search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Summer heat"

    • நேற்று முன்தினம் ஈரோட்டில் 109 டிகிரி வெயில் பதிவானது.
    • ஆந்திர மாநிலம் அனந்தபூரில் 110.3 டிகிரி, ஒடிசா மாநிலத்தில் 109.04 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி உள்ளது.

    சேலம்:

    இந்தியாவில் பல்வேறு இடங்களில் வெப்ப அலை வீசி வருகிறது. ஏப்ரல் மாதம் தொடங்கியதில் இருந்து வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்தது.

    வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரிக்கும் என்பதால் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறும், அதிகளவில் தண்ணீர் பருகுமாறும் அறிவுறுத்தப்பட்டனர்.

    தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் இயல்பை விட 2 டிகிரி முதல் 5 டிகிரி வரை கூடுதலாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இதன்படி கடந்த 19-ந் தேதி ஈரோட்டில் புதிய உச்சமாக 109 டிகிரி வெயில் கொளுத்தியது. நேற்று முன்தினம் ஈரோட்டில் 109 டிகிரி வெயில் பதிவானது.

    இந்நிலையில் அதிகபட்ச வெப்பநிலையில் இந்தியாவிலேயே 3-வது இடத்தை சேலம் பிடித்துள்ளது. நேற்று சேலத்தில் 108.14 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

    நேற்று ஆந்திர மாநிலம் அனந்தபூரில் 110.3 டிகிரி, ஒடிசா மாநிலத்தில் 109.04 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி உள்ளது.

    நேற்று முன்தினம் ஈரோட்டில் அதிக வெப்பம் பதிவான நிலையில், நேற்று சேலத்தில் அதிக வெப்பநிலை பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • சிறுவர்கள், இளைஞர்கள் வெயிலில் செல்லும்போது சரும நோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
    • பஸ், ரெயில் பயணம் மேற்கொள்பவர்கள் வெளியில் உணவு சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

    சென்னை:

    தமிழகத்தில் கோடை வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாத்து கொள்ள சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையின் பொது மருத்துவத்துறை தலைவர் டாக்டர் எஸ்.சந்திரசேகர் கூறியதாவது:-

    தமிழகத்தில் கோடை வெயில் தாக்கம் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை இருப்பது வழக்கம். கால சூழல் மாற்றத்தால் வெப்பத்தின் தாக்கம் தற்போது அதிகரித்து உள்ளது. இயல்பைவிட அதிகமாக வெப்பம் தாக்குதலுக்கு நாம் ஆளாகும்போது, உடலில் சோர்வு, தலை சுற்றல், தலைவலி, கால்வலி போன்றவை ஏற்படும்.

    வெயில் அதிகமாக முதியவர்கள் மற்றும் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளவர்களை எளிதாக தாக்கக்கூடும். உஷ்ணம் தாங்க முடியாமல் அவர்கள் சுயநினைவு இழக்க நேரிடும். உடலில் நீர் சத்து குறைந்து வலிப்பு ஏற்படக்கூடும்.

    சிலருக்கு வெப்ப பக்கவாதம் (ஹீட் ஸ்டோக்) பாதிப்பும் உண்டாகலாம். இந்த பாதிப்பில் இருந்து தற்காத்து கொள்ள முதியவர்கள், இணை நோய் உள்ளவர்கள் காலை 11 மணி முதல் 3 மணி வரை வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும்.

    தளர்வான ஆடைகள், பருத்தி உடைகளை அணிவதில் இருந்து தப்பிக்கலாம். வீட்டை விட்டு வெளியே செல்லும்போது குடை பிடித்தும், தொப்பி அணிந்தும் செல்லலாம். கட்டாயம் தண்ணீர் பாட்டில் கையில் வைத்திருக்க வேண்டும்.

    தண்ணீரை அடிக்கடி பருக வேண்டும். இதன் மூலம் நா வறட்சி, படபடப்பு, சோர்வு, உடல் அசதி ஏற்படுவதை தவிர்க்கலாம்.

    வீட்டிற்குள் இருந்தாலும் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். மோர், இளநீர், பழங்கள் போன்றவற்றை அருந்த வேண்டும். குளிரூட்டப்பட்ட ஜூஸ் பழ, வகைகளை சாப்பிடக்கூடாது.

    சிறுவர்கள், இளைஞர்கள் வெயிலில் செல்லும்போது சரும நோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. முகம் கருப்பாக மாறிவிடும். அதனால் வெளியே செல்லும்போது சன் ஸ்கிரீன் கிரீம் தடவி செல்ல வேண்டும். கோடை காலத்தில் ஏற்படக்கூடிய வியர்வை கட்டி, வேர்க்குரு போன்றவற்றை தடுக்க தினமும் 2 முறை குளிக்க வேண்டும்.

    வேலை நிமித்தமாக வெளியில் செல்பவர்கள் வெளியில் தண்ணீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும். ஓட்டல் உணவு நல்லதல்ல. பழைய கஞ்சி உடலுக்கு நல்லது. தற்போதைய சீசன் பழங்களை பருகலாம். தர்பூசணி, தயிர் சாதம், மோர் போன்றவற்றை அதிகம் எடுத்துக் கொள்ளலாம்.

    பஸ், ரெயில் பயணம் மேற்கொள்பவர்கள் வெளியில் உணவு சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இது வயிற்றுபோக்கு, வயிற்று வலி போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். வெப்ப பக்கவாதம் சிலருக்கு உயிர் இழப்பையும் ஏற்படுத்தி விடும். எனவே வயதானவர்கள், நோய் பாதிப்பு உள்ளவர்கள் வெயிலில் செல்லாமல் வீட்டில் இருப்பது நல்லது.

    வெப்ப தாக்குதலால் ஏற்படும் பாதிப்புக்கு அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளிக்க முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.
    • வரும் 25-ந்தேதி தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    வட தமிழக உள் மாவட்டங்களில் இன்றும் நாளையும் வெப்ப அலை வீசக்கூடும்.

    தமிழக உள் மாவட்டங்களில் 27-ந்தேதி வரை வெப்பநிலை இயல்பைவிட 2-4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.

    சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஈரோட்டில் 43 டிகிரி செல்சியஸ், சேலத்தில் 41.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி உள்ளது.

    23, 24-ந்தேதிகளில் தென் தமிழக மாவட்டங்கள், வட தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

    வரும் 25-ந்தேதி தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கேரளாவில் 10 மாவட்டங்களுக்கு வருகிற 25-ந்தேதி வரை இந்திய வானிலை ஆய்வு மையம் உயர் வெப்பநிலை எச்சரிக்கை மற்றும் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
    • கடந்த 19-ந் தேதி ஈரோட்டில் புதிய உச்சமாக 109 டிகிரி வெயில் கொளுத்தியது.

    ஈரோடு:

    இந்தியாவில் பல்வேறு இடங்களில் வெப்ப அலை வீசி வருகிறது. ஏப்ரல் மாதம் தொடங்கியதில் இருந்து வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்தது.

    வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரிக்கும் என்பதால் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறும், அதிகளவில் தண்ணீர் பருகுமாறும் அறிவுறுத்தப்பட்டனர்.

    கேரளாவில் 10 மாவட்டங்களுக்கு வருகிற 25-ந்தேதி வரை இந்திய வானிலை ஆய்வு மையம் உயர் வெப்பநிலை எச்சரிக்கை மற்றும் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் இயல்பை விட 2 டிகிரி முதல் 5 டிகிரி வரை கூடுதலாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதன்படி கடந்த 19-ந் தேதி ஈரோட்டில் புதிய உச்சமாக 109 டிகிரி வெயில் கொளுத்தியது.

    இதைத்தொடர்ந்து நேற்றும் 2-வது முறையாக ஈரோட்டில் 109 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது.

    இந்நிலையில் அதிகபட்ச வெப்பநிலையில் இந்தியாவிலேயே 3வது இடத்தை ஈரோடு பிடித்துள்ளது. நேற்று ஈரோட்டில் 109.40 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

    நேற்று ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் மற்றும் ஆந்திர மாநிலம் கடப்பாவில் 110.84 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி முதல் 2 இடத்தை பிடித்துள்ளது.

    • கடந்த 20 நாட்களாக ஈரோடு மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் திட்டத்தில் இருந்து வருகிறது.
    • முதியவர்களுக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 மாதத்திற்கும் மேலாக வெயிலின் தாக்கம் இருந்து வருகிறது. ஒவ்வொரு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. காலை 7 மணிக்கு தொடங்கும் வெயிலின் தாக்கம் மாலை 6 மணி வரை நீடித்து வருகிறது.

    குறிப்பாக காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை வெயிலின் தாக்கம் உச்சத்தில் இருக்கிறது. இந்த நேரத்தில் முடிந்த அளவு கர்ப்பிணிகள், முதியவர்கள் வெளியே வர வேண்டாம் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

    கடந்த 20 நாட்களாக ஈரோடு மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் திட்டத்தில் இருந்து வருகிறது. முதலில் 104 டிகிரி, அதன் பின்னர் 107 டிகிரி வரை வெயில் பதிவானது. இதனால் பொதுமக்கள், குழந்தைகள், முதியவர்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.

    தொடர்ந்து இயல்பை விட 2 டிகிரி முதல் 5 டிகிரி வரை வெப்பம் கூடுதலாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதன்படி கடந்த 19-ந் தேதி ஈரோட்டில் புதிய உச்சமாக 109 டிகிரி வெயில் கொளுத்தியது. தமிழகத்தில் வேறு எங்கும் பதிவாகாத அளவு இது.

    இதைத்தொடர்ந்து நேற்றும் 2-வது முறையாக ஈரோட்டில் 109 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது. அனல் காற்றுடன் வெயில் வாட்டி வதைத்து வருவதால் குழந்தைகளுக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகிறது.

    இதேப்போல் முதியவர்களுக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது. வீட்டை விட்டு வெளியே செல்லும் பெண்கள் குடை, முகத்தில் துணியால் மூடிக்கொண்டு வெளியே சென்று வருகின்றனர். பகல் 11 மணி முதல் மாலை 4 மணி வரை முக்கிய சாலைகள் அனைத்தும் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

    வீட்டில் 24 மணி நேரமும் மின்விசிறி இயங்கினாலும் வெப்பம் காரணமாக புழுக்கம் நிலவி வருகிறது. இரவு நேரங்களில் வீட்டுக்குள் வெப்பம் இறங்குவதால் ஈரோடு மக்கள் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தூக்கத்தை தொலைத்து திணறி வருகின்றனர்.

    வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் குளிர்பானங்கள், கரும்பு சாறு, இளநீர், மோர், நுங்கு, தர்பூசணி ஆகியவற்றை விரும்பி சாப்பிட்டு வருகின்றனர். இன்னும் இயல்பைவிட வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் ஈரோடு மக்கள் அச்சமடைந்துள்ளனர். 

    • சுட்டெரிக்கும் வெயில் கொளுத்தி வருவதால் குடிநீர் பயன்பாடு அதிகரித்து உள்ளது.
    • ஆலோசனையில் 12 மாவட்ட கலெக்டர்கள் பங்கேற்க உள்ளனர்.

    சென்னை:

    கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் குடிநீர் வழங்கும் ஏரிகளில் தண்ணீர் குறைந்து கொண்டே வந்தாலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என்று குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

    சுட்டெரிக்கும் வெயில் கொளுத்தி வருவதால் குடிநீர் பயன்பாடு அதிகரித்து உள்ளது. வீடுகளுக்கு குழாய் மூலமும் லாரிகள் வழியாகவும் தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது. குழாய் மூலம் தண்ணீர் கொடுக்க முடியாத பகுதிகளில் குடிநீர் தொட்டிகளில் தண்ணீர் லாரிகள் மூலம் கொண்டு சென்று நிரப்பி வருகிறது.

    இந்நிலையில் கோடை கால குடிநீர் பற்றாக்குறையை சமாளிப்பது தொடர்பாக தலைமைச்செயலாளர் சிவதாஸ் மீனா தலைமையில் இன்று தலைமைச்செயலகத்தில் பிற்பகல் 3 மணிக்கு ஆலோசனை நடைபெற உள்ளது. ஆலோசனையில் 12 மாவட்ட கலெக்டர்கள் பங்கேற்க உள்ளனர்.

    கோடை காலத்தில் ஏற்படும் குடிநீர் பற்றாக்குறையை சமாளித்து தடையின்றி குடிநீர் விநியோகிப்பது தொடர்பாக ஆலோசிக்கப்படும் எனத் தகவல் வெளியாகி உள்ளது.

    • இந்தியாவில் பல்வேறு இடங்களில் வெப்ப அலை வீசி வருகிறது
    • இந்த வெப்ப சூழலில் பொதுமக்களும் கவனத்துடன் இருக்க வேண்டும் என்று அவர் கேட்டு கொண்டார்

    இந்தியாவில் பல்வேறு இடங்களில் வெப்ப அலை வீசி வருகிறது. இதனால், மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இந்நிலையில் அதிக வெப்ப தாக்கத்தினால் தூர்தர்சனின் கொல்கத்தா பிரிவில் செய்தி வாசித்து கொண்டிருந்த பெண் செய்தி வாசிப்பாளர் லோபமுத்ரா சின்ஹா ஸ்டுடியோவிலேயே மயங்கி விழுந்துள்ளார்.

    இது தொடர்பாக லோபமுத்ரா விளக்கம் அளித்துள்ளார். அதில், "செய்தி வாசிக்கும் அறையில் உள்ள ஏர் கண்டிஷனர் சரியாக வேலை செய்யவில்லை.இதனால், ஸ்டுடியோவில் அதிக வெப்பம் காணப்பட்டது. நான் தண்ணீர் பாட்டிலும் எடுத்து வரவில்லை. என்னுடைய 21 வருட பணி அனுபவத்தில், 15 நிமிடங்கள் அல்லது அரை மணிநேர ஒளிபரப்பில், எனக்கு தண்ணீர் குடிக்க வேண்டும் என்று தோன்றியதே இல்லை.

    ஆனால், இந்த முறை செய்தி வாசித்து முடிக்க 15 நிமிடங்கள் மீதமிருக்கும்போதே, வறட்சியாக உணர்ந்தேன். டி.வியில் வேறு செய்தி ஓடியபோது, மேலாளரிடம் தண்ணீர் பாட்டில் தரும்படி கேட்டேன். தண்ணீர் குடித்து முடித்ததும் மீதமுள்ள செய்தியை வாசிக்க வேண்டி இருந்தது.

    வெப்ப அலை செய்தியை வாசித்து கொண்டிருந்தபோது, பேச முடியாமல் திணறினேன். பேசி முடித்து விடலாம் என முயன்றேன். டெலிபிராம்ப்டரும் மங்கிப்போனது. எனக்கும் இருண்டதுபோல் தோன்றியது. அப்போது, அப்படியே மயங்கி நாற்காலியில் சரிந்து விட்டேன்" என்று அவர் தெரிவித்தார்.

    அப்போது சிலர் ஓடி வந்து அவருடைய முகத்தில் தண்ணீர் தெளித்து மீண்டும் நினைவு திரும்ப உதவினர். இந்த வெப்ப சூழலில் பொதுமக்களும் கவனத்துடன் இருக்க வேண்டும் என்று அவர் கேட்டு கொண்டார்.

    • கடும் வெயில் காரணமாக இருசக்கர வாகனம் முழுவதும் தீ வேகமாக பரவியது.
    • சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் எரிந்துகொண்டிருந்த இருசக்கர வாகனம் மீது நீரை ஊற்றி தீயை அணைத்தனர்.

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூரை சேர்ந்த விஷ்ணுவர்தன் கல்லூரியில் இருந்து இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே வந்தபோது அவர் ஓட்டி வந்த பைக்கில் திடீரென தீப்பற்றியது.

    இருசக்கர வாகனத்தில் இருந்து விஷ்ணுவர்தன் உடனடியாக இறங்கினார். கடும் வெயில் காரணமாக பைக் முழுவதும் தீ வேகமாக பரவியது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் எரிந்துகொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது நீரை ஊற்றி தீயை அணைத்தனர்.

    திருப்பத்தூரில் கடும் வெயில் காரணமாக இருசக்கர வாகனம் தீப்பற்றி எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தலைநகர் டெல்லியில், அடுத்த 2-3 நாட்களில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியசாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    • பீகாரில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை நிலவும்.

    புதுடெல்லி:

    கோடை காலம் உக்கிரமடைந்துள்ள நிலையில், நாடு முழுவதும் வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பல நகரங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தி வருகிறது.

    மதிய நேரங்களில் அனல் காற்றும் வீசுவதால் குழந்தைகள், முதியோர்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் மேற்கு வங்காளம், ஒடிசா மாநிலங்களில் வெப்ப அலை வீசும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இதுகுறித்து இந்திய வானிலை மைய மூத்த விஞ்ஞானி நரேஷ் குமார் கூறியதாவது:-

    தலைநகர் டெல்லியில், அடுத்த 2-3 நாட்களில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியசாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 1-2 டிகிரி வரை அதிகரிக்கக்கூடும். மேலும், நாளை லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. தற்போது, கிழக்கு இந்தியா பகுதிகளில் வெப்பநிலை 44 டிகிரி செல்சியசை எட்டியுள்ளது. அடுத்த 4-5 நாட்களில் வெப்பநிலை மேலும் அதிகரிக்கும்.

    வெயில் அதிகரித்து வருவதால் மேற்கு வங்கத்தில் சிவப்பு எச்சரிக்கையும், ஒடிசாவில் ஆரஞ்சு எச்சரிக்கையும் விடப்பட்டது. ஒடிசாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகபட்ச வெப்பநிலை 44.6 டிகிரி செல்சியசாக பதிவானது, மாநிலத்தில் ஆரஞ்சு எச்சரிக்கை அடுத்த 4 நாட்களுக்கு தொடரும். இன்று (திங்கட்கிழமை) கிழக்கு மாநிலங்களில் வெப்பநிலை சற்று குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பீகாரில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை நிலவும். ஜார்க்கண்ட் மாநிலத்தில் வெப்ப அலைக்கான சாத்தியம் உள்ளது. நாட்டின் தென் மாநிலங்களில் தற்போது வெப்ப அலைக்கான சூழல் இல்லை. மதிய நேரங்களில் பொதுமக்கள் வெளியில் நடமாடாமல் வீட்டில் இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ஏப்.24-ந்தேதி வரை காற்றின் ஈரப்பதம் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் பிற்பகலில் 30-50% ஆக இருக்கக்கூடும்.
    • தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக ஏப்.23 வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி எடுத்து வருகிறது. பகல் நேரங்களில் வெளியில் தலை காட்ட முடியாத அளவுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாகவே உள்ளது.

    மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் வியர்வை மழையில் நனைந்தபடியே கொளுத்தும் வெயிலில் பயணம் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இப்படி பகலில் அதிகரித்து காணப்படும் வெயிலால் இரவு நேரத்திலும் புழுக்கம் அதிகரித்து அனல் காற்றே வீசுகிறது.

    இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    வட தமிழக உள் மாவட்டங்களின் ஒரு சில இடங்களில், அடுத்த 24 மணி நேரத்திற்கு அதிகபட்ச வெப்பநிலை 3-5 செல்சியஸ் வரை இயல்பை விட அதிகரிக்க வாய்ப்புள்ளது.

    ஏப்.21-ந்தேதி முதல் ஏப்.24-ந்தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை சற்றே குறைந்து ஒருசில இடங்களில் இயல்பை விட 2-3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.

    ஏப்.24-ந்தேதி வரை காற்றின் ஈரப்பதம் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் பிற்பகலில் 30-50% ஆக இருக்கக்கூடும்.

    மற்ற நேரங்களில் 40-75% ஆகவும், கடலோரப் பகுதிகளில் 50-80% ஆகவும் இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை, அதிக ஈரப்பதம் இருக்கும்பொழுது ஓரிரு இடங்களில் அசவுகரியம் ஏற்படலாம்.

    தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக ஏப்.23 வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

    அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37-38 டிகிரி செல்சியசை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியசை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
    • தமிழகத்தில் ஒரு சில இடங்களில் வருகிற 21-ந்தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

    * தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மாலை 4 மணிக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    * நாகை, புதுக்கோட்டை, தஞ்சை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரியில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    * வருகிற 17-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    * தமிழகத்தில் ஒரு சில இடங்களில் வருகிற 21-ந்தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. நாளை முதல் வருகிற 21-ந்தேதி வரை சில இடங்களில் மிதமான மழை பெய்யும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அடுத்த 3 நாட்களுக்கு வெப்பத்தின் தாக்குதலை சமாளிக்க காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியில் செல்வதை தவிர்ப்பது நல்லது.
    • தமிழகத்தில் தற்போது கோடை மழை ஆங்காங்கே பெய்து வருகிறது.

    சென்னை:

    தமிழகத்தில் கோடை வெயில் உக்கிரம் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு தொடங்கியது. ஈரோடு பகுதியில் மிக அதிகமாக வெப்பத்தின் தாக்கம் பதிவாகி வந்தது.

    இந்த நிலையில் கடந்த வாரம் தமிழகம் முழுவதும் வெப்ப நிலை அதிகரித்தது.

    10-க்கும் மேற்பட்ட நகரங்களில் சராசரியாக 106 டிகிரி வரை வெயில் அடித்தது. கடந்த 2 நாட்களாக வெப்பத்தின் தாக்கம் சற்று குறைந்தது. நேற்று ஈரோட்டில் அதிகப்பட்சமாக 102.92 டிகிரி வெப்பம் பதிவானது.

    இந்த நிலையில் அடுத்த 3 நாட்களுக்கு அதாவது நாளை (செவ்வாய்க்கிழமை), முதல் வியாழக்கிழமை வரை வெயில் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு நிறுவனம் கூறி உள்ளது. இந்த 3 நாட்களும் கூடுதலாக 5 டிகிரி வெப்பம் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும் என்று கூறப்பட்டு உள்ளது.

    எனவே அடுத்த 3 நாட்களுக்கு வெப்பத்தின் தாக்குதலை சமாளிக்க காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியில் செல்வதை தவிர்ப்பது நல்லது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதிக வெயிலில் சென்று விட்டு உடனடியாக குளிர்பானம் குடிப்பதை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    இதற்கிடையே அடுத்த மாதம் (மே) 4-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை 24 நாட்களுக்கு அக்னி நட்சத்திரம் தொடங்க உள்ளது. இந்த 24 நாட்களும் அதிகபட்ச வெயில் தாக்கம் இருக்கும். எனவே அதற்கு ஏற்ப வெளியூர் பயணங்களை அமைப்பது நல்லது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் தமிழகத்தில் தற்போது கோடை மழையும் ஆங்காங்கே பெய்து வருகிறது. நேற்று தென் மாவட்டங்களில் பல பகுதிகளில் கோடை மழை பெய்தது. வடதமிழகம், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் பரவலாக கோடை மழை காணப்பட்டது.

    விருதுநகர் மாவட்டம் கோவிலங்குளம் பகுதியில் நேற்று அதிகபட்சமாக 40 மி.மீ. கோடை மழை பெய்து இருந்தது. வருகிற 20-ந்தேதி வரை தமிழகத்தில் லேசானது முதல் மிதமான அளவுக்கு ஆங்காங்கே கோடை மழை பெய்வதற்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

    சிவகங்கை, ராமநாதபுரம், நெல்லை, குமரி மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    ×