search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "without cleaning"

    கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யாமல் வெளியிடும் தொழிற்சாலைகளை முற்றுகையிடும் போராட்டத்தை விரைவில் நடத்த இருப்பதாக கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் கூறினார்.
    நாமக்கல்:

    கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் நேற்று நாமக்கல்லில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் 13 பேர் சுட்டு கொல்லப்பட்டது தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளது. எதிர்க்கட்சியினர் ஆளும்கட்சி மீதும், ஆளும்கட்சியினர் எதிர்க்கட்சியினர் மீதும் குற்றம்சாட்டி வருகின்றனர். உளவுத்துறையின் தோல்வி, சமூக விரோதிகள் ஊடுருவல் என்று விவாதம் நடைபெற்று வருகிறது. ஆனால் உண்மை குற்றவாளி மாசு கட்டுப்பாட்டு வாரியம் என்பது யாராலும் பேசப்படுவது இல்லை.

    மாசு கட்டுபாட்டு வாரியம் ஆலைக்கு நிபந்தனையுடன் அனுமதி வழங்குகிறது. ஆனால் அந்த நிபந்தனை பின்பற்றப்படுகிறதா? என கண்துடைப்புக்கு மட்டுமே ஆய்வு செய்கிறார்கள்.

    மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் லஞ்சம் பெருகி விட்ட காரணத்தால் கழிவு பொருட்களால் நிலத்தடிநீர், காற்று மாசுபடுகிறது. இதனால் புற்றுநோய் மற்றும் தோல்நோய் வந்து அழியபோவது பொதுமக்கள் என்பதை உணர வேண்டும். இந்த விஷயத்தில் தவறு செய்யும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கொங்குநாட்டில் சாயக்கழிவுகள் மற்றும் தோல் கழிவுகள் நேரடியாக நீர்நிலைகளில் கலக்கப்படுகிறது. இதனால் நீர்நிலைகள் மற்றும் நிலத்தடி நீர் மாசடைந்து வருகிறது. இதே நிலை நீடித்தால் கொங்குநாடு மக்கள் வாழ தகுதி இல்லாத இடமாக மாறிவிடும். இதேபோல் நகராட்சி மற்றும் மாநகராட்சிகளும் கழிவுகளை நேரடியாக நீர்நிலைகளில் கலக்கின்றன. கொங்கு மண்டலத்தில் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யாமல் வெளியிடும் தொழிற்சாலைகளை முற்றுகையிடும் போராட்டம் விரைவில் நடத்தப்படும்.

    சட்டசபையில் நடைபெறும் மானிய கோரிக்கைகள் குறித்த விவாதத்தில் எதிர்க்கட்சியினர் கலந்து கொள்ள வேண்டும் என்பது எங்களின் நிலைப்பாடு. இது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினிடம் வலியுறுத்தி உள்ளோம். அவரும் பரிசீலனை செய்வதாக கூறி உள்ளார். சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்வதை மக்கள் விரும்பவில்லை. ஆக்கபூர்வமாக விவாதம் செய்வதையே விரும்புகின்றனர்.

    கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தி.மு.க. கூட்டணியில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டு இருப்பது மகிழ்ச்சியை தருகிறது. அது தமிழகத்திற்கு தண்ணீர் கொண்டு வரும் அமைப்பாக இருக்க வேண்டும். கடந்த 2 நாட்களுக்கு முன்பு திருப்பூர் மாவட்டத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் பெருவாரியான மக்கள் செய்து வரும் பெண்கள் பூப்பெய்தும் நிகழ்ச்சியை கொச்சைப்படுத்தி பேசி இருப்பது கண்டனத்துக்கு உரியது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து நடைபெற்ற கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் நாமக்கல் தெற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் ஈஸ்வரன் பேசினார். அந்த கூட்டத்தில் ஆசிய அளவிலான பளுதூக்கும் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்ற மாணவி கமலிக்கு ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்துக்கான காசோலை வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

    இதில் கொங்கு வேளாள கவுண்டர்கள் பேரவை தலைவர் தேவராசன், மாநில இளைஞர் அணி செயலாளர் சூரியமூர்த்தி, செயற்குழு உறுப்பினர்கள் துரை, செல்வம், சின்ராஜ், விவசாய அணி துணை செயலாளர் சந்திரசேகரன், மாவட்ட செயலாளர் மாதேஸ்வரன், துணை செயலாளர் ரவிச்சந்திரன், பொருளாளர் செல்வராஜ், கொள்கை பரப்பு செயலாளர் கந்தசாமி மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 
    ×