search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருப்பூர் செய்திகள்"

    நெல் மற்றும் வைக்கோலுக்கு நல்ல விலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர்.

    உடுமலை:

    உடுமலை அமராவதி அணை பாசனத்தை ஆதாரமாகக்கொண்டு கல்லாபுரம் பகுதியில் 2,500 ஏக்கருக்கும் அதிகமாக நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இதில் இரண்டாம் போக நெல் சாகுபடியில் அறுவடை பணிகள் துவங்கி தீவிரமடைந்துள்ளது. அறுவடை பணிகளுக்கு தொழிலாளர் பற்றாக்குறை நிலவுவதால், எந்திரங்களை கொண்டு நேரடியாக அறுவடை செய்து வருகின்றனர்.

    இது குறித்து விவசாயிகள் கூறுகையில்:

    நெல் அறுவடைக்கு தொழிலாளர்கள் கிடைப்பதில்லை. சீசன் சமயங்களில், தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட பணியாளர்களை அறுவடை பணிகளுக்கு, பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கலாம். இது குறித்து பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை. இந்த சீசனில் நெல் மற்றும் வைக்கோலுக்கு நல்ல விலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளோம் என்றனர்.

    தன்னார்வ அமைப்புகள் ஆகாயத்தாமரையை அகற்ற முன்வர வேண்டும்.

    திருப்பூர்:

    திருப்பூர் ஊத்துக்குளி ரோடு, மண்ணரை குளத்துக்கு, அணைக்காடு பகுதியில் உள்ள நொய்யல் தடுப்பணையில் இருந்து தண்ணீர் செல்கிறது. இந்தநிலையில் நொய்யலில் வரும் ஆகாயத்தாமரை செடிகள் அடித்து சென்று படிப்படியாக இன்று குளத்தையே ஆக்கிரமித்துள்ளன.

    வேர்கள் அமைப்பின் முயற்சியால் மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுதலுடன், பல்வேறு அமைப்புகள் பங்களிப்புடன் குளம் பராமரிக்கப்பட்டது. குளக்கரையில், மரக்கன்று நட்டு வளர்க்கப்படுகிறது. குளத்திற்குள் குப்பை கொட்டுவதை தடுக்க கம்பிவேலி அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த சில மாதங்களாக ஆகாயத்தாமரை படர்ந்து வளர்ந்துள்ளது.

    இதனால், குளத்தின் கிழக்கு பகுதியில், ஆகாயத்தாமரை பசுமை புல்வெளி போல் படர்ந்து காட்சியளிக்கிறது. மீன் பிடிக்க வருவோர் ஆங்காங்கே, அகற்றி மீன்பிடிக்கின்றனர். ஆகாயத் தாமரையால் பல்வேறு பாதிப்பு ஏற்படும் என்பதால், தன்னார்வ அமைப்புகள் ஆகாயத்தாமரையை அகற்ற முன்வர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    மொத்தம் ரூ‌.2 லட்சத்து 87 ஆயிரத்து 642-க்கு வேளாண் விளைபொருட்கள் ஏலம் விடப்பட்டது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் முத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை தேங்காய், தேங்காய் பருப்பு, எள் ஆகிய வேளாண் விளை பொருட்க–ளின் ஏலம் நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் முத்தூர் நகர சுற்றுவட்டார மற்றும் ஈரோடு, கரூர் மாவட்ட கிராமப்–பகுதிகளில் கடந்த 2 வார காலமாக எள் அறுவடை பணிகள் தொடங்கப்பட்டு தற்போது வரை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் முத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் எள் ஏலம் தொடங்கி நடத்திட தமிழக அரசு, மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேளாண் மற்றும் விற்பனை வணிகத்துறை மூலம் அனுமதி வழங்கியது.

    இதன்படி ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு சுற்றுவட்டார விவசாயிகள் 5 சிவப்பு ரகம் அடங்கிய எள் மூட்டைகளை ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர். இதில் டெண்டர் முறையில் நடைபெற்ற ஏலத்தில் சிவப்பு ரக எள் அதிகபட்சமாக ரூ.104.15-க்கும், குறைந்தபட்சமாக ரூ.100.65- க்கும் ஏலம் விடப்பட்டது.

    மேலும் 16 ஆயிரத்து 236 தேங்காய்களும் கொண்டு வரப்பட்டு டெண்டர் முறையில் ஏலம் விடப்பட்டது. இதில் 1 கிலோ தேங்காய் அதிகபட்ச விலையாக ரூ.24.05-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.15.65-க்கும், ஏலம் விடப்பட்டது. மேலும் 59 தேங்காய் பருப்பு மூட்டைகள் ஏலம் விடப்பட்டதில் 1 கிலோ தேங்காய் பருப்பு அதிகபட்ச விலையாக ரூ.83.30-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.66.75-க்கும் டெண்டர் முறையில் ஏலம் விடப்பட்டது.

    மேலும் கடந்த வாரத்தை விட இந்த வாரம் 17 சிவப்பு ரக எள் மூட்டைகள் குறைவாகவும் மற்றும் 4 ஆயிரத்து 370 தேங்காய்களும், 15 தேங்காய் பருப்பு மூட்டைகளும் கூடுதலாகவும் கொண்டு வரப்பட்டு ஏலம் விடப்பட்டது. இதில் எள் ஒரு கிலோவிற்கு ரூ.2.15 கூடுதலாகவும், தேங்காய் 1 கிலோவிற்கு ரூ.2.60ம், தேங்காய் பருப்பு 1 கிலோவிற்கு ரூ.3.85 குறைவாகவும் விவசாயிகளுக்கு கிடைத்தது.

    மேலும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தேங்காய் பருப்பு விலை கிலோ ரூ.90-ஐ தாண்டி ஏலம் விடப்பட்டு வந்த நிலையில் கடந்த 10 வார காலமாக ரூ.90-க்கும் கீழே விலை சரிந்து ஏலம் விடப்ட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய், தேங்காய் பருப்பு, எள் மூட்டைகள் 8 டன் அளவில் மொத்தம் ரூ‌.2 லட்சத்து 87 ஆயி–ரத்து 642-க்கு வேளாண் விளைபொருட்கள் ஏலம் விடப்பட்டது.

    இத்தகவலை முத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூட மேற்பார்வையாளர் கே.தங்கவேல் தெரிவித்து உள்ளார்.

    பலமுறை ஆடு வளர்ப்போரிடம் நேரில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    காங்கயம்:

    காங்கயம் நகராட்சி ஆணையர் எஸ்.வெங்கடேஷ்வரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    காங்கயம் நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஆடுகள் பொது இடங்களிலும், சாலைகளிலும் சுற்றித்திரிவதால், வாகன ஓட்டிகள் அவ்வப்போது விபத்தில் சிக்கி வருகின்றனர். ஆடுகளை பட்டியில் அடைத்து வளர்க்காமல், சாலைகளில் ஆடுகளை அவிழ்த்துவிடக் கூடாது என நகராட்சி நிர்வாகம் சார்பில் பலமுறை ஆடு வளர்ப்போரிடம் நேரில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    எனவே சொந்தமாக ஆடுகளை வளர்ப்போர் பட்டியில் அடைத்து வளர்க்க வேண்டும். அதையும் மீறி சாலைகள் மற்றும் பொது இடங்களில் ஆடுகளை அவிழ்த்து விடும் ஆட்டின் உரிமையாளர்கள் மீது உரிய சட்டப்பிரிவுகளின்படி காவல்துறை மூலமாகவும், நீதிமன்றத்தின் மூலமாகவும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    சாஸ்திரி நகர், இந்திரா நகர், பாரதி நகர் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

    திருப்பூர்:

    திருப்பூர் பழவஞ்சிப்பாளையம் துணைமின் நிலையத்தில் சந்திராபுரம் மின்பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை 24-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) இந்த துணைமின் நிலையத்தில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அதன்படி அன்று மாலை 3 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த துணை மின் நிலையத்தின் சந்திராபுரம் மின் பாதைக்கு உள்பட்ட பகுதிகளான சந்திராபுரம் பிரிவு, சாஸ்திரி நகர், இந்திரா நகர், பாரதி நகர் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

    இதுபோல் திருப்பூர் கோட்டம் கலெக்டர் அலுவலக துணை மின் நிலையத்தில் பாரதிநகர் உயர் மின்பாதையில் அவசர கால பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் பாரதி நகர் பீடரில் நாளை 24-ந் தேதி மாலை 3 மணி முதல் மாலை 5 மணி வரை இந்திரா நகர், பல்லடம் ரோடு, வித்யாலயம், பாரதி நகர், குளத்துப்பாளையம், செல்வலட்சுமி நகர், திருப்புரான் தோட்டம் ஆகிய பகுதி–ளில் மின்வினியோகம் இருக்காது. இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் வி.சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

    ரெயில் நிலையத்தில் பொருத்தப்பட்டு இருந்த குழாயில் குடிநீரை சேவை குழுவினர் குடித்து பார்த்தனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் ரெயில் நிலையத்துக்கு புதுடெல்லியில் இருந்து ரெயில் பயணிகள் சேவை குழு உறுப்பினர்களான ரவிச்சந்திரன், கோட்டலா உமாராணி, நிர்மலா கிஷோர் போலினா, அபிஜித் தாஸ், திலிப்குமார் மாலிக், கைலாஷ் லட்மண் வர்மா ஆகியோர் வந்தனர்.

    இந்த குழுவினர் திருப்பூர் ரெயில் நிலையத்தில் உள்ள நடைமேடை, கழிவறை, பயணிகள் காத்திருப்பு அறை, உணவகங்களில் விற்பனை செய்யப்படும் பொருட்களின் தரம், விலை ஆகியவற்றை ஆய்வு செய்தனர். நடைமேடையில் உள்ள மேற்கூரை, மின் விளக்குகள் குறித்து ஆய்வு செய்தனர். ரெயில் நிலையத்தில் பொருத்தப்பட்டு இருந்த குழாயில் குடிநீரை குடித்து பார்த்தனர்.

    அதுபோல் ரெயில் நிலையத்தில் சுத்தமான குடிநீர் வழங்கப்படுகிறதா?, வைபை வசதிகள், நிறைகுறைகள் என்ன என்பது குறித்து ரெயில் பயணிகளிடம் கேட்டறிந்தனர். பயணிகளின் தேவைகளை குறிப்பெடுத்துக்கொண்டனர். மேலும் ரெயில் நிலையத்தில் உள்ள குறைகளை புகைப்படம் எடுத்துக்கொண்டனர். காத்திருப்பு அறையில் இருந்த கழிவறையை சுத்தமாக பராமரிக்க அறிவுறுத்தினார்கள்.

    ரெயில் நிற்கும்போது பெட்டிகளின் எண் குறித்த அறிவிப்பு பலகை நடைமேடையில் பொருத்த அறிவுறுத்தினார்கள். 1-வது நடைமேடை மிகவும் குறுகலாக இருப்பதால், அதை விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள குழுவினர் அறிவுறுத்தினர். இந்த ஆய்வின்போது சேலம் கோட்ட முதுநிலை வர்த்தக மேலாளர் அரிகிருஷ்ணன், பொறியாளர்கள், நிலைய அதிகாரிகள் உடனிருந்தனர்.

    திருப்பூரில் பெண்கள் அதிக அளவில் பணிக்கு செல்கின்றனர்.

    திருப்பூர்:

    போக்குவரத்துத் துறை சார்பில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பான பயணத்துக்காக நிர்பயா பாதுகாப்பான நகரத் திட்டத்தின் கீழ் முதல்கட்டமாக சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் 500 பஸ்களில் சி.சி.டி.வி., கேமராக்கள் மற்றும் அவசர பொத்தான்கள் பொருத்தப்பட்டுள்ளன.

    இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பஸ்களிலும் 3 கேமராக்கள், 4 அவசர அழைப்பு பொத்தான் மற்றும் செயற்கை நுண்ணறிவு கொண்டு இயங்கும் மொபைல் நெட்வொர்க் வீடியோ ரெக்கார்டர் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன. பஸ் பயணத்தில் பெண்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் சூழ்நிலையின்போது, அவசர அழைப்பு பொத்தானை அழுத்தி, அந்நிகழ்வுகளை பதிவு செய்யலாம்.

    அப்போது எழுப்பப்படும் ஒலியால் செயலியை இயக்குபவர் நிலைமையை கண்காணித்து அடுத்தகட்ட நடவடிக்கைக்கு ஆவன செய்வார். இதற்காக கட்டளை மையம், காவல்துறை மற்றும் மாநகராட்சியின் அவசரகால பதில் மையத்துடன் இணைக்கப்படும்.

    திருப்பூரில் பெண்கள் அதிக அளவில் பணிக்கு செல்கின்றனர். பின்னலாடை நிறுவனங்கள் மூலம் இயக்கப்படும் பஸ்களில் பலர் செல்கி ன்றனர். இருப்பினும் அனைவருக்கும் இது சாத்தியமாவதில்லை. எனவே பெண்கள் பலர் நகர பஸ்களைத்தான் பயன்படுத்துகின்றனர். சென்னையில் கொண்டுவரப்பட்டுள்ள திட்டம் நடைமுறையில் எந்த அளவுக்கு உதவும் என்பது இனிமேல்தான் தெரியவரும்.

    அதைப் பொறுத்துதான் திருப்பூரிலும் இத்தகைய திட்டத்தை கொண்டுவர முடியும். பெண்களுக்கு பாதுகாப்பான நகராக திருப்பூர் இருக்கிறது. இருப்பினும் இரவு நேரங்களில்பணியை முடித்து புறநகர் பகுதிகளுக்கு செல்லும் பெண்கள் பலர் பயத்துடன்தான் செல்ல வேண்டியிருக்கிறது. பெண்களுக்கு தக்க பாதுகாப்பு அவசியமானது. எனவே திருப்பூரில் இயங்கும் நகர பஸ்களில் சி.சி.டி.வி., கேமராக்கள் மற்றும் அவசர பொத்தான்கள் பொருத்த வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    செல்போனுக்கு வரும் தவறான ‘லிங்கை’ தொடுவதை தவிர்க்க வேண்டும்.

    திருப்பூர்:

    மோசடியாக வங்கி கணக்கில் இருந்து பணம் திருடப்பட்டால் உடனே சைபர்கிரைம் போலீசாரை அணுக வேண்டும் என திருப்பூர் போலீசார் பொதுமக்களுக்கு அறிவுறுத்தி உள்ளனர்.

    இது குறித்து போலீசார் கூறுகையில், வேலை வாங்கி தருவதாக கூறி ஆன்லைன் வாயிலாக முன்பணம் செலுத்த வேண்டும் என்று யாராவது கூறினால் அதை நம்ப வேண்டாம்.

    செல்போனுக்கு வரும் தவறான 'லிங்கை' தொடுவதை தவிர்க்க வேண்டும். ஏ.டி.எம்.,மில் பணம் எடுக்கும்போது, யாராவது தானாக உதவுவதாக கூறினால் மறுத்து விடவும். கஸ்டமர் கேர் எண்களை கூகுளில் தேடும் போது கவனம் தேவை. தவறான எண்களை தொடர்பு கொள்வதன் வாயிலாக ஏமாறும் வாய்ப்பு அதிகம்.

    பெண்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் போட்டோக்களை பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் ஆப் போன்ற சமூக வலைதளத்தில் பதிவிடுவதை தவிர்த்தல் நல்லது. ஓ.எல்.எக்ஸ்., வாயிலாக, மிலிட்டரியில் பணிபுரிவதாக கூறி பொருட்களை குறைந்த விலையில் தருவதாகக் கூறும் நபர்களை நம்ப வேண்டாம். ஆன்லைன் டேட்டிங் அப்ளிக்கேஷன்' வாயிலாக பழக்கமாகும், அறிமுகம் இல்லாத நபர்களிடம் 'வீடியோ கால்' வாயிலாக பேசுவதை தவிர்க்க வேண்டும்.

    உங்களது வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள செல்போன் எண்ணுக்கு வெகுநேரமாக நெட்வொர்க் சிக்னல் கிடைக்கவில்லை என்றால், உடனடியாக உங்கள் வங்கி கணக்கை முடக்கிக் கொள்வது நல்லது. உறவினர் மற்றும் நண்பர்கள் பெயரில், போலியான முகநூல் கணக்கு உருவாக்கி அதன் வாயிலாக அவசர தேவைக்காக பணம் கேட்கலாம். கவனம் தேவை.

    தங்கள் நிலத்தில் செல்போன் டவர் அமைக்க உள்ளோம் என்று யாராவது கூறினால் அதை நம்ப வேண்டாம். ஏ.டி.எம்., கார்டு, கிரெடிட் கார்டு, ஓ.டி.பி., மற்றும் இதர வங்கி தகவல்களை பகிர்தல் கூடாது. வங்கி கணக்கில் இருந்து மோசடியாக பணம் திருடப்பட்டது தெரிந்தால் உடனடியாக, 155260 என்ற எண்ணுக்கு புகார் தெரிவிக்கலாம். புகாரை cypercrime.gov.in என்ற இணையதள முகவரியிலும் தெரிவிக்கலாம்.

    திருப்பூர் உள்நாட்டு ஆடை உற்பத்தி நிறுவனங்களின் உற்பத்தி செலவினம் வெகுவாக குறையும்.

    திருப்பூர்:

    பின்னலாடை தொழில் வளர்ச்சியால் திருப்பூர், வேலைவாய்ப்பு மிகுந்த நகராக மாறியுள்ளது. வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்த9லட்சம் தொழிலாளர் பணிபுரிகின்றனர். ஆனாலும் தொழிலாளர் பற்றாக்குறை நீடிக்கிறது.

    திருப்பூர் ஸ்ரீபுரம் அறக்கட்டளை மற்றும் பொதிகை மனிதவள அமைப்பு, பின்னலாடை நிறுவனங்களின் தொழிலாளர் பற்றாக்குறை பிரச்சினையை போக்குவதற்கான பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. இந்த அமைப்பு நடத்திய கள ஆய்வில், பின்னலாடை நிறுவனங்களில் பணிபுரிவதற்கு ஏற்ற ஏராளமான தொழிலாளர் உள்ளனர். ஆனால் பெரும்பாலானோர் திருப்பூருக்கு வர இயலாத நிலையில் உள்ளனர் என்பது தெரிந்தது.

    இதனால் தொழிலாளர் மிகுந்த மாவட்டங்களில் உள்ளூர் தொழில்முனைவோரை ஊக்கப்படுத்தி திருப்பூருக்கு ஆடை தைத்து கொடுக்க மதுரை, திருச்சி, சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் 8 ஆடை தயாரிப்பு நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து பொதிகை அமைப்பு நிர்வாக இயக்குனர் சுந்தரேசன் கூறியதாவது:-

    ஸ்ரீபுரம் அறக்கட்டளை மற்றும் பொதிகை மனிதவள அமைப்பின் 6ஆ ண்டுகால தொடர் முயற்சியாக, ஜாப்ஒர்க் நிறுவனங்கள் வெற்றிகரமாக நிறுவப்பட்டுள்ளது.

    மதுரை - தத்தனேரி, மேலுார், உசிலம்பட்டி, திருச்சி - மணப்பாறை, விருதுநகர் - ஆமத்தூர், ராஜபாளையம், சிவகங்கை - மானாமதுரை என மொத்தம்8தையல் 'ஜாப்ஒர்க்' நிறுவனங்கள் நிறுவப்பட்டுள்ளன. இவற்றில், அந்தந்த பகுதிகளை சேர்ந்த தொழிலாளர்கள் பணி அமர்த்தப்படுகின்றனர்.

    இவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக, பயிற்றுனர்கள் தயார் நிலையில் உள்ளனர். வெளிமாவட்டங்களில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஜாப்ஒர்க் நிறுவனங்களுக்கு திருப்பூர் உள்நாட்டு ஆடை தயாரிப்பு நிறுவனங்கள் ஆர்டர் வழங்கும். இதனால், திருப்பூர் உள்நாட்டு ஆடை உற்பத்தி நிறுவனங்களின் உற்பத்தி செலவினம் வெகுவாக குறையும். தொழிலாளர் பற்றாக்குறை பிரச்சினைகளும் நீங்கும். இவ்வாறு அவர் கூறினார்.

    நகைகளை திருப்பி எடுத்து சென்ற 84 பேருக்கும் சேர்த்தே இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.

    திருப்பூர்:

    பல்லடம் அருகேயுள்ள கேத்தனூர் பாரத ஸ்டேட் வங்கி கிளையில் பணிபுரியும் நகை மதிப்பீட்டாளர் சேகர் என்பவர் வாடிக்கையாளரின் நகைகளில் சில வளையங்களை துண்டித்து மோசடியில் ஈடுபட்டார்.

    புகார் அடிப்படையில் சேகர் கைது செய்யப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது. இழந்த நகைகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்டோர் கோரிக்கை விடுத்தனர். தாசில்தார் நந்தகோபால் மற்றும் வங்கி உயர் அதிகாரிகள் போலீசார் முன்னிலையில் இழப்பீடு குறித்த பேச்சுவார்த்தை நடந்தது.

    வங்கி அதிகாரிகள் கூறுகையில், தினசரி 30 - 40 வாடிக்கையாளருடன் பேச்சு நடத்தி இழப்பீடு குறித்து தீர்மானிக்கப்பட்டு உயர் அதிகாரிகளிடம் ஒப்புதல் பெற 25 நாட்கள் ஆகும். அதன்பின் இழப்பீடு அறிவிக்கப்படும் என்றனர்.

    பாதிக்கப்பட்டவர்கள் கூறியதாவது:-

    நகை மோசடியில் நகைகளை அடமானம் வைத்துள்ள சிலரும் உடந்தை என குற்றம்சாட்டி உள்ளீர்கள். வாடிக்கையாளரை ஏமாற்றியே இந்த மோசடி நடந்துள்ளது. எனவே மோசடியில் வாடிக்கையாளர் உடந்தையாக உள்ளார்கள் என்பதை ஏற்க இயலாது. நகைகளை இழந்துள்ள 557 பேர் உட்படஏற்கனவே நகைகளை திருப்பி எடுத்து சென்ற 84 பேருக்கும் சேர்த்தே இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.

    பாதிக்கப்பட்டவர்களின் நகைகள் வங்கி கஸ்டடியில் உள்ளதால் அவற்றுக்கு வட்டி செலுத்த மாட்டோம்.ஜூன் 20-ந்தேதி கட்டாயம் இழப்பீடு வழங்க வேண்டும். இல்லையெனில் அன்று காலை அனைவரும் வங்கி முன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    தலைமை செயலகத்தில் இருந்தே மனுக்கள் விபரத்தை கண்காணிக்க முடியும்.

    திருப்பூர்:

    தமிழக அரசின் வருவாய்த்துறை சார்பில், மாவட்டம் தோறும் வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) ஜூன் மாதத்துக்கு முன்னதாக பசலி ஆண்டு கணக்குகளை சரிபார்த்து ஒப்புதல் அளிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    வருவாய் கிராமத்தை சேர்ந்த மக்கள் அந்தந்த நாட்களில், ஜமாபந்தி அலுவலரிடம் மனுக்களை அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. முகாம்களில் பெறப்படும் மனுக்கள் விபரத்தை உடனுக்குடன் இணையதளத்தில் பதிவேற்றம் செய்து உரிய அதிகாரிகள் வாயிலாக மேல் நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.

    இதுகுறித்து திருப்பூர் வருவாய்த்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    ஜமாபந்தி முகாமில், தங்களது கோரிக்கையை வலியுறுத்தி பொதுமக்கள் மனு கொடுக்கலாம். அந்த மனு மீது விரைந்து நடவடிக்கை எடுத்து நிறைவு நாளில் சான்றிதழ் அல்லது நல உதவி வழங்கப்படும். மக்கள் அளிக்கும் மனுக்கள் விவரத்தை புதிய இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய, வருவாய்த்துறை கமிஷனரகம் உத்தரவிட்டுள்ளது.

    மனுக்கள் விவரத்தையும் அதன் மீதான நடவடிக்கை விவரத்தையும் பதிவு செய்யப்படும். தமிழகத்தில் எந்த தாலுகாவாக இருந்தாலும் தலைமை செயலகத்தில் இருந்தே மனுக்கள் விபரத்தை கண்காணிக்க முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர். 

    சவுக்கு மரங்களை நடுவதன் மூலம் வாழைகளை பாதுகாக்க முடியும்.

    திருப்பூர்:

    பல்லடம் வட்டார பகுதியில் தக்காளி, வெங்காயம், புடலை, அவரை உள்ளிட்ட காய்கறி பயிர்கள், தானியங்கள் மற்றும் தென்னை, வாழை ஆகியவை பயிரிடப்படுகின்றன. நோய் மற்றும் பூச்சி தாக்குதலால், காய்கறி பயிர்கள் பாதிக்கப்படுகின்றன.

    அதேபோல் பலத்த காற்று, மழை ஆகியவை வாழைகளுக்கு எதிரியாக உள்ளன. சுழன்றடிக்கும் சூறை காற்றுக்கு வாழைகள் வேருடன் சாய்வது ஆண்டுதோறும் தொடர்கதையாக உள்ளது. தென்மேற்கு பருவமழை விரைவில் துவங்கும் நிலையில் வாழைகளை பாதுகாக்கும் வழிமுறை குறித்து தோட்டக்கலைத் துறை அறிவுறுத்தியுள்ளது.

    இதுகுறித்து பல்லடம் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் ஜெரீனாபேகம் கூறியதாவது:-

    பல்லடம் வட்டார பகுதியில் நேந்திரன் வாழைகள் அதிக அளவில் பயிரிடப்படுகின்றன. ஓராண்டுக்குள் இவற்றை பாதுகாப்பது என்பது சவாலான காரியமாகும். காற்று, மழை ஆகியவை வாழைகளை முற்றிலும் சேதப்படுத்திவிடும்.விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் வேலி அமைப்பதன் மூலம் வாழைகள் சேதம் அடைவதை தடுக்கலாம்.

    காற்றைத் தடுத்து வாழைகளை பாதுகாப்பதில் சவுக்கு மரங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. வேலி ஓரங்களில் குறிப்பிட்ட இடைவெளியுடன் இரண்டு அடுக்காக சவுக்கு மரங்களை நடுவதன் மூலம் வாழைகளை பாதுகாக்க முடியும். சவுக்கு மரங்கள் விளைநிலங்களுக்கு பாதுகாப்பு அரணாக இருப்பதுடன் இவற்றால் விவசாயிகளுக்கு அதிக லாபமும் உள்ளது. மேலும் இது குறித்த விவரங்கள் அறிந்து கொள்ள தோட்டக்கலை துறை அலுவலகத்தை அணுகலாம். இவ்வாறு அவர் கூறினார்.

    ×