search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "rajini makkal mandram"

    ரஜினி மக்கள் மன்றத்தில் மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டத்தை புதிய நிர்வாகிகள் நடத்தி இருப்பதால் ராஜூ மகாலிங்கம், சுதாகருக்கு ரஜினி தடை விதித்திருக்கிறாரோ? என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. #RajuMahalingam #RajiniMakkalMandram
    சென்னை:

    அரசியல் களத்தில் குதித்துள்ள நடிகர் ரஜினிகாந்த் புதிய கட்சியின் பெயரை விரைவில் அறிவிக்க உள்ளார். மாநிலம் முழுவதும் நிர்வாகிகள் நியமனத்தை முடித்துள்ள ரஜினி உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தி இருக்கிறார்.

    இதுவரை 50 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் ரஜினி மக்கள் மன்றத்தில் சேர்ந்துள்ள நிலையில், புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    காலா படத்துக்கு பின்னர் தீவிர அரசியலில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரஜினி, அது போன்று வேகத்தை காட்டவில்லை. அரசியல் கட்சியை தொடங்குவது எப்போது? என்கிற அறிவிப்பை வெளிப்படையாக இன்னும் அறிவிக்காத ரஜினி, மன்ற நிர்வாகிகள் கூட்டத்திலும் கலந்து கொள்ளாமலேயே உள்ளார்.

    புதிய நிர்வாகிகள் நியமனத்துக்கு பின்னர் கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ஆலோசனை கூட்டம் நடந்து வருகிறது. இந்த கூட்டத்தில் மாவட்டம் வாரியாக பொறுப்பாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

    கடலூர், திருச்சி, பெரம்பலூர், திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர் உள்ளிட்ட 18 மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் முடிந்துள்ள நிலையில் இன்றும், நாளையும் நடக்கும் கூட்டத்தில் மீதி உள்ள 12 மாவட்ட பொறுப்பாளர்கள் பங்கேற்கின்றனர்.

    இது நாள் வரையில் இந்த கூட்டத்தை நடத்தி வந்த மாநில செயலாளர் ராஜூ மகாலிங்கம், பொறுப்பாளர் சுதாகர் ஆகியோர் புதிய நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. அவர்களுக்கு பதில் ரஜினி மக்கள் மன்றத்தின் மாநில அமைப்பு செயலாளரான டாக்டர் இளவரசன், முன்னாள் போலீஸ் அதிகாரியான ராஜசேகர், தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ஸ்டாலின் ஆகியோர் கூட்டத்தை நடத்துகின்றனர்.

    கடந்த சில நாட்களாகவே ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் மீது மாவட்ட பொறுப்பாளர்கள் புகார் கூறி வந்தனர். மாநில செயலாளரான ராஜூ மகாலிங்கம் ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து நீக்கப்பட்டு விட்டதாகவும் தகவல் வெளியானது. ஆனால் இதனை இன்னொரு முக்கிய நிர்வாகியான சுதாகர் மறுத்தார்.

    இந்த நிலையில் இவர்கள் 2 பேருக்கு பதிலாக மாவட்ட பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டத்தை புதிய நிர்வாகிகள் நடத்தி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதன் மூலம் ராஜூ மகாலிங்கம், சுதாகர் இருவருக்கும் ரஜினி தடை விதித்திருக்கிறாரோ? என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.

    பொறுப்பாளர்களை வழிநடத்துவதற்காக முதன் முதலாக போடப்பட்ட நிர்வாகிகளான ராஜூ மகாலிங்கம், சுதாகர் ஆகியோர் திடீரென ஒதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல் நிர்வாகிகள் மத்தியில் புதிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இது தொடர்பாக பெயர் வெளியிட விரும்பாத ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-


    காலா படம் முடிந்ததும் ரஜினி அதிரடியாக அரசியலில் ஈடுபடுவார் என்கிற எண்ணம் அவர் மீண்டும் படப்பிடிப்புக்கு சென்றதும் நொறுங்கிப் போனது.

    நிர்வாகிகள் நியமனம் முடிந்ததும் ரஜினி எங்களையெல்லாம் சந்திப்பார் என்று எதிர்பார்த்து காத்திருந்தோம். அதுவும் நடக்கவில்லை. ரசிகர்களின் எண்ண ஓட்டங்களை அறிந்த மன்றத்தின் மாநில நிர்வாகிகளும் சந்திக்காமல் உள்ளனர்.

    இதுபோன்ற நடவடிக்கைகளால் அரசியல் பணிகளில் திருப்தி இல்லாமலேயே இருக்கிறோம். எங்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் ரஜினிகாந்த் அடுத்த முறை சென்னை வரும் போது நிர்வாகிகளை சந்திக்க வேண்டும். அப்போது தான் மாநிலம் முழுவதும் உள்ள பொறுப்பாளர்கள் மகிழ்ச்சி அடைவார்கள். புதிய கட்சியை தொடங்கி ரஜினி உடனடியாக தீவிர அரசியலில் ஈடுபட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #RajuMahalingam #RajiniMakkalMandram #Rajinikanth
    நீண்ட நாட்கள் மன்றத்தில் இருந்தாலும் தேர்தலில் போட்டியிட டிக்கெட்டை எதிர்பார்க்க கூடாது என்று ரஜினி மன்ற நிர்வாகிகளுக்கு கூறி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. #Rajinikanth #RajiniMakkalMandram
    சென்னை:

    நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்து 6 மாதங்கள் கடந்து விட்ட நிலையில் அவர் எப்போது கட்சியைத் தொடங்குவார் என்பது யாருக்குமே புரியாத புதிராக உள்ளது.

    தற்போது படப்பிடிப்புகளில் தீவிர கவனம் செலுத்தி வரும் ரஜினி, கட்சிப் பெயர் மற்றும் கொடி, கொள்கைகளை அறிவிப்பதற்கு முன்பு தனக்கு ஆதரவு கொடுப்பவர்கள் எண்ணிக்கையை உறுதி செய்து கொள்ள திட்டமிட்டுள்ளார். இதற்காக அவர் தனது ரசிகர் மன்றங்களை ‘‘ரஜினி மக்கள் மன்றம்’’ என்று மாற்றி உறுப்பினர்கள் சேர்க்கையை தீவிரப்படுத்தியுள்ளார். நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டங்களும் நடைபெற்று வருகின்றன.

    இந்நிலையில் சென்னையில் நடந்து வரும் ஆலோசனை கூட்டத்துக்கு வரும் வெளிமாவட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளிடம் சில கட்டுப்பாடுகளும், உத்தரவுகளும் கூறப்பட்டு வருகிறது. நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தின் போது, தேர்தலில் டிக்கெட் கொடுப்பது தொடர்பான சில தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. அதன் விவரம் வருமாறு:-

    ரஜினி ரசிகர்கள் உறுப்பினர்கள் சேர்க்கையில் மட்டுமே தீவிர கவனம் செலுத்த வேண்டும். எம்.பி. அல்லது எம்.எல்.ஏ. சீட்டை எதிர்பார்த்து வேலை செய்யக் கூடாது.

    மன்றத்தில் உள்ள சில நிர்வாகிகள் தாங்கள் நீண்ட ஆண்டுகளாக உறுப்பினர்களாக இருப்பதால், தங்கள் அனுபவம் மற்றும் விசுவாசத்தை கருத்தில் கொண்டு தேர்தலில் போட்டியிட தங்களுக்கே டிக்கெட் தர வேண்டும் என்று எதிர்பார்க்க கூடாது.

    தேர்தல் வரும்போது யாருக்கு சீட் கொடுக்க வேண்டும் என்பதை தலைவர் முடிவு செய்வார். யாருக்கு டிக்கெட் கொடுக்கக் கூடாது என்பதும் அவருக்கு தெரியும்.

    எனவே ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளும், நீண்ட நாள் ரசிகர்களும் எம்.எல்.ஏ. சீட்டை மட்டுமே நினைத்துக் கொண்டிருக்கக் கூடாது. அதற்கு பதில் மன்ற நிர்வாகிகள், உறுப்பினர்கள் சேர்க்கையில் மட்டுமே தீவிர கவனம் செலுத்த வேண்டும்.

    போதுமான அளவுக்கு உறுப்பினர்கள் இருந்தால் தான் கட்சி தொடங்க முடியும். எனவே அதிகமான உறுப்பினர்களை சேர்த்துக் காட்டுங்கள்.

    இவ்வாறு ரஜினி மன்ற உறுப்பினர்களிடம் கூறப்பட்டு வருகிறது.

    ரஜினி சார்பில் தெரிவிக்கப்பட்டு வரும் இந்த உத்தரவு மன்ற மாவட்ட நிர்வாகிகளிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக ரஜினி ரசிகர்களாக 40 ஆண்டுகளுக்கும் மேலாக இருப்பவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

    ரஜினி கட்சியில் வேட்பாளர்களாக போட்டியிட விரும்புபவர்களின் பண பின்புலம் பற்றி தனியாக ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதுவும் ரஜினி மன்றத்தில் உள்ள நடுத்தர வகுப்பை சர்ந்தவர்களிடம் வேதனையை ஏற்படுத்தி உள்ளது.

    மற்ற கட்சிகளைப் போல பணம் இருப்பவர்களுக்குத் தான் ரஜினியும் டிக்கெட் கொடுப்பாரா? என்று நீண்ட நாள் ரசிகர்கள் ஏக்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர். #Rajinikanth #RajiniMakkalMandram
    கன்னியாகுமரி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் சிவபன்னீர் செல்வன் ரஜினி மக்கள் மன்றத்தில் இணைந்தார்.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் சிவபன்னீர் செல்வன், மாவட்ட ரஜினி மக்கள் மன்ற ஒருங்கிணைப்பாளர் பி.ஆல்வினுக்கு பொன்னாடை போர்த்தி மன்றத்தில் இணைந்தார்.

    இந்நிகழ்ச்சிக்கு ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட துணை செயலாளர் ஆர்.எஸ்.ராஜன் முன்னிலை வகித்தார். ரஜினி நற்பணி மன்றத்தின் முன்னாள் இளைஞரணி தலைவர் கலுங்கடி சதீஷ்பாபு, சிவபன்னீர் செல்வனுக்கு சால்வை அணிவித்தார்.

    நிகழ்ச்சியில் மன்ற ஆலோசகர் கனகசபாபதி, நகர செயலாளர் செல்வன், தோவாளை ஒன்றிய செயலாளர் பழனி, மேல்புறம் ஒன்றிய செயலாளர் மோகன்தாஸ், குழித்துறை நகர செயலாளர் சந்தோஷ்குமார், தயாபரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ‘மாற்று கட்சியை சேர்ந்த பலர் ரஜினி மன்றத்தில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், மாற்றத்தை விரும்பி அவர்கள் விரைவில் இணைவார்கள் என்றும்‘ மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆல்வின் தெரிவித்தார். 
    ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் திடீரென மாவட்டந்தோறும் நேற்று ஆலோசனை நடத்தினார்கள்.
    சென்னை:

    ஜெயலலிதா மரணத்தால், தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்பும் வகையில் அரசியலில் ஈடுபட போவதாக முன்னணி நடிகர்கள் கமல்ஹாசனும், ரஜினிகாந்தும் அறிவித்தனர்.

    ரஜினி தனது அரசியல் பிரவேச அறிவிப்பை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31-ந்தேதி வெளியிட்டதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவானது.

    ரஜினி உடனடியாக தனது கட்சிப் பெயர், கொள்கைகள் மற்றும் நிர்வாகிகள் விபரத்தை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அரசியல் கட்சி தொடங்கும் வி‌ஷயத்தில் அவர் அவசரம் காட்டவில்லை. கமல்ஹாசன் “மக்கள் நீதி மய்யம்” என்று தனது கட்சிப் பெயரை அறிவித்த பிறகும் கூட ரஜினியின் அரசியல் நடவடிக்கைகள் மிக, மிக நிதானமாகவே உள்ளன.

    கட்சிப் பெயரை அறிவிப்பதற்கு முன்பு தமிழ்நாடு முழுவதும் நகரம் முதல் கிராமங்கள் வரை தனது கட்சிக்கு ஆழமான அடித்தளத்தை அமைக்க வேண்டும் என்று ரஜினி முடிவு செய்தார். எம்.ஜி.ஆர். தி.மு.க.வில் இருந்து பிரிந்து அ.தி.மு.க.வைத் தொடங்கிய போது அவர் அரசியலில் சாதனைகள் படைக்க அவரது ரசிகர் மன்றங்கள்தான் முக்கிய பங்களிப்பு கொடுத்தன. அதே பாணியை ரஜினியும் கடை பிடித்துள்ளார்.

    ரஜினிக்கு தமிழ்நாடு முழுவதும் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்படாத ரசிகர் மன்றங்கள் சுமார் 60 ஆயிரம் உள்ளன. அவை அனைத்தும் “ரஜினி மக்கள் மன்றம்“ என்று மாற்றம் செய்யப்பட்டன.

    ரஜினி மக்கள் மன்றத்துக்கு கடந்த 6 மாதமாக உறுப்பினர்கள் சேர்க்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அந்த உறுப்பினர்களுக்கு உடனுக்குடன் அடையாள அட்டைகளும் வழங்கப்படுகின்றன. அதோடு ஒவ்வொரு கிளை அமைப்பிலும் உள்ள உறுப்பினர்கள் விபரம் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்படுகிறது.

    இந்த உறுப்பினர்களைக் கொண்டு மாவட்டந்தோறும் ரஜினி மக்கள் மன்றத்துக்கு நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இளைஞர் அணி, மகளிர் அணி, வக்கீல்கள் அணி, விவசாய அணி உள்பட பல்வேறு அணிகளுக்கும் நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    அடுத்தக் கட்டமாக புதிய நிர்வாகிகள் மூலம் உறுப்பினர்கள் சேர்க்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ரஜினி மக்கள் மன்றத்துக்கு குறைந்தபட்சம் 1 கோடி பேர் உறுப்பினர்களாக இருக்க வேண்டும் என்று ரஜினி அறிவுறுத்தி இருக்கிறாராம்.

    அடுத்தக் கட்டமாக மற்றொரு பணியையும் ரஜினி மக்கள் மன்றத்தினர் ஓசையின்றி செய்து வருகிறார்கள். பூத் கமிட்டிக்கும் நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டு வருகிறார்கள். ஓட்டுப்பதிவு தினத்தன்று பூத் கமிட்டி தான் முக்கிய பங்கு வகிக்கும் என்பதால் ரஜினி ரசிகர்களின் இந்த நடவடிக்கை முக்கியமானதாக கருதப்படுகிறது.


    இந்த நிலையில் ரஜினி மக்கள் மன்றத்தினர் அடுத்தக்கட்ட அதிரடியைத் தொடங்கியுள்ளனர். அதன்படி மாவட்டந்தோறும் ‘திடீர்’ ஆலோசனையை நடத்தி வருகிறார்கள். ரஜினி மக்கள் மன்றத்தின் வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை, திருவண்ணாமலை, விழுப்புரம், திருச்சி, ஈரோடு, தஞ்சாவூர், அரியலூர் மாவட்ட நிர்வாகிகள் நேற்று ஆலோசனை கூட்டம் நடத்தினார்கள்.

    அவர்கள் உறுப்பினர்கள் சேர்க்கையை தீவிரப்படுத்துவது பற்றி விவாதித்தனர். மேலும் பொதுமக்கள் மனதில் இடம் பிடிக்கும் வகையில் எப்படி செயல்படுவது என்பது பற்றியும் விவாதித்தனர்.

    அந்தந்த பகுதிகளில் உள்ள உள்ளூர் பிரச்சினைகளை, நீண்ட கால கோரிக்கைகளை கையில் எடுத்து செயல்பட்டால்தான் மக்கள் மனதில் இடம்பிடிக்க முடியும் என்ற முடிவுக்கு ரஜினி மக்கள் மன்றத்தினர் வந்துள்ளனர்.

    இதைத் தொடர்ந்து உள்ளூர் முக்கிய பிரச்சினைகள் என்னென்ன உள்ளன என்று ரஜினி மக்கள் மன்றத்தினர் மாவட்டம் வாரியாக ஆய்வு செய்து வருகிறார்கள்.

    அந்த ஆய்வின் அடிப்படையில் முக்கிய பிரச்சினைகள் பட்டியலிடப்பட்டு அதற்கு ஏற்ப ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்கள் செயல்பட வியூகம் வகுத்துள்ளனர். ரஜினி விரைவில் மாநில அளவில் நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டி, பிறகு கட்சி பெயரை அறிவிக்க உள்ளார்.

    அந்த சமயத்தில் தங்கள் பகுதியில் தனி செல்வாக்குடன் இருக்கும் வகையில் செயல்பட ரஜினி மக்கள் மன்றத்தினர் தீவிரமாகியுள்ளனர்.

    இதற்கிடையே ரஜினி தனது அரசியல் பிரவேசத்தை தாமதம் செய்வது, மக்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியது. ‘காலா’ படத்துக்கு பிறகு அவர் தீவிர அரசியலுக்கு வந்து செயல்பட தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் ‘காலா’ படம் வெளியான பிறகு மேலும் ஒரு புதிய படத்தில் நடிக்க ரஜினி ஒப்பந்தம் ஆனதால், அவரது தீவிர அரசியல் பணிகள் தள்ளிப்போனது. இது ரஜினி ரசிகர்கள் மத்தியில் சோர்வை ஏற்படுத்தியது. ரஜினி எப்போது கட்சிப் பெயரை வெளியிடுவார் என்ற எதிர்பார்ப்பும் மங்கத் தொடங்கியது.


    ஸ்டெர்லைட் பிரச்சினையில் வெளியிட்ட கருத்தும், ‘காலா’ பட தோல்வியும் ரஜினி மீதான விமர்சனத்தை அதிகரிக்க செய்துள்ளது. எனவே இனி அரசியல் பணிகளை தீவிரப்படுத்தினால்தான் அடுத்த இலக்கை சென்றடைய முடியும் என்ற நிர்ப்பந்தமான நிலைக்கு ரஜினி தள்ளப்பட்டுள்ளார். ஆகையால் அவர் தீவிர அரசியலை விரைவில் கையில் எடுக்க உள்ளார்.

    தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தின் படப்பிடிப்புக்காக மேற்கு வங்காளத்தில் உள்ள டார்ஜிலிங் மலைப்பகுதியில் ரஜினி தங்கி இருக்கிறார். அந்த படப்பிடிப்பு முடிந்து சென்னை திரும்பியதும் அவர் தீவிர அரசியலில் ஈடுபட இருப்பதாக தகவல் வந்துள்ளது. ரஜினி இந்த மாத இறுதியில் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ரஜினி டார்ஜிலிங்கில் இருந்தாலும் மக்கள் மன்ற பணிகளை உடனுக்கு உடன் தெரிந்து கொண்டு வருகிறார். ரஜினியின் மகள் சவுந்தர்யா ரஜினிக்கு இது தொடர்பான தகவல்களை கொடுத்துவருகிறார்.

    சென்னை திரும்பிய உடன் மீண்டும் அரசியல் பணிகளில் தீவிரம் காட்ட வேண்டும் என்பதில் ரஜினி உறுதியாக உள்ளார். ஏற்கனவே அவர் மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் அணிகளின் பொறுப்பாளர்களை சந்தித்து பேசிவிட்டார். இன்னும் ஒன்றிய அளவிலான நிர்வாகிகளை சந்திக்க வேண்டியதுள்ளது. அதற்கு சுமார் 4 ஆயிரம் பேர் திரள்வார்கள் என்பதால் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் அந்த கூட்டத்தை நடத்த முடியாது. எனவே வேறு இடம் பார்த்து வருகிறார்கள். அனேகமாக சென்னையிலேயே இந்த கூட்டம் நடக்கும் என்று தெரிகிறது.

    வரும் டிசம்பர் மாதம் 12-ந்தேதி ரஜினியின் பிறந்த நாளாகும். அன்று ரஜினி தனது புதிய அரசியல் கட்சி தொடங்கும் அறிவிப்பை வெளியிட வாய்ப்புள்ளது. அதற்கு முன்பு ரஜினி மக்கள் மன்றத்தினரை வைத்து கோவையில் பிரமாண்ட மாநாடு நடத்தவும் திட்டமிட்டு இருக்கிறார். மாநாடு வேலைகள் ரகசியமாக நடந்து வருகின்றன.
    ரஜினி மக்கள் மன்ற தென் சென்னை மாவட்டம் மற்றும் அதற்கு உட்பட்ட பகுதிகளின் இளைஞர் அணி அமைப்பு நிர்வாகிகளை ரஜினிகாந்த் ஒப்புதலுடன் செயலாளர் ராஜூமகாலிங்கம், நிர்வாகி சுதாகர் ஆகியோர் நியமித்துள்ளனர்.
    சென்னை:

    தென் சென்னை மாவட்ட இளைஞர் அணி செயலாளராக அருண் வெங்கட்ராமன், இணை செயலாளர்களாக அருண் (எ) நாராயணமூர்த்தி, துணை செயலாளர்களாக கதிரவன், நவநீத கிருஷ்ணா, ராகவா விக்னேஷ்.

    சைதை பகுதி இளைஞர் அணி செயலாளராக ரூபேஷ்குமார், இணை செயலாளர்களாக பாலு, உதயகார்த்திக், ஸ்ரீராம். துணை செயலாளர்களாக அருண்குமார், ஷிவ்ராம், அருண், செயற்குழு உறுப் பினர்களாக ரகுராமன், லோகநாதன், வேணு கோபால், கந்தன், சதீஷ் குமார், முரளிதரன், ஜான்சன் பெர்னாண்டஸ்.

    தியாகராயநகர் பகுதி இளைஞர் அணி செயலாளராக கோபிநாத், இணை செயலாளர்களாக ரகுபதி, சூரியா, துணை செயலாளர்களாக அஜய்குமார், பெருமாள், மதனகோபால், வசந்த், வினோத்குமார், செயற்குழு உறுப்பினர்களாக விஜய்குமார், ரமேஷ், விக்னேஷ்வரன், பாலாஜி, ராஜா (திருப்பதி), சதீஷ், லோகநாதன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    மயிலாப்பூர் பகுதி இளைஞர் அணி செயலாளராக கார்த்திக், இணை செயலாளர்களாக ஆனந்த் குமார், ஸ்ரீதர், துணை செயலாளர்களாக ஆனந்த், சரத்குமார், சரவணன், சாலமன் ஆரோக்கியராஜ், செயற்குழு உறுப்பினர்களாக தேவேந்திரன், விக்னேஷ், பிரேம்குமார், சிரஞ்சீவி, விஜய், கார்த்திக்.

    சோழிங்கநல்லூர் கிழக்கு பகுதி இளைஞர் அணி செயலாளராக சத்தியமூர்த்தி, இணை செயலாளர்களாக கேசவன், ஸ்டாலின், துணை செயலாளர்களாக முனுசாமி (எ) சரவணன், தட்சணாமுர்த்தி, ஆனந்த், கிஷோர்குமார், செயற்குழு உறுப்பினர்களாக முருகன், லஷ்மணன், பாலாஜி, வினோத்குமார், முருகன், முரளி, கார்த்திகேயன், தினகரன், சுதாகர், முனியாண்டி, பூபாலன், வெங்கடேஷ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    சோழிங்கநல்லூர் மேற்கு பகுதி இளைஞர் அணி செயலாளராக வினோத், இணை செயலாளர்களாக பிரதாப், மணிகண்டன், துணை செயலாளர்களாக சேகர், ஜானகி ராமன், ராமு, லோகேஷ், மணிகண்டன், செயற்குழு உறுப்பினர்களாக ஆகாஷ், முருகன், ஜெகன், சரவணன், ஐயப்பன் ஆகியோர் நியமிக்கப் பட்டுள்ளனர்.

    வேளச்சேரி பகுதி இளைஞர் அணி செயலாளராக சிவராமன், இணை செயலாளர்களாக கராத்தே சுதர்சன், கிருபானந்தன், துணை செயலாளர்களாக சீனிவாசன், மகேஷ், சரவணன், ரஜினி பரத், கார்த்தி, செயற்குழு உறுப்பினர்களாக முத்துகிருஷ்ணன், முரளி கிருஷ்ணன், சதீஷ், மணி, குட்டி, சரவணன், மகேஷ், புருஷோத்,

    விருகை பகுதி இளைஞர் அணி செயலாளராக வீரா.அ.வினோத், இணை செயலாளர்களாக சூரியா, சரவணன், துணை செயலாளர்களாக ஜெய பாரத், கார்த்திக், சிவராஜ், சரத்குமார், செயற்குழு உறுப்பினர்களாக புனிதன், வேலு (எ) சதீஷ்குமார், சேகர், முத்துகிருஷ்ணன், சந்துரு ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    பெண்கள் வாக்கு வங்கிகளை பெறுவதில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர். #Rajinikanth #KamalHaasan
    சென்னை:

    அதிரடியாக அரசியலுக்குள் நுழைந்த ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரும் அரசியலில் தனித்தனி வழிகளில் பயணிக்கிறார்கள்.

    ஆட்சியில் இருக்கும் அதிமுகவை எதிர்த்தே அரசியலுக்குள் காலடி எடுத்து வைத்தார் கமல். முதலில் டுவிட்டர் மூலம் அமைச்சர்களை விமர்சித்தார். அதன் பின் தான் நேரடி அரசியலுக்குள் நுழைந்தார்.

    ரஜினியின் அரசியல் வருகை 25 ஆண்டுகளாக எதிர்பார்க்கப்பட்டது. அரசியல் களத்தில் எல்லோரையும் அனுசரித்து செல்ல விரும்புகிறார். முக்கியமாக எந்த அரசையும் நேரடியாக எதிர்க்க விரும்பில்லை. கமல் தன்னை விமர்சிப்பதற்கு கூட பதில் அளிக்காமல் கமலை நண்பராகவே பாவிக்கிறார்.


    செல்வாக்கு இருப்பதாக நம்பும் ரஜினி அதை ஒருங்கிணைக்கும் வகையில் இப்போதே நிர்வாகிகளை நியமித்து ஆலோசனை நடத்தி வருகிறார். உறுப்பினர் சேர்க்கைக்கு உற்சாகப்படுத்துகிறார். கமலுக்கு நேர் எதிராக முதலில் கட்சி கட்டமைப்பு பின்னர் தான் தீவிர அரசியல் என்பதில் தீவிரமாக இருக்கிறார்.

    கன்னியாகுமரியில் சுற்றுப்பயணத்தை முடித்து திரும்பி இருக்கும் கமல் அடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க போகிறார். அதற்கு முன்னதாக நிர்வாகிகள் நேர்காணலை நடத்துகிறார். இதன் பிறகு பிரம்மாண்ட மாநில மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளார்.

    ரஜினி கோவையில் மாநாடு நடத்தவிருப்பதை கேள்விபட்டு கோவையிலேயே தனது கட்சி மாநாட்டையும் நடத்த திட்டமிட்டுள்ளார். மாவட்ட செயலாளர்கள், மகளிர் அணி நிர்வாகிகள், இளைஞர் அணி செயலாளர்களை சந்தித்து முடித்துள்ள ரஜினி அடுத்து ஒன்றிய செயலாளர்கள் உள்பட அனைத்து நிர்வாகிகளையும் ஒரே இடத்தில் சந்திக்க திட்டமிட்டுள்ளார்.


    ரஜினி மன்ற நிர்வாகிகளின் எண்ணிக்கை மட்டும் 8500-ஐத் தொடுகிறது. அத்தனை பேரையும் திருமண மண்டபத்தில் திரட்டுவது சிரமம் என்பதால் வேறு இடம் பார்த்துவருகிறார்கள். இந்த மாத இறுதியிலேயே இந்த கூட்டத்தை நடத்த முதலில் திட்டமிட்டார்கள். அடுத்த மாத தொடக்கத்தில் "காலா" வெளியாவதால் இப்போது கூட்டம் நடத்தினால் அது படத்திற்கான புரமோ‌ஷன் என்று சொல்வார்கள் எனவும் ரஜினி யோசிப்பதாக கூறப்படுகிறது.

    எனவே ஜூன் மாத இறுதியில் இந்த கூட்டம் நடத்தப்படலாம். ஜூன் மாதம் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. படப்பிடிப்புக்கு இடையே வந்து கூட்டத்தில் கலந்து கொள்வார் என்று அவரது ஆதரவாளர்கள் கூறுகிறார்கள்.

    இருவரும் வெவ்வேறு பாதையில் பயணித்தாலும் ஒரு வி‌ஷயத்தில் அதிக கவனம் செலுத்துகிறார்கள். அது மகளிர் வாக்குகள். தமிழ்நாட்டில் ஆட்சியை நிர்ணயிப்பது மகளிரின் வாக்குகள் தான். சினிமாவில் இருந்து அரசியலில் நுழைவதால் ஆண் ரசிகர்களின் வாக்கு கிடைக்கும். ஆனால் பெண்களின் வாக்கு எப்படி கிடைக்கும்? எனவே பலமான மகளிர் அணியை உருவாக்க திட்டமிடுகிறார்கள். பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வி‌ஷயத்தில் அதிக கவனம் செலுத்துமாறு கட்சி உயர்மட்ட குழு உறுப்பினர் ஸ்ரீப்ரியாவிடம் கமல் கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது. #Rajinikanth KamalHaasan #MakkalNeedhiMaiyam #RajiniMakkalMandram
    கர்நாடகாவில் எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க கவர்னர் 15 நாட்கள் கொடுத்தது கேள்விக்கு உரியது என ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். #Rajinikanth #RajiniMakkalMandram
    சென்னை:

    ரஜினி மக்கள் மன்ற பெண் நிர்வாகிகளிடம் ரஜினிகாந்த் இன்று ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-

    பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்த நாடுகள் முன்னேறி இருக்கின்றன. ரஜினி மக்கள் மன்றத்திலும் பெண்களுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்படும். 150 தொகுதிகளில் செல்வாக்கு இருப்பதாக வெளியான செய்தி உண்மையாக இருந்தால் மகிழ்ச்சியே. கர்நாடகாவில் ஜனநாயகம் வென்றுள்ளது.

    எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க கவர்னர் 15 நாட்கள் கொடுத்தது கேள்விக்கு உரியது. இதனை சிறப்பாக கையாண்ட சுப்ரீம் கோர்ட்டுக்கு வணக்கங்கள். கர்நாடகாவில் இனி அமைய இருக்கும் அரசு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் படி காவிரி விவகாரத்தில் செயல்பட வேண்டும்.

    கட்சி தொடங்கிய பின்னரே கூட்டணி குறித்து பேச முடியும். எல்லாவற்றுக்கும் தயாராக இருக்கவே நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம். 
    நடிகர் ரஜினிகாந்த் இன்று இளைஞர் அணி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி இருப்பதால், தமிழகம் முழுவதும் ஆதரவு திரட்ட சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #Rajinikanth #RajinikanthMakkalMandram
    சென்னை:

    நடிகர் ரஜினிகாந்த் இன்று இளைஞர் அணி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி இருப்பதால், தமிழகம் முழுவதும் ஆதரவு திரட்ட சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #Rajinikanth #RajinikanthMakkalMandram

    இளைஞர் அணியினருடன் ஆலோசனை நடத்திய ரஜினி அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டு நாம் தொடங்க இருக்கும் புதிய கட்சியை பலப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

    இதனை ஏற்றுக்கொண்ட நிர்வாகிகள் சிறப்பாக பணி செய்வோம் என்று உறுதி அளித்தனர். பின்னர் இளைஞர் அணி நிர்வாகிகள் ரஜினியுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டனர்.

    இமயமலை பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய பின்னர் ரஜினி தனது அர சியல் பயணத்தை வேகப்படுத்தியுள்ளார். இந்த மாதம் தொடர்ச்சியாக அவர் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்து வருகிறார்.

    கடந்த 9-ந்தேதி காலா பட இசை வெளியீட்டு விழாவை ரஜினி மக்கள் மன்றத்தினர் 10 ஆயிரம் பேருடன் கொண்டாடிய ரஜினி, புதிய கட்சியை தொடங்குவதற்கான காலம் விரைவில் வரும் என்று அறிவித்தார். யார் என்ன சொன்னாலும் எனது வழியில் இருந்து பின்வாங்க மாட்டேன் என்று கூறினார்.


    மறுநாள் 10-ந்தேதி தனது வீட்டில் மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய ரஜினி இன்று இளைஞர் அணியினரை சந்தித்துள்ளார். இதன் மூலம் புதிய கட்சியை தொடங்குவதற்கான அடித் தளத்தை ரஜினி ஆழமாக போட்டு வருவது உறுதியாகி உள்ளது.

    இதற்கிடையே ரஜினி, மாநிலம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்யவும் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. புதிய உறுப்பினர்கள் சேர்க்கையில் ஈடுபட்டுள்ள மக்கள் மன்றத்தினரை ஊக்கப்படுத்தும் வகையில் இந்த சுற்றுப்பயணம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அப்போது பொதுமக்களிடம் அவர் ஆதரவு திரட்டவும் திட்டமிட்டுள்ளார். இதன்மூலம் அரசியல் பிரவேச அறிவிப்புக்கு பின்னர் ரஜினி நேரடியாக சென்று மக்களை சந்திக்கவில்லை என்கிற குறையும் நீங்கும் என்று நம்புவதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    நிர்வாகிகள் சந்திப்பு, பரபரப்பு பேச்சு என அரசியல் களத்தில் அதிரடியை காட்டிவரும் ரஜினி புதிய கட்சியின் பெயரை விரைவில் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பின்னர் அரசியல் பணிகளை மேலும் தீவிரப்படுத்தவும் அவர் திட்டமிட்டுள்ளார். #Rajinikanth #RajinikanthMakkalMandram
    ரஜினி மக்கள் மன்றத்தில் ஒட்டுமொத்தமாக நிர்வாகிகள், பொறுப்பாளர்களை ரஜினிகாந்த் நேற்று சந்தித்த நிலையில், வருகிற 13-ஆம் தேதி மாவட்ட இளைஞரணி செயலாளர்களை சந்திக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #Rajinikanth
    ரஜினிகாந்த் நடித்துள்ள ‘காலா’ படத்தின் பாடல் வெளியிட்டு விழா சென்னையில் நேற்று முன்தினம் பிரமாண்டமாக நடந்தது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், ரசிகர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    ஒட்டுமொத்தமாக நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் சென்னை வந்திருந்ததனர். அவர்களுடன் நேற்று சென்னை போயஸ் தோட்ட இல்லத்தில் ரஜினிகாந்த் நேற்று ஆலோசனை நடத்தினார். இதில் இதில் 32 மாவட்டச் செயலாளர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 



    இந்த நிலையில், ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட இளைஞரணி செயலாளர்களை வருகிற 13-ஆம் தேதி சந்தித்து ரஜினிகாந்த்  ஆலோசனை நடத்த இருக்கிறார். ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு நடக்கும இந்த சந்திப்பில் தமிழக - புதுச்சேரி ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட இளைஞரணி செயலாளர்கள் பங்கேற்கிறார்கள். #Rajinikanth #RajiniMakkalMandram

    சென்னையில் இன்று மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளை சந்தித்த ரஜினிகாந்த், தனது புதிய கட்சிக்கான உள்கட்டமைப்பை வலுப்படுத்த உத்தரவிட்டுள்ளார். #Rajinikanth
    சென்னை:

    நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். நேற்று சென்னையில் காலா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய அவர், தென்னிந்திய நதிகளை இணைப்பது தான் தனது கனவு என்றும் கண் மூடுவதற்கு முன்னால் அது நடக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். அரசியல் பற்றி இந்த நிகழ்ச்சியில் பேசாவிட்டாலும், நதிகள் இணைப்பு குறித்த அவரது கருத்து ரசிகர்களிடையே புதிய உத்வேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இந்நிலையில், 32 மாவட்ட செயலாளர்களுடனும் ரஜினிகாந்த் இன்று ஆலோசனை நடத்தினார். போயஸ் கார்டன் இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது கட்சிப் பணிகளை தீவிரப்படுத்துவது குறித்து நிர்வாகிகளுக்கு ரஜினி ஆலோசனை வழங்கினார்.


    இந்த சந்திப்பு முடிந்து வெளியே வந்த மாவட்ட செயலாளர்கள் கூறும்போது, பூத் கமிட்டி அமைப்பது குறித்து இன்று ஆலோசனை நடைபெற்றதாகவும், கட்சியின் உள்கட்டமைப்பை பலப்படுத்த வேண்டும் என ரஜினி ஆலோசனை வழங்கியதாகவும் தெரிவித்தனர். ஜூன் 2 ஆம் தேதிக்குள் உள்கட்டமைப்பை வலுப்படுத்த ரஜினி அறிவுறுத்தியிருப்பதாகவும் நிர்வாகிகள் தெரிவித்தனர். #Rajinikanth #RajiniMakkalMandram

    ×