல்கள் கூறுகின்றன.

    அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவிலை உடனே கட்ட வேண்டும் என்ற கருத்து சங்பரிவார அமைப்புகள் மத்தியில் வலுத்து வருகிறது. இதை பாரதிய ஜனதா கட்சியும் ஆதரிக்கிறது.

    அந்தக் கட்சியின் தலைவர் அமித் ஷா நேற்று முன்தினம் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசும்போது, “மிகப்பெரிய அளவில் ராமர் கோவில் தாமதமின்றி, உடனடியாக கட்டப்பட வேண்டும். ராமர் கோவில் என்பது கட்சியின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்ற அம்சம். ஆனால் ராமர் கோவில் கட்டுவதற்கு காங்கிரஸ் கட்சி தடைகளை ஏற்படுத்த முயற்சிக்கிறது. அடுத்த பாராளுமன்ற தேர்தல் நடந்து முடிகிறவரையில் அயோத்தி பிரச்சினை குறித்த வழக்கில் விசாரணையை ஒத்தி போட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபில் வலியுறுத்தியதில் அடிப்படை இல்லை” என கூறினார்.

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் ஆளுங்கட்சிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அனைத்தும் ராமர் கோவில் பிரச்சினையில் ஓரணியில் நின்று புயலைக் கிளப்பும் என்ற எதிர்பார்ப்பு வலுத்து வருகிறது. அதே நேரத்தில் பாரதிய ஜனதா கட்சி இந்த விவகாரத்தை பாராளுமன்றத்தில் எப்படி கையாளப்போகிறது என்பது குறித்து தகவல் ஏதும் இல்லை.



    5 மாநில தேர்தலில் குறிப்பாக பாரதிய ஜனதா கட்சி ஆட்சி நடந்து வருகிற ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஷ்கார் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி கூடுதல் இடங்களைப் பிடிக்கும் என கருத்துக்கணிப்புகள் வந்துள்ள நிலையில் அவை பலிக்கிறபோது அது பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் தாக்கத்தை ஏற்படுத்தும். காங்கிரஸ் கட்சியின் கை ஓங்கும்.

    சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா மீது ராஜஸ்தானில் எழுந்த நில மோசடி புகாரில், அவருக்கு சொந்தமான இடங்களிலும், அவருடன் தொடர்புடையவர்களின் இடங்களிலும் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனைகளை நடத்தியது பழிவாங்கும் நடவடிக்கை என காங்கிரஸ் விமர்சித்தது.

    இந்த விவகாரத்தை அந்தக் கட்சி, பாராளுமன்றத்தில் எழுப்பும் என கூறப்படுகிறது.

    ரபேல் போர் விமான பேர விவகாரத்தில் பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குரல் கொடுத்து வருகிற நிலையில்,பாராளுமன்றத்திலும் இது குறித்து அவர் குரல் கொடுப்பார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

    மசோதாக்களை பொறுத்தமட்டில் ‘முத்தலாக்’ மசோதா, மக்களவையில் நிறைவேறிய நிலையில், மாநிலங்களவையில் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதை நிறைவேற்ற பாரதிய ஜனதா கூட்டணி அரசு முக்கியத்துவம் கொடுக்கும்.

    சி.பி.ஐ. இயக்குனர், சிறப்பு இயக்குனர் மோதலில் அவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் பிரச்சினை எழுப்பப்போவது உறுதி.

    பாராளுமன்றம் நாளை கூடுகிறபோது முதலில், மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய், பாராளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி அனந்த குமார் ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து விட்டு, நாள் முழுவதும் ஒத்திவைக்கப்படும்.

    எனவே புதன்கிழமையில் இருந்து பாராளுமன்றத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என்பது அரசியல் பார்வையாளர்களின் கருத்தாக அமைந்துள்ளது.

    எதிர்க்கட்சிகள் எழுப்ப உள்ள பிரச்சினைகள் குறித்து இன்று டெல்லியில் நடக்கிற பாராளுமன்ற பாரதிய ஜனதா கட்சியின் செயற்குழு கூட்டத்தில் விவாதிக்கப்படும். அதே போன்று பாரதிய ஜனதா கூட்டணி கட்சிகள் கூட்டமும் இன்று மதியம் நடக்க இருக்கிறது. இதில் பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை கையாள வேண்டிய உத்தி குறித்து முடிவு எடுக்கப்படும் என தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. #ParlimentWinterSession
    பரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கிடையே, பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் 11-ந் தேதி தொடங்குகிறது. #Parliament #WinterSession
    புதுடெல்லி:

    பரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கிடையே, பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் 11-ந் தேதி தொடங்குகிறது. சபையை சுமுகமாக நடத்துவது பற்றி ஆலோசனை நடத்துவதற்காக, 10-ந் தேதி, அனைத்து கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர், வருகிற 11-ந் தேதி தொடங்குகிறது. அடுத்த ஆண்டு நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடப்பதால், தற்போதைய மக்களவையின் முழுமையான கடைசி கூட்டத்தொடர் இதுவே ஆகும். எனவே, இந்த கூட்டத்தொடர் ஆக்கப்பூர்வமான, சுமுகமான கூட்டத்தொடராக நடப்பதை உறுதி செய்ய தேசிய ஜனநாயக கூட்டணி அரசு விரும்புகிறது.



    கடந்த காலங்களில், எதிர்க்கட்சிகளின் அமளியால் இரு அவைகளும் முடங்கின. அதனால், ஒவ்வொரு கூட்டத்தொடரிலும் பல நாட்கள் வீணாக போய்விட்டன. இந்த கூட்டத்தொடரில் அத்தகைய நிலை ஏற்படக்கூடாது என்று இரு அவைகளின் தலைவர்களும் கருதுகிறார்கள்.

    எனவே, சபையை சுமுகமாக நடத்துவதற்காக, அனைத்து கட்சி கூட்டத்துக்கு மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஏற்பாடு செய்துள்ளார். கூட்டத்தொடருக்கு முந்தைய நாளான 10-ந் தேதி, இந்த கூட்டம் நடக்கிறது.

    அதுபோல், பாராளுமன்ற மாநிலங்களவையை சுமுகமாக நடத்துவதற்காக, மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடுவும் அந்த சபையின் கட்சி தலைவர்கள் கூட்டத்துக்கு 10-ந் தேதி ஏற்பாடு செய்துள்ளார். டெல்லியில் அவரது வீட்டில் இந்த கூட்டம் நடக்கிறது.

    அவை முன்னவரும், மத்திய நிதி மந்திரியுமான அருண் ஜெட்லி, எதிர்க்கட்சி தலைவர் குலாம்நபி ஆசாத் உள்ளிட்ட கட்சி தலைவர்கள் அதில் பங்கேற்பார்கள் என்று தெரிகிறது. சபையை சுமுகமாக நடத்த அனைத்து கட்சிகளிடையே கருத்தொற்றுமையை ஏற்படுத்த வெங்கையா நாயுடு முயற்சிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ‘உடனடி முத்தலாக்’ நடைமுறையை ஒழிக்கும்வகையில், அதை தண்டனைக்குரிய குற்றமாக கருதும் மசோதா, மக்களவையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டு விட்டது. மாநிலங்களவையில் அது நிலுவையில் உள்ளது. அங்கும் மசோதாவை நிறைவேற்ற இந்த தொடரில் மத்திய அரசு முயற்சிக்கும் என்று தெரிகிறது. அதற்கு எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்குமா? என்பது அப்போது தெரியவரும்.

    இந்த குளிர்கால கூட்டத்தொடர், பரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கிடையே தொடங்குகிறது. சமீபத்தில், மத்தியபிரதேசம், சத்தீஷ்கார், மிசோரம் ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது.

    ராஜஸ்தான், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில், வருகிற 7-ந் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. மேற்கண்ட 5 மாநிலங்களிலும் 11-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. அன்றைய தினமே முடிவுகள் முழுமையாக வெளியாகி விடும் என்பதால், அம்மாநிலங்களில் ஆட்சியை பிடிப்பது யார்? என்பது தெரிந்துவிடும்.

    இந்த தேர்தல் முடிவுகள், குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அத்துடன், பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை வீழ்த்த அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஓரணியில் திரட்டும் பணியில் தெலுங்கு தேசம் கட்சி தலைவரும், ஆந்திர முதல்-மந்திரியுமான சந்திரபாபு நாயுடு ஈடுபட்டுள்ளார். அப்படி ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகளின் முதலாவது ஆலோசனை கூட்டம், 10-ந் தேதி டெல்லியில் நடக்கிறது.

    அந்த கூட்டத்தில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, சந்திரபாபு நாயுடு, தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, முன்னாள் மத்திய மந்திரி சரத் யாதவ், சமாஜ்வாடி கட்சி சார்பில் ராம்கோபால் யாதவ் மற்றும் தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்பார்கள் என்று தெரிகிறது.

    இந்த கூட்டத்தில், பா.ஜனதாவுக்கு எதிரான ‘மெகா கூட்டணி’யை எந்தவகையில் வடிவமைப்பது என்பது பற்றி ஆலோசனை நடத்தப்படுகிறது. பல்வேறு முக்கிய பிரச்சினைகளில், மோடி அரசை எதிர்கொள்வதற்கான செயல் திட்டம் வகுக்கப்படும் என்றும் தெரிகிறது. இந்த கட்சிகளிடையே நாடாளுமன்றத்திலும் ஒருங்கிணைப்பு இருக்கும் என்பதால், கூட்டத்தொடரில் அது எதிரொலிக்கும்.

    பா.ஜனதா அரசை முழுமையாக எதிர்கொள்ள இதுவே கடைசி வாய்ப்பு என்பதால், இந்த கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் முழு பலத்துடன் களம் இறங்குவார்கள் என்று தெரிகிறது.

    ரபேல் விமான ஒப்பந்தம், முத்தலாக் மசோதா, ரிசர்வ் வங்கி-மத்திய அரசு மோதல், சி.பி.ஐ. இயக்குனர்கள் நீக்கம் உள்ளிட்ட பிரச்சினைகளை எதிர்க்கட்சிகள் எழுப்ப உள்ளதால், குளிர்கால கூட்டத்தொடரில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின்போது, ராமர் கோவில் கட்ட மசோதா நிறைவேற்றப்படும் என விசுவ இந்து பரிஷத் நம்பிக்கை தெரிவித்துள்ளது. #RamTemple #VHP #AlokKumar
    புதுடெல்லி:

    விசுவ இந்து பரிஷத் சர்வதேச செயல் தலைவர் அலோக் குமார், டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அயோத்தியில் ராமர் கோவில் கட்ட மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்படும். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இதற்கான மசோதாவை தாக்கல் செய்யக்கோரி, அனைத்து கவர்னர்களிடமும் மத, சமூக அமைப்புகள் மனு கொடுத்துள்ளன. அனைத்து எம்.பி.க்களிடமும் ஆதரவு கேட்போம். எனவே, மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும் என்று நம்புகிறோம். கட்சி வேறுபாடுகளை கடந்து, எதிரணி தலைவர்களும் அதை ஆதரிப்பார்கள்.

    ராமர் கோவில் கட்ட வற்புறுத்தி, வருகிற 25-ந் தேதி, அயோத்தி, நாக்பூர், பெங்களூரு ஆகிய நகரங்களில் துறவிகள் பங்கேற்கும் பொதுக்கூட்டங்கள் நடைபெறும். டெல்லியில், டிசம்பர் 9-ந் தேதி பிரமாண்ட கூட்டம் நடைபெறும்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    ×