search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மேற்கு வங்காளம், ஒடிசாவில் வெப்ப அலை வீசுகிறது: ரெட் அலர்ட் எச்சரிக்கை
    X

    மேற்கு வங்காளம், ஒடிசாவில் வெப்ப அலை வீசுகிறது: ரெட் அலர்ட் எச்சரிக்கை

    • தலைநகர் டெல்லியில், அடுத்த 2-3 நாட்களில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியசாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    • பீகாரில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை நிலவும்.

    புதுடெல்லி:

    கோடை காலம் உக்கிரமடைந்துள்ள நிலையில், நாடு முழுவதும் வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பல நகரங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தி வருகிறது.

    மதிய நேரங்களில் அனல் காற்றும் வீசுவதால் குழந்தைகள், முதியோர்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் மேற்கு வங்காளம், ஒடிசா மாநிலங்களில் வெப்ப அலை வீசும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இதுகுறித்து இந்திய வானிலை மைய மூத்த விஞ்ஞானி நரேஷ் குமார் கூறியதாவது:-

    தலைநகர் டெல்லியில், அடுத்த 2-3 நாட்களில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியசாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 1-2 டிகிரி வரை அதிகரிக்கக்கூடும். மேலும், நாளை லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. தற்போது, கிழக்கு இந்தியா பகுதிகளில் வெப்பநிலை 44 டிகிரி செல்சியசை எட்டியுள்ளது. அடுத்த 4-5 நாட்களில் வெப்பநிலை மேலும் அதிகரிக்கும்.

    வெயில் அதிகரித்து வருவதால் மேற்கு வங்கத்தில் சிவப்பு எச்சரிக்கையும், ஒடிசாவில் ஆரஞ்சு எச்சரிக்கையும் விடப்பட்டது. ஒடிசாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகபட்ச வெப்பநிலை 44.6 டிகிரி செல்சியசாக பதிவானது, மாநிலத்தில் ஆரஞ்சு எச்சரிக்கை அடுத்த 4 நாட்களுக்கு தொடரும். இன்று (திங்கட்கிழமை) கிழக்கு மாநிலங்களில் வெப்பநிலை சற்று குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பீகாரில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை நிலவும். ஜார்க்கண்ட் மாநிலத்தில் வெப்ப அலைக்கான சாத்தியம் உள்ளது. நாட்டின் தென் மாநிலங்களில் தற்போது வெப்ப அலைக்கான சூழல் இல்லை. மதிய நேரங்களில் பொதுமக்கள் வெளியில் நடமாடாமல் வீட்டில் இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×