search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாழைகள் நாசம்"

    திருவட்டார் பகுதியில் பலத்த காற்றுடன் பெய்த மழை காரணமாக அவ்வை ஏலாக்கரை பகுதியில் வாழைகள் ஒடிந்து விழுந்து நாசமானது.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் இந்த ஆண்டு கோடை காலம் தொடங்கும் முன்பே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் பகல் நேரங்களில் பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாத அளவிற்கு அனல் காற்று வீசியது.

    இந்த நிலையில் கோடை காலமும் தொடங்கியதால் வெயில் சுட்டெரிக்க தொடங்கியது. கடந்த 18-ந்தேதி ஓட்டுப்பதிவின்போதும் வெயில் அதிகமாக இருந்ததால் வாக்காளர்கள் காலையிலேயே ஓட்டுச்சாவடிகளுக்கு சென்று ஓட்டுப் போட்டனர்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக குமரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. குமரியின் மேற்கு மாவட்டத்தில் தொடங்கிய மழை மாவட்டம் முழுவதும் பெய்ததால் பொதுமக்கள் வெயிலின் கொடுமையில் இருந்து தப்பித்தனர்.

    தற்போது கன்னியாகுமரி முதல் லட்சத்தீவு வரையிலான வளிமண்டலத்தில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இதன் காரணமாக குமரி மாவட்டத் தில் அதிக மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட் களாக நீடிக்கும் இந்த மழை காரணமாக அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

    நேற்று குலசேகரம், திருவட்டார் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக திற்பரப்பு அருவியில் அதிக அளவு தண்ணீர் கொட்டுகிறது. தற்போது விடுமுறை காலம் என்பதால் அதிக அளவு சுற்றுலா பயணிகள் அங்கு சென்று நீராடி மகிழ்கிறார்கள்.

    அதே போல பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதிகளிலும் மழை பெய்தது. அதேசமயம் நாகர்கோவில் நகரில் மழை பெய்யவில்லை. வானில் கருமேகங்கள் திரண்டு இடி இடித்தது. ஆனால் குளிர்ந்த காற்று மட்டுமே வீசி சற்று ஆறுதல் அளித்தது.

    திருவட்டார் பகுதியில் பலத்த காற்றுடன் பெய்த மழை காரணமாக அவ்வை ஏலாக்கரை பகுதியில் வாழைகள் ஒடிந்து விழுந்து நாசமானது. இந்த பகுதியில் மட்டும் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழைகள் சரிந்தன. இந்த வாழைகளில் பெரும்பாலானவை குலை தள்ளிய நிலையில் இருந்ததால் விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. வாழைகள் சரிந்ததால் விவசாயிகள் பெரிதும் கவலை அடைந்து உள்ளனர். தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    குமரி மாவட்டத்தில் நேற்று பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பேச்சிப்பாறை-20, பெருஞ்சாணி-9.2, சிற்றாறு 1-15.2, சிற்றாறு 2-6, அடையா மடை-4, கோழிப் போர்விளை-10, புத்தன் அணை-10.4, திற்பரப்பு-10.8.

    மழை காரணமாக குமரி மாவட்டத்தில் உள்ள அணைகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. இன்று காலை பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 2.10 அடியாக இருந்தது. அணைக்கு 140 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 62 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    பெருஞ்சாணி அணையில் 20.65 அடி தண்ணீர் உள்ளது. அணைக்கு 29 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்படவில்லை.




    களக்காடு அருகே காட்டுப்பன்றிகள் விளைநிலங்களுக்குள் புகுந்து வாழைகளை சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
    களக்காடு:

    நெல்லை மாவட்டம் களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் புலிகள் காப்பகம் அமைக்கப்பட்டு வனவிலங்குகள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இங்கு புலி, சிறுத்தை, கரடி, யானை, கடமான், செந்நாய் உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் உள்ளன. இவைகள் அடிக்கடி மலையடிவார கிராமங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.

    இந்நிலையில் களக்காடு அருகே உள்ள கக்கன்நகர் ஊருக்கு மேற்கு பகுதியில் ஏராளமான விளைநிலங்கள் உள்ளன. இதில் விவசாயிகள் வாழைகள் பயிர் செய்துள்ளனர். இப்பகுதியில் கடந்த ஒரு வாரமாக காட்டுப்பன்றிகள் நடமாட்டம் காணப்படுகிறது.

    இரவில் வனப்பகுதியில் இருந்து வெளிவரும் காட்டுப்பன்றிகள் கூட்டமாக விளைநிலங்களுக்குள் புகுந்து வாழைகளை சாய்த்து அவைகளை தின்று அட்டகாசம் செய்து வருகின்றன. இதனால் அப்பகுதியை சேர்ந்த விவசாயி அருண் என்பவருக்கு 200 வாழைகள் நாசம் அடைந்துள்ளன.

    நாசமான வாழைகள் 3 மாதமான வாழைகள் ஆகும். ரசகதலி, ஏத்தன் கதலி வகைகளை சேர்ந்த வாழைகள் ஆகும். விவசாயிகள் இரவில் காவல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் காட்டுப்பன்றிகள் விளைநிலங்களுக்குள் புகுந்து வாழைகளை சேதப்படுத்தி விடுகின்றன. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

    காட்டுப்பன்றிகள் மற்றும் வன விலங்குகள் விளைநிலங்களுக்குள் புகுவதை தடுக்கவும், பாதிக்கப்பட்ட விவசாயிக்கு இழப்பீடு வழங்கவும் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

    தற்போது களக்காடு மலையில் காட்டுப்பன்றிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எனவே அவைகளின் அட்டகாசமும் அதிகரித்து வருவதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர். இதனை தடுக்க காட்டுப்பன்றிகளை வனவிலங்குகள் பட்டியலில் இருந்து நீக்கம் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டுள்ளது.




    கோபி பகுதியில் சூறாவளி காற்றுடன் மழை பெய்ததையடுத்து ஓரிரு மாதங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள், 100-க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் சாய்ந்தன.
    கோபி:

    ஈரோடுமாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சூறாவளி காற்று, இடி-மின்னலுடன் மழை பெய்து வருகிறது.

    கோபி அருகே உள்ள நாகதேவன்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட வெள்ளிங்காட்டுப்புதூர் முள்ளங்கரை அய்யம்புதூர் செல்வபுரம்காலனி உள்பட பல பகுதிகளில் நேற்று கனமழை மற்றும் சூறாவளிக் காற்றும் வீசியது.

    இதனால் இன்னும் ஓரிரு மாதங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் 100-க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் சாய்ந்தது.

    கடந்த ஆண்டுகளில் போதிய தண்ணீர் இல்லாததினால் விவசாயம் செழிக்காத நிலையில் விவசாயிகள் பெரும் வேதனைக்குள்ளாகினர். அதனை ஈடுகட்டும் வகையில் இந்தாண்டு வாழைமஞ்சள் என பயிர் செய்து வாங்கியுள்ள கடன்களை அடைத்துவிடலாம் என்று எண்ணி இருந்தனர்.

    தற்போது அடித்த சூறாவளிக் காற்றினால் அந்த எண்ணமும் சிதைந்து விட்டதாகவும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மனதில் கொண்டு பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

    அதேபோல் செல்வபுரம் காலனியில் 60-க்கும் மேற்பட்ட வீடுகளில் மக்கள் வசித்து வருகின்றனர். இங்குஅடித்த சூறாவளிக்காற்றினால் வீடுகளின் மேற்கூரைகள் பெயர்ந்து அவை காற்றில் தூக்கிவீசப்பட்டது.

    இதில் மேற்க்கூரை ஓடுகள் மற்றும் சிமெண்ட் அட்டைகள் 500 அடி தூரத்திற்கும் மேல் தூக்கிவீசப்பட்டது. இதனால் அப்பகுதிமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மேலும் சூறாவளிக்காற்றில் மின்கம்பங்கள் சாய்ந்துமின் கம்பிகள் அறுந்ததால் நாகதேவன்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் இரவு முழுவதும் மின் தடை ஏற்பட்டது.

    இதனால் இரவு முழுவதும் மின்சாரம் இன்றியும் வீடுகளில் மேற்கூரை இன்றியும் தவித்துள்ளனர். தினக்கூலிக்கு செல்லும் தங்களது வீடுகள் சேதமடைந்துள்ளதை புதுப்பிக்க வீடுகளின் மேற்கூரைகளை இழந்துதவிக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



    ×