search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழக அரசு"

    முல்லை பெரியாறு பிரதான அணைக்கு படகில் 14 கீ.மீ தூரம் பயணம் செய்யும் போது ஆள் நடமாட்டம் இல்லாத அடர்ந்த காட்டுப் பகுதியில் செல்லும் போது அலைபேசி தொடர்பு கிடைப்பதில்லை. பாதுகாப்பு நோக்கில் தகவல் தொடர்பு சேவை மிகவும் இன்றியமையாதது ஆகும்.

    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    கேரளா மாநிலம், இடுக்கி மாவட்டத்திலுள்ள தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான முல்லை பெரியாறு அணை அடர்ந்த பெரியாறு வன புலிகள் சரணலாயத்தின் நடுவில் அமைந்துள்ளது. இங்கு தரைவழி தொலைபேசி இணைப்பு இல்லை.

    மேலும், வெள்ளகாலங்களிலும், பருவமழை காலங்களிலும் மழை மேகங்களின் இடர்பாடுகளினால் அலைபேசி தொடர்பும் சரியாக கிடைக்கப்பெறாமல், தொடர்பு துண்டிக்கப்பட்டு அணையின் நீர்மட்டம், நீர்வரத்து, நீர் வெளியேற்றம், மழையளவு போன்ற விபரங்களை உயர் அலுவலர்களுக்கும், தொடர்புடைய மாவட்ட கலெக்டருக்கும், பேரிடர் மேலாண்மை அலுவலகத்திற்கும் தகவல் தெரிவித்து தக்க ஆலோசனைகள் பெற்று வெள்ள மேலாண்மை மேற்கொள்ள சிரமம் ஏற்படுகிறது.

    மேலும், முல்லை பெரியாறு பிரதான அணைக்கு படகில் 14 கீ.மீ தூரம் பயணம் செய்யும் போது ஆள் நடமாட்டம் இல்லாத அடர்ந்த காட்டுப் பகுதியில் செல்லும் போது அலைபேசி தொடர்பு கிடைப்பதில்லை. பாதுகாப்பு நோக்கில் தகவல் தொடர்பு சேவை மிகவும் இன்றியமையாதது ஆகும்.

    நீர்வளத்துறை அமைச்சர் மற்றும் நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலர் ஆகியோர் 5.11.2021 அன்று பெரியாறு அணையை பார்வையிட்டு வெள்ள மேலாண்மை பற்றி கேட்டறிந்த போது, மேற்கண்ட சிரமங்களை களையும் பொருட்டு செயற்கைகோள் அலைபேசி வழங்கிட முடிவு எடுக்கப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து, 6 எண்ணிக்கையிலான செயற்கைகோள் அலைபேசிகள் மற்றும் ஒரு வருட சேவைக் கட்டணம் ஆகியவற்றிற்காக ரூ.9.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முல்லைப் பெரியாறு அணையில் பணிபுரியும் தலைமைப் பொறியாளர், கண்காணிப்பு பொறியாளர், செயற்பொறியாளர், பெரியாறு அணை முகாம் மற்றும் தேக்கடி முகாம் பணியாளர்களின் பயன்பாட்டிற்காக செயற்கைகோள் அலைபேசிகளை வழங்கினார்.

    இவ்வலைபேசிகள் வாயிலாக செயற்கைக்கோள் கோபுர சேவை இணைப்பு ஏதும் இல்லாமலேயே அடர்ந்த காட்டுப் பகுதியில் சேவை பெற இயலும். இதன்மூலம், பெரியாறு அணை மற்றும் பெரியாறு அணைக்குரிய படகு பயணிக்கும் பாதையில் பொறியாளர்கள் மற்றும் பணியாளர்கள் எந்த நேரமும், எல்லா கால சூழ்நிலையிலும் உயர் அலுவலர்களை தொடர்பு கொண்டு தகவல் அளிக்க இயலும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை, ராயபுரம், தங்கசாலையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் “நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம்” தீவிர தூய்மைப் பணி மற்றும் விழிப்புணர்வு முகாம்களை தொடங்கி வைத்தார்.
    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    முதல்-அமைச்சர் ஆலோசனையின்படி, 2022-2023 ஆண்டிற்கான நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் மானியக் கோரிக்கையில், சுத்தமான, பசுமையான மற்றும் நீடித்த சுற்றுச்சூழலை உறுதிசெய்யும் பொருட்டு நகரங்களில் பெருமளவிலான மக்கள் பங்கேற்புடன், ஒவ்வொரு மாதமும் இரண்டாம் மற்றும் நான்காம் சனிக்கிழமைகளில் தீவிர தூய்மைப் பணிகள் மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்த “நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

    இந்தத் தீவிர தூய்மைப் பணி மற்றும் விழிப்புணர்வு முகாம்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், குடியிருப்போர் நலச்சங்கங்கள், தேசிய சமுதாய நலப்பணி மற்றும் தேசிய பசுமை படையை சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்களின் பங்களிப்புடன் செயல்படுத்தப்படுகிறது.

    சென்னை மாநகராட்சி உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் ஆகிய பகுதிகளில் இரண்டாவது சனிக்கிழமைகளில் மிகப்பெரிய அளவில் இத்தூய்மைப் பணி மேற்கொள்ளப்படும்.

    தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பிரபலங்களைக் கொண்டு, மக்களுக்கு தூய்மையின் அவசியத்தை பற்றி வலியுறுத்தும் விதமாக பூங்காங்களில் கூட்டங்கள் நடத்திடவும், அவர்களை கொண்டு தூய்மை மற்றும் சுத்தம் தொடர்பான துண்டு பிரச்சாரங்கள் விநியோகிக்கவும், மஞ்சப்பையின் அவசியத்தை உணர்த்த மஞ்சப்பைகளை பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    வணிகவரித்துறை வாயிலாக அனைத்து கடை உரிமையாளர்கள், வணிகர்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் இத்தூய்மைப் பணியில் முழுமையாக பங்கெடுக்க வலியுறுத்தவும், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் வாயிலாக ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக்கினால் ஏற்படும் தீமைகளை விளக்கி, மீண்டும் மஞ்சப்பை உபயோகப்படுத்தும் முக்கியத்துவத்தை வலியுறுத்தவும், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை வாயிலாக அதன் கட்டுப்பாட்டில் உள்ள உழவர் சந்தைகளில் தினந்தோறும் சேகரமாகும் காய்கறி கழிவுகளை, உழவர்சந்தைகளிலேயே மக்கச்செய்து குப்பையாக மாற்றும் பணிகளை துவங்கிடவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

    முதல்-அமைச்சர் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார் ராயபுரம் மண்டலம், தங்கசாலை மேம்பாலப் பூங்கா அருகில் முதல்-அமைச்சர் இன்று “நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம்” தீவிரத் தூய்மைப் பணியினை தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து,முதல்-அமைச்சர் தலைமையில் மாணவ, மாணவியர்கள் மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் நகரங்களின் தூய்மை குறித்த உறுதிமொழியை ஏற்றனர்.

    தொடர்ந்து முதல்-அமைச்சர் பசுமையான சுற்றுச் சூழலை ஏற்படுத்தும் வகையில் தங்கசாலை மேம்பாலத்திற்கு கீழ் உள்ள இடத்தில் நகர்ப்புற அடர்வனம் அமைப்பதை தொடங்கும் விதமாக மரக்கன்றுகளை நட்டார். பின்னர், விழிப்புணர்வு ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    அதனைத் தொடர்ந்து, முதல்-அமைச்சர் தீவிர தூய்மைப் பணி மற்றும் இல்லங்களில் குப்பைகளை மக்கும், மக்காத குப்பைகளாக பிரித்து தூய்மைப் பணியாளர்களிடம் வழங்குவது குறித்த விழிப்பு ணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் விதமாக, விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி, மாணவ மாணவியர்களுடன் பெருநகர சென்னை மாநகராட்சி, இராயபுரம் மண்டலம், பாஷ்யகாரலு தெருவில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு நடந்து சென்று விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார்.

    முதல்-அமைச்சர் “நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம்” தீவிர தூய்மைப் பணியை தொடங்கி வைத்த அதேநேரத்தில், தமிழகம் முழுவதும் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தக் கூடிய பகுதிகளான பூங்காக்கள், பள்ளி வளாகங்கள், பேருந்து நிறுத்தங்கள், மார்க்கெட் பகுதிகள், வணிக வளாகங்கள் மற்றும் பொதுக் கழிப்பிடங்கள் உள்ள அமைவிடங்களில் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுடன் இணைந்து தீவிரத் தூய்மைப் பணியினை மேற்கொள்கிறார்கள்.

    நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ. வேலு, பி.கே.சேகர்பாபு, மேயர் ஆர்.பிரியா, கலாநிதி வீராசாமி எம்.பி., சட்டமன்ற உறுப்பினர்கள் ஆர்.மூர்த்தி, ஆர்.டி.சேகர், ஜே.ஜே. எபிநேசர், துணை மேயர்மு. மகேஷ்குமார், கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, மாநகராட்சி ஆணையர் திரு.ககன்தீப் சிங் பேடி, சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் சி. விஜயராஜ் குமார், மாமன்ற நிலைக்குழுத் தலைவர்கள், மண்டலக் குழுத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    தமிழகத்தில் மது, போதை பொருட்கள், ஆன்லைன் மோசடி என மும்முனை தாக்குதல் நடைபெற்று வருகிறது என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
    சேலம்:

    சேலத்தில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்பி நிருபர்களிடம் கூறியதாவது:-

    பாமக 2.0 என்ற புதிய செயல் திட்டத்தில் கல்வி , மேலான்மை, சுற்றுச்சூழல், போதை ஒழிப்பு, நேர்மையான நிர்வாகம் போன்றவைகளை முன் நிறுத்தி கட்சியை வழி நடத்துவேன், அதைபோலவே கட்சி நிர்வாகிகளும் நடந்துகொள்வார்கள்.

    சேலத்தில் பல முக்கிய பிரச்சினைகள் உள்ளது. 20 ஆண்டுகாலமாக மேட்டூர் உபரி நீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறோம்.

    ஆண்டுதோறும் 40 டி.எம்.சி.யில் இருந்து 120 டி.எம்.சி. தண்ணீர் கடலில் கலந்து வருகிறது. கடந்த ஆட்சி காலத்தில் சிறிய அளவில் செயல்படுத்தப்பட்டது. அதை மேட்டூரில் இருந்து ஆத்தூர் வரை கொண்டு செல்ல திட்டத்தை விரிவுப்படுத்த வேண்டும்.

    சேலம் மாநகர குப்பைகள் நாள்தோறும் 500 டன் குப்பைகள் எறியூட்டப்படுவது முட்டாள் தனம். குப்பைகளால் மாநகர மக்கள் பல ஆபத்தான விளைவுகளை சந்தித்து வருகின்றனர். குப்பைகள் பாதுகாப்பாக அப்புறப்படுத்த வேண்டும்.

    தமிழகத்தில் மது, போதை பொருட்கள், ஆன்லைன் மோசடி என மும்முனை தாக்குதல் நடைபெற்று வருகிறது. 9 மாதத்தில் 50 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள். அதை தடுக்க தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சேலம் உருக்காலைக்கு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு குறைந்த அளவே இழப்பு வழங்கப்பட்டது. வேலை வாய்ப்பும் வழங்கவில்லை. எனவே அவர்களுக்கு நிலத்தை திருப்பி வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் தேர்தலுக்கு முன்பு மதுக்கடைகள் படிப்படியாக மூடப்படும் என தெரிவித்தார்கள்.

    அடுத்த தலைமுறையை காப்பாற்ற வேண்டும் என்ற அக்கரை இருந்தால் உடனடியாக மதுக்கடைகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நீட் கொண்டு வந்த நோக்கமே கல்வி வியாபாரம் ஆக கூடாது என்பதே, ஆனால் இந்தியா முழுவதும் 1 லட்சம் கோடிக்கு மேல் பயிற்சி நிறுவனங்கள் மூலம் மோசடி நடைபெறுகிறது,

    அது போக மருத்துவ கல்லூரிகளில் கல்வி கட்டணம் என கல்வி வணிகம் ஆக்கப்பட்டது.. நீட் தேர்வு வந்த பிறகும் தகுதியற்ற நபர்கள் கூட மருத்துவம் படிக்கும் அவலம் நிவிவருகிறது.

    கடந்த 50 ஆண்டுகளில் திராவிட கட்சிகள் தமிழகத்தில் கல்வி கட்டமைப்பை உருவாக்கவில்லை, அதனால் சிறிது காலம் தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். கல்வியை பொது பட்டியலில் இருந்து மாநில அரசு பட்டியலுக்கு மாற்ற வேண்டும். ஆளுநருக்கும் முதல்-அமைச்சருக்கும் சுமூக உறவு இருக்க வேண்டும். அதில் இருவரும் அரசியல் செய்யக்கூடாது. தமிழக மக்களின் உணர்வுகளை மதித்து ஆளுநர் செயல்பட வேண்டும்.

    தமிழகத்திற்கு சாபகேடாக அமைந்துள்ள மேகதாது அணையை எக்காரணம் கொண்டும் கட்டவிடமாட்டோம். தமிழகத்தில் அரசியல் செய்து வரும் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கர்நாடகா சென்று அதை தடுத்து நிறுத்துவாரா. தமிழகத்தில் தி.மு.க.வுக்கு மாற்று பா.ம.க.தான். பாரதிய ஜனதா கிடையாது.

    அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதியத்தை நிறைவேற்றுவார்கள் என நம்பி தி.மு.க.விற்கு வாக்களித்தனர். ஆனால் அரசு ஊழியர்களை ஏமாற்றும் வகையில் நிதி அமைச்சர் வெளிப்படையாக ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்றமுடியாது என அறிவித்திருப்பது கவலையளிப்பதாக உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது வன்னியர் சங்க மாநில செயலாளர் மு.கார்த்தி, எம்.எல்.ஏ.க்கள் அருள், சதாசிவம், மாவட்ட செயலாளர்கள் ரத்தினம், விஜயராசா, ராஜசேகரன், பசுமை தாயக மாநில இணை செயலாளர் சத்திரிய சேகர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
    தட்கல் பத்திரப்பதிவு நடைமுறை முதற்கட்டமாக 100 சார் பதிவாளர் அலுவலகங்களில் செயல்படுத்தப்படும்.
    சென்னை:

    தமிழகத்தில் கடந்த சட்டசபை கூட்டத்தொடரில் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, பத்திரப்பதிவை விரைந்து மேற்கொள்ள வசதியாக 'தட்கல்' முறை கொண்டு வரப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. 

    இதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இது குறித்து பத்திரப்பதிவு துறை செயலாளர் ஜோதி நிர்மலாசாமி வெளியிட்டுள்ள அரசாணையில், தமிழகத்தில் தட்கல் பத்திரப்பதிவு நடைமுறை முதற்கட்டமாக 100 சார் பதிவாளர் அலுவலகங்களில் செயல்படுத்தப்படும். 

    தினசரி அதிகளவில் பத்திரப்பதிவு நடைபெறும் 100 அலுவலகங்கள் இதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த 100 சார் பதிவாளர் அலுவலகங்களிலும், அதிகபட்சமாக தினசரி தலா 10 தட்கல் பத்திரப்பதிவுகள் செய்யப்படும். 

    தட்கல் முறையில் பத்திரப்பதிவு செய்ய ரூ.5 ஆயிரம் கட்டணமாக நிர்ணயிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    தேசிய கல்விக் கொள்கையை தேசிய அளவில் அமல்படுத்துவது குறித்து மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் இந்த மாநாட்டில் ஆய்வு செய்கிறார்.
    சென்னை:

    மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் தலைமையில் தேசிய அளவில் குஜராத்தில் இன்றும் நாளையும் 2 நாட்கள் கல்வி மாநாடு நடைபெறுகிறது. புதியக் கல்விக் கொள்கை குறித்து கல்வி மாநாட்டில் விவாதம் நடைபெறுகிறது. தேசிய கல்விக் கொள்கையை தேசிய அளவில் அமல்படுத்துவது குறித்து மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் இந்த மாநாட்டில் ஆய்வு செய்கிறார். இந்த மாநாட்டில் பங்கேற்காமல் தமிழ்நாடு அரசு புறக்கணித்துள்ளது.

    மாநாட்டில் தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியோ, உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடியோ பங்கேற்கவில்லை. துறை சார்ந்த அதிகாரிகளும் கலந்துகொள்ளவில்லை. 

    தமிழகம் புதிய கல்விக்கொள்கைக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டிருக்கிறது. சமீபத்தில் ஆளுநர் பங்கேற்ற பட்டமளிப்பு விழாவில்கூட புதிய கல்விக்கொள்கை குறித்த விவாதம் வந்தது. 3, 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு கூட பொதுத்தேர்வு நடத்தும் நிலை புதிய கல்விக்கொள்கையில் இருக்கிறது, இதையெல்லாம் எப்படி ஏற்கமுடியும? என அமைச்சர் பொன்முடி கேள்வி எழுப்பியிருந்தார். 

    புதிய கல்விக்கொள்கையில் உள்ள பல்வேறு அம்சங்கள் ஏற்கக்கூடிய நிலையில் இல்லை என தமிழக அரசு கூறிவரும் நிலையில், தேசிய கல்வி மாநாட்டை தமிழகம் புறக்கணித்துள்ளது குறிப்பிடத்தகக்து.
    சென்னை தலைமைச் செயலகத்தில் நாமக்கல் கவிஞர் மாளிகையில் உள்ள 10-வது மாடி கூட்டரங்கில் துறை வாரியான ஆய்வு கூட்டம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றது.
    சென்னை:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. ஆட்சியில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

    தமிழ்நாட்டை நம்பர்-1 முதன்மை மாநிலமாக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மேலும் பல்வேறு புதிய திட்டங்களையும் தீட்டி வருகிறார்.

    இதன் காரணமாக தமிழகத்தில் முக்கிய துறைகளில் மிகப்பெரிய அளவில் முன்னேற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.

    தொலைநோக்கு சிந்தனையுடன் மேற்கொள்ளப்படும் திட்டங்களால் தமிழகத்தில் தொழில் மற்றும் வேளாண் துறைகளில் அதிக வேலைவாய்ப்புகள் உருவாகி உள்ளன.

    தமிழ்நாட்டை மிகச்சிறந்த தொழில் வளர்ச்சி மிக்க மாநிலமாக்க வேண்டும் என்பதற்காக சமீபத்தில் துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு சென்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொழில் முதலீடுகளை ஈர்த்து வந்துள்ளார்.

    தற்போது ஜெர்மனி நாட்டில் நடந்து வரும் தொழில் மாநாடு மூலமாகவும், தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்க்க தனி அரங்கம் அமைக்கப்பட்டு உள்ளது.

    2021-2022-ம் நிதியாண்டில் தமிழகத்துக்கு முந்தைய ஆண்டை விட 30 சதவீதம் அதிகமாக வெளிநாட்டு முதலீடு கிடைத்து உள்ளது.

    இதே போல் அனைத்து துறைகளிலும் பணிகளை மேம்படுத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டு செயலாற்றி வருகிறார்.

    வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு அதன் பணிகளும் நடைபெறுவதால் முன்னேற்ற பாதையில் வேகமாக சென்று கொண்டிருக்கின்றன.

    ஒவ்வொரு துறையிலும் பணிகள் எந்த அளவுக்கு நடைபெற்றுள்ளன என்பதை கண்டறிய தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் அறையில் டேஷ்போர்டும் வைக்கப்பட்டு உள்ளது. அனைத்து துறைகளின் பணிகளும் ‘அப்டேட்’ செய்யப்பட்டு வருகின்றன. இதை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அவ்வப்போது கண்காணிப்பது வழக்கம்.

    இந்த நிலையில் சிறப்பு திட்ட துறை மூலம் 2 நாட்கள் ஒவ்வொரு துறைகளின் செயல்பாடுகளையும் முழுமையாக ஆய்வு செய்ய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்திருந்தார்.

    அதன்படி சென்னை தலைமைச் செயலகத்தில் நாமக்கல் கவிஞர் மாளிகையில் உள்ள 10-வது மாடி கூட்டரங்கில் துறை வாரியான ஆய்வு கூட்டம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்ட மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், துறைகளின் செயலாளர்கள், அமைச்சர்கள் பங்கேற்றனர்.

    நகராட்சி நிர்வாகம், குடிநீர் வினியோகம், பொதுப்பணித்துறை, எரிசக்தி, நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகம், வீட்டு வசதி மேம்பாட்டு வாரியம், தொழில், சிறு-குறு மற்றும் நடுத்தர தொழில், தகவல் தொழில்நுட்பம், தமிழ் வளர்ச்சித் துறை, சுற்றுலாத்துறை, மனிதவள மேம்பாடு, கைத்தறி, வணிக வரித்துறை, பேரிடர் நிர்வாகத்துறை, சிறப்பு திட்டங்கள் துறை, மது விலக்கு ஆயத்தீர்வை, போக்குவரத்து, நிதித்துறை ஆகிய 19 துறைகளின் செயல்பாடுகள் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது ஒவ்வொரு துறை வாரியாக அறிவிக்கப்பட்ட திட்டங்களில் எந்த அளவுக்கு பணிகள் நடைபெற்றுள்ளது என்ற விவரத்தை அறிந்து கொண்டார்.

    ஒவ்வொரு துறையிலும் எவ்வளவு பணிகள் இன்னும் செயல்படுத்தப்பட வேண்டும் என்ற விவரத்தையும் அறிந்து கொண்டு அதை விரைந்து செயல்படுத்துமாறு கேட்டுக்கொண்டார்.

    இதே போல் நாளை (2-ந்தேதி) ஆதிதிராவிடர் நலத்துறை, வேளாண், கால்நடை, பால்வளம், மீன் வளம், பிற்பட்டோர், இதர பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் துறை, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை, பள்ளிக்கல்வி, உயர்கல்வி, தொழிலாளர் நலம், ஊரக மேம்பாடு, சுகாதாரம், சமூக நலம், முதல்வரின் முகவரி, மாற்றுத் திறனாளிகள் துறை, சுற்றுச்சூழல், சட்டம், இளைஞர்கள் நலம், திட்டம் மற்றும் நிதித்துறைகள் செயல்பாடுகள் பற்றி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்கிறார்.

    பழங்குடியினருக்கான அடிப்படை வசதிகளை மேற்கொள்ள ரூ.17.18 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருவண்ணாமலை, திருப்பத்தூர்,  கள்ளக்குறிச்சி, திருச்சி, திண்டுக்கல், ஈரோடு, நாமக்கல்,கோயம்புத்தூர் சேலம் மற்றும் தர்மபுரி ஆகிய 11 மாவட்டங்களில் வாழும் பழங்குடியின மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், சாலை வசதி, குடிநீர் வசதி, தடுப்பணை கட்டுதல், பள்ளிகள் பராமரிப்பு, மேம்படுத்துதல் போன்ற உட்கட்டமைப்பு பணிகள் 17 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் என சட்டப்பேரவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

    அதனை செயல்படுத்தும் வகையில், திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு ஊராட்சி, அத்திப்பாடி கிராமப்பகுதியில் சாலைக்கு தடுப்பு சுவர் அமைக்கும் பணிக்கு ரூ.360 லட்சமும், திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் வட்டம், நாயக்கனேரி மலை பழங்குடியினர் பகுதியில் தடுப்பணை கட்ட ரூ.4.95 லட்சம்.

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இரண்டு சாலை பணிக்கு ரூ.557.25 லட்சம், திருச்சி மாவட்டம், அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளிக்கு அடிப்படை வசதிகள் மேற்கொள்ள ரூ.48.40 லட்சமும், நாமக்கல், திருவண்ணாமலை, கோயம்புத்தூர், நீலகிரி, சேலம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் உள்ள பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளிகள் மற்றும் விடுதிக்கு கட்டிட பராமரிப்பு, பழுதுபார்ப்பு, மற்றும் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ள ரூ.268.30 லட்சம் என மொத்தம் 17 கோடியே 18 லட்சத்து மூன்றாயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
    மாமல்லபுரத்தில் அனைத்து நட்சத்திர ஓட்டல் நிர்வாகிகள், மேலாளர்களை அழைத்து ஆலோசனை கூட்டம் நடத்தியது. இதில் வீரர்களுக்கு கூடுதல் வசதி ஏற்படுத்த வேண்டும் என்று அதிகாரிகள் குழுவினர் தெரிவித்தனர்.

    மாமல்லபுரம்:

    சர்வதேச 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜூலை 28-ந் தேதி மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரியில் தொடங்க உள்ளது. 186 நாடுகளில் இருந்து இங்கு வரும் செஸ் வீரர்களை 38 நட்சத்திர அந்தஸ்து விடுதிகளில் தங்க வைக்க அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.

    வீரர்கள் தங்கும் 38 விடுதிகளில் உணவு வழங்குதல், உபசரித்தல், விருந்தோம்பல் செய்தல், சுத்தமான குடிநீர் வழங்குதல், ரூம்களில் அதிவேக இணையதள வசதி இருத்தல் போன்ற ஏற்பாடுகளை கவனிக்க தமிழக அரசு வருவாய்துறை முதன்மை செயலர் குமார் ஜெயந்த் தலைமையில் ஒரு குழு அமைத்துள்ளது.

    அந்த குழு நேற்று மாலை மாமல்லபுரத்தில் அனைத்து நட்சத்திர ஓட்டல் நிர்வாகிகள், மேலாளர்களை அழைத்து ஆலோசனை கூட்டம் நடத்தியது. இதில் வீரர்களுக்கு கூடுதல் வசதி ஏற்படுத்த வேண்டும் என்று அதிகாரிகள் குழுவினர் தெரிவித்தனர்.

    ஓட்டல் நிர்வாகிகள் கூறும் போது, ஜி.எஸ்.டி வரிவிலக்கு தேவை, வெளிநாட்டு வீரர்கள் அதிகமாக வீடியோகால் பயன் படுத்துவார்கள். அதற்கு தற்போது இருக்கும் இணைய சேவை ஒத்துழைக்காது. தடையில்லா குடிநீர் தரவேண்டும், கூடுதல் மின்சாரம் தரவேண்டும், வீரர்கள் பாதுகாப்பு காவலர்கள் உணவுக்கான கட்டணமும் தரவேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வைத்தனர்.

    இந்த ஆலோசனை கூட்டத்தில் முதன்மை செயலர் வினய், சிறப்பு அலுவலர்கள் வீரப்பன், திவாகர், கலெக்டர் ராகுல் நாத், உணவு பாதுகாப்பு அலுவலர் அனுராதா, மாமல்லபுரம் டி.எஸ்.பி. ஜெகதீஸ்வரன், இன்ஸ்பெக்டர் ருக்மாந் தகன், வருவாய்த்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    ஒழுங்குமுறை விற்பனை கூடங்களுக்கு வெளியே நடக்கும் வியாபாரத்துக்கு 1 சதவீத சந்தை வரி விதிப்பதை அரசு நிறுத்த வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
    சென்னை:

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தி.மு.க. அரசு, புதிதாக பல பொருட்களை 1987-ம் ஆண்டைய தமிழ்நாடு வேளாண் விளை பொருட்கள் விற்பனை (முறைப்படுத்துதல்) சட்டத்தின் முதல் அட்டவணையில் சேர்த்து, அதனை 25-ந்தேதி நாளிட்ட அரசிதழ் எண் 21-ல் வெளியிட்டு இருப்பதாகவும், இந்த அறிவிக்கையினுடைய இணைப்பின்படி, எல்லா வடிவ தானியங்களான சோளம், கம்பு, ராகி, தினை, குதிரைவாலி, வரகு, சாமை; எல்லா வடிவ பயறு வகைகளான உளுந்து, பச்சைப் பயறு, கொண்டைக்கடலை, பட்டாணி, மொட்சை, காராமணி, கொள்ளு; எண்ணெய் வித்துக்கள்; தேங்காய் நார் போன்ற நார்ப் பொருட்கள்; கிழங்கு வகைகள்; சுவையூட்டும் பொருட்கள் மற்றும் நறுமணப் பொருட்கள்; அனைத்து வகை கரும்பு வெல்லம், பனை வெல்லம், கச்சா ரப்பர், பூண்டு, மிளகாய் வத்தல் உள்ளிட்ட பல பொருட்களுக்கு ஒரு விழுக்காடு சந்தை வரி தற்போது விதிக்கப்பட்டுள்ளதாகவும், இது தவிர ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களுக்கு வெளியே விற்பனை செய்யப்படும் விளை பொருள்களுக்கும் ஒரு விழுக்காடு சந்தை வரி விதிக்கப்பட்டு இருப்பதாகவும் வியாபாரிகளும், வணிகச் சங்கங்களும் தெரிவித்துள்ளன.

    மேற்படி பொருட்களுக்கு ஒரு விழுக்காடு சந்தை வரி விதிக்கப்பட்டிருப்பதன் மூலம் முதலில் பாதிக்கப்படுபவர்கள் பொருட்களை விற்பனை செய்யும் விவசாயிகளும், பொருட்களை வாங்கும் வியாபாரிகளும்தான் என்றும், இதன் காரணமாக பொருட்களின் விலை உயர்ந்து பொதுமக்களும் பாதிக்கப்படுவார்கள் என்றும், உளுந்து போன்ற பயறு வகைகள் வெளிநாட்டில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் இறக்குமதி செய்யப்பட்டு தமிழகத்தில் உள்ள வியாபாரிகளால் வியாபாரம் செய்யப்படுகிறது என்றும், இதற்கும் வரி கட்ட வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது என்றும், ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களுக்கு வெளியே நடக்கும் வியாபாரத்திற்கு பிற மாநிலங்களில் சந்தை வரி விதிக்கப்படுவதில்லை என்றும், தமிழ்நாட்டில் இருந்து வெளியே செல்லும் அனைத்துப் பொருட்களுக்கும் சந்தை வரி கட்ட வேண்டும் என்று சொல்வது எவ்விதத்திலும் நியாயமில்லை என்றும், ஏற்கெனவே உள்ள பொருட்களுக்கு மட்டும் சந்தை வரி வசூலிக்கப்பட வேண்டும் என்றும், புதிதாக எந்தப் பொருளுக்கும் சந்தை வரி விதிக்கக்கூடாது என்றும், ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களுக்கு வெளியே நடக்கும் வியாபாரத்திற்கு சந்தை வரி விதிக்கக்கூடாது என்றும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

    அரசின் இதுபோன்ற நடவடிக்கை வியாபாரிகள் மற்றும் விவசாயிகளின் வருமானத்தைப் பெருக்க வழி வகுக்காது. மாறாக குறைக்க வழிவகுக்கும். தி.மு.க. அரசின் இந்த நடவடிக்கை வியாபாரிகள், விவசாயிகள், பொதுமக்கள் என அனைவரையும் பாதிக்கும் செயலாகும். தி.மு.க. அரசின் வணிக விரோத கொள்கைக்கு அ.தி.மு.க. சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    எனவே, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இதில் உடனடியாக தலையிட்டு, இந்த கோரிக்கையில் உள்ள நியாயத்தினைக் கருத்தில் கொண்டு, புதிதாக எந்த விளை பொருளையும் ஒரு விழுக்காடு சந்தை நுழைவு வரிக்கு உட்படுத்தாமல் இருக்கவும், பிற மாநிலங்களில் உள்ளது போன்று ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்களுக்கு வெளியே நடக்கும் வியாபாரத்திற்கு ஒரு விழுக்காடு சந்தை வரி விதிக்காமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    பேரறிவாளனுக்கு விடுதலை அளிக்கப்பட்டு உள்ள நிலையில் அந்த தீர்ப்பை மேற்கோள்காட்டி மற்ற 6 பேரும் விடுதலை பெற தனித்தனியாக ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
    வேலூர்:

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற நளினி, முருகன், சாந்தன் ஆகியோர் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

    ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் புழல் ஜெயிலிலும், ரவிச்சந்திரன் மதுரை மத்திய ஜெயிலிலும் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன் கடந்த 18-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு மூலம் விடுதலை செய்யப்பட்டார்.

    பேரறிவாளன் விடுதலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட தி.மு.க. அமைச்சர்கள், முக்கிய தலைவர்கள் வரவேற்றனர்.

    இதற்கு காங்கிரஸ் தலைவர்கள் அதிருப்தியும், எதிர்ப்பும் தெரிவித்தனர். இந்த நிலையில் ஜெயில்களில் உள்ள மேலும் 6 ராஜீவ் கொலை குற்றச்சாட்டு கைதிகள் விடுதலைக்கும் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் காணொலி காட்சி மூலம் ஊட்டியில் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

    இந்த நிலையில் 5-வது மாதமாக பரோல் நீட்டிக்கப்பட்டு காட்பாடி பிரம்மபுரத்தில் தங்கியுள்ள நளினியை வக்கீல் புகழேந்தி சந்தித்து பேசினார். அதைத் தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 7 பேர் விடுதலை சம்பந்தமாக தீர்மானத்தை கவர்னர், ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தார்.

    இதில் தற்போது பேரறிவாளன் மட்டும் விடுதலை செய்யப்பட்டு உள்ளார். அவர் தன்னை விடுதலை செய்ய வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்ததால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

    அனைவரும் ஒரே வழக்கின் கீழ் உள்ளவர்கள் தான் இந்த வழக்கில் 7 பேரையும் விடுதலை செய்து இருக்க வேண்டும்.

    இதே வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் மேலும் 6 பேரையும் விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அரசு கடந்த வாரம் ஆலோசனை நடத்தியது.

    6 பேரையும் விடுதலை செய்வதற்கான நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இதில் சிறிது காலதாமதமாகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஜூன் மாத இறுதிக்குள் 6 பேரையும் தமிழக அரசு விடுதலை செய்யும் என்று எதிர்பார்க்கிறோம்.

    இந்த நிலையில் முருகனுக்கு 6 நாட்கள் அவசர கால பரோல் விடுப்பு வழங்கக்கோரி அவரது மனைவி நளினி சிறை நிர்வாகத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அரசு அவருக்கு விடுப்பு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் முருகனுக்கு பரோல் கோரி சென்னை ஐகோர்ட்டில் ஜூன் 1-ந்தேதி மனுதாக்கல் செய்ய உள்ளோம்.

    இதனிடையே, விடுதலை கோரி ஏற்கனவே நளினி சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்துள்ள வழக்கு நிலுவையில் உள்ளது. தற்போது பேரறிவாளனுக்கு விடுதலை அளிக்கப்பட்டு உள்ள நிலையில் அந்த தீர்ப்பை மேற்கோள்காட்டி மற்ற 6 பேரும் விடுதலை பெற தனித்தனியாக ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக அடுத்த வாரத்தில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்ய உள்ளோம்.

    இவ்வாறு வக்கீல் புகழேந்தி கூறினார்.

    பட்டப்படிப்பு, டிப்ளமோ படித்த மாற்றுத் திறனாளிகளுக்கு திருமண உதவித்தொகை ரூ 50,000 ரொக்கமாக வழங்கப்படும்.
    சென்னை:

    தமிழகத்தில் திருமண உதவி தொகை கோரி விண்ணப்பிக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு அரசின் உதவித்தொகை இது வரை பாதி ரொக்கமாகவும், மீது சேமிப்புப் பத்திரமாகவும் வழங்கப்பட்டு வந்தது.

    இந்நிலையில்,  இந்த திருமண உதவித்தொகை முழுவதும் ரொக்கமாகவே வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கான அரசாணை நேற்று வெளியிடப்பட்டது.

    இதன்படி பட்டப்படிப்பு, டிப்ளமோ படித்த மாற்றுத் திறனாளிகளுக்கு திருமண உதவித்தொகை  ரூ 50,000 ரொக்கமாக வழங்கப்படும். 

    இதர மாற்றுத் திறனாளிகளுக்கு திருமண உதவித்தொகை ரூ.25,000 ரொக்கமாகவே வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    ×