search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Summer heat"

    • கொல்லம், ஆலப்புழா, திருச்சூரில் 37 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
    • மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு வெயிலின் தாக்கம் தற்போது அதிகமாக உள்ளது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். மின் தேவை அதிகமான நிலையில், மின் பகிர்வில் கட்டுப்பாடுகளை கேரள மின்வாரியம் மேற்கொண்டுள்ளது.

    இந்த நிலையில் வெப்பத்தின் தாக்கம் நாளை (7-ந் தேதி) வரை பல மாவட்டங்களில் தொடர்ந்து இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பாலக்காடு மாவட்டத்தில் 39 டிகிரி செல்சியஸ் ஆகவும், கொல்லம், ஆலப்புழா, திருச்சூரில் 37 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும் என கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையில் பாலக்காடு உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று கோடை மழை பெய்தது. இதனால் அங்கு வெப்பம் சற்று தணிந்தது. எர்ணாகுளம், வயநாடு மாவட்டங்களில் வருகிற புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • கடந்த சில மாதங்களாக வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவி வருகிறது.
    • அணையின் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்ட கம்பி வேலி சேதமடைந்ததே இதற்கு காரணம்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த திருமூர்த்தி மலையில் உடுமலை வனச்சரகத்தின் அடர்ந்த வனப்பகுதியில் பஞ்சலிங்க அருவி உள்ளது. அருவிக்கு மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் உற்பத்தியாகும் குறுமலை ஆறு, பாரப்பட்டி ஆறு, கிழவிப்பட்டி ஓடை, உழுவி ஆறு, கொட்டை ஆறு, உப்பு மண்ணம் பள்ளம் உள்ளிட்ட ஆறுகள் மூலமாக மழைக்காலங்களில் நீர்வரத்து ஏற்படுகிறது.

    அப்போது வனப்பகுதியில் நீர்வழித்தடங்களில் தேங்கி இருக்கும் மருத்துவ குணமிக்க மூலிகைகள் தண்ணீருடன் கலந்து பஞ்சலிங்க அருவியில் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. அதில் குளித்து புத்துணர்வு பெறுவதற்காக வெளியூர், வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் திருமூர்த்தி மலைக்கு வருகை தருகின்றனர்.

    இந்த சூழலில் கடந்த சில மாதங்களாக வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக பஞ்சலிங்க அருவியின் நீர்பிடிப்பு பகுதியில் உற்பத்தியாகின்ற ஆறுகள் நீர்வரத்தை முற்றிலுமாக இழந்து விட்டன. இதனால் பஞ்சலிங்க அருவி தண்ணீர் இல்லாமல் வெறுமனே காட்சி அளிக்கிறது.

    இதன் காரணமாக திருமூர்த்திமலைக்கு வருகை தருகின்ற சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க முடியாமல் ஏமாற்றமடைந்து திரும்பிச் செல்கின்றனர். ஆனாலும் அருவிக்கு சென்று பார்வையிட்டு திரும்பிச் செல்வதை வாடிக்கையாக கொண்டு உள்ளனர். வெப்பத்தின் தாக்கம் குறைந்து வனப்பகுதியில் மழை பெய்து அருவிக்கு நீர்வரத்து ஏற்படும் என பக்தர்கள், சுற்றுலா பயணிகள் ஆவலோடு எதிர்பார்த்து காத்துள்ளனர்.

    கோவிலுக்கு வந்து விட்டு திரும்பி செல்கின்ற பக்தர்கள் குறைவான நீர் இருப்பு உள்ள திருமூர்த்தி அணைப்பகுதியில் இறங்கி ஆபத்தான முறையில் குளித்து வருகிறார்கள். அணையின் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்ட கம்பி வேலி சேதமடைந்ததே இதற்கு காரணம். அதை புதுப்பிப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் விலைமதிப்பற்ற மனித உயிர் பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. அணையில் சேதம் அடைந்த கம்பி வேலியை சீரமைத்தும், கோடைகாலம் முடியும் வரையில் தகுந்த போலீஸ் பாதுகாப்பையும் போடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சூறாவளி காற்று வீசியதில் அப்பகுதியில் உள்ள தனியார் பெட்ரோல் பங்கின் மேற் கூரை பறந்து சென்றது.
    • காற்றுடன் பெய்த மழையின் காரணமாக வாழை மரங்கள் முறிந்து போனதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    தொட்டியம்:

    தமிழகத்தில் கோடை காலம் தொடங்கியது முதலே சுட்டெரிக்கும் வெயிலால் பொது மக்கள் கடும் அவதி அடைந்து உள்ளனர். அக்னி நட்சத்திரம் தொடங்கியதால் அனல் வீசும் வெப்ப காற்றினால் பொதுமக்கள் வெளியே தலை காட்ட அஞ்சிய நிலையில் நேற்று இரவு சுமார்7.30 மணி அளவில் தொட்டியம் அருகே காட்டுப்புத்தூர் பகுதியில் திடீரென வானில் கருமேகங்கள் சூழ்ந்தது. சூறாவளி காற்று வீசியதில் அப்பகுதியில் உள்ள தனியார் பெட்ரோல் பங்கின் மேற் கூரை பறந்து சென்றது. அப்போது இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் தெருக்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    பலத்த காற்று மற்றும் மழை காரணமாக சில இடங்களில் மரங்கள் வேருடன் சாய்ந்துள்ளது. இது தவிர வயல் வெளியில் காட்டுப்புத்தூர், சீலை பிள்ளையார்புத்தூர், ஸ்ரீராமசமுத்திரம், மஞ்சமேடு, மற்றும் காட்டுப்புத்தூர் அதனைச் சுற்றியுள்ள பகுதியில் விவசாயிகள் ரஸ்தாலி, பூவன், ஏலரசி, கற்பூரவள்ளி, உள்பட பல்லாயிரக் கணக்கான வாழையை பயிரிட்டு வந்தனர். இந்த சூறாவளி காற்றுடன் பெய்த மழையின் காரணமாக வாழை மரங்கள் முறிந்து போனதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட வாழை பயிருக்கு இழப்பீடு வழங்கவேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வெயிலின் தாக்கம் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
    • 19 மாவட்ட கலெக்டர்கள் காணொலி வாயிலாக கலந்துகொள்கிறார்கள்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் கோடை வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து அனலாகி வருகிறது. வெயிலின் தாக்கம் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

    சுட்டெரிக்கும் வெயிலால் மக்கள் கடும் அவதி அடைந்து வரும் நிலையில் குடிநீர் பிரச்சினையும் ஆங்காங்கே உருவாக தொடங்கிவிட்டது.

    ஏரி-குளங்கள் உள் ளிட்ட நீர் வழங்கும் ஆதாரங்கள் மிக வேகமாக வறண்டு வருவதால் குடிநீர் பிரச்சினை குறித்தும் தடையின்றி மின்சாரம் வழங்குவது தொடர்பாகவும் அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா இன்றும், நாளையும் ஆலோசனை நடத்த உள்ளார்.

    சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி இன்று மாலை 4 மணிக்கு காணொலி வாயிலாக நடைபெறக் கூடிய இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண் மைத் துறைகளின் செயலாளர்கள், மின்வாரிய அதிகாரிகள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.

    இந்த ஆலோசனையில் தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில் இன்று 19 மாவட்ட கலெக்டர்கள் காணொலி வாயிலாக கலந்துகொண்டு தங்களது மாவட்ட நிலவரங்களை விளக்கி கூறுகின்றனர்.

    சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், கடலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், ஈரோடு, கரூர், கள்ளக்குறிச்சி, மயிலாடு துறை, நாகை, நாமக்கல், மதுரை, கன்னியாகுமரி, பெரம்பலூர், அரியலூர், கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த கலெக்டர்கள் இன்றைய ஆலோசனையில் கலந்து கொள்கின்றனர்.

    குடிநீர் தட்டுப்பாட்டை போக்குவதற்கு எடுக்கப் பட்ட நடவடிக்கைகள் குறித்தும் புதிதாக ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கப்பட வேண்டிய இடங்கள் எத்தனை என்பது பற்றியும் விவரமாக எடுத்து கூறுகின்றனர்.

    இதுதவிர தட்டுப்பா டின்றி மின் வினியோகம் கிடைக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இதில் விவாதிக்க உள்ளனர்.

    இது தவிர பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ள நிலையில் சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை மூலம் அமல்படுத்தப்பட்டு வரும் கல்லூரி கனவு திட்டம் குறித்தும் அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆலோசிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மேலும் `மக்களுடன் முதல்வர் திட்டம்' உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களின் நிலைப்பாடு குறித்தும் இதில் விவாதிக்கப்படும் என தெரிகிறது.

    இந்த கூட்டத்தில் கலெக்டர்கள் தெரிவிக்கும் கருத்துக்களின் அடிப்படையில் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தேவையான குடிநீர் மற்றும் வெப்ப அலைகளில் இருந்து பொதுமக்களை காத்துக் கொள்வதற்கான திட்டங்கள் வகுக்கப்பட உள்ளது.

    இன்று நடைபெறும் கூட்டம் தொடர்ச்சியாக நாளையும் நடைபெற உள்ளது. இதில் மீதம் உள்ள புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, சேலம், தஞ்சாவூர், தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருப்பூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, திருவாரூர், தென்காசி, திருப்பத்தூர், விழுப்புரம், வேலூர் உள்பட 19 மாவட்டங்களில் கலெக்டர்கள் பங்கேற்க உள்ளனர்.

    கூட்டத்தில் கலெக்டர்கள் தெரிவிக்கும் கருத்துக்களின் அடிப்படையில் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தேவையான குடிநீர் மற்றும் மின்சார பிரச்சினை குறித்து முதல்-அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று மேற்கொண்டு திட்டங்கள் வகுக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • பொதிகை, குகன், விவேகானந்தா ஆகிய 3 படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன.
    • சுற்றுலா பயணிகள் இந்த கூடாரத்தின் கீழ் வரிசையில் நின்றபடி விவேகானந்தர் மண்டபத்துக்கு படகில் சென்று வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி கடல்நடுவில் அமைந்துள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும் அதன் அருகில் உள்ள இன்னொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் எழுப்பப்பட்டுள்ளது.

    இவற்றை தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்த்து வருகிறார்கள். இவற்றை பார்வையிட செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு வசதியாக தமிழக அரசு நிறுவனமான பூம்புகார் கப்பல் போக்குவரத்துக்கழகம் படகு போக்குவரத்தை நடத்தி வருகிறது.

    இதற்காக பொதிகை, குகன், விவேகானந்தா ஆகிய 3 படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது கோடை விடுமுறை சீசன் தொடங்கி இருப்பதால் கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்த வண்ணமாக இருக்கிறார்கள். விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட செல்லும் சுற்றுலா பயணிகள் படகு துறையில் கொளுத்தும் வெயிலில் தவித்தபடி பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை இருந்து வருகிறது.

    படகு துறையில் நிழல் வசதி இல்லாததால் சுற்றுலா பயணிகள் வெயிலினால் சில நேரங்களில் மயங்கி விழும் சூழ்நிலை இருந்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் கன்னியாகுமரி படகுதுறை வளாகத்தில் சுற்றுலா பயணிகளுக்கு வசதியாக நிழல் தரும் வகையில் தார்பாய் மூலம் கூடாரம் அமைத்துள்ளனர்.

    இதனால் சுற்றுலா பயணிகள் இந்த கூடாரத்தின் கீழ் வரிசையில் நின்றபடி விவேகானந்தர் மண்டபத்துக்கு படகில் சென்று வருகின்றனர்.

    இதைத்தொடர்ந்து கன்னியாகுமரி படகுத்துறையில் நிழல் வசதி ஏற்படுத்தி இருந்த பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்துக்கு சுற்றுலா பயணிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.

    • மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
    • பென்னாகரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சூறைக்காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டத்தில் கோடைக்கு முன்பே கடுமையாக வெப்பம் வீசி வந்தது. கோடை வெயில் தொடங்கியவுடன் 100 பாரன்ஹீட் வெயில் பதிவாகி சதம் அடித்து வந்த நிலையில் ஏப்ரல் மாதம் முழுவதும் 104 பாரன்ஹீட் வெப்பம் தொடங்கி 108. 7 பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. கடும் வெப்பத்தால் அனல் காற்று வீசியதில் பொதுமக்கள் பெரிதும் அவதிக்கு உள்ளாகினர்.

    இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு 108.5 பாரன்ஹீட் அளவில் கடுமையான வெப்பம் தாக்கியதில் தார் சாலைகளில் வெப்பம் பட்டு வெப்பத்துடன் சேர்ந்து அனல் காற்று வீசியதால் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச் சோடி காணப்பட்டது. பின்னர் மாலை திடீரென 5 மணிக்கு மேல் சூறாவளி காற்றுடன் மழை கொட்டி தீர்த்தது. இதனால் குளிர்ந்த சீதோசன நிலை நிலவி பொதுமக்கள் சற்று மகிழ்ச்சி அடைந்தனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் வானம் போர்வையால் போர்த்தியது போல் மேக மூட்டத்துடன் காணப்பட்டாலும் வெப்பத்தின் தாக்கம் இருந்து வந்தது.

    இந்த நிலையில் நேற்று 106.1 பாரன்ஹீட் வெப்பம் பதிவான நிலையில் மாலை திடீரென தருமபுரி , பாரதிபுரம், ஒட்டப்பட்டி, அதனைச் சுற்றியுள்ள தடங்கம், ஆட்டுக்காரன் பட்டி, சோலை கொட்டாய், வத்தல்மலை உள்ளிட்ட பகுதிகளிலும் இடி மின்னலுடன் மழை கொட்டி தீர்த்தது.

    பாலக்கோடு, அரூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் அனல் காற்றின் தாக்கம் தணிந்து குளிர்ந்த சீதோசன நிலை நிலவியது. மேலும் இந்த திடீர் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    கத்திரிப்பிறந்த முதல் நாளே மழை ஆலங்கட்டியுடன் கொட்டி தீர்த்தது. தொடர்ந்து கோடை மழை பெய்தால் வறட்சியால் தண்ணீர் இன்றி கருகும் பயிர்களை பாதுகாக்க முடியும் என விவசாயிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.

    நேற்று இரவு திடீரென பென்னாகரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சூறைக்காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. ஏரியூர் செல்லும் சாலை ஓரத்தில் இருந்த மரங்கள் சாய்ந்தது. இதனால் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து மற்றும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த நெடுஞ்சாலைத்துறையினர் மற்றும் மின்சரா துறையினர் சாலையில் விழுந்த மரங்களை அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர்.கடும் வெயில் தாக்கம் அதிகம் இருந்த நிலையில் திடீரென மழை பெய்ததால் பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    • ஈரோடு உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சுமார் 5 டிகிரி வரை வெயில் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • ஈரோட்டில் கடுமையான வெயிலால் வீடுகளில் புழுக்கம் நிலவி வருகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்து வருகிறது. நாளுக்கு நாள் வெயிலின் அளவு புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. வெயிலின் தாக்கத்தால் மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

    ஈரோடு மாவட்டத்தில் மாலை 6 மணிக்கு மேலும் வெயிலின் தாக்கம் இருந்து கொண்டே உள்ளது. கடந்த 20 நாட்களுக்கு மேலாக சுமார் 105 டிகிரிக்கு மேல் வெயில் பதிவாகி வருகிறது. புழுக்கத்தால் மக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.

    மேலும் ஈரோடு உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சுமார் 5 டிகிரி வரை வெயில் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து ஈரோடு உள்பட பல்வேறு மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும் மாவட்டத்தில் வெப்ப அலை வீசி வருகிறது. இதனால் வெயிலின் தாக்கம் மாவட்டத்தில் கடுமையாக இருந்து வருகிறது.

    இந்த நிலையில் இன்று (சனிக்கிழமை) கத்திரி வெயில் என்னும் அக்னி நட்சத்திரம் தொடங்கியது. இது வரும் 29-ந் தேதி வரை நீடிக்கிறது. இதனால் இன்று காலை முதலே வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கி உள்ளது. மாவட்டத்தில் வெயிலின் அளவு தினமும் உச்சத்தை தொட்டு 111 டிகிரி வரை பதிவாகி வருகிறது. இதனால் ஈரோட்டில் வெளியே செல்ல முடியாத நிலையில் வெயிலின் தாக்கத்தால் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். அக்னி நட்சத்திரம் தொடங்கியதால் என்ன செய்வது என தெரியாமல் மக்கள் புலம்பி வருகிறார்கள்.

    ஈரோட்டில் கடுமையான வெயிலால் வீடுகளில் புழுக்கம் நிலவி வருகிறது. இதனால் பகல் மற்றும் இரவு நேரங்களில் பொது மக்கள் வீடுகளில் இருக்க முடியாமலும், வெளியில் செல்ல முடியாமலும் கடுமையாக அவதிக்குள்ளாகி வருகிறார்கள். வெயிலின் தாக்கம் காரணமாக மதிய நேரங்களில் முக்கியமான சாலைகள் அனைத்தும் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி கிடக்கிறது. தொடர்ந்து நாளுக்கு நாள் வெயில் அதிகதித்து வருவதால் முதியவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். வெளியே செல்லும் பெண்கள் முகத்தில் துணியும், குடை பிடித்த படியும் சென்று வருகின்றனர். இந்த நிலையில் ஈரோட்டில் பல்வேறு பகுதிகளில் பழங்கள் விற்பனை கடைகள் அதிகரிக்க தொடங்கி உள்ளது. மேலும் ரோட்டோரங்களில் சாத்துக்குடி, தர்பூசணி மற்றும் நீர்சத்து பழ வகைகள் அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது.

    பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பழ வகைகளை அதிகளவில் வாங்கி சாப்பிடுகிறார்கள். பெரும்பாலான பொதுமக்கள் இயற்கைபானங்களை அதிகளவில் பருகி வருகிறார்கள். குறிப்பாக இளநீர், நுங்கு மற்றும் பழ வகை சாறுகளை அதிகளவில் பருகி வருகிறார்கள். இதனால் இளநீர் மற்றும் நுங்கு கடைகள் பல பகுதிகளில் அதிகளவில் வைக்கப்பட்டுள்ளன.

    மாவட்டத்தில் கடுமையான வெயில் வாட்டுவதால் பொதுமக்கள் பலர் நீர் நிலைகளை தேடி குளித்து வருகிறார்கள். குறிப்பாக வாலிபர்கள் மற்றும் சிறுவர்கள் நீச்சல் குளங்களுக்கு சென்று நீண்ட நேரம் குளித்து மகிழ்கிறார்கள். மேலும் பலர் குளம், குட்டைகளுக்கு சென்று குளித்து வெப்பத்தை தணித்து வருகிறார்கள்.

    அக்னிவெயில் தொடங்கி உள்ளதால் பொதுமக்கள் தேவையின்றி வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். மேலும் முதியவர்கள் மற்றும் குழந்தைகளை வெளியே அனுப்ப வேண்டாம். அவர்களை வீட்டிலேயே இருக்கும் படி அறிவுரை கூறி பார்த்து கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் மருத்துவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    இதே போல் இன்று கொடிவேரி, காளிங்கராயன் அணைக்கட்டு மற்றும் மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஏராளமான பொதுமக்கள் வந்து குளித்து மகிழ்ந்தனர்.

    மேலும் இளைஞர்கள் வந்து நீண்ட நேரம் குளித்துக் கொண்டே இருந்தனர். கடும் வெப்பத்தால் சிறுவர்கள் பலர் தண்ணீரை விட்டு வெளியே வராமல் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக குளித்து சூட்டை தனித்தனர்.

    • சேலம் மாநகரில் மதியம் 2 மணி முதல் வெயிலின் தாக்கம் குறைந்தது.
    • நீதிபுரம், லக்கம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 7ஆயிரம் வாழைகள் முறிந்து சேதமானது.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் வரலாறு காணாத அளவுக்கு கொளுத்தியது . குறிப்பாக கடந்த 2-ந் தேதி அதிக பட்சமாக 108 டிகிரி வெயில் கொளுத்தியது. இதனால் பொது மக்கள் வெளியில் நடமாட முடியாமல் வீடுகளில் முடங்கினர்.

    இந்த நிலையில் அக்னி நட்சத்திரம் நேற்று தொடங்கியது. இதனால் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என்று பொது மக்கள் அச்சத்தில் இருந்தனர். ஆனால் அதற்கு மாறாக வெயிலின் தாக்கம் சற்று குறைந்து 104.9 டிகிரியாக பதிவானது. மேலும் வானம் மேக மூட்டத்துடன் காட்சி அளித்ததுடன் பல பகுதிகளில் லேசான மழை பெய்தது.

    ஏற்காட்டில் நேற்று காலை வெயிலின் தாக்கம் இருந்த நிலையில் மதியம் 1 மணியளவில் தொடங்கிய மழை 2.40 மணி வைர இடியுடன் கொட்டி தீர்த்தது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். கல்வராயன் மலை, கருமந்துறை பகுதியில் மதியம் 1 மணி நேரத்திற்கும் மேலாக கன மழை பெய்தது. இதே போல சேலம் வலசையூர், சுக்கம்பட்டி, குப்பனூர் பகுதிகளிலும் மழை பெய்தது.

    சேலம் மாநகரில் மதியம் 2 மணி முதல் வெயிலின் தாக்கம் குறைந்தது. குளிர்ந்த காற்று வீசியது. மழை வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒரு சில இடங்களில் மட்டும் லேசான மழை பெய்தது.

    மேட்டூரை அடுத்த கொளத்தூர் லக்கம்பட்டி, நீதிபுரம், காரைக்காடு, கண்ணாமூச்சு ஆகிய பகுதிகளில் நேற்று மாலை 4.30 மணிக்கு இடி, மின்னலுட்தன் தொடங்கிய மழை அரை மணி நேரத்திற்கும் மேலாக சூறை காற்றுடன் கன மழையாக கொட்டியது. இந்த காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் கொளத்தூர் அருகே உள்ள தண்டா, நீதிபுரம், லக்கம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 7ஆயிரம் வாழைகள் முறிந்து சேதமானது.

    இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர். இதற்கிடையே மேட்டூர் தொகுதி எம்.எல்.ஏ. சதாசிவம் அங்கு நேரில் சென்று பார்வையிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழக அரசு நிதி உதவி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

    சேலம் மாவட்டத்தில் அதிக பட்சமாக மேட்டூரில் 19 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. ஏற்காடு 14.8, ஆனைமடுவு 8, பெத்தநாயக்கன்பாளையம் 6, காடையாம்பட்டி 4.8, கரியகோவில் 2, சேலம் 0.2 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 54.80 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. இன்று காலையும் வானம் மேக மூட்டத்துடன் காட்சி அளித்தது.

    • ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் சூறாவளி காற்றில் முறிந்து சேதமாகின.
    • நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர் பகுதியிலும் பரவலாக மழை பெய்தது.

    மேட்டுப்பாளையம்:

    மேட்டுப்பாளையம் சிறுமுகை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான லிங்காபுரம், காந்தையூர் மற்றும் பவானிசாகர் நீர்த்தேக்க பகுதிகளில் உள்ள விவசாயிகள் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் கதளி, நேந்திரன், பூவன், செவ்வாழை உள்ளிட்ட பல்வேறு ரகங்களில் வாழைப்பயிர்களை சாகுபடி செய்து உள்ளனர்.

    நேற்று முதல் கத்தரி வெயில் தொடங்க உள்ள நிலையில் அங்கு காலை முதலே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.

    தொடர்ந்து மாலை 4 மணியளவில் மேட்டுப்பாளையம், சிறுமுகை, காந்தையூர், லிங்காபுரம், காரமடை, வெள்ளியங்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. அதிலும் குறிப்பாக சிறுமுகை சுற்றுவட்டார பகுதிகளில் சூறாவளி காற்றுடன் பெய்த மழை காரணமாக அந்த பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் சூறாவளி காற்றில் முறிந்து சேதமாகின.

    இதுகுறித்து லிங்காபுரம் விவசாயி பிரகாஷ் என்பவர் கூறியதாவது:- எங்கள் பகுதியில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் வாட்டி வதைத்து வந்ததால் சிறுமுனை, லிங்காபுரம், காந்தையூர் மற்றும் பவானிசாகர் நீர்த்தேக்க பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் வாழைப்பயிர்களை விளைவித்து வந்தோம்.

    இந்த நிலையில் சூறாவளி காற்றுடன் பெய்த மழை காரணமாக எங்களில் பகுதிகளில் மட்டும் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டு இருந்த வாழைகள் முறிந்து சேதமாகி உள்ளன. எனவே தமிழக அரசு வாழை விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதேபோல தொண்டாமுத்தூர் உள்ளிட்ட மாவட்டத்தில் பல பகுதிகளில் சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர் பகுதியிலும் பரவலாக மழை பெய்தது.

    அதிக வெப்ப தாக்குதலால் 4 வகையான பாதிப்புகள் ஏற்படும்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக கோடை வெப்பம் வாட்டி வருகிறது. கடந்த ஏப்ரல் மாதத்தில் 27 நாட்கள் ஈரோட்டில் 104 டிகிரி வெப்பம் பதிவாகி புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

    இந்நிலையில் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை உட்பட 8 மருத்துவமனைகளில் சிறப்பு வார்டு தொடங்கப்பட்டுள்ளது. குளிர்சாதன வசதி கொண்ட இந்த வார்டில் வெப்ப அலர்ஜியால் பாதிக்கப்பட்டு இங்கு சிகிச்சைக்கு வருபவர்களுக்கு முதலுதவி அளிக்க செவிலியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இதுகுறித்து ஈரோடு அரசு மருத்துவமனை உறை விட மருத்துவ அதிகாரி கூறியதாவது:-

    அதிக வெப்ப தாக்குதலால் 4 வகையான பாதிப்புகள் ஏற்படும். வெப்ப எரிச்சலால் புண் ஏற்படும், தோல் சிவப்பாக மாறும், கால்களில் நரம்பு இழுத்துக் கொள்ளும், நீர்ச்சத்து குறைவால் வயிற்று வலி ஏற்படும், கோடை காலத்தில் உடலில் நீர் சத்து குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இதற்காக அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் உப்பு சர்க்கரை கரைசல் வழங்கப்படுகின்றனர். வெப்ப அலற்ஜி அல்லது வெப்ப பக்கவாத நோய் பாதிப்பு ஏற்படும் போது உடனடியாக உடல் வெப்பத்தை குறைக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்க வேண்டும்.

    பாதிக்கப்பட்டவர்களின் கழுத்து பகுதி, முழங்கால் மடிப்பு உள்ளிட்ட பகுதிகளில் ஐஸ்கட்டிகளை கொண்டு ஒத்தடம் கொடுக்க வேண்டும், உடலுக்கு நீர்ச்சத்து கிடைக்க குளுக்கோஸ், உப்பு கரைசல் நீரை வழங்க வேண்டும் என்று கூறினார்.

    • இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்தே 100 டிகிரியை தாண்டி வெப்ப நிலை பதிவாகி வருகிறது.
    • அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தின் உள் மாவட்டங்களில் வெப்ப அலை இயல்பை விட அதிகமாக இருக்கும்.

    சென்னை:

    'அக்னி நட்சத்திரம்' என்று கூறப்படும் கத்திரி வெயில் இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது. பொதுவாகவே கத்திரி வெயிலின் போதுதான் வெயில் 100 டிகிரியை தாண்டி பதிவாகும். ஆனால், இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்தே 100 டிகிரியை தாண்டி வெப்ப நிலை பதிவாகி வருகிறது. இன்று தொடங்கும் கத்திரி வெயிலின் தாக்கம் வரும் 28-ந் தேதி வரை நீடிக்கும். அதாவது, 25 நாட்கள் கத்திரி வெயில் வாட்டி வதைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தின் உள் மாவட்டங்களில் வெப்ப அலை இயல்பை விட அதிகமாக இருக்கும் எனவும், சில மாவட்டங்களில் கோடை மழையும் பெய்யும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    தமிழகத்தில் கத்திரி வெயில் சுட்டெரித்தாலும் அவ்வப்போது மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், கோடை மழையை பொறுத்தவரை கடந்த 24 மணி நேரத்தில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் தலா 1 செ.மீ. கோடை மழை பெய்துள்ளது. 

    அடுத்த 5 நாட்களுக்கு உள் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மழையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கோடை மழை பெய்யும். இதேபோல, மே 7-ந் தேதி நீலகிரி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

     

    • வெயில் வறுத்தெடுப்பதால் மக்கள் வெளியே வர முடியாமல் வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
    • குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு பொதுமக்கள் இடையே நிம்மதியடைந்துள்ளனர்.

    சென்னை:

    தமிழகத்தில் வரலாறு காணாத வகையில் வெயில் சுட்டெரித்து வருகிறது. குறிப்பாக வட தமிழக உள் மாவட்டங்களில் வெயில் வறுத்தெடுப்பதால் மக்கள் வெளியே வர முடியாமல் வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். அதிகபட்சமாக 110 டிகிரி வரை வெப்பத்தின் தாக்கம் இருந்து வருகிறது. இதனால், மக்கள் மிகுந்த சிரம்மத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

    இந்நிலையில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் உள்ள 200 வார்டுகளில் 85 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சென்னை குடிநீர் வாரியம் குடிநீரை விநியோகித்து வரும் நிலையில், கோடை காலத்தில் வறட்சி நிலவும் என்பதால் போதுமான குடிநீர் விநியோகம் செய்யப்படுமா என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்தது.

    இந்நிலையில், பெருநகர சென்னை மாநகருக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் தற்போதைய நீர் இருப்பை கருத்தில் கொண்டு சென்னை குடிநீர் வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    பொதுமக்களின் குடிநீர் தேவைக்கு ஏற்ப மாநகரின் கீழ்ப்பாக்கம், புழல், செம்பரம்பாக்கம், வீராணம், சூரப்பட்டு ஆகிய 5 குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மூலம் நீர் சுத்திகரிக்கப்படுகிறது.

    சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் 111 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் மூலம் விநியோகம் செய்யப்படும் நிலையில், சென்னையில் அக்டோபர் மாதம் வரை எவ்வித தங்கு தடையுமின்றி குடிநீர் வழங்கப்படும் என குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு பொதுமக்கள் இடையே நிம்மதியடைந்துள்ளனர். ஆனால் அதே நேரத்தில் சென்னை தவிர தமிழகத்தின் பிற மாவட்டங்களில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

    ×