search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "relatives protest"

    திருட்டு வழக்கில் கைதான புதுவை ஜெயில் கைதி திடீரென மரணம் அடைந்தார். அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி உறவினர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    புதுச்சேரி:

    புதுவையை அடுத்த தமிழக பகுதியான கடலூர் மாவட்டம் ரெட்டிச்சாவடி கரிக்கன் நகர் புதுநகரை சேர்ந்த செல்வகுமார் மகன் ஜெயமூர்த்தி (வயது 21).

    கூலி தொழிலாளியான ஜெயமூர்த்தியை கடந்த 21-ந் தேதி மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கில் புதுவை பாகூர் போலீசார் கைது செய்தனர். மறுநாள் புதுவை கோர்ட்டில் ஆஜர் படுத்தி காலாப்பட்டு மத்திய ஜெயிலில் அடைத்தனர்.

    ஜெயிலில் இருந்த ஜெய மூர்த்திக்கு நேற்று திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. ஜெயிலில் உள்ள மருத்துவ மனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக அவர் புதுவை அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி ஜெய மூர்த்தி இறந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த ஜெயமூர்த்தியின் உறவினர்கள் புதுவை அரசு மருத்துவமனை முன்பு கூடினர். அங்கு அவர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஜெயமூர்த்தி சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது உடலை பரிசோத னைக்கு எடுத்து செல்ல விடாமல் தடுத்தனர். மேலும் பாகூர் போலீசார் தாக்கியதால் தான் ஜெயமூர்த்தி இறந்துள்ளார். எனவே, பாகூர் போலீசார் மீது வழக்குபதிவு செய்ய வேண்டும் என அவர்கள் கோ‌ஷமிட்டனர்.

    இதனால் அங்கு பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது.இதனையடுத்து போலீஸ் சூப்பிரண்டு மாறன் தலைமையில் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் போராட்டத்தை கைவிட வில்லை.

    இதனிடையே தகவல் அறிந்து அங்கு வந்த தி.மு.க. தெற்கு மாநில அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. சமாதான பேச்சு வார்த்தை நடத்தினார். இதன் பிறகு அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

    பாகூர் போலீசார் மீது ஜெயமூர்த்தியின் உறவினர்கள் பெரியகடை போலீசாரிடம் புகார் அளித்தனர்.

    புகாரை விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர். இதன் பேரில் போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


    ஜெயமூர்த்தியின் உடல் தொடர்ந்து அரசு ஆஸ் பத்திரியிலேயே உள்ளது. புதுவையில் உள்ள கதிர் காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் தான் பிரேத பரிசோதனை நடத்துவது வழக்கம்.

    ஜெயமூர்த்தி உடலை அங்கு கொண்டு சென்று பிரேத பரிசோதனை செய்ய ஏற்பாடுகள் செய்தனர். ஆனால், அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்தால் உண்மை வெளிவராது என்று கூறி அவருடைய உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    ஜிப்மர் ஆஸ்பத்திரியில் பரிசோதனை நடத்த வேண்டும். நீதிபதி மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் முன்னிலையில் பிரேத பரி சோதனை செய்ய வேண்டும், அனைத்து நிகழ்வுகளையும் வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்று அவர்கள் கேட்டனர்.

    இது சம்பந்தமாக முடிவு எடுக்க காலதாமதம் ஆனதால் அரசு ஆஸ்பத்திரியிலேயே உடல் இருக்கிறது.

    இதற்கிடையே ஜெயில் சூப்பிரண்டு பாஸ்கர் காலாப்பட்டு போலீசில் ஒரு புகார் கொடுத்துள்ளார். காவலில் இருந்த கைதி உடல்நலக்குறைவால் இறந்து விட்டார். காவல் கைதி இறந்தால் நடுவர் மன்ற விசாரணை நடத்தப்படும்.

    எனவே, அதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து 176-வது பிரிவு மர்ம மரணம் என்ற சட்டத்தின் கீழ் காலாப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    இதற்கிடையே காலாப்பட்டு ஜெயிலில் இருந்து 14 கைதிகளை வழக்குகளில் ஆஜர்படுத்துவதற்காக போலீசார் வேனில் அழைத்து வந்தனர்.

    ஆனால், ஜெயமூர்த்தி இறந்த தகவலை அறிந்த கைதிகள் வேனில் இருந்து இறங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    வழக்குகளில் போலீசார் கைது செய்யும் போது போலீஸ் நிலையத்தில் வைத்தும் அடிக்கிறார்கள். அடுத்து ஜெயிலுக்கு வந்த பிறகு ஜெயில் காவலர்களும் அடிக்கிறார்கள்.

    அவர்களுக்கு உரிய சிகிச்சைகளை உடனடியாக அளிப்பதில்லை. இதனால் தான் உயிர் இழப்பு ஏற்படுகிறது என்று கூறி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சுமார் 15 நிமிடமாக இந்த போராட்டம் நடந்தது. பின்னர் போலீசார் சமாதானப்படுத்தி அவர்களை கோர்ட்டுக்குள் அழைத்து சென்றனர்.

    பாகூர் சப்-இன்ஸ் பெக்டர் ஜெயகுருநாதன் மற்றும் போலீசார் அடித்ததால்தான் ஜெயமூர்த்தி இறந்ததாக உறவினர்கள் புகார் கொடுத்துள்ளனர்.

    அதன் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் ஜெய குருநாதனிடம் துறை ரீதியாக விசாரணை நடத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து சப்- இன்ஸ்பெக்டர் ஜெயகுருநாதன் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

    இந்த தகவலை முதல்- அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார். மேலும் நீதி விசாரணையும் நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

    இறந்த ஜெயமூர்த்திக்கு கவுசல்யா என்ற மனைவியும் ஒரு வயதில் பெண் குழந்தையும் உள்ளது.

    அரியலூர் அருகே சிமெண்ட் ஆலை விபத்தில் ஊழியர் மரணம் அடைந்தார். அவரது சாவில் மர்மம் உள்ளதாக உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    ஆர்.எஸ்.மாத்தூர்:

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள ஆலத்தியூரில் தனியார் சிமெண்ட் ஆலை உள்ளது. இங்கு இருங்கலாக்குறிச்சியை சேர்ந்த சுப்பிரமணியன்(வயது 40) என்பவர் சாம்பல் கிரசர் பெல்ட் ஆப்ரேட்டராக பணியாற்றி வந்தார். நேற்றிரவு பணியில் ஈடுபட்டிருந்த அவர், கிரசர் பெல்ட் உரசியதில் தடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்தார்.

    இதையடுத்து அவரை ஆலை பணியாளர்கள் மீட்டு கடலூர் மாவட்டம் திட்டக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சுப்பிரமணியன் இறந்தார். இதனிடையே சுப்பிரமணியனின் சாவில் மர்மம் உள்ளது என்றும், இது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று கூறி, ஆலத்தியூர் சிமெண்ட் ஆலை முன்பு, சுப்பிரமணியனின் உறவினர்கள் திடீரென முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு தளவாய் போலீசார் சென்று பேச்சு வார்த்தை நடத்தினர்.
    புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரசவத்தின் போது தாயும், குழந்தையும் உயிரிழந்தனர். டாக்டர்களை கண்டித்து உறவினர்கள் நடத்திய போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஏ.மாத்தூர் பகுதியை சேர்ந்தவர் நிரோஷ்குமார். இவரது மனைவி அனுசியா (வயது 20). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவர் கடந்த 2-ந்தேதி பிரசவத்திற்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் காலை அனுசியாவிற்கு பிரசவ வலி ஏற்பட்டது. டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தனர். அப்போது அவருக்கு இறந்த நிலையில் ஆண் குழந்தை பிறந்தது.

    இதனையடுத்து மருத்துவர்கள், குழந்தை இறந்து பிறந்ததாகவும், அனுசியாவிற்கு ரத்தப்போக்கு அதிகமாக இருப்பதால் கர்ப்ப பையை அகற்ற வேண்டும் எனவும், அதை அகற்றினால் தான் அனுசியா உயிர் பிழைப்பார் எனவும் உறவினர்களிடம் கூறியதாக தெரிகிறது. பின்னர் அனுசியாவின் கர்ப்பபையை டாக்டர்கள் அகற்றினர். தொடர்ந்து உறவினர்களால் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த 10-க்கும் மேற்பட்டோர் அனுசியாவிற்கு ரத்தமும் கொடுத்தனர். இந்நிலையில் அனுசியாவும் நேற்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    டாக்டர்கள் முறையாக சிகிச்சை அளிக்காததால் தான் அனுசியாவும், குழந்தையும் இறந்ததாகவும், மருத்துவமனையில் போதிய டாக்டர்கள் இல்லாததால், இங்கு சிகிச்சைக்கு வரும் பலர் இறக்கின்றனர் எனக்கூறி அனுசியாவின் உறவினர்கள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மருத்துவமனைக்கு பாதுகாப்பு பணிக்காக வந்த போலீசாருடன் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் போலீசாருக்கும், போராட்டத்தில் ஈடுபட்ட அனுசியாவின் உறவினர்களுக்கும் இடையே தள்ளு-முள்ளு ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் மற்றும் டாக்டர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் நேற்று புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. #tamilnews
    குமரி வாலிபரை போலீஸ் விசாரணையில் கொன்று விட்டதாக கூறி அவரது உடலை உறவினர்கள் வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    களியக்காவிளை:

    குமரி மாவட்டம் களியக்காவிளை ஆர்.சி. தெருவைச் சேர்ந்தவர் அனீஷ் (வயது 20). தொழிலாளி. திருமணம் ஆகவில்லை.

    கடந்த 23-ந் தேதி கேரள மதுவிலக்கு போலீசார் களியக்காவிளை வந்து ஒரு வழக்கு விசாரணைக்காக அழைத்து செல்வதாக கூறி அனீசை அழைத்து சென்றனர். அதன்பிறகு அனீசை அவர்கள் எங்கு வைத்து விசாரித்தார்கள், அவரது கதி என்ன? என தெரியாமல் உறவினர்கள் தவித்து வந்தனர்.

    இந்தநிலையில் 2 நாட்களுக்கு பிறகு நேற்று அனீசின் உறவினர்களுக்கு கேரள போலீசார் தொடர்பு கொண்டு பேசினர். அப்போது அனீசுக்கு திடீரென உடல் நல பாதிப்பு ஏற்பட்டதாகவும், இதனால் அவரை திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

    உடனே உறவினர்கள் திருவனந்தபுரம் ஆஸ்பத்திரிக்கு சென்றனர். அங்கு அனீஸ் இறந்து பிணமாக கிடந்தார். சிகிச்சை பலனின்றி அவர் இறந்து விட்டதாக ஆஸ்பத்திரி ஊழியர்கள் தெரிவித்தனர்.

    இந்த தகவல் களியக்காவிளையில் உள்ள மற்ற உறவினர்களுக்கு தெரியவந்தது. அவர்கள் களியக்காவிளை போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

    விசாரணைக்காக அழைத்துச் சென்ற கேரள போலீசார் தாக்கியதில் தான் அனீஷ் இறந்திருக்க வேண்டும், எனவே அனீசை அழைத்துச் சென்ற கேரள போலீசார் மீது வழக்குப்பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

    மேலும் அனீசை களியக்காவிளை பகுதியில் இருந்து கேரள போலீசார் அழைத்து சென்றுள்ளனர். எனவே இங்குள்ள போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி புகார் மனுவும் கொடுத்தனர். அந்த புகாரை போலீசார் ஏற்றுக் கொண்டு உறவினர்களை சமாதானப்படுத்தி அவர்களை அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

    மர்மமான முறையில் இறந்த அனீசின் உடல் திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது. 2-வது நாளாக அவரது உடலை வாங்க உறவினர்கள் மறுத்து விட்டனர். அனீஷ் சாவுக்கு காரணமான போலீசார் மீது நடவடிக்கை எடுக்கும் வரை அவரது உடலை வாங்க மாட்டோம் என அவர்கள் தெரிவித்தனர்.

    இதற்கிடையே விசாரணைக்காக அழைத்துச் சென்ற அனீசுக்கு திடீரென வலிப்பு நோய் ஏற்பட்டதாகவும், அதற்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் கேரள போலீசார் தெரிவித்துள்ளனர். ஆனால் அனீசின் உறவினர்கள் போலீசார் கூறும் காரணத்தை ஏற்க மறுத்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    ஏற்கனவே திருவனந்தபுரத்தில் 2005-ல் விசாரணை கைதியை போலீஸ் காவலில் அடித்துக் கொன்ற வழக்கில் சப்-இன்ஸ்பெக்டர், ஏட்டு ஆகியோருக்கு சி.பி.ஐ. நீதிமன்றம் நேற்று தூக்குத்தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது. அதேநாளில் களியக்காவிளை வாலிபர், கேரளாவில் போலீஸ் காவலில் உயிரிழந்த சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #taimlnews
    திண்டுக்கல் அருகே பெண் தொழிலாளி மாயமானதை தொடர்ந்து மில் பஸ்சை சிறை பிடித்து உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.

    வடமதுரை

    திண்டுக்கல் அருகே வடமதுரையில் பண்ணாரி மில் இயங்கி வருகிறது. இந்த மில்லுக்கு வடமதுரை, அய்யலூர், மணப்பாறை, வையம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான தொழிலாளர்கள் சென்று வேலை பார்த்து வருகின்றனர்.

    இவர்களை அழைத்து வருவதற்காக மில் நிர்வாகம் சார்பில் பஸ்கள் இயக்கப்படுகிறது. வையம்பட்டி போத்தனூரை சேர்ந்தவர் விஜயலட்சுமி. இவர் வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பவில்லை.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மில் நிர்வாகத்திடம் இது குறித்து கேட்டனர். ஆனால் அவர்கள் அலட்சியமாக பதில் கூறி உள்ளனர். இதனால் விஜயலட்சுமியின் உறவினர்கள் ஆத்திரம் அடைந்தனர்.

    இன்று காலை வையம்பட்டி பகுதிக்கு சென்று 3 மில் பஸ்களை பொன்னம்பலபட்டி சுங்கச்சாவடி அருகே விஜயலட்சுமியின் உறவினர்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சம்பவம் குறித்து அறிந்ததும் விரைந்து வந்த போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி வடமதுரை போலீசில் புகார் அளிக்க அறிவுறுத்தினர். அதன்பின் பஸ்கள் விடுவிக்கப்பட்டது. இதனால் காலை நேரத்தில் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இது குறித்து பொதுமக்கள் தெரிவிக்கையில், மில்வேலைக்கு நிர்வாகத்தின் வாகனத்தில் தான் தொழிலாளர்கள் சென்று வருகின்றனர். ஆனால் தங்களுக்கு சம்மந்தம் இல்லாதது போல் மில் நிர்வாகத்தினர் நடந்து கொள்கின்றனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு வடமாநில தொழிலாளர்கள் மர்மமான முறையில் இறந்தனர். தொடர்ந்து இதுபோன்ற பிரச்சினைகள் மில்லில் நடைபெற்று வருகிறது. எனவே போலீசார் இங்கு அதிரடி சோதனை நடத்தி உண்மையை வெளிகொண்டு வர வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    தூத்துக்குடியில் நடந்த கலவரத்தையொட்டி கைதாகி சிறையில் அடைக்கப்பட்டவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் குறித்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். #thoothukudigunfire #sterliteprotest
    நெல்லை:

    தூத்துக்குடி மாவட்டம் மறவன்மடம் அருகே உள்ள திரவியபுரத்தை சேர்ந்தவர் பரத்ராஜா (வயது 36). தூத்துக்குடியில் நடந்த ஒரு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில் பரத்ராஜாவின் தம்பி தனசேகரனுக்கு கடந்த 23-ந் தேதி தூத்துக்குடியில் திருமணம் நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக பரத்ராஜா 17-ந்தேதி முதல் 23ம் தேதி வரை 7 நாள் பரோலில் ஊருக்கு வந்தார்.

    இதனிடையே 22-ந் தேதி தூத்துக்குடியில் நடந்த கலவரத்தையொட்டி 23-ந் தேதி போலீசார் வீடு வீடாக சென்று பலரை கைது செய்தனர். அப்போது பரத்ராஜாவையும் போலீசார் பிடித்துச்சென்றனர். அப்போது போலீசார் தாக்கியதில் காயமடைந்த பரத்ராஜா தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பாளை சிறையில் அடைக்கப்பட்டார்.

    இந்நிலையில் கடந்த 30ந்தேதி பரத்ராஜா, சிறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக சிறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதை தொடர்ந்து பரத்ராஜாவின் உடல் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் நேற்று முன்தினம் பரிசோதனை செய்யப்பட்டது. பரத்ராஜாவை விசாரணைக்கு அழைத்து சென்ற போலீசார் அவரை தாக்கியதாகவும், அப்போது அவர் காயம் அடைந்து சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட போது மாஜிஸ்திரேட்டிடம் அவர் வாக்குமூலம் அளித்ததில் போலீசார் தன்னை அடித்து உதைத்ததாக தெரிவித்துள்ளார்.

    போலீசார் தாக்கியதால் தான் பரத்ராஜா இறந்ததாக கூறி, அதுபற்றி உரிய விசாரணை நடத்த வேண்டும். பரத்ராஜா குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கவேண்டும், அதுவரை பரத்ராஜாவின் உடலை வாங்கப்போவதில்லை என்று பரத்ராஜாவின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். அவர்கள் பரத்ராஜாவின் உடலை வாங்க மறுத்து நேற்று 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

    பேச்சுவார்த்தையில் முடிவு ஏற்படாததால் பரத்ராஜாவின் உடல் தொடர்ந்து நெல்லை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டு உள்ளது. இன்றும் 3-வது நாளாக பரத்ராஜாவின் உடலை உறவினர்கள் பெற மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அவர்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.#thoothukudigunfire #sterliteprotest
    செய்துங்கநல்லூர் அருகே பஸ்சுக்கு தீவைத்த சம்பவத்தில் பலியான‌ பெண்ணின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் 3-வது நாளாக இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். #sterliteprotest
    நெல்லை:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த மாதம் 22ந்தேதி நடந்த போராட்டத்தில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 13 பேர் பலியானார்கள். இந்த சம்பவத்தை கண்டித்து பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தினார்கள். பல்வேறு இடங்களில் பஸ் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.

    இந்த நிலையில் கடந்த 25-ந்தேதி செய்துங்கநல்லூர் அருகே உள்ள கருங்குளம் புதுபாலம் அருகே நெல்லை நோக்கி வந்த அரசு பஸ்சுக்கு சிலர் தீவைத்தனர். இதில் பஸ் முழுவதும் எரிந்து சேதமானது. பஸ்சில் இருந்த பயணிகள் பலரும் பதறியடித்து இறங்கி உயிர் தப்பினர்.

    அப்போது பஸ்சில் இருந்து கீழே இறங்க முயன்ற மெஞ்ஞானபுரம் நவலடிபுதூரை சேர்ந்த சுடலை கோனார் (வயது 78), அவருடைய மனைவி வள்ளியம்மாள் (63) தீயில் சிக்கினர். அவர்களை அதே பஸ்சில் வந்த காரைக்குடியை சேர்ந்த ஜெபகுமார் (23) மீட்க முயன்றார்.

    இந்த சம்பவத்தில் அவர்கள் 3 பேரும் தீக்காயம் அடைந்தனர். அவர்கள் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களில் பலத்த தீக்காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த வள்ளியம்மாள் (வயது 63) சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஸ்ரீவைகுண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் இறந்த வள்ளியம்மாளின் உடல் நேற்று முன்தினம் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் அவரது உறவினர்களிடம் போலீசார் உடலை ஒப்படைக்க முயன்றனர். ஆனால் அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பலியான வள்ளியம்மாள் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் நஷ்டஈடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    நேற்று 2-வது நாளாக அவர்களது போராட்டம் நீடித்தது. அப்போது அவர்கள் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட முயன்றனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் பாளையங்கோட்டை தாசில்தார் கந்தசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    பேச்சுவார்த்தையில் முடிவு ஏற்படவில்லை. இதை தொடர்ந்து இன்று 3-வது நாளாக வள்ளியம்மாள் உடல் வாங்கப்படவில்லை. அவரது உறவினர்களிடம் தொடர்ந்து போலீசார் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். கோரிக்கை நிறைவேறும் வரை உடலை வாங்கப்போவதில்லை என்று உறவினர்கள் தெரிவித்துள்ளனர். #sterliteprotest
    மானாமதுரை அருகே இரட்டைக்கொலை விவகாரத்தில் உடல்களை வாங்க மறுத்து விடிய விடிய உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
    மதுரை:

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள கச்சநத்தம் கிராமத்தில் கோவில் திருவிழாவின் போது 2 பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது. இந்த முன்விரோதத்தில் ஆவரங்காடு கிராமத்தைச் சேர்ந்த ஒரு பிரிவினர், கச்சநத்தம் கிராமத்திற்கு ஆயுதங்களுடன் சென்று தாக்குதலில் ஈடுபட்டனர்.

    இந்த மோதலில் கச்ச நத்தம் கிராமத்தைச் சேர்ந்த மருது என்ற சண்முகநாதன், ஆறுமுகம் ஆகியோர் ரத்த வெள்ளத்தில் பலியானார்கள். சுகுமார், மலைச்சாமி, தனசேகரன், மகேசுவரன், சந்திரசேகர், தேவேந்திரன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்

    அவர்கள் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதற்கிடையில் பலியான 2 பேரில் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டன.

    இதனால் பலியான மற்றும் காயம் அடைந்தவர்களின் உறவினர்களும் மதுரை அரசு ஆஸ்பத்திரி முன்பு குவிந்தனர். அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசாரின் பேச்சுவார்த்தைக்குப் பிறகு கலெக்டர் அலுவலக சாலையோரம் சென்ற அவர்கள், விடிய விடிய அங்கேயே அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

    பலியானவர்களின் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும், படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும், அதுவரை உடல்களை வாங்க மாட்டோம் என அவர்கள் கூறி வருவதால் ஆஸ்பத்திரி சாலை பதட்டமாகவே உள்ளது.#tamilnews
    ×