search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Review"

    அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய தேர்வு முறை பற்றிய மாணவர்களின் கோரிக்கைகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது என பல்கலைக்கழக பதிவாளர் அறிவித்துள்ளார். #AnnaUniversity #StudentsProtest
    சென்னை:

    சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் அரியர் முறைப்படி, குறிப்பிட்ட பாடத்தில் தேர்ச்சி அடையாதோர்களுக்கான தேர்வு, அடுத்த செமஸ்டரில் தேர்வினை எழுதலாம் என இருந்தது. 2017-ம் ஆண்டில் இருந்து அம்முறை மாற்றப்பட்டு, கிரெடிட் முறை அமல்படுத்தப்பட்டு தற்போது நடைமுறையில் உள்ளது.

    இதனால் மாணவ, மாணவிகளின் தேர்ச்சி வீதம் குறைகிறது எனவும், விடைத்தாள் திருத்தம் செய்யும் முறை கடுமையாக்கப் பட்டிருப்பதால் தேர்வில் தேர்ச்சி பெறுவது கடினமாக உள்ளது எனவும் கூறினர். மேலும் இதனால் ஓராண்டு காலம் வீணாகிறது எனவும் வருத்தத்துடன் தெரிவித்திருந்தனர்.

    இதையடுத்து, அண்ணா பல்கலைக்கழகத்தின் முன் திரண்ட மாணவ, மாணவிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக கிரெடிட் முறையை திரும்ப பெறவேண்டும் என வலியுறுத்தினர். இதையடுத்து மாணவர்களிடம் பல்கலைக்கழக பதிவாளர் குமார் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, மாணவர்களிடம் இருந்து எழுத்துப்பூர்வமாக மனுவை பெற்றுக்கொண்டார்.

    இதற்கிடையே, தேர்வு சீர்திருத்தங்களை குறிப்பாக கிரெடிட் முறையை ரத்துசெய்ய முடியாது என பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா தெரிவித்திருந்தார். 

    இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய தேர்வு முறை பற்றிய மாணவர்களின் கோரிக்கைகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. 

    இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழகம்  பதிவாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிய தேர்வு முறை பற்றிய மாணவர்களின் கோரிக்கைகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. அரியர் தேர்வுகளை எழுதுவதற்கான புதிய விதிமுறைகள் விரைவில் அறிவிக்கப்படும், மாணவர்கள் நேரத்தை வீணடிக்காமல் அவர்களது படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார். #AnnaUniversity #StudentsProtest
    சபரிமலையில் ஆய்வு செய்ய கேரள ஐகோர்ட்டு நியமித்த 3 பேர் குழுவினர் பக்தர்களுக்கு நிலக்கல்லிலும், பம்பையிலும் அரசு செய்துள்ள வசதிகள் திருப்தியாக இருப்பதாக தெரிவித்தனர். #Sabarimala #KeralaHC
    திருவனந்தபுரம்:

    சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் கடந்த 16-ந் தேதி மண்டல பூஜைக்காக கோவில் நடை திறக்கப்பட்டது.

    வழக்கமாக மண்டல பூஜை காலத்தின் போது சபரிமலை கோவிலுக்கு கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானாவில் இருந்து அதிக அளவு ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனத்திற்குச் செல்வார்கள். இதனால் முதல் நாளில் இருந்தே சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

    ஆனால் தற்போது சபரிமலையில் இளம்பெண்களை சாமி தரிசனத்திற்கு அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து அரசியல் கட்சிகளும், இந்து அமைப்புகளும் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    சபரிமலை செல்லும் இளம்பெண்களும் விரட்டியடிக்கப்படுகிறார்கள். இதனால் சபரிமலையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. போலீஸ் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

    இதுபோன்ற காரணங்களால் சபரிமலை செல்லும் பக்தர்கள் கூட்டம் இந்த முறை குறைந்தது. சபரிமலையில் ஐயப்ப பக்தர்களிடம் போலீசார் கெடுபிடியாக நடந்து கொள்வதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். கேரள ஐகோர்ட்டும் இது தொடர்பாக அரசுக்கு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தது.

    இதனால் சபரிமலையில் பக்தர்களிடம் கெடுபிடி குறைந்துள்ளது. இதுபோன்ற காரணங்களால் சபரிமலை செல்லும் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது.

      சபரிமலை சன்னிதானத்தில் குவிந்த அய்யப்ப பக்தர்கள் கூட்டம்.

    நேற்று ஒரே நாளில் சபரிமலைக்கு 68 ஆயிரத்து 315 பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்தனர். இந்த மண்டல பூஜை காலத்தில் இந்த அளவுக்கு அதிக பக்தர்கள் சபரிமலை சென்றது இதுதான் முதல் முறையாகும். தொடர்ந்து பக்தர்கள் கூட்டம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

    சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து உள்ளதால் அங்கு அரவணை, அப்பம் பிரசாதம் விற்பனையும் அதிகரித்து உள்ளது. இதன் மூலம் தேவசம் போர்டுக்கு கூடுதல் வருமானம் கிடைத்துள்ளது.

    சபரிமலையில் போலீஸ் கெடுபிடிகளுக்கு எதிராக கேரள ஐகோர்ட்டில் ஏராளமானோர் வழக்கு தொடர்ந்து உள்ளனர். இதை விசாரித்த ஐகோர்ட்டு சபரிமலையில் ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதிகள் ராமன் , ஸ்ரீஜெகன், டி.ஜி.பி. ஹேமச்சந்திரன் ஆகிய 3 பேர் அடங்கிய குழுவை நியமித்தது.

    இந்த குழு நேற்று சபரிமலை சென்று தங்களது ஆய்வு பணியை தொடங்கியது. முதலில் நிலக்கல்லில் அவர்கள் ஆய்வு செய்தனர். அதன் பிறகு அங்கிருந்து கேரள அரசு பஸ் மூலம் பம்பை சென்ற அந்த குழுவினர் அங்கும் பக்தர்களை சந்தித்து அவர்கள் கருத்துக்களை கேட்டனர். சபரிமலையில் பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகளையும் அவர்கள் ஆய்வு செய்தனர்.

    தங்களது முதல் கட்ட ஆய்வு பற்றி கருத்து தெரிவித்த 3 பேர் குழுவினர் சபரிமலை வரும் பக்தர்களுக்கு நிலக்கல்லிலும், பம்பையிலும் கேரள அரசு செய்துள்ள வசதிகள் திருப்தியாக இருப்பதாக தெரிவித்தனர்.

    இந்த குழுவினர் இன்று சபரிமலை சன்னிதானம் சென்றனர். அங்கும் அவர்கள் ஆய்வு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதன் பிறகு அவர்கள் தங்கள் ஆய்வு அறிக்கையை கேரள ஐகோர்ட்டில் தாக்கல் செய்வார்கள். அதன் அடிப்படையில் கேரள ஐகோர்ட்டு உத்தரவுகளை பிறப்பிக்கும்.  #Sabarimala #KeralaHC


    சென்னை தொழில் அதிபர் ரன்வீர்ஷாவுக்கு சொந்தமான திருவையாறு அரண்மனையில் போலீஸ் ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் நேற்று ஆய்வு நடத்தினார்.
    திருவையாறு:

    தமிழகம் முழுவதும் பல்வேறு கோவில்களில் நடைபெற்ற சிலை கடத்தல் சம்பவங்கள் தொடர்பாக போலீஸ் ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியை சேர்ந்த தொழில் அதிபர் ரன்வீர்ஷா, வீட்டில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நடத்திய சோதனையில் பழங்காலத்தை சேர்ந்த வெண்கல சிலைகள், கலை நயமிக்க கல் தூண்கள் உள்பட 89 கலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மதிப்பு ரூ.100 கோடி ஆகும்.

    தொழில் அதிபர் ரன்வீர்ஷாவுக்கு சொந்தமான அரண்மனைகள் தஞ்சை மாவட்டம் திருவையாறிலும், திருவாரூரிலும் உள்ளன. இதில் திருவையாறில் உள்ள அரண்மனை காவிரி ஆற்றங்கரையையொட்டி அமைந்துள்ளது. இது மராட்டிய மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டதாகும். இதை 10 ஆண்டுகளுக்கு முன்பு ரன்வீர்ஷா விலைக்கு வாங்கினார். இங்கு ஆண்டுதோறும் 3 நாட்கள் “ப்ரக்ருதி பவுண்டேசன்” சார்பில் இசை நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.

    சென்னையில் உள்ள ரன்வீர்ஷாவின் வீட்டில் பழங்காலத்தை சேர்ந்த கலை பொருட்கள் கைப்பற்றப்பட்டதை தொடர்ந்து திருவையாறில் உள்ள அவருக்கு சொந்தமான அரண்மனையில் சோதனை நடத்த சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் திட்டமிட்டிருந்தனர். அதன்படி நேற்று திருவையாறில் உள்ள ரன்வீர்ஷாவுக்கு சொந்தமான அரண்மனைக்கு நேற்று காலை 11 மணி அளவில் ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தலைமையிலான அதிகாரிகள் வந்தனர்.

    அப்போது அரண்மனைக்குள் சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். முன்னதாக அதிகாரிகள் அரண்மனையின் பெண் காவலாளியிடம், சிலைகளை அரண்மனைக்கு கொண்டு வந்தார்களா? இங்கிருந்து எதையாவது எடுத்து சென்றார்களா? என விசாரணை நடத்தினர். அதற்கு பதில் அளித்த காவலாளி, சிலைகள் எதுவும் கொண்டு வரப்படவில்லை என பதில் அளித்தார்.

    அரை மணிநேரம் ஆய்வு பணி நீடித்தது. அதன்பின்னர் அதிகாரிகள் அங்கிருந்து திரும்பி சென்றனர். ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் தலைமையிலான அதிகாரிகள் திருவையாறு அரண்மனைக்கு திடீரென வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

    தொழில் அதிபரான ரன்வீர்ஷா பழங்கால அரண்மனைகளை வாங்கி பராமரிப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார். இவருக்கு சொந்தமான அரண்மனைகள் திருவாரூர், ஊட்டி ஆகிய இடங்களிலும் உள்ளன.

    கோர்ட்டில் முறையான அனுமதி பெற்று திருவையாறு அரண்மனையில் மீண்டும் ஆய்வு நடத்த சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

    மது ராஜ் இயக்கத்தில் பிரித்விராஜன் - வீணா நடிப்பில் வெளியாகி இருக்கும் தொட்ரா படத்தின் விமர்சனம். #ThodraReview #PrithiviRajan #Veena
    ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த நாயகன் பிரித்விராஜன் கல்லூரியில் படித்துக் கொண்டே பேப்பர் போடும் வேலை பார்த்து வருகிறார். நாயகி வீணாவும் அதே கல்லூரியிலேயே படிக்கிறார். ஒருநாள் பேப்பர் போடும் போது நாயகியை பார்க்கும் பிரித்விராஜனுக்கு, கண நேரத்தில் வீணா மீது காதல் வந்து விடுகிறது. வீணா பின்னாலேயே சென்று தனது காதலை சொல்ல முயற்சி செய்கிறார்.

    ஒருகட்டத்தில் பிரித்விராஜனின் காதலை புரிந்து கொள்ளும் வீணாவும் அவரை காதலிக்க ஆரம்பிக்கிறார். வீணாவின் அப்பா கஜராஜ் மற்றும் அண்ணன் எம்.எஸ்.குமார் ஜாதிக் கட்சியை சேர்ந்தவர்கள். ஜாதி வெறியோடு இருக்கும் இவர்கள் வேறு ஜாதியை சேர்ந்த இருவர் இணைவதையே தடுத்து வருகின்றனர்.



    இந்த நிலையில், வீணாவின் காதல் எம்.எஸ்.குமாருக்கு தெரிய வருகிறது. இதையடுத்து உடனடியாக வேறு ஒருவருடன்  திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்கின்றனர். திருமணத்திற்கு முன்பாக வீணா, பிரித்விராஜனுடன் ஓடிவிடுகிறார். இதனால் ஏற்பட்ட அவமானத்தால் கஜராஜ் இறந்துவிடுகிறார்.

    பின்னர் திருமணமான தனது தங்கையை பிரித்விராஜனிடம் இருந்து பிரித்து விடுகிறார் எம்.எஸ்.குமார். கடைசியில் இருவரும் ஒன்று சேர்ந்தார்களா? எம்.எஸ்.குமாரின் ஜாதி வெறிக்கு முடிவு வந்ததா? அதன் பின்னணியில் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக்கதை.

    பிரித்விராஜ் அவருக்கு கொடுத்த கதாபாத்திரத்தை மெருகேற்றியிருந்தாலும், இன்னும் சிறப்பாக செய்திருக்கலாமோ என்று தோன்றுகிறது. கேரளாவை சேர்ந்த நாயகி வீணா திரையில் பார்ப்பதற்கு அழகு தேவதையாக வந்து செல்கிறார். அவரது கதாபாத்திரமும் ரசிக்கும்படியாக வந்துள்ளது. 



    எம்.எஸ்.குமாரின் நடிப்பு படத்திற்கு வலுசேர்த்திருக்கிறது, மிரட்டியிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். இவருக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை. கஜராஜ், ஏ.வெங்கடேஷ் உள்ள மற்ற கதாபாத்திரங்களும் கொடுத்த கதாபாத்திரத்தை ரசிக்க வைத்திருக்கின்றனர்.

    தனது முதல் படத்திலேயே ஜாதியினால் ஏற்படும் பிரச்சனைகளை துணிச்சலுடன் சொல்லியிருக்கிறார் இயக்குநர் மதுராஜ். ஜாதியால் ஏற்படும் பிரச்சனைகள், அதனால் பாதிக்கப்படுபவர்களை மையப்படுத்தி காதல் படமாக கதை நகர்கிறது. ஜாதி வெறி சம்பந்தப்பட்ட விழிப்புணர்வை ஏற்படுத்தும்படியாக படத்தை உருவாக்கியிருக்கும் இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் பாராட்டுக்கள். அதுவும் உண்மை கதையை மையப்படுத்தி கதையை உருவாக்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.



    ஆர்.என்.உத்தமராஜாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கம் ரகம் தான். பின்னணி இசையின் மூலமும் வலுசேர்த்திருக்கிறார். செந்தில் குமாரின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன. கிராம சாயலை சிறப்பாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.

    மொத்தத்தில் `தொட்ரா' ஜாதியை விடுறா. #ThodraReview #PrithiviRajan #Veena

    புதுவை கலெக்டர் சவுத்ரிஅபிஜித் விஜய் இன்று காலை திடீரென நெல்லித்தோப்பு மார்க்கெட் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார்.
    புதுச்சேரி:

    புதுவையில் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் வடகிழக்கு பருவ மழை பொழியும்.

    மழையை எதிர்கொள்ளும் வகையில் அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மழையினால் தேங்கும் தண்ணீரால் டெங்கு காய்ச்சல் பரவவும் வாய்ப்புள்ளது.

    இதற்கான விழிப்புணர்வு பணிகளில் சுகாதாரத்துறை ஈடுபட்டு வருகிறது. நகராட்சி சார்பில் காலி மனைகளில் தேங்கும் தண்ணீரை அகற்ற 15 நாள் கெடுவும் விதிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் புதுவை கலெக்டர் சவுத்ரிஅபிஜித் விஜய் இன்று காலை திடீரென நெல்லித்தோப்பு மார்க்கெட் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். மார்க்கெட், சுற்றுப்புற பகுதிகளை சுற்றிப்பார்த்த கலெக்டர், அங்கிருந்த வியாபாரிகளிடம் தூய்மையாகவும், சுகாதாரமாகவும் சுற்றுப்புற பகுதிகளை வைத்துக்கொள்ள அறிவுறுத்தினார்.

    மேலும் தண்ணீர், மழைநீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளும்படியும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து நெல்லித்தோப்பு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றார். அங்கு மருத்துவ வசதிகள் குறித்து கேட்டறிந்தார். நோயாளிகளிடம் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார்.

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.ஜே.வசீப்தர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளது. #ThoothukudiSterlite
    புதுடெல்லி:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் மாசுபடுவதாகவும், அதனால் பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டி வந்தனர். இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி கடந்த மே மாதம் 22‍-ந்தேதி பொதுமக்கள் நடத்திய போராட்டத்தில் கலவரம் வெடித்தது.



    அப்போது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் பலியானார்கள். இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இதைத்தொடர்ந்து மே 28-ந்தேதி ஸ்டெர்லைட் ஆலை மூடி சீல் வைக்கப்பட்டது.

    ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை எதிர்த்து, ஆலையை நடத்தி வந்த வேதாந்தா நிறுவனம், தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தது. அந்த மனுவில், ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதில் உள்நோக்கம் உள்ளதாகவும், ஆலை உற்பத்தியால் மாசு உண்டாவதாகவும் கூறப்படும் வாதத்தை ஆராய, குழு அமைக்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டது.

    வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனுவை, தள்ளுபடி செய்ய வேண்டும் என தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு வாதிட்டது. ஆனால் தமிழக அரசின் வாதத்தை தேசிய பசுமை தீர்ப்பாயம் நிராகரித்ததோடு, ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என்ற வேதாந்தாவின் மனுவை விசாரணைக்கு ஏற்றது. இந்த விசாரணை தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைவர் நீதிபதி ஏ.கே.கோயல் தலைமையில் நடந்தது.

    வழக்கை விசாரித்த பசுமை தீர்ப்பாய நீதிபதி, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டும். அந்த குழுவில் மாசு கட்டுப்பாடு வாரியம் மற்றும் சுற்றுச்சூழல் நிபுணர்கள் இடம்பெற வேண்டும். மேலும் இந்த குழு, ஆறு வாரங்களுக்குள் தங்கள் ஆய்வு பணிகளை முடித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

    இதைத்தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.ஜே.வசீப்தர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளது. அவருடன் மேலும் அந்த குழுவில் மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் மற்றும் மத்திய வனத்துறையை சேர்ந்த‌ 2 பேரும் இடம்பெற்றுள்ளார்கள்.

    இந்த குழு ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்பட்டுள்ள மாசு குறித்து ஆய்வு செய்யும். அதை தொடர்ந்து 6 வாரத்தில் குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கும். ஓய்வுபெற்ற நீதிபதி வசீப்தர் ஏற்கனவே பஞ்சாப், அரியானா மாநிலங்களில் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. #ThoothukudiSterlite

    தண்டராம்பட்டு அருகே மலைக்கிராமங்களில் சாலை அமைக்க 6 கிலோமீட்டர் நடந்து சென்று கலெக்டர் கந்தசாமி ஆய்வு செய்தார்.
    திருவண்ணாமலை:

    தண்டராம்பட்டு தாலுகாவுக்கு உட்பட்ட மலைக் கிராமங்களான கீழ்வலசை, மேல்வலசை, அக்கரப்பட்டு ஆகிய கிராமங்களில் பரம்பரை பரம்பரையாக நூற்றுக்கணக்கான பழங்குடி இனத்தை சேர்ந்த மலைவாழ் மக்கள் வசித்து வருகிறார்கள். இதில் கீழ்வலசை கிராமத்தில் 358 மலைவாழ் மக்களும், மேல்வலசை கிராமத்தில் 198 மலைவாழ் மக்களும், அக்கரப்பட்டு கிராமத்தில் 190 மலைவாழ் மக்களும் வசித்து வருகிறார்கள்.

    இந்த கிராமங்களில் கடுக்காய், சாமை, தினை, மரவள்ளி கிழங்கு, கேழ்வரகு, நெல், பலாப்பழம், நெல்லிக்காய், மக்காச்சோளம் ஆகியவற்றை விவசாயம் செய்து வருகின்றனர். இதில் சாமை, தினை, கடுக்காய், பலாப்பழம், நெல்லிக்காய், மக்காசோளம் ஆகியவற்றை தங்கள் தேவைக்கு வைத்துக் கொண்டு மீதமுள்ளவற்றை தங்கள் கிராமங்களுக்கு நேரடியாக வரும் வியாபாரிகளுக்கு விற்பனை செய்கிறார்கள்.

    கீழ்வலசை, மேல்வலசை, அக்கரப்பட்டு கிராம மக்கள் தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை மலையின் கீழ் இருக்கும் முக்கிய நகரங்களுக்கு நேரடியாக விற்பனை செய்தால் நல்ல லாபம் கிடைக்க வழிவகை ஏற்படும் என்ற அடிப்படையிலும், மருத்துவமனை, பள்ளி, கல்லூரி, வேலை என பலவற்றுக்கு செல்வதற்கு சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

    இதையடுத்து கலெக்டர் கந்தசாமி உள்செக்கடி கிராமத்தில் இருந்து பல்வேறு துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுடன் சேர்ந்து கீழ்வலசை கிராமத்திற்கு 6 கிலோ மீட்டர் தூரம் மலைப்பாதையில் நடைபயணம் மேற்கொண்டு, சாலை வசதி ஏற்படுத்துவதற்கான வழிகளை ஆய்வு மேற்கொண்டார்.

    உள்செக்கடி கிராமத்தில் 3 மலைக் கிராமங்களை சேர்ந்த பழங்குடியின மக்களின் சார்பாக கலெக்டருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டு கீழ்வலசை கிராமத்திற்கு அழைத்து சென்றார்கள்.

    உள்செக்கடி முதல் கீழ்வலசை வரை உள்ள மலைப்பாதையில் முதல் கட்டமாக வருவாய்த்துறை இடமான 1 கிலோ மீட்டர் தொலைவிற்கு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை மூலமாக சாலை அமைப்பதற்கு ரூ.29 லட்சம் நிர்வாக அனுமதி வழங்கி, முதற் கட்டப்பணிகள் தொடங்கப்படும். மேலும், மலைப்பாதையில் 4.6 கிலோ மீட்டர் வனத்துறை இடத்தில் சாலை அமைப்பதற்கு அனுமதி கேட்கப்பட்டுள்ளது. அனுமதி வழங்கப்பட்டவுடன் சாலை அமைக்கும் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் என்று கலெக்டர் தெரிவித்தார்.

    இந்த சாலை அமைக்கப்படுவதால், தற்போது 90 கிலோ மீட்டர் சுற்றி வாகனங்களில் செல்வதற்கு பதிலாக, 25 கிலோ மீட்டர் பயணம் மேற்கொண்டால் அருகில் உள்ள முக்கிய நகரமான தானிப்பாடிக்கு வந்து சேரலாம். இதன்மூலம் மலைவாழ் மக்கள் மருத்துவமனை, பள்ளி, கல்லூரி செல்வதற்கும், வியாபாரம் செய்வதற்கும், தங்கள் பொருளாதார நிலையினை உயர்த்திக் கொள்வதற்கும் வழிவகை ஏற்படும்.

    மேலும் அவர் கீழ்வலசை முதல் மேல்வலசை வரை 662 மீட்டர் தூரமும், கீழ்வலசை முதல் அக்கரப்பட்டு வரை 2½ கிலோ மீட்டர் தூரமும் வருவாய்த்துறை இடத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலமாக புதிய சாலை அமைப்பதற்கு திட்டம் தயாரிக்க கூறியுள்ளார். விரைவில் அறிக்கை கிடைத்தவுடன் அதற்கான நிர்வாக அனுமதியும் வழங்கி உடனடியாக சாலை அமைக்கும் பணிகள் தொடங்கும் என்று கலெக்டர் கூறினார்.

    அதைத்தொடர்ந்து கீழ்வலசை மற்றும் மேல்வலசை கிராமங்களில் நேரில் சென்று கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது மலைவாழ் மக்கள் கிணறு மற்றும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை சீரமைத்து தருமாறு கோரிக்கை வைத்தனர். இதையடுத்து கலெக்டர் உடனடியாக கிணற்றினை ஆழப்படுத்தியும், பலப்படுத்தியும், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை சீரமைத்தும் மலை கிராமங்களுக்கு சீராக தண்ணீர் வழங்க உத்தரவிட்டார்.

    முன்னதாக அரசு பழங்குடியினர் நல ஆரம்பப் பள்ளியில், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பாக நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமினை கலெக்டர் தொடங்கி வைத்து, பார்வையிட்டார்.

    அப்போது 3 பார்வையற்ற பழங்குடியின மலைவாழ் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை பெறுவதற்கான அனுமதி ஆணைகளை வழங்கினார். மேலும், கீழ்வலசை கிராமத்தை சேர்ந்த மனவளர்ச்சி குன்றிய 14 வயது மாற்றுத்திறனாளி ஒருவருக்கு பராமரிப்பு செலவிற்கு மாதம் ரூ.1,500 உதவித்தொகை பெறுவதற்கான அனுமதி ஆணையும், மூன்று சக்கர நாற்காலியும் வழங்கினார்.

    ஆய்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் லோகநாயகி, மகளிர் திட்ட அலுவலர் ஜெயசுதா, அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர். 
    துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு பிரவீன்குமார் அபினவ் தூத்துக்குடியில் இன்று 2-வது நாளாக ஆய்வு மேற்கொண்டார்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் கடந்தமாதம் 22-ந் தேதி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடந்த போராட்டத்தின் போது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதில் 13 பேர் பலியானார்கள். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான 5 வழக்குகளை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகின்றனர். ஒவ்வொரு வழக்குக்கும் ஒரு துணை போலீஸ் சூப்பிரண்டு விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டு உள்ளனர் . 20 இன்ஸ்பெக்டர்களும் பணியமர்த்தப்பட்டு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

    இந்தநிலையில் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு பிரவீன்குமார் அபினவ் நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தார். அவர் தூத்துக்குடி சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் போலீசாருடன் தூத்துக்குடி கலவர வழக்குகள் தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.

    அதைத்தொடர்ந்து 5 வழக்குகளிலும் சேகரிக்கப்பட்ட ஆவணங்கள் குறித்தும் விசாரணை நடத்தினார். வழக்குகளுக்கு தேவையான கூடுதல் ஆவணங்களை சேகரிப்பது தொடர்பாகவும் போலீசாருக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

    இதையடுத்து கலவரத்தின் போது தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் எரிக்கப்பட்ட வாகனங்கள், ஸ்டெர்லைட் குடியிருப்பில் தீவைத்து எரிக்கப்பட்ட வாகனங்களையும் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு பிரவீன்குமார் அபினவ் பார்வையிட்டார்.

    மேலும் துப்பாக்கி சூடு நடந்த இடம், இந்திய உணவுக்கழக குடோன் பகுதி, அண்ணாநகர், திரேஸ்புரம், வி.வி.டி.சிக்னல், பனிமயமாதா ஆலய பகுதிகளுக்கும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டார்.

    போலீஸ் சூப்பிரண்டு பிரவீன்குமார் அபினவ் தூத்துக்குடியில் இன்று 2-வது நாளாக ஆய்வு பணி மற்றும் விசாரணையில் ஈடுபட்டார்.

    துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக இன்று கள ஆய்வில் ஈடுபட்டுள்ள நீதிபதி அருணாஜெகதீசன் முதலில் தூத்துக்குடி கலெக்டர் அலுவலக பகுதியில் துப்பாக்கி சூடு நடந்த பகுதிகளை பார்வையிட்டார். #arunajagadeesan #Thoothukudifiring
    தூத்துக்குடி:

    ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கடந்த 22-ந்தேதி தூத்துக்குடியில் பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட பேரணியாக புறப்பட்டு சென்றனர். அப்போது ஏற்பட்ட கலவரத்தில் போலீசார் துப்பாக்கி சூடு மற்றும் தடியடி நடத்தியதில் 13 பேர் பலியானார்கள். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

    இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்துவதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசனை கொண்ட ஒருநபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்தது. இதையடுத்து நீதிபதி அருணாஜெகதீசன் நேற்று தூத்துக்குடிக்கு வந்து விசாரணையை தொடங்கினார்.

    முதல்கட்டமாக தூத்துக்குடி தெற்கு கடற்கரை சாலையில் உள்ள சுற்றுலா மாளிகையில் அமைக்கப்பட்டுள்ள விசாரணை ஆணைய முகாம் அலுவலகத்திற்கு சென்றார். பின்னர் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்திற்கு சென்றார். அங்கு கலெக்டர் சந்தீப்நந்தூரி மற்றும் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார்.

    இதன் பிறகு நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணையை தொடங்கினார். துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக 3 கட்டமாக அருணாஜெகதீசன் விசாரணை நடத்த உள்ளார். அதன்படி முதல் கட்டமாக பாதிக்கப்பட்ட மக்கள், காயமடைந்து சிகிச்சை பெறுபவர்கள், பலியானவர்களின் உறவினர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்.



    தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு சென்ற அவர் அங்கு துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் காயம் பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் நடந்த விபரம் குறித்து கேட்டறிந்தார்.

    தொடர்ந்து அவர் துப்பாக்கி சூட்டில் பலியான சிலோன்காலனி கந்தையா, புஷ்பாநகர் ரஞ்சித்குமார், மாசிலாமணிபுரம் சண்முகம் ஆகியோரின் வீடுகளுக்கு சென்றார். அங்கு அவர்களது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். பலியானவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பத்தினரிடம் துப்பாக்கி சூடு குறித்த சம்பவங்களை தைரியமாக அச்சப்படாமல் விசாரணை ஆணையத்தில் சொல்லுங்கள் என கேட்டுக் கொண்டார்.

    அவர்களிடம் துப்பாக்கி சூடு சம்பவம் குறித்த பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் கிரின்வேஸ் ரோட்டில் உள்ள விசாரணை ஆணையத்தின் தலைமை அலுவலகத்திலும், தூத்துக்குடியில் உள்ள முகாம் அலுவலகத்திலும் வருகிற 30-ந்தேதி வரை பிரமாண வாக்குமூலம் வழங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இவற்றை பெறுவதற்கென பிரத்யேக அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். பிரமாண வாக்குமூலம் அளிப்பவர்களின் விபரங்கள் ரகசியமாக வைக்கப்பட உள்ளது.

    முதற்கட்ட விசாரணையை தொடர்ந்து 2-வது கட்டமாக நீதிபதி அருணாஜெகதீசன் துப்பாக்கி சூடு சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்களிடமும் விசாரணை நடத்துகிறார்.

    3-வது கட்டமாக காவல் துறையை சார்ந்தவர்கள், துப்பாக்கி சூடு நடத்தியதாக கூறப்படும் போலீசார் மற்றும் வருவாய்துறை அலுவலர்கள், பிரேத பரிசோதனை செய்த டாக்டர்கள், காயமடைந்த வர்களுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், காவல்துறை உயர் அதிகாரிகள், சம்பவம் நடந்தபோது பொறுப்பில் இருந்த மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு மற்றும் அதிகாரிகளிடம் விசாரணை நடத்துகிறார்.

    இதனிடையே துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக நீதிபதி அருணாஜெகதீசன் இன்று கள ஆய்வில் ஈடுபட்டார். முதலில் தூத்துக்குடி கலெக்டர் அலுவலக பகுதிக்கு சென்ற அவர் அங்கு துப்பாக்கி சூடு நடந்த பகுதிகளை பார்வையிட்டார். மேலும் வன்முறையால் தீவைக்கப்பட்ட வாகனங்களையும் பார்த்தார்.

    பின்பு ஸ்டெர்லைட் ஆலை ஊழியர் குடியிருப்புக்கு சென்ற அவர் அங்கு தீவைக்கப்பட்ட வாகனங்களை பார்வையிட்டார். அங்கு வசிக்கும் ஊழியர்களிடம் விவரங்களை கேட்டறிந்தார். தொடர்ந்து வி.வி.டி. சிக்னல் பகுதிக்கு வந்த அருணாஜெகதீசன் அங்கும் துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட இடத்தை பார்வையிட்டார்.

    மேலும் தீவைத்து எரிக்கப்பட்ட போலீஸ் வாகனம் மற்றும் வன்முறையால் சேதப்படுத்தப்பட்ட கடைகளையும் அவர் ஆய்வு செய்தார். தூத்துக்குடி அரசு மருத்துவமனை பகுதியையும் அவர் பார்வையிட்டார். பின்னர் தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதிக்கு சென்று அப்பகுதியில் துப்பாக்கி சூடு, தடியடி நடைபெற்ற இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  #arunajagadeesan #Thoothukudifiring

    ×