என் மலர்
உள்ளூர் செய்திகள்

போதிய விலை கிடைக்காததால் உரமாகும் சின்ன வெங்காயம்
மடத்துக்குளம்:
உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் வட்டாரத்தில், ஆண்டுதோறும் 60 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது. அவ்வகையில் சின்ன வெங்காயம் சாகுபடி நேரடியாக வெங்காயம் விதைப்பு மற்றும் விதை நாற்றங்கால் என இரு முறைகளில் மேற்கொள்ளப்படுகிறது.
நேரடியாக வெங்காயம் நடவு செய்தால் 70 முதல் 90 நாட்களில் அறுவடை செய்ய முடியும். விதை வாயிலாக சாகுபடி செய்யும் போது 120 முதல் 130 நாட்களாகும்.ஆனால் கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழையால்வெங்காயம் சாகுபடி செய்த சில விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர்.
போதிய விலை கிடைக்காததால்விளை நிலத்திலேயே அழிப்பதும், அறுவடை செய்யாமல் விடுவதுமாக விவசாயிகள் ஈடுபடுகின்றனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
சமீப நாட்களாக, போதிய விலை கிடைக்காததால், விவசாயிகள் தாங்கள் பயிரிட்டுள்ள வெங்காயத்தை பட்டறை அமைத்து பாதுகாத்து வருகின்றனர். இருப்பினும் விலை உயராமல் உள்ளது. சிலர் அறுவடை செய்த வெங்காயங்களை மீண்டும் நிலத்துக்கு உரமாக்கி வருகின்றனர்.
சில பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்ததால் வெங்காயங்கள் மழைநீரில் அழுகின. அவை விற்பனை ஆகாது என்பதால், மீண்டும் விளை நிலத்துக்கு உரமாக்கப்படுகிறது. உரிய விலை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.