search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "makkal needhi maiyam"

  இந்தியா எப்போதும் போல் பன்முகத்தன்மை கொண்ட நாடாக இருக்க வேண்டும் என்றே விரும்புகிறேன். நான் சந்தர்ப்பவாதி அல்ல என கமல் ஹாசன் குறிப்பிட்டுள்ளார். #KamalHaasan #MakkalNeedhiMaiam
  மும்பை:

  மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் பிரபல செய்தி நிறுவனமான பி.டி.ஐ.க்கு பேட்டி அளித்தார்.

  அரசியலை தனது அடுத்தகட்ட பயணமாக நினைக்காமல், தான் வாழ்ந்ததை நிலைநாட்டுவதற்கான அத்தியாவசியத் தேவையாக கருதுவதாகவும், கடந்த 2000-ம் ஆண்டில் ‘ஹே ராம்’ படத்தை தயாரித்த காலகட்டத்தில் இந்த எண்ணம் தனக்குள் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

  சினிமாவில் இருந்து அரசியல் பாதையை தேர்வு செய்த நிலைப்பாடு குறித்து பதிலளித்த அவர், 'நான் ஒரு கலைஞன்,  இதுபோன்ற காரியங்களில் ஈடுபட வேண்டுமா? என்று நான் முன்னர் எண்ணியதுண்டு. ஆனால், சமூகத்துக்கு தொண்டு செய்யும் தனிநபர் கடமையின் உந்துததலால் தற்போது இருக்கும் தேக்கநிலை மற்றும் ஊழலில் இருந்து தமிழ்நாட்டை மீட்கும் எனது முயற்சியின் ஒரேவழி அரசியலாகத்தான் இருந்தது’ என்றார்.

  எனக்கு மக்கள் மிகவும் முக்கியமானவர்கள். புகழின்போதும், சிக்கலான வேளைகளிலும் அவர்கள் என்னை ஆதரித்து வந்துள்ளனர். எனது வாழ்க்கையில் 63 ஆண்டுகாலம் என்னை மகிழ்ச்சியாக வைத்திருந்த இந்த சமுதாயத்துக்கு எனது பங்களிப்பை தரவேண்டியது என் கடமையாகும். 

  வெறுமனே வாழ்ந்துவிட்டு செல்வதோடு போகாமல், நான் இதுவரை வாழ்ந்த வாழக்கைக்கு அர்த்தம் சேர்க்கும் வகையில் இதை செய்யாவிட்டால் மகிழ்ச்சியான மனிதனாக எனது உயிர் பிரியாது என்பதால் மிகவும் முன்னுரிமைக்குரிய எனது  உடனடி அத்தியாவசியத் தேவையாக இந்த அரசியல் பயணத்தை கருதுகிறேன். 

  பொருத்தமான, உகந்த தருணத்தில் நான் அரசியலுக்கு வந்ததால் நான் சந்தர்ப்பவாதி என்று அர்த்தமல்ல, நான் சந்தர்ப்பவாதி அல்ல. எனக்கென்று ஒரு தொலைநோக்குப் பார்வை உண்டு. அதை எனக்குரிய திறனாலும், பலத்தாலும் நான் நிறைவேற்றுவேன். இந்தியாவை பன்முகத்தனமை கொண்ட நாடாகவே வைத்திருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய நோக்கம் எனவும் கமல் தெரிவித்தார்.  சமீபத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரை சந்தித்த கமல் ஹாசன், அவர்களுடன் கூட்டணி வைப்பீர்களா? என்ற கேள்விக்கு பதில் அளித்த கமல் ‘எதுவும் சாத்தியம்தான்’ என பதிலளித்தார்.

  தமிழ்நாட்டுக்கு எது சரியானது?, தற்போதைய நிலையை மாற்றி தமிழ்நாட்டுக்கு சிறந்தவற்றை செய்யக்கூடியவர்கள் யார்?, தமிழ்நாட்டை யார் சீரழித்தார்கள்?, யார் வெளியேற்றப்பட வேண்டும்? இதை செய்வதற்கு எனக்கு யார் உறுதுணையாக இருப்பார்கள்? இவை எல்லாம் மிகச் சாதாரணமான கேள்விகளாகும். இதற்கு நான் நேர்மையாக பதிலளித்தால் எனது கூட்டணியை நான் அடையாளம் காண முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

  நேரடியாகவோ, மறைமுகமாகவோ நீங்கள் பா.ஜ.க.வை ஆதரிக்கலாம் என்னும் வதந்தி உலவுவகின்றதே? என்ற கேள்விக்கு  ‘எனது சித்தாந்தம் மற்றும் நிலைப்பாட்டில் நான் மிகத்தெளிவாக இருக்கிறேன்’ என தெரிவித்தார்.

  நடிகர் ரஜினிகாந்துடன் தன்னை ஒப்பிடுவது நியாயமல்ல என்று கூறிய கமல், ‘இது, ஜான் வெய்ன் - மர்லின் பிரான்டோ மற்றும் சார்லி சாப்லின் - ஜான் வெய்ன் ஆகியோருக்கு இடையிலான பொருத்தமற்ற ஒப்பீடு போன்றதாகும். இவர்கள் அனைவரும் அவரவர் பாணியில் உயர்வானவர்கள். ஆனால், வெவ்வேறு விதமானவர்கள். இப்படி யாரும் ஒப்பிடப்படுவதில்லை’ என சுட்டிக் காட்டினார்.

  சினிமாவில் அரசியல்வாதிகள் சித்தரிக்கப்படும் விதம்குறித்து பதிலளித்த அவர், ‘சினிமா இந்த சமூகத்தை பிரதிபலிக்கின்றது. அரசியலில் அதிகமான வில்லன்கள் உண்டு. ஆனால், எல்லோருமே வில்லன்கள் அல்ல. இதைதான் சினிமாக்காரர்கள் பிரதிபலிக்கிறார்கள். அவர்கள் (அரசியல்வாதிகள்) மாறட்டுமே..’ என தெரிவித்த கமல் ஹாசன், விசாரணை வளையத்துக்குள் அரசியல்வாதிகளையும் கொண்டுவரும் லோக்பால் மசோதாதான் எனது கனவு என்றும் விருப்பம் தெரிவித்துள்ளார்.
  பெண்கள் வாக்கு வங்கிகளை பெறுவதில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர். #Rajinikanth #KamalHaasan
  சென்னை:

  அதிரடியாக அரசியலுக்குள் நுழைந்த ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரும் அரசியலில் தனித்தனி வழிகளில் பயணிக்கிறார்கள்.

  ஆட்சியில் இருக்கும் அதிமுகவை எதிர்த்தே அரசியலுக்குள் காலடி எடுத்து வைத்தார் கமல். முதலில் டுவிட்டர் மூலம் அமைச்சர்களை விமர்சித்தார். அதன் பின் தான் நேரடி அரசியலுக்குள் நுழைந்தார்.

  ரஜினியின் அரசியல் வருகை 25 ஆண்டுகளாக எதிர்பார்க்கப்பட்டது. அரசியல் களத்தில் எல்லோரையும் அனுசரித்து செல்ல விரும்புகிறார். முக்கியமாக எந்த அரசையும் நேரடியாக எதிர்க்க விரும்பில்லை. கமல் தன்னை விமர்சிப்பதற்கு கூட பதில் அளிக்காமல் கமலை நண்பராகவே பாவிக்கிறார்.


  செல்வாக்கு இருப்பதாக நம்பும் ரஜினி அதை ஒருங்கிணைக்கும் வகையில் இப்போதே நிர்வாகிகளை நியமித்து ஆலோசனை நடத்தி வருகிறார். உறுப்பினர் சேர்க்கைக்கு உற்சாகப்படுத்துகிறார். கமலுக்கு நேர் எதிராக முதலில் கட்சி கட்டமைப்பு பின்னர் தான் தீவிர அரசியல் என்பதில் தீவிரமாக இருக்கிறார்.

  கன்னியாகுமரியில் சுற்றுப்பயணத்தை முடித்து திரும்பி இருக்கும் கமல் அடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க போகிறார். அதற்கு முன்னதாக நிர்வாகிகள் நேர்காணலை நடத்துகிறார். இதன் பிறகு பிரம்மாண்ட மாநில மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளார்.

  ரஜினி கோவையில் மாநாடு நடத்தவிருப்பதை கேள்விபட்டு கோவையிலேயே தனது கட்சி மாநாட்டையும் நடத்த திட்டமிட்டுள்ளார். மாவட்ட செயலாளர்கள், மகளிர் அணி நிர்வாகிகள், இளைஞர் அணி செயலாளர்களை சந்தித்து முடித்துள்ள ரஜினி அடுத்து ஒன்றிய செயலாளர்கள் உள்பட அனைத்து நிர்வாகிகளையும் ஒரே இடத்தில் சந்திக்க திட்டமிட்டுள்ளார்.


  ரஜினி மன்ற நிர்வாகிகளின் எண்ணிக்கை மட்டும் 8500-ஐத் தொடுகிறது. அத்தனை பேரையும் திருமண மண்டபத்தில் திரட்டுவது சிரமம் என்பதால் வேறு இடம் பார்த்துவருகிறார்கள். இந்த மாத இறுதியிலேயே இந்த கூட்டத்தை நடத்த முதலில் திட்டமிட்டார்கள். அடுத்த மாத தொடக்கத்தில் "காலா" வெளியாவதால் இப்போது கூட்டம் நடத்தினால் அது படத்திற்கான புரமோ‌ஷன் என்று சொல்வார்கள் எனவும் ரஜினி யோசிப்பதாக கூறப்படுகிறது.

  எனவே ஜூன் மாத இறுதியில் இந்த கூட்டம் நடத்தப்படலாம். ஜூன் மாதம் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. படப்பிடிப்புக்கு இடையே வந்து கூட்டத்தில் கலந்து கொள்வார் என்று அவரது ஆதரவாளர்கள் கூறுகிறார்கள்.

  இருவரும் வெவ்வேறு பாதையில் பயணித்தாலும் ஒரு வி‌ஷயத்தில் அதிக கவனம் செலுத்துகிறார்கள். அது மகளிர் வாக்குகள். தமிழ்நாட்டில் ஆட்சியை நிர்ணயிப்பது மகளிரின் வாக்குகள் தான். சினிமாவில் இருந்து அரசியலில் நுழைவதால் ஆண் ரசிகர்களின் வாக்கு கிடைக்கும். ஆனால் பெண்களின் வாக்கு எப்படி கிடைக்கும்? எனவே பலமான மகளிர் அணியை உருவாக்க திட்டமிடுகிறார்கள். பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வி‌ஷயத்தில் அதிக கவனம் செலுத்துமாறு கட்சி உயர்மட்ட குழு உறுப்பினர் ஸ்ரீப்ரியாவிடம் கமல் கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது. #Rajinikanth KamalHaasan #MakkalNeedhiMaiyam #RajiniMakkalMandram
  காவிரி விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டின் இறுதி தீர்ப்பை செயல்படுத்துவதை உறுதிப்படுத்தவேண்டும் என்று கமல்ஹாசன் தலைமையில் சென்னையில் நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. #KamalHaasan #MNMForCauvery
  சென்னை:

  மக்கள் நீதிமய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் காவிரி நீர்பிரச்சனை குறித்து ஆலோசனை நடத்த முடிவு செய்தார். அதன்படி ஒவ்வொரு கட்சி தலைவர்களையும் சந்தித்து ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார்.

  இந்நிலையில், “காவிரி நிரந்தர தீர்வுக்கான தமிழக விவசாயிகளின் குரல்” என்று பெயரிடப்பட்ட இந்த ஆலோசனை கூட்டம் நேற்று காலை சென்னை தி.நகரில் நடந்தது. அப்போது, கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

  * காவிரி பிரச்சினை தொடர்பான சுப்ரீம் கோர்ட்டின் இறுதி தீர்ப்பை செயல்படுத்துவதை உறுதிப்படுத்தவேண்டும்.

  * தமிழகத்தில் இருக்கும் தண்ணீரைப் பாதுகாக்க அனைத்து ஏரிகளையும், குளங்களையும் தூர் வாரவேண்டும். சிற்றணைகள், தடுப்பணைகள் கட்டப்பட வேண்டும்.

  * காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை பகுதியாக அறிவிக்க சட்டபூர்வமான முயற்சிகள் எடுக்கவேண்டும்.

  * அனைத்து விவசாய விளை பொருட்களின் குறைந்தபட்ச கொள்முதல் விலை நிர்ணயத்தை மேலும் அதிகரிக்கவேண்டும்.

  * விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கு இணையாக சுற்றுச்சூழல் பிரச்சினைகளையும் கவனித்து தீர்வு காணவேண்டும்.

  * விவாதிக்கப்பட்ட கோரிக்கைகள் அனைத்தையும் கண்காணிக்கவும் செயலாற்றவும் விவசாயிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்கள் கொண்ட குழுவை அமைக்கவேண்டும். அதற்காக வழிவகை செய்து, அதைத்தொடர்ந்து வழிநடத்த உதவியாக இருப்போம்.

  மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

  அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு பின்னர் கமல்ஹாசன், டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. ஆகியோர் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு கமல்ஹாசன், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் அளித்த பதில்களும் வருமாறு:-


  கேள்வி:- இந்த கூட்டத்தை 9 கட்சிகள் புறக்கணித்துள்ளதே? இந்த கூட்டத்துக்கு வர அவசியம் இல்லை என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி இருக்கிறாரே?

  கமல்ஹாசன்:- புரிதல் இல்லாமல், நாங்கள் என்ன செய்ய போகிறோம் என்ற விளக்கம் இல்லாமல் அப்படி சொல்லி இருக்கலாம். விளங்கி விட்டால் அப்படி சொல்ல மாட்டார்கள் என்று நம்புகிறோம்.

  கேள்வி:- உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யமும், பா.ம.க.வும் இணைந்து போட்டியிடுமா?

  டாக்டர் அன்புமணி ராமதாஸ்:- உள்ளாட்சி தேர்தல் முதலில் நடக்கப் போவது இல்லை. இது அரசியல் மேடை கிடையாது. பொதுவான மேடை. விவசாயிகளுக்காக நடத்தப்படுகிற மேடை. இதுபோன்ற பல மேடைகளில் நாங்கள் கலந்துகொண்டிருக்கிறோம். இனி வரும் காலங்களிலும் கலந்துகொள்வோம். எங்களுடைய நோக்கம் விவசாயிகளை உயர்த்துவது தான். அதனால் இதில் அரசியலோ, அது சார்ந்தோ கருத்துகள் எதுவும் கிடையாது.

  கேள்வி:- நடிகர் ரஜினிகாந்தை நீங்கள் தொலைபேசியில் அழைத்ததாக சொன்னீர்கள். அவர் வராததற்கு ஏதேனும் காரணம் சொல்லி இருக்கிறாரா?


  கமல்ஹாசன்:- நான் அழைத்தபோது, ‘நீங்கள் கட்சி ஆரம்பித்துவிட்டீர்கள். நான் இன்னும் ஆரம்பிக்கவில்லை. எப்படி வந்தேன் என்று கேட்டால் நான் என்ன சொல்வது என்று கேட்டார். இது அவருடைய எண்ணம். அவர் வந்திருக்கலாம் என்பது என்னுடைய எண்ணம். வரவில்லை என்றால் பரவாயில்லை. இது இன்றுடன் முடிய போகிற கூட்டம் அல்ல. இனியும் தொடரும். அப்போதாவது வருவார் என்று நான் நம்புகிறேன்.

  கேள்வி:- ஆலோசனை கூட்டத்தில் கர்நாடக புதிய முதல்- மந்திரியை சந்திப்பது குறித்து விவாதிக்கப்பட்டதா?

  கமல்ஹாசன்:- அதை விடவும் முக்கியமான விஷயங்கள் விவாதிக்கப்பட்டன. சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பு நிறைவேற்றப்படுகிறதா? அதன்படி செயல்கள் நடக்கிறதா? என்பதை கண்காணிக்கவே, உறுதிப்படுத்தவே ஒரு குழு தேவைப்படுகிறது.

  கேள்வி:- விவசாய அமைப்புகள் எதன் அடிப்படையில் மக்கள் நீதி மய்யம் நடத்திய கூட்டத்தில் பங்கேற்றார்கள்?

  கமல்ஹாசன்:- நேர்மையை நம்பி இருக்கலாம் என்று நம்புகிறோம்.

  கேள்வி:- மு.க.ஸ்டாலின் மட்டும் புறக்கணிக்கவில்லை, அவர் கூறியதால் தான் நாங்கள் பங்கேற்கவில்லை என்று வைகோவும் கூறியிருக்கிறார். அவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருக்கக்கூடாது என்ற நிலைப்பாட்டை எடுத்திருக்கிறார்களா?

  கமல்ஹாசன்:- இருக்கலாம். அல்லது அது ஒரு விதமான அரசியல். இது வேறு விதமானது. அவ்வளவுதான்.

  கேள்வி:- காவிரி இறுதி தீர்ப்பு விவகாரத்தில் மக்கள் நீதி மய்யத்தின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

  கமல்ஹாசன்:- எது நியாயமோ அதை நோக்கி நாங்கள் நகர்ந்துகொண்டே இருப்போம். அதுக்காக மத்திய- மாநில அரசுகளை விமர்சிக்கவோ, அவர்களுடன் உரையாடவோ தேவையான யுக்தியாக, பாதையாக இருக்கிறதோ அதை மக்கள் நீதி மய்யம் தேர்ந்தெடுக்கும்.

  கேள்வி:- இந்த கூட்டத்தில் போட்ட தீர்மானத்தை எப்படி நிறைவேற்றப் போகிறீர்கள்?

  கமல்ஹாசன்:- மக்களிடம் எடுத்துச் செல்வோம். தேவைப்பட்டால் எல்லாரும் சேர்ந்து எங்கே போய் போராட வேண்டுமோ, அங்கே போய் போராடுவோம். இது மக்கள் இயக்கமாக மாறிவிடும்.

  இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.

  அன்புமணி ராமதாஸ் தொடர்ந்து கூறியதாவது:-


  இந்த கூட்டம் அடுத்து வரும் காலங்களிலும் அரசியலற்ற கூட்டமாக நடைபெறும். காவிரி விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பால் எந்த நன்மையும் கிடைக்காது. தமிழகத்திற்கு இந்த தீர்ப்பின் மூலம் துரோகம் இழைக்கப்பட்டிருக்கிறது. அணைகள் மாநிலத்தின் அதிகார வரம்பில் வரும் என்ற சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு நடுவர் மன்ற தீர்ப்புக்கு எதிரானது.

  வாரியம் வேறு ஆணையம் வேறு. இந்த இரண்டுக்கும் வித்தியாசம் உள்ளது. தமிழக அமைச்சர்களுக்கு காவிரி விவகாரத்தில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பின் விவரம் தெரியவில்லை. எஜமான் (பிரதமர் நரேந்திர மோடி) என்ன சொல்கிறாரோ அதை இங்கு இருக்கும் தமிழக அரசு செய்கிறது.

  இவ்வாறு அவர் கூறினார்.

  லட்சிய தி.மு.க. தலைவர் டி.ராஜேந்தர் கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு, 15 நிமிடத்தில் புறப்பட்டு சென்றார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-


  தமிழன் என்ற முறையில் இந்த கூட்டத்தில் பங்கேற்றேன். நானும், என் மகனும் தமிழர்களுக்கு எதுவும் பிரச்சினை என்றால் உடனே வந்து நிற்போம். அடுத்து வர உள்ள எம்.பி. தேர்தலில் கர்நாடகாவின் ஆதரவை பெறவேண்டும் என்பதற்காக பா.ஜ.க. அரசு கபட நாடகம் ஆடுகிறது. தமிழகத்தில் இரட்டை இலையை வைத்துக்கொண்டு, இரட்டை வேடம் போடுகிறார்கள். தமிழகத்தின் உரிமை விற்கப்பட்டுவிட்டது.

  வாரியம் என்று இருந்ததை ஆணையம் என்று மாற்றி வஞ்சிக்கப்பட்டிருக்கிறோம். காவிரி விவகாரத்தில் தமிழர்களிடையே ஒற்றுமை வேண்டும். பா.ஜ.க. பிரித்தாளும் சூழ்ச்சியை செய்கிறது. தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது நீர்வளத்துறை பெற்றிருந்தால், இதுபோன்ற பிரச்சினை வந்திருக்காது. தி.மு.க. இந்த கூட்டத்துக்கு வந்திருந்தால் நாங்கள் பங்கேற்றிருக்கமாட்டோம். மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து கமல்ஹாசன் அழைப்பு விடுத்தார். ஆனால் எங்களை போன்ற கட்சியினருக்கு நேரடியாக அழைப்பு விடுக்காமல், தொலைபேசியில் அழைப்பு விடுத்தார். அவர் அழைப்பை ஏற்று மரியாதை நிமித்தமாக பங்கேற்றேன். கூட்டத்தில் எனக்கு முரண்பாடு உள்ளது.

  இவ்வாறு டி.ராஜேந்தர் கூறினார்.  #KamalHaasan #AnbumaniRamadoss #MakkalNeedhiMaiam #MNMForCauvery
  மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு புதிய பொறுப்பாளர்களை நியமிப்பதற்கு வருகிற 25-ந் தேதி முதல் ஜூன் 1-ந் தேதி வரை நேர்காணல் நடைபெற உள்ளது.
  சென்னை:

  மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

  மக்கள் நீதி மய்யத்தின் கட்சிக்கு புதிய பொறுப்பாளர்களை நியமிப்பதற்கான நேர்காணல் சென்னையில் நடைபெற உள்ளது. இயக்கம் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பற்றிய அனைத்து தகவல்களும் வருகிற 20-ந் தேதிக்கு முன்னர் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

  மாவட்டவாரியாக நேர்காணல் நடைபெறும் விவரம் வருமாறு:-

  வடக்கு மண்டலம்: 25-ந் தேதி (வெள்ளிக்கிழமை)- சென்னை (தெற்கு, வடக்கு, மத்திய), காஞ்சீபுரம், திருவள்ளூர். 26-ந் தேதி (சனிக்கிழமை)- திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம். மேற்கு மண்டலம்: 26-ந் தேதி (சனிக்கிழமை) நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர். 27-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி.

  கிழக்கு மண்டலம்: 27-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அரியலூர், பெரம்பலூர், திருச்சி, திண்டுக்கல். 28-ந் தேதி (திங்கட்கிழமை) புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம். தெற்கு மண்டலம்: 28-ந் தேதி (திங்கட்கிழமை) மதுரை, தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர். 29-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி. 30, 31, ஜூன் 1 ஆகிய தேதிகளில் ஒருங்கிணைத்தல், சமர்ப்பித்தல் நடைபெறும்.

  அனைத்து உயர்நிலைக்குழு உறுப்பினர்களும் 25-ந் தேதி முதல் ஜூன் 1-ந் தேதி வரை தலைமை அலுவலகத்தில் இருக்க வேண்டும்.

  இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
  ×