search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மக்கள் மன்ற நிர்வாகிகள் திடீர் ஆலோசனை - படப்பிடிப்பு தளத்தில் இருந்து கண்காணிக்கும் ரஜினி
    X

    மக்கள் மன்ற நிர்வாகிகள் திடீர் ஆலோசனை - படப்பிடிப்பு தளத்தில் இருந்து கண்காணிக்கும் ரஜினி

    ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் திடீரென மாவட்டந்தோறும் நேற்று ஆலோசனை நடத்தினார்கள்.
    சென்னை:

    ஜெயலலிதா மரணத்தால், தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்பும் வகையில் அரசியலில் ஈடுபட போவதாக முன்னணி நடிகர்கள் கமல்ஹாசனும், ரஜினிகாந்தும் அறிவித்தனர்.

    ரஜினி தனது அரசியல் பிரவேச அறிவிப்பை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31-ந்தேதி வெளியிட்டதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவானது.

    ரஜினி உடனடியாக தனது கட்சிப் பெயர், கொள்கைகள் மற்றும் நிர்வாகிகள் விபரத்தை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அரசியல் கட்சி தொடங்கும் வி‌ஷயத்தில் அவர் அவசரம் காட்டவில்லை. கமல்ஹாசன் “மக்கள் நீதி மய்யம்” என்று தனது கட்சிப் பெயரை அறிவித்த பிறகும் கூட ரஜினியின் அரசியல் நடவடிக்கைகள் மிக, மிக நிதானமாகவே உள்ளன.

    கட்சிப் பெயரை அறிவிப்பதற்கு முன்பு தமிழ்நாடு முழுவதும் நகரம் முதல் கிராமங்கள் வரை தனது கட்சிக்கு ஆழமான அடித்தளத்தை அமைக்க வேண்டும் என்று ரஜினி முடிவு செய்தார். எம்.ஜி.ஆர். தி.மு.க.வில் இருந்து பிரிந்து அ.தி.மு.க.வைத் தொடங்கிய போது அவர் அரசியலில் சாதனைகள் படைக்க அவரது ரசிகர் மன்றங்கள்தான் முக்கிய பங்களிப்பு கொடுத்தன. அதே பாணியை ரஜினியும் கடை பிடித்துள்ளார்.

    ரஜினிக்கு தமிழ்நாடு முழுவதும் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்படாத ரசிகர் மன்றங்கள் சுமார் 60 ஆயிரம் உள்ளன. அவை அனைத்தும் “ரஜினி மக்கள் மன்றம்“ என்று மாற்றம் செய்யப்பட்டன.

    ரஜினி மக்கள் மன்றத்துக்கு கடந்த 6 மாதமாக உறுப்பினர்கள் சேர்க்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அந்த உறுப்பினர்களுக்கு உடனுக்குடன் அடையாள அட்டைகளும் வழங்கப்படுகின்றன. அதோடு ஒவ்வொரு கிளை அமைப்பிலும் உள்ள உறுப்பினர்கள் விபரம் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்படுகிறது.

    இந்த உறுப்பினர்களைக் கொண்டு மாவட்டந்தோறும் ரஜினி மக்கள் மன்றத்துக்கு நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இளைஞர் அணி, மகளிர் அணி, வக்கீல்கள் அணி, விவசாய அணி உள்பட பல்வேறு அணிகளுக்கும் நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    அடுத்தக் கட்டமாக புதிய நிர்வாகிகள் மூலம் உறுப்பினர்கள் சேர்க்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ரஜினி மக்கள் மன்றத்துக்கு குறைந்தபட்சம் 1 கோடி பேர் உறுப்பினர்களாக இருக்க வேண்டும் என்று ரஜினி அறிவுறுத்தி இருக்கிறாராம்.

    அடுத்தக் கட்டமாக மற்றொரு பணியையும் ரஜினி மக்கள் மன்றத்தினர் ஓசையின்றி செய்து வருகிறார்கள். பூத் கமிட்டிக்கும் நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டு வருகிறார்கள். ஓட்டுப்பதிவு தினத்தன்று பூத் கமிட்டி தான் முக்கிய பங்கு வகிக்கும் என்பதால் ரஜினி ரசிகர்களின் இந்த நடவடிக்கை முக்கியமானதாக கருதப்படுகிறது.


    இந்த நிலையில் ரஜினி மக்கள் மன்றத்தினர் அடுத்தக்கட்ட அதிரடியைத் தொடங்கியுள்ளனர். அதன்படி மாவட்டந்தோறும் ‘திடீர்’ ஆலோசனையை நடத்தி வருகிறார்கள். ரஜினி மக்கள் மன்றத்தின் வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை, திருவண்ணாமலை, விழுப்புரம், திருச்சி, ஈரோடு, தஞ்சாவூர், அரியலூர் மாவட்ட நிர்வாகிகள் நேற்று ஆலோசனை கூட்டம் நடத்தினார்கள்.

    அவர்கள் உறுப்பினர்கள் சேர்க்கையை தீவிரப்படுத்துவது பற்றி விவாதித்தனர். மேலும் பொதுமக்கள் மனதில் இடம் பிடிக்கும் வகையில் எப்படி செயல்படுவது என்பது பற்றியும் விவாதித்தனர்.

    அந்தந்த பகுதிகளில் உள்ள உள்ளூர் பிரச்சினைகளை, நீண்ட கால கோரிக்கைகளை கையில் எடுத்து செயல்பட்டால்தான் மக்கள் மனதில் இடம்பிடிக்க முடியும் என்ற முடிவுக்கு ரஜினி மக்கள் மன்றத்தினர் வந்துள்ளனர்.

    இதைத் தொடர்ந்து உள்ளூர் முக்கிய பிரச்சினைகள் என்னென்ன உள்ளன என்று ரஜினி மக்கள் மன்றத்தினர் மாவட்டம் வாரியாக ஆய்வு செய்து வருகிறார்கள்.

    அந்த ஆய்வின் அடிப்படையில் முக்கிய பிரச்சினைகள் பட்டியலிடப்பட்டு அதற்கு ஏற்ப ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்கள் செயல்பட வியூகம் வகுத்துள்ளனர். ரஜினி விரைவில் மாநில அளவில் நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டி, பிறகு கட்சி பெயரை அறிவிக்க உள்ளார்.

    அந்த சமயத்தில் தங்கள் பகுதியில் தனி செல்வாக்குடன் இருக்கும் வகையில் செயல்பட ரஜினி மக்கள் மன்றத்தினர் தீவிரமாகியுள்ளனர்.

    இதற்கிடையே ரஜினி தனது அரசியல் பிரவேசத்தை தாமதம் செய்வது, மக்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியது. ‘காலா’ படத்துக்கு பிறகு அவர் தீவிர அரசியலுக்கு வந்து செயல்பட தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் ‘காலா’ படம் வெளியான பிறகு மேலும் ஒரு புதிய படத்தில் நடிக்க ரஜினி ஒப்பந்தம் ஆனதால், அவரது தீவிர அரசியல் பணிகள் தள்ளிப்போனது. இது ரஜினி ரசிகர்கள் மத்தியில் சோர்வை ஏற்படுத்தியது. ரஜினி எப்போது கட்சிப் பெயரை வெளியிடுவார் என்ற எதிர்பார்ப்பும் மங்கத் தொடங்கியது.


    ஸ்டெர்லைட் பிரச்சினையில் வெளியிட்ட கருத்தும், ‘காலா’ பட தோல்வியும் ரஜினி மீதான விமர்சனத்தை அதிகரிக்க செய்துள்ளது. எனவே இனி அரசியல் பணிகளை தீவிரப்படுத்தினால்தான் அடுத்த இலக்கை சென்றடைய முடியும் என்ற நிர்ப்பந்தமான நிலைக்கு ரஜினி தள்ளப்பட்டுள்ளார். ஆகையால் அவர் தீவிர அரசியலை விரைவில் கையில் எடுக்க உள்ளார்.

    தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தின் படப்பிடிப்புக்காக மேற்கு வங்காளத்தில் உள்ள டார்ஜிலிங் மலைப்பகுதியில் ரஜினி தங்கி இருக்கிறார். அந்த படப்பிடிப்பு முடிந்து சென்னை திரும்பியதும் அவர் தீவிர அரசியலில் ஈடுபட இருப்பதாக தகவல் வந்துள்ளது. ரஜினி இந்த மாத இறுதியில் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ரஜினி டார்ஜிலிங்கில் இருந்தாலும் மக்கள் மன்ற பணிகளை உடனுக்கு உடன் தெரிந்து கொண்டு வருகிறார். ரஜினியின் மகள் சவுந்தர்யா ரஜினிக்கு இது தொடர்பான தகவல்களை கொடுத்துவருகிறார்.

    சென்னை திரும்பிய உடன் மீண்டும் அரசியல் பணிகளில் தீவிரம் காட்ட வேண்டும் என்பதில் ரஜினி உறுதியாக உள்ளார். ஏற்கனவே அவர் மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் அணிகளின் பொறுப்பாளர்களை சந்தித்து பேசிவிட்டார். இன்னும் ஒன்றிய அளவிலான நிர்வாகிகளை சந்திக்க வேண்டியதுள்ளது. அதற்கு சுமார் 4 ஆயிரம் பேர் திரள்வார்கள் என்பதால் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் அந்த கூட்டத்தை நடத்த முடியாது. எனவே வேறு இடம் பார்த்து வருகிறார்கள். அனேகமாக சென்னையிலேயே இந்த கூட்டம் நடக்கும் என்று தெரிகிறது.

    வரும் டிசம்பர் மாதம் 12-ந்தேதி ரஜினியின் பிறந்த நாளாகும். அன்று ரஜினி தனது புதிய அரசியல் கட்சி தொடங்கும் அறிவிப்பை வெளியிட வாய்ப்புள்ளது. அதற்கு முன்பு ரஜினி மக்கள் மன்றத்தினரை வைத்து கோவையில் பிரமாண்ட மாநாடு நடத்தவும் திட்டமிட்டு இருக்கிறார். மாநாடு வேலைகள் ரகசியமாக நடந்து வருகின்றன.
    Next Story
    ×