search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெண்கள் ஓட்டுகளை குறி வைக்கும் ரஜினி - கமல்
    X

    பெண்கள் ஓட்டுகளை குறி வைக்கும் ரஜினி - கமல்

    பெண்கள் வாக்கு வங்கிகளை பெறுவதில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர். #Rajinikanth #KamalHaasan
    சென்னை:

    அதிரடியாக அரசியலுக்குள் நுழைந்த ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரும் அரசியலில் தனித்தனி வழிகளில் பயணிக்கிறார்கள்.

    ஆட்சியில் இருக்கும் அதிமுகவை எதிர்த்தே அரசியலுக்குள் காலடி எடுத்து வைத்தார் கமல். முதலில் டுவிட்டர் மூலம் அமைச்சர்களை விமர்சித்தார். அதன் பின் தான் நேரடி அரசியலுக்குள் நுழைந்தார்.

    ரஜினியின் அரசியல் வருகை 25 ஆண்டுகளாக எதிர்பார்க்கப்பட்டது. அரசியல் களத்தில் எல்லோரையும் அனுசரித்து செல்ல விரும்புகிறார். முக்கியமாக எந்த அரசையும் நேரடியாக எதிர்க்க விரும்பில்லை. கமல் தன்னை விமர்சிப்பதற்கு கூட பதில் அளிக்காமல் கமலை நண்பராகவே பாவிக்கிறார்.


    செல்வாக்கு இருப்பதாக நம்பும் ரஜினி அதை ஒருங்கிணைக்கும் வகையில் இப்போதே நிர்வாகிகளை நியமித்து ஆலோசனை நடத்தி வருகிறார். உறுப்பினர் சேர்க்கைக்கு உற்சாகப்படுத்துகிறார். கமலுக்கு நேர் எதிராக முதலில் கட்சி கட்டமைப்பு பின்னர் தான் தீவிர அரசியல் என்பதில் தீவிரமாக இருக்கிறார்.

    கன்னியாகுமரியில் சுற்றுப்பயணத்தை முடித்து திரும்பி இருக்கும் கமல் அடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க போகிறார். அதற்கு முன்னதாக நிர்வாகிகள் நேர்காணலை நடத்துகிறார். இதன் பிறகு பிரம்மாண்ட மாநில மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளார்.

    ரஜினி கோவையில் மாநாடு நடத்தவிருப்பதை கேள்விபட்டு கோவையிலேயே தனது கட்சி மாநாட்டையும் நடத்த திட்டமிட்டுள்ளார். மாவட்ட செயலாளர்கள், மகளிர் அணி நிர்வாகிகள், இளைஞர் அணி செயலாளர்களை சந்தித்து முடித்துள்ள ரஜினி அடுத்து ஒன்றிய செயலாளர்கள் உள்பட அனைத்து நிர்வாகிகளையும் ஒரே இடத்தில் சந்திக்க திட்டமிட்டுள்ளார்.


    ரஜினி மன்ற நிர்வாகிகளின் எண்ணிக்கை மட்டும் 8500-ஐத் தொடுகிறது. அத்தனை பேரையும் திருமண மண்டபத்தில் திரட்டுவது சிரமம் என்பதால் வேறு இடம் பார்த்துவருகிறார்கள். இந்த மாத இறுதியிலேயே இந்த கூட்டத்தை நடத்த முதலில் திட்டமிட்டார்கள். அடுத்த மாத தொடக்கத்தில் "காலா" வெளியாவதால் இப்போது கூட்டம் நடத்தினால் அது படத்திற்கான புரமோ‌ஷன் என்று சொல்வார்கள் எனவும் ரஜினி யோசிப்பதாக கூறப்படுகிறது.

    எனவே ஜூன் மாத இறுதியில் இந்த கூட்டம் நடத்தப்படலாம். ஜூன் மாதம் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. படப்பிடிப்புக்கு இடையே வந்து கூட்டத்தில் கலந்து கொள்வார் என்று அவரது ஆதரவாளர்கள் கூறுகிறார்கள்.

    இருவரும் வெவ்வேறு பாதையில் பயணித்தாலும் ஒரு வி‌ஷயத்தில் அதிக கவனம் செலுத்துகிறார்கள். அது மகளிர் வாக்குகள். தமிழ்நாட்டில் ஆட்சியை நிர்ணயிப்பது மகளிரின் வாக்குகள் தான். சினிமாவில் இருந்து அரசியலில் நுழைவதால் ஆண் ரசிகர்களின் வாக்கு கிடைக்கும். ஆனால் பெண்களின் வாக்கு எப்படி கிடைக்கும்? எனவே பலமான மகளிர் அணியை உருவாக்க திட்டமிடுகிறார்கள். பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வி‌ஷயத்தில் அதிக கவனம் செலுத்துமாறு கட்சி உயர்மட்ட குழு உறுப்பினர் ஸ்ரீப்ரியாவிடம் கமல் கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது. #Rajinikanth KamalHaasan #MakkalNeedhiMaiyam #RajiniMakkalMandram
    Next Story
    ×