search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "waste water"

    • தியாகதுருகத்தில் கழிவு நீர் ஏரியாக புக்குளம் ஏரி மாறியது.
    • கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும் என சமூக அலுவலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் பேரூராட் சிக்கு உட்பட்ட புக்குளம் பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் புக்குளத்தில் சுமார் 250 -ஏக்கருக்கு மேற்பட்ட பரப்பளவில் பெரிய ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியில் தியாகதுரு கம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அன்றாட அத்தியாவசிய தேவைக்காக பயன்படுத்தப்படும் கழிவுநீர் பிரதான கால்வாய் மூலம் புக்குளம் பெரிய ஏரியை சென்றடைகிறது. இதனால் புக்குளம் பெரிய ஏரி கழிவுநீர்கள் நிரம்பி கழிவு நீர் ஏரியாக மாறி உள்ளது. இவ்வாறு ஏரியில் கழிவு நீர் தேங்கியதால் புக்குளத்தில் உள்ள தக்க கிணற்றில் நீர் ஊற்றுகள் மூலம் கழிவு நீர் கலப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.

    இந்தநிலையில் புக்குளம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்களுக்கு மணலூர்பேட்டை கூட்டு குடிநீர் திட்ட மூலம் வழங்கப்படும் குடிநீர் குழாயும், மாலை நேரங்களில் தக்க கிணற்றிலிருந்து அத்தியாவசிய தேவைக்கான வழங்கப்படும் நீர் ஆகியவை ஒரே குழாய் லைனில் வழங்கப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் சிலருக்கு சில நாட்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து சுகாதாரத் துறையினர் முகாம் அமைத்து சிகிச்சை அளித்தனர். மேலும் தக்க கிணற்றில் இருந்து நீர் மாதிரி பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. புக்குளம் பகுதியில் உள்ள கால்நடைகள் பெரிய ஏரியில் உள்ள கழிவு நீரை குடிப்பதால் கால்நடைகளுக்கு வாய் மற்றும் மடிப்பகுதியில் புற்றுநோய் ஏற்படுவதாகவும், கோமாரி நோய் ஏற்படுவதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றன.

    மேலும் புக்குளத்தில் உள்ள சுமார் 450 ஏக்கர் பரப்பளவில் உள்ள விவசாய நிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாத அவல நிலை உள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து கழிவு நீர் ஏரியில் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மேலும் தியாகதுருகம் பகுதியில் இவ்வாறு ஏரி மற்றும் குளம் பகுதியில் கழிவு நீர் தேங்குவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும், எனவே பொதுமக்கள் மற்றும் கால்நடைகளின் நலனைகருத்தில் கொண்டு தியாகதுருகம் பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும் என சமூக அலுவலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ள னர்.

    • தியாகதுருகத்தில் குடியிருப்புகளுக்கு மத்தியில் குளமாக கழிவு நீர் தேங்கியது.
    • கழிவு நீர் கால்வாய் மூலம் வந்து பிரதான கால்வாய் மூலம் செல்கிறது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகத்தில் செல்வா நகர் பகுதியில் ஆசாரி குளம் அமைந்துள்ளது. இந்த குளத்தில் பேட்டை தெரு, செல்வா நகர், ஒட்ட தெரு, ஔவையார் தெரு, ஜின்னா நகர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர், கால்வாய் மூலம் வந்து பிரதான கால்வாய் மூலம் செல்கிறது.

    இந்த கழிவு நீர் செல்வ நகர் பகுதியில் உள்ள ஆசாரி குளத்தில் குளம் முழுவதும் நிரம்பியுள்ளது. இவ்வாறு கழிவுநீர் குளம் முழுவதும் தேங்கியதால் அதனைச் சுற்றியுள்ள குடியிருப்புகளில் ஆழ்துளை கிணறுகளில் இருந்து வரும் தண்ணீர் கழிவுநீராக உள்ள தாகவும், தண்ணீர் குடிக்க முடியாமல் துர்நாற்றம் வீசுவதாகவும் அப்பதி மக்கள் கூறுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சுகாதார சீர்கேடு ஏற்படுவதற்கு முன்பாக நேரில் சென்று ஆய்வு செய்து, செல்வா நகரில் இருந்து வரும் பிரதான கழிவு நீர் கால்வாயை பேரூராட்சி அருகே செல்லும் பிரதான கால்வாயுடன் இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    திருச்சியில் கழிவு நீர் செல்வதில் ஏற்பட்ட தகராறில் இளம்பெண்ணை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    திருச்சி:

    திருச்சி வரகனேரி காமராஜர் நகரை சேர்ந்தவர் ரெங்கராஜன். இவரது மனைவி மனோரஞ்சிதம் (வயது 38).
    இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் அய்யப்பன். இவரது வீட்டின் வாசல் வழியாக மனோரஞ்சிதத்தின் வீட்டின் கழிவு நீர் செல்லும் கால்வாய் உள்ளது. இதனால் இருவருக்கும் இடையே கழிவு நீர் கால்வாய் தொடர்பாக தகராறு இருந்து வந்தது.

    இந்நிலையில் இது தொடர்பாக அவர்களிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது அய்யப்பன் மற்றும் அவரது உறவினர்கள் சரண்யா, வீரராஜ், சுகன்ராஜ் ஆகிய 4 பேரும் சேர்ந்து உருட்டு கட்டையால் மனோ ரஞ்சிதத்தை  சராமாரியாக தாக்கினர்.

    இதில் அவர் படுகாயம் அடைந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இது குறித்து காந்திமார்க்கெட் போலீசார் வழக்கு பதிவு செய்து அய்யப்பன், சுகன்ராஜ் ஆகிய 2பேரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ளசரண்யா, வீரராஜை தேடி வருகிறார்கள். #tamilnews 
    விருதுநகர் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் சுகாதார கேடு ஏற்படும் நிலையில் ஆஸ்பத்திரி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்காமல் உள்ளது.
    விருதுநகர்:

    மாவட்டம் முழுவதும் டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுவரும் நிலையில் மாவட்ட நிர்வாகம் கல்வி நிறுவனங்கள், பஸ் நிலையங்கள், தனியார் ஆஸ்பத்திரிகள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கழிவுநீர் தேங்கி நிற்காமல் இருக்க ஆய்வு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. கழிவுநீர் மற்றும் மழைநீர் தேங்கி நின்றால் சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினருக்கு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படுகிறது.

    இந்த நிலையில் விருதுநகர் மாவட்ட அரசு தலைமை ஆஸ்பத்திரியில் ஆஸ்பத்திரி வளாகத்திற்குள்ளேயே வெவ்வேறு இடங்களில் கழிவுநீரும் மழைநீரும் தேங்கியுள்ளது. தொடர்ந்து பலநாட்கள் தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்ற ஆஸ்பத்திரி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை. அரசு ஆஸ்பத்திரியில் இருந்து வெளியேறும் கழிவுநீரை அகற்ற வேண்டிய பொறுப்பு நகராட்சி நிர்வாகத்திற்கு தான் உள்ளது என்று கூறும் ஆஸ்பத்திரி நிர்வாகம் ஆஸ்பத்திரி வளாகத்திற்குள்ளேயே தேங்கி நிற்கும் கழிவுநீரையும் மழைநீரையும் அகற்றாமல் பாராமுகமாகவே உள்ளது ஏன் என்று தெரியவில்லை.

    தூய்மை இந்தியா திட்டம் மாவட்டம் முழுவதும் முறையாக கடைபிடிக்கவேண்டும் என்று அறிவுறுத்திவரும் மாவட்ட நிர்வாகம் அரசு ஆஸ்பத்திரி வளாகத்திற்குள் நிலவும் சுகாதார சீர்கேட்டை கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன் என்று தெரியவில்லை. இதுவரை மாவட்ட நிர்வாகம் சார்பில் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் துப்புரவு பணி முறையாக நடைபெறுகிறதா? அரசு வழங்கியுள்ள வசதிகள் பொதுமக்களுக்கு முறையாக கிடைக்கிறதா? சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு ஏதேனும் பிரச்சினை உள்ளதா? என்பது குறித்தும் எவ்வித ஆய்வும் மேற்கொண்டதாக தெரியவில்லை.

    எனவே இனியாவது மாவட்ட நிர்வாகம் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் கழிவுநீர் மற்றும் மழைநீர் தேங்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கவும் அரசு ஆஸ்பத்திரியின் அன்றாட நடைமுறைகள் முறையாக நடைபெறுகிறதா என்பதை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
    காவிரி ஆற்றில் கழிவுகள் கலப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் 8 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது. #SupremeCourt #CauveryWater
    புதுடெல்லி:

    கர்நாடக மாநிலத்தில் காவிரி ஆற்றின் கரையோரம் உள்ள தொழிற்சாலைகள், நகரங்களில் இருந்து கழிவுகள் சுத்திகரிக்கப்படாமல் காவிரி ஆற்றில் கலக்கின்றன.

    இதனால் ஆண்டுக்கு சுமார் 5 லட்சத்து 40 ஆயிரத்து 200 மில்லியன் லிட்டர் கழிவுகள் கர்நாடகாவில் இருந்து காவிரி மூலம் தமிழகத்துக்கு வருகிறது.

    இந்த கழிவுகளால் காவிரி கரையோரம் வாழும் தமிழக மக்களுக்கும், கால்நடைகளுக்கும் பலவித நோய்கள் ஏற்படுகிறது.

    எனவே காவிரியில் கலக்கும் கழிவுநீரை சுத்திகரித்து ஆற்றில் விட கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும், கழிவுகள் கலப்பதற்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.



    இந்த வழக்கில் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஜூலை மாதம் 16-ந்தேதி அறிக்கை தாக்கல் செய்தது. இதில், கர்நாடகாவில் இருந்து காவிரியில் கழிவுகள் கலக்கப்படவில்லை என்றும், தென்பெண்ணையாறு, அர்க்காவதி ஆகிய காவிரியின் கிளை நதிகள்தான் மாசடைந்த நிலையில் தமிழ்நாட்டுக்குள் பாய்கிறது என்றும் கூறப்பட்டு இருந்தது.

    இந்த அறிக்கை மீது ஏற்கனவே தமிழக அரசும், கர்நாடகா அரசும் பதில் மனு தாக்கல் செய்துள்ளன. இந்தநிலையில் இந்த வழக்கு மீதான விசாரணை நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு தரப்பில் வக்கீல் ஜி.உமாபதி ஆஜரானார்.

    விசாரணை தொடங்கியதும் தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இந்த அறிக்கை மீது எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் பற்றிய முக்கிய குறிப்புகளை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள் இந்த வழக்கின் விசாரணையை 8 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.  #SupremeCourt #CauveryWater
    மொடக்குறிச்சி அடுத்த ஆனந்தம்பாளையம் ஊராட்சி அருகே கழிவு நீர் வெளியேற நடவடிக்கை எடிக்காவிட்டால் சாலை மறியலில் ஈடுபட போவதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.
    மொடக்குறிச்சி:

    மொடக்குறிச்சி அடுத்த ஆனந்தம்பாளையம் ஊராட்சி கரியாகவுண்டன் வலசு என்ற ஊரில் சுமார் 200-க்கும் மேற்பட்ட பொது மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு ஆனந்தம்பாளையம் ஊராட்சி மன்ற அலுவலகம், ஊராட்சிஒன்றிய நடு நிலைப்பள்ளி, மாரியம்மன் கோவில், மற்றும் நியாய விலைக்கடை ஆகியவை செயல்பட்டு வருகின்றன.

    ஆனால் இங்கு உள்ள 200 வீடுகளின் கழிவுநீர் வெளியேற எந்த வசதியும் ஊராட்சி மன்றத்தால் செய்து தரப்படவில்லை.

    இந்த ஊராட்சியில் குடிநீர், சாக்கடை, மின்சார வசதி என்று எந்த ஒரு வசதியும் இதுநாள்வரை செய்து தரப்படவில்லை. இந்த ஊரில் 200-க்கும் மேற்பட்ட வீடுகள் இருந்தும் சாக்கடை கட்டி தரப்படவில்லை. இதனால் கொசுத்தொல்லை அதிகரித்துள்ளது. பெயர் தெரியாத காய்ச்சல் அனைவருக்கும் வருகிறது.

    இதனால் பொதுமக்கள், குழந்தைகள் கடும் பாதிப்புக்குள்ளாகின்றனர். இதனால் சாக்கடை வசதி கோரி பலமுறை விண்ணப்பம் அளித்தும் பலனில்லை. இதுகுறித்து ஊராட்சி செயலாளரிடம் கேட்டால் இதுநாள்வரை ஊராட்சிமன்ற தலைவர் சொல்வதை மட்டும் செய்துவந்தோம். கடந்த 10ஆண்டுகளாக எந்தவித ஆவணங்களும் எங்களிடம் இல்லை என்கின்றனர்.

    எனவே ஆனந்தம்பாளையம் ஊராட்சி ஆவணங்களை உயர் அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்து எங்களுக்கு தேவையான சாக்கடைவசதி, குடிநீர் வசதி, மின்சார வசதிகளை செய்து தர முன் வர வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    மேலும் இதுகுறித்து மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்திருப்பதாகவும், உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் சாலைமறியல் செய்ய உள்ளதாகவும் கூறினர். #tamilnews
    நாமக்கல்லில், சாலையில் தேங்கும் கழிவுநீரை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
    நாமக்கல்:

    நாமக்கல் வகுரம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட திருச்சி ரோடு ரெயில்வே மேம்பாலம் அருகில் நேதாஜி நகர் உள்ளது. இங்குள்ள குடியிருப்பு பகுதியில் சரியான சாக்கடை வசதி இல்லாததால் கழிவுநீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக அப்பகுதி மக்கள் திருச்சி ரோடு வழியாக சாக்கடை கால்வாய் அமைத்து கழிவுநீரை வெளியேற்றி வந்தனர்.

    அந்த சாக்கடை கால்வாய் வழியாக திருச்சி ரோட்டில் உள்ள குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள், ஓட்டல்களின் கழிவுநீரும் சென்று வந்தது. இந்த நிலையில் கழிவுநீர் சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டதால் ஆங்காங்கே உடைப்பு ஏற்பட்டு சாலையில் கழிவுநீர் செல்லும் நிலை உருவாகி உள்ளது.

    இதன் காரணமாக அங்குள்ள குடியிருப்பு பகுதிகளில் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை ஏற்படுவதாக கூறி அப்பகுதி பொதுமக்கள் நாமக்கல்லில், திருச்சி ரோடு ரெயில்வே மேம்பாலம் அருகே சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து வகுரம்பட்டி ஊராட்சியில் பலமுறை மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை என மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். மேலும் சாலையில் தேங்கும் கழிவுநீரை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என கூறி அவர்கள் தொடர்ந்து ஈடுபட்டனர்.

    போக்குவரத்து பாதிப்பு தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற நாமக்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் குலசேகரன் மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கழிவுநீர் சாலையில் தேங்குவது தொடர்பாக வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் மூலம் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறிய போலீசார், போக்குவரத்திற்கு இடையூறு செய்யாமல் சாலையில் இருந்து கலைந்து செல்லுமாறு மறியலில் ஈடுபட்டவர்களை அறிவுறுத்தினர்.

    இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு சாலையில் இருந்து கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டம் காரணமாக நாமக்கல், திருச்சி சாலையில் சுமார் ½ மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 
    கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யாமல் வெளியிடும் தொழிற்சாலைகளை முற்றுகையிடும் போராட்டத்தை விரைவில் நடத்த இருப்பதாக கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் கூறினார்.
    நாமக்கல்:

    கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் நேற்று நாமக்கல்லில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் 13 பேர் சுட்டு கொல்லப்பட்டது தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளது. எதிர்க்கட்சியினர் ஆளும்கட்சி மீதும், ஆளும்கட்சியினர் எதிர்க்கட்சியினர் மீதும் குற்றம்சாட்டி வருகின்றனர். உளவுத்துறையின் தோல்வி, சமூக விரோதிகள் ஊடுருவல் என்று விவாதம் நடைபெற்று வருகிறது. ஆனால் உண்மை குற்றவாளி மாசு கட்டுப்பாட்டு வாரியம் என்பது யாராலும் பேசப்படுவது இல்லை.

    மாசு கட்டுபாட்டு வாரியம் ஆலைக்கு நிபந்தனையுடன் அனுமதி வழங்குகிறது. ஆனால் அந்த நிபந்தனை பின்பற்றப்படுகிறதா? என கண்துடைப்புக்கு மட்டுமே ஆய்வு செய்கிறார்கள்.

    மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் லஞ்சம் பெருகி விட்ட காரணத்தால் கழிவு பொருட்களால் நிலத்தடிநீர், காற்று மாசுபடுகிறது. இதனால் புற்றுநோய் மற்றும் தோல்நோய் வந்து அழியபோவது பொதுமக்கள் என்பதை உணர வேண்டும். இந்த விஷயத்தில் தவறு செய்யும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கொங்குநாட்டில் சாயக்கழிவுகள் மற்றும் தோல் கழிவுகள் நேரடியாக நீர்நிலைகளில் கலக்கப்படுகிறது. இதனால் நீர்நிலைகள் மற்றும் நிலத்தடி நீர் மாசடைந்து வருகிறது. இதே நிலை நீடித்தால் கொங்குநாடு மக்கள் வாழ தகுதி இல்லாத இடமாக மாறிவிடும். இதேபோல் நகராட்சி மற்றும் மாநகராட்சிகளும் கழிவுகளை நேரடியாக நீர்நிலைகளில் கலக்கின்றன. கொங்கு மண்டலத்தில் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யாமல் வெளியிடும் தொழிற்சாலைகளை முற்றுகையிடும் போராட்டம் விரைவில் நடத்தப்படும்.

    சட்டசபையில் நடைபெறும் மானிய கோரிக்கைகள் குறித்த விவாதத்தில் எதிர்க்கட்சியினர் கலந்து கொள்ள வேண்டும் என்பது எங்களின் நிலைப்பாடு. இது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினிடம் வலியுறுத்தி உள்ளோம். அவரும் பரிசீலனை செய்வதாக கூறி உள்ளார். சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்வதை மக்கள் விரும்பவில்லை. ஆக்கபூர்வமாக விவாதம் செய்வதையே விரும்புகின்றனர்.

    கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தி.மு.க. கூட்டணியில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டு இருப்பது மகிழ்ச்சியை தருகிறது. அது தமிழகத்திற்கு தண்ணீர் கொண்டு வரும் அமைப்பாக இருக்க வேண்டும். கடந்த 2 நாட்களுக்கு முன்பு திருப்பூர் மாவட்டத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் பெருவாரியான மக்கள் செய்து வரும் பெண்கள் பூப்பெய்தும் நிகழ்ச்சியை கொச்சைப்படுத்தி பேசி இருப்பது கண்டனத்துக்கு உரியது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து நடைபெற்ற கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் நாமக்கல் தெற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் ஈஸ்வரன் பேசினார். அந்த கூட்டத்தில் ஆசிய அளவிலான பளுதூக்கும் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்ற மாணவி கமலிக்கு ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்துக்கான காசோலை வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

    இதில் கொங்கு வேளாள கவுண்டர்கள் பேரவை தலைவர் தேவராசன், மாநில இளைஞர் அணி செயலாளர் சூரியமூர்த்தி, செயற்குழு உறுப்பினர்கள் துரை, செல்வம், சின்ராஜ், விவசாய அணி துணை செயலாளர் சந்திரசேகரன், மாவட்ட செயலாளர் மாதேஸ்வரன், துணை செயலாளர் ரவிச்சந்திரன், பொருளாளர் செல்வராஜ், கொள்கை பரப்பு செயலாளர் கந்தசாமி மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 
    ×