search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tirupur News"

    சமீபத்தில் நடந்த வெளிமாநில பெண் கொலை, நேற்று முன்தினம் நடந்த 2 மகன்களுடன் தாய் கொலை சம்பவங்களில் கூட கொலையானவர்களின் விவரங்களை பெறுவதில் போலீசார் சிரமத்தை சந்தித்தனர்.

    திருப்பூர்:

    பனியன் தொழில் நகரான திருப்பூரில் வெளிமாவட்ட மக்கள் மட்டுமில்லாமல் வெளிமாநில மக்களும் வந்து வசித்து வருகிறார்கள். தொழில் நிறுவனங்களுக்கு அருகிலேயே வாடகைக்கு வீடு பிடித்து குடும்பத்துடன் குடியேறி விடுகிறார்கள்.

    வீட்டு உரிமையாளர்களும் வாடகைக்கு வீடு, அறைகளை கொடுக்கிறார்கள். அவர்கள் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள்? அவர்களின் பின்னணி என்ன? என்பது உள்ளிட்ட எவற்றையும் தீர விசாரிக்காமல் வாடகைக்கு விட்டு விடுகிறார்கள்.

    இவ்வாறு திருப்பூரில் வாடகை வீட்டில் குடியிருக்கும் வெளிமாநிலம், வெளிமாவட்ட தொழிலாளர்கள் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு தப்பி செல்லும்போது அவர்களை அடையாளம் காண்பதில் தொடங்கி குற்றவாளிகளை கைது செய்வது வரை போலீசாருக்கு பெரும் சவால்கள் காத்திருக்கின்றன.

    வீடு, அறைகளை வாடகைக்கு விடும்போது வாடகைக்கு குடியிருப்பவர்களின் விவரங்களை வீட்டு உரிமையாளர்கள் முழுமையாக சேகரித்த பின்பே கொடுக்க வேண்டும் என்று மாநகர காவல்துறை பல்வேறு முறை அறிவுறுத்தியும் கூட, வீட்டு உரிமையாளர்கள் இதுவரையும் பின்பற்றாமல் இருக்கிறார்கள்.

    சமீபத்தில் நடந்த வெளிமாநில பெண் கொலை, நேற்று நடந்த 2 மகன்களுடன் தாய் கொலை சம்பவங்களில் கூட கொலையானவர்களின் விவரங்களை பெறுவதில் போலீசார் சிரமத்தை சந்தித்தனர். இந்தநிலையில், ஆம் ஆத்மி கட்சியின் திருப்பூர் மாவட்ட தலைவர் சுந்தரபாண்டியன், திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனருக்கு அனுப்பிய மனுவில், திருப்பூரில் வாடகைக்கு விடும் பலர் தங்கள் வீட்டில் குடியிருப்பவர்களிடம் எந்தவித அடையாள ஆவணங்களையும் வாங்குவது இல்லை. வாடகையை மட்டும் குறிக்கோளாக கொண்டுள்ளனர்.

    சமீபகாலமாக திருப்பூரில் வாடகை வீடுகளில் குடியிருப்பவர்கள் கொலை செய்யப்பட்டு கொலையாளிகளை அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டு உள்ளது. திருப்பூர் மாநகரில் வாடகைக்கு விடும் வீட்டு உரிமையாளர்கள், குடியிருக்கும் நபர்களின் அடையாள அட்டை, ஆவணங்களை பெற்று வாடகைக்கு விட வேண்டும் என்று காவல்துறை உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளார்.

    கடந்த காலங்களைப் போல அனைத்து பகுதிகளிலும் மண் மற்றும் வண்டல் மண் எடுத்துச் செல்ல அனுமதி வழங்க வேண்டும்.

    திருப்பூர்:

    நீர்நிலைகள் விவசாய நிலங்களில் மண் வளத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் நீர் நிலைகளில் வண்டல் மண் எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது. ஆனால் மண் மற்றும் வண்டல் மண் எடுப்பதற்கான விதிமுறைகளில் தற்போது பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் வண்டல் மண் எடுப்பதில் பல்வேறு சிரமங்கள் ஏற்படுவதாக விவசாயிகள் கூறியுள்ளனர்.

    இதுகுறித்து திருப்பூர் மாவட்ட கலெக்டருக்கு அனைத்து விவசாய சங்க கூட்டமைப்பு பிரதிநிதிகள் சார்பில் அனுப்பப்பட்டுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளில் விவசாயப் பயன்பாட்டுக்கு இலவசமாக மண் மற்றும் வண்டல் மண் எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காலதாமதம் அதன்படி வண்டல் மண் எடுப்பதில் பல சிரமங்கள் உள்ளது.

    அதன்படி ஒரு வருவாய் கிராமம் அல்லது அதை ஒட்டியுள்ள கிராமங்களுக்கு மட்டுமே மண் எடுத்துச் செல்லலாம். இதனால் நீர் நிலைகள் இல்லாத பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் வண்டல் மண் எடுக்க முடியாத நிலை ஏற்படும். எனவே கடந்த காலங்களைப் போல அனைத்து பகுதிகளிலும் மண் மற்றும் வண்டல் மண் எடுத்துச் செல்ல அனுமதி வழங்க வேண்டும். மேலும் தற்போது மண் அள்ள மாவட்ட கலெக்டரிடம் அனுமதி பெற வேண்டியதுள்ளது.

    2017 மற்றும் 2020-ம் ஆண்டுகளில் வழங்கப்பட்டது போல தாசில்தார் மட்டத்தில் அனுமதி அளித்தால் காலதாமதம் மற்றும் அலைச்சல் இல்லாமல் விவசாயிகள் பலனடைய முடியும். அத்துடன் விவசாயிகள் நலன் கருதி, மண் அள்ளுவதற்கு விவசாயிகளே ஜேசிபி உள்ளிட்ட வாகனங்களை ஏற்பாடு செய்து கொள்வதற்கு அனுமதியளிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பண்ணை குறைபாடுகள் அகற்றுதல் திட்டத்தின்கீழ் அறுவடை பெட்டி மற்றும் பிளாஸ்டிக்தொட்டி ரூ.40ஆயிரம் மானியத்தில் வழங்கப்பட்டது.

    மடத்துக்குளம்:

    மடத்துக்குளம் ஒன்றியத்துக்கு உட்பட்ட துங்காவி ஊராட்சி, கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    இத்திட்டத்தின் மூலம் வேளாண்மைதுறை, தோட்டக்கலைத்துறை, வேளாண்பொறியியல் துறை, வேளாண் வணிகம், விற்பனை துறை, விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று துறை, பட்டு வளர்ச்சித்துறை, கால்நடை பராமரிப்புத் துறை, ஊரக வளர்ச்சித் துறை, ஆவின் மற்றும் மீன் வளர்ச்சி துறை, சுகாதாரத் துறை, கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் வருவாய்த்துறை ஆகிய துறை சார்ந்த திட்டங்கள் இந்த கிராமத்தில் நடப்பாண்டு செயல்படுத்தப்பட உள்ளன.

    இதன் தொடக்க விழா தமிழக முதல்-அமைச்சரால் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கப்பட்டது. துங்காவியில் நடந்த இந்த நிகழ்ச்சியின்போது வேளாண்மைத்துறை சார்பாக ரூ.80 ஆயிரம் மதிப்புள்ள பவர் ஸ்பிரேயர், உளுந்து விதை மற்றும் தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டன.

    தோட்டக்கலைத்துறை மூலம் வீட்டுக்காய்கறி தோட்டத்திற்கான இயற்கை இடுபொருட்கள், வரப்பு ஓரங்களில் நடவு செய்ய பழமரக்கன்றுகள் மற்றும் இதர மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. பண்ணை குறைபாடுகள் அகற்றுதல் திட்டத்தின்கீழ் அறுவடை பெட்டி மற்றும் பிளாஸ்டிக்தொட்டி ரூ.40ஆயிரம் மானியத்தில் வழங்கப்பட்டது.

    துங்காவி கூட்டுறவு கடன் சங்கத்தின் மூலம் ரூ.1½ லட்சம் கடன் தொகையும் 14 பயனாளிகளுக்கு விவசாய கடன் அட்டையும், உதவிகளும் வழங்கப்பட்டன. ஊரக வளர்ச்சித் துறையின் மூலமாக 2 பயனாளிகளுக்கு ரூ. 6½ லட்சம் மதிப்பிலான பணி ஆணையும் வழங்கப்பட்டது.

    இந்த விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ.ஜெயராமகிருஷ்ணன், ஒன்றியக்குழு தலைவர் காவியா, துணைத்தலைவர் ஈஸ்வரசாமி ஊராட்சி மன்ற தலைவர் உமாதேவி காளீஸ்வரன் வேளாண்மை துறை உதவி இயக்குனர் ராஜேஸ்வரி, தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் திவ்யா, வட்டார வளர்ச்சி அலுவலர் ரோனால்டோ செல்டன் பெர்னாண்டஸ் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

    பெரும் நசிவைச் சந்தித்து வரும் தொழிற்துறைக்கு மத்திய அரசு இதன் மூலம் பெரும் நன்மை அளித்துள்ளது.

    திருப்பூர்:

    மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பெட்ரோலுக்கான கலால் வரியை ரூ.9.50ம், டீசலுக்கு ரூ.7-ம் குறைத்து அறிவிப்பு வெளியிட்டார். இதன் மூலம் பெட்ரோல்-டீசல் விலை குறைந்துள்ளதால் திருப்பூர் தொழில்துறையினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இதுகுறித்து இந்திய ஏற்றுமதியாளர் கூட்டமைப்பு (பியோ) தலைவர் சக்திவேல் கூறுகையில், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. இதனால் பல்வேறு தரப்பினரும் சிரமத்துக்கு ஆளாகினர்.

    தற்போது மத்திய நிதி அமைச்சர் இவற்றின் மீதான வரியை குறைத்து அறிவித்துள்ளார். இதனால் இவற்றின் விற்பனை விலை குறைந்துள்ளது.அதே போல் இரும்பு பொருள் இறக்குமதிக்கான வரி குறைக்கப்பட்டுள்ளது. அவற்றின் ஏற்றுமதிக்கு வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை மூலம் உள்நாட்டு வர்த்தகம் சீராக இருக்கும்.

    இந்த நடவடிக்கைகளுக்காக பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பியூஸ் கோயல் ஆகியோருக்கு நன்றி மற்றும் பாராட்டுகளை தெரிவிக்கிறோம். பெட்ரோலியப் பொருட்கள் விலை குறைப்பு நடவடிக்கை தொழில்துறையினரின்போக்கு வரத்து செலவுகளை குறைக்கும். இது போல் மத்திய அரசு பஞ்சு, நுால் விலை உயர்வை கட்டுப்படுத்தும்வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்க தலைவர் முத்துரத்தினம் கூறுகையில், இந்த அறிவிப்புக்கு மத்திய அரசுக்கு நன்றி தெரிவிக்கிறோம். இதன் மூலம் விலைவாசி குறையும் வாய்ப்பு உள்ளது. மத்திய அரசு போல் மாநில அரசும் தனது வரியை பாதியாக குறைத்தால் மேலும் தொழில் துறைக்கு நன்மை தருவதாக இருக்கும்.

    சாய ஆலை உரிமையாளர் சங்கசெயலாளர் முருகசாமி:- பெரும் நசிவைச் சந்தித்து வரும் தொழிற்துறைக்கு மத்திய அரசு இதன் மூலம் பெரும் நன்மை அளித்துள்ளது. அரசின் இந்த நடவடிக்கைக்கு நன்றியும் பாராட்டும் தெரிவிக்கிறோம். மீண்டும் விலை உயர்வு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    திருப்பூர் உள்நாட்டு ஆடை உற்பத்தியாளர் சங்க பொருளாளர் தேவராஜ் கூறுகையில், அனைத்து பகுதியிலும் பல்வேறு தொழில்கள் பல காரணங்களால் தொய்வடைந்து வருகிறது. பெட்ரோலியப் பொருட்களின் மீதான மத்திய அரசு வரிகள் குறைக்கப்பட்டுள்ளது.

    இந்த நடவடிக்கையால் தொழிற்சாலைகளில் உற்பத்தி மற்றும் பராமரிப்பு செலவு குறையும். இதற்காக மத்திய அரசுக்கு நன்றி தெரிவிக்கிறோம். மாநில அரசும் தனது வரியை குறைத்தால் இந்த மகிழ்ச்சி மேலும் அதிகரிக்கும் என்றார்.

    கடந்த முறை மாநிலம் முழுவதும், பல்வேறு மாவட்டங்களில் முன்னுரிமைகள் அளிக்கப்பட்டன.அதிக மதிப்பெண்கள் பெற்றயாரும் விண்ணப்பிக்கவில்லை என்றால், விண்ணப்பித்தவருக்கு வேலை கிடைக்கும்.
    திருப்பூர்:

    தபால் துறையில் நாடு முழுவதும் மொத்தம் 38 ஆயிரத்து 926 கிராம தபால் ஊழியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் தமிழகத்தில் மட்டும் 4 ஆயிரத்து 310 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.இதற்கு தேர்வு கிடையாது. 10-ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்கப்படும். சைக்கிள் ஓட்ட தெரிந்தால் போதும்.

    இது குறித்து திருப்பூர் தபால் அலுவலக அதிகாரிகள் கூறியதாவது:-
    இப்பணியிடத்திற்கு, 18 முதல் 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பத்தாம் வகுப்பில் எடுத்த மதிப்பெண்கள் அடிப்படையில் வேலை கிடைக்கும்.கடந்த முறை பெரும்பாலும் 97 சராசரி மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கே வேலை கிடைத்துள்ளது. குறைந்தபட்சமாக 87 சராசரி மதிப்பெண்கள் எடுத்தவர்களுக்கும் வேலை கிடைத்துள்ளது.

    இதன்மூலம் 10-ம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு வேலை கிடைத்துள்ளது தெரிகிறது. மாற்றுதிறனாளிகள் பிரிவில் 85 சராசரி மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு வேலை கிடைத்துள்ளது. எனவே 430 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்துள்ள மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம். இதேபோல் பொருளாதாரத்தில் பின் தங்கிய பிரிவினருக்கு, 90 சராசரி மதிப்பெண்கள் எடுத்தவர்களுக்கு கடந்த முறை வேலை கிடைத்துள்ளது.

    கடந்த முறை மாநிலம் முழுவதும், பல்வேறு மாவட்டங்களில் முன்னுரிமைகள் அளிக்கப்பட்டன. தற்போது ஒரே மாவட்டத்தை மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டும்.எனவே அந்தந்த மாவட்டத்தில் உள்ளவர்களுக்குள் மட்டுமே போட்டி. ஏனெனில், இந்த பணியிடங்களுக்கான தேர்வு முறை சம்பந்தப்பட்ட கிராம தபால் நிலையங்களுக்கு விண்ணப்பித்தவர்களில் யார் அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளார்களோ அவர்களுக்கே வேலை கிடைக்கும்.நாம் விண்ணப்பிக்கும்போது, மாவட்டம், தலைமை தபால்நிலையம், துணை தபால் நிலையம், கிராம தபால் நிலையம் என்ற வரிசையில் தேர்வு செய்து விண்ணப்பிப்போம். ஒருவருக்கு, 5க்கும் மேற்பட்ட விருப்பங்கள் வழங்கப்படும்.

    விண்ணப்பித்த கிராம தபால் நிலைய பதவிக்கு, தங்களை விட 10-ம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்றயாரும் விண்ணப்பிக்கவில்லை என்றால், விண்ணப்பித்தவருக்கு வேலை கிடைக்கும்.குறிப்பிட்ட கிராம தபால் நிலையத்திற்கு விண்ணப்பித்தவர்களுக்கு இடையே மட்டுமே போட்டி இருக்கும். 

    விண்ணப்பிக்கும் பகுதிக்கு வேறு யாரும் விண்ணப்பிக்கவில்லை என்றால் வேலை கிடைக்கும். வாய்ப்பை தவறவிடாதீர்கள்.விபரங்களுக்கு, https://indiapostgdsonline.gov.in/ என்ற இணையதளத்தை அணுகலாம். ஜூன் 5-ந் தேதி கடைசி.இவ்வாறு  அதிகாரிகள் தெரிவித்தனர்.

    7 வயது முதல் 19 வயது வரை உள்ளவர்கள் பங்கேற்கலாம்.

    திருப்பூர்:

    வருகிற 25-ந் தேதி நடக்கும், மாவட்ட சதுரங்க போட்டியில் பங்கேற்க ஆர்வமுள்ளவர்கள் தங்கள் விபரங்களை பதிவு செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்ட சதுரங்க அசோசியேஷன் சார்பில் தாராபுரம் ரோடு, ஏஞ்சல் என்ஜினீயரிங் கல்லுாரியில், மாவட்ட சதுரங்க போட்டி நாளை 25-ந் தேதி நடத்தப்படுகிறது.

    இதில் 7 வயது முதல் 19 வயது வரை உள்ளவர்கள் பங்கேற்கலாம். 2003 ஜனவரி 1-ந்தேதி முதல் 2015 ஜனவரி 1-ந்தேதி வரை பிறந்தவர்கள் போட்டியில் பங்கேற்க தகுதியானவர்கள். போட்டியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் 86376 48637 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    பெண்கள் உட்பட பக்தர்கள் குண்டம் இறங்கி அம்மனைதரிசித்தனர்.

    குன்னத்தூர்:

    குன்னத்தூரில் பிரசித்திபெற்ற பொன்காளியம்மன் கோவில் உள்ளது. கோவில் குண்டம் திருவிழா கடந்த 4-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. 19-ந் தேதி அதிகாலை பாரியூர் கொண்டத்துகாளியம்மனை அழைத்து வருதல் நிகழ்ச்சியை தொடர்ந்து, பக்தர்கள் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    இதில் பெண்கள் உட்பட பக்தர்கள் குண்டம் இறங்கி அம்மனைதரிசித்தனர்.மேலும் அம்மன் அலங்கார முத்து பல்லக்கில் திருவீதியுலா நிகழ்ச்சி நடந்தது. இதில் மின் விளக்கால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் அம்மன் அமர்ந்து வீதி உலா சென்றார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசித்தனர்.

    மக்கள் வீணாக உள்ள மின்னணு கழிவுகளை சுகாதார அலுவலகம் மற்றும் நகராட்சி அலுவலகத்தில் ஒப்படைக்கலாம்.

    உடுமலை:

    உடுமலை நகராட்சி பகுதிகளில் அமைந்துள்ள, எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்டிரானிக்ஸ் வணிக நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் தங்களிடம் பயன்படுத்தாமல் வீணாக உள்ள மின்சாதன பொருட்களான லைட், பிரிட்ஜ், ஏ.சி., மொபைல் போன் பாகங்கள், பேட்டரி, பல்பு, சிடி, சி.எப்.எல். பல்பு, டி.வி., மிக்சி, பேன், வாஷிங் மிஷின், கம்ப்யூட்டர் உதிரி பாகங்கள் உள்ளிட்ட மின்னணு கழிவுகள் பொது இடங்களில் வெளியேற்றப்படுவதால், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது.

    இதனையடுத்து இவற்றை சேகரிக்கும் சிறப்பு முகாம் உடுமலை நகராட்சியில் நடந்தது. நகராட்சி தலைவர் மத்தீன், கமிஷனர் சத்யநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இம்முகாமில் 1.5 டன் மின்னணு கழிவுகளை பொதுமக்கள் கொண்டு வந்து வழங்கினர்.

    மக்கள் வீணாக உள்ள மின்னணு கழிவுகளை பஸ் நிலையம் சுகாதார வளாகம், சர்தார் வீதி சுகாதார அலுவலகம் மற்றும் நகராட்சி அலுவலகத்தில் ஒப்படைக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    உரிய விலை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

    மடத்துக்குளம்:

    உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் வட்டாரத்தில், ஆண்டுதோறும் 60 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது. அவ்வகையில் சின்ன வெங்காயம் சாகுபடி நேரடியாக வெங்காயம் விதைப்பு மற்றும் விதை நாற்றங்கால் என இரு முறைகளில் மேற்கொள்ளப்படுகிறது.

    நேரடியாக வெங்காயம் நடவு செய்தால் 70 முதல் 90 நாட்களில் அறுவடை செய்ய முடியும். விதை வாயிலாக சாகுபடி செய்யும் போது 120 முதல் 130 நாட்களாகும்.ஆனால் கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழையால்வெங்காயம் சாகுபடி செய்த சில விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர்.

    போதிய விலை கிடைக்காததால்விளை நிலத்திலேயே அழிப்பதும், அறுவடை செய்யாமல் விடுவதுமாக விவசாயிகள் ஈடுபடுகின்றனர்.

    இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    சமீப நாட்களாக, போதிய விலை கிடைக்காததால், விவசாயிகள் தாங்கள் பயிரிட்டுள்ள வெங்காயத்தை பட்டறை அமைத்து பாதுகாத்து வருகின்றனர். இருப்பினும் விலை உயராமல் உள்ளது. சிலர் அறுவடை செய்த வெங்காயங்களை மீண்டும் நிலத்துக்கு உரமாக்கி வருகின்றனர்.

    சில பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்ததால் வெங்காயங்கள் மழைநீரில் அழுகின. அவை விற்பனை ஆகாது என்பதால், மீண்டும் விளை நிலத்துக்கு உரமாக்கப்படுகிறது. உரிய விலை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    31-ந்தேதி நடக்கும் தேர்வில் 16 வயதுக்கு உட்பட்டவர்கள் பங்கேற்கலாம்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட கிரிக்கெட் அசோசியேஷன் சார்பில், பழங்கரை அடுத்த அணைப்புதூரில் திருப்பூர் மாவட்ட கிரிக்கெட் அணி வீரர்கள் தேர்வு நாளை மறுநாள் 26-ந் தேதி நடக்கிறது. இதில் 2008 செப்டம்பர் 1-ந் தேதி,அதன் பின்னர் பிறந்தவர்கள் 14 வயது பிரிவில் பங்கேற்கலாம்.

    இம்மாதம் 31-ந்தேதி நடக்கும் தேர்வில் 16 வயதுக்கு உட்பட்டவர்கள் பங்கேற்கலாம். 2006 செப்டம்பர் 1-ந் தேதி அதன் பின்னர் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். கிரிக்கெட்டில் ஆர்வமுள்ள திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த வீரர் மட்டுமே தேர்வுக்கு தகுதியுடையவர்கள்.

    தேர்வு துவங்குவதற்கு அரை மணி நேரம் முன்பாக, அசல் சான்றுகளுடன் மைதானத்துக்கு வர வேண்டும். இரு தேர்வுகளும் மதியம் 2:30மணிக்கு தொடங்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    உடுமலை பகுதியில் அறுவடை செய்யப்படும் பொரியல் தட்டைக்கு கூடுதல் விலை கிடைத்து வந்தது.

    மடத்துக்குளம்:

    காய்கறி சாகுபடியில் தட்டை பயர், பீன்ஸ் வரிசையில் பொரியல் தட்டையும் ஒன்றாகும். கேரளா மாநிலத்தில் அவியல், பொரியல், கூட்டு என உணவில் அதிக அளவு பயன்படுத்தப்படுவதால், அம்மாநிலத்திற்கு அதிக அளவு விற்பனைக்கு செல்கிறது.

    உடுமலை பகுதியில் காய்கறி சாகுபடியில் ஈடுபட்டு வந்த விவசாயிகள், நீர்ப்பற்றாக்குறை, பராமரிப்பு செலவு ஆகிய காரணங்களினால் 60 நாட்களில் பயனுக்கு வரும் பொரியல் தட்டை சாகுபடியிலும் தற்போது ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    குடிமங்கலம் வட்டாரம் உடுமலை, மடத்துக்குளம் வட்டாரங்களில் தற்போது அதிக அளவு உற்பத்தி செய்யப்படுகிறது. இப்பகுதிகளில் விளையும் பொரியல் தட்டை கேரளா மாநிலம், மூணாறு, மறையூர் மற்றும் பாலக்காடு பகுதிகளுக்கு விற்பனைக்கு செல்கிறது. கேரள மாநில வியாபாரிகள் வயல்களுக்கு நேரடியாக வந்து விளையும் பொரியல் தட்டை அனைத்தையும் கொள்முதல் செய்து வருகின்றனர்.

    உடுமலை பகுதியில் அறுவடை செய்யப்படும் பொரியல் தட்டைக்கு கூடுதல் விலை கிடைத்து வந்தது. தற்போது வரத்து அதிகரிப்பு காரணமாக நிலையில்லாத விலை நிலவுகிறது.

    இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    பொரியல் தட்டை அனைத்து வகை நிலங்களிலும், அனைத்து பருவத்திலும் சாகுபடி செய்யலாம். குளிர் சீதோஷ்ண நிலை உள்ள உடுமலை சுற்றுப்பகுதிகளில் நல்ல மகசூல் கிடைக்கிறது. விதைப்பு செய்த 50 வது நாள் முதல் காய்கள் தினமும் பறிக்கலாம்.

    தினமும் ஏக்கருக்கு 100 முதல் 150 கிலோ வரை கிடைக்கிறது. ஏக்கருக்கு 15 ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது. 10 டன் வரை மகசூல் கிடைக்கிறது.கடந்த வாரம் கிலோ 30 ரூபாய் வரை சந்தை நிலவரம் இருந்தது. தற்போது 20 ரூபாயாக குறைந்துள்ளது. கேரளா மாநில வியாபாரிகள் மட்டுமே கொள்முதல் செய்வதால், நிலையில்லாத விலை கிடைக்கிறது.

    விவசாயிகளிடம், குறைந்த விலைக்கு கொள்முதல் செய்கின்றனர். எனவே, கேரளா மாநிலத்திற்கு அதிக அளவு விற்பனைக்கு செல்லும் நிலையில் வேளாண் மற்றும் வணிகத்துறை சார்பில் சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்தி உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.

    250க்கும் மேற்பட்ட காலியிடங்கள் மாற்றுத் திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

    உடுமலை:

    டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளிகளுக்காக இலவச பயிற்சி வகுப்பு, மாவட்ட வேலை வாய்ப்பு மையத்தில் தொடங்கப்படுகிறது. தேர்வாணையம் அறிவித்த குரூப்- 4 தேர்வு வாயிலாக, வி.ஏ.ஓ., இளநிலை உதவியாளர், பில் கலெக்டர், தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

    இப்பணியிடங்களில் 250க்கும் மேற்பட்ட காலியிடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு குரூப்- 4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு துவக்கப்படுகிறது.

    பயிற்சியில் பங்கேற்க விரும்பும் மாற்றுத்திறனாளிகள், தங்கள் பெயரை வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நேரிலோ அல்லது 0421 2999152, 94990 55944 என்கிற எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

    ×