search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    துப்பாக்கி சூடு சம்பவம் - சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு தூத்துக்குடியில் 2-வது நாளாக ஆய்வு
    X

    துப்பாக்கி சூடு சம்பவம் - சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு தூத்துக்குடியில் 2-வது நாளாக ஆய்வு

    துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு பிரவீன்குமார் அபினவ் தூத்துக்குடியில் இன்று 2-வது நாளாக ஆய்வு மேற்கொண்டார்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் கடந்தமாதம் 22-ந் தேதி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடந்த போராட்டத்தின் போது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதில் 13 பேர் பலியானார்கள். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான 5 வழக்குகளை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகின்றனர். ஒவ்வொரு வழக்குக்கும் ஒரு துணை போலீஸ் சூப்பிரண்டு விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டு உள்ளனர் . 20 இன்ஸ்பெக்டர்களும் பணியமர்த்தப்பட்டு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

    இந்தநிலையில் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு பிரவீன்குமார் அபினவ் நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தார். அவர் தூத்துக்குடி சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் போலீசாருடன் தூத்துக்குடி கலவர வழக்குகள் தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.

    அதைத்தொடர்ந்து 5 வழக்குகளிலும் சேகரிக்கப்பட்ட ஆவணங்கள் குறித்தும் விசாரணை நடத்தினார். வழக்குகளுக்கு தேவையான கூடுதல் ஆவணங்களை சேகரிப்பது தொடர்பாகவும் போலீசாருக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

    இதையடுத்து கலவரத்தின் போது தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் எரிக்கப்பட்ட வாகனங்கள், ஸ்டெர்லைட் குடியிருப்பில் தீவைத்து எரிக்கப்பட்ட வாகனங்களையும் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு பிரவீன்குமார் அபினவ் பார்வையிட்டார்.

    மேலும் துப்பாக்கி சூடு நடந்த இடம், இந்திய உணவுக்கழக குடோன் பகுதி, அண்ணாநகர், திரேஸ்புரம், வி.வி.டி.சிக்னல், பனிமயமாதா ஆலய பகுதிகளுக்கும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டார்.

    போலீஸ் சூப்பிரண்டு பிரவீன்குமார் அபினவ் தூத்துக்குடியில் இன்று 2-வது நாளாக ஆய்வு பணி மற்றும் விசாரணையில் ஈடுபட்டார்.

    Next Story
    ×