என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rent house"

    • வாடகைக்கு இருக்கும் வீட்டில் பழுது ஏற்பட்டால், உரிமையாளர்கள் 30 நாட்களுக்குள் சரி செய்ய வேண்டும்.
    • வாடகைதாரரும், உரிமையாளரும் சேர்ந்து ஒப்பந்தம் எழுத வேண்டும்.

    சென்னை:

    வீட்டு வாடகை விதிமுறைகள் சட்டம் 2025 விரைவில் அமலுக்கு வர இருக்கிறது. வீட்டு வாடகை விதிமுறைகள் சட்டம் 2025-ன் படி வாடகைக்கு குடியேறுவோர் மற்றும் வீடுகளை வாடகைக்கு விடுவோருக்கு புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இந்த சட்டத்தின் விதிமுறைகள்படி வாடகைக்கு குடியேறுவோர் மற்றும் வீட்டு உரிமையாளர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளும், புதிய விதிமுறைகளையும் கட்டாயமாக்கியுள்ளன. இதன்படி இனி 2 மாத வாடகையை முன்பணமாக கொடுத்தால் போதுமானது, வீட்டு வாடகை ஒப்பந்தங்களை கட்டாயம் பதிவு செய்திருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இச்சட்டத்தில் வீடு வாடகைக்கு எடுப்பவர்கள், வீட்டு உரிமையாளர்கள் என இருதரப்புக்கும் பாதுகாப்பு அளிக்கும் அம்சங்கள் உள்ளன.

    அவற்றின் முக்கியமான சில அம்சங்கள் பின்வருமாறு:-

    * வீட்டை வாடகைக்குவிட்டால், அந்த ஒப்பந்தந்தை உரிமையாளர் பதிவு செய்திருக்க வேண்டும். முன்பு சாதாரண ஒப்பந்த பத்திரத்தில் எழுதி கையெழுத்திட்டால் போதுமானதாக இருந்தது. ஆனால், புதிய சட்டத்தின்படி 2 மாதங்களுக்குள் வாடகை ஒப்பந்தத்தை பதிவு செய்ய வேண்டும். இல்லையென்றால் ரூ.5 ஆயிரம்வரை அபராதம் விதிக்கப்படும்.

    * ஆதார் அடிப்படையில் மின்னணு சரிபார்ப்பு முறையில் ஒப்பந்தங்களை பதிவு செய்ய வேண்டும். கைப்பட எழுதி கையெழுத்திடக்கூடாது.

    * வீட்டு வாடகைக்கு 2 மாத வாடகைக்கு மேல் முன்பணமாக கேட்கக்கூடாது. வணிக கட்டிடங்களுக்கு 6 மாத வாடகையை முன்பணமாக வசூலிக்கலாம்.

    * ஒருவர் வாடகைக்கு வந்த பிறகு 12 மாதங்கள் கழித்துதான் வாடகையை உயர்த்த வேண்டும். அவ்வாறு உயர்த்துவதற்கும் 2 மாதங்கள் முன்பே நோட்டீசு மூலம் வாடகைதாரர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

    * வாடகைக்கு இருக்கும் வீட்டில் பழுது ஏற்பட்டால், உரிமையாளர்கள் 30 நாட்களுக்குள் சரி செய்ய வேண்டும். இல்லையென்றால், வாடகைதாரர்களே அதனை சரி செய்துகொண்டு, வாடகைதொகையில் கழித்துக்கொள்ளலாம்.

    * வாடகைக்கு இருக்கும் வீட்டை சரிபார்க்க, உரிமையாளர் நினைக்கும்போதெல்லாம் நுழையமுடியாது. 24 மணிநேரத்துக்கு முன்னதாக எழுத்துப்பூர்வமாக எழுதிக்கொடுக்க வேண்டும்.

    * வாடகைக்கு இருப்போரை காரணமின்றி காலி செய்ய வலியுறுத்தக்கூடாது. வாடகை செலுத்தாமல் இருத்தல், சேதம் ஏற்படுத்துதல் என குறிப்பிடப்பட்ட காரணங்கள் இல்லாமல் காலி செய்ய வற்புறுத்தக்கூடாது.

    * வாடகை தகராறு வழக்கு, வீட்டை காலி செய்யும் வழக்கு போன்றவற்றுக்கு இனி 2 மாதங்களில் தீர்ப்பு வழங்கப்படும். இதற்காக சிறப்பு தீர்ப்பாயம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த தீர்ப்பாயத்தில் வழக்குகள் விரைந்து முடிக்கப்படும்.

    * வீட்டு வாடகை ரூ.50 ஆயிரத்துக்கு மேல் இருந்தால் டி.டி.எஸ். பிடித்தம் செய்ய வேண்டும். சிறிய அல்லது நடுத்தர வாடகை வீட்டினருக்கு டி.டி.எஸ். விலக்கு வரம்பு ரூ.6 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

    பதிவு செய்வது எப்படி?

    வாடகைதாரரும், உரிமையாளரும் சேர்ந்து ஒப்பந்தம் எழுத வேண்டும். இதனை சாா் பதிவாளர் அலுவலகத்தில் அல்லது இணைய வழியில் பதிவு செய்ய வேண்டும். இதற்கு ஆதார், பான் அட்டை என ஏதேனும் ஒரு ஆவணம் போதுமானது. வாடகைதாரர்களுக்கு குறைவான முன்பணம், திடீர் வாடகை உயர்வு, சட்டப் பாதுகாப்பு போன்ற பலன்கள் இதன்மூலம் வலியுறுத்தப்படும். வீட்டு உரிமையாளர்களுக்கு வரி நன்மைகள், வாடகை வசூல் எளிது, வலுவான ஆவணம் உருவாக்கம், தகராறுகளுக்கு தீர்ப்பு, மோசடி ஆகியை தடுக்கப்படும்.

    சமீபத்தில் நடந்த வெளிமாநில பெண் கொலை, நேற்று முன்தினம் நடந்த 2 மகன்களுடன் தாய் கொலை சம்பவங்களில் கூட கொலையானவர்களின் விவரங்களை பெறுவதில் போலீசார் சிரமத்தை சந்தித்தனர்.

    திருப்பூர்:

    பனியன் தொழில் நகரான திருப்பூரில் வெளிமாவட்ட மக்கள் மட்டுமில்லாமல் வெளிமாநில மக்களும் வந்து வசித்து வருகிறார்கள். தொழில் நிறுவனங்களுக்கு அருகிலேயே வாடகைக்கு வீடு பிடித்து குடும்பத்துடன் குடியேறி விடுகிறார்கள்.

    வீட்டு உரிமையாளர்களும் வாடகைக்கு வீடு, அறைகளை கொடுக்கிறார்கள். அவர்கள் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள்? அவர்களின் பின்னணி என்ன? என்பது உள்ளிட்ட எவற்றையும் தீர விசாரிக்காமல் வாடகைக்கு விட்டு விடுகிறார்கள்.

    இவ்வாறு திருப்பூரில் வாடகை வீட்டில் குடியிருக்கும் வெளிமாநிலம், வெளிமாவட்ட தொழிலாளர்கள் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு தப்பி செல்லும்போது அவர்களை அடையாளம் காண்பதில் தொடங்கி குற்றவாளிகளை கைது செய்வது வரை போலீசாருக்கு பெரும் சவால்கள் காத்திருக்கின்றன.

    வீடு, அறைகளை வாடகைக்கு விடும்போது வாடகைக்கு குடியிருப்பவர்களின் விவரங்களை வீட்டு உரிமையாளர்கள் முழுமையாக சேகரித்த பின்பே கொடுக்க வேண்டும் என்று மாநகர காவல்துறை பல்வேறு முறை அறிவுறுத்தியும் கூட, வீட்டு உரிமையாளர்கள் இதுவரையும் பின்பற்றாமல் இருக்கிறார்கள்.

    சமீபத்தில் நடந்த வெளிமாநில பெண் கொலை, நேற்று நடந்த 2 மகன்களுடன் தாய் கொலை சம்பவங்களில் கூட கொலையானவர்களின் விவரங்களை பெறுவதில் போலீசார் சிரமத்தை சந்தித்தனர். இந்தநிலையில், ஆம் ஆத்மி கட்சியின் திருப்பூர் மாவட்ட தலைவர் சுந்தரபாண்டியன், திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனருக்கு அனுப்பிய மனுவில், திருப்பூரில் வாடகைக்கு விடும் பலர் தங்கள் வீட்டில் குடியிருப்பவர்களிடம் எந்தவித அடையாள ஆவணங்களையும் வாங்குவது இல்லை. வாடகையை மட்டும் குறிக்கோளாக கொண்டுள்ளனர்.

    சமீபகாலமாக திருப்பூரில் வாடகை வீடுகளில் குடியிருப்பவர்கள் கொலை செய்யப்பட்டு கொலையாளிகளை அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டு உள்ளது. திருப்பூர் மாநகரில் வாடகைக்கு விடும் வீட்டு உரிமையாளர்கள், குடியிருக்கும் நபர்களின் அடையாள அட்டை, ஆவணங்களை பெற்று வாடகைக்கு விட வேண்டும் என்று காவல்துறை உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளார்.

    ×