search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரஜினியோடு என்னை ஒப்பிடுவது நியாயமன்று, நான் சந்தர்ப்பவாதி அல்ல - கமல் ஹாசன் பேட்டி
    X

    ரஜினியோடு என்னை ஒப்பிடுவது நியாயமன்று, நான் சந்தர்ப்பவாதி அல்ல - கமல் ஹாசன் பேட்டி

    இந்தியா எப்போதும் போல் பன்முகத்தன்மை கொண்ட நாடாக இருக்க வேண்டும் என்றே விரும்புகிறேன். நான் சந்தர்ப்பவாதி அல்ல என கமல் ஹாசன் குறிப்பிட்டுள்ளார். #KamalHaasan #MakkalNeedhiMaiam
    மும்பை:

    மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் பிரபல செய்தி நிறுவனமான பி.டி.ஐ.க்கு பேட்டி அளித்தார்.

    அரசியலை தனது அடுத்தகட்ட பயணமாக நினைக்காமல், தான் வாழ்ந்ததை நிலைநாட்டுவதற்கான அத்தியாவசியத் தேவையாக கருதுவதாகவும், கடந்த 2000-ம் ஆண்டில் ‘ஹே ராம்’ படத்தை தயாரித்த காலகட்டத்தில் இந்த எண்ணம் தனக்குள் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    சினிமாவில் இருந்து அரசியல் பாதையை தேர்வு செய்த நிலைப்பாடு குறித்து பதிலளித்த அவர், 'நான் ஒரு கலைஞன்,  இதுபோன்ற காரியங்களில் ஈடுபட வேண்டுமா? என்று நான் முன்னர் எண்ணியதுண்டு. ஆனால், சமூகத்துக்கு தொண்டு செய்யும் தனிநபர் கடமையின் உந்துததலால் தற்போது இருக்கும் தேக்கநிலை மற்றும் ஊழலில் இருந்து தமிழ்நாட்டை மீட்கும் எனது முயற்சியின் ஒரேவழி அரசியலாகத்தான் இருந்தது’ என்றார்.

    எனக்கு மக்கள் மிகவும் முக்கியமானவர்கள். புகழின்போதும், சிக்கலான வேளைகளிலும் அவர்கள் என்னை ஆதரித்து வந்துள்ளனர். எனது வாழ்க்கையில் 63 ஆண்டுகாலம் என்னை மகிழ்ச்சியாக வைத்திருந்த இந்த சமுதாயத்துக்கு எனது பங்களிப்பை தரவேண்டியது என் கடமையாகும். 

    வெறுமனே வாழ்ந்துவிட்டு செல்வதோடு போகாமல், நான் இதுவரை வாழ்ந்த வாழக்கைக்கு அர்த்தம் சேர்க்கும் வகையில் இதை செய்யாவிட்டால் மகிழ்ச்சியான மனிதனாக எனது உயிர் பிரியாது என்பதால் மிகவும் முன்னுரிமைக்குரிய எனது  உடனடி அத்தியாவசியத் தேவையாக இந்த அரசியல் பயணத்தை கருதுகிறேன். 

    பொருத்தமான, உகந்த தருணத்தில் நான் அரசியலுக்கு வந்ததால் நான் சந்தர்ப்பவாதி என்று அர்த்தமல்ல, நான் சந்தர்ப்பவாதி அல்ல. எனக்கென்று ஒரு தொலைநோக்குப் பார்வை உண்டு. அதை எனக்குரிய திறனாலும், பலத்தாலும் நான் நிறைவேற்றுவேன். இந்தியாவை பன்முகத்தனமை கொண்ட நாடாகவே வைத்திருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய நோக்கம் எனவும் கமல் தெரிவித்தார்.



    சமீபத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரை சந்தித்த கமல் ஹாசன், அவர்களுடன் கூட்டணி வைப்பீர்களா? என்ற கேள்விக்கு பதில் அளித்த கமல் ‘எதுவும் சாத்தியம்தான்’ என பதிலளித்தார்.

    தமிழ்நாட்டுக்கு எது சரியானது?, தற்போதைய நிலையை மாற்றி தமிழ்நாட்டுக்கு சிறந்தவற்றை செய்யக்கூடியவர்கள் யார்?, தமிழ்நாட்டை யார் சீரழித்தார்கள்?, யார் வெளியேற்றப்பட வேண்டும்? இதை செய்வதற்கு எனக்கு யார் உறுதுணையாக இருப்பார்கள்? இவை எல்லாம் மிகச் சாதாரணமான கேள்விகளாகும். இதற்கு நான் நேர்மையாக பதிலளித்தால் எனது கூட்டணியை நான் அடையாளம் காண முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

    நேரடியாகவோ, மறைமுகமாகவோ நீங்கள் பா.ஜ.க.வை ஆதரிக்கலாம் என்னும் வதந்தி உலவுவகின்றதே? என்ற கேள்விக்கு  ‘எனது சித்தாந்தம் மற்றும் நிலைப்பாட்டில் நான் மிகத்தெளிவாக இருக்கிறேன்’ என தெரிவித்தார்.

    நடிகர் ரஜினிகாந்துடன் தன்னை ஒப்பிடுவது நியாயமல்ல என்று கூறிய கமல், ‘இது, ஜான் வெய்ன் - மர்லின் பிரான்டோ மற்றும் சார்லி சாப்லின் - ஜான் வெய்ன் ஆகியோருக்கு இடையிலான பொருத்தமற்ற ஒப்பீடு போன்றதாகும். இவர்கள் அனைவரும் அவரவர் பாணியில் உயர்வானவர்கள். ஆனால், வெவ்வேறு விதமானவர்கள். இப்படி யாரும் ஒப்பிடப்படுவதில்லை’ என சுட்டிக் காட்டினார்.

    சினிமாவில் அரசியல்வாதிகள் சித்தரிக்கப்படும் விதம்குறித்து பதிலளித்த அவர், ‘சினிமா இந்த சமூகத்தை பிரதிபலிக்கின்றது. அரசியலில் அதிகமான வில்லன்கள் உண்டு. ஆனால், எல்லோருமே வில்லன்கள் அல்ல. இதைதான் சினிமாக்காரர்கள் பிரதிபலிக்கிறார்கள். அவர்கள் (அரசியல்வாதிகள்) மாறட்டுமே..’ என தெரிவித்த கமல் ஹாசன், விசாரணை வளையத்துக்குள் அரசியல்வாதிகளையும் கொண்டுவரும் லோக்பால் மசோதாதான் எனது கனவு என்றும் விருப்பம் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×