என் மலர்
உள்ளூர் செய்திகள்

அடையாள அட்டை, ஆவணங்களை பெற்று வீடுகளை வாடகைக்கு கொடுக்க போலீசார் உத்தரவிட வேண்டும் - ஆம் ஆத்மி வலியுறுத்தல்
திருப்பூர்:
பனியன் தொழில் நகரான திருப்பூரில் வெளிமாவட்ட மக்கள் மட்டுமில்லாமல் வெளிமாநில மக்களும் வந்து வசித்து வருகிறார்கள். தொழில் நிறுவனங்களுக்கு அருகிலேயே வாடகைக்கு வீடு பிடித்து குடும்பத்துடன் குடியேறி விடுகிறார்கள்.
வீட்டு உரிமையாளர்களும் வாடகைக்கு வீடு, அறைகளை கொடுக்கிறார்கள். அவர்கள் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள்? அவர்களின் பின்னணி என்ன? என்பது உள்ளிட்ட எவற்றையும் தீர விசாரிக்காமல் வாடகைக்கு விட்டு விடுகிறார்கள்.
இவ்வாறு திருப்பூரில் வாடகை வீட்டில் குடியிருக்கும் வெளிமாநிலம், வெளிமாவட்ட தொழிலாளர்கள் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு தப்பி செல்லும்போது அவர்களை அடையாளம் காண்பதில் தொடங்கி குற்றவாளிகளை கைது செய்வது வரை போலீசாருக்கு பெரும் சவால்கள் காத்திருக்கின்றன.
வீடு, அறைகளை வாடகைக்கு விடும்போது வாடகைக்கு குடியிருப்பவர்களின் விவரங்களை வீட்டு உரிமையாளர்கள் முழுமையாக சேகரித்த பின்பே கொடுக்க வேண்டும் என்று மாநகர காவல்துறை பல்வேறு முறை அறிவுறுத்தியும் கூட, வீட்டு உரிமையாளர்கள் இதுவரையும் பின்பற்றாமல் இருக்கிறார்கள்.
சமீபத்தில் நடந்த வெளிமாநில பெண் கொலை, நேற்று நடந்த 2 மகன்களுடன் தாய் கொலை சம்பவங்களில் கூட கொலையானவர்களின் விவரங்களை பெறுவதில் போலீசார் சிரமத்தை சந்தித்தனர். இந்தநிலையில், ஆம் ஆத்மி கட்சியின் திருப்பூர் மாவட்ட தலைவர் சுந்தரபாண்டியன், திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனருக்கு அனுப்பிய மனுவில், திருப்பூரில் வாடகைக்கு விடும் பலர் தங்கள் வீட்டில் குடியிருப்பவர்களிடம் எந்தவித அடையாள ஆவணங்களையும் வாங்குவது இல்லை. வாடகையை மட்டும் குறிக்கோளாக கொண்டுள்ளனர்.
சமீபகாலமாக திருப்பூரில் வாடகை வீடுகளில் குடியிருப்பவர்கள் கொலை செய்யப்பட்டு கொலையாளிகளை அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டு உள்ளது. திருப்பூர் மாநகரில் வாடகைக்கு விடும் வீட்டு உரிமையாளர்கள், குடியிருக்கும் நபர்களின் அடையாள அட்டை, ஆவணங்களை பெற்று வாடகைக்கு விட வேண்டும் என்று காவல்துறை உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளார்.






