என் மலர்
நீங்கள் தேடியது "வேளாண்மைதுறை"
மடத்துக்குளம்:
மடத்துக்குளம் ஒன்றியத்துக்கு உட்பட்ட துங்காவி ஊராட்சி, கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் வேளாண்மைதுறை, தோட்டக்கலைத்துறை, வேளாண்பொறியியல் துறை, வேளாண் வணிகம், விற்பனை துறை, விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று துறை, பட்டு வளர்ச்சித்துறை, கால்நடை பராமரிப்புத் துறை, ஊரக வளர்ச்சித் துறை, ஆவின் மற்றும் மீன் வளர்ச்சி துறை, சுகாதாரத் துறை, கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் வருவாய்த்துறை ஆகிய துறை சார்ந்த திட்டங்கள் இந்த கிராமத்தில் நடப்பாண்டு செயல்படுத்தப்பட உள்ளன.
இதன் தொடக்க விழா தமிழக முதல்-அமைச்சரால் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கப்பட்டது. துங்காவியில் நடந்த இந்த நிகழ்ச்சியின்போது வேளாண்மைத்துறை சார்பாக ரூ.80 ஆயிரம் மதிப்புள்ள பவர் ஸ்பிரேயர், உளுந்து விதை மற்றும் தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டன.
தோட்டக்கலைத்துறை மூலம் வீட்டுக்காய்கறி தோட்டத்திற்கான இயற்கை இடுபொருட்கள், வரப்பு ஓரங்களில் நடவு செய்ய பழமரக்கன்றுகள் மற்றும் இதர மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. பண்ணை குறைபாடுகள் அகற்றுதல் திட்டத்தின்கீழ் அறுவடை பெட்டி மற்றும் பிளாஸ்டிக்தொட்டி ரூ.40ஆயிரம் மானியத்தில் வழங்கப்பட்டது.
துங்காவி கூட்டுறவு கடன் சங்கத்தின் மூலம் ரூ.1½ லட்சம் கடன் தொகையும் 14 பயனாளிகளுக்கு விவசாய கடன் அட்டையும், உதவிகளும் வழங்கப்பட்டன. ஊரக வளர்ச்சித் துறையின் மூலமாக 2 பயனாளிகளுக்கு ரூ. 6½ லட்சம் மதிப்பிலான பணி ஆணையும் வழங்கப்பட்டது.
இந்த விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ.ஜெயராமகிருஷ்ணன், ஒன்றியக்குழு தலைவர் காவியா, துணைத்தலைவர் ஈஸ்வரசாமி ஊராட்சி மன்ற தலைவர் உமாதேவி காளீஸ்வரன் வேளாண்மை துறை உதவி இயக்குனர் ராஜேஸ்வரி, தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் திவ்யா, வட்டார வளர்ச்சி அலுவலர் ரோனால்டோ செல்டன் பெர்னாண்டஸ் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.






